அத்தியாயம் 1

40.11k படித்தவர்கள்
12 கருத்துகள்

சென்னை, தியாகராயநகரில் உள்ள ஒய்யாரமான வீடுகளுக்கு இடையே, ‘மேக்கப்’ போட்ட கிழவி போலவும், ‘மேக்கப்’ இல்லாத இளம் பெண்களிலும் ‘நாட்டுக்கட்டை’ இளம் பெண் போல், ஒரு வீடு காட்சியளித்தது.பழைய கொத்தனாரும், புதிய என்ஜினீயரும், கலந்து ஆலோசித்துக் கட்டியது போல் தோன்றிய அந்த வீடு, பழமையாக இல்லாமலும், புதுமையாகப் போகாமலும், பார்ப்பதற்கு அழகாக இல்லையென்றாலும், பழகுவதற்கு சுவையாகவே இருந்தது.

மேல் மாடியில், மாதச் சம்பளக் குடும்பங்கள் இரண்டு ‘குடித்தனம்’ புரிந்தன.கீழே, வீட்டின் உரிமையாளர் சொக்கலிங்கம், குடும்ப சகிதமாகக் குடியிருந்தார்.‘மொசாயிக்’ போட்ட தரை. மின் விசிறிகள் சுழலும் அறைகள். ‘டன்லப்’ பில்லோ கொண்ட ஒரு கட்டில், டி.வி.செட்டு. அதே சமயம், பழையன கழிக்கப்படவில்லை என்பதைக் காட்டும் வகையில், இடையிடையே, கோணி மூட்டைகளும், பூனைக்குட்டிகளும், தகர டப்பாக்களும், ‘டிரம்’களும் தான்தோன்றித்தனமாகக் கிடந்தன.

மல்லிகா தனது அறையில் இருந்து நெட்டி முறித்து, வெளியே வந்து, வராண்டாவில் போட்டிருந்த ஊஞ்சல் பலகையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு கல்லூரிப் புத்தகத்தையோ அல்லது அந்தப் பாட நூலுக்குள் மறைத்து வைத்திருந்தாலும் வைத்திருக்கக்கூடிய காதல் புத்தகத்தையோ, படிக்கத் தொடங்கினாள். பிறகு ‘போரடித்தவள்’ போல், ஒரு காலை எடுத்து தரையில் ஊன்றி, விரல்களால் அழுத்தி, ஊஞ்சல் பலகையை ஆட்டிக் கொண்டாள். அந்த ‘ஆடல்’ சுகத்தில் ஆனந்தப்பட்டவள், உள்ளே ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு, முகத்தைத் திருப்பி லேசாக நிமிர்த்தி, மெல்லச் சிரித்துக் கொண்டாள்.

உள்ளே, குளியலறையில் அவள் அம்மாக்காரி பார்வதி யானை குளிப்பது மாதிரி, டிரம் நிறைய இருந்த தண்ணீரை, ‘டப்’பால் மொண்டு மொண்டு, தலையில் பாதி, அந்த டிரம்மில் பாதியாக ஊற்றிக் கொண்டிருக்க வேண்டும்! இல்லையானால் டிரம்மும், அந்த இரும்பு டப்பும் மோதி, அப்படியொரு பயங்கரமான சத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டியதில்லை. பிறகு எருமை மாடு சேற்றில் புரள்வது போல ஒரு சத்தங்கேட்டது. ஒரு வேளை சோப்புத் தேய்க்கிறாளோ என்னவோ...

‘இந்த அம்மாவுக்கு ஷவர் டேப்பைத் திறந்து ஜம்முன்னு குளிக்கத் தெரியலையே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டிருந்த மல்லிகா, “நீ இன்னும் டிரஸ் பண்ணலியாம்மா” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள்.கசங்கிய வேட்டியோடும், புழுங்கிய சட்டையோடும் சொக்கலிங்கம் நின்று கொண்டு இருந்தார்.

நல்ல சிவப்பான நிறம். மனிதருக்கு வயது ஐம்பதுக்கு அருகே வந்தாலும், இன்னும் மைனர் மாதிரியே இருந்தார். கழுத்தில், ஏழு பவுன் சங்கிலி போட்டு இருந்தார். சிலர், அந்த சங்கிலியை அவர் மனைவி, அவருக்குக் கட்டிய தாலி என்று கிண்டலாக அல்ல, மெய்யாகவே சொல்வார்கள். கையில் தங்கச் சங்கிலியால் பிணிக்கப்பட்ட ஒரு பாடாதி கடிகாரம். ‘டை’ அடிக்கத் தேவையில்லாத கருமையான முடி. மொத்தத்தில் சொல்லப் போனால், ஆசாமி அழகாகவே இருப்பார்.

அரவை மில்லில் இருந்து நேராக வந்த அவர், மல்லிகாவை பெருமிதமாகப் பார்த்துக் கொண்டு நின்றார். அவர் கண் முன்னேயே, அவர் கண்ணுக்குத் தெரியாமலே எப்படி வளர்ந்து விட்டாள்! எவ்வளவு கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறாள்! ஏதோ, இன்னும் இந்த இருபது வயதிலும், அவரைப் பொறுத்த அளவில், அவள் ஐந்து வயது சிறுமி போலவே தோன்றுகிறாள்.மல்லிகாவை பாசம் பொங்கப் பார்த்த சொக்கலிங்கம் திடீரென்று, ‘டப்பும்’ டிரம்மும் மோதிய சத்தம் காதைக் குத்த, “நான் சொன்னது... உன் காதுல விழலியாம்மா” என்றார்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“என்னப்பா சொன்னீங்க?”

“இந்தாபாரு... ஒண்ணு ‘என்ன அப்பா’ன்னு பிரித்துச் சொல்லு... இல்லேன்னா என்ன சொன்னீங்கன்னு மொட்டையாக் கேளு... நீ என்னப்பா என்னப்பான்னு சொல்றதைக் கேட்டால், நீ எனக்கு பாட்டி மாதிரியும் தோணுது... நீ டிரஸ் பண்ணலியாம்மா?...”

மல்லிகா சிரித்துக் கொண்டே சொன்னாள் “நீங்களும் பண்ணவில்லையா? ‘அம்மா’ன்னு பிரித்துச் சொல்லுங்க... இல்லன்னா...”

“சரி, போகட்டும்... உங்கம்மா குளித்து... நீ குளித்து... நான் குளித்து, புறப்படு முன்னால... அங்கே கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை கூட பிறந்துடும்! நாம் குழந்தையோட காதுகுத்து விசேஷத்துக்குத்தான் போக முடியும். இன்னுமா குளிக்கிறாள்...? குளித்து முடித்துவிட்டு ஏதோ பால்கணக்கு போடுறாள்னு நினைக்கேன்...”

மல்லிகா சிரித்துக் கொண்டே ஏதோ சொல்லப் போனபோது, பார்வதி கொண்டையை ஒரு வெள்ளைத் துண்டால் கட்டிக் கொண்டு, மார்புக்கு மேலே சேலையை சுற்றிக் கொண்டு, வெளியே வந்தாள். கணவனைக் கண்டுகொள்ளாமலே, “மல்லி... நீ போய் குளிம்மா” என்றாள்.

“நான் அப்புறமா குளிக்கேன்.”

“கல்யாணத்துக்கு நேரமாகுது.”

“நான் வரலை... தலை வலிக்குது.”

சொக்கலிங்கம் பதறினார்: “உனக்கு வயசு வளர்ந்த அளவுக்கு மூளை ஏன் வளரல...? சொந்த அக்காவோட கல்யாணம். நீ வராட்டால் நல்லா இருக்குமா... நாலு பேரு என்ன நினைப்பாங்க...” பார்வதி அவளைப் பெருமையோடு பார்த்துக் கொண்டே, “நீயும் வரணும்மா... இல்லன்னா... நாங்கள் தான் ஒன்னை தடுத்துட்டோமுன்னு சொல்வாங்க... உம்... சீக்கிரம்...” என்றாள்.

“முதல்ல அப்பா குளிக்கட்டும்.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“உங்க அப்பா குளிக்கறதும், குளிக்காததும் நேரத்தைப் பொறுத்து இருக்கு. நேரம் ஆயிட்டுதுன்னா, அவரு வழக்கமா வர்றது மாதிரி குளிக்காமலே வந்துடுவார். அப்படியே குளிச்சாலும், பழையபடி அரவை மிஷின்ல புரளத்தான் போவாரு...”

“நான் மிஷின்ல புரளாட்டா நீ தங்க நகையில புரள முடியாதுடி! பார்த்துப் பேசு... பிடிச்சாலும் பிடிச்சேன் புளியமரமாப் பிடிச்சேன்னு சொன்னவள், நீதான். மறந்துடாதே.”

“நான் மறக்கல... புளியமரம் குளிக்காது - மழையில தான் நனையும்!”

“போய் உடம்புல பட்டுச்சேலையை சுத்துடி...”

மல்லிகா சிரித்துக் கொண்டே, குளியலறைக்குள் போனாள். பார்வதி, உள்ளே போய், ஒரு நாட்டுப் புடவையை எடுத்து, சொக்கலிங்கத்திடம் தவறிப் போய் “மல்லிகாகிட்டே கொடுங்க” என்று சொல்லப் போனதற்காகச் சிரித்துக் கொண்டே, குளியலறைக்குப் போய் கதவின் இடுக்கில் அந்தப் புடவையை முன்பாதி உள்ளேயும், பின் பாதி வெளியேயுமாய் தொங்கப் போட்டுவிட்டு, தான் அலங்காரம் செய்து கொள்ள அறைக்குள் போனாள்.

----------

_தொடரும் .