அத்தியாயம் 1

488.99k படித்தவர்கள்
264 கருத்துகள்

கதைக்கு முன்பு ஒரு பொக்கிஷத்தைப் பற்றிய குறிப்பு:

ல்லெண்ணத்துடன் நமது இல்லம் வருபவர்கள், பகலில் வலது காலை எடுத்து வைத்து இன்முகத்துடன் நுழைந்து விருந்தோம்பலை ஏற்பார்கள். தீய எண்ணத்துடன் வருபவர்கள், இரவில் கொல்லை வழியாக இடது காலை வைத்து இல்லம் புகுந்து, கொலை பாதக செயல்களில் ஈடுபடுவார்கள். எனவேதான், சூரியன் அஸ்தமித்தவுடன் கொல்லைக்கதவைத் திறந்து வைக்கக் கூடாது என்பது மனைசாத்திரம் கூறும் வாக்கு .

பாரத பூமியின் கொல்லைப்புறமான சேர நாட்டு மேற்கு கடற்கரை வழியாக சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில், மிளகு வாங்கவேண்டி வந்த அரேபியர்கள், டச்சுக்காரர்கள் ஆகியோர் அந்தப் பகுதியின் வளங்களையும், குவிந்து கிடந்த பொக்கிஷங்களையும் கண்டு மலைத்துப்போய் நின்றிருந்தனர்.

ரை நாடு தொடங்கி மலைப்புரம் வரை நவரத்தின குவியல்களும், பொக்கிஷங்களும் கொட்டிக் கிடக்க, மிளகு வாங்க வந்தவர்களின் கண்கள் பேராசையால் விரிந்தன. `இத்தகைய செல்வம்மிக்க நாடா பாரதம்..!' என்று மலைத்தவர்களுக்கு, அவற்றை அபகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டதில் வியப்பில்லை. `காட்டுவதைக் காட்டி பெறுவதைப் பெற வேண்டும்' என்கிற எண்ணம் அன்றே தோன்ற, சீனத்துப் பட்டு விற்க வந்த ஒரு அரேபிய வியாபாரி,  தன் மகளின் மூலமாக வியாபாரத்தை செய்து, சேரமானின் மகனை மயக்கி, அவனை வசப்படுத்தி, சேர நாட்டின் பொக்கிஷங்களைக் கவரத் தொடங்கினான். மனம் வெறுத்த மன்னனும், குலசேகர ஆழ்வாராக ஆன்மிகத்தில் லயித்தார் என்பெதெல்லாம் சரித்திர உண்மைகள்.

கரை நாடு என்பதுதான் இன்றைய கர்நாடகம்! சுற்றிலும் கடற்கரையைக் கொண்ட பகுதிகளைக் கரைநாடு என்பார்கள். கர்நாடகா, ஆந்திரா, இப்போதைய கேரளா மற்றும் தமிழகம் நான்குமே கரை நாடுகள்தாம். கரை நாடு என்கிற பெயரை உச்சரிக்கத் தெரியாமல் கர்னாடிக் என்று வெள்ளையர்கள் அழைத்தனர். கரை நாடு தொடங்கி,  தெற்காக சென்றால், மலைபுரம் என்கிற மலபார் வரும். கரை நாடு மயிலங்கி தொடங்கி, மலபாரின் கொளத்து நாடு வரையில், பொக்கிஷங்கள் கொட்டிக் கிடந்த நாடுகள். மன்னர்கள் மட்டுமல்ல, ஜமீன்தார்களும் பெரும்  செல்வங்களையும்,  பொக்கிஷங்களையும் வைத்திருந்தார்கள். கொளத்து நாடு,  கோலாத்ரி என்கிற பரம்பரையைச் சேர்ந்தவர்களால் ஆளப்பட்டது. பரம்பரை பரம்பரையாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு பெண் கொடுப்பவர்கள். இவர்கள். ஆனால், திருவிதாங்கூரைவிட மிகவும் செல்வந்தர்கள். மூஷிக மன்னர்கள் என்றும் இவர்களை அழைத்தார்கள்!

கரை நாட்டின் மயிலங்கி தொடங்கி, கொளத்து நாடு, நாவாய் ஜமீன் போன்ற குறுநிலங்களும், ஜமீன்களும் பொக்கிஷங்களால் பெரும் கீர்த்தி பெற்றுத் திகழ்ந்தன. நாவாய் ஜமீன்தார், அந்த ஊர் ஆலயமூர்த்தி திருநாவாயா நவமுகுந்தனின் மீது, ஸ்வர்ண நாணயங்களால் அபிஷேகம் செய்து, அந்த நாணயங்களைப் பிரசாதமாக மக்களுக்கு வழங்கி வந்தார். கொடுங்காலூர் மற்றும் கொங்கு சேரர்கள் ஆளுவதற்கு முன்பாகவே  மூஷிக மன்னர்கள் மிகவும் பிரபலமாக இருந்தனர். போர் புரிந்து  தங்களது நாட்டின் எல்லையை விரிவுபடுத்துவதைக் காட்டிலும், பொக்கிஷங்களைச் சேகரித்து மேலும் மேலும் செல்வந்தர்களாக வேண்டும் என்கிற விசித்திர ஆசையை மட்டுமே கொண்டிருந்தார்கள்.

ந்நிலையில் கரை நாடு என்கிற கர்நாடகத்தின் மைசூரு - ஸ்ரீரங்கப்பட்டினம் அருகே உள்ள குறுநிலமான மயிலங்கி என்கிற மலங்கி நாட்டின் பொக்கிஷத்தை தற்செயலாக இளம் காதலர்கள் கண்டுபிடிக்கின்றனர். `செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம். அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' என்பது போல், `பொக்கிஷங்களுள் பொக்கிஷம்  மயிலங்கி பொக்கிஷம். அப்பொக்கிஷம் பொக்கிஷத்துள் எல்லாம்  தலை' என்று கூறலாம். மயிலங்கி பொக்கிஷத்தைக் கண்டுபிடித்த அந்த இளம் காதலர்களைப் பற்றிய கதைதான் - மயிலங்கி மங்கையின் மரகதப் பெட்டி!

1.  ஸ்வர்ண மயூரி

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

மீன மாசம் என்கிற பங்குனி திங்களின் உத்திர நட்சத்திரம் அன்று! பத்ராவதி என்று அழைக்கப்பட்ட  அரண்மனை உப்பரிகையின் மதிற்சுவரைப் பற்றிக்கொண்டு நின்றபடி, விண்ணில் ஜொலித்துக்கொண்டிருந்த தாரகைகளை வெறித்துக்கொண்டிருந்தார், மயிலங்கி மன்னர் ராம ரகோத்தம  வேங்கடப்பா. மன்னரது  மனம் தீவிரமாக தன் மகள் அலர்மேல் மங்காவை சுற்றிப் பறந்துகொண்டிருந்தது.

சித்ர வீணை பயில்விக்கும் தன் ஆசான், கங்கம்மாவுடன்  ஸ்ரீரங்கப்பட்டண ஆலய மண்டபத்தில்,   வீணை இசைப்பதற்காக சென்றிருந்தாள், மங்கா. இன்னிசை நிகழ்வு முடிந்ததும், இரவு ஆசானின் மாளிகையிலேயே தங்கிவிட்டு காலையில்தான் அவள் வருவாள்.  தாயில்லாத பெண் என்பதால் அவளைப் பொத்திப் பொத்தி வளர்த்திருந்தார், வேங்கடப்பா. தனது சமஸ்தானத்திற்கு ஒரு ஆண்  வாரிசு வேண்டும் என்று அவரின் திவான் சவ்யசாசியும், அமைச்சர்களும் அவரை 'மறுமணம் செய்துகொள்ளுங்கள்' என்று வற்புறுத்தியும், வேங்கடப்பா மறுத்துவிட்டார்.  

''என் மகளை மகனாக வளர்த்து அவள் கையில் நமது சமஸ்தானத்தை ஒப்படைக்கிறேன். அவளுக்கு தகுந்த வீரனாக பார்த்து, அவனை அவளுக்கு கணவனாகவும், காவலனாகவும் நியமிக்கிறேன்!'' என்று அப்போதெல்லாம் அலட்சியமாக கூறியிருந்தார். ஆனால், தான் அப்படி சொன்னது தவறோ என்று கடந்த ஒரு வாரமாகவே நினைக்கத் தொடங்கியிருந்தார்.  ஒரு வாரமாகவே, மன்னர் வெங்கட்டப்பாவுக்கு நெஞ்சில் ஒருவித வலி. வாய்வு தொல்லையாக இருக்கும் என்று வைத்தியர் கொடுத்த சூரணத்தை உட்கொண்டும் வலி நிற்கவில்லை. உடைகளை மாற்றும்போதுதான் அவை தெப்பலாக நனைந்திருப்பதை உணர்ந்து, தனக்கு அடிக்கடி வியர்த்துப் போவதை உணர்ந்திருந்தார்.  அஸ்தமிக்கும் வேளை நெருங்கிவிட்டதோ..? மகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இன்னமும் செய்யவில்லையே! மகளே பொக்கிஷமாக இருக்க, போதாத குறைக்கு மயிலங்கியின் விலைமதிக்கமுடியாத பொக்கிஷம் வேறு கஜானாவில் இருக்கிறதே!

மைசூர் மன்னர் பரம்பரை வோடேயார்களுக்கு மயிலங்கி பொக்கிஷங்களின் மீது ஒரு கண் இருந்தது. அவர்கள் கண்களில் படும்படியாக, சென்ற வருடம் பங்குனி உத்திரம் நாளில், மயிலங்கி பொக்கிஷத்தை எடுத்துக்கொண்டு,  மிகுந்த கோலாகலத்துடன் யானையின் மீது வைத்து ஊர்வலமாக ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு எடுத்துச் சென்றிருந்தார், வேங்கடப்பா. ஸ்ரீரங்கப்பட்டண ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள ரங்கநாயகிக்கு மயிலங்கி ஆபரணங்களை சாற்றிவிட்டு, உற்சவம் முடிந்தவுடன், மீண்டும் தகுந்த பாதுகாப்புடன்  மயிலங்கி அரண்மனைக்கு எடுத்து வந்திருந்தார். ரங்கநாயகி, மயிலங்கி திருவாபரணங்களில் ஜொலிக்க, ஸ்ரீரங்கப்பட்டண, மைசூர் மன்னர்கள் குடும்பத்தை உற்சவத்திற்கு அழைத்திருந்தார்! வேங்கடப்பா செய்த தவறு அதுதான். ரங்கநாயகிக்கு சாற்றியிருந்த நகைகளைப் பார்த்ததுமே, மைசூர் மன்னருக்கு அவற்றை  அடைய வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது.

''இத்தனைக்கும் கஜானா முழுவதும் நிரம்பியிருந்த பொக்கிஷத்தில், ஸ்ரீரங்கப்பட்டண ரங்கநாயகிக்கு தேவையான திருவாபரணங்களைத்தான் எடுத்துச்சென்றிருந்தார். அதற்கே மைசூர் மன்னர்கள் மலைத்துப் போனார்கள் என்றால் முழு பொக்கிஷத்தையும் பார்த்தால்?

மதயானை ஒன்று துரத்தி வர, ஒரு மனிதன் மரத்தின் மீது ஏறி தப்ப முயல, மரத்தின் மீது ஒரு கரடி அமர்ந்திருக்க, அது இவனை நோக்கி இறங்குகிறது. கீழே இருக்கும் பள்ளத்தில் குதித்து தப்பலாம் என்றால், அந்தப் பள்ளத்தில் விஷப்பாம்புகள் ஊர்ந்துகொண்டிருக்கின்றன. மரக்கிளையோ உடைந்துகொண்டு வருகிறது. அப்போது தேன்கூடு ஒன்று கலைந்து, அதிலிருந்து தேன் சொட்டி அவனது வாயில் நேராக வழிய, அந்த ஆபத்திலும் அவன் அந்தத் தேனை ருசிக்கிறான். ஏறக்குறைய அந்த மனிதனின் நிலையில்தான் இருந்தார், மன்னர் வேங்கடப்பா.

யிலங்கி பொக்கிஷங்களைக் கவரத் துடிக்கும் மைசூர் மன்னர்கள், வடக்கிலிருந்து படையெடுத்து வரும் ஔரங்கசீப்பின் முகலாய படைகள் ஒருபுறம், ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையாக, சமஸ்தானங்களைப் பறித்துக்கொண்டு வரும் கிழக்கிந்திய கம்பெனி மறுபுறம் என்று, எல்லா பக்கங்களிலும் மயிலங்கிய சமஸ்தானத்தை  ஆபத்து சூழ்ந்துகொண்டிருந்தது. இன்பம் தரும் தேன்துளியாக இவரது  வாழ்க்கையில்  அன்பையும், ஆனந்தத்தையும் பரவவிட்டுக்கொண்டிருப்பவள், அவரது அழகிய மகள் அலர்மேல் மங்கா! அவளுக்காகத்தான் மறுமணம்கூட செய்துகொள்ளாமல், வாழ்ந்து வருகிறார், மன்னர் வேங்கடப்பா.

அடுத்த வாரமே, தனக்கு இரண்டாம் தாரமாக மயிலங்கி இளவரசி அலர்மேல் மங்காவை பெண் கேட்டு ஹொளே நரசப்பா என்கிற அமைச்சரை அனுப்பியிருந்தார், மைசூர் மன்னர் சாமராஜ வோடேயார்.

''என்னம்மா செய்யலாம்! அவர்களது குறி நமது மயிலங்கி பொக்கிஷம்! மறுத்துப் பேசினால், போர் தொடுப்பார்களோ என்னவோ!'' - மகளிடம் கேட்க, இளவரசி அலர்மேல் மங்கா, தானே அமைச்சர் நரசிப்பாவை எதிர்கொண்டாள்..

''என் தந்தையைவிட மூத்தவரான என் பெரிய தந்தை மைசூர் மன்னர் சாமராஜ வோடேயாரிடம் நான் ஆசிகளை கோரியதாக கூறவும், அமைச்சரே!'' என்று ஒரு வாக்கியத்தில், தூதுவரை வாயடைத்து போகச்செய்து, அனுப்பிவிட்டிருந்தாள்,

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

நிச்சயம் மைசூர் மன்னர் வாளாயிருக்கமாட்டார். படைகளைத் திரட்டி வரக்கூடும். மங்காவைவிட, மயிலங்கி பொக்கிஷங்களைக் குறிவைத்திருக்கிறார்.  எனவே, படைகளுடன் நிச்சயம் வருவார்.  என்ன செய்வது? பேராசை பிடித்த மைசூர் மன்னர் சாமராஜ வோடேயாரிடம் இருந்து மகளையும் காப்பாற்ற வேண்டும்; மயிலங்கி சாம்ராஜ்யத்தின் அளவிடமுடியாத பொக்கிஷங்களையும் காக்க வேண்டும். குறிப்பாக, மயிலங்கி சமஸ்தானத்தின் சின்னமான `ஸ்வர்ண மயூரி'யை பத்திரப்படுத்த வேண்டும்.

ஸ்வர்ண மயூரி இவரது முன்னோர்களால் வடிக்கப்பட்டது என்பது தெரியுமே தவிர, யாரால் எப்போது என்பது அவருக்கே தெரியாது. கஜானா அறைக்குச் செல்லும்போதெல்லாம் அவர் அதை பார்த்திருக்கிறார். காலங்கள் கழிந்தும், இன்னும் அந்த தங்க மயிலின் தகதகப்பும், மினுமினுப்பும் குறைந்திருக்கவில்லை. மயிலங்கி பொக்கிஷங்களின் நடுநாயகமாக விளங்கும் ஒப்பற்ற ஒரு பொக்கிஷம். மயிலங்கி சமஸ்தான மன்னர்கள் பதவியேற்கும்போது, இந்தத் தங்க மயிலை சிம்மாசனத்தின் முன்பதாகவே வைத்து அலங்கரிப்பார்கள். வேங்கடப்பா பதவியேற்றபோதும், அவரது அரியாசனத்தில் முன்பாக வைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்தவர்கள், மன்னரைவிட, அந்த தங்க மயிலைப் பார்த்துதான் தங்களது ஆச்சர்யத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

வேங்கடப்பாவின் பாட்டனார், திம்மப்பா  சற்றே சந்தேக குணம் நிரம்பியவர். அரண்மனையின் கஜானா அறைக்குப் போதிய பாதுகாப்பில்லை என்று கருதி ஒரு ரகசிய திட்டத்தை செயல்படுத்தினார். ''போர்க்காலங்களில் பொக்கிஷங்களை நான் குறிப்பிடும் இடத்தில் பத்திரப்படுத்திவிடு! அவை  பத்திரமாக இருக்கும்.'' என்று அறிவுரை கூறினார்.

னால், இதுவரை அந்த ரகசிய இடத்தில் பொக்கிஷங்களைப் பத்திரப்படுத்துவதற்கான சூழ்நிலை எதுவும் தோன்றியிருக்கவில்லை. இப்போதுதான், முதன்முதலாக அதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டு வருகிறது,  மைசூர் சாமராஜ  வோடேயாரால்.

பொக்கிஷங்களை வேண்டுமானால், ரகசிய இடத்தில் பதுக்கிவைக்கலாம்! மகள் அலர்மேல் மங்காவையும்தானே, சாமராஜ வோடேயார் குறிவைக்கிறான். அவளை எங்கே பதுக்கிவைப்பது? மன்னர்களின் வாழ்க்கை ராஜ போகங்கள் நிறைந்தது என்று கூறுகிறார்கள். ஆனால், அன்றாடம் வயிற்றில் நெருப்பை அல்லவா கட்டிக்கொண்டு ஒரு மன்னன் வாழ்கிறான். அரியணை, மகள், பொக்கிஷம் என்று அனைத்தையும் குறிவைத்துதானே எதிரிகள் வருகிறார்கள்? இவை அனைத்தையும் காப்பதோடு, மக்களையும் காக்க வேண்டும் அல்லவா?

யோசித்தபடி உப்பரிகையில் நின்றிந்த, மயிலங்கி மன்னர் வேங்கடப்பா, மாளிகையின் தோரண வாயிலைக் கடந்து ஒரு கரிய குதிரையில், தலைப்பாகை கட்டிய உருவம் ஒன்று வந்து இறங்குவதைக் கவனித்தார்.  மாளிகை நந்தவனத்தில் தீப ஸ்தம்பத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்த எண்ணெய் கப்பரையின் ஒளியில், அந்த உருவத்தைக் கூர்ந்து கவனித்தார்.
நெடிய உருவத்திற்கேற்ற புஷ்டியான உடல்வாகு. அந்த முகத்தின்  இடது கன்னத்தில் காணப்பட்ட கோடு  கிழித்தது போன்ற வடு, அவருக்கு வருவது யார் என்பதை உணர்த்திவிட்டது. காஞ்சியில் தங்கி, இவருக்காக வேவு பார்க்கும் பல்பீமா என்கிற உளவாளிதான் வந்துகொண்டிருந்தான். இவன் எங்கே இந்த வேளையில் வருகிறான்?

வேங்கடப்பாவின் பிடரியில் வியர்க்கத் தொடங்கியது.

- தொடரும்