அத்தியாயம் 1

6.0k படித்தவர்கள்
7 கருத்துகள்

தெய்வங்கள்

ம்மில் கடவுள் நம்பிக்கை உள்ளவரே மிகப் பெரும்பாலோர். கடவுள் நம்பிக்கை உடையோரிலும் ஒவ்வொருவர் தங்கள் மனத்திற்குப் பிடித்த ஒரு வடிவத்தைக் கடவுளாகக் கற்பனை செய்துகொள்கிறார்கள். கடவுளுக்கும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனித்தனியே தொடர்பு இருக்கிறது என்ற கற்பனையை மதவாதிகள் மக்கள் நெஞ்சிலே மிக ஆழமாகப் பதித்திருக்கின்றனர். இவ்வகையான தனிமனித - கடவுள் உறவு மதங்கள் உருவான பின் எழுந்ததாகும். இது பரிணாமம் என்ற விஞ்ஞானக் கொள்கைக்கு எதிரானதாகும்.

மிகத் தொடக்க காலத்தில், மனிதனுக்கு இயற்கை ஒரு புதிராகத் தோற்றமளித்தது. இருள், சூரியன், பாம்பு ஆகிய இயற்கைப் பொருள்கள் மனிதனுக்குப் புதிராக இருந்தன; அதே நேரத்தில் அச்சத்தையும் ஊட்டின. ஆயினும் மனிதன் இயற்கையே தனக்கு உணவை அளிக்கிறது என்று அறிந்துகொண்டான். அச்சமும் உணவுத் தேவையும் கொண்ட மனிதன் இயற்கையின் பேராற்றலை வணங்கத் தலைப்பட்டான். கூட்டு உழைப்பினால் உணவைத் தேட மனிதன் முற்பட்டபோது ஆற்றல் மிகுந்த இயற்கையைத் தனக்கு இணங்க வைக்க முயன்றான். பழங்குடி மக்களின் பாட்டும் ஆட்டமும் அவர்களுடைய உணவுத் தேவையோடு தொடர்புடையவை. வேட்டை மிருகங்கள் நிறையக் கிடைப்பதற்காகவும் பின் உணவுக்குரிய பயிர்கள் நிறைய விளைவதற்காகவும் அதற்கான மழை வேண்டினர். அதற்காக, பயிர்கள் விளைவது போன்றும் மழை பெய்வது போன்றும் ஆடிக் காட்டினர். இவ்வாறு போலச்செய்து காட்டுவதன் மூலம் இயற்கையை இணங்க வைக்க முடியும் என்று நம்பினர். இவ்வகையான ஆட்டமும் பாட்டமும் மந்திரச் சடங்குகளோடு தொடர்புடையன. மந்திரமே உலக நாகரிகத்தில் தொடக்க காலத்தில் கலைகளுக்கும் விஞ்ஞானத்திற்கும் மூலமாக இருந்தது என்பதனைச் சமூகவியல் அறிஞர்கள் பிரேசர், ஜார்ஜ் தாம்சன் போன்றோர் விரிவாக விளக்கிக்காட்டி உள்ளனர்.

உயிரினங்களிலே மனிதன் கூடி வாழுகின்ற விலங்கினத்தைச் சேர்ந்தவன். விலங்கு நிலையில் இருந்தபோது யானை, மான், எறும்புபோல மனிதன் கூட்டம் கூட்டமாகவே வாழ்ந்த உயிரி. மனிதனின் தொடக்க கால நாகரிகமான கற்கால நாகரிகத்திலும் மனிதன் மந்தை மந்தையாகவே அலைந்து திரிந்தான். புதைபொருள் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்படும் கற்கருவிகள் தொகுதி தொகுதியாகவே இன்றும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. மனிதன் மந்தை உணர்ச்சி உடையவன் என்பதால்தான் இன்றும் தனிமை மனிதனுக்கு அச்சத்தையும் வக்கிர உணர்வையும் ஊட்டுகிறது. மனித சமூகத்தின் வளர்ச்சி அதனுடைய கூட்டுச் சிந்தனையின் விளைவு ஆகும். இரும்புக்காலம், செம்புக்காலம் என்று மனிதன் உலோகங்களைக் கண்டுபிடித்து நாகரிகம் பெற்றதும் சக்கரம், உழுகலப்பை போன்ற அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்ததும் கூடிக்கூடித் தொழில் செய்து பெற்ற அனுபவத்தினால்தான். தெய்வங்களும் அப்படிப் பிறந்தவைதான். மிகப் பழங்காலத்தில் சிந்தனை அளவில் இளம் குழந்தைகளாக வாழ்ந்த மனிதர்கள் தெய்வம் என்பதை  ஓர் ஆற்றலாகத்தான் கருதினர். கைகால்களுடன் கூடிய ஓர் உருவமாகவோ, மனிதனைப் போன்ற உருவமாகவோ கருதவில்லை. தமிழர்கூட ‘முருகு’ எனப்பட்ட ஓர் ஆற்றலையே முதலில் வணங்கினர். பின்னர் தனிமனிதச் சிந்தனை வளர்ந்தபோதுதான் ‘முருகு’ ‘முருகன்’ ஆக்கப்பட்டான். இவ்வகையான குறிகளும் குணங்களும் குலங்களும் கொண்ட கடவுள்களும் அந்தந்தச் சமூகத்தின் தேவைக்கேற்ப அமைந்தவையே.

தெய்வங்களின் வடிவமும் குணமும் அவை சார்ந்த சமூகத்தின் தேவைகளையொட்டி அமைந்தவைதான். கால்நடை வளர்ப்போரின் தெய்வம் மாடுகள், கன்றுகள் சூழ்ந்தபடி கையில் புல்லாங்குழலுடன்தான் இருக்க முடியும். உழவர்களின் தெய்வம் மழை தருகின்ற இந்திரனாகவோ, கையிலே கலப்பை ஏந்திய பலராமனாகவோதான் இருக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு குறிப்பிட்ட இனக்குழு என்ன வகையான உற்பத்தி முறையினைச் சார்ந்திருக்கிறதோ அதைப் பொறுத்து அத்தெய்வங்களின் வடிவங்களும் குணங்களும் அத்தெய்வத்தைப் பற்றிய கதைகளும் அமையும்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

நம்முடைய கிராமப்புறத் தேவதைகள் எல்லாம் கையிலே காவலுக்குரிய ஆயுதங்களையே ஏந்தியிருக்கின்றனவே, ஏன்? பயிரைக் காத்தல், கண்மாயிலிருந்து பாய்கின்ற நீரைக் காத்தல், விளைந்த பயிரைப் பகைவரிடமிருந்து காத்தல், அறுவடை செய்த தானியங்களைக் காத்தல், உழவுக்கு வேண்டிய கால்நடைகளைப் பகைவரிடமிருந்து காத்தல், ஊர் எல்லையில் நின்று எதிரிகளிடமிருந்து ஊரைக் காத்தல் - இந்தக் காப்பு நடிவடிக்கைகள்தான் நேற்றுவரை கிராமப் பொருளாதாரத்தின் அடிப்படை. எனவே இந்த மக்களின் தெய்வங்களெல்லாம் இந்த மக்களைப் போலவே ஏதேனும் ஓர் ஆயுதம் ஏந்தி, காவலுக்குரிய வயல்களின் ஓரத்திலும் கண்மாய்க் கரையிலும், ஊர் மந்தையிலும் ஊர் எல்லையிலும் அயராது கண் விழித்து நிற்கின்றன. இவை உட்காருவதும், கண் மூடுவதும் கிடையாது. இந்த மக்களைப் போலவே இத்தெய்வங்களும் முறுக்கிய மீசையும் வரிந்துகட்டிய வேட்டியுமாகச் சட்டையில்லாமல் (சில நேரங்களில் தலைப்பாகையுடன்) கள்ளும் கறியும் உண்பவையாக வாழ்கின்றன.

மிகப் பழங்காலத்திலிருந்து மக்களினப் பெருக்கம், அதற்குத் தேவையான உணவு உற்பத்திப் பெருக்கம், உணவு உற்பத்திக்கு அடிப்படையான கால்நடைப் பெருக்கம், மழை இவையே மனிதகுல வரலாற்றில் சமுதாயத்தின் லட்சியமும் தேவையுமாய் இருந்திருக்கின்றன. எனவேதான் இன்றும் எல்லா மதத்தினரும் மகப்பேறு என்பது இறைவனால் அருளப்பட்டது என்றும், அதைத் தடுத்து நிறுத்துவது பாவம் என்றும் அடிமனத்தில் எண்ணுகின்றனர். உயிர்களைப் பெருக்கும் ஆற்றல் பெண்களுக்குரிய பண்பாகும். எனவே பெண் தெய்வங்கள் எல்லாம் சமூகத்தில் இத்தகைய தேவைகளை நிறைவு செய்யப் பிறந்தவையே. நோய்க் காலத்தில் குழந்தையைத் தாய் அக்கறையுடன் பேணிக்காக்கிறாள். (அம்மை, கோமாரி முதலிய) இப்பெண் தெய்வங்களும் நோய்களிலிருந்து மக்களையும் கால்நடைகளையும் காக்கின்றன.

சிவபெருமான், விஷ்ணு, மீனாட்சி முதலிய பெருந்தெய்வங்கள் எல்லாம் இப்பண்புகளைக் கொண்டிருக்கவில்லையே, ஏன்? இந்த சந்தேகம் அடுத்து எழுகின்றது. இத்தெய்வங்கள் ஆதியில் இப்படிப் பிறந்தவைதான். இனக்குழு மக்களிடையேதான் இத்தெய்வங்கள் பிறந்தன. நாளடைவில், தனிச் சொத்துரிமை வளர வளர உடலால் உழைப்பவர்கள், உடைமையாளர்கள் என்ற பிரிவு சமூகத்தில் தோன்றியபோது இத்தெய்வங்கள் உடைமையாளர்களின் தெய்வங்களாகிவிட்டன. அவர்களுடைய பண்பாடுகளெல்லாம் (புலால் உண்ணாமை போன்றவை) இத்தெய்வங்களின் பண்புகளாகிவிட்டன.

காடுகளில் கூட்டம் கூட்டமாகத் திரிந்த மனிதன் மண்மீது கிடந்தவற்றைப் பொறுக்கியும் நிலத்தைத் தோண்டியும் உணவைச் சேகரித்தான். பின்னர் வேட்டையாடினான்; மீன் பிடித்தான்; பின்னர் கால்நடைகளைப் பழக்கினான்; மேய்ச்சல் நிலம் தேடி இடம்பெயர்ந்தான்; அக்காலத்தில் பெண்கள் கண்டுபிடித்த விவசாயத்தைக் கால்நடைகளின் துணைகொண்டு வளர்த்தான். போரில் தான் வென்ற பகைவர்களின் உடல் உழைப்பினைக் கொண்டு பயிர் நிலங்களின் அளவைப் பெருக்கினான். ஒவ்வொரு கட்டத்திலும் அவனுக்கு இயற்கை துணை செய்தது; சில நேரங்களில் பழிவாங்கியது. இவற்றினூடாக மனிதக் கூட்டங்கள் இடையறாது போராடி வளர்ச்சிபெற்றன. வாழ்நிலை, நம்பிக்கை இன்னும் பல காரணங்களால் அவை இனக்குழுக்களாயின. விவசாயம் பெருகிய நிலையில் தனிச் சொத்துடைமை வளர்ந்தது; போர்களும் பெருகின; இனக்குழுக்கள் தம்முள் பொருதின; தொடர்ந்த போராட்டங்களால் இனக்குழுக்கள் கரைந்து அரசுகளும் நாடுகளும் உருவாயின. தோற்றுப்போனவர்கள் கடுமையான உடலுழைப்பிற்குத் தள்ளப்பட்டனர். வென்ற கூட்டத்தார் உடலுழைப்பிலிருந்து விலக ஆரம்பித்தனர். நாளடைவில் உடலுழைப்பு இல்லாதவர்கள் உடைமையாளராகவும் மேல்தட்டு மக்களாகவும் மாறிவிட்டனர்.

வேட்டையாடிய நிலையில் குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் குகைச்சுவரில் ஓவியங்கள் தீட்டினர். இவ்வோவியங்கள் தாவரம் அல்லது விலங்காக இருந்தன. அவை அந்த இனக்குழுவின் குலக்குறியாக இருந்தன. இந்தக் குலக்குறிகள் புதிரானவையாகவும், புனித ஆற்றல் உடையனவாகவும் வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்ய வல்லவையாகவும் கருதப்பட்டன. எனவே மந்திரச் சடங்குகளுக்கு உரியவையாகவும் கருதப்பட்டன. இம்மந்திரச் சடங்குகளே மதத்தின் மிகப் பழைய தொடக்க நிலையாகும். (இந்தக் குலக்குறிகளே பின்னர் ஒரு கட்டத்தில் மனித வடிவு பெற்ற தெய்வங்களின் கையில் ஆயுதங்களாகவும் அணிகளாகவும் தெய்வ வாகனங்களாகவும் வளர்ச்சி பெற்றன.)

ஒவ்வொரு கட்டத்திலும் சமூகத் தேவைகள் மாற மாற, தெய்வங்களும் அவற்றின் பண்புகளும் மாறின. உதாரணமாக, வேட்டைச் சமூகத்தில் வேட்டையாடப்பட்ட விலங்குகள் ஊர்ப் பொதுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு அந்த இனக்குழு மக்களால் தமக்குள் சமமாக அல்லது வேலைக்குத் தகுந்த அளவில் பங்கீடு செய்யப்பட்டன. இப்பங்கீடு தெய்வத்தின் பெயரால் செய்யப்பட்டது. பங்கீடு சரியாக இல்லாவிட்டால் தெய்வம் தண்டிக்கும் என்பது இனக்குழு மக்களின் நம்பிக்கை. இப்பங்கீட்டுத் தெய்வத்தைப் பற்றிய தொல்லெச்சம் போன்ற செய்திகள் பழைய இலக்கியங்களிலும் புராணங்களிலும் காணப்படுகின்றன. தமிழிலக்கியத்தில் இத்தெய்வம் பால் வரை தெய்வம் (பால் - பிரிவு) என்று கூறப்பட்டுள்ளது. இத்தெய்வத்தின் விருப்பத்தின் பேரில்தான் ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்து உறவுகொள்கின்றனர் என்பது பழந்தமிழர் நம்பிக்கை. ஆரியரின் ரிக் வேதத்தில் ‘ரித’ என்னும் பங்கீட்டுத் தெய்வம் மறைந்தது பற்றிய புலம்பல்கள் இடம்பெறுகின்றன. கிரேக்கர் இப்பங்கீட்டுத் தெய்வத்தை ‘மீர’ (more) என்று அழைத்ததாகக் கிரேக்கத்தின் பழைய புராணங்கள் பேசுகின்றன.

அடுத்த கட்ட வளர்ச்சியில், இவ்வகையான பங்கீட்டு வாழ்க்கை இனக்குழு மக்களிடையே மறைந்துபோகிறது. பங்கீட்டுத் தெய்வமும் மறைந்துபோகிறது. தமக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்ற நிலையில் சிலர் புலம்புகின்றனர். பிறகு பங்கீட்டுத் தெய்வங்கள் பற்றிய செய்திகள் கதையாக மிஞ்சுகின்றன. பின் அவையும் மறைந்து போய்விடுகின்றன. ஒவ்வோர் கட்ட வளர்ச்சியிலும் அதற்கு முந்தைய கட்ட வளர்ச்சி அடியுரமாகப் போய்விடுகின்றது. ஆனால், விவசாயம் வளர்ந்தபோது கால்நடை வளர்ப்பு அழியவில்லை. மாறாக விவசாயத்தின் துணைத் தொழிலாகிவிடுகிறது. உதாரணமாக கிருஷ்ணன், பலராமன் என்ற இரு தெய்வங்களை எடுத்துக்கொள்வோம். கிருஷ்ணன், விருஷ்ணி - யாதவர் எனப்பட்ட கால்நடை வளர்க்கும் தொழிலையுடைய இரு குழுக்களின் தலைவன் ஆவான். பலராமன், சாத்துவதர் எனப்பட்ட உழவர்களின் குழுத்தலைவன் ஆவான். காட்டில் மாடு மேய்ப்பவர்களின் இசைக்கருவியான புல்லாங்குழலை கிருஷ்ணன் கையில் பார்க்கிறோம். உழவர்களின் குழுத் தலைவனான பலராமனோ கையில் கலப்பை ஏந்தியுள்ளான்.

இத்தெய்வங்களைப் பற்றிய புராணக் கதைகளும், இவற்றின் இயல்பை நன்கு உணர்த்துகின்றன. பலராமன் நிறைய மது குடிப்பவன். ஒருமுறை மதுவெறியில் ஒரு மரத்தடியில் சாய்ந்துகொண்டு நீராடுவதற்காகத் தன்னிடம் வருமாறு யமுனை நதியை அழைக்கிறான். அவள் வர மறுக்கிறாள். உடனே தன் ஆயுதமான கலப்பையை வீசி எறிந்து அவளைத் தன்னிடத்திலே வரவழைத்துவிடுகிறான். இக்கதையின் உட்கிடை என்ன? பலராமன் வாழ்ந்த காலத்தில் அவன் தலைமை ஏற்ற சாத்துவதர் யமுனைக் கரையில் பல புதிய நீர்வழிகளைக் கண்டு விவசாயப் பயிர் நிலங்களைப் பெருக்கினர் என்பதே.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

சனகன், காட்டு வாழ்க்கையில் நிலத்தைக் கலப்பை கொண்டு உழுதபோது நிலத்துக்குள் இருந்து வந்தவள் சீதை என்பது சீதையின் பிறப்பைப் பற்றிய கதை. இதன் பொருள், சீதை உழும் தொழிலையுடைய ஒரு குழுவிலிருந்து பிறந்த தெய்வம் என்பதுதான்.

கிருஷ்ணன் - பலராமன் கூட்டு அக்காலத்தில் யமுனை நதிக்கரையில் தங்கள் எதிரிகளுடன் போராடுவதற்காகக் கால்நடை வளர்ப்போரும், விவசாயம் செய்வோரும் தம்முள் அமைத்துக்கொண்ட கூட்டையே காட்டுகிறது.

கோடரியை ஆயுதமாக உடைய பரசுராமன் தந்தையின் ஆணையின் பேரில் தாயைக் கொன்றான் என்ற கதை இனக்குழு வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் தாய்வழிச் சமூக அமைப்பு, தந்தைவழிச் சமூக அமைப்பாக மாறியபோதுதான் பிறந்திருக்க வேண்டும். (பரசுராமன் ஏந்தியுள்ள கோடரி, வேட்டைச் சமூக வாழ்க்கையிலேயே ஓர் ஆயுதமாக இருந்தது. கர்நாடகத்தில் பிரம்மகிரி என்ற ஊரில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகளில் ஒரு கற்கோடரியும் உண்டு.) தாய்வழிச் சமூக அமைப்பு, தந்தைவழிச் சமூக அமைப்பாக மாறும்போது, வயது வந்த மகன் தந்தையைத்தான் ஏற்றுக்கொள்வான். இக்கால கட்டத்தில் குடும்பங்களில் முரண்பாடுகள் தோன்றும். பெண்ணை அடிமையாக்க ஆண் அதீதமான சில நிலைகளில், நடைமுறைக்கு ஒவ்வாத கற்பு நெறியைப் பெண்ணுக்கு விதிக்கிறான். கற்பு பத்தினித்தன்மை என்பதன் பெயரால் பெண்ணின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. அம்முரண்பாட்டின் வெளிப்பாடே தந்தை ஏவியதனால் மகன் பரசுராமன் தாயைக் கொன்ற கதையாகும். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒவ்வொரு தெய்வத்தைப் பற்றியும் கதைகள் நிறைய பெருகிவிடுகின்றன. ஓரளவு ஒற்றுமையுடைய தெய்வக் கதைகள் ஒன்றோடொன்று கலந்துவிடுகின்றன. இரண்டு மூன்று தெய்வ வழிபாடுகள் ஒன்றாகக் கலந்து ஒரே தெய்வ வழிபாடாகப் பரிணமித்துவிடுகின்றன. அநேகமாக இன்றுள்ள சிவ வழிபாடு, முருக வழிபாடு, விஷ்ணு (திருமால்) வழிபாடு இவையெல்லாம் பலவகை வழிபாடுகள் ஒன்றாகக் கலந்து ஒரே தெய்வ வழிபாடாகப் பரிணமித்தவையே.

அரப்பா நாகரிகத்தின் பசுபதி வழிபாடு, வேதத்திலுள்ள ருத்ர வழிபாடு, தமிழ்நாட்டில் நிலவிய தறி வழிபாடு - இந்த மூன்றும் கலந்ததே சிவ வழிபாட்டின் அடிப்படை. வட இந்தியாவில் பிறந்த கந்த வழிபாடு, தமிழ்நாட்டின் முருக வழிபாடு, கிழக்கிந்தியப் பகுதிகளில் பிறந்த கார்த்திகேய வழிபாடு - இவற்றின் கலவைதான் இன்றுள்ள முருக வழிபாடு. வாசுதேவ கிருஷ்ண வழிபாடு, பலராம வழிபாடு, வேதத்தின் நாராயண வழிபாடு - இவை அனைத்தும் கலந்தே விஷ்ணு வழிபாடு உருவாயிற்று. இனக்குழு வாழ்க்கையுடைய மக்களின் வழிபாட்டு முறைகள், அரசுகள் உருவாகியபோது கலந்து பெருவழிபாட்டு நெறியாக (cult) உருவெடுத்து, மதம் என்ற நிலைக்கு வளர்ந்தன.

சுருக்கமாகச் சொல்வதானால், ஆதி மனிதக் கூட்டம் உணவுத் தேவைக்காகவே அச்சத்தோடும் ஆச்சரிய உணர்வோடும் இயற்கையை வணங்கியது. சமூகத்தின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் சமூகத் தேவைகள் மாறி, வளர்ந்து, பெருகும்போது கதைகளும் புராணங்களும் அதற்குத்தக வளர்ந்தன. அரசுகள் உருவாகி வளர்ந்தபோது ஆளுங்கணம், ஆளப்படுவோர் என்ற நிலையில் தெய்வங்களும் பெருந்தெய்வங்கள், சிறுதெய்வங்கள் என்ற பிரிவுகளோடு அமைந்தன. பெருந்தெய்வக் கதைகள் எழுதப்பட்டு புராணங்கள் உருவாகின. சிறுதெய்வங்களின் கதைகள் உழைக்கும் மக்களின் நாவிலே பாட்டாக மலர்ந்தன. அவர்களின் நினைவிலேயே அக்கதைகள் தொடர்ந்து வந்தன. காலப்போக்கில் சில மறைந்தன. வேறு சில பெருவழிபாட்டு நெறிக்குள் கலந்து அவற்றால் உள்வாங்கப்பட்டு மறைந்தன.

- தொடரும்