அத்தியாயம் 1

14.22k படித்தவர்கள்
12 கருத்துகள்

ம்மா

இந்தப் பக்கத்தை, அம்மாவைப் பற்றி ஒரு சம்பவத்தில் ஆரம்பிக்கத் தகும். அப்போது அம்மாதான் குடித்தனத்தைக் கவனித்துக்கொண்டிருந்தாள். சம்பளத்தைக் கொடுத்துவிடுவேன். என் கைச்செலவுக்கே அம்மாதான் தருவாள். நிம்மதி. விட்டதையா பொறுப்பு. கடை கண்ணி, மார்க்கெட், வெளிவேலை, பால் கணக்கு, கொடுக்கல் வாங்கல் எந்த ஜோலியும் எனக்கு இல்லை.

ஆனால், மாதா மாதம் அம்மா கணக்குப் புத்தகத்துடன் என்னிடம் வருவாள். கைகூப்பிவிடுவேன்.

“அம்மா, எதுவும் எனக்கு வேண்டாம். உன்னிடம்தான் கொடுத்தாச்சே!"

“அப்படியில்லேடா. என்னிடம் ஒப்படைச்சிருக்கே. என்ன போச்சு, வந்தது, உனக்கே தெரிய வேண்டாமா? ஆற்றில் போட்டாலும்..."

“சரிதாம்மா, ஆளை விடு. வேளா வேளைக்கு எனக்கு கலத்தில் சோறு விழறதா, அதோடு நான் சரி. ஒரு பத்து நிமிஷம் முன்னாலே என்னை விரட்டி, அந்த 9-15ஐ நான் பிடிக்கிற மாதிரி பாரேன்.”

அம்மா பண்ணாத நிர்வாகமா! நாங்கள் குழந்தைகளாக இருந்த நாளிலிருந்தே, அப்பாவுக்கு முப்பது ரூபா சம்பளத்தில்...

அப்படியும் ஒருமுறை அம்மா கணக்குப் புத்தகத்துடன் வந்தாள். அவசரமா ஆபீஸுக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். எப்படியும் அந்த 9-15ஐ என்னால் பிடிக்க முடியாது. நான் கேட்டபடி அம்மா என்னைத் தயார்ப்படுத்தினாலும் என்றுமே நான் 9-15ஐப் பிடித்ததில்லை.

நான் கை கூப்பினேன்.

-"இல்லை, நீ பார்த்துத்தான் ஆகணும். இந்த மாசம் பெரிய துண்டா விழும்போல இருக்கு. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் இருக்கும்போல இருக்கு. எனக்கே புரியலை. என் கூட்டல் கழித்தல் சரியா பாரேன்.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

"அதுக்கெல்லாம் எனக்கெங்கேம்மா டைம்… எவ்வளவு துண்டு விழறது?"

“போன மாசம் அப்பா தெவசம் வந்ததா? அப்புறம் குணசீலம் போனோமா...”

"அம்மா, அதெல்லாம் எனக்கு வேண்டாம். எவ்வளவு குறையறது?"

“ஒரு நூறு ரூபாய்.”

"நூறு ரூபாய்!” அதிர்ச்சியில் என் குரல் கோணிக்கொண்டது. முப்பது வருடங்களுக்கு முன்னால் நூறு ரூபாய் எவ்வளவு பெரிய தொகை, புரட்டுவது எத்தனை கடினம் என்று இந்நாளவர்க்கு எங்கே புரியப்போகிறது! ஆத்திரத்தில் அம்மா கையிலிருந்து நோட்டைப் பிடுங்கிக்கொண்டேன்.

"அம்மா, நீ பொய் சொல்றே!"

இந்த வாக்கியம் எப்படி என் வாயிலிருந்து வந்தது, இந்த ரூபத்தில் ஏன் வரணும்? இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். இன்னமும் பதில் கிடைக்கவில்லை. உள்ளே மலம்-உடம்பு என்கிற சாக்கில் மனத்திலா மனம் என்ற சாக்கில் உடம்பிலா? எவ்வளவு ஓடிக்கொண்டிருக்கிறது என்பதற்குச் சான்று என்பது தவிர வேறு தெரியவில்லை.

"பொய் சொல்றேனா?” அம்மா ஓர் அடி பின்னடைந்தாள். அவள் பேச்சு 'திக்'கென்ற மூச்சில் தொத்திக்கொண்டு வந்தது.

“பொய் சொல்றேனா?"

“பொய் சொல்றேனா?”

மடேரென விழுந்துவிட்டாள்.

நான் வெலவெலத்துப்போனேன். "அம்மா! அம்மா!” அம்மா தலையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டேன். பேச்சு மூச்சுக் காணோம்.

"அம்மா! அம்மா!”

என் அலறல் கேட்டு மற்றவர்கள் ஓடி வந்தனர். யாரோ அம்மா முகத்தில் ஜலம் தெளித்து முகத்தை ஒற்றி விசிறியால் விசிறி-

கண்கள் மெல்ல மலர்ந்தன.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“எங்கே இருக்கேன்?” எழ முயன்றாள். என் கையைத் தள்ளி எழுந்து உட்கார்ந்தாள். “என்ன ஆச்சு?"

“என்னவோ உளறிட்டேன் அம்மா. அம்மா, என்னை மன்னிச்சுடு."

“ஓ! ஓ! ஓஹோ!" மூழ்குபவன் பிடியில் அவள் கைகள் என்னைப் பற்றின. “ராமாமிருதம், என்ன சொன்னாலும் அந்த ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லாதே. என்னைச் சொல்லாதே!”

“பரதனுக்கு முடி சூட்டிக்கொள். ஆனால் அந்த மற்ற வரம்-

அது மாத்திரம் வேண்டாம்.

சக்ரவர்த்தியின் தேம்பல் என் உட்செவி நரம்பில் அதிர்கிறது.

நடப்பதேதான் திரும்பத் திரும்ப நடந்துகொண்டிருக்கிறது.

ஓடுகிற தண்ணீர்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

பிராயச்சித்தத்தைத் தேடி, சிந்தா நதியில் இன்னமும் குளித்துக்கொண்டிருக்கிறேன்.

(தொடரும்...)