அத்தியாயம் 1

22.23k படித்தவர்கள்
39 கருத்துகள்

"ஸ்ரீமான் குழந்தைவேல் செட்டியார்வாள், மகா உத்தமர். அவருடைய திவ்ய குணத்தைத் தேசம் பூராவும் போற்றுகிறது. இப்படிப்பட்டவா, ஒரு சிலராவது இருப்பதாலேதான், காலம் கலிகாலமா இருந்தாலும், மழை பெய்யறது, பூலோகத்தைச் சமுத்திராதி உற்பாதங்களால் அழிக்க முடியவில்லை" என்று கூறலாம்.

"உலகமே தலைகீழாக மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திலே, பெரியவாளுடைய காரியங்களை நாசம் செய்யறதை, பிரமாதமான சீர்திருத்தம்னு பேசிண்டிருக்கு, ஒரு ராட்சசக் கூட்டம். அப்படிப் பட்டவாளெல்லாம், நம்ம செட்டியாரின் சர்வ பரித தியாகத்தைக் கேட்டாளானா, நடுநடுங்கிப் போவாள். லோகத்திலே , எல்லா விதமான பாசத்தையும் ஒருவர்
அடக்கலாம். ஆனா, இந்தப் புத்ரபாசம் இருக்கே, அதனைச் சாமான்யமா அடக்க முடியாது. சக்கரவர்த்தி தசரதனாலே கூடப் புத்ரசோகத்தைத் தாங்கமுடியவில்லை என்பது லோகப் பிரசித்தமான விஷயம். நம்ம செட்டியார், தமது குமாரன், ஒரே மகன் , ஆச்சார அனுஷ்டானாதிகளுக்கு விரோதமான காரியம் செய்யத் துணிந்தபோது, எவ்வளவோ இதோபதேசம் செய்து பார்த்தும், அவன் பிடிவாதமாக இருக்கக் கண்டு என்ன செய்தார்? மகன் என்ற பாசத்தைக் கூட , உதறித் தள்ளிவிட்டார். அவ்விதமான தவச் சிரேஷ்டராக்கும், நமது செட்டியார்வாள். தமது ஒரே புதரன் ஏகோ கால வித்தியாசத்தாலும். கெட்டவா சகவாசத்தினாலும், பொதுவாகவே லோகத்திலே இப்போது தலைவிரித்து ஆடுகிற அதர்மக் கோட்பாடுகளை நம்பிய தனால், உத்தமமான வைசிய பரம்பரையிலே உதித்ததையும் மறந்து, கேவலமான காமாதி பாசத்திற்குப் பலியாகி , குலதர்மத்தைக் கைவிட்டு, வேறுகுல ஸ்திரீயை மணம் செய்து கொள்ள வேண்டுமென்று, பிடிவாதம் செய்தது கண்டு, சோகம் கொண்டு, தம் மகனுக்குச் சாஸ்திராதிகளைச் சாங்கோபாங்கமாக எடுத்துத் கூறித் தடுத்துப்பார்த்தும், முடியாததால், பெரியவா காலந்தொட்டு இருந்து வரும் புராதன ஏற்பாட்டுக்கு விரோதமாக நடந்து கொள்வதைக் கைவிட்டு விடாத பட்சத்தில், இனித் தம் கிருஹத்தில் காலடி எடுத்து வைக்கவே கூடாது என்று கூறிவிட்டார். உன் முகாலோபனமும் செய்யப்போவதில்லை என்று சொல்லிவிட்டார். அவனும் வீட்டைவிட்டுப் போய்விட்டான்.

புத்ரசோகம் மகா கொடுமை அதனை நமது செட்டியார் தாங்கிக்கொண்டது நமக்கெல்லாம் , ஆச்சிரியமாக இருக்கு. ஆனா, ராஜரிஷிகளின் மனம் எப்போதும் இப்படித்தான் இருக்கும். அவருடைய தர்ம மார்க்கத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். அவருடைய புகழ் பாரதவர்ஷத்துக்கே ஒரு புகழ் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட தன்யரை, வரவேற்கும் பாக்யம் நமக்குக் கிடைத்தது பற்றி நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். பகவான், கீதையில் சுதர்மத்தை நிலைநாட்டத் தமது சொந்த மகனையும் விட்டுப் பிரியத் துணிந்த, மகானைத் தரிசித்தும், அவருடைய மன உறுதியைப் பாராட்டியும், மகாஜனங்கள் சீரும் சிறப்பும் பெறுவார்கள். இவருடைய புத்ரனும், கெட்ட கிரஹம் மாறி நல்லகிரஹம் உதித்ததும், குலத்தைக் கெடுத்து, உத்தமமான தகப்பனாரின் மனத்தைப் புண்படுத்திய பாபத்தை எண்ணி வருத்தமடைந்து பிறகு தானாக வீடு வந்து சேர்ந்து, தகப்பனார் காலில் விழுந்து சேவிக்கத்தான் போகிறான். சத்யம் ஜெயிக்கும் என்பது சாமான்யாளுடைய வாசகமோ ! ஆகவே உத்த மோத்தமரான சீமான் செட்டியாரை, நான் ஆசீர்வதித்து, இந்த ஊர் சத்சங்கத்தார் சார்பில், அவருக்கு இந்த மாலையைச் சூட்டுகிறேன். ஜே, சீத்தாராம்! ஜே, ஜே!
# # #

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ரோஜாமாலை, சாதாரணமாகக் கோயில்களில் மூலவருக்குப் போடுவதுபோல, மிகப் பெரிதாகத்தான் இருந்தது. நெற்றியிலே விபூதி தரித்துக்கொண்டு மார்பிலே நூலுடன், விலையுயர்ந்த பட்டுக்கரை வேட்டி உத்தரியம் அணிந்து கொண்டு, அந்த ரோஜா மாலையுடன் நின்று, சபையோரை நோக்கிக் குழந்தை வேலச் செட்டியார் கும்பிட்டுக்கொண்டு நின்றபோது, நாயன் மார்போலவே இருந்தது. தாழையூர் சத்சங்கம் சனாதன மார்க்கத்தைப் பாதுகாக்க ஏற்பட்டது. அந்தச் சங்கத் தார் வெளியூரிலிருந்து வரவழைத்திருந்த வக்கீல் வாசு தேவசர்மா, உருக்கமான அந்தப் பிரசங்கத்தை செய்து விட்டுரோஜாமாலையைச் செட்டியாருக்குப் போட்டதும், அவர் அடைந்த ஆனந்தம், இவ்வளவு என்று அளவிட முடியாது. வார்த்தைகள் சந்தோஷத்தால், சரியாக வெளி வரவில்லை .

"பிராமணோத்தமர்களே ! பிரம்ம, ஷத்திரிய , வைசிய, சூத்ர , என்று பெரியவர்கள் ஏற்பாடு செய்திருக் கும் ஜாதி ஆச்சார முறைப்படி, அடியேன்வைசிய குலம். இந்தப் பாபியின் மகனாகப் பிறந்தவன், அந்த ஆச்சாரத்தைக் கெடுக்கத் துணிந்தான். பிரபஞ்சத்துக்கே நாசம் சம்பவிக்கக் கூடியது அதர்மம். அந்த அதர்மத்தைச் செய்ய, ஒரு மகன் எனக்குப் பிறந்தான்; நான் என்ன பாபம் செய்தேனோ, பூர்வத்தில். அவள் என்ன ஜாதியோ, என்ன குலமோ, ஒரு பெண், அவளைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்றான் , தடுத்தேன்; எவ்வளவோ புத்தி சொல்லிப் பார்த்தேன், கேட்கவில்லை. கடைசியில், இந்த பாபக் கிருத்யத்துக்கு உடந்தையாக இருக்கும் மகாபாபம் நமக்குச் சம்பவிக்கக் கூடாது என்று தோன்றிற்று. நமது சர்மா அவர்கள் சொன்னது சத்யவாக்கு. எனக்குப் புத்ர சோகம் தாங்கமுடியவில்லை. ஆனாலும், மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, அவனை வீட்டை விட்டு போய் விடச் சொல்லி விட்டேன். இனி அவன் எக்கேடு கெட்டாலும், உலகம் என்னைத் தூற்றாது. அவனுடைய முகாலோபனமும் செய்யப் போவதில்லை என்று சங்கற்பம் செய்து கொண்டது மட்டுமல்ல, என் சொத்திலே ஒரு பைசாகூட அந்த நீசன் அடையப் போவதில்லை.
ஏதோ பகவத் சங்கற்பத்தால், நான் கொஞ்சம் சம்பத்து அடைந்திருக்கிறேன். அதை இனிச் சத் காரியங்களுக்கு உபயோகித்து, போகிற கதிக்கு நல்லது தேடிக்கொள்வது என்று முடிவு செய்து விட்டேன். என் சொத்து, சுயார்ஜிதம். ஆகவே அந்தத் துஷ்டன், என்னிடம் வரமுடியாது. என்னைப் பிரமாதமாகப் புகழ்ந்த சத்சங்கத்தாருக்கு என் நமஸ்காரத்தைக் கூறிக்கொண்டு, இனி உங்களுடைய ஆசீர்வாத பலத்தால் அடியேன் தன்யனாவேன் என்றும் சொல்லிக் கொள்கிறேன். சிலாக்யமான சேவை செய்து வரும் சத்சங்கத்தாருக்கு என் சக்தியானுசாரம். ஏதாகிலும் தர வேண்டும் என்று ஆசை. ஆகவே ஆயிரம் ரூபாய் கொண்ட இந்தப் பணமுடிப்பை சத் சங்கத்தாருக்குத் தருகிறேன்' என்று கூறி, பணமுடிப்பையும் தந்தார். அந்தப் பரம பாகவதரை, மறுபடி ஒருமுறை ஆசீர்வதித்தார் வாசுதேவ சர்மா. அன்று தாழையூர் மகாஜனங்கள் செட்டியாரைப் புகழ்ந்தனர்; சத்சங்கத்திலிருந்து அவர் மேளதாளத்துடன் ஊர்வலமாக வீடுவரை அழைத்துச் செல்லப்பட்டார்.
# # #

தாழையூர் சத் சங்கத்தின் விசேஷச் கூட்டம் அன்று விமரிசையாக நடைபெற்றது. உள்ளூர் வெளியூர்ப் பிராமணத் தலைவர்களும், சனாதனிகளான மற்ற வகுப்புப் பெரியவர்களும், இலட்சாதிகாரியும் வைதிகப் பிரியருமான ஸ்ரீமான் குழந்தைவேல் செட்டியாரைப் பாராட்டக் கூடினர். செட்டியார் மீது சத்சங்கத்தின் ஆசீர்வாதம் விழுந்ததற்குக் காரணம், அவர் சனாதனக் கோட்பாட்டைச் செயல் முறையிலே நிலை நாட்டத் தம் ஒரே மகனை வீட்டை விட்டு வெளியேற்றியது தான். மகன் பரமசாது, ஆனால் சீர்திருத்தவாதி. வேறொர் குலப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்றான் ; செட்டியார் தடுத்தார், மகன் கேட்க வில்லை ; ஜாதி ஆசாரத்தைக் கெடுக்கும் பிள்ளை என் வீட்டுக்குத் தேவையில்லை என்று துரத்திவிட்டார்.

        தாழையூர்.
அன்புள்ள அம்சாவுக்கு,

உனக்குக்கடிதம் எழுதவேண்டும் என்று பலநாட்களாக யோசித்து யோசித்து, கடைசியில் இன்று எழுத உட்கார்ந்தேன். "உனக்காவது கலியாணம் நடக்கப் போவதாவது. உன்னுடைய கொள்கைகளைக் கட்டிக் கொண்டு நீ அழவேண்டியவளே தவிர, ஊரிலே நாலு பேரைப் போலக் காலா காலத்தில் கலியாணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கப் போவதில்லை. நீ தான், எந்த ஜாதியானாக இருந்தாலும் சரி, காதலித்தவனைத்தான் கலியாணம் செய்து கொள்வது, அதிலேயும். ஐயர் இல்லாமல் செய்துகொள்வது, என்று கூட்டங்களிலே பேசுகிறாயே ! அது எப்படியடி நடக்கும் என்று என்னைக் கேலி செய்தபடி இருப்பாயல்லவா? அடி முட்டாளே ! கேள்! உனக்குக் காதலைப் பற்றிக் கடுகுப் பிரமாணமும் தெரியாது.
இப்போதாவது தெரிந்துகொள், என் சபதம் நிறைவேறிவிட் டது. அடுத்த வெள்ளிக்கிழமை எனக்குக் கலியாணம்! ஐயர் நுழையவே முடியாத இடத்தில், சிங்காரபுரிச் சேரியிலே உள்ள சீர்திருத்தச் சங்கத்திலே கலியாணம்! யார் தெரியுமா? என் மாமனாரைப் பார்த்தால், பக்தையான நீ கீழே விழுந்து விழுந்து கும்பிடுவாய்; அவ்வளவு சிவப்பழமாக இருப்பார். தாழையூர் தனவணிகர் குழந்தைவேல் செட்டியார் என்றால் எந்தக் கோயில், அர்ச்சகரும், "மகா பக்திமானல்லவா" என்று ஸ்தோத் தரிப்பார்கள். அப்படிப்பட்டவர் தவம் செய்து பெற்ற பிள்ளைதாண்டி, என் கணவர் ; பெயர், பழனி!

அவர், என்னை வெற்றி கொள்ள அதிகக் கஷ்டப் படவில்லை. எப்போதாவது ஒரு தடவை, சீர்திருத்தச் சங்கத்துக்கு வருவார் அதிகம் பேசமாட்டார் : மற்றவர்கள் பேசும் போது, மிகக் கவனமாகக் கேட்பார்; அதிலும் நான் பேசும்போது, ஆனந்தம் அவருக்கு. மெள்ள மெள்ள நான் அவரைச் சீர்திருத்தக்கார-ராக்கினேன். ஆரம்பத்தில் அவர் ஜாதிச் சண்டை, குலச் சண்டை கூடாது; வேறு வேறு ஜாதியாக இருந்தாலும், சண்டை சச்சரவு இல்லாமல் வாழவேண்டும் என்று மட்டுமே கூறி வந்தார். நாளாக நாளாக, தீவிர வாதியானார். நான் என் பேச்சினால், அவரை வென்று விட்டேன் : அந்தப் பெருமையும் சந்தோஷமும் எனக்கு ! அவரோ, தம் பார்வையாலேயே, என்னை வென்றுவிட்டார். குழந்தை போன்ற உள்ளம் அவருக்கு. சாதாரணமாகப் பல ஆடவருக்கு உள்ள குறும்புப் பார்வை, குத்தலான பேச்சு இவை கிடையா. "மிஸ்டர் பழனி" என்று நான் தைரியமாக அவரைக் கூப்பிடுவேன். அவரோ நாகவல்லி என்று கூடத் தைரியமாக என்னைக் கூப்பிட மாட்டார். புன்சிரிப்புடன் என் அருகே வருவார். அவ்வளவு சங்கோஜம். ஆனால், அவருடைய காதலைக் கண்கள் நன்றாக எடுத்துக் காட்டியபடி இருந்தன.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

துணிந்து ஒரு தினம் கேட்டார், நான் திடுக்கிட்டேன் ; அவர் கேட்டாரே என்பதால் அல்ல. அந்தக் கேள்வி என் மனத்திலே எழுப்பிய களிப்பைக் கண்டு! "நான் என்ன ஜாதி? நீங்கள் சைவச் செட்டிமார் குலம்!" என்று நான் கூறினேன். அவர், நான் அடிக்கடி சங்கத்திலே ஜாதியைக் கண்டித்துப் பேசுவேனே, அந்த வாதங்களை அழுத்தம் திருத்தமாகக் கூறினார். அன்று மாலை மணி ஆறு இருக்கும். அம்சா! என்ன இருந்தாலும் இந்த ஆண்களே கொஞ்சம் அவசரக்காரர்கள் தான். பேச்சு நடந்து கொண்டே இருக்கையில் அவர், திடீரென்று என்னை ஆரத்தழுவிக் கொண்டார். எதிர்ப்பவர்களின் வாதங்களைத் தவிடு பொடியாக்கும் திறமை கொண்ட நான், பைத்தியம் போல 'ஐயோ ! விடுங்கள் ! யாராவது வந்துவிட்டால் !' என்று குழைந்து கூறினேன். நல்லவேளை , பழனி, என் பேச்சைக் கேட்கவில்லை ! எமது அதரங்கள் ..................... சகஜந்தானடி !

பிறகு அவர் ஒவ்வொரு மாலையும் வர ஆரம்பித்தார். காலையிலே நான் பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதெல்லாம் அன்று மாலை அவர் என்ன பேசுவார், என்னென்ன விதமாக விளையாடுவார் என்று நினைத்தபடியே இருப்பேன்.
வங்காளத்துக்குத் தலை நகரம் எது என்று கேட்க வேண்டும்; நானோ கல்கத்தாவுக்குத் தலைநகரம் எது என்று கேட்பேன். என் வகுப்பிலேயே புத்திசாலி வனிதா; அவள் எழுந்திருந்து "கேள்வியே தவறு" என்றாள். எனக்குக் கோபம் பிரமாதமாக வந்தது. பிறகு, என் தவற்றை உணர்ந்து நானே சிரித்துவிட்டேன். சிரித்ததும் எனக்கு அவருடைய கவனம் தான் வந்ததது. ஏன் தெரியுமா? நீ குறும்புக்காரி, உன்னிடம் கூறமுடியாது!

(தொடரும்...)