அத்தியாயம் 1

9,246 படித்தவர்கள்
6 கருத்துகள்

பாகம் 1

காதல்

அவள்
அந்த சிவப்பு சீலை அவளுக்கு அழகாக இருந்தது, அவளை வர்ணிக்க வார்த்தைகள் பற்றவில்லை எனக்கு,நான் தினமும் டீக்கடையில் சிகரெட்டை பற்ற வைக்கும் நேரத்தில் அவளை பார்ப்பேன், குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டு, கையில் ஹாண்ட் பேக் மாட்டிக்கொண்டு, காலில் சாதாரண செருப்பு அணிந்துக்கொண்டு நின்றுக்கொண்டிருக்கும் என்னை தாண்டி போவாள், ஒரு நாளாவது என்னை பார்க்க மாட்டாளா என்று என் மனம் ஏங்கும், நானும் அவள் என்னை கடந்து சென்ற கொஞ்ச நேரத்தில் என் சிகரெட்டை அணைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவேன். ஆனால் இன்று நான் அதை செய்ய போவதில்லை, அவளை பின் தொடர போகிறேன், அவள் பெயரையாவது கேட்க வேண்டும் என்று முடிவு செய்து அவளை தொடர்ந்தேன் அந்த இரவு நேரத்தில்.

என் பெயர் ஜெகன், மற்ற அனைத்தையும் பிறகு கூறுகிறேன், இப்போது எனக்கு நேரமில்லை, அவளை பின் தொடர வேண்டும். அவளை நான் பின் தொடர்வது அவளுக்கு தெரிந்துவிட்டது போலும், ஓரிடத்தில் நின்றாள். என்னை நோக்கி திரும்பி என் அருகில் வந்தாள். அந்த தெருவில் மங்கி போனது போல் ஒரு தெரு விளக்கு வெளிச்சம் அவள் முகத்தில் விழுந்தது. விழுந்தது தெரு விளக்கு வெளிச்சம் மட்டுமல்ல ஜெகனின் இதயமும் தான். ஜெகன் அருகில் வந்தவள், அவன் சட்டை மேல் கை வைத்து பாக்கெட்டில் இருந்த சிகரெட் டப்பாவை எடுத்து, அதிலிருந்த ஒரு சிகரெட்டை தன் வாயில் வைத்து, தீப்பெட்டி இருக்கா என்று சைகை செய்து கேட்டாள்

ஜெகனிற்கு அனைத்தும் மிக வினோதமாக இருந்தது, தன் பாண்ட் பாக்கெட்டில் இருந்த லைட்டரை எடுத்து அவனே பற்ற வைத்தான்.

அவள் புகை விடுவதை பார்த்தவனுக்கு, ஆச்சரியம் தாளவில்லை.

அவள் புகைத்துக்கொண்டே கேட்டாள் “ஒய் ஆர் யூ ஃபாலோவிங் மீ”

ஜெகனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, திரு திருவென முழித்தான்

அவள் தொடர்ந்தாள் “நீதானே அந்த டீக்கடையில் நின்றுக்கொண்டு நான் செல்லும் போது என்னை வெறித்து பார்த்துக்கொண்டே இருப்பே, உன் பெயர் என்ன”

அவள் தன்னை கவனித்திருக்கிறாள் என்பது ஜெகனுக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தது “என் பெயர் ஜெகன்”

“ஓல்டு நேம், என் பெயர் என்ன தெரியுமா” என்று தன் கண்களை உருட்டிக்கொண்டே கேட்டாள்

“தெரியலையே”

“மாதுரி”

“தேவி”

“ரோஜா”

“மாதவி”

“ராதா”

என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயர் அந்தந்த ஆண்களின் ஆசைக்கு ஏற்ப, உனக்கு என்ன பெயர் வேண்டும் என்று தோன்றுகிறதோ அழைத்துக்கொள், பெயர் நன்றாக இல்லையென்றால் கொஞ்சம் அதிகம் காசு வாங்குவேன் அவ்வளவுதான்

ஜெகன் ஸ்தம்பித்து போனான், வாய் குளறியது “என்ன சொல்றீங்க, புரியலை”

அவள்
“உன் வயது என்ன ஜெகன்” என்று அவள் கேட்டாள்.

“இருபத்தி நான்கு”

“உனக்கு அனுபவம் பற்றவில்லை, சரி இதுவரைக்கும் ஏதாவது பெண்ணோடு இருந்துருக்கியா”

“இல்லை”

அவள் சிரித்தாள், அவளுடைய கோர்வையான பல் வரிசை அவளது அழகை அதிகப்படுத்தியது

சிரித்து முடித்தவள் “என்னோடு வருகிறாயா” என்று கேட்டாள்.

அவள் இவ்வளவு நேரத்தில் அந்த சிகரெட்டை புகைத்து முடித்து விட்டிருந்தாள்.

அவன் மனதில் புரியாத எண்ணங்கள் ஓட தொடங்கியது, சில நொடிகள் காத்திருந்தவள் கூறினாள் “சரி விடு, உன்னை பார்த்தா நல்ல பையன் மாதிரி தெரியுது, போ”

ஜெகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, அவள் நடக்க தொடங்கினாள்

ஜெகன் மெதுவாக தன் அறையை நோக்கி நடந்தான்

ஜெகனை பற்றி கூற வேண்டுமானால், ஒரு பெரிய கம்பெனியில் ஜூனியர் அக்கௌண்டண்ட் வேலை பார்க்கிறான். சம்பளம், மூன்று வேளை மட்டும் சோறு சாப்பிடும் அளவு வாங்குகிறான். தினமும் கடன் வாங்கியாவது சிகரெட் பிடிக்க வேண்டும். சிகரெட் மேல் அளவு கடந்த அன்பு ஜெகனுக்கு.

கடந்த ஒரு வருடமாக அவன் மட்டுமே அந்த அறையில் வாழ்கிறான், அவனுடைய நண்பர்களுக்கு வெவ்வெறு இடங்களில் வேலை கிடைத்ததால், அவனுடன் இருந்தவர்கள் இப்போது இல்லை, தனிமை தான் அவனுடன் இப்போது குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறது

அன்று இரவு அவனுக்கு உறக்கம் வரவில்லை, அவளுடைய அழகிய முகம், பேச்சு, தன்மை அனைத்தும் கண்முன் வந்து வந்து போனது.

அவன் எண்ண ஓட்டங்கள் மிக வேகமாக இயங்கின. தன் அருகில் இருந்த புத்தகம் ஒன்றை எடுத்து படிக்க தொடங்கினான். அதனின் தலைப்பு “விலை ராணி”, ஆசிரியர் சாண்டில்யன்.

அடுத்தநாள் எப்போதும் போல் அந்த இஞ்ஜின் வாழ்க்கையை முடித்து விட்டு, அதே டீக்கடை, அதே சிகரெட், அதே நேரம், அதே அவள், ஆனால் இன்று கருப்பு சேலையில்

அவள் முன் வேகமாக சென்று, அவளை வழிமறித்தான்

அவள் என்ன என்பது போல் தன் புருவங்களை உயர்த்தி கேட்டாள்.

அவன் வாயில் சிகரெட் இருந்தது. அவன் பேசும் போது சிகரெட்டு ஆடியது

“ஒரு நாள் இரவுக்கு உன் ரேட் என்ன” என்று கேட்டான்

அந்த சிகரெட் அவன் பேசும் போது, தவறி அவனது காலில் விழுந்து சுட்டது.

“ஐயோ சுட்டுடுச்சு” என்று தன் இடது காலை தூக்கிக்கொண்டு கத்தினான் ஜெகன்

அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

சிரித்து முடித்தவள் கூறினாள் “ஒரு சிகரெட் கூட ஒலுங்கா பிடிக்க தெரியலை, என்னோட ரேட் கேட்க வந்துட்டான், போயா”

“உன் ரேட் மட்டும் சொல்லு”

அவள் அவன் அருகில் நடந்து வந்தாள். இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளி குறைந்தது. ஜெகனின் இதயம் மூன்று மடங்கு வேகமாக துடிக்க தொடங்கியது

அவள் அவனுடைய காதுகளுக்கு அருகில் வந்து எதோ கூறினாள்.

அவள் கூறியதை கேட்ட ஜெகன் “என்னிடம் காசு இருக்கு, வா என்னுடன்” என்றான்

அவள் முகம் வெளிறி போனது.

சில நொடிகள் ஜெகனின் முகத்தை உற்று கவனித்துவிட்டு கூறினாள் “சரி போகலாம்”

அவன் பின்னால் அவள் நடக்க தொடங்கிய அந்த நொடி, ஒரு பைக்காரன் வேகமாக வந்து ஜெகனின் மேல் மோதி இருப்பான்.

நல்ல வேளை பைக்கின் போக்கை கவனித்து வந்த அவள், ஜெகனை வேகமாக நகர்த்தி விட்டாள்

பைக்காரன் அதே வேகத்தில் இருவரையும் கடந்து சென்றான்

ஜெகன் அவளை ஆச்சரியமாக பார்க்க, அவள் கையை கட்டி நின்று வானத்தை நோட்டமிட்டுக்கொண்டிருந்தாள்

ஜெகன் அவளிடம் கேட்டான் “காஃபி குடிக்க போலாமா” என்று

அவள் வானத்திலிருந்து கண்களை ஜெகன் பக்கம் நோக்கி “எதிர்ப்பார்த்தேன், போலாம்” என்றாள்

காஃபி மட்டும் உட்கார்ந்து குடிக்கலாம் என்பது போல் இருந்த அந்த கடைக்குள் நுழைந்தார்கள் இருவரும்

மூலையில் இருந்த ஒரு டேபிளுக்கு சென்று எதிர் எதிராக உட்கார்ந்தனர்

அவளுடைய அழகை கண்டு வியந்துக்கொண்டிருந்தான் ஜெகன்.

“என்ன அக்கா வேண்டும்” என்று ஒரு சிறுவன் டேபிளை துடைத்துக்கொண்டே கேட்டான்

“எனக்கு காஃபி” என்றாள்

“ஸார் உங்களுக்கு” என்று கேட்டான் சிறுவன்.

“எனக்கு டீ” என்றான் ஜெகன்

அந்த சிறுவன் சென்றதும் ஜெகன் அவளை பார்த்து கேட்டான் “ஏன் இந்த தொழிலில் இருக்க”

அவள் அவனை இளக்காரமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, உட்கார்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழ தொடங்கினாள்.

அவள் எழுவதை பார்த்த ஜெகன் “என்னாச்சு”

“நான் என்ன பண்ணுனா உனக்கென்ன, வந்தியா காசு கொடுத்தியா, வேலை நடந்துச்சா அவ்வளவுதான், தத்துவம்லாம் பேசி டைம் வேஸ்ட் பண்ணாத”

“சரி சரி உட்காரு, காஃபி குடிச்சுட்டு என் ரூமுக்கு போலாம்”

இருவரும் மௌனமாக காஃபி டீ குடித்தனர்

கடையை விட்டு வெளியே வந்த ஜெகன், தன் அறையை நோக்கி நடக்க தொடங்கினான்

அவளும் பின் தொடர்ந்தாள்

ஜெகனின் அறை மொட்டை மாடியில் ஒற்றை அறை, யாருமில்லாத அந்த வீட்டில் இருக்கும் மொட்டை மாடியில் தன்னுடைய அறைக்கு அவளை அழைத்து சென்றான்

உள்ளே இருவரும் நுழைந்தனர், நுழைந்தவுடன் கதவை பூட்டினான். சாவியை கடிகாரம் அருகில் இருந்த ஆணியில் மாட்டினான். அவள் அங்கிருந்த படுக்கையில் சென்று உட்கார்ந்துக்கொள்ள, அந்த ரூமிலிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான் ஜெகன்.

அப்போது மணி இரவு பத்து என்று அந்த ரூமிலிருந்த கடிகாரம் சத்தம் போட்டது

சில நொடிகள் அந்த அறையில் மௌனம் மட்டுமே குடிக்கொண்டிருந்தது

மௌனத்தை கலைக்கும் வண்ணமாக ஜெகன் கேட்டான் “உனக்கு பசிக்குதா, ஏதாவது சாப்பிடுகிறாயா”

அவள் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு “நீ எதுக்கு என்ன கூப்பிட்டன்னு மறந்துட்டியா” என்று கேட்டாள்

ஜெகனின் முகம் பல மாதிரியான எண்ணங்களை பிரதிபலித்தன.

ஜெகனின் குரல் திடமாக ஒலித்தது “உனக்கு பிடிச்ச வேலையை நீ செய், இனிமே நீ இந்த அறையிலேயே என் கூடவே இருக்கியா”

அவள் கோபமாக படுக்கையில் இருந்து எழுந்தாள், ஆணியில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு அறையில் கதவை திறந்தாள்

அவள் கதவை திறக்கும் அதே நேரத்தில், ஜெகன் கூறினான் “யோசிக்க நேரம் எடுத்துக்கோ, நாளைக்கு இதே நேரம், உனக்காக இந்த அறை கதவு திறந்திருக்கும்”

கதவு அருகில் இரண்டு நொடிகள் நின்று ஆழமான பார்வை ஒன்றை ஜெகனின் மேல் பாய்த்துவிட்டு, அங்கிருந்து சென்றாள்


சிவப்பு நிற டைரி
 

மும்பை ஒரு மாபெரும் நகரம். இந்தியாவில் தலை நகரம் “தில்லி” என்றாலும், இந்தியாவை உண்மையிலேயே தனக்குள் வைத்திருக்கும் ஒரு நகரம் என்றால் அது பாம்பே தான். மும்பை பற்றி பேச நிறைய இருக்கிறது, இந்தியாவின் பெரிய ஸ்டாக் மார்க்கெட், இந்தியாவின் பெரிய சினிமா சந்தை, பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் எனக் கூறிக்கொண்டே போகலாம்.

கனவுகள் பல நிறைந்த “மகாராஷ்ட்ராவின் தலைநகரம் மும்பை”

அதேபோல் ஒரு கனவோடு, என் பதினைந்து வயதில் நான் மும்பை வந்த போது, எனக்கு எதுவுமே தெரியாது, என் வீட்டில் சண்டை போட்டுவிட்டு பெரியாளாக வேண்டும் என்று என் நண்பன் ஒருவனை நம்பி வீட்டிலிருந்த ஐம்பது பௌன் நகையை திருடிவிட்டு மும்பை வந்தேன்.

வந்த முதல் நாளே என் அருமை நண்பன் என் தங்கத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, ஒரு ரூபா கூட இல்லாமல் என்னை அந்த அரபி கடலோரம் அனாதை ஆக்கி விட்டு சென்றுவிட்டான்.

ஒரு நாள் தாக்குபிடித்தேன், இரண்டாம் நாள் பசியை அடக்க முடியவில்லை. நான் வேலை தேடினேன், ஆனால் ஒருவர் கூட எனக்குக் கொடுக்கவில்லை.

நான் உணவுக்காக கெஞ்சினேன், ஆனால் யாரும் கருணை காட்டவில்லை. அனைவரும் வேகமாக இருந்தனர். எல்லோரும் தங்கள் வேலையை மட்டுமே செய்ய விரும்பினர்.

இந்த உலகில் யாரும் எனக்கு இரக்கம்காட்ட மாட்டார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன்

திருடினேன்.

சாப்பிட்டேன்.

ரோட்டோரமாக சென்று படுத்து உறங்குவேன்.

சில மாதங்கள் இப்படி சென்றது. ஒரு நாள் திருடும் போது ஒருவனிடம் மாட்டிக்கொண்டேன். அவன் அடித்த அடி, இப்போதும் எனக்கு வலிக்கும். நல்லவேளை, அவன் என்னை அடித்ததோடு சரி, போலீஸில் மாட்டிவிடவில்லை. நல்ல மனிதர் என தோன்றும் எனக்கு.

ஒரு வருடம் ஓடிவிட்டது, வாழ்க்கையும் பழகிவிட்டது, என் நண்பனிடம் ஏமாந்ததால், நண்பர்களை நான் சேர்க்க முயற்சிக்கவில்லை.

வாழ்க்கை தினமும் இப்படியே சென்றது. திருடுவது, உண்ணுவது, உறங்குவது.

என் வாழ்க்கை மாற வாய்ப்பே இல்லை என்ற நிலைக்கு வந்தேன்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ஆனால் நானே எதிர்ப்பாராது,என் வாழ்க்கையும் மாறியது


சுரேந்திரன்
சென்னை.

நன்றாக விடிந்துவிட்டது.சூரியன் சுட்டெரிக்க தொடங்கிக்கொண்டிருந்தது.

அந்த ரயில் பெட்டியை சுற்றி பல வகையான மக்கள் நின்றுக்கொண்டிருந்தனர். சில போலீஸ்காரர்கள், சில பத்திரிக்கை நபர்கள், சில தடயவியல் நிபுணர்கள், இரண்டு மருத்துவர்கள் என ஒரே பரப்பரப்பாக இருந்தது.

“யாரு முதலில் பார்த்தது” என்று ஒரு போலீஸ்காரர் கேட்க.

ராமு தானாக முன்னே வந்து நடந்தது அனைத்தையும் ஒப்பித்தார். அவர் முகம் பயத்தில் வியர்த்து இருந்தது.

“ஐயா, தானாகவே இந்த ரயில் கதவுகள் சாத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளதா” என்று காவல் அதிகாரி கேட்க, சின்னய்யா முன்னே வந்து “இருக்கு சார், நிறைய முறை இந்த மாதிரி ஆகிருக்கு, பழைய கதவுகள் சார், இப்போவும் அப்படி தான் ஆகிருக்கு சார், எல்லா கதவுகளும் உள்ளே மூடி இருக்காங்க, ஆனால் இந்த கதவு மட்டும் தானாகவே மாட்டிருக்கு”

அனைத்தையும் கவனமாக கேட்ட போலீஸ்காரர் “சரி கிளம்புங்க, கூப்பிட்டால் சரியாக வர வேண்டும்”

அந்த போலீஸ்காரர், தன்னுடைய செல்போனை எடுத்து, கமிஷனருக்கு போன் செய்தார்.

இரண்டு ரிங்கிற்கு பின், போன் எடுக்கப்பட்டது.

“ஹெலோ சார், நான் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் பேசுரேன், ஸ்பாட்ல தான் இருக்கேன்”

“சொல்லுப்பா” என்று சர்வ சாந்தமான கமிஷ்னர் சிவகோபாலன் குரல் வெளிப்பட்டது

“ஸார், ரயில் பெங்களூரிலிருந்து வருது, கிட்டதட்ட ஆறு பேர் கொடூரமாக இறந்து போயிருக்கிறார்கள், முகம் முழுதாக குத்தி கிழிக்கப்பட்டிருக்கு, நம்ம மருத்துவர்கள் கணிப்புபடி, சரியா ஐந்து மணி நேரம் முன்பு சம்பவம் நடந்திருக்கு”

“அப்போ பெங்களூரிலிருந்து கிளம்பிய சில நேரத்தில் நடந்திருக்கனும்”

“ஆமா சார், அப்படி தான் தெரியுது”

“அப்போ நான் இப்போவே பெங்களூர் கமிஷ்னரிடம் பேசிடுறேன், நீங்க மிச்ச எல்லாத்தையும் பார்த்துவிட்டு என்னை பார்க்க வாங்க”

“ஓகே சார்” என்று போனை கட் செய்த சுரேந்திரன், பக்கத்தில் இருந்த ஒரு கடைக்கு சென்று ஒரு டீயை வாங்கி குடிக்க தொடங்கினான்.

சுரேந்திரன், வயது ஒரு முப்பது இருக்கும், ஆள் ஒரு ஆறு அடி இருப்பார், கருப்பு தேகம், சுருட்டை முடி, ஏழு வருடம் முன்பு போலீஸில் சேரும் போது பயங்கர ஃபிட்டாக இருந்தார். ஆனால் இப்போது அதெல்லாம் இல்லை. வேலையில் பெரிய அளவு திருப்தி இல்லை, குறைந்த சம்பளம், கிம்பளம் வாங்க மறுப்பவர், திருமணம் நடந்து ஐந்து வருடங்கள் ஆகிறது, காதல் திருமணம் தான். ஆனால் குழுந்தை இல்லை. இதுவே அவரது வாழ்க்கையில் பெரிய மனக்குமுறல்.

தன்னுடைய ஏழு வருட அனுபவத்தில் வகை வகையான கொலைகள் பார்த்திருந்தவருக்கு, இந்த கொலைகள் பெரிய ஆச்சரியத்தை தரவில்லை.

இருந்தாலும் ஒவ்வொரு முறையும் இம்மாதிரி சம்பங்கள் அவரை நிறையவே பாதிப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.

டீயை குடித்து கொண்டிருந்த சுரேந்திரனை, கான்ஸ்டபில் தங்கப்பன் வந்து கூப்பிட்டார் “சார், சீக்கிரம் வாங்க, ஒரு சின்ன சிக்கல்”

டீயை வைத்துவிட்டு,வெடுக்கென்று ரயில் பெட்டிக்குள் ஓடி சென்றார் சுரேந்திரன்.


அவள்
“அண்ணா ஒரு டீ, ஒரு மார்ல்போரா சிகரெட் கொடுங்க” என்று கேட்டான் ஜெகன்

அப்போது மாலை சூரியன் விழுந்துக்கொண்டிருந்தான்,வானம் இளஞ்சிவப்பாக காட்சியளிக்க, ஜெகன் மனத்தில் அவளது எண்ணங்கள் வேகமாக ஓட தொடங்க, ஒரு சிகரெட்டை வேகமாக புகைத்துவிட்டு, அடுத்த சிகரெட்டை வாங்கி பற்ற வைத்தான்.

ஜெகனுக்கு இந்த சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொஞ்ச நாளாக தான் இருக்கிறது, அவ்வப்போது கொஞ்சம் மதுவும் உண்டு, ஆனால் சிகரெட் மேல் அளவுக்கதிகமான காதல் ஏற்ப்பட்டுவிட்டது

எப்போதும் போல் சாப்பாடு வாங்கிக்கொண்டு தன் அறைக்கு சென்றான். கதவினை பூட்டினான்.

சாப்பிட்டு விட்டு கடிகாரத்தை பார்த்தான், பத்து மணி ஆக பத்து நிமிடமே இருந்தது. நேற்று அவளிடம் கூறியது அவனுக்கு ஞாபகம் வந்தது. உடனே பூட்டின கதவினை திறந்தான்.

கடிகாரம் பத்து என காட்டியது. கதவின் பக்கம் அவன் கண்கள் போயின. அவள் வருவாள் என்ற நம்பிக்கை அவன் உள் மனதில் எதிரொலித்துக்கொண்டு இருந்தது.

மணி பத்தரை ஆனது.

அவள் வரவில்லை.

மணி பதினொன்று ஆனது.

அவள் வரவில்லை.

மணி பன்னிரெண்டு ஆனது.

அவள் வரவில்லை.

ஜெகன் அந்த படுக்கையிலேயே தூங்கி விட்டான்.

மணி இரண்டு.

யாரோ கதவினை பூட்டும் சத்தம் கேட்க, ஜெகன் தூக்க கலக்கத்தில் மெதுவாக கண்களை திறந்தான்

சாவியை கடிகாரம் அருகில் இருந்த ஆணியில் அவள் மாட்டிக்கொண்டிருந்தாள், அதே சிவப்பு நிற சேலை அணிந்திருந்தாள்

ஜெகனால் தூக்கத்திலிருந்து வெளி வர முடியவில்லை, அவள் அவன் கால்களுக்கு அருகில் இருந்த ஒரு போர்வையை எடுத்தாள்

கனவு என்று நினைத்த ஜெகன் தூங்கி போனான்


ஜெகன் எப்போதும் சீக்கிரமாக எழுந்துவிடுவான், அன்றும் அதேபோல் எழுந்துவிட்டான், கனவு என்று நினைத்தது, உண்மையிலேயே நடந்துவிட்டது, ஆம் ஜெகனின் கட்டிலுக்கு அருகில் கீழே தரையில் அவள் உறங்கிக்கொண்டிருந்தாள். ஜெகனின் மனத்தில் இனம் புரியாத எண்ணங்கள் தொடங்கின. சில நொடிகள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், அவளுக்காக டீ போட்டுவிட்டு, அவளை எழுப்புவதற்கு பெயரை யோசித்தான். பின்பு அவளை தட்டி எழுப்பினான். எழுந்தவள் அவன் கையில் இருந்த டீயை வாங்கி குடித்தாள், சில நொடிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருவரது பார்வைகளிலும் இந்த உலகத்தில் யாராலும் நியாயப்படுத்த முடியாத அன்பு இருந்தது.

அங்கு இருந்த அமைதியை கலைக்கும் வண்ணம் ஜெகன் கேள்வி கேட்டான்

“உன்னை நான் என்ன பெயர் சொல்லி கூப்பிடணும்?”

“உன் விருப்பம்” என்றாள் அவள்

ஜெகன் யோசிக்க தொடங்கினான்.


சிவப்பு நிற டைரி
 

இரவு 12.30 மணி

கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த நடைபாதையில் இரவு உறங்க வருவது எனக்கு பழக்கமாகிவிட்டது.ஆனால் என் அருகில் யார் உறங்குகிறார்கள் என்றெல்லாம் நான் கண்டுக்கொண்டதில்லை.எனக்கு அவசியமுமில்லை.

அன்றும் அதே போல் அந்த நடைபாதை ஓரத்தில் நான் உறங்குவதற்காக நடந்து வந்துக்கொண்டிருந்தேன்.அன்று நல்ல காசு கிடைத்திருந்தது,ஒரு ஏமாந்தவன் ஜிப்பாவிலிருந்து நூறு ரூபாயை அலேக்காக எடுத்து வந்து,பிடித்த உணவு உண்டது என மிக மகிழ்ச்சியாக என் நடைபாதைக்கு வந்துக்கொண்டிருந்த போது,ஒரு சந்திலிருந்து ஒரு முனகல் சத்தம் கேட்டது.

அந்த முனகல் சத்தத்தை கேட்டவுடன்,ஒரு நொடி நின்றேன்,அடுத்த நொடி நடக்க தொடங்கும் போது “பச்சாவ் முஜே,பச்சாவ்” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க,அடுத்த நொடி அந்த சந்திற்குள் புகுந்தேன்.அங்கு ஒரு முப்பது வயது மிக்க ஆண் ஒருவன்,ஒரு பத்து வயது மிக்க பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுக்கொண்டிருந்தான்.

இந்த காட்சியை பார்த்த அடுத்த நொடி,நான் என் அருகில் இருந்த ஒரு கல்லினை எடுத்து அந்த ஆண்மகனை அடித்தேன்,அவன் ஒரு நொடி என்னை பார்த்து,தன் பின் மண்டையில் வந்த ரத்தத்தை துடைத்துவிட்டு கூறினான் “ஜாவ்,லடுகா,துமாரா காம் நஹி ஹே”

நான் அவனை நோக்கி எனக்கு தெரிந்த ஹிந்தியில் கத்தினேன் “லடுகி கோ ஜோட் அவுர் ஜாவ்”

அந்த ஆண்,என்னை சட்டை செய்யாமல் மேலும்,அந்த பெண்ணிடம் தவறாக நடந்துக்கொள்ள,எனக்கு கோபம் வர,பக்கத்திலிருந்த ஒரு இரும்பு பொருளை எடுத்து அவன் பின் மண்டையில் மேலும் ஓர் அடி அடிக்க,இம்முறை அவன் மண்டை பிளந்து விட்டது.

அவன் கீழே சரிந்துவிட்டான்.

அந்த பெண் என்னை கட்டிக்கொண்டு அழுதாள் “பையா,முஜே பச்சாவ்”.

ஏனோ என் கண்கள் கலங்கி விட்டது.


அவள்
ஜெகன் தன் ஆஃபிசிலிருந்து ஒரு அரை நாள் லீவ் எடுத்துக்கொண்டு வேகமாக தன் ரூமிற்கு அருகிலிருந்த அந்த மதிப்பிற்குரிய உணவகத்திற்கு சென்றான்.

அவன் உள்ளே செல்லும்போது வெப்பத்தினால் வியர்த்து வழிந்த வியர்வை துளிகளின் மேல் குளிர்காற்று ட்டபோது உலகத்தையே வென்ற சந்தோஷம் மனதில் ஏற்பட்டது.

அவளுக்கு யாழினி என பெயர் சூட்டி இருந்தான்.

யாழினி எங்கே உட்கார்ந்திருக்கிறாள் என அவன் கண்கள் தேடின.அவள் ஒரு மூலையில் இரண்டு பேர் மட்டுமே உட்காரக்கூடிய டேபிளில் உட்கார்ந்திருந்தாள்.

சந்தன நிறத்தில் ஒரு புடவை உடுத்தி இருந்தாள். அவள் எதிரில் இருந்த நாற்காலியில் அவன் உட்கார்ந்தான்

ஜெகன் உட்காருவதை பார்த்த யாழினி கேட்டாள் “ஏன் லேட்”

“ட்ராபிக்” என்றான்

மௌனம் சிறிது நேரம் குடிக்கொண்டது

“யாழினி” என்று அவன் அவளை அழைத்தான்

அவள் அங்குமிங்கும் பார்த்துவிட்டு “யாரது” என்று கேட்டாள்

“உன்னை இனிமே நான் அப்படி தான் கூப்பிடுவேன்”

அதே நேரத்தில் அங்கு வந்த சர்வர் ஒருவன் இரண்டு கிளாஸ் டம்ளரில் தண்ணீர் ஊற்றி விட்டு “ஆர்டர் சார்” என்று கேட்டான்

“இரண்டு மட்டன் பிரியாணி” என்று ஜெகன் கூறினான்

“என்னமோ கூப்பிடு, டைலி நான் உன் கூட இருக்கனும்னா, எனக்கு அதற்கு ஏற்ற மாதிரி காசு கொடுத்துடனும்” என்றாள் யாழினி என்ற அவள்

ஜெகன் முகம் சுருங்கியது.

சில நொடிகள் யோசித்தவன் “சரி, எவ்வளவு” என்று கேட்டான்

“ஒரு நாளுக்கு 500 ரூபாய்” என்றாள்

“அதே சம்பளத்துக்கு வேற வேலை வாங்கி தரேன், போறியா” என்று ஜெகன் கேட்ட அடுத்த நொடி கிளாசில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் வீசினாள்.

“போடா உன் வேலையை பாரு” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்

மக்கள் யாரும் அங்கில்லை,ஆனால் அந்த சர்வர் அதை பார்த்துவிட்டான்.

ஜெகன் சில நொடிகள் அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். முகத்திலிருந்து தண்ணீர் சொட்டியது

தன்னுடைய கைக்குட்டைக்கொண்டு துடைத்துக்கொண்டு அங்கிருந்த சர்வரிடம் ஆர்டர் கான்சல் செய்துவிட்டு உணவகம் விட்டு வெளியே சென்றான் மீண்டும் குளிரிலிருந்து வெப்பத்துக்கு

அன்று இரவும் அவளுக்காக காத்திருந்தான், அவள் வரவில்லை.

அடுத்த நாள் அதே டீக்கடை, அதே சிகரெட், அதே மாலை நேரம், அவள் இம்முறை ஆரஞ்சு வண்ணத்தில் ஒரு சீலை அணிந்திருந்தாள், அவள் நடப்பதை சில நொடிகள் பார்த்தவன், சிகரெட்டை அணைத்துவிட்டு வேகமாக அவள் பின்னால் சென்று, அவளை வழிமறித்தான்

அவள் எதோ பேச வர, அதை தடுப்பது போல், தன் பர்சில் இருந்த 2000 ரூபாய் நோட்டை எடுத்து அவளிடம் நீட்டிவிட்டு “கடந்த மூன்று நாட்களான காசும், இன்றைக்கான காசும் இருக்கு என்னுடன் வா” என்றான்

இருவரும் சில தூரம் ஒன்றாக நடந்தனர். ஜெகன் அவளை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு அருகில் இருந்த மெடிக்கல் ஷாப் ஒன்றிற்கு சென்று வந்தான்.

அவள் கையில் அந்த ஆயின்மென்ட்டை கொடுத்துவிட்டு கூறினான் “உன் இடது கை மணிக்கட்டு காய்ச்சி சிவந்து போயிருக்கு, மருந்து தடவிக்கொள்”

அவள் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றாள், அவன் நடக்க தொடங்கினான்.

அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் அவளை ஒரு நிமிடம் நின்று திரும்பி பார்த்தான்.

அவள் கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளம் வெளியே வர தயாராக இருந்தது

ஜெகன் தன் அறையை நோக்கி நடந்து செல்ல, அவளும் அவனை நோக்கி நகர தொடங்கினாள்.

சுரேந்திரன்
சென்னை.

பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்டு தாம்பரத்திலிருந்த தன் வீட்டிற்கு வந்த போது,மணி பதினொன்றை தொட்டிருந்தது.

சுரேந்திரன் மனைவி இளமதி வந்து கதவை திறந்தவள்,முகத்தை பார்த்தபோதே அவள் தூங்கவில்லை என்று தெரிந்தது.

இளமதி,உயரம் கொஞ்சம் குறைவு,கருமை நிறம்,நீண்ட கூந்தல்,கண்களில் மட்டும் ஏதோ ஒரு கவலை.

“தூங்கலையா பா,மணி நிறைய ஆகிடுச்சு” என்று சுரேந்திரன் அன்பாக கேட்க

“இல்லைங்க,தூக்கமே வரலை,நீங்க சாப்பிட்டீர்களா” என்று இளமதி கேட்டாள்.

“சாப்பிட்டேன்,நீ போய் படு,நான் கொஞ்சம் நேரம் ஆகும்” என்று சுரேந்திரன் கூற

“ஏங்க என்னாச்சு”

“ஒன்றுமில்லை,இன்னிக்கு ஒரு குரூப் மர்டர் பா,ரயில்வே ஸ்டேஷனில்,கேஸ் கொஞ்சம் காம்பிளிக்கேட்” என்று அவன் இளமதியை ஆழமாக பார்க்க

“புரிதுங்க,என்ன ஆச்சு” என்று அவள் அலுத்துக்கொண்டாள்

“ஆமாம்பா,மொத்தம் ஐந்து ஆண்,ஒரு பெண் உடல்கள் கிடைத்து இருக்கு,ஆட்டாப்ஸி ரிப்போர்ட் பார்த்தால் தெளிவாக் தெரிகிறது,ஆனால் ஒரே ஒரு சிக்கல் மட்டும்,ஃபாரன்சிக் டீம் சொன்னப்போ,மர்டர் வெப்பனில் இறந்தவர்கள் அனைவருது கை ரேகையும்,ரத்தமும் இருக்கு,ஆனால் கூடுதலா ஒரு கை ரேகை மற்றும் ரத்த குரூப் இருக்கு, அது மட்டுமில்லாது அந்த பெட்டியின் ஒரு சீட்டுக்கடியில் குழந்தையுடைய பொருட்கள் கண்டு எடுத்தோம்,ஆனால் குழந்தையை காணவில்லை”

குழந்தை என்ற சொல்லை கேட்டவுடன் இளமதிக்கு பல எண்ண ஓட்டங்கள். “ஏண்டா சொன்னோம்” என்று சுரேந்திரன் யோசிக்கும் போதே,இளமதி கூறினாள் “அப்போ அந்த கை ரேகை உடைய ஆளை கண்டுப்பிடிக்கனும்ல”

“ஆமாம்”

“அப்போ குழந்தை எங்கேயோ உயிரோடு இருக்கும்ல”

“தெரியல,ஆனால் ரயில் பெட்டியில் இல்லை,உயிருடன் இருந்தால் பெரிய விஷயம் தான்”

“சரி வா போய் தூங்குவோம்” என்று இளமதியை அணைத்துக்கொண்டு சென்றான் சுரேந்திரன்

அடுத்த நாள் காலை,கமிஷ்னர் ஆபிஸ் செல்லுவதற்காக ஆட்டாப்ஸி ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பும்போது,இளமதி கூறினாள் “ஏங்க அங்கு குழந்தையுடைய பொருள் இருந்ததாக கூறினீர்களே,பொருள் இருந்தால் குழந்தையும் இருக்க வேண்டும் என ஏதாவது கட்டாயம் உண்டா என்ன?”

“கண்டிப்பாக இல்லை,ஆனால் ஒரு பால் பாட்டிலில் பால் இருந்தது.கண்டிப்பாக குழந்தை அங்கே இருந்திருக்க வேண்டும்”

“ஆமாம் கண்டிப்பா” என்று கூறியவள் கண்கள் லேசாக கலங்கின,”எனக்கு தான் குழந்தைகள் பற்றியே தெரியாதுல” என்றவள் விம்மி விம்மி அழ தொடங்க,சுரேந்திரன் கண்களும் கலங்கி விட்டது.

“ஏன் மா,இப்போ அழுகுற,அழகூடாது” என்று கூறியவன் அவளை இறுக்கமாக கட்டி அணைத்துக்கொண்டான்.

அந்த நேரத்தில் சுரேந்திரனுக்கு ஒரு போன் வந்தது.

“ஹெலோ சார்,நான் தங்கப்பன் பேசுரேன்”

“சொல்லுங்க,என்ன செய்தி”

“கமிஷ்னர் ஸ்டேஷன் வந்துருக்காரு,உங்களை வர சொன்னாரு” என்று கூற “பத்து நிமிஷத்தில் அங்கு இருப்பேன்” என்று கூறிவிட்டு “அழுகாத மதி,நம்ம வாழ்க்கையும் மாறும்” என்று அப்போதைக்கு அவளை தேற்றிவிட்டு,தன் பைக்கை எடுத்துக்கொண்டு பறக்க தொடங்கினான்


அவள்
அன்றுடன் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்க தொடங்கி ஒரு வாரம் ஆகி இருந்தது. இருவரும் எப்போதும் போல் காலையில் அவரவர் வேலைக்கு செல்வார்கள். இரவு சில மணி நேரங்கள் பேசிவிட்டு தூங்கி விடுவார்கள்.

அன்று இரவும் இருவரும் பேச தொடங்கினார்கள்.

“யாழினி நீ ஏன் கூடவே வாழ்க்கை முழுசா இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது”

“ஜெகன் நீ முட்டாள் மாதிரி பேசுற”

“இல்லை யாழினி ,என் மனசுக்கு தோணுது”

“என்ன மனசு, மண்ணாங்கட்டி மனசு, அது சொல்றது கேட்டனா கடைசி வரை உறுப்படமாட்டா”

“இல்லை யாழினி, மனசோட பவர் உனக்கு தெரியலை”

இருவரும் பேசி கொண்டு அப்படியே தூங்கி விட்டனர்

அடுத்த நாள் காலை இருவரும் அவரவர் வேலைக்கு வேகமாக கிளம்பிக்கொண்டிருக்கும் போது,யாரோ அந்த அறைக்கதவை தட்டினார்கள்

அந்த நொடி,ஜெகனும் யாழினியும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர்.

ஜெகன் மெதுவாக கதவை திறக்க “மச்சான், இன்னிக்கு ஆபிஸ் லீவ் போட்டுட்டேன் நீயும் போடு, ரெண்டு பேரும் வெளியே போகலாம்” என்றுக் கூறிக்கொண்டே ஜெகனுடைய நண்பன் ராஜா உள்ளே வந்தான்

அறைக்கு உள்ளே வந்த ராஜா, அங்கு நின்றுக்கொண்டிருந்த யாழினியை பார்த்தான்.

ஜெகனை உற்று கவனித்துவிட்டு “மச்சான்” என்று ஆச்சரிய வார்த்தை ஒன்றை சிதறினான்

அவள் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, தன்னுடையை பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்

அவள் சென்றவுடன், ராஜா படுக்கையில் சென்று அமர்ந்தான். ராஜாவிடம் ஜெகன் நடந்தது அனைத்தையும் கூறீனான்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ராஜாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“டேய் ஜெகா, இதுலாம் நீ ஏன் செஞ்சன்னு எனக்கு தெரியலை, ஆனால் எதார்த்தமா ஒன்னு சொல்லனும்னா, நீ செஞ்சதை பற்றி யோசிக்க கூட யாரும் மாட்டாங்க”

“சரி நான் ஒன்னு கேக்குறேன்,நானும் அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்திருக்கிறேன் என்று சொன்னா உன் ரியாக்ஷன் என்ன” என்று ராஜா கேட்டான்

ஜெகன் அதை கேட்டவுடன் ஸ்தம்பித்து போனான். ஜெகனின் மனது ராஜாவை கொன்றுவிடு என கூற, ஜெகனின் மூளை “அவன் கேட்பது சரிதானே” என்று கூறியது

“என்னடா என்ன கொல்லனும் போல, கோபம் வருதா, அப்படிதான் கோபம் வரும், தப்பில்லை, ஆனா இதுதான் ரியாலிட்டி, நீ ஆசைபடுறதலாம் இங்க நடக்காது, அதுக்கும் மேல் ரியாலிட்டின்னு ஒன்னு இன்னும் இந்த உலகத்தை ஆட்டிப்படைச்சுட்டு இருக்கு”

ராஜா சில நொடிகள் மௌனமாக இருந்துவிட்டு கூறினான் “உனக்கு அவளை பிடிச்சுருக்கு, அவள் உன்னுடன் இருக்க வேண்டும் என ஆசைபடுற, எல்லாம் சரிதான், ஆனால் ஒரு நாள் தெருவுல போற ஒருத்தன் நான் கேட்டது கேட்பான், அப்போ என்ன பண்ணுவ”

சில நொடிகளில் ஜெகனிடம் கூறிவிட்டு அங்கிருந்து ராஜா சென்றான்

அன்று இரவு அவள் வந்தாள், ஆனால் அவளிடம் ஜெகனால் ஏனோ பேச முடியவில்லை. எந்த மனது அவள் வேண்டும் என யோசித்ததோ, அதே மனது சிந்தனை வெள்ளத்தில் தத்தளிக்க ஆரம்பித்தது

அடுத்த நாள் மாலை நேரம் .அதே டீக்கடையில் நான்காவது சிகரெட்டை பற்ற வைத்து புகைத்துக்கொண்டிருந்தான், அப்போது யாழினி அங்கு வந்தாள். சிகரெட்டை அணைத்துவிட்டு, அவளுடன் தன் அறைக்கு நடந்து செல்ல தொடங்கினான்

ஜெகனும் அவளும் எதோ பேசி நடந்து கொண்டிருக்க, ஒரு முப்பது வயது மிக்க வாலிபன் ஒருவன் அவள் அருகில் வந்து “500 ரூபாய் நோட் ஒன்றை எடுத்து காண்பிக்க”

ஜெகனிடம் பேச்சை நிறுத்திவிட்டு, அந்த வாலிபன் பின்னால் எந்த தயக்கம், தடுமாற்றம் ஏதுமின்று நடக்க தொடங்கினாள்

ஜெகனின் மனம் தடுமாற தொடங்கியது.

தடுமாற்றம் மனித இயல்பு, ஒவ்வொரு மனிதனும் நிறைய இடங்களில் பல எண்ண ஓட்டங்களின் மத்தியில் இருந்துக்கொண்டு, எந்த பக்கம் செல்ல வேண்டும் என தெரியாமல் அவசரத்தில் முடிவு ஒன்றை எடுத்துவிடுவான். அந்த முடிவின் பலன் அவனை தொடரும். அதே போல் தான் ஜெகனின் மனமும் தடுமாற்றத்தில் ஒரு முடிவு ஒன்றை எடுத்தது.

அந்த முடிவின் பலன் அப்போது அவனுக்கு தெரியவில்லை.

சிவப்பு நிற டைரி
அந்த சிறுமி என்னை அண்ணன் என்று கூறியவுடன்.என் மனம் அவளுக்காக அன்பை செலுத்த தொடங்கிவிட்டது.அவளை பற்றி அறிந்துக்கொள்ள “தும் கோன்” என்று கேட்டேன்

“என் பெயர் பூஜா” என்று அவள் தமிழில் பேசியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்க,”என் அம்மாவும்,அப்பாவும் காதல் திருமணம் செய்துக்கொண்டு தமிழ் நாட்டில் இருந்து,இங்கே வந்தார்கள்,வந்த சில நாட்களிலேயே அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார்,என் அம்மா தான் என்னை மிகவும் கடினப்பட்டு வளர்த்தார்,ஆனால் ஒரு விஷ காய்ச்சலால் இத்தனை நாட்கள் கடினப்பட்டவர் இன்று காலை மூச்சினை நிறுத்திவிட்டார்.”

“அண்ணா,இங்க நின்று பேச முடியாது,என்னை காப்பாற்ற நீங்க ஒருவனை அடிச்சீங்களே,அவன் சாதாரண ஆள் இல்லை,இந்த ஏரியாவிலேயே பெரிய ரௌடி,வாங்க நாம் ஓடிடுவோம்” என்று பூஜா கூற

அப்போதுதான் எனக்கு தோன்றியது “சரி போகலாம்,ஆனால் நான் ஒரு திருடன்,என்னை நம்பி நீ வருவது சரியாக எனக்கு தோன்றவில்லை”

“அண்ணா,ஒன்னு சொல்றேன்,இன்னும் ஒரு நாள் நான் இங்கே சுற்றி கொண்டிருந்தால்,என்னை பிடித்து சென்று விலை பெண்ணாக மாற்றி விற்றுவிடுவார்கள்,தயவு செய்து என்னை காப்பாற்றுங்க” என்று பூஜா கூறுவதை கேட்ட எனக்கு மும்பையின் முழுமையான முகம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புரிய வந்தது.

இருவரும் அங்கிருந்து நடக்க தொடங்க,வேகமாக வந்த ஒருவன் கீழே கிடந்தவனை எழுப்ப முயன்றான்.ஆனால் கீழே இருந்தவன் சற்றும் அசையவில்லை.அந்த ஒருவன் இவர்கள் இருவரையும் பார்த்துவிட,அந்த ஏரியாவே அதிரும் படி கத்தினான் “ஏக் குத்தே,ஹமாரா பாய்க்கோ மார் தியா ஹை “

பூஜாவும் நானும் அங்கிருந்து வேகமாக ஓட தொடங்கிவிட்டோம்.சில மணி துளிகள் ஓடிய பின்பு,தினமும் நான் உறங்கும் நடைபாதையில் சென்று நானும் அவளும் படுத்துக்கொண்டோம்.

அன்று அவர்களிடமிருந்து தப்பினோம்.

சுரேந்திரன்
சென்னை.

“ஸார்” என்று ஒரு சலியூட்டை சிவகோபாலனுக்கு அடித்துவிட்டு விறைப்பாக நின்றார் சுரேந்திரன்.

“அட் ஈஸ்” என்று கமிஷ்னர் சிவகோபாலன் கூறிவிட்டு தொடர்ந்தார் “சுரேந்திரன்,நான் பெங்களூர் கமிஷ்னரிடம் பேசினேன்,இது அவங்க ஜூரிஸ்டிக்ஷன் இருந்தாலும்,நம்மாள் ஒருவரை அங்கிருந்த சில நாட்கள் வேலை செய்யும் படி சொல்றார்,இது கொலைகள் தான் அந்த கம்பியில் எல்லாருடைய ரேகையும் இருக்கு,அந்த இன்னொரு கை ரேகை உள்ள ஆள் தான் கொலையாளி என்று தெரிகிறது,ஆட்டாப்ஸி என்ன சொல்லுது”

“சார்” என்றவன் அந்த ஆட்டாப்ஸி ரிப்போர்ட்டை அவரிடம் நீட்ட,அவர் அதை எந்த எந்த இடங்களில் பார்க்க வேண்டும் என்பது போல் பார்த்துவிட்டு,சுரேந்திரனை நோக்கி கூறினார் “அட்டாப்ஸி படி பார்த்தால்” என்று சுரேந்திரனை தன் கூர்மையான பார்வையால் பார்த்தார்.

சில நொடிகள் கழித்து “ரெண்டு நாளில் அங்க போங்க,ஒரு வாரம் அங்க இருந்து என்ன நடந்துச்சுன்னு கண்டுபிடிச்சுட்டு சொல்லுங்க”

“ஓகே சார்” என்று சுரேந்திரன் கூற,”கேஸ் கொஞ்சம் காம்பிளிக்கேட் ஆ தெரிது,நிதானமா முடிவு எடுத்து செய்ங்க”

வீட்டிற்கு வந்த சுரேந்திரன்,இளமதியிடம் பெங்களூர் பற்றி கூற,அவள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்.அவளை சமாளிப்பதற்குள் சுரேந்திரனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

சுரேந்திரன் அடுத்த இரண்டு நாட்களில் பெங்களூர் கிளம்பி சென்றான்.பெங்களூர் செல்லும் போது அவனுக்கு தெரியாது, தனது வாழ்க்கையையே மாற்ற போகும் பல நிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று.


 

அவள்
சில நாட்களாகவே ஜெகனால் யாழினியிடம் சரியாக பேச முடியவில்லை.அடிக்கடி அவனது மனம் ஆழ்ந்த சிந்தனைக்கு உட்ப்பட்டு கொண்டு இருந்தது.இதை யாழினியும் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள்

ஒரு நாள் யாழினியே ஜெகனிடம் கேட்டாள் “உனக்கு நான் இங்கே இருப்பது பிடிக்கலையா”

அந்த இரவு நேரத்தில் அந்த பேச்சு தேவையில்லை என ஜெகன் நினைத்து அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

யாழினி மீண்டும் கேள்வி கேட்டாள். இம்முறையும் ஜெகன் பேசவில்லை. அமைதியாக படுத்து உறங்க தொடங்கினான்.

யாழினி அவன் அருகில் சென்று அமர்ந்தாள். ஜெகன் அவள் அருகிலிருப்பதை உணர்ந்தான். ஆனால் கண்களை திறக்கவில்லை

யாழினி பேச தொடங்கினாள் “என் வாழ்க்கை ஒரு பெரிய கொடுமை, அதை எல்லாம் உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது,நான் இங்கு வந்திருக்க கூடாது, நாளைக்கே நான் போயிடுறேன்”

அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ஜெகன் கடைசியாக “போயிடுறேன்” என்று அவள் கூறிய வார்த்தையை கேட்டவுடன் வேகமாக எழுந்தான், அவன் வேகமாக எழுந்ததால், அவன் மேல் சாய்ந்து உட்கார்ந்து இருந்தவள் நிலை தவறி படுக்கையில் விழுந்தாள்.

இருவரின் கண்களும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மனமில்லாமல் சந்தித்துக்கொண்டிருந்தன. அந்த ரூமில் வெற்றுதனமாக இத்தனை நாள் ஒளிர்ந்துக்கொண்டிருந்த நைட் லேம்ப் இன்று அவள் முகத்தை பளிச்சிட்டு காட்டியது.

அவள் முகத்தை உற்று கவனித்துக்கொண்டிருந்த ஜெகன். தன் முகத்தை அவள் முகத்திற்கு அருகில் கொண்டு சென்றான்.

மெதுவாக தனது கையை அவள் தலைக்கு அடியில் கொடுத்து, தலையை தூக்கி தலையணை ஒன்றை வைத்து, அவள் தலை கூந்தலை கோதிவிட்டு “தூங்கு” என்று கூறியவன் படுக்கையிலிருந்து விலகி கீழே தனியாக படுத்து உறங்க தொடங்கினான்.

யாழினியின் மனம் பல விதமான உணர்ச்சிகளில் சிக்க தொடங்கியது. ஜெகனின் உள்ளமோ அவளது கடந்த காலத்தை பற்றி சிந்திக்க தொடங்கியது

அடுத்த நாள் இருவரும் மௌனமாக எழுந்து அவரவர் வேலைக்கு சென்றனர்.

அன்று முழுதும் ஜெகனால் சரியாக வேலை செய்ய முடியவில்லை, அரை நாள் லீவ் போட்டுவிட்டு, அவன் ரூமிற்கு சென்றான்.

அன்று முழுவதும் நிறைய யோசித்தவன். சிகரெட்டுகளை பாகெட் பாக்கெட்டாக பிடித்தான். மூன்றாவது பாகெட்டின் கடைசி சிகரெட்டை பிடித்துக்கொண்டிருந்த போது தனது நண்பன் ராஜாவிற்கு போன் செய்தான்.

ஜெகன் மும்முரமாக எதோ பேசினான்.ராஜா எவ்வளவோ எதிர்த்தான். ஆனால் ராஜாவின் எதிர்ப்பை ஜெகன் பொருட்படுத்தவில்லை. போனை அணைத்தான்

இரவு பத்து மணிக்கு யாழினி ரூமிற்கு வந்தாள். அவளுடை சீலை கலைந்திருந்தது. அதனை பார்த்து புன்முறுவலித்தான் ஜெகன். யாழினி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை

அன்று இரவு தூங்க போகும் முன்பு,யாழினியிடம் கூறினான் “யாழினி நாளைக்கு நீயும் நானும் வெளியே போறோம்,நல்ல புடவை கட்டிக்கோ”

யாழினி குழப்பத்துடன் அவன் கூறியதை கேட்டுவிட்டு தூங்க தொடங்கினாள்

அடுத்த நாள் ஜெகன் தனக்கு பிடித்த சிவப்பு நிற சட்டை,வெள்ளை பாண்ட் அணிந்தான்,அவளும் அவனுக்கு பிடித்த சிவப்பு நிற சேலையை அணிந்திருந்தாள்

இருவரும் பஸ் பிடித்து ஒரு இடத்துக்கு சென்றனர்.

அவர்கள் சென்றது ரிஜிஸ்டர் ஆஃபிஸ் தான். தடுமாற்றத்தில் ஜெகன் எடுத்த முடிவு இதுதான்.

ஆனால் சில சமயங்களில் சில முடிவுகள் நம் வாழ்வை மாற்றும் சக்தி பெற்றவை என்பதை ஜெகனின் முடிவு அவனுக்கு அன்று உணர்த்தியது.

அவள் அந்த இடத்தை பார்த்தவுடன் ஒரு நிமிடம் ஸதம்பித்து போனாள்.ஜெகனை உற்று கவனித்தாள்.ஜெகன் அவளை பார்த்தான்.அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை

அவள் கையை பிடித்து அவளை உள்ளே அழைத்து சென்றான்.அவள் உள்ளே வர மறுத்து,அவன் பிடியை உதறினாள்.

“ஏன்” என்ற ஒற்றை சொல்லை உதிர்த்தான் ஜெகன்

“முடியாது” என்றாள் அவள்

“ஏன்”

“முடியாது” என்று கத்தினாள்

“அதான் ஏன்” என்று மீண்டும் கேட்டபோது,.அவள் கண்களில் கண்ணீர் தேங்க தொடங்கி இருந்தது

“புரிஞ்சுக்கோ ஜெகன், என்னால் உன்னை திருமணம் செய்ய முடியாது” என்றவள் கண்களிலிருந்து கண்ணீர் வர தொடங்கியது

ஜெகன் “ஏன்” என்று கேட்டான் மீண்டும்,இம்முறை அவன் நா தழுதழுத்தது

“எனக்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள், உன் வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பலை” என்றவள் அங்கிருந்து அழுதுக்கொண்டே ஓட தொடங்கினாள்

ஜெகன் கண்கள் முழுதாக கலங்கி இருந்தது. அவனுடைய ஒரு துளி கண்ணீர் கீழே மண்ணில் விழ,வானமும் சேர்ந்து கண்ணீரை சிந்த தொடங்கியது.

ஜெகனின் முடிவு நல்லதா கெட்டதா என்று யோசிப்பதற்குள் அனைத்தும் நடந்துவிட்டது

சில நேரங்களில் நாம் எடுக்கும் முடிவின் பலன் தெரியும் முன்பே அனைத்தும் முடிந்துவிடுகிறது

சிவப்பு நிற டைரி
பூஜாவை என்னுடன் அழைத்து வந்து ஒரு மாதம் ஆகி விட்டது.அவளை அருகில் வைத்துக்கொண்டிருப்பது எனக்கு மிகவும் கவலையை தந்தது,அவளுக்காகவாது,இனி ஒரு ரூமாவது வேண்டும்,அதற்கு திருடினால் மட்டும் போதாது,பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்கு எண்ணம் தோன்றிக்கொண்டே தான் இருந்தது.

அவளது குடும்பம் வாழ்ந்த ஏரியாவிற்கு மீண்டும் அவள் செல்ல முடியாது,வேறு என்ன செய்யலாம் என்று நான் யோசிக்கும் போது தான்,மும்பை எலெக்ட்ரிக் ரயிலில் திருடலாம்,எப்போதும் பயங்கர கூட்டமாக இருக்கும் என்று எண்ணி,ஒரு நாள் ரயிலில் ஏறினேன்.

அன்று பயங்கரமான வருமானம்,பலரும் வேலை அலைச்சல்,தூக்கம் என மிக அலட்சியமாக இருந்ததால்,என்னால் நிறைய காசு பார்க்க முடிந்தது.கிட்டததட்ட ஐநூறு ரூபாய் தேற்றினேன்.

அதே போல் ஒரு மாதம் செய்து,ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட ஒரு ஏழு ஆயிரம் வரை தேற்றி விட்டு,பூஜாவை அழைத்துக்கொண்டு தாராவியில் ஒரு சின்ன ரூமினை வாடகைக்கு எடுத்து,அவளை பத்திரமாக பார்த்துக்கொண்டேன்.இத்தனை நாட்கள் என்னுடன் இருந்தவள்,என்னை ஒரு கேள்வி கூட கேட்டதில்லை.

வாழ்க்கை எனக்கு ஒரு வழியை பூஜாவின் மூலமாக கொடுத்தது என்று எண்ணிக்கொள்வேன்.

ஒரு நாள் இரவு என் ரூமிற்கு சென்றுக்கொண்டிருந்த போது,இரண்டு மாதத்திற்கு முன் நான் கொன்ற அந்த ரௌடியின் ஆள் ஒருவன் என்னை பார்த்து,துரத்த தொடங்கி விட்டான்.நீண்ட நேரம் என்னால் ஓட முடியவில்லை.ஒரு இடத்தில் மறைந்து நின்று அவன் ஓடி வரும் போது, என் பேனா கத்தியை கொண்டு அவன் கழுத்தில் இறக்கிவிட்டேன்.

அவன் சற்றும் எதிர்ப்பாராமல் என் எதிரில் கழுத்தை பிடித்துக்கொண்டு விழ,அவன் மேல் ஏறி அமர்ந்து அவன் கண்களில் ஒரு முறை குத்தினேன்.

அடுத்த நொடி என்னை நான்கு நபர்கள் பிடித்து இழுக்க,என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அதில் ஒருவன் என் தலையில் மடாரென்று அடிக்க,என் கண்கள் மூடிக்கொண்டன.


அவள்
வாழ்க்கை எப்போதுமே மகிழ்ச்சியை கொடுக்காது, ஒவ்வொரு தருணத்திலும் வெவ்வெறு வகையான துன்பங்களை கொடுத்துக்கொண்டே தான் இருக்கும்.ஜெகனும் இதில் விதிவிலக்கல்ல, அவன் மனம் கடந்த சில நாட்களாக மிக பெரிய மன உளைச்சலுக்கு உட்பட்டிருந்தது.யாழினியை அவன் கடைசியாக பார்த்தது ஒரு மாதததிற்கு முன்பு.அவளை எல்லா இடங்களிலும் தேடினான்.ஆனால் அவளை அவன் காணவில்லை.

தினமும் அந்த டீக்கடையில் அவள் வருவாள் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பான்.கொஞ்சம் கொஞ்சமாக சிகரெட் பிடிப்பதை குறைத்துக்கொண்டிருந்தான்.முன்பெல்லாம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் எட்டு சிகரெட் பிடிப்பான்.ஆனால் இப்போதெல்லாம் மூன்றிற்கு மேல் பிடிப்பதில்லை.

வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாதது போல் உணர்ந்தான்.தினமும் வேலைக்கு செல்வான்.வேலை செய்வான்.வீடு திரும்புவான்

அவளுடைய எண்ண அலைகள் அவனை விடுவதாக இல்லை.

ஒரு நாள் டீக்கடையில் நின்று டீ குடித்துக்கொண்டிருந்தான்.ஒரு மழை துளி அவன் டீ குவளையில் விழ,அதனை தொடர்ந்து வேகமாக மழை துளிகள் விழ தொடங்கின,டீயை வேகமாக குடித்து விட்டு ரூமிற்கு நடக்க தொடங்கினான்.மழை கொட்ட தொடங்கியது

மழையின் வேகம் அதிகரித்ததால் ஓரிடத்தில் ஒதுங்கி நின்றான்.அங்கு ஒரு நாயும் வந்து மழைக்கு ஒதுங்கி நின்றது.அந்த நாய் அவனை பார்த்து தன்னுடைய வாலினை ஆட்ட தொடங்கியது.அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.பின்பு தான் ஞாபகம் வந்தது,என்றோ ஒரு நாள் டீக்கடையில் அவன் போட்ட ஒரு துண்டு பிஸ்கெட்டை அந்த நன்றியுள்ள நாய் மறக்காமல் இன்றும் தன்னை நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டவன் தன் பையில் இருந்த பிஸ்கெட் பாக்கெட்டை போட்டான்.

மழை நின்றது.ஜெகன் ரூம் நோக்கி நடக்க தொடங்கினான்.அந்த நாயும் அவனுடன் நடக்க தொடங்கியது.

ஜெகன் அவளை மீண்டும் ஓரிடத்தில் கண்டான்.

அவள் ஒரு வெள்ளை காரில் ஏறிக்கொண்டிருந்தாள்.அதனை பார்த்தவன் அந்த காரினை நோக்கி ஓட தொடங்கினான்,அந்த நாயும் அவனுக்கு முன்னால் ஓட தொடங்கியது.மழை மீண்டும் பொழிய தொடங்கியது.

அந்த வெள்ளை கார் வேகமெடுத்தது.அவனும் வேகமெடுத்தான்.நாயும் வேகமெடுத்தது.

காரின் பின்னால் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் ஓடி இருப்பான்.அதற்கு மேல் ஓட முடியாமல் அவன் நிற்க,முன்னால் ஓடிக்கொண்டிருந்த நாய் ,அவன் நின்றவுடன் அவனை நோக்கி நடந்து வந்து “ஏன் நின்றாய்” என்று குறைத்து கேட்டது

அதனை புரிந்துக்கொண்டது போல் “ஓட முடியலை” என்று நாயிடம் கூற,அந்த சாலையில் சென்றுக்கொண்டிருந்த அனைவரும் அவனை கோமாளியை போல் பார்த்தனர்.அந்த நொடி அவனை கடந்து ஒரு ஆட்டோ சென்றது.ஆட்டோவின் வீல் சகதியின் மேல் செல்ல,சகதி ஜெகனின் முகத்தில் தெறித்தது.

ஜெகன் தன் ரூமிற்கு வந்து முகத்தை கழுவிக்கொண்டு சற்று நிதானமாக யோசிக்க தொடங்கினான்.அவன் சிந்தனையில் ஓடியவை:

“நம்ம ஏன் லூசு மாதிரி ஓடுனோம்,அவள் தான் என்னை வேண்டாம் என்று கூறிவிட்டாளே,பின்பு ஏன் இவ்வாறு நாம் இருக்க வேண்டும்,அவளை மறந்துவிட வேண்டியது தான்” என்று நினைத்தவன் சில நொடிகளில் உறங்கி போனான்.

அவனுடைய கனவுகளை அவள் ஆக்கிரமித்திருந்தாள்.இரவு 12.20 மணிக்கு திடீரென்று யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க,கதவினை சென்று திறந்தான்.

அவள் தான் நின்றுக்கொண்டிருந்தாள் “யாழினி”

அவள் தோளில் சாய்ந்தவாறு ஒரு குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது.

உள்ளே வந்தவள் குழந்தையை கட்டிலில் போட்டுவிட்டு கூறினாள் “நான் நாளைக்கு இந்த ஊர விட்டு போறேன், இன்னிக்கு நீங்க ஓடி வந்ததை பார்த்தேன், என் மனசு கேக்கலை. உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று தான் வந்தேன்”

அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான் ஜெகன்.

“எப்போதும் என்னிடம் கேட்பீங்களே, ஏன் இந்த வேலைன்னு, அதுக்கு பதில் சொல்ல தான் வந்தேன். இதற்க்கப்புறமாவது நீங்க ரியாலிட்டு புரிஞ்சிட்டு என்னை தேடாமல் இருக்க வேண்டும்”

அவள் கூற தொடங்கினாள் “என் உண்மையான பெயர் தேவி”