அத்தியாயம் 1

37.0k படித்தவர்கள்
5 கருத்துகள்

"இப்படிப் பயந்து ஓடுவது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை" என்றாள் கமலா."என் மனசை இந்தப் பஸ் கூடப் புரிந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் இப்படி நடு வழியில் நின்று தகறாறு பண்ணுகிறது."


"இந்தா! க‌ம‌லா, வாயைக் காட்டாதே,அட‌ங்கி இரு" என்று அத‌ட்டினாள் தாயார் காமாட்சி.


"எத‌ற்குக் குழ‌ந்தையை அத‌ட்டுகிறாய்?எதோ ம‌ன‌த்தில் ப‌ட்ட‌தைச் சொல்கிறாள். விள‌க்கினால் புரிந்து கொள்கிறாள்" என்றார் ம‌சிலாம‌ணி. "நன்றாக விளக்குங்கள். ஆனால் துடைப்ப‌க் க‌ட்டையைத்தான் எடுத்து வ‌ர‌வில்லை.ம‌ற்ற‌ச் சாமானன்க‌ளோடு அறையில் வைத்துப் பூட்டியாகி விட்ட‌து. அது ச‌ரி, ஏங்க‌ எல்லாச் சாமான்‌க‌ளும் ப‌த்திர‌மாக‌ இருக்கும் இல்லையா...?"


"ச‌ரிதான்" என்றாள் க‌ம‌லா சிரித்துக் கொண்டே. "ஜ‌ப்பான்கார‌னுக்குப் ப‌ய‌ந்து சென்னையைவிட்டு வெளியேறி வ‌ந்தோம். இப்போ திருட‌னுக்குப் ப‌ய‌ந்து ம‌றுப‌டியும் சென்னைக்கே போவோம். அங்கே எல்லாச் சாமான்க‌ளும் ப‌த்திர‌மாக‌ இருப்ப‌தைத் தெரிந்து கொண்டு ம‌றுப‌டியும் ஜ‌ப்பான்கார‌னுக்குப் ப‌ய‌ந்து கொண்டு ப‌ஸ் ஏறுவோம். ம‌றுப‌டியும் திருட்டுப் போகுமோ என்ற‌ க‌வ‌லையில்..."


"ஏண்டி என்னைக் கிண்ட‌லா ப‌ண்ண‌றே?" என்று தாயார் காமாட்சி கோப‌த்துட‌ன் எழுந்தாள்.


"உஷ்!உட்காரு" என்று அவ‌ள் கையைப் ப‌ற்றி அம‌ர்த்திய‌ மாசிலாம‌ணி "க‌ம‌லா நாம் ஜ‌ப்பான்கார‌னுக்குப் ப‌ய‌ந்து வெளியேறுவ‌தாக‌ நீ ஏன் நினைக்கிறாய்?" என்றார்."யுத்த‌ முய‌ற்சிக‌ளுக்கு நாம் உத‌வுகிறோம்.அவ்வ‌ள‌வுதான். ஜ‌ப்பான்கார‌ன் வ‌ந்தால் ப‌ட்டின‌த்தைப் பாதுகாப்ப‌து மிக‌ முக்கிய‌மான‌ காரிய‌மாகிவிடும். அப்போது போரில் உத‌வ‌க்கூடிய‌வ‌ர்க‌ள் த‌விர‌ ம‌ற்ற‌வர்க‌ள் ந‌க‌ர‌த்தைவிட்டு வெளியேறியிருப்ப‌துதான் அர‌சாங்க‌த்துக்கு வ‌ச‌தி. ஜ‌ப்பானிய‌ விமானங்க‌ள் வ‌ரும்போது அவ‌ற்றைச் சுட்டு வீழ்த்துவ‌தா? அல்ல‌து ஊரில் இருக்கிற‌ கிழ‌ம் க‌ட்டைக‌ளைக் குண்டு வீச்சிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருப்ப‌தா? அடிப‌ட்ட‌ சோல்ஜ‌ர்க‌ளுக்குச் சிகித்சை செய்வ‌தா? அல்ல‌து பெண்க‌ளுக்கும் குழ‌ந்தைக‌ளுக்கும் பாண்டேஜ் போட்டு அவ‌ர்க‌ள் அழுகையைச் ச‌மாதான‌ப்ப‌டுத்திக் கொண்டிருப்ப‌தா? அத‌னால்தான் அர‌சாங்க‌மே ந‌க‌ரைக் காலி செய்யுமாறு எல்லாரையும் கேட்டுக் கொண்டிருக்கிற‌து. யுத்த‌ முய‌ற்சிக்கு உத‌வ‌ முடியாத‌வ‌ர்க‌ள் முட்டுக்க‌ட்டை போடாம‌ல் இருப்ப‌தே பெரிய‌ உப‌கார‌ம்தான்!"


"அப்பா! நீங்க‌ள் சொல்வ‌து ரொம்ப நியாய‌ம்! கிழங் க‌ட்டைகள், குழந்தைகள் நகரைவிட்டு வெளியேற‌ வேண்டிய‌துதான். ஆனால் என்னைப் போல்‌ இள‌ம் வ‌ய‌துக்காரி உட‌ம்பில் ச‌க்தி உள்ள‌வ‌ள் யுத்த‌ முய‌ற்சிக‌ளில் ப‌ங்கெடுத்துக் கொண்டு உத‌வ‌ வேண்டுமே த‌விர‌ ஒதுங்கிக் கொண்டா உத‌வுவ‌து?"


" நீ என்ன‌த்தைய‌டி கிழிக்க‌ப் போகிறாய்?" என்றாள் காமாட்சி.


"ஏன் கிழிக்க‌ மாட்டேன்? வேறு எதுவும் இல்லையானால் பாண்டேஜ் துணியையாவ‌து நுனியில் கிழிச்சுக் க‌ட்டுப் போடுவேன். அடிபட்ட சோல்ஜர்களுக்கு நர்ஸாயிருந்து சேவை புரிவேன்.ஏர் ரெயிட் வார்டனாக இருந்து பணியாற்றுவேன். இன்னும் எத்தனையோ விதங்களில் உதவலாம். மனசு வைக்கணும்.தைரியமும் இருக்கணும்.அவ்வள‌வுதான்." "சிவ சிவா, வெள்ளைக்கார சோல்ஜர்களைத் தொட்டுக் கட்டுப் போடவா? புத்தி போகிறதே, உனக்கு?"


"வெள்ளைக்காரா மட்டும்தானா அம்மா? எத்தனையோ இந்திய சிப்பாய்கள் உயிரைத் திரணமாக மதித்து யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்களே, அவர்களுக்கு உதவிவிட்டுப் போகிறேன்."


"கமலா! நீ சொல்வது ஒருவிதத்தில் சரிதான். ஆனால் யோசித்துப் பார். நம்மை அடிமைப்படுத்தியிருக்கிற ஆட்சிக்கு நாம் ஏன் உதவி செய்ய வேண்டும்?" என்றார் தந்தை மாசிலாமணி.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE


"உஷ்! மெள்ள‌ப் பேசுங்க.பஸ் பிரயாணிகளிலேயே யாராவது சி.ஐ. டி.இருந்து வைக்கப் போகிறான்" என்ற காமாட்சி அம்மாள், நாலா புறமும் மிரள மிரளப் பார்வையைச் செலுத்தினாள்.


"அப்படி நீங்கள் நினைத்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம் அப்பா. இப்போது உத்தரவு கொடுங்கள். எப்படியாவது இந்த நாட்டை விட்டுத் தப்பித்துக் கொண்டு போய் சுபாஷ்சந்திரபோஸ் படையிலே சேர்ந்து விடுகிறேன். அவர் என்னைப் பட்டாளத்திலே சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்றாள் கெஞ்சிக் கூத்தாடி நர்ஸாக ஊழியம் செய்யவாவது அனுமதி வாங்கிக் கொள்கிறேன்."


காமாட்சி அம்மாள் இப்போது ஓரேயடியாகப் பயந்து போய்க் கமலாவின் வாயைத் தன் வலக் கரத்தினால் பொத்தினாள்."காலம் கெட்டுக் கிடக்குடி. கதர்ச்சட்டை போட்டுக்கொண்டுகூட, சி.ஐ.டி.கள் உலவி வருகிறார்களாம். ஊர் போய்ச் சேருகிற வரையில் ஒரு வார்த்தை பேசப்படாது நீ ! புரிந்ததா? உம்!" என்று ரகசியக் குரலில் மிரட்டினாள்.


" பேச வேண்டாம் என்றாள் பேசாமல் இருந்து விட்டுப் போகிறேன். ஆனால் நாம் பயந்து கொண்டுதான் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையைமட்டும் என்னிடம் மறைக்கப் பார்க்க வேண்டாம். நான் ஒன்றும் விசுவைப் போல் குழந்தை இல்லை."


"காமாட்சி! கமலாவை என்னவோன்னு நினைத்தேன். எப்படிப் பேசுகிறாள் பார்த்தாயா? இனிமேல் இவளைக் குழந்தையாக நினைக்கக் கூடாது. எல்லா விஷயங்களையும் இவளுக்கும் தெரியப்படுத்தி மனம் விட்டுப் பேச வேண்டியது தான்."


"யார் நினைத்தார்கள், குழந்தை என்று? இரண்டு வருஷமாகச் சொல்லிக்கொண் டிருக்கிறேன். நல்ல வரனாகப் பாருங்கள் என்று. நீங்கதான் எப்ப கேட்டாலும் அவள் என்ன குழந்தைதானே இன்னும் இரண்டு வருஷம் போகட்டும் என்று தட்டிக் கழித்துக் கொண்ட்டிருந்தீங்க."


"கமலா! அம்மா சொல்வதைக் கேட்டாயா? அதையும் உத்தேசம் பண்ணித்தான் இப்போ கிராமத்துக்குக் கிளம்பியிருக்கோம். என் அண்ணா வேதாசலத்தை உனக்கு ஞாபகம் இருக்கோ. என்னமோ? ரொம்ப நாளாச்சு அவன் பட்டினத்துக்கு வந்து. அவன் வீட்டிலே போய் இந்த யுத்தம் முடிகிற வரை இருந்து கொண்டு அப்படியே உனக்கும் ஒரு நல்ல வரனைப் பார்த்து அங்கேயே கல்யாணத்தை முடித்துவிடப் போகிறேன்."


"அப்பா, ஏன் அதோடு நிறுத்தி விட்டீர்கள்? அப்புறம் எனக்கு வளைகாப்பு சீமந்தம் நடந்து, எனக்குப் பெண் குழந்தை பிறப்பதைக் கண் குளிரப் பார்த்து, அவளுக்கு ஆண்டு நிறைவு நடத்தி அட்சராப்பியாசம் செய்து, அப்புறம் பெண்கள் ஆறு கிளாஸுக்கு மேல் படிக்கக் கூடாதென்று சொல்லிப் படிப்பை நிறுத்தி, அவளை யார் தலையிலாவது கட்டி, அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து......"


"என்னம்மா அடுக்கிக் கொண்டே போகிறாய்?"


"பின்னே? பெண் ஜன்மத்துக்கு வேறு வேலை என்னப்பா? அடுப்பை ஊதுவதும் குழந்தை பெறுவதும் தானே?"


"கமலா! உன் மனம் இப்போது சரியில்லை. உன்னுடைய ஆசைப் பூனை மாலுவை விட்டுப் பிரிஞ்சு வந்த துக்கத்திலே என்னென்னவோ பேசுகிறாய்" என்றார் மாசிலாமணி.


"இந்தச் சமயத்தில் அதோ பாருங்க, அதோ!" என்றாள் காமாட்சி.


"என்ன? என்ன?" என்றனர் மற்ற இருவரும் ஏக காலத்தில். காமாட்சி அம்மாள் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தார்கள். ஏழெட்டுக் குரங்குகள் நெடுஞ்சாலையில் ஒரு பக்கத்து மரத்திலிருந்து இறங்கிச் சாலையைக் கடந்து எதிர்ப் பக்கம் சென்றன. அங்கே ஒரு மரத்தின் மேல் ஏறத் தொடங்கின. அந்த மரத்தில் இருந்த பறவை இனங்கள் தங்கள் அமைதிக்குப் பங்கம் வந்து விட்டதாக ஏக காலத்தில் கிறீச்சிட்டு அலறின. அந்தக் குரங்குகளுள் சில தாய்க் குரங்குகள், அவற்றின் வயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தன. அதைக் கவனித்த கமலா, "என்னைப் போன்ற பெண்களுக்கும் அந்தக் குரங்குகளுக்கும் என்ன வித்தியாசம்?" என்று முணுமுணுத்தாள்.


அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவர் போல், "அந்த இரட்டை வால் எங்கே?" என்று சத்தம் போட்டார் மாசிலாமணி.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE


குரங்குகளைப் பார்த்ததும்தான் பிள்ளை ஞாபகம் வந்ததாக்கும்?" என்று முகத்தைத் தோளில் இடித்துக் கொண்டாள் காமாட்சி.


"பஸ்ஸைவிட்டு இரங்காதேடா என்று அடித்துக் கொண்டேன். கேட்டானா? இப்போ பஸ் திடீரென்று கிளம்பி ஓட ஆரம்பித்து விட்டால் என்ன பண்ணுவது?" என்று அங்கலாய்த்தாள்.


"நான் பார்த்து விட்டு வருகிறேன்" என்று கூறிப் பெற்றோர் தடை ஏதும் விதிப்பதற்கு முன்னால் 'சரேல்' என்று எழுந்து இறங்கி விட்டாள் கமலா. அவளுக்கு உடலும் உள்ளமும் வேக வேக உள்ளே அமர்ந்திருப்பது வேதனையாக இருந்தது.


வெளியே சென்று பார்த்தவள் முகத்தில் புன்னகை அரும்பியது. சில நிமிஷங்களுக்குப் பிறகு மறுபடியும் பஸ்ஸுக்குள் ஏறி வந்து, "அப்பா தம்பி விசு குறைச்சலா மார்க் வாங்கும் போதெல்லாம் ஒன்றுக்கும் பிரயோசனமில்லை; உருப்படாத கழுதை என்று திட்டுவீர்களே, நீங்க நினைத்தது தப்பு. அவன் எப்படியும் பிழைத்துக் கொள்வான். கரி பஸ்தானே இது? பின்னாலே இருக்கிற இஞ்சினின் பிடியைப் பற்றிச் சுழற்றிக் கொண்டிருக்கிறான். 'ஙொய், ஙொய்' என்று சத்தம் கேட்கிறதே அது தான். கண்டக்டருக்குக் கை வலி எடுத்து விட்டதாம். இவன் தன் கை வரிசையைக் காட்டுகிறான்.


"இப்படி எதையாவது பண்ணிவிட்டு இராத்திரி முழுவதும் கைவலி, கால் வலி என்று அழுது என் பிராணனை வாங்கப் போகிறான்" என்று காமாட்சி அம்மாள் அலுத்துக் கொண்டாள். "அது கிடக்கட்டும், இப்போ நிலைமை என்ன? பஸ் புறப்படுமா, இல்லையா?"


அவர் கேள்விக்குப் பதில் சொல்வதுபோல் பஸ் கண்டக்டர் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு பஸ்ஸுக்குள் ஏறி வந்தார். "ஸார்! இஞ்சின் ரிப்பேர். அவங்கவங்க பஸ் டிக்கட்டை எடுத்துக் கொடுத்தீங்கன்னா பாக்கிப் பணம் வாபஸ் பண்ணுகிறேன். அல்லது அடுத்த பஸ் வரும் வரை காத்திருங்க. இடமிருந்தால் ஏறிக் கொள்ளலாம்" என்றார்.


"அட கடவுளே!" என்று மாசிலாமணி, "இந்த இழவுக்காகத்தானா அத்தனை பாடுபட்டு கறுப்பு மார்க்கெட்டில் இரண்டு மடங்கு தொகை கொடுத்து டிக்கெட் வாங்கினேன்!"


"அது என்ன கல்யாணம்? என்னிடம் சொல்லவே யில்லையே?" என்றாள் காமாட்சி அம்மாள்.


"சொன்னால் நீ எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் சம்பாதித்துத் தந்து விடப் போகிறாயாக்கும்" என்று கடுகடுத்தார் மாசிலாமணி. ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை. 'உட்கார இடமிருந்தால் போதும்' என்றேன். 'ஒண்டிக் கொள்ளக் கூட இடம் கிடையாது' என்று சொல்லிட்டான். அப்புறம்தான் இந்த பஸ்ஸுக்கு டிக்கெட் வாங்கித் தொலைச்சேன், அதுவும் பிளாக்கிலே."


"எந்த வேளையில் வீட்டை விட்டுப் புறப்பட்டோமோ?" என்றாள் காமாட்சி. "பஞ் சாங்கத்தைப் பார்த்தீங்களா?"


"பார்க்காமல் என்ன? வீட்டை விட்டுக் கிளம்பியது நல்ல நேரம் தான். ஆனால் பஸ் புறப்பட்டது சரியான ராகு காலத்தில். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என்றார் மாசிலாமணி.