அத்தியாயம் 1

38.57k படித்தவர்கள்
8 கருத்துகள்

ர்மத்துப்பட்டி விலக்கில் முத்துமீனா நின்றிருந்தாள். தேவாரம் பேருந்து இன்னமும் வரவில்லை. சிறிது நேரத்திற்கு முன்பு தேவாரத்திலிருந்து போடிக்கு போகிற பேருந்து கிளப்பி விட்ட புழுதி அடங்கியிருக்கவில்லை. முத்துமீனா சேலை முந்தியை எடுத்து தனது மகன் அம்சராஜின் முகத்தைப் பொத்திவிட்டாள். அம்சு பிடிவாதமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான். முத்துமீனாவுக்கு காலை சாப்பாட்டிற்குப் பிறகுதான் தாக்கல் வந்தது. தெம்மண்ணா குடித்துவிட்டு வந்திருந்தான். பழைய சோறு வேண்டுமென்று வாசலில் அமர்ந்தான். முத்துமீனா இரவு எடுத்து வைத்திருந்த சோற்றைப் போட்டு குழம்பை ஊற்றினாள். தெம்மண்ணா வயிற்றுக்கு சாப்பிட்டுவிட்டு மற்றவர்களுக்குத் தாக்கல் சொல்ல கிளம்பினான். 

 “அஜ்ஜிக்கு எந்நேரமுன்னு சொல்ல முடியாது தாயீ. திடுதிப்புன்னு கீழே விழுந்து படுத்துக்கிடுச்சு. எந்திரிக்க முடியலே. மூச்சுவாங்குது தாயீ. பிறந்த வீட்டுப்பிள்ளைகள் வெரசா வந்து சேருங்க” 

 பைக்கட்டில் ஒருவாரத்திற்கு வேண்டிய துணிகளை எடுத்து வைத்துக்கொண்டாள். வீட்டில் காசு பணம் எதுவுமில்லை. பக்கத்து வீட்டுக்காரம்மாவிடம் பஸ் செலவுக்கு வாங்கிக் கொண்டுப் புறப்பட்டாள். முத்துமீனாவுக்கு வருத்தமாக இருந்தது-. தனது கணவன் முருகேசனுக்கு செலவுக்கு மேல் செலவாக வருகிறது. வேலை இல்லாத நேரத்தில் என்ன செய்யப்போகிறார் என்று யோசித்தாள். அடுத்த வாரம் பெரியகுளத்தில் முருகேசனின் தங்கை மகளுக்கு சடங்கு. தாய்மாமன் செய்முறை. பெரிய அண்டாவும் தாம்பாளத்தட்டும் எடுத்துக் கொண்டுப் போகவேண்டும். தட்டு நிறைய பழங்களும் அண்டா நிறைய அரிசியும் தேங்காயும் வாங்கவேண்டுமென்று முருகேசனின் அம்மா ‘வரிசை’ வைத்து சொல்லிக் கொண்டிருந்தாள். 

 அம்சராஜ் ஊருக்குப் புறப்படுகிறோம் என்று தெரிந்தது சேமியா ஐஸ் வேண்டுமென்று தொனதொனக்க ஆரம்பித்துவிட்டான். விலக்கு பஸ்ஸ்டாப்பில் இரண்டு மூன்று ஐஸ் வண்டியாவது நின்றிருக்கும். ஐஸ்வண்டிக்காரன் யாரையும் காணவில்லை. பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் சிலர் பஸ் ஸ்டாப் பெஞ்சில் உட்கார்ந்து பாடங்களை மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்கள். தேவாரத்திற்குப் போகிற பேருந்து ஒன்றைக்கூட கண்ணில் பார்க்க முடியவில்லை. முத்துமீனா வீட்டிலிருந்து வரும்போது நேரத்தைப் பார்த்துவிட்டு வந்திருந்தாள். எளசை ஊருக்குள் போய் திரும்புகிற எட்டுமணி தேவாரம் பஸ் இந்நேரம் ஊருக்குள் போய் திரும்பி இருக்கும். எட்டு மணி பஸ்ஸை விட்டால் அதற்குப் பிறகு பத்துமணிக்குத்தான். அதுவரை காத்திருக்க முடியாது. சீக்கிரமாக ஊருக்குப் போகவேண்டும். இந்நேரத்திற்கு தனியார் பஸ்காரனும் கவர்மென்ட் பஸ்காரனும் வரிசையாக வந்து நிற்பார்கள். ஒன்றப்பின் ஒன்றாக வந்து நின்று ஹாரன் அடித்து ஜனங்களை ஏற்றிக் கொண்டுப் போவார்கள். இந்நேரத்திற்கு எந்த பஸ்சும் வரவில்லை. முத்துமீனாவினால் பொறுமையாக இருக்க முடியவில்லை. 

 சற்றுத் தொலைவில் ஐஸ்வண்டிக்காரன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். வண்டிக்குப் பின்பாக இரண்டு மாடுகளை ஓட்டிக் கொண்டு வயதானவர் வந்து கொண்டிருந்தார். ஐஸ்வண்டிக்காரனைப் பார்த்ததும் அம்சுவுக்குக் கொண்டாட்டம். முத்துமீனா அவனுக்கு ஐஸ் வாங்கிக் கொடுத்தாள். ஐஸ்வண்டிக்காரன் அவர்களை கடந்து சென்றதும் தேவாரத்திற்குப் போகும் பஸ் ஒன்று மெதுவாக வந்தது. பஸ்ஸைப் பார்த்த பிறகுதான் அவளுக்கு நிம்மதியானது. பஸ் புழுதியை எழுப்பிக் கொண்டு அவர்களுக்கு முன்பாக வந்து நின்றது. பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் ஓடிவந்து ஏறிக்கொண்டார்கள். பேருந்து முழுக்க பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள். முத்துமீனாவும் அம்சராஜும் பேருந்தில் ஏறிக்கொண்டார்கள். 

 தர்மத்துப்பட்டியைத் தாண்டி ரோட்டின் இருபக்கமும் வரிசையாக வேப்பமரமும் தென்னைமரமும் நின்றிருந்தன. மாணவியொருத்தி ஜன்னல் வழியாக யாருக்கோ கையசைத்தாள். தர்மத்துப்பட்டியிலிருந்து சில்லமரத்துப்பட்டிக்குப் பள்ளிக்கூடத்திற்குப் போகிறவர்கள் நடந்தும் சைக்கிளிலும் சென்று கொண்டிருந்தனர். முத்துமீனாவுக்கு அவர்களைப் பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது. எளசையில் பள்ளிக்கூடம் இல்லை. எளசையிலிருந்து சிந்தலைச்சேரிக்கு போகவேண்டும். இல்லையென்றால் தேவாரத்திற்குப் போகவேண்டும். தேவாரம் தொலைவு. அதற்கு சிந்தலைச்சேரி பரவாயில்லை. முத்துமீனா பள்ளிக்கூடம் போகும் போது அன்னம்மா கிழவிதான் விலக்கு முடிய கூடவே நடந்து வருவாள். பஸ் வரும்வரை பிள்ளைகளுடன் பிள்ளைகளாகக் காத்திருப்பாள். விலக்குரோட்டு பஸ்ஸ்டாப்பில் இருக்கிற பெட்டிக் கடையில் பிள்ளைகள் வரிசையாக உட்கார்ந்திருப்பார்கள். கிழவி இரண்டு தடவை வெற்றிலைப் போட்டு துப்புவாள். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

 “அஜ்ஜி நீயும் பேத்தியோட பள்ளிக்கூடத்திற்கு பாடம் படிக்க போறீயா” என்று மாடு மேய்க்கப் போகிறவர்கள் கேட்பார்கள். அவள் சிரித்துக் கொள்வாள். ஒரு கட்டு வெற்றிலையும் இரண்டு ரூபாயிக்கு சுருள்பாக்கும் வாங்கி மடியில் கட்டிக்கொண்டு வீடு திரும்புவாள். பள்ளிக்கூடம் விடுகிற நேரம் அவளுக்கு ‘கரெக்கட்டாக’த் தெரியும். பஸ் வந்து நிற்பதற்கு முன்பாக அவள் பெட்டிக் கடையில் வந்து நின்றுவிடுவாள். பள்ளிக்கூடத்திலிருந்து வரும் பிள்ளை பசியுடன் இருக்குமென்று எளசையில் வாங்கிய வடையை மடியில் கட்டி வைத்திருப்பாள். முத்துமீனா வடையை தின்று கொண்டு பாட்டியுடன் நடந்து சென்றதை நினைத்துக் கொண்டாள். அவளுக்கு அழுகையாக வந்தது. 

 அன்னம்மா கிழவி இரண்டு வாரத்திற்கு முன்பு தேவாரம் சந்தைக்கு ஒத்தை ஆளாகப் போய் கடலை வாங்கிக் கொண்டு வந்தாள். தோட்டத்தில் கிடந்த பலாப்பழத்தை உரித்து பேத்திகளுக்கும் பிள்ளைகளுக்குமாக பங்குப் போட்டுக் கொடுத்தாள். முத்துமீனாவின் வீட்டிற்கு வந்து கடலையையும் பலாச்சுளையையும் கொடுத்து விட்டுப் போனாள். பாட்டி வீட்டிற்கு வந்து சென்றால் வீடு முழுக்க திண்பண்டம் நிறைந்திருக்கும். இரண்டு மூன்று நாளாவது திண்பண்டங்களை வைத்திருந்து சாப்பிடலாம். ‘சந்தையிலே வாங்கிட்டு வந்தேன்’ என்று தலையிலும் இடுப்பிலும் சுமந்து கொண்டு வருவாள். 

 முத்துமீனா கிழவியின் மேல் பிரியமாக இருந்தாள். அவளறியாது கண்களில் நீர் வடிந்தது. பேருந்து ஜன்னல்களின் வழியாக ஊர் ஜனங்களை பார்த்தாள். பேருந்திலிருந்தப் பிள்ளைகளை வேடிக்கைப் பார்த்தாள். கிழவியின் நினைப்பை அவளால் மாற்றிக் கொள்ளமுடியவில்லை. அன்னம்மா கிழவியின் ஞாபகம் அவளது மனதில் வைக்கப்பேரில் கசியும் நெருப்பைப் போல புகைந்துக் கொண்டிருந்தது. வைக்கப்படப்பில் பற்றி எரியும் நெருப்பு எங்கெங்கோ புகையாக கசிவது போல கிழவியின் நினைவு அவளது மனதில் கசிந்து கொண்டிருந்தது. “அஜ்ஜி செத்துப்போச்சாம்மா. இனிமேல் அஜ்ஜி நம்ம வீட்டுக்கு வராதாம்மா” என்று அம்சராஜ் கேட்டான். முத்துமீனா ஹோவென அழுதுவிட்டாள். அவனுக்கு என்ன பதில் சொல்வது?. 

 சிலமரத்துப்பட்டியில் இரண்டு பேர் ஏறிக்கொண்டார்கள். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் இறங்கியதும் பேருந்து கிளம்பியது. பேருந்தில் சத்தம் இல்லை. பிராயணம் செய்கிறவர்கள் இழவு வீட்டிற்குப் போவதைப் போல உட்கார்ந்திருந்தார்கள். முத்துமீனா அவர்கள் ‘உம்மென்று’ உட்கார்ந்திருப்பதைப் பார்த்த போது கிழவி உண்மையில் இறந்துதான் போனாள் என்று நினைக்கத் தோன்றியது. பேருந்தில் தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது வருகிறார்களா என திரும்பிப் பார்த்துக் கொண்டாள். 

 அன்னம்மா கிழவியும் முத்துவும் ஒரு தடவை பேருந்தில் கம்பத்திற்குச் போய் வந்திருக்கிறார்கள். கம்பத்தில் உறவுக்கார வீட்டில் இழவு விழுந்து விட்டது. முதல்நாள் போக முடியவில்லை. அன்னம்மா கிழவி துணைக்குப் பேத்தியை அழைத்துக் கொண்டுக் கிளம்பிவிட்டாள். முத்துமீனா அன்றுதான் கிழவியின் சுருக்குப்பையைப் பார்த்தாள். பை நிறைய பணமும் காசும் வெற்றிலையும் பாக்குமாக இருந்தது. காக்கி டவுசர் தைக்கும் துணியில் தையற்காரன் தைத்துக் கொடுத்தது. ஒவ்வொரு உறைக்குள்ளும் கையை விட்டு அவள் காசை எடுத்து மாறிமாறி வைத்துக் கொண்டாள். சுருக்குப்பை தாத்தாவினுடையது. அந்த சுருக்குப்பை ராசியானது. அழகுமுத்து தாத்தா சாகும்போது கொடுத்ததாக அவள் சொல்வாள். தாத்தா வைத்திருந்த சுருக்குப்பையில் எடுக்க எடுக்க பணம் குறையாது என்று பாட்டி சொல்வாள். அவளிடமும் நிறைய காசு இருந்தது. 

 அம்சுவுக்கு மொட்டையெடுத்து காது குத்தும் போது கிழவி தனது சுருக்குப்பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள். சுருக்குப்பையை அம்சுவின் கையில் வைத்து “கை நிறைய சம்பாதிக்கனும் சாமி” என்று கையெடுத்து கும்பிட்டாள். முத்துமீனா அந்த பையை தனது இடுப்பில் சொருகிக் கொள்ளக்கேட்டதற்கு கிழவி தரவில்லை “நான் செத்துப் போன பின்னாடி நீயே இதை வெச்சிக்கோ” என்று சொன்னாள்.

 “எங்கம்மாக்கிட்டே இருந்து அவ்வளவு சீக்கிரத்திலே யாரும் சுருக்குப்பையை வாங்கமுடியாது. என் பேரன் வாங்கிட்டான்” என்று பரமசிவம் தனது மருமகன் முருகேசனிடம் பெருமை பேசிக்கொண்டார். அம்சுவின் காது குத்திற்கு வந்திருந்த முத்துமீனாவின் அத்தைமார்கள் நால்வரும் இதுதான் சந்தர்ப்பம் என்று பிடித்துக் கொண்டார்கள். அன்னம்மாவின் மூத்தமகள் சுப்பக்கா கோபக்காரி. அவளுக்கு மூக்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். 

 சுப்பக்கா, “பொம்பளைப் பிள்ளைகளுக்குத்தான் சுருக்குப்பையைத் தரனும். எங்களுக்கு ஒருத்திக்கு நீ உன்னோட சுருக்குப்பையை கொடுத்துரு. இல்லைன்னா நாங்க சண்டைக்கு வந்துருவோம்” என்று சொன்னாள். மூத்தவள் கேலிக்குப் பேசுகிறாள் என்று பரமசிவமும் விட்டுவிட்டார். ஆனால் கிழவியின் சுருக்குப் பையினால் காதுகுத்து விசேஷத்தில் சண்டையே வந்துவிட்டது. பிறந்த வீட்டுப்பிள்ளைகளான சுப்பக்காவும் சௌடம்மாவும் காமாட்சியும் சுருக்குப்பையை விட்டுக்கொடுக்கவில்லை. சுருக்குப்பையை வைத்து சொத்து சண்டையைத் தொடங்கிவிட்டார்கள். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

 பரமசிவத்தின் தம்பி காளிமுத்துவின் மனைவி செல்லம், “அதெப்படி, ஆம்பிளைகளுக்குத்தான் கொடுக்கனும். சேலையை வேணுமின்னா, நீங்க வாங்கிட்டுப்போங்க” என்று ஆரம்பித்தாள். சுப்பக்காவும் காமாட்சியும் அவளுடன் சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள். 

 “சேலையை வைச்சுக்கிட்டு நாங்க என்ன செய்யே”

 “ஒங்க ஆத்தா சேலை ஒங்களுக்கு வேணாமின்னா தூக்கி குப்பையிலே போடுங்கடீ. எங்களுக்கு எதுக்கு அது” செல்லம் சேலை முந்தியை விசிறிக்கொண்டு பேசினாள். சண்டை கிளை விட்டு கிளையோடி எங்கெங்கோ போவதற்கு முன்பாக பரமசிவம் விலக்கிவிட்டார். பிறந்த வீட்டுப்பெண்கள் சுருக்குப்பையை விட்டுக்கொடுக்கவில்லை. பரமசிவத்தின் மனைவி பொன்னம்மா வாயைத் திறக்கவில்லை. சண்டை பெரியதாக வந்துவிட்டால் சொத்துப் பிரச்சனையில் போய் நிற்கும் என்று அவளுக்குத் தெரியும். அண்ணன்களுக்கும் தங்கைகளுக்கும் வருகிற சில்லறை சண்டை முடிகிற போது சொத்து பிரச்சனையில் வந்து நிற்கிறது. கிழவி இறந்த பிறகுதான் சொத்து யார்யாருக்கு எவ்வளவு பங்கு என்று முடிவாகும். அதுவரை அமைதியாக இருக்கவேண்டுமென்று நினைத்தாள். அன்னம்மா கூட்டத்திற்குள் வந்து நின்று ஒரு அதட்டுப்போட்டு சண்டையை முடித்துவைத்தாள். 

 “அடியே நான் இன்னமும் உசிரோட இருக்கேன்டீ. செத்துப்போறதுக்குள்ளே யார்யாருக்கு என்னென்னு குறிச்சி வைச்சிருவேன். வாயைப் பொத்திட்டு இருங்க” என்றாள். சுப்பக்காவும் சௌடம்மாவும் காமாட்சியும் சோறு திங்காமல் கூட ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். அவர்களை முத்துமீனாவினால் சமாதானப்படுத்த முடியவில்லை. அவர்கள் மூவரும் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள். கிழவி இறந்த பிறகு சொத்து தகராறு வந்து குடும்பத்தில் நிம்மதியில்லாமல் போகப்போகிறது என்று பரமசிவம் புலம்பினார். 

 முத்துமீனா அந்த சண்டைக்குப் பிறகு இப்போதுதான் அத்தைமார்களைப் பார்க்கப் போகிறாள். தெம்மண்ணா அவளுக்குத் தாக்கல் சொல்வதற்கு முன்பு பிறந்த வீட்டுப்பிள்ளைகளுக்குத் தாக்கல் சொல்லவிட்டுத்தான் வந்திருக்கிறான். அவர்களும் ‘எப்போ எப்போ’ என்று காத்திருக்கிறார்கள். இந்நேரம் ஊருக்கு வந்திருப்பார்கள் என்று முத்துமீனா நினைத்துக் கொண்டாள். அவளுக்கு ஜெயலெட்சுமி அத்தையைப் பார்க்கவேண்டுமென்று ஆசை. அன்னம்மாவின் கடைசி மகள் ஜெயலெட்சுமி. அவள் எளசையில்தான் இருக்கிறாள். எளசையில் இருந்தாலும் பிறந்த வீட்டிற்கு வந்து போவதில்லை. அன்னம்மா கிழவி செத்துப்போனாலும் வாசப்படியை மிதிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். முத்துமீனா ஆறாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது ஜெயலெட்சுமிக்குத் திருமணம் நடந்தது. ஜெயலெட்சுமியை புலிகுத்தியில் கொண்டலுவுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். முட்டுக்கிடா சண்டையில் கொண்டலுவை வெளியூர்காரன் குத்தி சரித்துவிட்டான். ஜெயலெட்சுமி தாலியறுத்து எளசைக்குத் திரும்பி வந்துவிட்டாள். திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கூட முடிந்திருக்கவில்லை. பிறந்த வீட்டில் அவளை இருக்கவிடாமல் வேறு வீடு பார்த்துப் போகச் சொல்லிவிட்டார்கள். ஜெயலெட்சுமி அதன் பிறகு அன்னம்மா கிழவியை கூட பார்க்க பிறந்த வீட்டுக்குப் போவதில்லை. 

- தொடரும்