அத்தியாயம் 1

222.01k படித்தவர்கள்
40 கருத்துகள்

(சம்பவம் - ஒன்று)

ஞ்சித் டேனியல் வீரேந்திரகுமார் ஆறடி உயரம் அறுபத்தைந்து கிலோ. 

அவனுடைய விரிந்த மார்பு நாற்பது அங்குல அளவுள்ள சட்டையைத்தான் அணிந்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது. அவனுடைய குறுகலான இடை முப்பத்திரண்டு அங்குல அளவுள்ள பான்ட்டே போதும் என்று திருப்தி அடைகிறது. எப்போதும் ஷூ அணிவான், விதம் விதமாக. அவனிடம் முப்பத்திரண்டு வகை ஷூக்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று அணிவான். முகத்தை முழுவதும் மூடிய ஹெல்மெட்டை நீக்கிவிட்டு நல்ல வெளிச்சத்தில் அவனைப் பார்த்தால் எந்த அழகிய இளம் பெண்ணுக்கும் உடனே காதல் வரும்.

அடர்த்தியான தலை முடி. அதில் ஒரு கொத்து முன்நெற்றியில் வந்து புரளும். அவன் சிரித்தால் கூடவே அவனது காந்தக் கண்களும் சிரிக்கும். மோவாயில் ஒரு சின்னக் குழி. மஹா நீளமாகவும் இல்லாமல், மஹா குட்டையாகவும் இல்லாமல் அளவான கச்சிதமான மூக்கு. அம்மா இல்லை, அப்பா உண்டு. கல்யாணம் செய்து கொடுக்க வேண்டிய வயதில் ஒரு தங்கை உண்டு. இரண்டு பேரும் தோகைமயில் கிராமத்தில் இருக்கிறார்கள். தோகைமயில் கிராமத்தை நாம் அப்புறம் பார்க்கலாம். இப்போது நாம் பார்க்கப்போவது ரஞ்சித் டேனியல் வீரேந்திரகுமாரை.

ரஞ்சித் டேனியல் வீரேந்திரகுமாரின் ஹீரோ ஹோண்டா இருட்டைக் கூறுபோட்டுக்கொண்டு முன்னேறியது. சென்னையிலிருந்து எண்ணூர் போகும் வழியில், கடற்கரையோரம், சுங்கச்சாவடி தாண்டி... முன்னிரவு ஏழு மணிக்கே ஆகாயத்தில் நிலா, ஓடிய களைப்பால் அம்பேல் விட்டுவிட்டு எங்கேயோ மேகத்திற்குப் பின்னால் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் பக்கத்தில் விரிந்த கடலில் குளிக்கப் போய்விட்ட மாதிரி ஆகாயம் சுத்தம்.

ரஞ்சித்குமாரின் எதிரே சாலை கறுப்பு ரிப்பன். அவ்வப்போது எதிரில் வந்த லாரிகள், கார்கள் ஹெட்லைட்டை அணைத்து ரஞ்சித்குமார் போவதற்கு வசதி செய்து தர, ரஞ்சித் எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் சாலையில் மிதந்தான். சற்று தூரம் சென்றதும் பைக்கின் வேகத்தை ரஞ்சித் குறைத்தான். காரணம் மணலை ஒட்டி சாலையோரம் நின்றிருந்த அந்த டொயாட்டோ. ரஞ்சித்குமார் பைக்கின் தலை விளக்கை ‘க்ளிக் – க்ளிக் - க்ளிக்’ என்று மூன்று முறை அணைத்து அணைத்துப் போட்டான். வெறும் பார்க்கிங் விளக்குடன் நின்றிருந்த டொயாட்டோவின் தலைவிளக்குகள் மூன்றுமுறை கண் சிமிட்டின. ரஞ்சித்குமார் பைக்கின் ஹாண்டில் பாரைப் பற்றியிருந்த கிளவுஸ் போட்ட கைகளை எடுத்துக் காற்றில் உயரத் தூக்கினான்.

“ஹுர்ரே” என்றான். டொயாட்டோவை சமீபித்து ‘கிர்ர்ரீச்’  என்று ப்ரேக் அடித்தான். ஹோண்டா மணலில் ஒரு முறை சர்ரென்று தேய்ந்து 45 டிகிரி கோணத்தில் திரும்பி டொயாட்டோவின் பம்ப்பரை முத்தமிட்டு நின்றது. 

ரஞ்சித் டேனியல் வீரேந்திரகுமார் பைக்கை ஸைட் ஸ்டாண்டில் நிற்க வைத்தான். ஹெல்மெட்டைக் கழற்றி பெட்ரோல் டாங்கின் மீது வைத்தான். அப்படியே தாவி இறங்கி டொயாட்டோவை நெருங்கினான். அவன் வருகைக்காகவே காத்திருந்த மாதிரி ‘க்ளிக்’ சத்தத்துடன் காரின் இடப்பக்க முன்கதவு திறந்துகொண்டது. மெரூன் நிற நகப்பாலிஷ் அணிந்த நான்கு விரல்கள் நீண்டன. ரஞ்சித் அந்த விரல்களை மென்மையாகப் பற்றினான். சிகரெட் பழக்கமற்ற ரோஸ் நிற உதடுகளால் முத்தமிட்டான்.

“நோ... நோ... ப்ளீஸ்..”

ரஞ்சித் டேனியல் வீரேந்திரகுமார் காருக்குள் நழுவினான். கதவைச் சாத்திக்கொண்டான். காரின் உள் விளக்கைப் போட்டான்.

“சுபீ.. சுபீ.. என் செல்ல சுபத்ரா... ஸாரி, ரொம்ப நேரம் காக்க வைத்துவிட்டேனா?” என்றான்.

சுபத்ரா அவனை ஒரு முறை பார்த்தாள். இமைகளைப் படபடத்தாள். பெருமூச்சு விட்டாள். சுபத்ரா இமைகளைப் படபடத்தபோது இமை விளிம்புகளில் அவள் தீட்டியிருந்த ஐ-லைனரின் உன்னதமான கறுப்புக் கீற்றும் சேர்ந்து படபடத்தது, கறுப்புச் சிறகு பட்டாம்பூச்சி இறக்கைகளை விர்ரிட்டுக்கொண்ட மாதிரி.

“அதற்காக மன்னிப்பு கேட்கப் போகிறீர்களா?”

“மன்னிப்பு கேட்க நான் தயார். எப்படிக் கேட்க வேண்டும்? காதில் முத்தமிட்டா, கழுத்தில் கிஸ் பண்ணியா, இல்லை உதடுகளில்…”

“ஆசை, ஆசை… அதெல்லாம் இல்லாமலே மன்னித்துவிட்டேன், சார்.”

இலைப் பச்சை நிறத்தில் ஸாரி கட்டியிருந்தாள். அதில் எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் பூக்கள். ஜாக்கெட் எலுமிச்சை மஞ்சளில் இருந்தது. அணிந்திருந்த கறுப்பு பிராவின் பின்பக்கம் ஒரு பெருக்கல் குறி போன்ற டிஸைன். ப்ளவுஸ் கொஞ்சம் லோ கட். அதனால் ரஞ்சித்தின் பிளட் பிரஷர் கொஞ்சம் எகிறியது. ஸாரியை இடுப்புக்குக் சற்று கீழே இறக்கிக் கட்டியிருந்ததில் சுபத்ராவின் ஐவரி இடுப்புப் பிரதேசமும் அதை ஒட்டியிருந்த லேசாக மடிப்பு விழுந்த வயிற்றுப் பிரதேசமும் தெரிந்ததில் ரஞ்சித்தின் இதயத் துடிப்பு முயலின் இதயத் துடிப்புபோல, விர்ரென்று அதிகரித்தது. 

சுபத்ராவுக்கு அழகான கண்கள், அழகான மூக்கு, அழகான உதடுகள், அழகான பற்கள், அழகான மோவாய், அழகான கழுத்து, அழகான... வேண்டாம். ஏற்கெனவே ரஞ்சித் ப்ரஷரில் இருக்கிறான். அநாவசியமாக நீங்கள் வேறு உணர்ச்சிவசப்பட வேண்டாம். அதற்கப்புறம் சில விநாடிகள் அங்கே மௌனம். 

“சுபத்ரா.”

“ம்.”

“பேச மாட்டாயா?”

“ம்ஹூம்.”

“ஏன்?”

“உங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும்போல இருக்கிறது”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“எத்தனை நாளைக்குத்தான் இப்படி அரைகுறையாகப் பார்த்துக்கொண்டிருப்பாய்?”

“அப்படி என்றால்?”

“என்னை முழுசாகப் பார்க்க உனக்கு ஆசையாக இல்லையா சுபத்ரா?”

“ச்சீ.”

“எனக்கு இருக்கிறது.”

“என்ன?”

“அந்த ஆசை. உன்னை முழுதாகப் பார்க்கும் ஆசை.”

“ச்சீ...”

“மறுபடியும் இந்த ச்சீதான் பதிலா? ஐ’ம் ஸீரியஸ். உன் லோ கட் ப்ளவுஸும், இடுப்பு ஸாரியும் என்னைச் சும்மா இருக்க விட மாட்டேன்கிறது சுபத்ரா”

“கை, கை…”

“ச்ச். இந்த நேரம்தான் நான் என் சுபத்ராவைத் தொடும் நேரம். இந்த நேரம்தான் நான் என்னுடைய வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கும் நேரம். ப்ளீஸ். தடுக்காதே சுபத்ரா...”

“டாடி லயன்ஸ் கிளப் மீட்டிங்கிற்குப் போனவுடன் கிளம்பி வந்திருக்கிறேன். அவர் வருவதற்குள் திரும்பிப் போக வேண்டும்.”

“போகலாம். போகலாம். இப்போதுதான் வந்தாய்! அதற்குள் அவசரமா?”

“உங்களைப் பார்க்கும் வரை, உங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னை வீட்டிலிருந்து கிளப்பிவிடுகிறது. யாரோ அப்பாவிடம் என்னைப் பற்றி ஏதோ வத்தி வைத்திருக்கிறார்கள். அப்பா கேட்கும் கேள்வி எல்லாம் ஒரு மாதிரி இருக்கிறது.”

“இதற்கெல்லாம் ஒரு முடிவு சொல்லட்டுமா?”

“என்ன?”

“நாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியதுதான்.”

“இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் ரஞ்சித்...”

“நான் உன்னை இரண்டு வருஷமாகக் காதலிக்கிறேன். ஒரு வருஷமாக நீ இந்த ‘இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் ரஞ்சித்’தைச் சொல்லிக்கொண்டே இருக்கிறாய். இன்னும் எத்தனை நாள் சுபத்ரா?”

“அப்பாவிடம் சொல்லி பர்மிஷன் வாங்கிய பிறகு.”

“எப்போது சொல்லப் போகிறாய்?”

“அவர் நல்ல மூடில் இருக்கும் சமயம்...”

“அந்த சமயம் எப்போது வரும்?”

“இன்னும் கொஞ்ச நாளில்...”

“போக்கிரி. அதுவரைக்கும் இப்படியே திருட்டுத்தனமாகத்தான் சந்திக்க வேண்டுமா?”

“ஆம். நான் கிளம்புகிறேன் ரஞ்சித்...”

“வேண்டாம்.”

“ப்ளீஸ்.”

“ஓ.கே. ஆன் ஒன் கண்டிஷன்...”

“என்ன கண்டிஷன்?”

“இன்றைக்கு ராத்திரி எனக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ் வர வேண்டாமா?”

“அதற்கு?”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“ஒரு கிஸ்...”

“ஏய்ய்...”

“ஏய்... சுபத்ரா... ப்ளீஸ்... நான் என்ன காதலன்கள் கேட்காததையா கேட்டுவிட்டேன்? ஒரே ஒரு கிஸ்தானே..”

“சரி. கன்னத்தில்...”

“ம்ஹூஹூம், உதட்டில்..”

“ஆனாலும் நீங்கள்…”

“ரொம்ப மோசம்தான், ரொம்ப மோசம்தான்...”

“ஏய்ய்ய்... ரஞ்ச்ச்…”

“ப்ச்ச்ச்..”

“என்ன சென்ட் போட்டுக்கொண்டு வந்தாய் சுபத்ரா?”

“சென்ட்டை என்ன உதட்டிலா போட்டுக்கொண்டு வந்திருக்கிறேன்? உதடு எரிகிறது ரஞ்சித்...”

“ஒன்ஸ் இன் எ ப்ளூமூன், எனக்கு இந்த சான்ஸ் கிடைக்கிறது. விட முடியுமா? உன் உதடு எவ்வளவு ஸ்வீட் தெரியுமா?”

“ம்ம்ம்... ஒன்று முடிந்துவிட்டது! ஐயோ வேண்டாம்... ப்ளீஸ்... ப்ளீஸ் பச்ச்…”

“உனக்கு மட்டும் எப்படி இந்த பெப்பர்மின்ட் வாசனை வருகிறது சுபத்ரா?”

“போதும் ரஞ்சித் ப்ளீஸ்... நான் கிளம்புகிறேன்...”

“அப்புறம்? எப்போது மறுபடி பார்க்கப் போகிறோம். இந்த மாதிரி?”

“நானே சொல்கிறேனே...”

ரஞ்சித் டேனியல் வீரேந்திரகுமார் காரிலிருந்து வெளிப்பட்டான். கதவை காருக்கு வலிக்காத மாதிரி மெதுவாகச் சாத்தினான். சுபத்ரா டொயாட்டோவை உசுப்பினாள். ‘க்ளக் - க்ளக்’ என்று ரிவர்ஸ் கியருக்கு மாறினாள். டொயாட்டோ சர்ரென்று பின்வாங்கியது. நூறடி போனவுடன் பிரதான சாலையில் ஓர் அரைவட்டம் போட்டுத் திரும்பியது. ரஞ்சித் டேனியல் வீரேந்திரகுமார் கையசைத்தான். ஹோண்டாவை ஸ்டாண்டிலிருந்து விடுவித்து நிறுத்தினான். ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தான். 

வண்டியைத் திருப்பி, சீறினான். மூன்று வினாடிகளில், அறுபது கிலோ மீட்டர் வேகத்தை எட்டிப் பிடித்தான். தலையில் ஹெல்மெட் இன்றி அந்த வேகத்தில் போவது ஒரு த்ரில். சாலையில் நேர் எதிரே அந்த லாரி வந்துகொண்டிருந்தது. அதன் தலைவிளக்குகள் இரண்டு சூரியன்கள். டிரைவர் மிக அவசரத்தில் இருந்தாற்போலிருந்தது. ஆக்ஸிலேட்டரை ஏறக்குறைய எழுந்து நின்று மிதித்தான். எதிரில் ஒற்றை விளக்குடன் பைக் வருவதைப் பார்த்தான். 

உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான். லாரியில் அந்த டிரைவரைத் தவிர யாருமில்லை. சாலையில் இடப்பக்கமாகவே வந்துகொண்டிருந்தவன், பைக்கை நெருங்கியவுடன் திடீரென்று ஸ்டியரிங்கை முழு வேகத்தில் திருப்பினான். விளக்குகளின் திடீர் வெளிச்சத்தில் கண்கள் கூச, லாரி மோத வருவதைப் பார்த்துக் கண்களை அகல விரித்தான், ரஞ்சித்குமார். லாரி, ஹோண்டாவின் பக்கவாட்டில் அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் மோதியது. அந்த மோதலைச் சற்றும் எதிர்பார்க்காத ரஞ்சித், வாயைப் பிளந்து அலறத் தொடங்கிய நேரத்தில் அந்த மோதல் நிகழ்ந்தது. 

ரஞ்சித்குமார் பைக்கிலிருந்து அப்படியே மேலே சுழற்றி எறியப்பட்டான். லாரியின் அடியில் பைக் புகுந்து அதன் ராட்சஸச் சக்கரங்களின் அடியில் நசுங்கியது. ஹெல்மெட் எங்கேயோ பறந்து தார்ச்சாலையில் சத்தத்துடன் மோதி விழுந்தது. ரஞ்சித் டேனியல் வீரேந்திரகுமார் லாரியின் பானட் மீது விழுந்து, நெற்றிப் பொட்டிலிருந்து கன்னம் வரை வழிந்த சிவப்பு ரத்தத்துடன் மறுபடி எகிறி லாரியின் முன்னால் விழ… லாரியின் முன்சக்கரம் அவன் மார்பில் ஒரு முறை ஆவலுடன் ஏறி இறங்கியது. அடுத்த கணம் லாரி நிற்காமல் இன்னும் வேகமெடுத்து விரைந்தது. 

முதுகெலும்பு நொறுங்கி, பின்மண்டையில் விரிசல் விட்டு, மூச்சு அடங்கும் கடைசிக் கணத்தில் ரஞ்சித் டேனியல் வீரேந்திரகுமார் அவன் மனதுக்குள் சொன்ன ஒரே ஒரு கவிதை வரி: ‘சுபத்ரா’

- தொடரும்