அத்தியாயம் 1

121.5k படித்தவர்கள்
17 கருத்துகள்

சிவப்பிரகாசத்துக்கு முழங்கை வரையில் கேழ்வரகுக் கூழ் பரவியிருந்தது. மொண்டு மொண்டு ஊற்றுகிற வேகத்தில் முகத்தில்கூட நாலைந்து பெரிய துளிகள் தெறித்தன. புருவத்தில் தெறித்த பெரிய துளியை இடக்கையால் துடைத்திருக்க, விபூதி கோடு மாதிரி ஒற்றையாய்க் காது வரை பரவியிருந்தது.

“அப்படியே போட்டேனா மூஞ்சி மேல. போ அண்ணாண்ட.”

நாற்பது வயசுப் பெண்பிள்ளையை நெட்டித் தள்ளிவிட்டு அடுத்த ஆளுக்குக் கூழ் ஊற்றினான். புருஷன் படுகிற அவஸ்தையை இருபது அடி தொலைவிலிருந்து புவனேஸ்வரி எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். நாலு பேர் துணைக்கு நின்று வரிசையாக்கியும் ஜனம் கட்டுப்படவில்லை. கடைசிச் சொட்டு வழித்துக் கொடுக்கிற வரையில் கட்டுப்பட மாட்டார்கள். இடுப்பு உயர அண்டாவை எட்டி எட்டிப் பார்த்துவிட்டுப் போவார்கள்.

“இந்தத் தடவ கூழு குறைச்சிட்ட போ. பாதி வூட்டுக்கு எடுத்துகினு போய்ட்டியா, காலைலேர்ந்து ஊத்தப்போற... ஊத்தப்போற... போறேன்னு நிக்கறேன். ராவூண்டுகூடக் கிடைக்கல. வாங்கின பொம்பளையே நாலு தடவ வாங்கினா... யார் கேட்கறது? பின்னால நிக்கற ஜனத்துக்கு ஊத்தவேயில்லை.”

கோபமாய்ப் பொருமிவிட்டுப் போவார்கள்.

“நாயக்கரம்மா எதுனா எடுத்து வச்சிருந்தா ஒரு சொம்பு ஊத்தேன்.”

நாலு பெண்பிள்ளைகள் சுற்றிச் சுற்றி வருவார்கள். கூட்டம் கலைந்த பிறகு உண்மையாகவே கிடைக்கவில்லை என்று சொல்பவர்களுக்குத் தனியே ஒரு தவலை கூடை போட்டு மூடியிருக்கிறது. பாதித் தவலை ஊற்றிவிட்டு மீதியை உறவுக்காரர்கள் சிலருக்கு அனுப்பிய பிறகு, ஒரு சொம்போ அரைச் சொம்போ மிஞ்சும். அதுதான் இன்று பகல் ஆகாரம்.

சிவப்பிரகாசம் திணறிக்கொண்டிருந்தான். நாலா பக்கமும் நீட்டின பாத்திரத்தில் ஒன்று நொச்சென்று முகத்தில் இடிக்க, ஒரு கணம் நெற்றியில் கை வைத்து அழுத்திக்கொண்டு, இடித்த பாத்திரத்துக்கு முதலில் ஊற்றிப் பின்னுக்குத் தள்ளினான். நெற்றியில் நல்ல இடி போலிருக்கிறது. பொத்திக் கொண்டு இடது கை எடுக்காமல் மொண்டு மொண்டு நீட்டின பாத்திரங்களில் எல்லாம் கூழ் நிரப்பினான்.

புவனாவின் காலின் கீழ் ஒரு நோஞ்சான் குழந்தை இடுப்புத் துணியில்லாமல் வெறும் சட்டையுடன் நின்று பாத்திரம் நீட்டி கெஞ்சிற்று. இடது கையில் பாத்திரத்தோடு நீல நிற பிளாஸ்டிக் ஸ்பூன் வைத்துக்கொண்டிருந்தது. எவள் பெத்ததோ? நெஞ்சுக்கூடு இறுகி மூக்கில் சளி ஒழுகி, கண்களில் உயிர் வைத்துக் கொண்டிருக்கிறது.

“தரேன்... தரேன்... அங்க போய் நில்லு.”

சொன்னது புரியவில்லையா அல்லது சொல்வதைக் கேட்க விரும்பவில்லையா? மறுபடி பாத்திரம் ஏந்திக் கெஞ்சிற்று.

“போ அப்பால.” புவனா விரட்டினாள். இதுக்கு முதல்ல ஒரு குவளை ஊற்றி அனுப்ப வேண்டும் என்று மனசுக்குள் குறித்துக்கொண்டாள்.

கைப் பாத்திரம் லொட்டென்று அண்டாவுக்கு அடியில் படும் ஓசை கேட்டது. இன்னும் ஐந்து நிமிடத்தில் முடிந்துவிடும். உடம்பு முழுக்கக் கூழும் வியர்வையும் ஒட்டி, புருஷன் அருகே வந்து, “போகலாமா புவனு?” என்று கேட்க, கிளம்பிவிடலாம். அடிச் சத்தம் கூட்டத்துக்கும் கேட்டுவிட்டது போலும். மேலும் இறக்கி பாத்திரம் சூழ்ந்தது.

“போங்க… அப்பால போங்க. கூழ் ஊத்த முடியாது போங்க.” இடது வலதாய்க் கூட்டம் தள்ளி, பிரகாசம் கால் அகட்டி நின்றான்.

“என்ன ஜனம்… என்ன ஜனம், ஆம்பளையாலையே முடியலையே. நீ என்னா கதி ஆயிருப்பே? நாயக்கரை இட்டா, நாயக்கரை இட்டான்னு தலைப்பாடா நான் சொல்றது இதுக்குத்தான்.”

முத்துலட்சுமி புடவை தூசு தட்டி எழுந்து நின்றுகொண்டாள். தனியே வைத்திருந்த தவலையிலிருந்து முத்துலட்சுமிக்கு இரண்டு சொம்பு கூழாவது கொடுக்க வேண்டும். கூழ் கிளறினதே முத்துலட்சுமியும் அவள் வீட்டுக்காரன் அழகிரியும்தான்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“நீ விடு நாயக்கரே.” அழகிரி அப்படியே அண்டாவைப் பற்றிக் கொண்டு தெருவுக்கு எதிர்ப்பக்கம் போனான். நடைபாதையில் ஏறி அண்டாவை வைத்துவிட்டு வழிமறித்துக்கொண்டான்.

“வரிசையா நின்னா கூழு. இல்லேன்னா இல்லை.” கூட்டம் திசை மாறிற்று. சிவப்பிரகாசத்தை விட்டுவிட்டு அண்டாவைச் சுற்றிக் கொண்டது. சட்டென்று பாட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு புருஷனை நோக்கி புவனா ஓடினாள்.

“இந்தாங்க” என்று நீட்டினாள். இடக்கையால் அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டு நிற்க, அவன் தோள் துண்டு எடுத்து வலக்கையைத் துடைத்தாள். “அழகிரிகிட்ட சொம்பு கொடுத்துவிட்டு வாங்க.”

“இல்ல புவனா, கூட்டம் அண்டாவைக் கவிழ்த்துடும். அடில இன்னும் அரைத் தவலை கூழு இருக்கு.”

“அழகிரி, இந்தா சொம்பப் பிடி.”

அவனிடம் தூக்கிப் போட்டு கூட்டத்தைத் தள்ளி ஒழுங்குபடுத்தி அண்டாவிலிருந்து பையன்களை அப்புறப்படுத்தி ஒவ்வொரு ஆளாய் சிவப்பிரகாசம் விட, ஒருமாதிரி அமைதியாயிற்று. புவனா மறுபடி தன்னிடத்துக்கு வந்தாள். காலருகே எதுவோ பிறாண்டுவது போலிருந்தது. அந்த நோஞ்சான் பிள்ளை கையிலுள்ள பாத்திரத்தால் முழங்கால் வருடிற்று.

“இருடா, இருடா.” அப்படியே அவனை வாரி அழகிரி எதிரே நிறுத்தி, “இந்தப் பாத்திரத்துல ஊத்து” என்று கட்டளையிட, அழகிரி அண்டாவை சரித்து ஒரு சொம்பு வாரி தூக்கின குழந்தையின் பாத்திரத்தில் ஊற்றினான். 

பிடித்த பிடி விடாது குலுங்கலுடன் கீழிறங்கும்போது கூழ் கனம் தாங்காது தடேரென்று நாலடி உயரத்திலிருந்து அந்த நோஞ்சான், பாத்திரத்தைப் போட்டது. நீல பிளாஸ்டிக் ஸ்பூனை மட்டும் விடாது பிடித்துக் கொண்டிருந்தது. தலை முழுக்க கூழ் சிந்த, தெருநாய்கள் சீறியபடி கூழுக்கு ஓடிவந்தன. நக்கித் தின்றன.

“போடா, ஒரு துளிகூட சிந்தாத எல்லாருக்கும் கொடுக்கணும்னு நினைச்சேன். இப்படிப் போட்டுட்டியே.”

பிள்ளையை முன்னால் அனுப்பி கூழ் கேட்டிருப்பாள் போலிருக்கிறது. தாயார்க்காரி பேய் மாதிரி ஓடிவந்தாள். தரையில் நின்று முழித்துக் கொண்டிருந்த பிள்ளையின் முடி பிடித்து மடக்கி முதுகில் ‘பளீர் பளீ’ரென்று அறைந்தாள். அது வலியில் துடித்தது. பிரண்டு தவித்தது.

“ஐயோ, அடிக்காதம்மா, அடிக்காதே.” புவனா தடுத்தாள்.

“அடிக்காத என்னா பண்றது? சட்டி கூழு தரைல போட்டிருச்சே. தரித்திரம், இது பிறந்த நாளைலேர்ந்து விடியாத போயுருச்சு எனக்கு.”

‘விடியாத’ என்கிறபோது ‘நச்’சென்று ஒரு குட்டு, குழந்தையின் தலையில் விழுந்தது. பிள்ளை தலை பொத்தி குனிந்து கதறிற்று. உச்சி மண்டை வலிக்க அழுத அந்தக் குழந்தையைப் பிடித்து புவனா இழுத்துக்கொண்டாள்.

“பச்சைப் புள்ளையை அடிக்காதம்மா. கூழுதானே… நான் தரேன்.”

சிவப்பிரகாசம் அங்கிருந்து திரும்பிப் பார்ப்பது புவனாவுக்குத் தெரிந்தது. என்ன எவளாவது உன்னை முறைக்கிறாளா என்கிற ரீதியில் திரும்பிப் பார்த்தான். அண்டா சரித்து கடைசிக் குவளை கூழ் ஊற்றினான். கூழ் ஊற்றிய புது அலுமினியக் குவளையைத் தலை சுற்றி தெருவில் வீசினான், அதை எடுக்க பத்து பேர் பாய்ந்தார்கள்.

“என்ன புவனா, போலாமா?”

“போலாங்க, இந்தப் புள்ளைக்கு ஒரு சொம்பு ஊத்தணும். கீழக் கொட்டிட்டான்.”

“இரண்டு நிமிஷம் இரு. கூட்டம் போய்டட்டும்.”

கூட்டம் அண்டாவை எட்டிப் பார்த்துவிட்டுக் கலைந்து கொண்டிருந்தது. வழக்கம்போல் நாலைந்து பெண்கள் காலிப் பாத்திரத்தோடு, ‘எதுனா இருக்கும் ஊத்துவாங்க’ என்கிற நம்பிக்கையோடு அருகே நின்றார்கள்.

“இதுக்கு மட்டும் நானில்லாத வராதே புவனா. உன்னைக் கூட்டம் மிதிச்சுப் போட்டுரும்.”

“நான் சொன்னேனே அம்மாகிட்ட, நாயக்கர் வராத நீ மூடி திறக்காத. ஒரு சொம்புகூட எடுத்து ஊத்தாதேன்னுட்டேனே. இறக்கி காலவரு ஆச்சு. உன்னியக் காணோம். கூட்டம் ஊத்து ஊத்துனுது… நல்லவேளை வந்தீங்க.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“போன இடத்துல நேரமாயிடுச்சு. லொட்டுன்னு இடிச்சுட்டாம்பார்.” சிவப்பிரகாசம் அருகே வந்து நெற்றியைக் காட்டினான். சிவந்திருந்தது.

“அப்படியே கோயில் மஞ்சா எடுத்து அப்பு. சரியாயிடும்.”

“கொஞ்சம் விட்டா கண்ணுல பட்டிருக்கும். எப்ப கூழு ஊத்து, எத்தினி கூழு ஊத்து… இந்தப் பேட்டை ஜனங்களுக்குப் போதும் என்றதே கிடையாது. பொம்பளைங்க இடிக்கறாங்க பாத்திரத்தாலேயே.” அழகிரி அலுத்துக்கொண்டான்.

“கண்ணு போயிருந்தா என்னா கதி?” கொஞ்சம் இடைவெளிவிட்டு முணுமுணுத்தான்.

“அதெல்லாம் ஒண்ணும் போவாது. ஆத்தாளுக்கு செய்யறவங்க யாருக்கும் எந்தக் குறையும் வராது.”

முத்துலட்சுமி கூடை வைத்து மூடியிருந்த தட்டிலிருந்து மஞ்சள் கலவையை எடுத்து புவனாவிடம் நீட்டினாள். புவனா அப்படியே புருஷன் நெற்றியில் அப்பி விரலால் தடவினாள்.

“புருஷனும் பொண்டாட்டியும் ஒரு கும்புடு கன்னத்தில் போட்டுக்கிட்டுக் கிளம்புங்க. வூடு போய்ச் சேரலாம்.”

கூட்டம் சுத்தமாய்க் கலைந்துவிட, எதிரே காத்திருந்த நாலைந்து பெண்களுக்குத் தவலையிலிருந்து மொண்டு நாலு சொம்பு கூழ் ஊற்ற, அடிவாங்கின அந்தக் குழந்தையும் பாத்திரம் நீட்டிற்று. பாத்திரத்தை இறுகப் பிடிக்கச் சொல்லி புவனா வழிய வழிய ஊற்றினாள்.

பிள்ளை தடுமாற, “மறுபடி விட்டுறப்போற” என்று கத்தினாள். பெற்றவள் பாத்திரம் வாங்கி பிள்ளையை இடுக்கிக்கொண்டு போனதும், புருஷனும் மனைவியும் சந்நிதிக்குப் போய் விழுந்து வணங்கினார்கள். முத்துலட்சுமி தவலையைத் தூக்கிக்கொள்ள, கூடைகளை அழகிரி எடுத்துக்கொள்ள, கார் நோக்கி நடந்தார்கள். 

“என்னா சிவப்பிரகாசம், கூழ் ஊத்தினியா?” யாரோ வெள்ளைச் சட்டை ஆள் எதிரே வந்தபடி கேட்டார்.

“ஆமாங்க. கடைசி வெள்ளி, வழக்கமா செய்யறது.”

“எதிர சொல்லிக்கிட்டுப் போனாங்க. நாயக்கர் கூழு அரைத் தவலை தூக்கி நடக்க முடியாதுன்னாங்க.”

“ஏதோ நம்மால முடிஞ்சது.”

“செய், நல்லா செய். சும்மா பேருக்குக் கூழுன்னு கரைக்காத, நாலு பேருக்கு ஊத்திட்டு அவ்வளவுதான்னு சொல்லாத, நூறு ஜனம் சந்தோஷமா சாப்பிடற மாதிரிதான் செய்யணும். வரட்டா?”

முத்துலட்சுமியும் அழகிரியும் கூழ் தவலையுடன் பின்னால் உட்கார, கதவு சாத்தினாள்.

- தொடரும்