அத்தியாயம் 1
அத்தியாயம் - 1
அந்த இக்கட்டிலும் வைபவிக்குச் சிரிப்பு வந்தது. சக ஊழியர்கள் பேச்சைத் தொடர்ந்து ஒட்டுக் கேட்க விரும்பாமல், கால்கள் விலக தவித்தாலும் அவளது புத்தி ‘விவரத்தை முழுசாய் கேட்டுட்டு போ’ என்று அறிவுறுத்தியது! தன்னைப் பற்றி தான் அறியாததையா, இவர்கள் சொல்லி அறிய வேணும் என்று மனம் சலித்தாலும், இறுகி நின்றாள்.
தான் இல்லாத இடத்தில் தன்னைப் பற்றி இப்படிப் பேச அவர்களுக்கு இருக்கும் உரிமை, தனக்குக் கேட்பதில் இருக்க வேண்டாமா... என்று விவாதம் வேறு மனதுள்! முக்கால் மணி நேர ஸ்கூட்டி பயணத்தில் வியர்த்து, அந்த ஈரத்தில், தெருவின் புழுதியோடு வாகனப் புகையும் படிந்த முகத்தை ஃபேஸ்-வாஷ் இட்டு கழுவி, லேசான ஒப்பனை சேர்த்த பிறகே அவள் கடையின் விற்பனைப் பகுதிக்கு வருவது - அப்படி வருவதுதான் நியாயம் - அத்தனைக்கு அலங்காரமான விற்பனைக் கூடம் அது. அங்கே விற்பனைக்கு இருப்பவையும் அலங்காரப் பொருட்களும் ஒவியங்களும்தான்.
பத்தாயிரத்திற்குக் குறைவான விலையில் அங்கு ஓவியங்கள் கிடையாது... விசாலமானவையின் விலை லட்சங்களில்! 'Fancy Frames' (ஃபேன்ஸி ஃப்ரேம்ஸ்) பல திறமையான ஓவியர்களின் கைவேலையை அதற்கேற்ற தரத்தில் சட்டமிட்டு விற்கும் கடை. சில வாரங்களுக்கு முன்பு இவள் தான் வரைந்த சில கேன்வாஸ் சுருள்களுடன் இக்கடையுள் ஏறவே பயந்தாள். வெயிலில் வாடி, வதங்கிய கோலத்தில், இத்தனை உயர் ரக கடையின் படியேற கூசியது.
வழக்கமாய் தன் ஓவியங்களைச் சட்டமிட கொண்டு செல்லும் இஸ்மாயில்தான் சொன்னார் - “நல்ல தரமான வேலைம்மா, உன்னுது - உயர் விலைக்கு போவுமே..? வித்தைக்கு ஏத்த விலை வரணும்” என்று வழிகாட்டியதுதான் இந்த இடம். பெயருடன் அதனுடைய இடத்தை அவர் விளக்க முற்பட- “தெரியுங்க - அது பெரிய கடை...” என்று முணுமுணுத்தாள்.
“பொருளைப் போல, அங்க விற்பவங்களும் தரமானவங்கதான். மிஸ்ரா சாருக்கு எம்பேரை பரிச்சயமுண்டும்மா. போய், இதெல்லாம் காட்டும்மா... நல்லது நடக்கும்.” என்றதை நம்பி கடையைத் தேடி வந்தாள். வெயிலில் வறுபட்டவளை கடைக்குள் அடைபட்டிருந்த குளிர் மிரட்டியது. சென்னையின் வெக்கை, தூசு, நகர்மையத்தின் இரைச்சலைக்கூட கடையின் அமைப்பு வெளியே நிறுத்தி வைத்திருக்க, படபடப்புடன்தான் நுழைந்தாள். விசாலமான சுவர்களில் எங்கும் வசீகர ஓவியங்கள். மேலும் நூற்றுக்கணக்கானவை சாய்வாய் அடுக்கப்பட்டிருந்தன.
அங்கும் இங்குமாய் பார்வையிட்டுக்கொண்டிருந்த மேல் வர்க்க வாடிக்கையாளருக்கு ஏற்ற வகையில் கூடவே சில விற்பனையாளர்கள் நின்றார்கள். வலது புறமாய் வரிசையாய் மாட்டப்பட்ட கடவுள் படங்கள்... அவற்றின் மலர் சர வாசனையின் கீழே இருந்தவரை தயக்கத்துடன் அணுகினாள். வணங்கி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவளுக்குச் சின்ன தலையசைப்பே கிடைத்தது. அறுபதுகளில் இருந்தவரின் மெல்லிய உதட்டில் புன்னகையின் சாயலுமில்லை.
‘அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும்டீ பொண்ணே’ என்று சித்தி சொல்வது உள்ளே உறுத்தலாய் கேட்டது. அதிக உயரமும், நிறம் மட்டாகவும் இருக்கும் தான் உடுத்துவதிலேனும் பிரத்தியேக கவனம் எடுத்திருக்கலாம் - மற்ற 25 வயது பெண்களுக்கு இத்தனை மோசமான வரவேற்பு இராது.
பளிச்சென்ற தோற்றத்தில் கொஞ்சிப் பேசினால் - ‘உட்காரும்மா... என்ன விஷயம்?’ என்று பேச்சு வளர்ந்திருக்கும்! தன் ‘விசிட்டிங் கார்ட்’டான தன் ஓவியங்களை எடுத்தாள். சுருட்டி வைத்திருந்தவற்றை, மடங்கிய குழந்தையின் உள்ளங்கையை விரிக்கும் கவனத்துடன் இவள் பிரித்துக் காட்ட, மிஸ்ராவின் கண்கள் கூர்மையாயின. மெல்லிய கூர் மூக்கின் நுனியிலிருந்த கண்ணாடியை மேலேற்றி பார்த்தார். வலது கை, இவள் கையிலிருந்ததை வாங்கிக்கொள்ள, மறுகை இவளை அமரச் சொன்னது. அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை இவள் புறமாய் நகர்த்தியவர், ஒரு கணம் நிமிர்ந்து யாரையோ பார்த்தார்.
“ஆர்ட், முறையாய் பட்சதா, இல்லை பழகிட்டதா?” உருது சாயலுடனிருந்த தமிழில் விசாரித்தார்.
“ஆர்வமிருந்ததால் காலேஜில் ஆர்ட் கோர்ஸ் சேர்ந்தேன் சார்.” மற்ற படங்களிலும் அவர் பார்வை ஆர்வமானது. அவரின் சமிக்ஞையால் பரிமாறப்பட்ட, கரும்புச் சாறு இனிப்பாய் வைபவியினுள் இறங்கியது. பார்த்த நான்கு ஒவியங்களையும் சுருட்டி தன் மேஜை இழுப்பறையுள் மிஸ்ரா வைத்துக்கொள்ள, பதற்றம் இவள் முகத்தில் தெரிந்தது போலும். பல நாட்களின் உழைப்பல்லவா அவை?
“வேற பெய்ன்டிங்க்ஸ் இருந்தால் நாளை எடுத்து வா... அட்வான்ஸ் ஏதும் ஓணுமா?” தயக்கமாய் ஒத்துக்கொண்டாள்.
“பேரென்னா?” தானே தயாரித்த தன் அறிமுக அட்டை ஒன்றை அவரிடம் நீட்ட,
“குட் ஐடியா” என்ற பாராட்டு வந்தது. நயமான 50 அட்டைத் துண்டுகளைத் தங்கள் சாப்பாட்டு மேஜையில் பரப்பி, ஒரே தாளில் சிறுசிறு படங்களுடன், தன் பெயர், மொபைல் எண்ணைக் குறித்திருந்தாள். முதுகு நொந்தாலும், அவை அவளைச் சரியாய் அறிமுகப்படுத்தின. ஆனால், பணம் பற்றிய பேச்சே இல்லையே? பசித்தவன் கணக்குப் பார்க்க முடியாதுதான்... ஆனால், வரும் நாட்களிலும் பசிக்குமே! இவளைப் போல கோகிலா சித்தி பசிக்குச் சாப்பிட மறுத்துவிடுவாள்.
‘வேறென்ன சுகத்தக் கண்டேன்? வாயில வைக்க முடியாத இந்தச் சாப்பாட்டைச் சாப்பிடணும்னு என்ன தலையெழுத்து?’ சீறுவாள்.
“நாளைக்கு இதே நேரம் வரட்டுமா சார்..? நீங்க இருப்பீங்கல்ல?”
“காலை பதினோர் மணிக்கு வந்திடு. விக்கற படத்துல உனக்கு நல்ல பர்சென்ட் தர்வோம்…’
ஆனால், இந்த சமுத்திரத்தில் இவளது கிளிஞ்சல்கள் எப்போது பொறுக்கப்படும்?
ஆனால், பிரபல கடையில் இந்தளவிற்கு ஆதரவு கிடைத்ததே பெரிது. நன்றி தெரிவித்துவிட்டு கிளம்பினாள். மனம் கடவுளுக்கும் நன்றி சொன்னது.
வாடகையின்றி தங்குவதற்கு வீடு கிடைத்ததும் இப்படித்தான் இவள் கேன்வாஸ், வர்ணங்கள் வாங்கும் கடைகாரரின் சிபாரிசு அது.
“நேர்மையான பொண்ணுங்க. இதுவரை கடன் சொன்னதில்ல. ஏன்... பேச்சும்கூட அதிகமிராது. பொறுப்பாய் இருப்பாங்க” என்று யாரோ ஒருவரிடம் தன்னை கடைக்காரர் அறிமுகப்படுத்தியபோது சற்று விறைப்பாகவே நின்றாள் வைபவி. ஆனால், அதற்கான காரணம் தெரிய, மனம் நெகிழந்து போனது.
“சாருக்கு தனி வீடு இருக்குதும்மா பீச் பக்கம். சுற்று சுவர் இருந்தாலும் ஆளில்லாத வீடென தெரிஞ்சு, ஏறி குதிச்சு, தோட்டத்துல குடிச்சு, படுத்துட்டு, மறுநாள் குளிச்சுட்டுக்கூட சிலரு போறாங்க. காலி ட்ரிங்க்ஸ் பாட்டிலு, குப்பைன்னு வீடு நாஸ்தியாவுது. நம்பிக்கையான ஒரு குடும்பம் தங்கினா நல்லதுன்னு சொன்னாரு... நீயும் சித்தியம்மாவுந்தான... தைரியமா இருந்திடுவீங்களா?”
ஒரு வாரம் வீட்டுக் காவலுக்கு ஆள் நியமித்து இவர்களும் புழங்கக் கண்டதில், இடம் பாதுகாப்பானது. தேங்காய், கீரை, பழங்கள் என்று உபரி வசதிகளைத் தந்த வீடு. சென்னையின் மையத்திற்கு வந்து போவது சிரமந்தான். ஆனால், கடற்கரை காற்றுடன் நாகரிகமான வீடு, தோட்டத்து அமைதியுடன் வாடகையின்றி கிடைப்பது வரமல்லவா? அந்த வீட்டைத் தான் முதலில் போய் பார்த்த வைபவி. பெரும் மகிழ்வுடன் அதுபற்றி, சொல்ல சித்தியிடம் வந்தாள். வேறு யாரும்தான் அவளுக்கு இல்லையே.
இவளைச் சந்திக்க பிரியப்பட்ட வீட்டின் உரிமையாளரின் மனைவி தந்த பலகாரப் பையுடன், கூந்தலில் செருகிவிட்ட ஒரு முழ மல்லிகையுடன் மூன்றாம் மாடியில் பொந்து போலிருந்த அவர்கள் வாடகைக் கூட்டிற்குள் அத்தனை ஆனந்தமாய் வந்தவள் - “குட் நியூஸ் சித்தி... கேட்டா ரொம்ப குஷியாயிடுவீங்க” - என்று சொல்ல, கோகிலாவின் முகம் சுருங்கியது. முகத்தின் சிடுசிடுப்பு இளையவளின் சேதியைக் கேட்டதும் இளகியது.
“ஒ... இதுதானா - நா வேறேதுவுமோன்னு பயந்து... திகைச்சுட்டேன்.”
“வேறென்ன?”
“உனக்கு மாப்பிள்ளை தேடிட்டயோன்னுதான்! ஆனா, அதொன்னும் அவ்ளோ சுலபமில்லியே? உங்கப்பா உன்னை, ‘குச்சி குச்சி ராக்கம்மா’ன்னுதானே கொஞ்சுவாரு? இங்கயுள்ள சராசரி ஆம்பிளகளை விட நீ உயரம்... லேசுல ஜோடி சேருமா?” சித்தியின் கிண்டலில் இளையவளின் மனம் சுருண்டது. ஐந்தடி ஆறங்குலம் என்பது அப்படியொன்றும் அசாதாரண உயரமில்லையே..? வீட்டில் வேலை, வெளியே அலைச்சல் என்பதால் மெலிவு அதிகம்தான் - அதனால் மேலும் வளர்த்தியாய் தோன்றுகிறோமோ?
இது தன்னிடம் மட்டுமல்ல, பிறர் முன்னேயும் சித்தி சொல்லுவதுதான். இப்படியான சித்தியின் வார்த்தை விரட்டலில் பறந்து போனவன்தானே பரத்? ஓவியக் கண்காட்சி ஒன்றில்தான் பரத்தை இவள் சந்தித்தது. ‘ஒரு ஓவியமே ஓவியம் வரையக் கூடுமா?’ என்ற பாணியில் இவளைப் பாராட்டி பதினந்தாயிரத்திற்கு வைபவியின் கைவண்ணத்தை வாங்கிக்கொண்டதில் ஆரம்பித்த பழக்கம், இரண்டு முறை பரத் இவள் வீட்டிற்கு வந்து சித்தியுடன் பேசியபின் கருகிப் போனது. அது பற்றி அதிகம் யோசிப்பதில்லை இளையவள்... புத்தியைக் கசக்க கசக்க, கசப்புதானே மிஞ்சும்? ஆனால், இப்போது உடன் பணியாற்றுபவர்களின் பேச்சைக் ‘கேட்ட’ பிறகு, தான் தன் மூளையைப் பயன்படுத்தாத முட்டாள்தானோ என்ற நெருடல்... வைபவிக்கு.
உரிமையாளர் மிஸ்ரா சொன்னது போல மறுநாள் முன் மதியம் மறுபடி அந்தக் கடைக்குள் வந்தபோது தன் தோற்றத்திற்கு ஓரளவு கவனம் தந்திருந்தாள். ஆனால், கோகிலா சித்தி பார்த்த விதத்தில் கூசியதும்தான்.
“எங்க கிளம்பிட்ட?” தொனி குத்தியது. விவரம் சொன்னாள்.
“ஆக, இன்னைக்கு நீ தந்துட்டு வந்த நாலு படத்துக்கும் காசு வரும்ல?”
“அப்படி எதிர்பார்க்க முடியாது சித்தி - கடல் மாதிரியான கடை... அதில் என்னுடையதைப் பார்த்து யாரும் வாங்கினால்தானே?''
அவற்றை மிஸ்ரா தன் மேஜைக்குள் அல்லவா திணித்தார்?
“அப்ப ஏன் உன்னை மறுநாளே வரச் சொன்னார், அந்த வடக்கத்திய ஆளு? வயசானவர்னே?”
“ம்ம்... அறுபதுக்கு மேலே.”
“எவனையும் நம்ப முடியாது” - இது பாதி தனக்கும் மீதி எதிரே நின்றவளுக்குமாய் முணுமுணுக்கப்பட்டது.
தனக்கு இரு ‘சாண்ட்விச்’ தயாரித்து முடித்த வைபவி, தன் இளம் நீல உடைக்கு சிறு முத்துமாலை சேர்க்கலாமா என்ற யோசனையை உடனே கைவிட்டாள்.
“இந்தக் காலத்தில் மட்டும் ஆம்பிள மோசம்ன மாட்டேன் - எந்தக் காலத்திலேயுந்தான்...” சித்தியின் புலம்பல் எதை நோக்கி நகருகிறது என்பது புரிபட, அவசரமாய் பையைத் தோளிலிட்டுக் கொண்டாள்.
“வயசாயிட்டா சபலம், ஜாஸ்தியாயிடும் - எந்த வயசுப் பெட்டையையும் விடாதுங்க.”
முணங்கல் தொடர்ந்தது. உடனே தான் அங்கிருந்து விலக வேண்டும் - இல்லை தன் காட்டமான பதிலில் நிலமை மேலும் எரியும் என்ற பதற்றம் இளையவளுக்குள்.
சித்தி குத்துவது தன் கணவரை - அதாவது மனைவி இறந்தபின் இரண்டாம் தாரமாய் தன்னை மணந்த வைபவியின் தகப்பனை - எப்படி, எதற்காக அத்திருமணம் நடந்தது என்றறிந்த இவளுக்கு இந்த நாடகம் பொறுக்கவில்லை.
’வரேன்’ என்றுகூட இல்லாமல் உதடுகளை இறுக்கியபடி கிளம்பினாள். ஆனால், கடைக்குப் போய் சேர்ந்ததும் சில நிமிடங்களில் தன்னிடம் தரப்பட்ட கனத்த உறை அவளை உலுக்கிவிட்டது! அதுவும் மிஸ்ரா அதைத் தந்த விதம் நிச்சயம் கலவரப்படுத்தியது! பிறர் பார்வையில் படாதபடி அவர் கையால் மூடி, மேஜையோடு சேர்த்து நகர்த்தினார் அதை!
“இதை உள்ளே வைம்மா - பிறகு பார்” - சன்னக் குரலுடன், அவர் கண்ணும் அதே சேதியைச் சொல்ல, கவரை அவசரமாய் தன் பையுள் திணித்தாள்.
“உக்கார்ம்மா...” மறுபடி தண்ணீர் பாட்டிலும் வெண்மையான ஒரு பானமும் நீட்டப்பட, அவை அவளது உலர்ந்த உதட்டுக்கு, உள்ளத்திற்கு வேண்டியிருந்தன.
“இங்க வேலைக்கு... அதாவது ஆர்ட் தெர்ஞ்ச அசிஸ்டென்ட் தேவை - சில கஸ்டமர்ஸ் கேட்பது இங்க மத்தவங்களுக்குப் புரியாது - நீ புரிஞ்சு, அதுக்கேற்றது போல தயார் செய்தும் தர்லாம்.
வேலைக்கு வர முடியுமா? ரெகுலர் டைமிங் - லெவன் டு செவன்.” அச்சத்துடன் அவர் முகத்தை ஆராய்ந்தாள். கேட்ட கண்களில் கள்ளமில்லை - அதீத எதிர்பார்புமில்லை.
“சார்... தாங்க்ஸ்... ஆனா...”
“உன் சம்பளம் ஃபார்ட்டி கே. அது போக உன் படங்களுக்கு நல்ல கமிஷன் வரும். லஞ்ச் இங்கியே தர்வோம் - என்ன?” இப்போது இவர் தந்த கவரில் இருந்தது பணம்தான் அதன் கனம் அதில் பத்தாயிரமேனும் இருக்கும் என்றது. அடுத்தபடியாய் நல்ல சம்பளத்துடன் நிலையான வேலை! அவ்வப்போது கோகிலா சித்தி முணங்குவது போல, தனக்குமே ‘தலை கிறுகிறு’த்ததோ? இந்த வாய்ப்பை நழுவவிட்டால் தான் முட்டாள் என்பதில் சந்தேகமில்லை. எழுந்து நின்று கைகுவித்து ஏற்றுக்கொண்டாள் ”தாங்க்யூ சார்.”
மிஸ்ராவின் கண்களில் நிச்சயம் ஒரு நிம்மதி ஓடியது. ஆனால், இன்று இங்கே வேலையிலிருக்கும் சக பெண்களின் பேச்சிலிருந்து, தன் புத்திசாலித்தனத்தின் மேல் வைபவிக்குப் பெரும் சந்தேகம் எழுந்தது.
_தொடரும்