அத்தியாயம் 1

19,094 படித்தவர்கள்
5 கருத்துகள்

எட்டு நாள் வாய்தா

சவண்ண செட்டியார் என்ற பொய்ப் பெயரை வகித்திருந்த கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் முன்னோர் அதிகாரத்தில் துரைராஜாவினது பங்களாவிற்கு வந்து அவனோடு சம்பாஷித்திருந்து, அவனது உண்மையான யோக்கியதை எவ்வளவென்பதை அவனது வாய் மூலமாகவே உணர்ந்து கொண்டு, வக்கீல் அருணகிரிப்பிள்ளையினது ஜாகைக்குப் போய்க் கல்யாணியம்மாள் மதனகோபாலனது விஷயத்தில் அவதூறு சொல்லி அவனைக் கொல்ல முயன்றதைக் குறித்து அவளுக்கு ஒரு நோட்டீஸ் தயாரித்து அனுப்பியபின், வக்கீல் சிவஞான முதலியாரது ஜாகையை நோக்கிச் சென்றார் அல்லவா? முன்னதிகாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலாம் ராவுத்தர் மாரமங்கலத்தாரது பங்களாவில் வந்திருந்து, கடைசியாக கல்யாணியம்மாளையும், அவளது இரண்டு புத்திரிகளையும் மோட்டார் வண்டியில் வைத்து அழைத்துக் கொண்டுபோன தினத்திற்கு முதல் நாளின் பிற்பகலிலே தான் பசவண்ண செட்டியார், முன் சொல்லப்பட்டபடி, சிவஞான முதலியாரது வீட்டிற்குச் சென்றது. அவ்வாறு சென்ற பசவண்ண செட்டியார் அவரது ஜாகையை அடைந்து வாசலிலிருந்த வேலைக்காரனைப் பார்த்து, “ஏனப்பா! வக்கீல் ஐயா உள்ளே இருக்கிறார்களா? இருந்தால், அவர்களிடம் போய், மைசூரிலிருந்து ஒருவர் அவர்களைப் பார்க்க வந்து வெளியில் இருப்பதாகச் சொல்லிவிட்டு வா” என்று நயமாகக் கூறினார். அதைக்கேட்ட வேலைக்காரன் அவரது சிறப்பான தோற்றத்தைக் கண்டு அவர் யாரோ தக்க பெரிய மனிதர் என்று யூகித்துக் கொண்டு நிரம்பவும் பணிவாக எழுந்து நின்று, “சாமீ! எசமான் உள்ளறத்தான் இருக்கறாங்க. இதோ போயி சொல்லிப்புட்டு வாறேனுங்க” என்று கூறிய வண்ணம் அவ்விடத்தை விட்டு விரைவாக மேன்மாடத்திற்குப் போய் சங்கதியைச் சொல்ல, அப்போதே தமது தினபடிக் கச்சேரி வேலையை முடித்துக் கொண்டு திருப்பி வந்து சாய்மான நாற்காலியில் சாய்ந்து, தமது மனைவியோடு சந்தோஷமாகப் பேசிய வண்ணம் இளைப்பாறிக் கொண்டிருந்த சிவஞான முதலியார், அதைக் கேட்டவுடனே திடுக்கிட்டு, “யாரது? மைசூரிலிருந்தா?” என்று கேட்டுக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். அதுகாறும் சந்தோஷத்தினால் மலர்ந்திருந்த அவரது வதனம் உடனே சுருங்கியது. அவர் மிகுந்த சஞ்சலம் அடைந்தவர் போலக் காணப்பட்டார். வேலைக்காரன், “ஆமாங்க. மைசூருலே இருந்துதான் வந்திருக்காங்களாம்” என்றான். அந்த வார்த்தையைக் கேட்ட சிவஞான முதலியார் ஒருவித அச்சமும் கலக்கமும் திகைப்பும் அடைந்தவராய் இரண்டொரு நிமிஷ நேரம் மெளனமாக இருந்த பின், “சரி; நீ போய் அவரை மேலே வரச் சொல்” என்று கூறி, அவனை அனுப்பி விட்டுத் தமது மனைவியை வீட்டிற்குள் போகச் செய்தபின் ஒருவாறு தம்மைச் சமாளித்துக் கொண்டு தமது சஞ்சலத் தோற்றத்தை மறைத்துக் கொண்டவராய் அந்த நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்தார். 

அடுத்த நிமிஷம் செட்டியார் மேன்மாடத்திற்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்ட சிவஞான முதலியாரது சஞ்சலமும் கவலையும் உடனே விலகின. ஏனென்றால், அப்போது வரப் போகிறவர் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் என்று நினைத்தே வக்கீல் நிரம்பவும் கலக்கமடைந்திருந்தார். ஜெமீந்தார் மிகுந்த அழகும், வசீகரமும், சதைப்பிடிப்பான அங்கங்களும் பெற்றிருந்த சுந்தர புருஷர். அவர் எப்போதும் விபூதி பூசிக்கொண்டிருப்பார். ஆனால், இப்போது வந்தவர் சுருங்கித் தளர்ந்த சதையும், ஒட்டிப்போன தாடைகளும், மீசை தாடிகளும், கருத்துப் போன உடம்பும், கிழத்தன்மையும் அடைந்தவராகவும், நெற்றியில் பட்டையான நாமம் தரித்தவராகவும் இருந்ததைக் காணவே, இவர் கிருஷ்ணாபுரத்து ஜெமீந்தாரல்ல என்று சிவஞான முதலியார் எண்ணிக் கொண்டார். உடனே அவரது அச்சம் விலகியது; இயற்கை மனோதிடமும் உற்சாகமும். கம்பீரத் தோற்றமும் திரும்பின. அவர் தமக்கெதிராக நின்ற பசவண்ண செட்டியாரைச் சந்தேகமான பார்வையாகப் பார்த்து, “வாருங்கள்; அதோ இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள். நீங்கள் மைசூரிலிருந்தா வருகிறீர்கள்? உங்களை கிருஷ்ணாபுரத்து ஜெமீந்தார் அனுப்பினாரோ?” என்று நயமாக மொழிந்தார். அதைக் கேட்ட பசவண்ண செட்டியார், அங்கே கிடந்த ஒரு நாற்காலியின் மேல் அமர்ந்தவராய், “ஆமாம்; அங்கே இருந்து தான் என்னை அனுப்பியது. வக்கீல் சிவஞான முதலியார் என்பது தாங்கள் தானே?” என்று அவரை அறியாதவர் போல வினவினார். 

சிவஞான முதலியார், “ஆமாம்; நான்தான் சிவஞான முதலியார்” என்றார். பசவண்ண செட்டியார் சந்தோஷமும் புன்னகையும் தமது முகத்தில் தோற்றுவித்து, “சரி; நெடுநாளாகத் தங்களைப் பார்க்க வேண்டும் என்று ஒர் அவா இருந்தது. இப்போது தங்களைக் கண்டது நிரம்பவும் சந்தோஷமாயிற்று. கிருஷ்ணாபுரத்து ஜெமீந்தார் தங்களுக்கு என் மூலமாக ஒரு கடிதம் கொடுத்தனுப்பி இருக்கிறார்கள். அது இதோ இருக்கிறது” என்று கூறிய வண்ணம் தமது சட்டைப் பைக்குள் கையை நுழைத்து, ஒரு கடிதத்தை எடுத்து, முதலியாரிடத்தில் மரியாதையாக நீட்ட, அவர் அதை வாங்கிக் கொண்டார். அவ்வாறு அவர் வாங்கியபோது, அவரது கைகள் வெடவெடவென்று ஆடின. முகமும் மாறுபட்டுப் போயிற்று. அவர் உடனே நிமிர்ந்து உட்கார்ந்து அந்தக் கடிதத்தைப் பிரித்தெடுத்து வைத்துக்கொண்டு படிக்கலானார். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது: சென்னை மைலாப்பூரிலிருக்கும் ஜெமீந்தார் ஸ்ரீ சிவஞான முதலியார் அவர்களுக்கு, - மைசூரிலிருக்கும் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் சோமசுந்தர துரை எழுதிக் கொண்ட விக்ஞாபனம். உபயசேமம். இந்தக் கடிதத்தைக் கொண்டு வருகிறவரான ஸ்ரீ பசவண்ண செட்டியார் அவர்கள், நான் இந்த ஊரில் பல வருஷங்களாகச் செய்து வரும் சந்தனக்கட்டை வியாபாரத்தில், என்னோடு கூட்டாளியாக இருந்து வியாபாரம் செய்து வருபவர்கள். இவர்கள் தக்க பிரபுத்துவமும் கண்ணியமும் வாய்ந்த பெருத்த தனிகர்; எங்களுடைய வர்த்தகத்தை நடத்த சென்னப்பட்டணத்தில் ஒரு முதலாளி இருப்பது அவசியமாக இருப்பதால், இவர்கள் அங்கேயே ஜாகை வைத்துக் கொண்டு இருக்க வந்திருக்கிறார்கள்; இவர்களுக்கு அறிமுகமானவர்கள் அந்த ஊரில் எவருடை இல்லை ஆகையால், தாங்கள் இவர்களுக்குத் தேவையான செளகரியங்களையும் சகாயங்களையும் செய்து கொடுக்குமாறு நிரம்பவும் கேட்டுக்கொள்ளுகிறேன்.” அது நிற்க, என்னுடைய குழந்தைகளுக்காக நான் தங்களிடத்தில் ஒப்படைத்து வைத்திருக்க ஐந்து லட்ச ரூபாய்க்கு நான் கணக்குக் கேட்டதற்குத் தாங்கள் தருவதாக நெடுங்காலமாகச் சொல்லிக்கொண்டே வந்து, கடைசியாகத் தாங்கள் எனக்கெழுதிய கடிதத்தில், கணக்குகள் மிகவும் சிக்கலாக இருப்பதால், நாமிருவரும் நேரில் கண்டு பேசி அதை பைசல் செய்துகொள்வதே செளகரியமானதென்றும், அப்படிப்பட்ட சந்தர்ப்பம் வாய்க்கும்போது; கணக்குகளை எல்லாம் ஒப்புக்கொடுப்பதாகவும் எழுதினர்கள்; அப்படி நீங்கள் எழுதி ஐந்து வருஷ காலமாகிறது! என்னுடைய உயிருக்குயிராக இருந்த என் சம்சாரத்தையும், கந்தருவக் குழந்தைகள் போலிருந்த என் செல்வக் குழந்தைகளையும் நான் பறிகொடுத்த இடமாகிய அந்த சென்னப்பட்டணத்தின் முகத்தில் நான் இனி விழிக்கிறதே இல்லை என்று உறுதி செய்து கொண்டிருந்தது பற்றி நானே நேரில் வந்து கணக்குகளைப் பைசல் செய்து கொள்ளக்கூடாமலிருக்கிறது; தாங்கள் இங்கே வருவதும், நான் எதிர்பார்க்கத் தகாத பெருத்த விஷயம்; ஆகவே, என்னுடைய நண்பரும் கூட்டாளியுமான இந்தச் செட்டியாரவர்களிடத்தில் தாங்கள் என்னுடைய கணக்குகளை எல்லாம் ஒப்புக்கொடுத்து மிகுதியுள்ள பணத்தையும் செலுத்திவிடக் கேட்டுக் கொள்ளுகிறேன். அடிக்கடி தங்களுடைய சேமத்தைப் பற்றியும் அறிந்துகொள்ள மிகுந்த அவாவுள்ள, தங்களுடைய ஆப்த நண்பன், சோமசுந்தர-துரை - என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த சிவஞான முதலியார் தம் மனத்திற்குள் கவலை அடைந்தார் ஆனாலும், வெளித்தோற்றத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவர் போல நடித்து நலிந்த புன்னகை செய்தவராய் செட்டியாரை நோக்கி, “அப்படியா! தாங்கள் ஜெமீந்தாருடைய கூட்டாளியா! நிரம்பவும் சந்தோஷமாயிற்று! தாங்கள் இந்த ஊருக்கு இன்றைய தினந்தான் வந்தீர்களோ?” என்றார்.      

பசவண்ண செட்டியார்: இல்லை, இல்லை. நான் இந்த ஊருக்கு வந்து நாலைந்து நாட்களாகின்றன. வந்தவுடனே இங்கே வந்து தங்களைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. ஏனென்றால், நான் இருப்பதற்கு வசதியான நல்ல ஒரு பங்களாவைச் சொந்தத்திலேயே வாங்க வேண்டும் என்பது என்னுடைய அவா. அதற்காக ஜெமீந்தார் சில தினங்களுக்கு முன்னாகவே அவருடைய நண்பரான வேறொருவருக்கு எழுதியிருந்தார். நான் இங்கே வந்தவுடனே அந்த மனிதரைப் பார்த்தேன். அதிர்ஷ்டவசமாக இந்தச் சந்தர்ப்பத்தில் இரு பங்களா விலைக்கு வந்தது. அதை நேற்றைய தினந்தான் வாங்கினேன். அதன் சம்பந்தமாக இரண்டு மூன்று நாட்களாக அலைந்து கொண்டிருந்தேன். அது ஒருவிதமாக முடிந்தவுடனே புறப்பட்டுத் தங்களைப் பார்க்க வந்தேன். வக்கீல்: ஒகோ! அப்படியா நிரம்பவும் சந்தோஷம்! அந்த பங்களா எங்கே இருக்கிறது? 

செட்டியார்: இந்த மைலாப்பூரிலே சான்தோமில் கட்ற்கரையின் மேல் இருக்கிறது. அது கால் மயில் நீளம் கால் மயில் அகலம் இருக்கிறது. அதன் பெயர் மனோகர விலாசம் என்று வாசலில் செதுக்கப்பட்டிருப்பதை நீங்கள் கூடப் பார்த்திருக்கலாம். 

வக்கீல்: (பெரிதும் வியப்பும் சந்தோஷமுமடைந்து) அப்படியா சங்கதி! இந்த மனோகர விலாசத்தைத் தாங்களா வாங்கி இருக்கிறீர்கள்! நல்லதாயிற்று. எனக்கு மிகவும் சமீபத்திலேயே வந்துவிட்டிர்கள்! அது ஹதராபாத் சமஸ்தானத்து மந்திரியின் அரண்மனையல்லவா? அதன் விலை எழுபத்தைந்து லட்சம் என்றல்லவா சொல்லிக் கொண்டிருந்தார்கள். பேஷ்! பேஷ்! நல்ல பெரிய இடமாக வாங்கி இருக்கிறீர்கள்! அப்படியானால் தாங்களும் பெருத்த கோடிசுவரர் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட உண்மையான பிரபுக்களுடைய சிநேகம் சாதாரணமாகக் கிடைக்கக் கூடியதல்ல. தங்களைக் கண்ட இந்த தினம் சுபதினம் என்றே நினைக்கிறேன். தாங்கள் அந்த பங்களவை எவ்வளவுக்கு வாங்கினிகள்? 

செட்டியார்: அறுபது லட்சத்துக்குத் தான் வாங்கினேன்; அதிகமில்லை. ஆனால், ஒரு பெருத்த அரண்மனை போல இருக்கும் அந்த பங்களவை நான் வாங்கிவிட்டேனே யொழிய, எனக்கும் என்னுடைய கூட்டாளியைப் போல, பெண்டு பிள்ளைகள் எவரும் இல்லை. அப்படி இருந்தாலும், நல்ல முதல் தரமான இடமாவது ஒன்று இருக்க வேண்டும் என்ற ஒரு பைத்தியம் மாத்திரம் எனக்குண்டு. அதனால், நான் அதை வாங்கினேன். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

வக்கீல்: தாங்கள் செய்தது நல்ல காரியந்தான். அந்த இடம் சாதாரணமாக எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதல்ல. இதுவரை'யில் அதை வாங்க, எத்தனையோ ராஜாக்களும், ஜெமீந்தார்களும் பிரயத்தனப்பட்டுப் பார்த்துவிட்டார்கள். எவருக்கும் கிடைக்கவில்லை. பத்திரமெல்லாம் முடிந்து போய்விட்டதா? செட்டியார்?. அதெல்லாம் நேற்றைய தினமே முடிந்து ரிஜிஸ்டரும் ஆகிவிட்டது. 60 லட்சம் ரூபாயையும் நேற்றைய தினந்தான் செலுத்தினேன். பங்களாவின் திறவுகோல் இதோ இருக்கிறது பார்த்தீர்களா? இன்றைய காலையிலேயே அதை ஒப்புக்கொண்டு புண்ணியாகவாசனமும் நடத்திவிட்டேன்; இப்போது நேராக அங்கே தான் குடி இருக்கப் போகிறேன். 

வக்கீல்: சரி; நிரம்ப சந்தோஷம். ஆனால் அப்படிப்பட்ட இடத்தில் பெண்களும் பிள்ளைகளும் ஏராளமாக இருந்தால், அது நிரம்பவும் ஆனந்தமாக இருக்கும். அது ஒன்று தான் தங்கள் விஷயத்தில் குறை; தாங்கள் தனியாகப் போகிறீர்கள்; தங்களுக்கு வேண்டிய ஆள் மாகாணங்களுக்கெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறீர்களா? 

செட்டியார்: ஒ! செய்திருக்கிறேன். எல்லாரும் இன்னம் ஒரு நாழிகையில் வந்து சேர்ந்துவிடுவார்கள். 

வக்கீல்: அப்படியானால் பரவாயில்லை. தாங்கள் இந்த நாலைந்து நாட்களாக எங்கே ஜாகை வைத்துக் கொண்டிருந்தீர்களோ?

செட்டியார்: கோமளேசுவரன் பேட்டையில் சுந்தர விலாஸம் என்று ஒர் இடம் இருக்கிறது; அதிலிருந்தேன். 

வக்கீல்: அதிலிருப்பவர் தான் தங்களுக்கு இந்த பங்களாவை வாங்கிக் கொடுத்த நண்பர் போலிருக்கிறது? 

செட்டியார்: இல்லை, இல்லை. அதிலிருப்பது என்னுடைய கூட்டாளியைச் சேர்ந்த மனிதர். அவர் யார் என்பதையும், சுருக்கமாகச் சில வார்த்தைகளில் நான் உங்களுக்குச் சொல்லி விடுகிறேன். என்னுடைய கூட்டாளி பதினெட்டு வருஷங்களுக்கு முன் அவருடைய யெளவன சம்சாரத்தை இந்த ஊரில் இழந்த பின், அந்த விசனத்தைப் பொறுக்கமாட்டாமல் உண்மையிலேயே பைத்தியங் கொண்டவராக இருந்தாராம். அவர் இந்த ஊரைவிட்டு துர தேசமாகிய வெளியூருக்குப் போயிருந்தால் அந்தப் பைத்தியம் நீங்குமென்று டாக்டர்கள் சொன்னார்களாம். அப்போது உயிர் ஒன்றும் உடலிரண்டுமென எவ்வளவு அன்னியோன்னியமான சிநேகிதர்களாக அவரும் நீங்களும் இருந்தவர்களாம். அவருடைய தங்கை, தம்பியின் குடும்பத்தார் முதலிய எல்லோருக்கும் அவருக்கும் மனஸ்தாபம் இருந்ததால், அவர் உங்களுடைய ஆதரவிலேயே இருந்தாராம். அவர்களுடைய சுந்தரமான குழந்தைகள் இரண்டும் தங்களுடைய பாதுகாப்பிலேயே இருந்தார்களாம். அப்போது டாக்டர்களின் புத்திமதிப்படி அவரைத் தாங்கள் மைசூருக்கு அனுப்பி வைத்தீர்களாம். குழந்தைகள் மாத்திரம் தங்களிடத்திலேயே இருந்தார்களாம். ஒரு வருஷ காலத்தில் அவருக்குப் பைத்தியம் தெளிவடைந்து போய்விட்டதாம். அவர் உடனே இங்கே வரவும், குழந்தைகளைப் பார்க்கவும் ஆசைப்பட்டாராம். குழந்தைகள் அவருடைய சம்சாரத்தைப் போல அதிக சுந்தரம் பொருந்தியவர்களாக இருந்ததனால், அவர்களைக் கண்டால் மறுபடியும் பைத்தியம் திரும்பி விடுமென்று டாக்டர்கள் சொன்னதாகவும், இன்னம் சில வருஷ காலம் அங்கேயே இருந்து வருவது நல்லதென அவருக்குக் கடிதம் எழுதினர்களாம். 

அந்தச் சமயத்தில் தங்களுடைய விருப்பத்தின்படி குழந்தைகளின் சவரக்ஷணைக்காக அவர் உங்கள் பேருக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு உண்டியல் அனுப்பினாராம். அதன் பிறகு ஆறுமாச காலத்திற்குள், உங்களிடத்திலிருந்து வந்த கடிதத்தில், குழந்தைகளிரண்டும் ஒரே தினத்தில் வாந்தி பேதி கண்டு இறந்து போய்விட்டதாகவும், பிரேதங்கள் கொளுத்தப்பட்டுப் போனதாகவும் எழுதினர்களாம். அதைக் கேட்ட முதல் அவரது மனமும் தேகமும் இடிந்து பாழடைந்துபோய், அவர் கேவலம் பைத்தியக்காரர் போலவே இருந்து வந்தார். அதற்கு இரண்டு வருஷ காலத்துக்குப் பிறகு ஓரிடத்திலிருந்து இரண்டு அநாதைக் குழந்தைகள் அவருக்குக் கிடைத்தார்கள். 

அண்ணனும் தங்கையுமான அந்தக் குழந்தைகள் அவருடைய குழந்தைகள் போலவே அதிக ரூபலாவண்ணியம் வாய்ந்தவர்களாக இருந்தமையால், அவர் அவர்களை வாங்கி, தம்முடைய வாஞ்சையையெல்லாம் அவர்களின் மேல் வைத்து வளர்த்து அவர்களை அபிமான புத்திரன் புத்திரியாக மதித்து வந்தார். அவர்கள் இருவரும் நற்குண நன்னடத்தைகளுக்கு இருப்பிடமாகவும், அழகும், விவேகமும் பரிபூரணமாக நிரம்பப் பெற்றவர்களாகவும் வளர்ந்தார்கள். சென்ற ஏழெட்டு மாச காலத்துக்கு முன் வரையில் அவர்கள் அங்கேயே இருந்தார்கள். ஆனால், அவர்களைப் பார்க்கும்போதெல்லாம், அவருக்குத் தம்முடைய மனைவி மக்களின் நினைவு வந்து வந்து அடிக்கடி போராடியதை கருதி இவர்கள் தம்மை விட்டுப் பிரிந்து இந்த ஊரில் சொற்ப காலம் இருக்கும்படி அனுப்பி வைத்தார். இவர்கள் இருவரும் கோமளேசுவரன் பேட்டையில் அந்த சுந்தர விலாஸ்த்தில் இருந்து வந்தார்கள். நான் இப்போது அங்கே தான் இறங்கி இருந்தேன். ஆனால், அவர்களும் இனி என்னோடு இந்தப் புதிய பங்களாவில் வந்திருக்கப் போகிறார்கள். நாளைக்குக் காலையில் நாள் நல்லதாக இருப்பதால் அவர்கள் அப்போது தான் வரப் போகிறார்கள். ஆகையால் எனக்கு இந்தப் புதிய பங்களா அவ்வளவு தனிமையாகத் தோன்றாது. 

வக்கீல்: இந்த மாதிரி இரண்டு குழந்தைகளை வாங்கி அபிமான புத்திரன் புத்திரிகளாக வளர்த்து வந்த விஷயத்தைப் பற்றியாவது, அவர்களை இந்த ஊருக்கு அனுப்பிய விஷயத்தைப் பற்றியாவது அவர் எனக்கு இதுவரையில் தெரிவிக்கவே இல்லை. அவர் எனக்கு இதுவரையில் எத்தனையோ கடிதங்கள் எழுதி அனுப்பி இருக்கிறார். ஒரு கடிதத்திலாவது இந்தச் சங்கதியைப் பற்றி ஒரு கோடிகூடக் காட்டவில்லையே!

செட்டியார்: அவருடைய பரிதாபகரமான நிலைமை தங்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் தாங்கள் அவர்மேல் குறை கூறலாமா? அவருடைய அருமையான மனைவி மக்கள் எல்லோரும் அகால மரணமாகப் போய் அவரை ஆராத் துயரத்தில் ஆழ்த்திவிட்டார்கள், அவருக்கு உயிரோடிருக்கிற உறவினர்கள் எல்லோரும் சத்துருக்களாக இருக்கிறார்கள். அவருடைய சமஸ்தானமோ ஒரு பக்கத்தில் இருக்கிறது. அவரோ வேறோரிடத்திலிருந்து வனவாசம் பண்ணிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சங்கடமான நிலைமையில், அவர் இந்த சந்தனக்கட்டை வர்த்தகத்தில் இறங்கினால், அவருடைய மனசும் நினைவும் அந்த விஷயத்தில் செல்லுவதால், அவருடைய பழைய நினைவை மறந்து பைத்தியங் கொள்ளாமல் இருப்பார் என்று நினைத்து அதைச் செய்து வருகிறார். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அவருக்கு இப்போதிருக்கும் ஞாபகம் அடுத்த நிமிஷத்தில் இருக்கிறதில்லை. அவரைத் தாங்கள் நேரில் பார்ப்பீர்களானால் தாங்கள் அவர்மேல் இப்படியெல்லாம் குறை கூறமாட்டீர்கள். 

வக்கீல்: (சந்தோஷமும் புன்னகையும் காட்டி) சரி; எப்படி இருந்தாலும் கூட்டாளியல்லவா, தாங்கள் விட்டுக்கொடுத்துப் பேசலாமா; ஆகையால் தாங்கள் அவருக்காகப் பரிந்து பேசுவது நியாயந்தான். இப்போது தாங்கள் சொன்ன ஒரு சங்கதி முக்கியமாக என் விஷயத்தில் பொருத்தமாக இருக்கிறது. அவருக்கு இந்த நிமிஷத்தில் இருக்கும் ஞாபகம் அடுத்த நிமிஷத்தில் இல்லை என்று சொன்னீர்கள் அல்லவா. அது சரியான பேச்சு; எப்படி என்றால், அவருடைய குழந்தைகளை போஷிப்பதற்காக அவர் ஐந்து லட்சம் ரூபாய் என்னிடத்தில் கொடுத்ததாகவும், அப்படிக் கொடுத்த ஆறுமாச காலத்துக்குள் குழந்தைகள் இறந்து போய்விட்டபடியால், அந்தப் பணத்தில் மிகுதி இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார் எனறீர்களல்லவா. அதையும் அவர் ஞாபகப் பிசகாகச் சொல்லி இருக்கிறார். அந்த ஐந்து லட்சம் ரூபாய் வந்த பின் ஆறுமாச காலத்தில் குழந்தைகள் இறந்தது உண்மைதான். ஆனால், அதற்கு முன் அவர் பைத்தியங் கொண்டிருந்த காலத்தில் டாக்டர்களுக்கெல்லாம் பணத்தை வாரி இறைத்தபோது ஏற்பட்ட கடன்களே அபாரமாக இருந்தன. கடன்கள் இந்த ஐந்து லட்சத்திலிருந்து தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதுபோக மிகுதி இருந்த தொகை மிகவும் சொற்பமே. அது அநேகமாகக் குழந்தைகளுக்கே செலவு செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கும் எனக்கும் இருந்த சிநேகத்துக்கும், அவருக்கும் அவருடைய குடும்பத்தார்களுக்கும் வந்த பெருத்த விபத்துகளில் நான் பட்ட பாடுகளுக்கும், அவர் இந்த அற்பத் தொகை விஷயத்தில் இவ்வளவு கண்டிப்பாக இருப்பது தான் எனக்குச் சகிக்க முடியாததாக இருக்கிறது. 

செட்டியார்: மெய்தான் மெய்தான். தாங்கள் அவருடைய விஷயத்தில் நிரம்பவும் பாடுபட்டிருக்கிறீர்கள் என்று அவரும் நன்றியறிதலோடு அடிக்கடி சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். அதனாலே தான் குழந்தைகள் இறந்து போய் சுமார் 15-வருஷ காலமாக அவர் பணத்தைப் பற்றிக் கண்டிப்பாகக் கேளாதிருந்தது. இதில் இன்னொரு விஷயமிருக்கிறது. இந்த ஐந்து லட்சம் ரூபாயை அனுப்பும்படி தாங்கள் அவருக்குக் கடிதம் எழுதினர்கள் அல்லவா. அந்த கடிதத்தை அவர் இன்னமும் வைத்திருக்கிறார். அதை நானும் பார்த்தேன். அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? அதற்கு முன் தங்கள் வசத்திலிருந்த அவருடைய பணங்களெல்லாம் டாக்டர்களுக்காகக் கொடுக்கப்பட்டுப் போய்விட்டன என்றும், அப்போது வேறே எவ்விதமான கடனும் இல்லை என்றும், அதற்கு மேல், குழந்தைகளின் போஷணைக்காக மாத்திரம் பணம் தேவை என்றும் தாங்கள் எழுதியிருக்கிறீர்கள்; அதனாலே தான், அவர் ஐந்து லட்சத்தில் மிகுதி இருக்க வேண்டும் என்று அபிப்பிராயப்படுவது; இரண்டு சிறிய குழந்தைகளுடைய அறுமாச கால போஜனைக்கு ஐந்து லட்சம் ரூபாய் பிடிக்குமா? மகாராஜாவின் வீட்டுக் குழந்தையாக இருந்தாலும், அவ்வளவு பெருத்த தொகையை எப்படித்தான் செலவழிக்க முடியும்! குழந்தைகளோ திடீரென்று வாந்தி பேதியால் இறந்து போய்விட்டார்கள்; கொஞ்ச காலம் வியாதியாகப் படுத்திருந்து இறந்து போயிருந்தார்கள் என்றால், அதன் பொருட்டாவது பணச் செலவு பிடித்திருக்கு மென்னலாம். 

வக்கீல்: (கலக்கமும் கவலையும் அடைந்து) ஒகோ! அப்போது நான் எழுதின கடிதத்தில் உள்ள விஷயங்களை வைத்துக் கொண்டு சொல்லுகிறாரோ! அந்தக் கடிதம் இப்போது தங்களிடத்தில் இருக்கிறதா?

செட்டியார்: அது அப்போது என்னிடத்தில் இல்லை; அதைத் தாங்கள் பார்க்க வேண்டுமானால், அவருக்குக் கடிதம் எழுதி நான் அதை வரவழைக்கிறேன். 

வக்கீல்: சரி; அப்படியே செய்யுங்கள்; அதை நானும் பார்க்க வேண்டும்; நான் அவருக்கு எழுதிய கடிதங்களுக்கு நகல்கள் வைத்துக் கொள்ளவில்லை; அவர் சொல்லுகிறபடி நான் கடிதத்தில் ஏதோ எழுதியிருப்பது ஒரு பக்கமிருக்கட்டும்; நான் அன்றாடம் எழுதி வைத்துள்ள கணக்குகள் இருக்கின்றன. அவரால் எனக்கு எழுதப்பட்ட கடிதங்களும் இருக்கின்றன. அவர் குழந்தைகளுக்கு அனுப்பிய தொகையில் வேறே சில மனிதர்களுக்கும் சிலசில தொகைகள் கொடுக்கும்படி அவர் எழுதியிருக்கிறார். ஆகையால் நான் அந்தக் கடிதங்களையும், கணக்குகளையும் தேடி எடுத்து வைக்கிறேன். தாங்களும் அந்தக் கடிதத்தை வரவழையுங்கள். இப்போது தாங்கள் கணக்குப் பார்க்க வருவது ஒரு நாள் முன்னாக எனக்குத் தெரிந்திருந்தாலும், நான் எல்லா தஸ்தாவேஜுகளோடும் சித்தமாக இருப்பேன். ஆகையால் தாங்கள் இன்னொரு நாள் குறிப்பிட்டால, அன்றைய தினம் நாம் இருவரும் சந்தித்துக் கணக்கைப் பைசல் செய்துவிடலாம். 

செட்டியார்: சரி; அப்படியே ஆகட்டும்; பதினைந்து வருஷமாகப் பைசல் செய்யப்படாமலிருந்த இந்த விஷயமானது இன்னம் சில நாள்கள் இருப்பது ஒரு பெரிய காரியமா! நான் கடிதத்தை வரவழைத்தவுடனே தங்களுக்குச் செய்தி சொல்லி அனுப்புகிறேன். பிறகு நாம் சந்திப்பதற்கு ஒரு நாள் ஏற்பாடு செய்து கொள்ளலாம். இப்போது எனக்கும் நேரமாகிறது. தங்களுடைய அவகாசத்திலும் அதிக நேரத்தை நான் அபகரித்து விட்டேன். தங்களுக்கு எவ்வளவோ ஜோலி இருக்கும்; நான் உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறேன். நமஸ்காரம் - என்று கூறிய வண்ணம் எழுந்திருக்க, வக்கீலும் அவருக்கு பதில் நமஸ்காரம் செய்து, அவரது ஏற்பாட்டிற்கு இணங்க, செட்டியார் அவ்விடத்தை விட்டு வெளிப்பட்டார்.

- தொடரும்