அத்தியாயம் 1
முன்னுரை
பாரத நாடு முழுவதும் காந்தியடிகள் பிறந்த நூறாவது ஆண்டை 1969ல் கொண்டாடினார்கள். அதற்கு முந்திய ஆண்டுகளில் நான் சென்னையிலேயே பெரும்பாலும் தங்கியிருக்கவில்லை. 1968ம் ஆண்டின் இறுதியில் நான் சென்னைக்கு வந்தபோது, சுதேசமித்திரன் நாளிதழில் காந்தி நூற்றாண்டை ஒட்டி என்னைச் சில கட்டுரைகள் எழுதச் சொல்லிக் கேட்டார்கள். காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றையும், அவருடைய இலட்சியங்களைப் பற்றியும் நான் படித்து இருந்தேனே தவிர, நாட்டு விடுதலைப் போரில் எவ்வகையிலேனும் பங்கு கொண்டோ, அப்படிப் பங்கு கொண்டவர்களோடு தொடர்பு கொண்டோ சிறிதும் அநுபவம் பெற்றிருக்கவில்லை. எனவே தயக்கத்துடன் ஒப்புக் கொண்டு அடிகளின் வாழ்க்கையைப் பற்றியும் சத்தியாக்கிரகத் தத்துவத்தைப் பற்றியும் வெளிவந்திருந்த நூல்கள் அனைத்தையும் படித்துப் பார்ப்பதென்று முனைந்தேன்.
டாக்டர் ரங்காச்சாரி வாழ்க்கை வரலாற்றை எழுது முன் சென்னையில் 1931, 32-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த அந்நியத் துணி மறுப்பு, மதுக்கடை மறியல் போன்ற போராட்டங்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தேன். அடுத்து, கோவா விடுதலைப் போரை மையக் கருத்தாக வைத்து நான் நாவல் புனையச் செய்திகள் சேகரிக்கையில் காந்தியடிகளின் சாத்துவிக முறைப் போராட்டத்தைத் துவங்குமுன், அதற்குத் தகுதியான உரிய ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பற்றி, கோவா விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற பெரியார் நீலகண்ட கரபூர்க்கர் என்னிடம் விவரித்தார். 'சத்தியாக்கிரகம்' என்ற சொல்லின் உண்மைப் பொருளைப் பற்றிய அவர் உரை என்னை ஆழ்ந்து சிந்திக்கச் செய்தது. கோவா விடுதலைக்கு, வன்முறை ராணுவமே பயன்பட்டது.
அப்போது ஏன் அஹிம்சை முறை பயனற்றுப் போயிற்று? காந்தீய இலட்சியங்கள் செயல் முறைக்குப் பொருந்தாத வெறுங் கனவுகள் தாமா? நாடெங்கும் நாட்டு விடுதலைக்கு முன் புயல்போல் கிளர்ந்த எழுச்சி உண்மையில் நாட்டுப்பற்று என்ற அடிப்படையில் இருந்து எழவில்லையா?
அடிகள் பிறந்த நூறாவது ஆண்டை நாம் கொண்டாடியபோது, அவருடைய இலட்சியங்களிலிருந்து பிறழ்ந்து, நாடு வேறு திசையில் சென்று கொண்டிருப்பதையே அப்போது நடந்த நிகழ்ச்சிகள் விளக்கின. நாடெங்கும் வன்முறைச் செயல்கள் அமைதியைக் குலைத்தன. மானந்தம்பாடி, புல்பள்ளி போன்ற காட்டு மலைப் பிராந்தியங்களில் வன்முறைப் புரட்சியாளர் பயங்கரச் செயல்களில் இறங்கினர். வங்கத்தில் அன்றாட வாழ்க்கையே நிலைகுலைய வன்முறை வெறிச் செயல்கள் திகிலைக் கூட்டின. நாட்டு விடுதலை என்ற இலட்சியத்துக்காக மட்டுமின்றி, சமுதாய மேன்மைக்காகவும் அரிய கொள்கைகளை வகுத்து, தியாகத்தின் அடிப்படையில் உருவாகி ஆலமரமாக வளர்ந்து மக்களிடையே பெருஞ் செல்வாக்கைப் பெற்றிருந்த அரசியல் கட்சி, வலது, இடது என்று இரண்டு சாரிகளாகப் பிரிந்து உடைந்து வலுவிழந்து, அரசியல் வானில் கொந்தளிப்பு மிகுந்தது. சமுதாய மேன்மைகளுக்காக எந்த அந்த அடிநிலைகளை உயரிய மதிப்போடு போற்றி வந்தோமோ, அந்த அடி நிலைகளே ஆட்டம் கண்டன. அரசியற் கட்சிகளின் மீது மக்கள் அவநம்பிக்கை கொள்ளும் வகையில் அவை செல்வாக்கு இழந்து, தனி மனிதர்களின் சண்டை சச்சரவுகளாகச் சீர் குலைந்தன.
நாளிதழுக்குக் கட்டுரைகள் எழுதுவதற்காகவே நான் ஆழ்ந்து சிந்தித்தாலும், கட்டுரைகள் முடிந்த பின்னரும் என்னால் அமைதி காண இயலவில்லை.
புற உலகின் அறைகூவல்களை எதிர்த்து நோக்க என்னுள் ஒரு யமுனா உருவானாள்.
நீலகிரி மலைத்தொடரின் பல நிலைகளிலும் வாழும் வாய்ப்பும் அநுபவமும் எனக்கு இயைந்திருந்தன. 'குறிஞ்சித் தேனு'க்காக நான் மலை வாழ் மக்களைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கையில் ஒட்டியிருந்த அண்டை மாநிலமாகிய கேரளப் பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய செய்திகளையும் அறிந்திருந்தேன். குறிப்பாக, மானந்தம்பாடி, வயநாடு பிராந்தியங்களில் வாழும் அடியர், பணியர் வாழ்வு பற்றிய பல கட்டுரைகளை மலையாளத்தில் இருந்து மஞ்சரி இதழ்களுக்குத் தமிழாக்கம் செய்திருந்தேன். எனவே, அந்தச் சூழல் பற்றிய செய்திகள் எனக்கு 'வேருக்கு நீர்' புதினத்துக்கான பகைப் புலத்தைத் தீட்ட உதவின.
அந்த ஆண்டின் இறுதியில் நான் வங்கத் தலைநகர், கல்கத்தாவுக்குச் சென்றேன். அங்கே நான் நேரில் கண்ட காட்சிகளையும் அநுபவங்களையுமே கதையில் சித்தரித்திருக்கிறேன். அந்த அமைதி குலைந்த அன்றாட வாழ்க்கையைப் பல கோணங்களிலிருந்தும் காணும் வண்ணம், பீகார் மாநிலத்திலும் பிரயாணம் செய்தேன்; பாட்னாவில் இரண்டு மாத காலம் தங்கினேன். அரசியல் நிலைக்குக் காரணமான அறியாமையும் வறுமையும் இசைந்துவிட்டால், வன்முறைக் கிளர்ச்சிகள் தோன்றாமலிருக்க முடியாது. அந்நாளில் உயர்மட்டத்தில் விருந்து போன்ற வைபவங்களில் ஒழுக்கச் சிதைவு ஒன்றே குறியாக இருப்பதைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பும் பெற்றேன். தனிமனித ஒழுக்கம் சமுதாயத்துக்கு என்ற அடிப்படையான காந்திய இலட்சியங்கள், நழுவிப் போய்விட்டன. அந்நாள், எனக்கேற்பட்ட மனக்கிளர்ச்சியும் துயரமும் இந்நவீனத்தைப் புனையத் தூண்டு கோலாயின. இந்நவீனத்தைப் பலதரப்பட்ட மக்கள், ஆய்வாளர், அரசியலார் படித்து, பல வகையில் என்னிடம் கருத்துக்களையும் ஐயங்களையும் கேட்டிருக்கின்றனர். புறவாழ்வில் ஏற்படும் பாதிப்புகளினால் எனது, மன அரங்கில் ஏற்படும் கருத்துக்களும் கிளர்ச்சிகளும் எனது இலக்கியப் படைப்புகளுக்கு உந்துதல்களாக இருந்து வருகின்றன. 'நாவல்' என்ற இலக்கிய உருவை நான் எனது கருத்து வெளியீட்டு மொழியாகக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் அந்நாளில் கல்கத்தாவிலும் பீகாரிலும் நான் சந்தித்த மக்களையே கதாபாத்திரங்களாகவும் உலவ விட்டிருக்கிறேன்; அவர்கள் யாவரும் தனிமனிதர்களாகத் தோன்றாமல், சமுதாயத்தின் பிரதிநிதிகளாகவே தோன்றுவார்கள். தனிமனிதப் பிரச்னைகளை வளர்த்துக் கொண்டு செல்கையில் கதையமைப்பு வேறு விதமாக இருக்கக் கூடும். இங்கோ, நிகழ்ச்சிகள், நடப்புகள், கற்பனையல்ல.
இந்த நவீனத்துக்கு அந்நாள் (1973) மத்திய சாகித்ய அகாதமி நிறுவனப் பரிசு பெறும் சிறப்பும் கிடைத்தது.
பீகார் மாநிலத்தில் அன்று நான் கண்ட அரசியல் கோளாறுகளும், மக்களின் பிரச்னைகளும், முறுக்கேறி நாட்டின் ஆட்சியை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கின்றன.
கங்கை தன் வண்மைக்கரம் கொண்டு தழுவும் இந்த மண்ணில், இந்நாவலில் குறிப்பிட்ட, பிரச்னைகளும், நெருக்கடிகளும் புதிய வலிமைகள் பெற்றிருக்கின்றன. "நீங்கள் காந்தீயக் கொள்கைகளை ஆதரிக்கவில்லையா அம்மா?" என்று என்னைப் பலர் இந்த நூலைப் படித்துக் கேட்டிருக்கின்றனர்.
பலதரப்பட்ட மக்கள் கொண்ட மிகப் பெரிய பாரத சமுதாயம் இது. இலக்கிய ஆசிரியர்கள், சிந்தனையாளர், ஒதுங்கியிராமல், தத்தம் வழியிலே நாம் கொண்டிருக்கும் நடைமுறையில், கொள்கைகளில் வெற்றி பெற்ற அம்சம் எது, மறுபரிசோதனைக்குரிய அம்சம் எது என்று சிந்தனை செய்வது அவசியமாகிறது; அதை மக்களிடம் கொண்டு செல்வதும் கடமையாகும் என்று கருதுகிறேன்.
இந்நூலுக்குச் சிறப்பளித்தவர்களுக்கும், வெளியீட்டாளருக்கும் இதனைப் படித்துக் கருத்துரை கூறியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாசக பெருமக்கள் மக்களாட்சி நிலவும் இந்நாட்டில் ஆற்றல் மிகுந்தவர்கள். அவர்களைச் சிந்திக்கச் செய்ய வேண்டும் என்பதே என் அவா.
அன்புடன்
ராஜம் கிருஷணன்
25-2-80
-------------
வேருக்கு நீர்
1
"மாலை ரொம்ப நல்லாயிருக்கு ரங்கா! நிசப் பூமாலை போலவே இருக்கு!" என்று யமுனா வியந்து பாராட்டுகிறாள்.
ரங்கனுக்குப் பெருமை பிடிபடவில்லை. பெரிய முண்டாசும் சந்தனப் பொட்டும் கோட்டுமாக, கம்பீரமாகத்தான் நிற்கிறான்.
"ரங்கா கௌடர் வெறும் தோட்டக்காரர் இல்லை. ஒரு நல்ல கலைஞர் என்பதை விளக்கி விட்டார்" என்று துரை புகழ்மாலை போடுகிறான்.
"வெறும் ரோஜா, முல்லை என்று மாலை அமையாமல் கீழ்நாட்டுப் பூ, மலைநாட்டுப் பூ எல்லாம் கலந்த பூ மாலையாக இருப்பதுதான் இதன் சிறப்பு. என்ன சொல்கிறீர்கள் சுமதி தாயி?"
"மாலையை யாருக்குப் போடப் போகிறீர்கள்? அதைத் தெரிந்து கொண்டால் தான் சிறப்பைச் சொல்ல முடியும்!"
சுமதி தாயி மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி. வார்தா ஆசிரமத்திலிருந்து காந்திய நெறி பயின்றவள். அவள் இந்த நீலமலை மூலை ஆசிரமத்தில் இவர்கள் கொண்டாடப் போகும் நூற்றாண்டு விழாவில் பங்கு கொள்ள வந்திருப்பதே சிறப்புத்தான்.
"பாரத தேவியாக வேடம் போடப் போகிறாளே அந்தச் சிறுமி பார்வதிதான், இதை அணியப் போகிறாள். நேற்று ஒத்திகையில் பார்த்தீர்களே..." என்று யமுனா விளக்கிய பின்னரே அவளுக்குப் புரிகிறது.
"அதானே பார்த்தேன், பாபுஜியின் படத்துக்கு இது எப்படிப் பொருந்தும் என்று?"
"அதற்குத்தான் கதர் மாலை முன்பே போய்விட்டதே! பல மதங்கள், பல வண்ணங்கள், பல மொழிகள், பல தரங்கள் - இவற்றை விளக்கப் பலதரத்துப் பூக்கள். ஆனால் பாரத சமுதாயம் ஒரே பண்பாட்டின் சரட்டில் ஊடுருவி நிற்கிறது..." என்று யமுனா விளக்குகையில் துரைக்கு அவள் பரவசமுற்று நிற்பதாகத் தோன்றுகிறது. உணர்ச்சி வசப்பட்டால் மலரிதழ்கள் போன்று மடிந்தாற் போல் அவளுடைய மடல்கள் சிவந்து விடுகின்றன. எங்கோ ஒரு கிராமத்து மூலையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று அமைந்த ஒதுக்குப்புறத்தில் பிறந்து வளர்ந்திருக்கும் அவன் காந்தி கிராமத்து அரிஜனச் சிறுவர் இல்லத்துக்கு வரும்வரையிலும் அந்தக் குப்பை மேட்டுச் சண்டை சச்சரவுகளையும் சல்லாப விநோதங்களையும் தானே அறிந்திருந்தான்? அந்தப் பருவத்தில் படியாததை பின்னே வாழ்நாளெல்லாம் படிய வைத்தாலும் அந்த ஈடுபாடு வராதோ?
யமுனா காந்தி நூற்றாண்டு விழாவுக்காக ஆசிரமக் குழந்தைகளைக் கொண்டு ஒரு கதம்ப நிகழ்ச்சி தயார் செய்திருக்கிறாள். உண்மைதான். ஆனால் இந்த ஆசிரமத்தில் யார் தாம் காந்தியடிகள் கண்ட அன்றைய பாரத சமுதாயத்தோடு சம்பந்தப்பட்டவர்கள்? யமுனாவின் தந்தை, இன்று நடமாட்டமில்லாமல் கட்டிலோடு முடங்கிவிட்ட தந்தை, அந்த நாட்களில் காந்தியடிகளுடன் சம்பாரன் சத்யாக்ரகத்துக்கே புறப்பட்டவர்; யமுனாவின் தாயோ, காந்திஜீயின் சேவாக்கிராம ஆசிரமத்தில் கிடைத்த துணை. இவர்களெல்லோரும் கூடக் காந்தியடிகளைப் பற்றியோ, நாட்டுப்பற்றைப் பற்றியோ பேசும் போது இப்படி உணர்ச்சிவசப்பட்டு விடுவதில்லை. அவன்... அரிஜனங்கள் என்று தாய் போல் கனிவு கொண்ட அடிகளின் பெயரால் நிறுவப்பெற்ற கருணை இல்லத்திலேயே அரசு நீட்டிய கையைப் பற்றிக் கொண்டு சமுதாயம் மதிக்கத் தகுந்த மனிதனாக உருவாகி இருக்கிறான். 'துரைராசன் பி.ஈ.' என்று கடிதங்களில் வரும் வரியிலேயே அவன் தன்னைத்தானே பார்த்து மகிழ்ந்து கொள்ளுகிறான். எனினும், இந்த யமுனாவைப் போல் அவன் உணர்ச்சிப் பரவசனாகி விடுவதில்லை. ரங்கன் வைத்த ஒட்டுச் செடியில் மலர்ந்து நிற்கும் ரோஜாவைப் போன்ற அந்த முகம்; ஒட்டில் மலை ரோஜாவுக்குரிய வண்ணச் சிறப்பு உண்டு. அடுக்கடுக்கான இதழ்கள். ஆனால் மலை ரோஜாவுக்கில்லாத வாசனை, எண்ணங்களை நிறைக்கச் செய்கிறது. இந்த ஆசிரமத்துக்கு யமுனா ரோஜா; இல்லை... மான்! இல்லை... சிங்கம்...; இல்லை ராஜகுமாரி...
"என்ன நீங்கள் பஸ்ஸுக்குப் புறப்பட்டு விட்டீர்களா? திகைத்துப் போனாற்போல் நிற்கிறீர்களே?" என்று யமுனா கேட்கும் போது தான் அவன் ஒரு புன்னகை செய்து சமாளிக்கிறான்.
"மற்ற சாமான்களெல்லாம் ஜோசஃப் சாருடன் போயாச்சில்ல?"
"ஆமாம்; இந்த மாலைதான் எனக்குத் தெரிந்து பாக்கி. நீங்கள் முன்னே போய் ரங்கனுடன் பஸ்ஸைக் கொஞ்சம் பிடித்து வையுங்கள்; ஓட்டமாக வருகிறேன்!"
சுமதியும் அவளுமாக நடக்கின்றனர். பூங்காக் குடிலிலிருந்து அவர்கள் இல்லம் செல்லும் சரளை மண் பாதையின் இருமருங்கிலும் பச்சைக் குஞ்சம் கட்டினாற் போல் காணப் பெறும் வாசனைப் புல் பாத்திகள் வறண்டு கிடக்கின்றன; ஒரு புறம் பள்ளத்திலோடும் ஆற்று நீரை மேட்டுக்கு இறைத்துத் தரும் பம்ப் செட் ஓடிக் கொண்டிருந்தாலும் வானவனின் கருணையின்றி வளமுண்டோ என்று கேட்கும் பாவனையில் இலைக்கோசும் பூக்கோசும் சவலைக் குழந்தைகளைப் போல் காட்சியளிக்கின்றன. ரங்கனின் தந்தை உதகையின் ஐரோப்பிய கவர்னர்கள் காலத்து மாளிகைத் தோட்டத்தில் பணி செய்தவன். இந்த ரங்கன் அந்தச் சிறுவயதிலேயே ரோஜாப் பதியன்களிலும், 'ஸ்வீட் பீஸ்' கொத்துகளின் நறுமணச் சூழலிலும் வளர்ந்தவன். ஏழு வயசிலேயே ஜாடிகளில் அழகாகப் பூப்போடுவானாம். பாரததேவிக்கு அவனைக் கொண்டு காகிதப் பூமாலை கட்டச் சொல்ல வேண்டியிருக்கிறது! பூந்தோட்டத்தைக் குறுக்கி, மேலும் மேலும் பெருகும் வயிற்றுப் பசித் தீயை அவிக்க, கப்பைக் கிழங்கும் வாழையும் நட்டிருக்கிறார்கள்.
"துரை இங்கே எத்தனை காலமாக இருக்கிறார் யமு?" என்று கேட்கிறாள் சுமதி தாயி.
யமுனா சட்டென்று தலை நிமிர்ந்து பார்க்கிறாள். "...துரை இங்கே வேலைக்கு என்று வரவில்லையே? பில்லூர் அணை கட்டும்போது படிப்பை முடித்து வேலைக்கு வந்தார். அப்போதெல்லாம் ஓய்வு நாட்களில் இங்கு வருவார். அம்மாவனோடு பேசுவார். பம்ப்செட், விளக்கு - ஏதானும் கோளாறிருந்தால் கவனிப்பார். பிறகு அணை திட்டம் முடிந்து வேலை இல்லாமலாகிவிட்டது. ஆறேழு மாசமாய் வேலை இல்லை. வேலை கிடைக்கவில்லை. ஒரு மாசம் முன்னே இங்கே வந்தார். இங்கே பெரிய பையன்கள் நாலைந்து பேருக்கு அடிப்படைத் தொழில் நுணுக்கங்கள், வொயரிங் போன்றதெல்லாம் அவராகச் சொல்லிக் கொடுக்கிறார். அம்மாவனுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். "வேலை கிடைக்கலேன்னு கவலைப்படாதே. நீ இங்கேயே இரு" என்று சொல்லியிருக்கிறார். துரை திருக்குறள் வகுப்பு எடுப்பார். கேட்டுக் கொண்டே இருக்கலாம், சுமதி தாயி!"
"அதான் முதலில் இங்குள்ள ஆதிவாசி இருளர் இனமோ, என்று நினைத்தேன். எனக்குங்கூட அவருடைய பேச்சு, சுபாவம் எல்லாம் பிடித்திருக்கிறது. இப்படி எத்தனை எத்தனை இளைஞர்களை நம்பிக்கையற்ற எதிர்காலத்துடன் வைத்திருக்கிறது!"
யமுனா யோசனையில் ஆழ்ந்திருக்கிறாள்.
ருக்மிணி அம்மை குடிலின் வாயிற்புறம் மூங்கிற் குழாயால் கன்றுக் குட்டிக்குக் கஞ்சி புகட்டிக் கொண்டிருக்கிறாள்.
மூங்கிற் தட்டிக்கு மேல் ஓடுகள் வேயப் பெற்ற இல்லம். பதினான்குக்குப் பதினாறாய் மண்ணில் மெழுகிய கூடம், சுவரில் நூல் சிட்டம் நிறைவேறாமல் மாட்டியிருக்கிறது. மூங்கில் அலமாரியில் அடுக்காகப் புத்தகங்கள். ஒரு கொக்கியில் அரிக்கேன் விளக்கு தொங்குகிறது. ஒட்டி ஒரு வாயிற்படி தெரிகிறது. உள்ளே புகுந்தால் பத்தடிக்குப் பன்னிரண்டாக ஒரு அறை, மரக்கட்டில் ஒன்றில் யமுனாவின் தந்தை படுத்திருக்கிறார். கைக்கெட்டும்படியாக வலது பக்கம் நீண்ட பலகையில் புத்தகங்கள் எழுதும் பலகை, மூக்குக் கண்ணாடி, ஒரு கடிகாரம் இருக்கின்றன. அங்கும் ஓர் அலமாரி நிறைந்த புத்தகங்கள். நலிந்த உருவில் படுத்திருப்பவரின் வயதை அறுபதிலிருந்து எண்பது வரையிலும் கொண்டு நிறுத்தலாம். கதிரேசனின் ஒளிப்பட்டிராத குருத்துப் போல் முகம் வெளுத்துச் சுருங்கியிருக்கிறது. அகன்ற நெற்றியும் கூரிய... செதுக்கு அமைப்புமாக விளங்கும் அந்த முகம் ஒரு காலத்தில் மிகுந்த ஒளியுடன் திகழ்ந்திருக்கக் கூடும்? கட்டில் சாதாரணக் கட்டில்களை விட, அவர் உடலுக்கேற்ற வகையில் நீளமாக இருக்கிறது. சுருங்கிய பாதங்கள், உள்ளங்காலின் வெண்மையான நிறம், முதியவர் நடமாட்டம் விட்டுப் பல நாட்கள் ஆயின என்றுரைக்கிறது.
இலேசான நச்சுக் கொல்லியின் மணம் நோயாளியின் அறை என்ற உணர்வைத் தோற்றுவித்தாலும், "என்னம்மா பஸ்ஸுக்குப் போகல்லே?" என்று கேட்பவரின் குரல் ஆரோக்கியமாகவே இருக்கிறது.
"போய்க் கொண்டே இருக்கிறோம்பா, சுமதி தாயி உங்ககிட்டச் சொல்லிக்காம போய்விடுவார்களா?"
"சுமதி தாயியா? போய் வாங்கம்மா! இவ்வளவுக்கு நினைப்பு வச்சு இந்த மூலைக்கு..."
குவிந்த கரங்கள் நடுங்குகின்றன. சற்று முன் ஆரோக்கியமாக ஒலித்த குரல் கரகரத்து ஒலிக்கிறது. யமுனா அந்தக் கைகளைப் பற்றிக் கொண்டு விழிக்கடைகளைத் துடைக்கிறாள்.
"நான் உண்மையிலே பெங்களூர் காங்கிரஸுக்கா வந்தேன்? ராம்ஜியைப் பார்க்கணும், ருக்மிணி தாயியைப் பார்க்கணும்னுதான் ஓடி வந்தேன்."
"எப்படியிருந்த குடும்பம், எப்படியோ போய்விட்டது. ஆண்டவன் இருக்கிறார்... வேறெதைச் சொல்ல?"
"எனக்கு நம்பிக்கையே போய்விட்டது சுமதி தாயி!"
"சை... இதென்ன ராம்ஜி? நீங்களா! உங்கள் நம்பிக்கை ஏன் போக வேண்டும்? இதோ, யமுனாவைப் பார்த்துக் கொண்டா நீங்கள் இப்படிப் பேசுகிறீர்கள்?"
அவர் தாமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு அவர்கள் இருவரையும் பார்க்கிறார். கை குவிகிறது மீண்டும்.
"போய் வாங்கம்மா? போய் வாம்மா, யமுனா!"
ருக்மணி அம்மை வாயிற்படியில் நிற்கிறார். சுமதி அவளைத் தழுவி விடை பெறுகிறாள். "இந்த மூலையில் சத்தியம் இருக்கிறது. அது இருக்கும். சத்தியம் எங்கேனும் மாயுமோ சோதரி?"
சுமதிக்குப் பேச நா எழவில்லை.
யமுனா தன்னுடைய மாற்றுச் சேலையையும் இரண்டொரு தேவைகளையும் பைக்குள் திணித்து மாட்டிக் கொள்கிறாள்.
பஸ் நிற்கிறதோ என்னவோ?
"வாருங்கள் சுமதி தாயி?" இருவரும் சாலையைப் பிடிக்க விரைகின்றனர். ஜூலை மாசம் இருபது தேதியில் மேற்குத் தொடரில் இப்படி வறட்சி நிலவுவதுண்டோ? மூடிக் கண் திறந்து வானவன் கண்ணாமூச்சி யாடுவதுடன் மறைந்து போகிறான். ஒரு மேகக் குஞ்சு சினையாவதில்லை; ஆறு மெலிந்து இழையாக ஓடுகிறது. எங்கோ சந்திர மண்டலத்தை எட்டிப் பிடிக்கிறார்கள். அரசியல் வானில் கொந்தளிப்பு, தனி மனிதர்களையும் அது ஆட்டிப் படைக்கிறது. ஆனால் இந்த மூலை நோஞ்சான் குழந்தையாய், கண்களில் மட்டும் ஒளியை வைத்துக் கொண்டு உயிர்த்திருக்கிறது.
கண்களில் மட்டுமே ஒளி...
"ஓ! சாலையில் பஸ் வந்து நிற்கிறதே?"
ரங்கன் நீளமான அந்த மாலைப் பெட்டியை, (மூங்கிலிழைகளால் ஒரு பெட்டி முடைந்திருக்கிறானே?) பஸ் உள்ளே ஏற்ற வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறான்.
"ஊட்டி, ட்ராமாக்குப் போறது, பாரததேவிக்கு மாலை. இல்லாட்டி கண்டா முண்டா சாமான்களோடு மேலே போடலாம்" என்று மாலைப்பெட்டியுடன் நிற்கிறான்.
"இருக்கட்டுமேய்யா? அதான் பொட்டிக்குள்ள வச்சிருக்கியே? கீழே அல்லாம் மெறிச்சி துவையலாக்கிடுவாங்க..."
ரங்கனின் முகத்தில் கவலை கனக்கிறது.
"அதென்னமோ தெரியாதுங்க என் பக்கத்தில் அது இருக்கணும்."
"அப்ப அந்தாளையும் மேலே ஏத்திடுங்க!" என்று யாரோ ஒருவர் நகைச்சுவையுடன் சிரிக்கிறார்.
"இந்தாய்யா, ஒண்ணும் ஆகாது. நான் கியாரண்டி. போடப்பா, மேலே..." பெட்டியைக் காக்கிச் சட்டை ஆள் பற்றும் போது ரங்கன் அழுதுவிடுவான் போலிருக்கிறது.
"ரங்கனின் முகத்தைப் பாருங்க யமுனா!" என்று நகைக்கிறான் துரை.
"பாவம், ஒரு அற்பமான உடைமை. இதற்கே இப்படி மனித இயல்பு இருக்குமானால் தனி உடைமை என்று மனிதனோடு பரம்பரை பரம்பரையாக ஊறியவற்றை எல்லாம் எப்படிப் பிரித்து எடுப்பது?" என்று கூறிக்கொண்டே யமுனா பஸ்ஸிலேறி முன்புறம் அவர்களுக்காக ஒதுக்கப் பெற்ற இருக்கை ஒன்றில் அமர்ந்து கொள்கிறாள்.
"அதுதான் ரத்தம் சிந்தப் பிரிக்கும் தந்திரம்" என்று விடையிறுக்கிறாள் சுமதி.
"நீங்க என்ன, மார்க்ஸீயம் பேசுறீங்க?"
"பெங்களூர் காங்கிரஸுக்கப்புறம் வேற என்ன, எப்படிப் பேசுவதாம்? அதுவே இது; இதுவே அது..."
"நீங்க என்ன எல்லாத்துக்கும் பெங்களூர் காங்கிரஸை வம்புக்கிழுக்கிறீர்கள்? நீங்க ரைட்டா?" என்று சிரிக்கிறான் துரை.
"நீங்க லெஃப்டா?" என்று திருப்பிக் கேட்கிறாள் சுமதி தாயி. உண்மையில் சுமதி தாயி எத்தனை தடவைகளோ தான் பெங்களூர் காங்கிரஸுக்கு வந்தவள் என்பதை நினைப்பூட்டி விட்டாள். தன் மனத்தாங்கலைக் கொட்டிக் கொள்ளத்தான் அவர்களைத் தேடி வந்திருப்பாளோ என்று கூட யமுனா நினைக்கிறாள். தங்கிய இரண்டு நாட்களிலும் நூற்றாண்டு விழாக் கதம்ப நிகழ்ச்சியைக் கொண்டே அவனைப் பேசவிடாமல் அடித்தாயிற்று.
"இப்ப ஆசிரமத்தில் பம்ப்செட் ஓடுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கு. ராம்ஜி சரியாக இருந்தால் ஒவ்வொரு குடமாக மேட்டிலேறித் தண்ணீர் இரைக்கச் சொல்வாராக்கும்!"
"ஹும், அதெல்லாம் நடக்கும் செயலில்லை. ஆசிரமத்திலிருந்து வரும் ரங்கன், இப்ப ஊட்டியில் ரேஸ் இருந்தால் அங்கே தான் முதலில் போவான். இல்லாவிட்டால் எங்கே சினிமா ஸ்டார்கள் வந்து ஷூட்டிங் நடக்கிறதோ அங்கு ஆஜராவான். இந்த பஸ்ஸையே எடுத்துக் கொள்ளுங்கள்; இருபது வருஷத்துக்கு முன்னே இங்கே வெளியுலகம் எப்படி இருக்குமென்று தெரிந்திருக்காது. இப்ப நம்ம மாரி இருளன் சினிமா எங்கேன்னு அலைகிறான். பிரேமா சினிமாப் பாட்டு, நல்ல தமிழில் எப்படிப் பாடுது?"
யமுனாவுக்குப் பேசும் உற்சாகமோ, கலகலப்போ இல்லை.
மலைப்பாதையில் உய் உய்யென்று பஸ் ஏறுகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன் இங்கே அமைக்கப் பெற்றிருக்கும் நீர் மின் நிலையங்களுக்காகப் போட்ட சாலை; இந்த இருண்ட மலைக் கானகங்களில் புத்தொளியும் புதிய நாகரிக மலர்ச்சியும் வந்துவிட்டதன் அடையாளமாக இந்தப் பஸ் குதிரைப் பந்தயத் திருவிழாவுக்கும் மக்களைச் சுமந்து கொண்டு மலையேறுகிறது. வனவிலங்குகளின் இருப்பிடமாகத் திகழ்ந்த இருண்ட கானகங்கள் இன்று கரைந்து விட்டன. தன்னிச்சையாகக் குதித்துச் செல்லும் அருவிகள் இன்று மறைந்து விட்டன. மலைச்சரிவெங்கும் பச்சைக் குவியல்களாகத் தெரியும் தேயிலைச் செடிகளினூடே கரைந்த கானகங்களினூடே கோபுரந்தாங்கிகளில் வீரிய மிக்க மின்வடங்கள் செல்கின்றன. நீர்த்தேக்கங்களை ஒட்டிச் செயற்கைப் பூங்காக்கள். அவற்றை ஒட்டிய சுற்றுலா விடுதிகள்; வாயில் விடுதிகள்; வாயில்களில் நீண்ட படகு போன்று பளபளக்கும் ஊர்திகள். சில நீர்த்தேக்கங்களில் அலங்காரப் படகுகளும் வைத்திருக்கிறார்கள். ஆனால் நீரில்லையே! புற்சரிவுகளில் உல்லாசம் விரும்பி வருபவர்களுக்காக மட்டக் குதிரைகளைப் பிடித்துக் கொண்டு நிற்கும் ஏழைகளுக்கொப்ப அணைத் தேக்கம் காட்சியளிக்கிறது.
ஏழைமை கொடியது. வயிற்றுக்கில்லாத ஏழைமை மட்டுமல்ல; 'இந்த முக்கல் முனகல் பஸ்ஸில் இடித்து நெருக்க, வயிற்றுக்குடல் சுருண்டு வாயில் வந்து விடுவது போல் புரட்ட, இப்படிப் போக வேண்டியிருக்கிறதே; அந்தப் படகுக் காரில் போக வழியில்லையே' என்ற ஏக்கத்தைத் தோற்றுவிக்கும் உணர்ச்சியும் ஏழைமையிலிருந்து பிறப்பது தான். அதை எப்படியேனும் வெற்றி கொள்ள வேண்டும் என்று தான் கஞ்சிக்குத் தானியம் வாங்க வைத்திருக்கும் கைப்பொருளையும் 'ஜாக்பாட்'டில் கொண்டு கொட்டுகிறார்கள்.
வெளியிலிருந்து சில்லென்று காற்று முகத்தில் வந்து படிகிறது.
மேலே மழை பெய்யுமோ?
சில வளைவுகள் ஏறுமுன்பே சாரல் பெருந்துளிகளாய் பஸ்ஸைத் தாக்குகிறது. பரபரவென்று பஸ்ஸின் திரைச் சீலைகளை இழுத்து மாட்ட ஒரு சிறு போராட்டம் நிகழ்த்த வேண்டியிருக்கிறது. கொக்கிகள் இருந்தால், கண்ணுள்ள ஓரங்கள் கிழிந்து போயிருக்கின்றன. கண்ணிருந்தால் கொக்கிகளில்லை!
படபடவென்று அவைகளும் நீர்த்துளிகளுமாக மோதிக் கொள்ள, கொண்டையூசி வளைவுகளில் ஏற இயலாமல் வழுக்கி வழுக்கிப் பின்வந்து முன்னேறுகிறது வண்டி...
சுமதி பைக்குள்ளிருந்த சால்வையை எடுத்துப் போர்த்திக் கொள்கிறாள். கறுப்பில் சிறுசிறு பூக்கள் தைத்த சால்வை.
"இதை எங்கே வாங்கினீர்கள் சுமதி தாயி?"
"இது பிரபாதேவி கொடுத்தார். அஸ்ஸாமில் நெய்தது என்று நினைக்கிறேன்."
பிரபாதேவி யாரோ? சுமதி தாயி நாட்டுக்குச் சுதந்தரம் கிடைத்த பிறகு, முதல் அரசியல் தேர்தலில் நிற்கவில்லை. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் நின்று வெற்றி பெற்று ஐந்தாண்டுக் காலம் மாநில சட்ட மன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறாள். அடுத்த தேர்தலில் வெற்றி பெறவில்லை. பிறகு தேர்தலுக்கே நிற்கவில்லை. பதவிக் காலத்தில் தொடர்புகளும், நட்பும் நிறைய இருந்திருக்கும்.
"மஞ்சூரு... மஞ்சூரு...!"
கோட்டும் தலைப்பாகையுமாக, சிறிது மழை பெய்த குளிர்ச்சியில் பளிச்சென்று காணும் பச்சைகளிடையே மனிதக் கும்பல் குதிரைப் பந்தயத்துக்கும் திரைப்பட விழாவுக்கும் போகத் துடித்துப் பஸ்ஸை நெருங்குகிறது.
"பூக்கூடையைக் கீழே இறக்குங்கப்பா!" என்று ரங்கன் குரல் கொடுப்பது யார் செவிகளிலும் விழவில்லை. கூட்டம் அதிகம் தான். ஏழு பேர்களை அதிகமாகக் கீழே நடக்குமிடத்தில் உட்கார ஏற்றிக் கொள்கிறான் கண்டக்டர். பிறகு தேநீரருந்தச் செல்கிறான். துரை ஆவி பொங்கும் தேநீர் தம்ளர் இரண்டை ஏந்திக் கொண்டு வருகிறான்.
"என்ன இது? நாங்க கேட்கவில்லையே?"
"கேக்காம போனா நான் வாங்கிவரக் கூடாதா?"
"அதுசரி..." என்று சுமதி புன்னகையுடன் வாங்கிக் கொண்டு யமுனாவிடம் ஒன்றைக் கொடுக்கிறாள்.
"முதலில் ராம்ஜியின் லட்சியம், இந்த மலைக்காடுகளில் காந்திஜியின் ஊருளி ஆசிரமத்தைப் போல ஒன்று அமைத்து இயற்கையின் வைத்திய சேவை செய்ய வேண்டுமென்பது தான். பிறகு அவரே சல்ஃபா மருந்துகள், ஊசி வைத்தியம் எல்லாம் செய்ததை நானே முன்பு ஐம்பத்தெட்டில் வந்த போது பார்த்தேன். தேநீரைக் கண்ணெடுத்துப் பார்த்திராத ருக்மிணி பாயி, மூன்று நேரம் தேநீரருந்தியதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்..."
"இங்கே வாழ்க்கை முறையே சோதனையாக வாழ்ந்து பார்ப்பதுதானே சுமதி தாயி?"
"நம் ஜனநாயகம் - அல்ல மக்களாட்சியைப் போல..." என்று சிரிக்கிறான் துரை.
"ஆமாம். பரிட்சையில் தோல்வியும் வரலாம் என்பதற்கு இதுவே அத்தாட்சி."
"நம் ஜனநாயகம் தோல்வி என்று சொல்கிறீர்களா என்ன?" என்று யமுனா கேட்கும் கேள்வி வேகமாக வந்து தாக்குகிறது.
"பின்ன, இது வெற்றியாக்கும்?"
"சந்தேகமில்லாமல், முதல் முதலில் உலகிலேயே பலாத்காரத்தில் மட்டும் நம்பிக்கை கொண்ட ஒரு கட்சி ஜனநாயக முறைத் தேர்தலில் பதவிக்கு வந்திருப்பது இந்த நாட்டில்தான். பல்வேறு இன மத மொழிக் கலப்புள்ள புதிய விடுதலை பெற்றதொரு நாடு என்பதை மனக் கண்ணில் நிறுத்திக் கொண்டு வெற்றியா தோல்வியா என்பதை நீங்கள் ஆராய்ச்சி செய்யுங்கள்!"
"அடேயப்பா! யமுனாவுக்கு எத்தனை ரோசம் வருகிறது. கட்சி மாறுவதும், அரசுகள் கவிழ்வதும், முட்டையடிப்பதும் ஜனநாயகத்தின் மாபெரும் வெற்றியானால் வைத்துக்கொள்..."
சுமதியின் குரலில் நகையின் இழை மாறவில்லை.
"அது, இத்தனை பெரிய ஒரு அமைப்பில் ஜனநாயக உரிமையினால் ஏற்பட்ட ஒரு வண்ணம். அதனால் ஜனநாயக உரிமை வெற்றியில்லை என்று எப்படிச் சொல்ல முடியும். குருடனாக இருந்த மகன் கண் பெற்றதால் நாள்தோறும் சினிமா பார்த்துக் கெட்டுப் போகிறான். அதனால் அவனுக்குக் கண் கிடைத்ததே தப்பு என்று ஒரு தாய் சொல்வாளா? அடங்கி ஒடுங்கிக் கிடந்த எல்லாச் சக்திகளும் ஆசைகளும் அந்தக் கண்களைப் பெற்றதனால் விழித்துக் கொண்டிருக்கின்றன. இதைச் சமாளிக்க வழிகாட்டி அழைத்துச் செல்ல நல்ல தலைவர்கள் வேண்டும்."
"அதைச் சொல்லுங்கள் ஒப்புக் கொள்கிறேன்..."
"அதுசரி; அந்த நாட்களில் தலைவர்கள் தன்னலமற்ற தியாகத்தினாலும் நாட்டுப் பற்றினாலும் எளிய மக்களும் தரம் உயர வாழ வேண்டும் என்று மெய்வருந்தச் சேவை செய்ததினாலும் உருவானவர்கள். இந்நாட்களிலோ கூட்டங்களாலும் கோஷங்களாலும் பூமாலைகளாலும் பத்திரிகைகளாலும் உருவாக்கப்படுகிறார்கள். உண்மையான தியாகிகளுக்கும் தொண்டர்களுக்குங் கூட இந்நாட்களில் இந்த விளம்பரங்கள் இல்லையேல் எடுபடவில்லை. இதனால் கையில் பணமுள்ளவன் மற்றவர்களை விலைக்கு வாங்கிச் சாதித்துக் கொள்கிறான். மிருக வலிமை கொண்டவன் பணக்காரனை வெருட்டி மிரட்டி வன்முறையில் அவனை விலைக்கு வாங்குகிறான்..."
"இது ஏன் இப்படி ஆயிற்று?"
"என்னைக் கேட்டால் நான் என்ன சொல்லட்டும்? நான் தலையுமில்லை; பணமும் கிடையாது. இந்தக் கால இளைஞரின் ஆர்வத்தைத் தூண்டிவிடும் சாமர்த்தியமுமில்லாத பத்தாம் பசலி..."
"ஏனிப்படி அலுத்துக் கொள்கிறீர்கள்? நீங்கள் அடுத்த முறை தேர்தலுக்கு நிற்கையில் நான் பிரசாரம் செய்ய வரேன் பாருங்க; போஸ்டர் போடணும் - அதில் தான் வெற்றியே அடங்கிக் கிடக்கு; என்ன சொல்றீங்க யமுனா?" என்று கேட்கிறான் துரை.
யமுனா வரிவரியாகக் காய்ந்து கிடக்கும் விளைநிலச் சரிவுகளைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். முகத்திலே உற்சாக மலர்ச்சிக்கு மாறாகத் தீவிரம் குடி கொண்டிருக்கிறது.
------------