அத்தியாயம் 1

574.8k படித்தவர்கள்
89 கருத்துகள்

ரவு ஒன்பது மணி. அந்தப் பிரதேசத்தில் ஓடும் கடைசிப் பேருந்து அது. முந்தைய நிறுத்தத்தில் இரண்டு பேர் இறங்கிப் போக, பஸ்ஸில் பகவதியும் சற்றுத் தள்ளி அந்த மனிதனும் மட்டுமே இருந்தார்கள். பேருந்தில் ஏறியது முதல், அவன் பார்வை பகவதி மேல்தான் இருந்தது. அவனது முரட்டுத் தோற்றமும், சிவந்த கண்களும், பகவதியை அவன் பார்த்த பார்வையும் அவளது அடிவயிற்றைப் பிசைந்தது.

இப்போது பேருந்தில் இருவர் மட்டுமே. நடத்துநர் ஆழமான உறக்கத்தில் இருக்க, அவன் முன்னேறி வந்து அவளுக்கு அருகில் உட்கார்ந்தான். பகவதி நெளிய, அவனது கைகள் பின்னால் வந்து அவளது தோளைச் சுற்றிப் படர்ந்தது. பேருந்து குலுங்கி நிற்க, நடத்துநர் விழித்துக்கொள்ள, பகவதி எழுந்து வந்து டிரைவர் இருக்கைக்கு எதிரே உட்கார்ந்தாள். ஓடிய பஸ் சில நிமிடங்களில் நிற்க,

“கடைசி ஸ்டாப் வந்தாச்சு. இறங்குங்க!”

பகவதி இறங்க, அவனும் இறங்கினான். பகவதி நடக்க, அவன் பின்பற்றினான். ஆள் நடமாட்டம் இல்லை. நேரமும் இரவு ஒன்பதைக் கடந்துவிட்டது. திடீரென மின்சாரம் கண்களை மூடி, தெருவிளக்குகள் மரிக்க, பகவதி திரும்பிப் பார்த்தாள். வெகு அருகில் அவன் வந்துவிட, பகவதி மிரண்டு ஓடத் தொடங்கினாள். அவனும் இன்னும் வேகமாக அவளை நெருங்கி எட்டிப் பிடித்தான். பகவதி அலற, அவளை பலவந்தமாக அவன் தூக்க, அந்த கார் வந்து நின்றது. அதற்குள் அவளை அவன் திணிக்க, பகவதி அலற, கார் வேகமாக புறப்பட்டது.

அலறியபடி எழுந்தாள் கல்யாணி!

``அய்யோ! பகவதியை யாரோ கடத்திட்டு போறாங்க! கார்ல போறாங்க. அவளைக் காப்பாத்துடா சம்பத். மாப்ளே, நீங்களாவது வாங்க. அய்யோ! என் பொண்ணை காப்பாத்த யாருமே வரமாட்டீங்களா?”

அலறல் கேட்டு சம்பத் எழுந்துவிட்டான்.

''அம்மா சத்தம் மாதிரி இருக்கு சாதனா. நான் பார்த்துட்டு வர்றேன்.”

''நீங்க சும்மா இருங்க. உங்கம்மா யாரையும் தூங்கவிட மாட்டாங்க. என்னிக்கு நிம்மதியா இருக்க விட்டாங்க? பேசாமப் படுங்க!”

சம்பத் வருவதற்குள் பகவதி வந்துவிட்டாள். அம்மா கண்களை மூடிக்கொண்டு கதறி அழ, பகவதி அருகில் வந்து உலுக்கினாள்.

''அம்மா! என்னாச்சு? ஏன் அழற?”

''பகவதியை யாரோ ஒருத்தன் கார்ல கடத்திட்டுப் போறானே!”

சம்பத் வந்துவிட்டான். ''பைத்தியமா உனக்கு? பகவதி இங்கேதான் இருக்கா. அவ எங்கேயும் போகலை. கண்ணைத் திறந்து பாரும்மா!”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அம்மா கண்களைத் திறக்க, எதிரே பகவதி நின்றாள். அதற்குள் சாதனாவும் வந்துவிட்டாள். அம்மா கண்களைத் திறந்தபடி, கண்ணீருடன் விவரம் சொல்ல,

''இப்படித்தான் போன மாசம் பகவதியைப் பாம்பு கடிச்சிட்டதா சத்தம் போட்டு இவங்க மயங்கி விழுந்து ஆஸ்பத்திரிக்குத் தண்டம் அழுது, போதும்டா சாமி! கடவுள் நம்ம தலைல ஆணியால எழுதியிருக்காரு. இந்தம்மாவை வச்சிட்டு நமக்கெல்லாம் ஒரு நல்லதும் நடக்கப்போறதில்லை.’’

''ஏம்மா இப்படி உயிரை எடுக்கறே? காலைல எழுந்து நாங்கள்லாம் ஆஃபீசுக்கு போகவேண்டாம்? இந்த மாதிரி நீ தூக்கத்தைக் கெடுத்தா எப்படீம்மா?”

''அண்ணே! நீங்க ரெண்டு பேரும் போய்ப் படுங்க. நான் பாத்துக்கறேன். ஸாரி அண்ணி!”

''ஆமாம்! இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஆத்தாளோட ஆட்டம். மகளோட மன்னிப்பு. எனக்கு இந்த ஜென்மத்துல விடியப் போறதில்லை.”

சாதனா முனகிக்கொண்டே போக, பகவதி அருகில் வந்தாள்.

''ஏம்மா இப்படிப் பண்ற? அன்னிக்கு பாம்பு. இன்னிக்கு கடத்தலா? நான் வீட்டைவிட்டு வெளில எங்கேம்மா போறேன்? என்னைக் கடத்தி யாருக்கு என்ன லாபம்மா? நாமே அவங்களுக்கு பாரம்னு அண்ணி ஒவ்வொரு நாளும் நம்மைக் கரிச்சுக்கொட்டறது உனக்குத் தெரியாதா? நீயே ஏன்மா அவங்க வாய்ல போய் விழற?’’

''எனக்கு கனவு வந்தா அது பலிக்கும்டி பகவதி. ஏதோ ஒரு வகைல உனக்கு ஆபத்து வருமோனு தோணுது. உங்கப்பாவுக்கு விபத்து ஏற்படற மாதிரி கனவு வந்தது எனக்கு. கடைசில அவர் விபத்துலதானே செத்தார். எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு பகவதி! தலை சுத்துது.”

பகவதி போய் மாத்திரை எடுத்துவந்து தந்தாள். குடிக்கத் தண்ணீர் தந்து படுக்கவைத்தாள். அம்மா கொஞ்ச நேரத்தில் உறங்கிவிட்டாள். பகவதிக்கு உறக்கம் தொலைந்தது.

பகவதி என்றைக்குத் தூங்கினாள்?

கதைக்குள் முழுமையாக நீங்கள் போவதற்கு முன், இந்தக் குடும்பம் பற்றி தெரிந்துகொண்டால், கதை சூடாக சுறுசுறுப்பாக இருக்கும். நம் கதாநாயகி பகவதி என்பது இந்த நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். கல்யாணி அம்மா நன்றாக வாழ்ந்தவள்தான். கணவர் கேரளாவில் தோப்பும் துரவுமாக வாழ்ந்தார். செழிப்பான குடும்பம். முதலில் சம்பத், அதன்பிறகு ஜீவா, கடைசியாக பகவதி என மூன்று குழந்தைகள். சம்பத் பள்ளிப் படிப்பின் இறுதியில், அவனைவிட மூன்று வயது இளையவள் ஜீவா, ஒன்பதாவது. அவளுக்குப் பிறகு ஆறு வருஷங்கள் கழித்து பிறந்த நம் நாயகி பகவதி.

பகவதி மூன்றாம் வகுப்பு படிக்கும் நேரம்தான் அப்பா முகுந்தன் குடிப் பழக்கம், சூதாட்டம், பிற பெண்களின் தொடர்பு எனச் சகல கல்யாண குணங்களுக்கும் ஆளாகி சீரழியத் தொடங்க, முதலில் அம்மா கல்யாணி கண்டுகொள்ளவில்லை. ஆனால், அது தீவிரமாக ஊர்மக்கள் அதை ஒரு புகாராக்கி, “ரொம்பத் தப்பா இருக்கு அம்மே! உங்களுக்கு மூணு குழந்தைங்க. அதிலும் ரெண்டு பொண்ணுங்க. இது நல்லதில்லை’’ என எச்சரிக்க, கல்யாணி அப்போதும் மௌனம் சாதித்தாள்.

ஆனால் வனஜா என்றொரு பெண்ணுடன் அவருக்கு ஆழமான தொடர்பு என்பது தெரிந்து, அவள் ஒரு மாதிரி தப்பான பெண், பணத்துக்காக எதையும் செய்வாள் என்பது தெரிந்ததும், கல்யாணி ஆவேசமாகிவிட்டாள். அடுத்த வாரமே கோயிலில் வைத்து முகுந்தன், வனஜா இருவரையும் பார்த்தாள். பட்டு கட்டி கணவன் மனைவி போல இருவரும் வந்திருக்க, பொறுக்க முடியாமல் பொங்கிவிட்டாள். அதுவும் அந்த வனஜா தலையில், முகுந்தன் பூ வைத்து, அவளுக்குக் குங்குமமும் வைக்க, கல்யாணி தாளமாட்டாமல் அங்கேயே ரகளை பண்ணிவிட்டாள். கூட்டம் கூடிவிட்டது. 

கல்யாணி, வனஜாவை அறைந்து, “என் புருஷன் உனக்கு எதுக்குடி பூவும் பொட்டும் வைக்கணும்?” எனச் சீறினாள்.

''அதை உன் புருஷனைக் கேளு. நான் அவரை நாடலை. அவர்தான் என் காலடில விழுந்து கெடக்கார். உன்னால முடிஞ்சா தடுத்து நிறுத்துடி’’ எனப் பதில் சவால்விட்டு பல பேர் இருப்பதையும் பொருட்படுத்தாமல் கல்யாணியைக் கேவலமாகப் பேசி, பதிலுக்கு அறைந்து, முகுந்தனையும் இழுத்துக்கொண்டு வனஜா வெளியேறினாள்.

அந்தச் சமயம் அம்மாவுடன் பகவதி இருந்தாள். பலத்த அதிர்ச்சியுடன் அதைக் கவனித்துக்கொண்டிருந்தாள். அம்மா அவளை அணைத்து அழைத்து வந்தாள். வீட்டுக்கு வந்த அம்மா சாப்பிடாமல் அழுதுகொண்டிருக்க, அண்ணனும் அக்காவும் காரணம் கேட்டனர். அம்மா மௌனம் சாதிக்க, பகவதி கோயிலில் நடந்ததைச் சொல்ல, சம்பத்தும் ஜீவாவும் பொங்கிவிட்டார்கள்.

''வீட்டுக்கு வரட்டும், அவரை நாங்க விடப்போறதில்லை.’’

''வேண்டாம்டா. நீங்க சின்னப் புள்ளைங்க! அவர் உங்கப்பா. இந்தக் குடும்பத் தலைவன். அவரை நீங்க யாரும் எதிர்க்கக் கூடாது! இது என் பிரச்னை. நான் சரிபண்ணிக்கறேன். நீங்க பேசாம இருங்க.’’

அன்று இரவு முகுந்தன் நன்றாகக் குடித்துவிட்டு வந்து, “ஏண்டீ, பொது இடத்துல வச்சு என்னை அசிங்கப்படுத்தறியா? என்ன தைரியம் உனக்கு?”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

''வேண்டாம். நம்ம புள்ளைங்க எதிர்ல உங்க அசிங்கமான போக்கை நான் வெளிச்சம் போட விரும்பலை. எல்லாத்தையும் விட்ருங்க. நமக்கு மூணு குழந்தைங்க, மறக்க வேண்டாம். அந்த வேசியோட தொடர்பு இனி வேண்டாம். உங்களுக்கு நான் என்ன குறை வச்சேன்? வேண்டாங்க இந்த விபரீத போக்கு!”

''யாருடி வேசி? வனஜாவைப் பேசின இந்த வாயை கிழிக்கறேண்டி!” அடுத்த நொடியே மிருகத்தனமாக அவளை அடிக்கத் தொடங்க, சம்பத், ஜீவா தாளமுடியாமல் பாய்ந்து அதைத் தடுத்தனர். அவர்களுக்கும் அறை விழ, கல்யாணி அலற, ரணகளமாகிவிட்டது வீடு.

பிள்ளைகளை அணைத்தபடி, “வேண்டாங்க! புள்ளைங்களை அடிக்காதீங்க. அவங்க தாங்கமாட்டாங்க! நான் எதுவும் கேக்கலை. என் குழந்தைங்க அடி வாங்கறதை என்னால தாங்கிக்க முடியலை’’ கதறிவிட்டாள். குழந்தைகளை உள்ளே அழைத்துவந்து காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு கட்டிக்கொண்டு கதறினாள்.

நாளுக்கு நாள் இது அதிகமானது. அந்த வனஜா, ஊரின் பெரிய மனிதர்கள் நாலைந்து பேரை கைக்குள் வைத்திருந்தாள். குறிப்பாக, ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு கிரிமினல் லாயர் அவளது வாடிக்கையாளர்கள். அதனால் இந்த விவகாரம் கல்யாணியின் அண்ணனுக்குப் போக, அவனும் முட்டி மோதி மண்டை உடைந்து விலகிவிட்டான்.

கல்யாணி மற்றும் மூன்று குழந்தைகளை ஆதரிக்க ஆளில்லை. முகுந்தன் வீட்டுக்கு வருவதே குறைந்துவிட, தரும் பணமும் குறைய, கல்யாணியின் வாழ்வாதாரம் நிலைதடுமாறியது. முகுந்தனின் வருமானம் மொத்தமும் அவள் கைக்கு போகத் தொடங்க, கல்யாணி ஊர்மக்களை நியாயம் கேட்க, அந்த அராத்து போலீசை வைத்து மிரட்டல் ஆரம்பமானது.

ஜீவா வயசுக்கு வந்த பெண் என்பதால் கல்யாணி பயந்தாள். பள்ளிக்கூடம் செல்லும் பெண் ஒழுங்காக வீடு திரும்ப வேண்டுமே என்ற பயம். தினசரி ஒரு கலக்கம். அடாவடி செய்பவர்களிடம் யார்தான் மோதமுடியும்? தன் குடும்பத்துக்கு பிரச்னை வரக்கூடாதே என நல்லவர்களும் ஒதுங்கத் தொடங்கிவிட்டார்கள்.

திடீரென வனஜா ஊரைவிட்டே போகப்போகிறாள் என ஒரு தகவல் வர, கல்யாணி சந்தோஷப்பட்டாள். ‘தனக்கு விடிந்துவிட்டது’ என நம்பினாள். அது விடியல் அல்ல விபரீதம் எனப் புரிந்தது அடுத்த வாரமே. அத்தனை சொத்துக்களையும் போதையில், அவள் விரித்த காம வலையில் அவளுக்கு எழுதி கொடுத்துவிட்டான் முகுந்தன் எனத் தகவல் வந்தது. அவர்கள் இருவரும் துபாய் போகிறார்கள் என்ற தகவலும் வந்தது.

கல்யாணி நியாயம் கேட்க ஓடினாள். அங்கே முகுந்தன் கட்டிய தாலியுடன் நின்றாள் வனஜா. கல்யாணி அலறிவிட்டாள்.

''மனைவி, அவளுக்குப் பிறந்த மூணு குழந்தைங்க இருக்கும்போது, இவளுக்கு எப்படி நீங்க தாலி கட்டலாம்?”

''கோர்ட்டுக்கு போ! கேஸ் போடு. நாங்க இன்னிக்கு விமானம் ஏறப்போறோம். கொஞ்சம் பணம் தர்றேன். அதைவச்சு பொழச்சுக்கோ. எதிர்த்தா, நீ விபச்சாரம் பண்ணினதா வழக்கு வரும். போலீஸ், வக்கீல் எல்லாரும் என் கையில! எப்படி வசதி? பணம் வேணுமா வேண்டாமா?”

பேசமுடியாமல் வாயடைத்து கண்ணீர் கொப்பளிக்க வீடு திரும்பினாள் கல்யாணி. குழந்தைகளிடம், “இனி உங்களுக்கு அப்பா இல்லைப்பா!” கதறினாள். மூன்று பேரும் அம்மாவுடன் சேர்ந்து கண்ணீர்விட்டார்கள். எதிர்காலம் குறித்து மிரண்டார்கள். அப்பா என்ற உறவை அடியோடு வெறுத்தார்கள். மற்ற இருவரும் அப்பாவை மட்டும்தான் வெறுத்தார்கள்.

ஆனால் பகவதி, ஆண் வர்க்கத்தையே வெறுக்கும் சூழ்நிலை அவள் வாழ்வில் அடுத்தடுத்து உருவானது. ஏன்? பகவதி ஏன் ஒட்டுமொத்தமாக ஆண்களை வெறுத்தாள்?

- தொடரும்