அத்தியாயம் 1

131.22k படித்தவர்கள்
28 கருத்துகள்

பூக்களிலே நானும் ஒரு
பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்
பூவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்ட லையே
பொன் விரல்கள் தீண்டலையே - நான்
பூமாலை ஆகலையே

- மு. மேத்தா

ழக்கமாக இரவு ஏழு மணிக்கெல்லாம் அடங்கிவிடுகிற தெரு அது. நடமாட்டம் எதுவுமில்லாமல் ஒடுங்கி விடுகிற தெரு. ஆனால், அன்று மட்டும் பத்து மணிக்கு மேலும் அமர்க்களப்பட்டது. புரொடக்ஷன் வேனும், கம்பெனிக் கார்களும், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்களுமாக வந்து சாலையின் புழுதியைக் கிளப்பிக் கொண்டிருந்தன. அந்தப் புழுதிக்கு நடுவில் தடதடவென்று புரொடக்ஷன் வேனிலிருந்து சாமான்கள் இறக்கப்படுகிற சத்தம். ட்ராலி சத்தம். ஃபான்டா, லிம்கா பாட்டில்கள் இடிபடுகிற சத்தம், பெயர் பெயராகக் கூப்பிடுகிற சத்தம். பேச்சு சத்தம். சிரிப்புச் சத்தம்...

ஷூட்டிங் பார்க்கிற ஆசையில் அந்தக் குளிரிலும் வீட்டு முன்னால் ஒரு கூட்டம் கூடி நின்றது. அவர்களின் கண்களில் தூக்கம் வழிந்தது. சிணுங்கிச் சிணுங்கி குழந்தை ஒன்று அழுதது. ‘தா... கொஞ்ச நேரம் சும்மா கெட. இதோ ஷூட்டிங் பார்த்துட்டுப் போயிரலாம்...’ என்று அதட்டுகிற அம்மாவின் குரல் கேட்டது.

“யாரு, ஆக்டரு கமல்ல...”

“தெரியல்லியே... யாருமே வெளியில வரக்காணமே...” 

“சுதாகர்னு இல்லே பேசிக்கிறாங்க...” 

“அப்படின்னா கூட ராதிகாவா இருக்கும்டா...”

“லட்சுமி வரப்போகிறதாமே...”

“இல்லடா, பிரியம்வதா வரப் போறதா அந்தச் சிவப்பு சட்டைக்காரரு சொன்னாருடா.”

“பிரியம்வதாவா...!”

அகன்ற அந்தக் கண்களுக்கு அன்று நிச்சயம் ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும் என்று தோன்றியது. அடுத்த ஒரு நிமிஷத்திற்கெல்லாம் கூட்டம் முழுவதும் பரவின - பிரியம்வதா, பிரியம்வதா, பிரியம்வதா....

அதிகரித்துக் கொண்டு போன கூட்டத்தைக் கலைத்துக் கொண்டு பாஷ் ஹாரனின் அலறலில் டைரக்டரின் கார் வந்து நின்றது. அந்த ஹாரன் சத்தத்திலேயே வீட்டிற்குள் ஒரு சுறுசுறுப்பு தெரிந்தது. சிகரெட் பிடித்துக் கொண்டு மூலையில் நின்ற அஸிஸ்டன்ட் டைரக்டர்கள் சிகரெட்டை அணைத்துப் போட்டுவிட்டு வந்தார்கள்.

“இதப் பாரு தாஸ், அந்த 25 ஐக் கொஞ்சம் போடு.” 

“அப்படியே கட்டரையும் கொஞ்சம் சரி பாரேன்...”

“சோமு சார், ஸெட் அஸிஸ்டண்ட் யாரு சார். இங்கே ஒரு காலண்டரை மாட்டச் சொல்லுங்க.”

டைரக்டர் உள்ளே வந்ததும் சட்சட்டென்று ‘குட்ஈவினிங் சார்’கள். அவர் லேசாகத் தலையாட்டிவிட்டு சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டார்.

“இன்னும் பிரியம்வதா வரலை...?”

“போன் பண்ணிட்டோம் சார். கிளம்பிட்டாங்களாம்...!”

கையைத் திருப்பி மணி பார்த்துக் கொண்டார். 

“ப்ரகாஷ் வந்தாச்சு இல்லே..?” என்று கேட்டார். அதற்குள் காமராவைச் சரிபார்த்துக் கொண்டிருந்த ப்ரகாஷ் அருகில் வந்தான்.

“பிரியாவை மேக் ஆப் இல்லாமல் வரச் சொல்லியிருக்கேன் சார். வெறும் கண்ணை மட்டும் எழுதி லிப்ஸ்டிக் போடச் சொல்லியிருக்கேன்.”

“தட்ஸ் குட். மேக் அப் இல்லாமல் ஷீ வில் பி ப்யூட்டி ஃபுல்.” 

“எஸ் சார்.”

பேசிக் கொண்டிருந்தபோது வெளியில் கூட்டம் சலசலத்தது.

“டேய் பிரியம்வதாடா...” என்று பெரிதாக ஒரு குரல் வந்தது. காரைத் திறந்து மூடுகிற ஓசை கேட்டது.

டைரக்டர் சட்டென்று பேச்சைப் பாதியில் வெட்டி விட்டு வெளியில் வந்தார். கூட்டத்திலிருந்து அவளைப் பிரித்து உள்ளே அழைத்துக் கொண்டு போனார்.

பேசிக்கொண்டே உள்ளே நுழைந்த போது நிறைய ‘வணக்கம்மா, வணக்கங்க...’ எல்லாவற்றிற்கும் பதில் வணக்கம் சொன்னாள். பின் காமராமேன் ப்ரகாஷைப் பார்த்ததும் மிகவும் தோழமையாய்ச் சிரித்தாள்.

“குட் ஈவினிங் ப்ரகாஷ். தீபா சௌக்கியமா...?”

“ஓ எஸ்.”

“குட்டிப்பயல் எப்படி இருக்கான்...?”

“தவழறான். ராத்திரியிலே நிறைய அழறான்.”

“அப்படியா...? நீங்க ஒண்ணு பண்ணுங்க ப்ரகாஷ். தூங்கறதுக்கு முன்னால உங்க மூஞ்சியை அவனுக்குக் காட்டாதீங்க. தூக்கத்தில் பயந்துக்கறான் போல இருக்கு...”

ப்ரகாஷ் பொய்க் கோபத்தில் முறைத்தான்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“எனக்கும் ஒரு சான்ஸ் வரும். பார்த்துக்கறேன்” என்றான். பின் “எங்கே அவன் தூங்கறத்துக்கு முன்னால வீட்டுக்குப் போக முடியறது. இந்த ரேட்ல போனா அவனுக்கு அப்பா யாருன்னே தெரியாமல் போயிடும்” என்று சலித்துக் கொண்டான்.

அந்தச் சலிப்பைப் புரிந்து கொண்டவளாக இதமாகச் சிரித்தாள் பிரியம்வதா.

“என்ன பண்ண முடியும் ப்ரகாஷ். நமக்கெல்லாம் விருப்பம், ஆசை எதுவும் இருக்கக் கூடாது” என்றாள் மெலிசான குரலில்.

அந்தக் குரலில் மென்மையும், வார்த்தைகளும் அவன் மனசைத் தொட்டிருக்க வேண்டும். அவளைப் புரிந்து கொண்ட மாதிரி ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சரேலென்று நகர்ந்து போனான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த அவள், ‘உங்களுக்கு வீட்டுக்கு போக முடியலையே என்ற வருத்தம். எனக்கு போக வேண்டி இருக்கிறதே என்ற வருத்தம்... இதற்கு என்ன செய்ய முடியும்... ப்ரகாஷ்’ என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். பின் ஓர் ஆழமான பெருமூச்சோடு திரும்பினபோது டைரக்டர் அருகில் வந்தார். “ஏதாவது சாப்பிடுறீங்களா மிஸ் பிரியா...” என்று கேட்டார்.

“நோ, தாங்க்ஸ். எமோஷனல் ஸீன் என்றால் நான் ஒண்ணும் சாப்பிடறதில்லை. வீட்டிலே இருந்துகூட எதுவும் சாப்பிடாமல்தான் வந்தேன்...”

அதைக்கேட்டு அவர் அரை வினாடி பேசாமல் நின்றார். பின்

“ஸீன் என்னன்னு தெரியுமா...?” என்று கேட்டார்.

“தெரியும். வர்றதுக்கு முன்னால ராம்தாஸ்கிட்டே போன் பண்ணிக் கேட்டேன்.”

“அப்படியானால் டயலாக் படிக்கச் சொல்லட்டுமா...?”

‘நானே படிச்சுக்கறேனே... ஒரு பத்து நிமிஷம் தனியாகவிட்டால் டயலாக் படிச்சுட்டு ஆக்ட் பண்ண வேண்டிய விதத்தையும் யோசிச்சுட்டு வருவேன்.”

“தாங்க்யு மிஸ் பிரியா. இந்த ஸீனைப் பத்தி நான் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டாம். படத்திலேயே அழுத்தமாக மனசில் பதிய வேண்டிய ஸீன் இது. எல்லார் நெஞ்சையும் உருக்க வேண்டிய ஸீன். ஸோ - பத்து நிமிஷம் என்ன, அரை மணி வேண்டுமானாலும் எடுத்துக்குங்க.”

“தாங்க் யூ.”

அவள் வசன காகிதங்களுடன் அறையின் மூலைக்குப் போனாள். அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். வசனங்களைப் படிக்க ஆரம்பித்தபோது புரொடக்ஷன் பையன் பவ்யமாய் வந்து,

“அம்மா, ஃபான்டா, லிம்கா...?” என்றான்.

“வேண்டாம்ப்பா ...”

பையன் போனதும் பிரியா ஒவ்வொரு காகிதமாகப் புரட்டி கடைசிப் பக்கம்வரை முடித்துவிட்டு நிமிர்ந்தபோது -

சட்டென்று எந்த சத்தமும் இல்லாமல் ஸெட் அமைதியான மாதிரி தெரிந்தது. மனசுக்குள் பாரமாக ஒன்று இறங்கிற்று. உடம்பு முழுதும் நெருப்புப் பற்றிக் கொண்டாற்போல் தோன்றியது. கண் கலங்கி குரல் அடைத்தது. காகிதத்தின் வசனங்கள் எங்கோ தூரத்தில் - வெகு தூரத்தில் பேசப்படுகிற மாதிரி காதில் விழுந்தது.

விருப்பத்திற்கு மாறாக ஒரு பெண், பெயர், பணம், புகழ் எல்லாவற்றிலும் உயர்ந்து, அதே மாதிரி உயரத்தில் இருக்கிற - மனசுக்குள் பிடிக்காத ஓர் ஆணின் ஆதிக்கத்திற்கு அடிமைப்படுத்தப்பட்டு, அவனிடம் கெஞ்சுகிற காட்சி கண் எதிரில் ஓடிற்று. அதிகம் கத்தாமல், ஓவென்று கதறி அழாமல், கண் முழுதும் கெஞ்சலாய், மெலிசான குரலில் வேண்டுகிற வார்த்தைகளாய், மெதுவாய், நிதானமாய்...

“ப்ளீஸ் பாஸ்கர். அலவ் மீ டு லிவ். ஐ வான்ட் டு லிவ். எல்லாரையும் மாதிரி ஒரு வீடு - கணவன் - குழந்தைன்னு சாதாரணமா வாழ ஆசைப்படறேன். வீட்டைப் பார்த்துக் கொண்டு - குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு - மத்தியான நேரத்தில் - தூங்கி - சாயந்தரம் ஐந்தானால் வாசலைப் பார்த்து - கார் ஹாரன் சத்தம் கேட்டு - காப்பி கலந்து - ராத்திரி முழுதும் படுக்கையில் சிரித்துப்பேசி - இதெல்லாம் கனவுகள் இல்லேன்னு நினைக்கிறேன் பாஸ்கர். எல்லாப் பெண்களுக்கும் நினைவுகளாக இருக்கிற இந்த நிஜங்கள் எனக்கு மட்டும் ஏன் கனவுகளாகப் போகணும்! கற்பனையாகணும்? சொல்லுங்க...”

“பட், எல்லாப் பெண்களுக்கும் கிடைக்காத ஒண்ணு உனக்குக் கிடைச்சிருக்கே ரூபா. நீ ஏணிப்படியில் ஏறி ‘நடிகை’ன்ற உயர்ந்த அந்தஸ்துல நிக்கறியே...”

“நோ. நான் அந்த அந்தஸ்துல கம்பீரமா நிக்கலே. பெருமையா நிக்கலே, சந்தோஷமா நிக்கலே, In fact அங்க நிக்கறதே பிடிக்காமதான் நிக்கறேன். நானாக்கூட நிக்கலே. நிக்கவைக்கப்பட்டிருக்கேன். அப்பாவும் நீங்களுமா பிடிச்சு இழுத்து நிக்க வைச்சிருக்கீங்க. ப்ளீஸ் லெட் மீ கெட் டௌன் ஃப்ரம் தட் ப்ளேஸ். எனக்கு அந்த இடம் வேண்டாம். பணம், புகழ் எதுவும் வேண்டாம், மனசுக்குப் பிடிக்காத போலி வாழ்க்கை வேண்டாம். எனக்குப் பிடித்த மாதிரி, பிடித்த விதமா, பிடித்த மனிதர்கூட ஒரு நாள் - ஒரே ஒரு நாள் வாழ்ந்தால் கூடப் போதும். அந்த ஒருநாள் வாழ்க்கை கூடவா என்னை வாழவிட மாட்டீர்கள். ப்ளீஸ் பாஸ்கர். அலவ் மீ டு லிவ்... அலவ் மீ... அலவ் மீ...”

- இப்படிக் கெஞ்சுவது யார்...? ரூபாவா...? இல்லை, நானா...? ஏன் இந்தப் பெயர் மாற்றம்? வெறும் பெயரில் மட்டும் எதற்காக இந்த மாறுதல்...? அதையும் பிரியம்வதா என்றே வைத்திருக்கக் கூடாதா இந்த ராம்தாஸ்...?

சட்டென்று கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டாள். தன்னை அடக்கிக்கொள்ள முயற்சி பண்ணினாள். கண்கலங்கி எல்லாம் நிழற்படங்களாக மாற, மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். டைரக்டர், காமரா எப்படி ட்ராலியில் நகர்ந்து மெதுவாக Zoom அவள் முகத்தில் முடிய வேண்டும் என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ப்ரகாஷ் காமரா லென்ஸ் வழியாக ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். அஸிஸ்டண்ட்ஸ் எல்லோரும் மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அஸிஸ்டண்ட் டைரக்டர்களில் ஒருவர் வந்து அந்த ஸீன் பேப்பரைத் தன்னிடமிருந்து வாங்கிக் கொண்டு போவதை உணர்ந்தாள் அவள்.

வெறும் உணர்ச்சி மட்டும்தான். மற்ற செயல்கள் எல்லாம் உடம்பிலிருந்து மரத்துப் போயிற்று. அத்தனை பேருக்கு நடுவிலும் தான் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிற மாதிரி தோன்றியது.

அதுவும் ஆயிரம் கால் மண்டபத்துக்கு நடுவில் அந்த இருட்டின் மத்தியில் நிற்கிறாற்போல், கண்ணெதிரில் நிறைய வௌவால்கள் பறக்கிறாற் போல் - எங்கிருந்தோ ஒரு ராட்சத வௌவால் வேகமாக வந்து எதிர்பாராமல் தாக்குகிறாற்போல், திருப்பித் தாக்க ஆயுதம் எதுவுமில்லாமல், உடம்பிலும் மனசிலும் பலமில்லாமல், சோர்ந்து போய், வலியும், ரணமும், நெஞ்சிலிருந்து வடிகிற ரத்தமுமாக...

சட்டென்று அந்த ராட்சஸ வௌவாலின் முகம் ஷியாம் குமாரின் முகமாகத் தெரிய...

ஷியாம் குமார்! அவள் உடம்பு மெதுவாய் சிலிர்த்தபோது...

“மிஸ் பிரியா, ரெடியா...?” டைரக்டர். அவள் கனவில் திரும்புகிற மாதிரி திரும்பினாள்.

“ஸாரி. இஃப் யு டோன்ட் மைண்ட், இன்னும் கொஞ்சம் டயம் கொடுக்கிறீர்களா...?”

“ஓ. ஷ்யூர்” அவர் தோளைக் குலுக்கிவிட்டு நகர்ந்தார்.

அவர் போன உடனே சடாரென்று எழுந்து அவள் பக்கத்திலிருந்த பால்கனிக்கு வந்தாள். அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள். வானம் நல்ல கருப்பில் கிடந்தது. நிறைய சரிகைப் பொடிகள் ஒட்டிக் கொண்டிருந்தன. தேய்ந்து போன பிறை கீறலாகத் தெரிந்தது. பார்வை தூரத்து இருட்டிற்குப் போய் அங்கேயே நிலைத்தது. அந்த இருட்டில் நிறையக் காட்சிகள் மாறி மாறித் தெரிந்தன.

கல்லூரிக் கட்டடம், ஆங்கில இலக்கிய வகுப்பு, லெக்சரர் அவளுக்குப் பிடித்த கவிதையை நடத்துகிறார். வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் ப்ரீலூட் அடுத்ததாக ரஸ்ஸலின் கட்டுரைகள், எலியாவின் கட்டுரைகள்.

சட்டென்று வகுப்பு மாறுகிறது. ஆடிட்டோரியம் தெரிகிறது. அந்த வருட கல்லூரியின் அழகுப் போட்டி. முதல் வரிசையில் தேர்வாளர்களில் ஒருவனாகப் பிரபல நடிகன் ஷியாம்குமார். நாலைந்து பேர்களுக்கு நடுவில் வெறும் வெள்ளைப் புடவையில் வருகிறாள் அவள். ஷியாம் குமார் அவளையே பார்க்கிறான். பார்வை நகராமல், கண் இமைக்காமல், முகம் பளிச்சிடுகிறது.

சிறிது நேரத்திற்கெல்லாம் மைக்கில் அவள் பெயர் அறிவிக்கப்படுகிறது. அவள் அந்தக் கல்லூரியின் அழகு ராணியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள்.

மறுநாளே ஷியாம்குமார் வீட்டிற்கு வருகிறான். அவளைத் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வைக்கப் போவதாகச் சொல்கிறான்.

அப்பா முகம் முழுதும் மலர்ச்சியால் உதடுகளில் பெரிதான சிரிப்போடு சரி சொல்கிறார்.

அவள் அதிர்ந்து போனவளாக கண் கலங்கி, குரல் அடைக்க அன்றிரவு அவர் எதிரில் போய் நிற்கிறாள்.

‘வேணாம்ப்பா, எனக்கு இந்தச் சினிமாவெல்லாம் பிடிக்காதுப்பா. நா லிட்ரேச்சர் பி.ஏ., முடித்து, எம்.ஏ., முடித்து எம்.பில் பண்ணி, அப்புறம் பி.எச்டி பண்ணி...”

“என்ன பண்ணப் போறே...?” சட்டென்று குறுக்கிட்டார் அவர்.

“என்ன பண்றதா...? என்னப்பா இது...?”

“எத்தனை படிச்சாலும் சினிமாவில் கிடைக்கிற புகழ் அதுல கிடைக்குமா?”

“வேண்டாம்ப்பா, எனக்கு அந்தப் பேர், புகழ் எதுவும் வேண்டாம். அதைவிட கௌரவமா, மரியாதையா எங்கேயாவது ஒரு காலேஜில் நான் லெக்சரரா... ப்ரொஃபஸரா...”

அப்பாவின் குரல் உயர்ந்தது.

“பைத்தியம் மாதிரிப் பேசாதே பிரியா. இது ஒரு நல்ல சந்தர்ப்பம். ஷியாம் குமாரே வந்து கேக்றது என்பது சாதாரண விஷயமில்லை. உன் அழகுதான் அவனை அப்படி அடிச்சுப் போட்டிருக்கு. அதை உபயோகப்படுத்திக்கத் தெரியணும். சாமர்த்தியமாக உயரப் போகத் தெரியணும். என் பெண்ணை நா ஒரு சாதாரண வாழ்க்கை வாழ வைக்கத் தயாராக இல்லை. வெறும் வாத்தியாராகவோ, காலேஜ் லெக்சரராகவோ பார்க்க இஷ்டமில்லை. அந்த அழகும், சாமர்த்தியமும் அப்படியெல்லாம் வீணாகிப் போகவும் விடமாட்டேன். இதெல்லாம் புரியாமல் பேசாதே பிரியா. படிப்பு யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் எல்லாரையும் தேடி வராது. வருகிறபோது உபயோகப்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.”

அப்பா புத்திசாலியாகத்தான் இருந்தார். எல்லா வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டார். அவளைக் கல்லூரியை விட்டு நிறுத்தினார். ரஸ்ஸலையும், வேர்ட்ஸ்வொர்த்தையும் கட்டி மூலையில் போட்டார். அதற்குப் பதிலாக நடிக்கச் சொன்னார்.

நடிப்பு; அவளுக்குப் பிடிக்காத ஷியாம்குமாரோடு நடிப்பு, கிட்டத்தட்ட இருபது படங்கள். இருபதிலும் அவள் ஷியாம்குமாரின் காதலி.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

படத்தில் மட்டுமில்லை. நிஜத்திலும் அவன் அவளை அப்படித்தான் நடத்தினான். அவளிடம் நிறைய சொந்தம் கொண்டாடினான். தனக்குத் தேவையானபோது வந்து போய், அவளைத் தன் கண்காணிப்பில் வைத்து, வேறு யாரோடும் பேச விடாமல், பழக விடாமல்...

(‘உன்னையே எனக்குப் பிடிக்கலையே..’)

“எந்த டைரக்டர் பையன்...?”

“அவன் பேரு என்ன... ஏதோ பெங்காலிப் பேர் மாதிரி இருக்குமே. இன்ஸ்டிடியூட்டிலிருந்து வந்திருக்கானே அவன்...”

“சரத்சந்திரனா...?”

“ம்...அவன்தான்; அவன் தலைமயிரும், கண்ணாடியும், காவிக்கலர் ஜிப்பாவும்...”

(எந்த புத்திசாலியை உனக்குப் பிடித்திருக்கிறது..?)

மீண்டும் வெளியில் நிதானமான குரலில் மெதுவாகச் சொல்வாள் :

“அவர் ஒரு நல்ல ஃப்ரெண்ட் ஷியாம். நிறைய படிச்சிருக்கார். என்னால் படிக்க முடியாமல் போன லிட்ரேச்சர் படிச்சிருக்கார். பெயிண்டிங், டான்ஸிங், மியூசிக் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கார்.”

“எது வேணும்னாலும் தெரிஞ்சு வச்சிருக்கட்டும். அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. இதுதான் கடைசி தரமா சொல்றது. நீ அவனோட பேசறது. பழகறது எதுவும் எனக்குப் பிடிக்கலே, பிடிக்கலே, பிடிக்கலே. டூ யு அண்டர்ஸ்டாண்ட்...?”

அவள் சட்டென்று கீழ் உதட்டைக் கடித்துத் தன்னை அடக்கிக்கொள்வாள்.

‘ஷியாம், இது என்ன கட்டளை..? பெண்டாட்டிக்கு இடுகிற கட்டளை மாதிரி...? உன் பேச்சை, வார்த்தைகளை உன் பெண்டாட்டியே, குழந்தைகளே மதிக்காதபோது நான் ஏன் மதிக்க வேண்டும்...? எதற்காக இப்படிப் பயப்பட வேண்டும்...? எப்போது எனக்கு உன்னிடமிருந்து விடுதலை கிடைக்கும்? உன்னிடமிருந்து மட்டும் தானா..? அப்பாவிடமிருந்து, இந்த விளக்குகளிடமிருந்து, காமராவிடமிருந்து, மேக்கப்பிடமிருந்து... அம்மா... அம்மா... நீயாவது இருந்திருக்கக்கூடாதா? உன் மடியில் தலையைச் சாய்த்து சிறிது நேரமாவது அழலாமே..? அக்கா, தங்கை, அண்ணா, தம்பி என்று யாராவது கூடப் பிறந்திருக்கக்கூடாதா...? கொஞ்சம் கஷ்டத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கலாமே... கடைசி பட்சமாக அழகில்லாமலாவது பிறந்திருக்கக்கூடாதா? இப்படி...?

“இப்போ ரெடியா மிஸ் பிரியா...” மறுபடியும் டைரக்டரின் குரல். 

“எஸ் சார்...”

அவள் சட்டென்று கீழே இறங்கி வந்தாள். தன்னை ரூபாவாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் கூடுவிட்டுக் கூடு பாய வேண்டிய தேவை இல்லாமல்... பிரியம்வதாவே ரூபாவாக, ரூபாவே பிரியம்வதாவாக....

காமரா முன்னால் நின்றபோது மறுபடியும் டைரக்டர் சொன்னார்.

“டேக் யுவர் ஒன்டைம் மிஸ் பிரியா...”

டேக் யுவர் ஒன் டைம் மிஸ் பிரியா... 

டேக் யுவர் ஒன் டைம்... டேக் யுவர்....

எங்கோ காத தூரத்திலிருந்து கேட்கிற மாதிரி டைரக்டரின் குரல் டேக் ஒன். ஸீன் நம்பர் எல்லாம் காதில் விழுகிறது? விர், விர்ரென்று காமரா ஓட ஆரம்பிக்கிறது.

‘ஷியாம்குமார்...!’

சட்டென்று யாரோ எரிகிற தீப்பந்தத்தை அடிவயிற்றில் செருகின மாதிரி தெரிந்தது. குபீரென்று கிளம்பின கண்ணீரில் கன்னங்கள் நனைய ஆரம்பித்தன. நாசியில் பொடிப் பொடியாக வியர்த்து, உதடுகள் லேசாக நடுங்கி, வியர்வையில் புடவையின் மேற்பகுதி மார்போடு ஒட்டிக் கொண்டு, வார்த்தைகள் உணர்ச்சி பூர்வமாக வெளியில் வர, கண்களில் சொல்ல முடியாத ஒரு சோகம் எட்டிப் பார்க்க...

‘அலவ் மீ, அலவ் மீ, அலவ் மீ...’ என்று கதறின கதறலில், காமரா நின்றது தெரியாமல், விளக்குகள் அணைந்தது தெரியாமல், அவள் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு உடம்பு குலுங்கக் குலுங்க அழுதபோது…

டைரக்டர் மெதுவாக எல்லோரையும் வெளியில் போகும்படி சைகை செய்தார். அடுத்த நிமிடம் ஹால் காலியாயிற்று. எந்த சத்தமுமில்லாமல் அடங்கிப் போயிற்று. மெலிசாக மின்சார விசிறி மட்டும் ஓடியது.

கால் மணி நேரத்திற்குப் பின் அழுகை சற்று ஓய்ந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை அடக்கிக் கொள்ள ஆரம்பித்தபோதுதான் அவளுக்குச் சட்டென்று தன் நிலைமை புரிந்தது. ஹாலில் யாருமில்லாதது தெரிந்தது. எப்போதோ காமரா நின்று, விளக்குகள் அணைந்து...

‘சே! என்ன இது...? என்னவாயிற்று எனக்கு...? எப்போதும் யார் எதிரிலும் என்னை வெளிக்காட்டிக் கொள்ளாத நானா இப்படி இத்தனைப் பேர் எதிரில்...? என்ன வந்துவிட்டது எனக்கு?...”

“அம்மா டீ...” புரொடக்ஷன் பையன் பயந்து கொண்டே டீ கப்பை நீட்டினான்.

மறுக்காமல் வாங்கி மடமடவென்று குடித்தாள் அவள். அந்தச் சூட்டில் நெஞ்சில் எரிந்த தீ அணைந்த மாதிரி தோன்றியது. மனசில் சற்று லேசான உணர்வு தோன்றியது. கண்களைத் துடைத்துக்கொண்டு மெல்ல நிமிர்ந்து டைரக்டரைப் பார்த்தாள். பார்வை கெஞ்சிற்று.

“இஃப் யு டோன்ட் மைண்ட் நான் வீட்டுக்குப் போகலாமா...?”

“ஓ. ஷ்யூர். கிளம்புங்கள்.”

ஒரு நிமிடத்தில் அவளுடைய கார் வந்து போர்ட்டிகோவில் நின்றது. கார் கதவைத் தானே திறந்துவிட்டார் டைரக்டர். அத்தனைப் பேர் கண்களும் தன் மீதே பதிவதை உணர்ந்து வேகமாகக் கதவை மூடிக்கொண்டாள் அவள். 

“வீட்டுக்குப் போ சின்னையா...”

கார் கிளம்பினவுடன் மீண்டும் அடிவயிறிலிருந்து துக்கம் குமுறிக்கொண்டு வர சத்தப்படுத்தாமல் அழ ஆரம்பித்தாள் அவள்.

- தொடரும்