அத்தியாயம் 1

159.67k படித்தவர்கள்
348 கருத்துகள்

Bynge app மூலம் என் எழுத்தை வாசிக்கப் போகும் உங்கள் அனைவருக்கும் வணக்கம்.  உங்களில் சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கலாம்.  பலருக்குத் தெரியாமலும் இருக்கலாம்.  பாதகமில்லை.  ஆனால் என்னைப் பற்றிய வதந்திகள்
அதிகம்.  வதந்திகள் பெரும்பாலும் உண்மையாக இருப்பதில்லை என்பதை மட்டும் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.  என்னோடு பழகிய பிற்பாடு பாரதிராஜா சொன்னார்,

“நீங்கள் ஒரு வில்லங்கமான ஆள் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நீங்களோ அப்புராணியாக இருக்கிறீர்கள்” என்று வதந்திகளைக் கேட்டு இன்புறுங்கள்.  வதந்திகள் வாழ்க்கையைச் சுவாரசியப்படுத்துபவை.  ஏனென்றால், உண்மையை விட பொய் தான் சுவாரசியமாக இருக்கும்.  ஆனால் பொய்யின் வசப்பட்டு விடக்கூடாது.  பொய்யை ரசிக்க வேண்டும்.  அது நம்மை ஆள விடக்கூடாது.  மது மாதிரி.  குடியை நாம் குடிக்க வேண்டும்.  குடி நம்மைக் குடிக்கக் கூடாது.

எப்படியிருந்தாலும் என் எழுத்து உங்களை ஏமாற்றாது.  ஏன் அதை நிச்சயமாகச் சொல்கிறேன் என்றால், 17-18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரபலமான பத்திரிகைத் தமிழ் எழுத்துலகில் முதல் முதலாக இணைய இதழைக் கொண்டு வந்தது. அப்போதுதான் தினசரிகளும் இணையத்தின் பக்கம் வரத் தொடங்கியிருந்தன.  அந்த இணைய இதழில், ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தியை எழுத ஆரம்பித்தேன். இணையம் எனக்கு ரொம்பப் புதிது.  என் கையில் கணினி இல்லை.  காகிதத்தில் எழுதி ஒரு நெட் சென்டருக்குப் போய் தட்டச்சு செய்து வாங்கி – அப்போது எனக்குத் தமிழில் தட்டச்சு தெரியாது -  அதை அந்த நெட் சென்டர் அம்மணியோடு சேர்ந்து பிழைதிருத்தம் செய்து பத்திரிகைக்கு மின்னஞ்சல் செய்வேன்.  பிறகு பத்திரிகையிலிருந்து அழைப்பு வரும்.  அங்கே போய் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பேன்.  பிறகு சர்வதேசத் தமிழ் வாசகர்களுக்கும் என் எழுத்து போய்ச் சேர்ந்து விடும்.  எல்லாம் கண நேரம்.

அப்போது நான் அடைந்த excitement-ஐ இப்போது உங்களால் புரிந்துகொள்ள முடியுமோ தெரியவில்லை.  அதுவரைக்குமான எங்கள் (எழுத்தாளர்களின்) எழுத்து வாழ்க்கை எப்படி இருந்தது?  ஒரு கதை எழுதி அனுப்புவோம்.  கதை கிடைத்தது என்று பதில் வர ஒரு மாதம்.  கதை தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற பதில் வர ஆறு மாதம். அந்த ஆறு மாதமும் தினம் தினம் தபால்காரரை எதிர்பார்த்து எதிர்பார்த்துப் பைத்தியமே பிடித்து விடும்.  ஆறு மாதம் கழித்து திரும்பவும் இன்னொரு பத்திரிகைக்குப் படை எடுப்போம்.  ஆனால் கணினியும் இணையமும் வந்த பிறகு, தட்டச்சு செய்து முடித்த அடுத்த கணம் உலகம் பூராவும் உள்ள வாசகர்கள் அதைப் படித்து பதிலும் எழுதி விடுகிறார்கள்.

அந்தப் பத்திரிகையில் வாரம் ஒருமுறை என்று தொடங்கிய கோணல் பக்கங்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாக மாறும் அளவுக்கு வாசகர் எதிர்வினை. தினமும் நூற்றுக்கணக்கில் கடிதங்கள்.  

“ரம்பாவின் பேட்டிக்கு வருவதை விட உங்கள் பத்திக்கு அதிக ரெஸ்பான்ஸ்” என்றார் எடிட்டர்.  (அந்தக் காலகட்டத்தின் கவர்ச்சிக் கன்னி ரம்பா!) இரண்டு ஆண்டுகள் சென்று நானே ஒரு இணையதளத்தைத் தொடங்கினேன்.  அதன் இன்றைய தொடர்ச்சிதான் இந்தத் தொடர்.  புதிய பத்திரிகை.  புதிய தொடர். பத்திரிகையின் பெயர் என்ன என்று எடிட்டரைக் கேட்டேன்.  Bynge app என்றார்.  புரியவில்லை.  விளக்கினார்.  

எனக்கு உடனே 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.  என் நண்பர் ஒருவரிடம் நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டேன்.  PR என்றார்.  அடப்பாவி, இப்படி ரெண்டு எழுத்து இனிஷியலில் கூட ஒரு வேலை இருக்கிறதா, நமக்குத் தெரிந்த வேலையெல்லாம் வாத்தியார், வக்கீல், டாக்டர், எஞ்ஜினியர், கொத்தனார், மேஸ்திரி, கல்யாண புரோக்கர் இப்படித்தானே?  இது என்ன PR? அதிலிருந்து யாரிடமும் என்ன வேலை என்று கேட்பதே இல்லை.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

இப்படித்தான் ரொம்ப காலத்துக்கு முன்னே ஒரு நண்பரிடம் உங்களுக்கு எத்தனை குழந்தை என்று கேட்டு வைத்தேன்.  எனக்கு என் மனைவி குழந்தை, அவளுக்கு நான் குழந்தை என்று அவர் பதில் சொல்ல, செம மொக்கை வாங்கினேன்.  வேலை பற்றி மட்டும் அல்ல, எதுவுமே கேட்கக்கூடாது.  அதுதான் சரி.  ரொம்பப் பிற்பாடுதான் பி.ஆர். என்பதன் அர்த்தம் விளக்கமாகப் புரிந்தது.  இப்போதைக்கு Bynge app என்பது எனக்கு அப்படித்தான்.  போகப் போகப் புரியும்.  இம்மாதிரி விஷயங்களை எதிர்கொள்ளும்போதுதான் வயதாகி விட்டது போல் தோன்றுகிறது.

நேற்று ஒருவர் “உங்களுக்கு வயதே ஆகவில்லை” என்று ஆரம்பித்தார். கடைசியில் அவர் ஒரு வெடிகுண்டு போடப் போகிறார் என்று தெரியாமலேயே வாயெல்லாம் பல்லாகச் சிரித்து வைத்தேன்.  என்ன விஷயம் என்றால்,  15 வயது பதின்பருவத்து இளைஞர்களோடும் உரையாடும் விதத்தில் பத்தி எழுதக் கூடிய ஒரே ஆள் நீங்கள்தான் என்றார்.  முத்தாய்ப்பாக, பத்தி எழுத்தில் நீங்கள்தான் சக்ரவர்த்தி என்று சொல்லி முடித்தார்.  நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று நினைத்தே சொல்லியிருப்பார்.  என் நெருங்கிய நண்பர்.  ஆனால், எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது.  சச்சின் டெண்டுல்கரைப் பாராட்டுவதாக நினைத்து, “நீங்கள் ஒரு சிறந்த பார்லிமெண்டேரியன்” என்று சொன்னால் அது அவருக்குப் பெருமையா சிறுமையா?  அதே போன்றதுதான் நான் ஒரு சிறந்த பத்தி எழுத்தாளன் என்பதும்.  

என் நாவல்கள் புனைவின் சாத்தியங்களைப் புரட்சிகரமாக மாற்றி அமைத்தவை.  ஆனால் பத்தி எழுத்தின் சக்ரவர்த்தி என்று சொல்லக் கூடிய அளவுக்கு என் பத்திகள் சுவாரசியமானவைதான்.  அந்த உறுதியை இந்தத் தொடருக்கும் என்னால் அளிக்க முடியும்.

எல்லா விஷயத்திலும் நாலைந்து நண்பர்களின் ஆலோசனையைக் கேட்பேன்.  கேட்டு, அவர்கள் சொன்னதற்கு நேர் எதிராக நடந்து கொள்வேன்.  அது வெற்றிகரமாக அமையும்.  அவர்கள் சொன்னபடி கேட்டால் இன்னும் வெற்றிகரமாகப் போயிருக்கும் என்று அவர்கள் நினைக்கலாம்.  பொதுவாக யார் பேச்சையும் கேட்காமல் மனசுக்குத் தோன்றியபடி நடப்பதே எனக்கு சரியாக இருந்து வருகிறது.  சின்ன வயதிலிருந்தே இப்படித்தான்.  என் தந்தை தீவிர தி.மு.க. அனுதாபி, தமிழ் வெறியர்.  அதனால் நான் இந்தியும் சம்ஸ்கிருதமும் படித்தேன்.

அப்போதிருந்து இன்று வரை யார் பேச்சும் கேட்பதில்லை.  நேற்று கூட அவந்திகா (என் மனைவி) “பேசாமல் நாம் மும்பை போய் செட்டில் ஆகி விடுவோம் சாரு” என்றாள்.  ஆகா, செஞ்சிர்லாமே என்று பலமாகத் தலையாட்டி விட்டு ‘ஜென்மத்துக்கும் மும்பை பக்கமே தலை வைத்துப் படுக்கக் கூடாது’ என்று முடிவு பண்ணி விட்டேன்.  மும்பையில்தான் என் மகன் இருக்கிறான்.  அதனால் அவன் இருக்கும் ஏரியாவில் ஒரு வீட்டில் இருந்து கொண்டால் அடிக்கடி அவனைப் பார்க்கலாம் என்று தாய் மனம் ஏங்குகிறது.  ரொம்ப நியாயம்.  ஆனால் எனக்கு மும்பையில் எதுவும் இல்லையே?  மும்பையை எப்படி என் வாழ்வோடு தொடர்புபடுத்திக் கொள்வது? என் வாழ்வின் ஒரே அர்த்தம் எழுத்து.  எழுத்தே என் மூச்சு.  

என் எழுத்தோடு தொடர்பு உள்ள சீலே, மெக்ஸிகோ, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் ஏதாவது ஒரு ஊருக்கு வேண்டுமானால் புலம் பெயர்ந்து போகலாம்.  அது என் கனவும் கூட.  ஆனால் அவந்திகா அங்கே வந்தால் நீரிலிருந்து தரையில் எடுத்துப் போட்ட மீனைப் போல் ஆகி விடுவாள். அவளுடைய வேர் இங்கேதான்.  அதற்கு மறுபேச்சே இல்லை.

மும்பையும் தில்லியும் சபிக்கப்பட்ட நகரங்கள்.  இந்தியாவில் மனித ரத்தத்தை மிக அதிக அளவில் குடித்த நகரங்கள் இவை.  மும்பையில் மதத்தின் பேரால் சிந்தப்பட்ட ரத்தம் பற்றியும் தில்லியில் இந்திரா காந்தி கொலையுண்ட போது நடந்த சீக்கியப் படுகொலையையும் நாம் அறிவோம்.  ஆனால் வரலாற்றில் மறந்து போன இன்னொரு துயர சம்பவம், 1327-ஆம் ஆண்டு நடந்தது.

துக்ளக் தன் ராஜ்ஜியத்தின் தலைநகரை தில்லியிலிருந்து 1000 கி.மீ. தெற்கில் இருந்த தௌலதாபாத் நகருக்கு மாற்றினான். மங்கோலியர்கள் அடிக்கடி தில்லியைத் தாக்கிக் கொண்டிருந்ததால் தலைநகரை தெற்கே மாற்றி விடலாம் என்பது அவன் யோசனை.  ஆனால் அதோடு நிறுத்தாமல் என்ன செய்தான் என்றால், தில்லியிலிருந்து தலைநகர் மாற்றப்பட்டபோது ஒரு ஈ காக்கா கூட தில்லியில் இருக்கக் கூடாது என்று உத்தரவு போட்டான்.  நோயாளிகளுக்குக் கூட தில்லியில் இருக்க அனுமதி இல்லை.  பாதி பேர் வழியிலேயே இறந்து போனார்கள். ஏழைகள், முதியோர், குழந்தைகள், உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோரால் எப்படி 1000 கி.மீ. தூரத்தை நடந்தே கடக்க முடியும்? எல்லோரும் பாதிவழியிலேயே செத்து செத்து விழுந்தார்கள். கற்பனை செய்து பாருங்கள் -  தில்லி போன்ற மாநகரத்தில் ஒரு மனித உயிர் கூட இல்லாமல் இருந்ததை.  

பாதுகாப்புக்காக ஒரு சிறு படை மட்டுமே அங்கே இருந்தது.  இது மங்கோலியருக்கு மேலும் சுலபமாகப் போயிற்று.  இப்போது தாக்குதல் முன்னை விட அடிக்கடி நடந்தது.  இரண்டே வருடத்தில் தௌலதாபாதிலிருந்து தலைநகர் தில்லிக்கு மாறியது.  இந்த மாற்றத்தின் போதும் பாதி ஜனம் செத்தது.  இதையெல்லாம் அக்குவேறு ஆணி வேறாக எழுதி வைத்திருக்கிறார் துக்ளக் காலத்தில் அவனோடு கூட இருந்த இப்ன் பதூதா.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

இதுபோல் மும்பைக்கு என்ன சாபமோ அங்கேயும் ரத்த பலி அதிகம்.  கல்கத்தாவில் இரண்டு முறை.  1943-இல் வங்காளத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் 30 லட்சம் பேர் செத்தார்கள்.  இதை விட ஒரு பெரும் பஞ்சம் 1769-இலிருந்து 1773 வரை வங்காளத்தில் ஏற்பட்டது.  ஒரு கோடி பேர் செத்தார்கள்.  அப்போதைய வங்காளத்தின் மக்கள் தொகையே 3 கோடிதான்.  வெள்ளையர் ஆட்சி என்பதால் இந்த மரணங்களெல்லாம் புகைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.  

சென்னைக்கோ தமிழ்நாட்டுக்கோ இவ்வளவு கொடுமையான ரத்த வரலாறு இல்லை.  அவ்வப்போது சிற்றரசர்களுக்கு இடையே நடந்த போர்களும் 1781-இல் தஞ்சாவூரில் ஹைதர் அலிக்கும் பிரிட்டிஷ் படைகளுக்கும் நடந்த போரும், அந்தப் போரின் விளைவாக1800-களில் தஞ்சாவூரில் ஏற்பட்ட கடும் பஞ்சமும் பட்டினிச் சாவுகளும்தான் விதிவிலக்கு.

“சரி, எங்கோ இருக்கின்ற சீலேவோடு தொடர்பு இருக்கிறது. மும்பையோடு இல்லையா?” என்று கேட்கலாம்.  இதை நான் தியாகய்யரின் வாழ்வில் நடந்த இரண்டு சம்பவங்களை வைத்து விளக்குவேன்.  தியாகப் பிரம்மம் வாழ்ந்த காலம் 1767 – 1847.   ஒருநாள் தியாகராஜரைச் சந்தித்த ஒரு ஞானி, ராமதாரக மந்திரத்தை அவருக்கு உபதேசித்து “இதை நீ 96 கோடி முறை உருப்போட்டு முடித்தால் ஸ்ரீராமன் உனக்கு ஸ்தூல உருவில் காட்சி தருவான்” என்று சொல்கிறார்.  கணக்குப் போடுங்கள்.  நாள் ஒன்றுக்கு 1,25,000 வீதம் 21 ஆண்டுகள் ராமதாரக மந்திரத்தை ஜெபித்தார் தியாகராஜர்.  21-ஆம் ஆண்டு முடிவில் ராமனும் காட்சி தந்தான்.  ”இதை தயவுசெய்து நம்புங்கள், நான் சொல்வது சத்தியம்” என்று கீர்த்தனைகளையே இயற்றியிருக்கிறார் தியாகராஜர்.

அந்த ஆராய்ச்சிக்கு நாம் இப்போது போக வேண்டாம்.  அவர் ஜெபித்தார் அல்லவா 96 கோடி முறை, அப்படி ஜெபிக்க வேண்டுமானால் ராமநாமம் ஒருவரது சுவாசமாகவே மாற வேண்டும்.  இல்லையா?  தியாகராஜருக்கு ராமநாமம்.  எனக்கு இலக்கியம். அவ்வளவுதான் விஷயம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்தத் தொடரின் கதைச் சுருக்கம் என்ன என்று கேட்டார் என் நண்பர்.  என்னுடைய நாலு ஆலோசர்களில் ஒருவர்.  அவருடைய யோசனை என்னவென்றால், ஒவ்வொரு வாரமும் ஒரு சஸ்பென்ஸ் மாதிரி வைத்து தொடராக
எழுதினால் நன்றாக இருக்கும்.  எனக்கு என்னவோ அம்மாதிரி தொடர்களின் காலம் முடிந்து விட்டது என்றே தோன்றுகிறது.  

ஏனென்றால், இது தொலைக்காட்சித் தொடர்களின் காலம்.  இப்போது கொரோனாவின் வருகைக்குப் பிறகு நெட்ஃப்ளிக்ஸ்
போன்ற பொழுதுபோக்குத் தளங்கள் பெருகி விட்டன.  அச்சுப் பத்திரிகைகள் இணையத்தை நோக்கி வர ஆரம்பித்து விட்டன.   இனிமேலான காலகட்டத்தில் என்ன செல்லுபடியாகும் என்றால், ஒரே வார்த்தை - சுவாரசியம்.  நான் பார்க்காத வெப்சீரீஸ் கம்மி. மெக்ஸிகோ, கொரியா, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளின் முக்கியமான வெப்சீரீஸ் அனைத்தையும் பார்த்து விட்டேன்.  அவற்றோடு ஒப்பிடும்போது இந்திய வெப்சீரீஸ்களை என்னால் ஒரு எபிசோட் கூடப் பார்க்க முடியவில்லை. ஒரு மர்டர் த்ரில்லரைக் கூட அறுபது-எழுபதுகளின் மலையாள ஆர்ட் ஃபில்ம் ரேஞ்சுக்கு சொல்லிக் கழுத்தை அறுக்கிறார்கள்.  Sacred Games போன்ற ஒருசில தொடர்கள் தேவலாம்.  இந்த நிலையில் இணைய எழுத்து என்பது இன்று ஒரு சவால்.

அந்தத் தளத்தில் 17-18 ஆண்டுகளாக முன்னணியில் நின்று ஆடிக் கொண்டிருக்கிறேன்.  ஒரே காரணம்தான்.  சுவாரசியம்.  அதில் குறையில்லாமல் உங்களோடு தொடர்ந்து உரையாடுவேன்.  இதில் செக்ஸும் இருக்கும், பயணமும் இருக்கும், ஆன்மிகமும் இருக்கும். சூரியனுக்குக் கீழே உள்ள எல்லாமும் இருக்கும்.

- சந்திப்போம்.