சிறுகதை

5.19k படித்தவர்கள்
34 கருத்துகள்

ப்போதும் புன்னகையை அணிந்திருக்கும் சங்கரின் முகத்தில் பொங்கிய பரிதவிப்பைக் காண விரும்பாததைப் போல முகம் சிவந்த ஆதவன் கீழ் வானில் வேகமாகச் சுழன்று மறைந்தான். செவ்வானம் விரைவாக கருமையாக மாறுவதை நோக்கியபடி அண்ணாநகர் டவர் பூங்காவின் இருக்கையில் அமர்ந்திருந்தான் சங்கர். ‘எத்தனையோ இழப்புகளை எளிதாகத் தாண்டி வந்திருக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தை மனைவி சுந்தரியிடம் எப்படிக் கூறுவது’ என அவன் மனம் குமைந்து கொண்டிருந்தது.

நீரூற்றின் சாரல் மேனியில் பட்டதும் அனல்பட்டதென கையை உதறி விலகியபோதுதான், முதல் முறையாக மனைவி உடனின்றி தனித்து இந்தப் பூங்காவிற்கு வந்திருப்பதை உணர்ந்தான். எப்போதும் உற்சாகத்தை எழுப்பும் நீரூற்று இப்போது பெரும் வேதனையை ஏற்படுத்தியது. சங்கருடன் சுந்தரி இங்கு வந்தபோதெல்லாம் நீரூற்றின் அருகில் சென்று மேனியில் சாரல் படும்போதும், வெவ்வேறு வடிவங்களில் மலர்ந்திருக்கும் பூக்களை விரல்களால் வருடும்போதும் உடல் சிலிர்ப்பாள். அவளை உரசி நிற்கும்போது அவளின் சிலிர்ப்பை உணர்ந்து சங்கருக்கும் மயிர்க்கூச்செரியும். அதைக் கண்டு அவளின் முகத்தில் தோன்றும் பரவசம் இவனை மேலும் சிலிர்க்க வைக்கும். 

எந்த உரிமையும் இல்லையென எழுதிக் கொடுத்துவிட்டேன் என இப்போது சென்று அவளிடம் சொன்னால் அதிர்ச்சியிலும் ஆங்காரத்திலும், இழுபடும் பலூன்போல உருமாறும் அவள் முகம் அப்படியே நிலைத்து விடுமோ. அப்படியே நீடிக்காவிட்டாலும் ஒரு கணம் அதைக் கண்டுவிட்டால் இப்போது தன் மனதிலிருக்கும் அவள் முகம் எப்போதைக்குமாக மீளாது மறைந்துவிடுமே. இந்த எண்ணமே சங்கரை வதைத்தது. வாழ்க்கையின் ஆதாரமே சுந்தரியின் புன்னகைதானே. இதுவரை எத்தனையோ இழந்தபோதிலும் அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. இழப்பை ஏற்படுத்தியவர்களெல்லாம் மனதளவில் தூரமானவர்கள். ஆனால், இப்போது இழந்தது பொருளும் பணமும் மட்டுமல்ல. அன்பும் நட்பும் மட்டுமல்ல அதற்கும்மேல். அப்படித்தான் சங்கரும் சுந்தரியும் எண்ணியிருந்தார்கள். அவர்கள் வாயாலாயே சொல்லும் வரையில், அறியமுடியாத வகையில் இந்த அளவிற்கு பாசாங்காக நடிக்க முடியுமா?. எதையுமே உணராமல் எத்தனை மக்காக மழுங்கல்களாக இருந்திருக்கிறோம். எனக்குத்தான் தோன்றவில்லை சுந்தரியுமேகூட தத்தியாகவல்லவோ இருந்திருக்கிறாள். அப்படியே அவள் உணர்ந்து சொல்லியிருந்தாலும் நான் கேட்டிருப்பேனாயென்ன? கள் குடித்த மந்தியைப் போலல்லவா அவர்களை நம்பியிருந்தேன். அவர்களிடம் இழந்ததைப் பற்றி கவலையொன்றும் இல்லை. அதைக் கேள்விப்பட்டு சுந்தரி அடையப்போகும் துயரை எண்ணும்போதுதான் உடல் பதறுகிறது. இதுவரை ஒருமுறையேனும் முறைத்ததுகூட இல்லை. இப்போது கூறப்போவதை கேட்டவுடன் புழுயெனப் பார்ப்பாளோ. அல்லது எரிப்பது போலவா? எப்படியாயினும் தற்போது இழக்கப்போவது மீள ஈட்டவே முடியாத அருஞ்செல்வம் என சங்கருக்குத் தோன்றியது. 

இருபத்தியைந்து வருடங்கள் உடனிருப்பவன். நண்பனாக சகோதரனாக குடும்பமாக எங்கும் செல்வதும் எதையும் செய்வதுமாய் இருந்துவிட்டு இனி தனியாக இருக்கவேண்டும் என்ற எண்ணமே மனதைப் பித்தாக்கியது. பணம் அத்தனை முக்கியமானதா... அன்பு, நட்பு, பாசம் இதற்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லையா... கம்பெனி வெறும் இயந்திரங்களைக் கொண்ட கட்டடம் மட்டுமா. இருபது வருடங்களுக்கு மேலாக புழங்கிய இடம். நாள் முழுவதும் விழித்திருக்கும் நேரமெல்லாம் கம்பெனியை பற்றிய நினைப்பு இருந்து கொண்டேயிருக்கும். நாளைக்கு யார் விடுப்பு, எந்த ஜாப் ஓட்ட வேண்டும், என்றைக்கு டெலிவரி கொடுக்க வேண்டும், யாருடைய காசோலையை க்ளியர் செய்ய வேண்டும் என மனதினுள் தனியே யோசனை நிகழ்ந்து கொண்டேயிருக்கும். வீட்டில் இருந்தாலும் வேறு விழாக்களுக்குச் சென்றாலும் மனதின் மூலையில் அந்த எண்ணம் கனன்று உடலை நிலைக்க விடாது உழற்றும்.. பச்சைப் பிள்ளைக்காரிகூட சில வருடங்களில் பிள்ளையை தனியே விடுவாள். ஆனால், சங்கர் இன்றுவரை சுமந்து கொண்டுதான் இருந்தான். இனிமேல் சுமக்கத் தேவையில்லை என்ற எண்ணம் தோன்றியதும் மனதின் ஏதோவோர் ஆழத்தில் ஆசுவாசம் அடைவதை வியப்புடன் நோக்கினான். இந்தக் கம்பெனிக்கான அடித்தளம் எப்படி அமைந்தது என்று கிணற்றில் தவறிய வாளியை துழாவும் பாதாளக்கரண்டியின் கூர்முனைபோல மனதாழத்திற்குள் தேடத் தொடங்கினான். மாணிக்கம் கம்பெனியைப் பற்றி பேச வந்த தினம் நினைவில் எழுந்தது.

தெருவின் பூர்வ குடிகளில் ஒருவரான பால்பாண்டி தன் வீட்டில் வளர்க்கும் பசுவிடம் அதிகாலையில் கறந்த பசும்பாலில் போட்ட காப்பியை அருந்தியபடி சங்கர் அப்பா, அம்மாவுடன் உரையாடிக் கொண்டிருந்தான். சங்கரின் அம்மா பெரும்பாலான நேரம் முகத்தில் கடுமையுடன் இருந்தாலும் காலையில் அவர் முகம் மிகவும் சாந்தமானதாக இருக்கும். எப்போதுமே இனியதாக இருக்கும் அந்நேரத்தில் மாணிக்கம் வந்தான். குளித்த ஈரம் உலராத தலைமுடியும் நெற்றியில் தீட்டியிருந்த திருநீறும் உடுத்தியிருந்த புத்தாடையும் அம்மாவின் முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தியது. இளம் பசுங்கன்றின் துடிப்பு அவன் உடலில் மெல்லிய அலுங்கலென விரவியிருந்தது. மாணிக்கத்தை வரவேற்றவர், இவனைப் பார்த்துக் கற்றுக்கொள் என்று இடித்துரைப்பது போல் சங்கரை நோக்கினார். அம்மா கொடுத்த காப்பியை குடித்தபிறகு வந்த விசயத்தைக் கூறினான்.

“அம்மா, என் மாமா ஒருத்தர் டிவிஎஸ் கம்பெனியில வேல பாக்குறாரு. அவரு என் பேர்ல சப் காண்ட்ராக்ட் ஆர்டர் ஒண்ணு வாங்கிக் கொடுத்திருக்காரும்மா. எத்தனையோ பேர் மெஷின் வாங்கிப் போட்டு கம்பெனி ஆரம்பிச்சுட்டு ஆர்டர் இல்லாம தவிக்குறாங்க. எனக்கிட்ட ஆர்டர் இருக்கு. இந்த ஆர்டருக்கு சப்ளை பண்ணாலே பெருசா லாபம் கெடைக்கும்” 

“நல்லாப் பண்ணுப்பா. எம் பையங்கூட படிச்ச நீயும் எனக்கு பிள்ள மாதிரித்தான். நீ நல்ல நெலமைக்கு வர்றது எங்களுக்கும் சந்தோசந்தான்” 

“நீங்க வேறம்மா... என் படிப்புக்கு வாங்குன கடனையே இன்னங் கட்டி முடிக்கல. இதுல கம்பெனி ஆரம்பிக்க பணத்துக்கு எங்க போறது. சொந்தக்காரர் ஆர்டர் வாங்கிக் கொடுப்பாரு. பணம் போட்டு கம்பெனியுமா வச்சுக் கொடுப்பாரு” என்று தணிந்த குரலில் விரக்தி தொனிக்கக் கூறினான். மூவரும் அவனையே நோக்கினார்கள். 

“நாங்க என்னப்பா பண்ணனும்?” அம்மா கேட்டார்.

“சங்கருக்கும் இன்னும் வேல கெடைக்கல. இன்னொரு எடத்துல போய் வேல பாக்குறதுக்கு பதிலா சொந்தக் கம்பெனியில கௌரவமா வேல பாக்கலாம்மா” 

 ”எப்படிப்பா சொல்ற?” என்று கேட்ட அம்மாவின் முகத்தில் பூரிப்பு பொங்கியது. 
 
“கம்பெனி வைக்க லீசுக்கு எடம் பாத்திருக்கேன். செகண்ட் ஹான்ட்ல மெசினும் பாத்து வச்சிருக்கேன். பணம் நீங்க கொடுத்தீங்கன்னா கம்பெனி ஆரம்பிக்கலாம். வேலைக்கு ஆளும் தேவையில்ல, நாங்களே பாத்துக்குவோம். எங்களுக்கு சம்பளம் மட்டும் எடுத்துக்கிட்டு லாபத்துல புது மெசின் வாங்கி கம்பெனிய பெருசாக்கிக்கலாம். என்னம்மா சொல்றீங்க?”.

அம்மா இருந்த உற்சாக மனநிலையில் உடனேயே ஒப்புக் கொண்டார். மாணிக்கம் மகிழ்ச்சியுடன் அம்மா, அப்பாவின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றுச் சென்றான். அவன் சென்ற பிறகு சங்கரிடம், “நீ கூடப் பொறந்தவங்க யாருமில்லாம தனியா இருக்கியேன்னு மனசுக்குள்ள வதக்கு வதக்குன்னு இருந்துச்சு. இந்த மாணிக்கத்த பாத்தவுடனே கொஞ்சம் தைரியமா இருக்கு. இவன ஒங்கூடப் பொறந்தவனா நெனச்சுக்க. எப்பவும் இவனுக்கு விட்டுக் கொடுத்து, ஒத்துமையா இருப்பா” என்றார், நெகிழ்ந்த குரலுடன். இளஞ்சூரியன் முகத்தில் வருடிய காலை நேரத்தில் அவர் கூறியது ஆசியைப் போலவும் கட்டளை போலவும் மனதில் பதிந்தது.

அம்மா தன் நகையை பணமாக்கிக் கொடுத்தார். ஆர்டர் கொடுக்கும் நிறுவனம் சிறு நிறுவனத்தை நடத்துபவர் பெயரில் அந்த இடத்திற்கான ஒப்பந்தம் இருக்கவேண்டுமென கோரியதால் மாணிக்கம் பேரிலேயே லீசிற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அந்தப் பத்திரத்தைக் கொண்டே மின் இணைப்பு பெற்றதால் அதுவும் மாணிக்கம் பேரிலேயே கிடைத்தது. கம்பெனியின் வரவு செலவுகள் எல்லாமே மாணிக்கம் பேரிலேயே நடந்தன. யார் பேரில் இருந்தாலென்ன, கம்பெனி லாபத்தில் நடந்தால் போதும் என்றுதான் சங்கரும் அவன் குடும்பத்தினரும் எண்ணினார்கள். முதலில், இருவரும் சம்பளம் மட்டும் எடுத்துக் கொண்டார்கள். பிறகு லாபத்தில் புது இயந்திரங்கள் வாங்கினார்கள். வருடம் ஒருமுறை இருவரின் குடும்பங்களுடன் சுற்றுலா சென்றார்கள். இருவருமே ஓராண்டு இடைவெளியில் அவரவர் பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்கள். நினைத்துப் பார்க்கையில் எத்தனை இனிய நினைவுகள் எழுந்து வருகின்றன. 

சங்கரின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியபோதே நேற்று பார்த்த மாணிக்கத்தின் முகம் நினைவிலெழுந்து கண்மாயில் பேருவகையுடன் நீராடும்போது காலில் தூமைத்துணி தட்டுப்பட்டு உடல் முழுதும் கூசுவதுபோல மனதை கூசவைத்தது. உடல் குறுகி லேசாக அதிர்ந்தபோது அதை அதிகமாக்குவது போல மணியோசை ஒலித்தது. மேகங்களை வெண்மை, இளநீலம், இளஞ்செம்மை நிறங்களிலான துண்டுகளாக நெகிழிப் பைகளில் அடைத்ததென நூலில் கட்டி தொங்கவிட்டபடி பஞ்சு மிட்டாய் விற்பவர் வண்டியை தள்ளிக் கொண்டுவந்தார். 

பஞ்சு மிட்டாயைப் பார்த்தவுடனேயே சுந்தரியின் உடல் துள்ளத் தொடங்கிவிடும். சிறு பிள்ளைகள் போல கைகளை உதறியபடி வண்டியை நோக்கி கைகாட்டியபடி நடக்கத் தொடங்குவாள். அந்தச் செய்கையைக் காணும் எவராலும் மறுக்கமுடியாது. எப்போதும் பிங்க் நிறத்தில் இருப்பதையே வாங்குவாள். சிறு பகுதியை பிய்த்து நாவை நீட்டி வாயில் வைக்கும்போது கண்களில் ஆவல் கொப்பளிக்கும். அது நாவில் கரைந்து தொண்டையில் இறங்குவதைக் காணும்போது சங்கர் தன் நாவில் மட்டுமில்லாமல் மனதிலுமே இனிமையை உணர்வான். அவளின் ஒரு வாய்க்குக் காணாததை அவள் தின்று முடிக்கும்போது சங்கரின் மனமெல்லாம் இனிமை நிறைந்து தளும்பும். அந்த பஞ்சு மிட்டாயைவிட மென்மையானவள், இனிமையானவள் என்று தோன்றும் இனிய பொழுதுகளில் இது, இதே போலவே எப்போதும் நீடிக்க வேண்டுமேயென தன் குலதெய்வமான வீரபத்ரரிடம் வேண்டிக் கொள்வான். 

சுந்தரியின் கடுமுகத்தை சங்கர் இதுவரை கண்டதில்லை. ஆனால், கண்டவர்கள் திகைத்துச் சொன்னதைக் கேட்டிருக்கிறான். ஒருமுறை பையன் அறைக்குள் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தான். அம்மா திட்டியதாக கூறியதை இவன் நம்பவேயில்லை. இப்போது உள்ளே வரும்போது முகம் மலர்ந்துதானே இருந்தது என்பதை ஐயத்துடன் எண்ணிக்கொண்டான். “நேத்து அம்மா வாங்கித் தந்த பேனாவ, அந்த ரமேஷு அவனுதுன்னு புடுங்கிக்கிட்டாம்பா. ஒரு வாரமா அதே மாதிரி பேனா அவன் வச்சிருந்ததை எல்லோரும் பாத்திருக்காங்க. நான் நேத்து புதுசா வாங்கிட்டுப் போனத என்னுதுன்னு நம்ப வைக்க முடியல. அதக் கேட்டு இப்படியா ஏமாறுவேன்னு ஒரு வார்த்ததான் சொன்னுச்சு. ஆனா, பாத்த பார்வ பயங்கரமா இருந்திச்சுப்பா. எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருக்கிற அம்மாவுக்கு கோபமும் வருங்கிறத எதிர்பாக்கவே இல்லப்பா” என்று கூறியவாறு குலுங்கியழ ஆரம்பித்தான். சுந்தருக்கே ஆச்சர்யமாக இருந்தது. பிள்ளை, ஒரு வாரத்திற்கு சுந்தரியின் அருகில் செல்லவே மருகினான். இயல்பாக அவளிடம் அண்டுவதற்கு அவனுக்கு ஒருமாதம் தேவைப்பட்டது. பிள்ளைகள் எளிதில் மறந்துவிடுவார்கள். பெரியவர்களால் முடியுமா...?

ஒருநாள் மாலை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, இவர்கள் தெரு சந்திப்பில் மளிகைக் கடை வைத்திருக்கும் கோபால் இவனை அழைத்தார். அவர் முகம் அதிர்ச்சியில் தாக்குண்டதுபோல காணப்பட்டது. என்ன விபரம் என வினவியபோது, “நான் வேணும்னு செய்யலப்பா” என்றார்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“என்ன விசயம்னு சொல்லுங்கண்ணே” 

“ஒம் சம்சாரம் ரொம்பக் கோவிச்சுக்கிச்சுப்பா” 

சங்கரின் முகம் ஆச்சர்யத்தில் விரிந்தது. அவர் சொல்வதற்காக காத்திருந்தான்.

“யாவார நேரத்துல அவசரமா வாங்கிப் போடறப்ப தெரியாது. கல்லாக் கட்றப்ப பாத்தா கொறஞ்சது பத்து நோட்டாவது கிழிஞ்சு போயிருக்கும். கெடக்குற வேலையில அதத் தூக்கிக்கிட்டு பேங்குக்குள்ளாம் போறது ரொம்பக் கஷ்டம். அப்படியே போனாலும் செலோ டேப்பு ஒட்டிக் கொடு.. மொத்தமாக் கொண்டுவான்னு பெரும் ரப்சரு” எதை நோக்கிப் போகிறார் என்று திசை புரியாதபோதும், தன் மனைவியைப் பற்றி பேச்சை தொடங்கியதால் அவர் கூறுவதை கவனமுடன் கேட்டான். 

“அந்த நோட்டுகள சும்மா போட்டு வச்சாலும் அப்படியே இத்துப் போனமாறி கிழிசல் இன்னும் பெருசாயிடும். அதனாலதான் யாரு சில்லற கேட்டாலும் அதுக்கு நடுவுல ஒரு கிழிஞ்ச நோட்ட வச்சுக் கொடுக்கிறது. நானும் வேறன்னதான் செய்யறது.” விசயத்தை நெருங்கிவிட்டார் எனத் தோன்றியது.

“ஒஞ் சம்சாரம் ஆயிரம் ரூபாயிக்கு சில்ற கேட்டுச்சு. எப்போதும் போலவே ஒரு நோட்டத்தான் எடுத்தேன். அது இன்னொன்னோட லேசா ஒட்டிக்கிட்டு ரெண்டா வந்திடுச்சு. பத்து நோட்டுல ரெண்டு கிழிஞ்சதா இருந்துச்சு. மார்க்கெட்டல ஏதோ பொருள்லாம் வாங்கிட்டு, அப்பறமா ஸ்கூல் பீசு கட்டப் போயிருக்கு. இது கொடுத்த கிழிச நோட்ட வாங்கிக்க மாட்டோம்னுட்டாங்க போல” 

சங்கர் முகத்திலும் கோபம் துளிர்த்தது. அதைக் கண்ட கோபால், “நீ வேற கோபப்படாத. வேற பணம் இல்லாம அது பட்ட தவிப்ப, இங்க வந்து என்னப் போட்டு தொவச்சு ஆத்திக்கிடுச்சு. ஒங்கள நம்பித்தானே கொடுத்ததை அப்படியே வாங்கிட்டுப் போனேன், இப்படித் துரோகம் பண்ணீட்டிங்களேன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லித் திட்டிடுச்சுப்பா. இத்தன நாளா சிரிச்ச மானிக்கே பாத்துப் பழகிட்டேனா. கோபத்தோட கத்துன கத்து... இன்னங்கூட உள்ளுக்குள்ள நடுக்கம் கொறயலப்பா.” 

இவனிடம் மன்னிப்பு கேட்பதுபோல தன் மனதிலுள்ள படபடப்பை தணித்துக் கொள்கிறார் எனத் தோன்றியது. ஆனால், அவரால் சுந்தரியின் உக்கிர முகத்தை மனதிலிருந்து விலக்க முடியவில்லை என்பது அவளைக் காணும் போதெல்லாம் கவட்டைக்குள் வாலை ஒளித்தபடி அடுத்த ஏரியாவிற்குள் நுழையும் நாய்போல பம்மியபடி சென்றதிலிருந்து சங்கர் உணர்ந்து கொண்டான். பிறகு ஒருபோதும் அவர் கடைக்கு சுந்தரி சென்றதில்லை என்பது நினைவுக்கு வந்ததும் சங்கரின் பரிதவிப்பு கூடியது. மாணிக்கத்தை வசைபாட வேண்டுமென ஒரு வேகம் தோன்றி தலையை உலுக்கி அந்த எண்ணத்தை ஓட்டினான். 

கம்பெனி ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆனபோது லீசில் இருந்த கம்பெனி இவர்களுக்கு சொந்தமாகியிருந்தது. கடினமாகப் பணியாற்ற மாணிக்கத்தின் உடல் ஒத்துழைக்கவில்லை. அவன் வீட்டிற்கு அருகிலிருந்த ரியல் எஸ்டேட் தொழில் புரிபவர்கள் அறைக்குள் அமர்ந்தபடியே பல்லாயிரம் ரூபாய்கள் ஈட்டுவதைக் கண்டு அந்தத் தொழிலுக்குள் இறங்கினான். அதிகமாக உடல் வருத்தி குறைவாக ஈட்டுவதைவிட மிகக்குறைவான வேலை அதுவும் பேச்சுதான், வருவாயோ பலமடங்கு என அதற்குத் தூண்டியது அவன் மனைவிதான் என்று மாணிக்கம், சங்கரிடம் தெரிவித்தான். 

மாணிக்கம் செய்த பணியிடத்தில் புதிதாக ஆள் சேர்த்தான் சங்கர். இவன் அவ்வப்போது வெளியே செல்ல வேண்டியதிருந்ததால் சுந்தரியையும் கம்பெனிக்கு வரவழைத்தான். வங்கிக்கு பணம் செலுத்துவது, ஆர்டர்கள் விவரங்களைச் சரிபார்த்து எழுதுவது, வேலைகளைக் கண்காணிப்பது போன்றவற்றை அவள் கவனித்துக் கொண்டாள். மாணிக்கம் பணிக்கு வராவிட்டாலும் சங்கரும் சுந்தரியும் வாரம் ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு சென்று வருவார்கள். அவர்களுக்கு ஒரு பெண்ணும் ஒரு பையனும். அவர்களுக்குப் பிடித்தமானதை தேவையானதை வாங்கிக் கொண்டு செல்வார்கள். ஒருமுறை, கஸ்டமர் வீட்டுக்காரரிடம் கொடுக்கச் சொல்லி கொடுத்த முன்பணத்தை எப்படியோ தொலைத்துவிட்டு சங்கரிடம் வந்து நின்றபோது இவன்தான் எப்படியோ புரட்டிக் கொடுத்தான். பிறிதொருமுறை மாணிக்கத்தின் மனைவி அவள் தம்பிக்கு அவசரமாக தேவைப்படுகிறதென்று சுந்தரியிடம் பணம் கேட்டபோது, அதையும் இவன்தான் எப்படியோ சமாளித்துக் கொடுத்தான். ஆனால், எதுவும் திரும்ப வரவில்லை. மாணிக்கம் மூலம்தான் கம்பெனியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு இவர்களுக்குள் குறையாமல் நன்றியாக நீடித்தது போலவே அவர்களிடமும் தற்பெருமையாக நீடித்திருக்கும்போலும். இவர்கள், வீட்டிலும் கம்பெனியிலும் நடப்பவற்றை ஒளிவு மறைவின்றி முழுதாகவே அவர்களிடம் கூறுவார்கள். இப்போதுதான் மனதிற்குள் ஒன்று தட்டுப்படுகிறது சங்கருக்கு... அவர்களின் வீட்டு விசயங்களையோ வருமானங்களையோ ஒருபோதும் அவர்கள் இவர்களிடம் கூறியதில்லை என்பதும், எப்போதாவது சிறிய இழப்பு ஏற்படும் போதும், சிறிய உடல் உபாதைகள் ஏற்பட்டபோதும், அவற்றை பெரும்பாடுகளாக இவர்களிடம் பிரஸ்தாபித்ததும். 

சங்கர் பூங்காவின் டவரையே நோக்கினான். ஒரு ஸ்குரூவை நிமிர்த்தி வைத்ததைப்போல, இன்றைக்கு புதிதாகத் தோன்றியது. காற்றுவெளியை எப்போதும் துளைத்துக் கொண்டேயிருப்பதுபோல. வலது கரத்தால் செவிக்குமேல் தலையில் அறைந்து கொண்டான். மாணிக்கம் குடும்பத்திற்கு என்ன குறைச்சல்?. பணமும் உள்ளது. வருமானமும் இருக்கிறது. எதற்காக இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கம்பெனி தன்னுடையதுதான் எனக் கோர வேண்டும்?. அவர்களிடம் எப்போதும் அன்பாகத்தானே இருந்தோம். எங்களின் எந்தச் செயலிலுமே ஆணவமோ, பெருமிதமோ கிஞ்சித்தும் வெளிப்பட்டதில்லையே. பூ முள்ளென அவர்கள் மனதை உறுத்தியது எது?. எங்களைக் கீழே தள்ளிவிட வேண்டுமென ஆட்டு மூளைக்குள் குடையும் புழுவென ஊடுருவி அவர்கள் மனதை உலைத்ததென்ன... மனம் அதே கேள்வியை திரும்பத் திரும்ப எழுப்பிக் கொண்டேயிருந்தது. பழுதான குழாயில் சொட்டும் நீர்த்துளியென விழுந்து கொண்டேயிருந்த இந்த விடை தெரியா வினாவை சங்கரால் தாங்கவே முடியவில்லை.

சுந்தரி இரண்டுநாள் பயணமாக ஊருக்குச் சென்றாள். இன்று சங்கர் கம்பெனிக்கு கிளம்பிய பிறகுதான் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். நேற்று மாலை மாணிக்கமும் அவன் மனைவியும் பேசிவிட்டுப் போனபின் பிரமை பிடித்தவன் போல வீட்டிற்குள் செல்லும்போதே தோன்றியது, நல்லவேளை சுந்தரி வீட்டில் இல்லையென. இவன் முகத்தை தூரத்திலிருந்து நோக்கும்போதே சிறு சிணுங்கலையும் ஓர்ந்து ஏதோ நடந்துள்ளது என்பதை உணர்ந்து, பிரச்சினையை அறியும்வரை ஓயமாட்டாள். திட்டமிட்டுத்தான் சுந்தரி ஊரில் இல்லாத நாளில் வந்திருக்கிறார்கள். அவள் இருந்திருந்தால் என்னவாயிருக்கும். தன் முடிவிற்கு மாற்றாக ஏதேனும் நிகழ்ந்திருக்குமா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆயினும் இந்த விசயத்தை தன் வாயால் கூறவேண்டிய இக்கட்டு இருந்திருக்காதே என்று தோன்றியது. 

வந்த நோக்கத்தைக் கூறும்போது மாணிக்கத்தின் முகத்தில் எப்படி பற்களை கிட்டித்தபடி உறுமும் நாயின் த்வனி வந்தது. அவனின் இன்னொரு முகத்தை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் கண்டபோது ஒருவித அதிர்வுடன் அருவருப்பும் உடலெங்கும் பரவியது. கடும்பாறையில் செதுக்கிய ஒழுங்கற்ற சிற்பம்போல இனி வாழ்நாளில் எப்போதுமே இத்தோற்றம் மாறப்போவதில்லை என்ற எண்ணம் தோன்றியபோது மெல்லிய பற்கூச்சமென அதிர்வெழுந்தது. 

நேற்று இரவெல்லாம் கம்பெனியை இழப்பதற்காக அல்லாமல் உயிரோடு பிணைந்திருந்த உறவு, குருதி வழிய அறுபட்டு நிற்பதைக் காணும் வேதனையில் துடித்திருந்தான். நல்ல வேளை சுந்தரி இல்லை. இவன் படும் வேதனையைவிட அதைக்கண்டு அவள் துடிப்பதைத்தான் தாங்கமுடியாதிருந்திருக்கும். 

முழுக்கவும் இவன் உடைமையாயினும் தன் பெயரில் இருப்பது தனதுதான் என கேட்டபோது வெளிப்பட்ட மாணிக்கத்தின் கோர முகத்தோற்றத்தை இப்பிறவியில் இனியொருமுறை காணவே கூடாது என்பதற்காகவே சரி என்று அக்கணத்திலேயே ஒப்புக் கொண்டதாக இப்போது தோன்றியது. தான் கடன் வாங்கியிருந்தவர்களின் கணக்கை நேர் செய்வதற்காகவே இன்று கம்பெனிக்கு வந்தான். அதோடு, தேவையில்லை என்றாலும் தான் எப்போதும் இக்கம்பெனிக்கு உரிமை கொள்ளமாட்டேன் என எழுதி வைத்தான். அப்படி எழுவதன் மூலம் உடலில் கூர்மையான ஆயுதத்தால் கோடிழுத்து தழும்பை உண்டாக்குவதுபோல மனதில் பதிய வைத்துக் கொண்டான்.

பூங்காவிற்கு வந்தவர்களெல்லாம் சென்றதும் சுற்றிலும் படர்ந்த அமைதியால் தீண்டப்பட்டு சுயநினைவுக்கு வந்தான் சங்கர். இங்கேயே எவ்வளவு நேரம்தான் அமர்ந்திருப்பது. சுந்தரியை எதிர் கொண்டுதான் ஆகவேண்டும். மாலையில் அலைபேசியில் அழைக்க மாட்டாள். வண்டியில் வந்து கொண்டிருந்தால் இடையூறாக இருக்கும் என்பதால். தாமதமாகுமென்றால் இவனே கூறிவிடுவான். குரலின் ஏற்ற இறக்க இடைவெளிகளிலேயே மனதின் கலக்கத்தை உணர்ந்துவிடுபவள் என்பதால் இன்று கூறவில்லை. அவளிடம் இழப்பை கூறி பெறப்போகும் வெறுப்பை சில மணி நேரம் தள்ளிப் போடுவதற்காகவே பூங்காவிற்கு வந்தான். ஏமாற்றியவரை மட்டுமல்ல ஏமாந்த மகனின் மீதும் சினத்தைக் காட்டியவளாயிற்றே என்று எண்ணும்போதே உடலுக்குள் குளிர்ந்த அம்பு ஊடுருவுவதுபோல் இருந்தது. பூங்காவைவிட்டு வெளியேறச் சொல்லியபடி காவலர் வரும் ஓசை கேட்டது. இனிமேலும் தாமதிக்க முடியாது, இறப்பிற்கு சமானமான அவளின் கடுமுகத்தை எதிர் கொள்ளப் போகிறேனே என்ற எண்ணத்துடனேயே எழுந்தபோது அவன் கால்கள் லேசாக நடுங்கியது. 

ஒலி எழுப்பாமல் வெளிக்கதவைத் திறந்து வண்டியை உள்ளே நிறுத்தியபோது நடுக்கத்தோடு வியப்பாகவும் இருந்தது. வழியை நோக்கியபடி காத்திருப்பாள் என்று எண்ணியதற்கு மாறாக அவளைக் காணவில்லை. சுவரோரமாய் தொட்டிகளில் பூத்திருந்த மலர்களை எப்போதும் வருடிவிட்டுச் செல்பவன் அதைப் பற்றிய ஓர்மையின்றி செல்வது இது இரண்டாம் முறை. தவிப்புடன் தாழிடாமல் சாத்தியிருந்த கதவைத் திறந்து உள்ளே சென்றான். 

சோபாவில் அமர்ந்து, இவன் வாசிக்குமாறு பலமுறை கூறிய “ஆரோக்கிய நிகேதனம்” நாவலை வாசித்துக் கொண்டிருந்த சுந்தரி கதவு திறப்பதை உணர்ந்து விழி தூக்கிப் பார்த்தவள், இவனைக் கண்டவுடன் புன்னகை விரிய எழுந்தாள். இன்னும் சில கணங்கள்தான், என் தவிப்பைக் கண்டு என்னவென்று வினவப் போகிறாள். எப்படித் தொடங்குவது. இவ்வளவு நேரம் அங்கிருந்தும் இதை யோசிக்கவில்லையே என மேலும் நொந்து கொண்டான். 

“துணிய மாத்திக்கிட்டு மொகத்தக் கழுவிட்டு வாங்க, சாப்பிடலாம். உங்களுக்காகத்தான் காத்திருக்கோம்” 

பிள்ளைகள் அறை சாத்தியிருந்தது. ஏதாவது படித்துக் கொண்டிருப்பார்கள். அதுசரி, சுந்தரி நூலின் கதையோட்டத்திலிருந்து வெளிவரவில்லையோ. இல்லை என் முகத்தில் வெளிச்சம் சரியாக விழவில்லையா. இன்னும் எதுவும் கேட்கக் காணோம். 

“அட... வந்ததே லேட்டு. சும்மா நின்னுட்டு இருக்கீங்க. பாத்ரூம் போயிட்டு சீக்கிரம் வாங்க” என தோளில் கை வைத்து அழுத்தினாள். 

வேகமாக சென்று கைலிக்கு மாறி குளியலறைக்குச் சென்று முகம் கழுவினான். உடலில்பட்ட நீர் மனதிலிருந்த அனலின் கங்கை மேலும் தூண்டியது. அவளாகக் கேட்டால் எப்படியாவது சொல்லிவிடலாம். ஊரில் ஏதாவது பிரச்னை இருக்குமோ. அதனை நினைத்துக் கொண்டிருக்கிறாளோ. லேசான தலைவலியைக் கூட உணர்ந்துவிடுவாளே. இன்றைக்கு என்னவாயிற்று?. 

வெளியே வந்து துண்டில் முகம் துடைத்து, வீரபத்திரரை வணங்கி திருநீறு இட்டுக் கொண்டு அவளிடம் சென்றான். கால்கள் பின்ன உள்ளத் தவிப்பில் உதடுகள் துடித்தன. சப்பாத்தி மற்றும் குருமா இருந்த சட்டிகளைத் திறந்து பரிமாற முயன்றவள் இவன் அருகில் வந்ததும் திரும்பினாள். 

“போயி ஒக்காருங்க” என்று சொன்ன பின்னும் தயங்கி நின்றவனிடம் “என்ன..?” என்று புன்னகை அசைவாலேயே வினவினாள். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“ஒங்கிட்ட ஒண்ணு சொல்வேன். ஆனா, என்னய வெறுத்துறக் கூடாது. ம்ம் சரியா...” என்று தாயிடம் பால் வேண்டும் மழலை போன்று முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான். 

“இப்படி பச்சப் புள்ளமாரி மொகத்த வச்சிக்கிட்டு கேக்கறப்ப எப்படித் திட்ட முடியும். சொல்லுங்க” 

“இப்படிச் சொல்லீட்டு அப்பறம் பேசாமல்லாம் இருக்கக் கூடாது. என்னால தாங்க முடியாது ...” என்று கூறியபோதே அவன் கண்களில் நீர் திரண்டுவிட்டது.
 
பதறிய சுந்தரி, “என்னாச்சுங்க..?” என்றபடி அவன் கரங்களைப் பிடித்தாள்.

“நம்ம கம்பெனிய மாணிக்கத்துக்கே கொடுத்துட்டேன். அவனுதுதான்னு சொன்னான். கேட்டப்ப இருந்த அவம் மூஞ்சியப் பாத்தவுடனே திரும்ப அவனப் பாக்கவே கூடாதுன்னு தோணிடுச்சு. நீயே வச்சுக்கடான்னு சொல்லிட்டேன்” தலையை குனிந்தபடியே சொன்னவன் அச்சத்துடனேயே நிமிர்ந்து சுந்தரியின் முகத்தைப் பார்த்தான். சொல்லத் தொடங்கியபோது இருந்ததைவிட இன்னும் மலர்ச்சியுடன் அவள் முகம் மிளிர்ந்ததைக் கண்டு இவனுக்கு அச்சம் தோன்றியது. நான் சொல்வது அவளுக்குப் புரிகிறதா. அல்லது விளையாட்டிற்கு சொல்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறாளா. இல்லை இதெல்லாம் கனவா. பார்க்கில் அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டேனா... அவன் மனதில் எண்ணங்கள் தவித்து தாவிக் கொண்டிருந்தன. 

பிடித்திருந்த சங்கரின் கரங்களை உலுக்கியவள், “அவ்ளோதானா, இன்னுமிருக்கா?” என்று குழைவுடன் கேட்டாள். நாக்கு உலர்ந்து பேச முடியாமல் தவித்தவனை நோக்கி, “இதச் சொல்றதுக்கா கண்ணுல தண்ணி” என்று கூறியபடி கன்னத்தை வழித்துத் துடைத்தாள். 

“கம்பெனி போனதுகூட எனக்கு கஷ்டமாயில்ல. அதக் கேட்டு நீ என்னய வெறுத்துடுவியோன்னுதான் எனக்கு ரொம்பப் பயமாயிருந்துச்சு. ஒன்னோட சிரிப்புதான் என் வாழ்க்கைக்கு வெளிச்சம். அது அணைஞ்சிட்டா எனக்கு வாழ்க்கையே இல்ல...” என்று அவள் கரங்களில் தலை வைத்து உடல் குலுங்கினான்.

“பரவாயில்ல விடுங்க. கம்பெனிதான போச்சு. ஒடம்புக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வரைக்கும் எதுக்கும் கவலப் படாதீங்க” 

“ஒனக்கு எம் மேல கோபமே இல்லையா?” 

“எதுக்கு கோபப்படணும். ஒங்க கம்பெனி. நீங்க கொடுக்குறீங்க. இதுல நான் ஏன் கோவப்படப் போறேன்?” 

“முன்னாடி ஒருநாளு பையன் பேனாவ ஏமாத்துட்டு வந்தப்பவே கோச்சுக்கிட்டியே!” 

“அவனும் நீங்களும் ஒண்ணா?” 

“இருந்தாலும் இப்படிப் பழகிட்டு இந்தமாதிரிப் பண்ணீட்டாங்களே” 

“இது முன்னாடியே நடக்கும்னு எதிர்பார்த்தேன். நம்ப கம்பெனியில முன்னாடி வேல பாத்த கோதண்டம்.. அவங்க வீட்டுக்குப் பக்கத்துலதான இருக்காரு. அவருதான் சொன்னாரு உங்களப்பத்தி அந்தம்மா அப்பப்ப திட்டிக்கிட்டு இருக்கும்னு. எனக்கு ஒண்ணுமே புரியல. அவங்க பையன் நெறயவே சம்பாதிக்கிறான். இவருக்கும் வருமானம் வருது. வாடகையும் வருது. நம்மள ஏன் திட்றாங்கன்னு” 
 
இதுவரை தன்னிடம் கூறாமல் இன்னும் என்னென்ன விசயங்களை தன் மனதினுள் பொதிந்து வைத்துள்ளாளோ என்ற திகைப்புடன் சுந்தரியை நோக்கினான்.

“அவங்க சின்ன பிரச்சினையக் கூடப் பெருசாக்கிச் சொல்றாங்க. ஆனா, நீங்க பெரிய கஷ்டத்தக்கூட வெளிய காட்டிக்கிறதில்ல. அவங்க ஒங்கிட்ட பணம் கேட்ட காரணமெல்லாம் பொய்தான்னு எனக்குத் தோணும். ஆனா, கஷ்டப்பட்டு நீங்க கொடுத்தப்ப நமக்கிட்ட அதிகமா இருக்குன்னு அவங்க நெனச்சுக்கிட்டாங்க போல. நீங்க ஒங்க கஷ்டத்த எப்பவும் வெளிய சொல்லாததால நாம ரொம்ப சந்தோசமா இருக்கிறதுக்கு கம்பெனிதான் காரணம்னு நெனச்சுக்கிட்டாங்க. சந்தோசத்த புடுங்கிடலாம்னு தவறாப் புரிஞ்சுக்கிட்டு இதப் பண்ணீருக்காங்க. இவ்வளவு சீக்கிரம் பெரிய கெரகம் கழிஞ்சிடுச்சுன்னு ரொம்ப நிம்மதியா இருக்கு.”

ஆச்சர்யம் தொனிக்க அவளை நோக்கியவன், “தெரிஞ்சுமா அவங்களுக்குப் பணமும் கொடுத்து அவங்க வீட்டுக்கும் வந்த. எப்படி ஒன்னால முடிஞ்சது?” 

“வேண்டாம் விடுங்க. தோளுக்கு மேல வளந்த பசங்கள்ளாம் பாக்குதுங்க.” 

அரவம் கேட்டு பிள்ளைகள் வெளியே வந்துவிட்டார்கள். அவர்கள் பார்ப்பதை முதுகில் உணர்ந்தாலும், அவர்கள் பக்கம் திரும்பாமல் விரல்களைக் குவித்து சுந்தரியின் முகவாயைப் பிடித்து, “செல்லம்ல சொல்லும்மா...” என்றான். 

பிள்ளைகளை வெட்கத்துடன் பார்த்து தயங்கினாலும், இவன் முகத்தில் தெரிந்த வேண்டுதலைக் கண்டு இரங்கியவளாய், “கல்யாணத்தன்னைக்கி நைட்டு நீங்க எங்கிட்ட மொத மொதல்ல கேட்டதே மாணிக்கத்துக்கு என்ன கொடுத்தாலும் கேக்கக் கூடாதுன்னுதான். அத எப்படிங்க மீறுரது?” என்று நாணியவளை, இவன் கண்களின் நீர் அவள் தோளில் விழுமாறு அணைத்துக் கொண்டான், பிள்ளைகள் நிற்பதை உணர்ந்தபோதும்.