அத்தியாயம் 1

3.05m படித்தவர்கள்
1636 கருத்துகள்

குரு கண்ணாடிக்கு முன்பாய் நின்று, தன்னுடைய சரியாய் இருந்த தலைமுடியை மறுபடியும் கையில் வைத்திருந்த பிரஷ்ஷால் வாரிக்கொண்டிருந்தபோது அவனுடைய ரிங்டோன் சிதறவிட்டது.

எரிச்சலாய் எடுத்து அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு முகம் மலர்ந்தவனாய் செல்போனை காதுக்கு கொடுத்தான். குரலைத் தாழ்த்தினான்.

“சொல்லு சங்கவி...”

“என்ன சொல்றது… நான் இங்கே ஸ்பென்ஸர் பிளாஸா பக்கத்துல நின்று வெயிட் பண்ணிட்டிருக்கேன். நீ வீட்டை விட்டு புறப்பட்டியா இல்லையா..?”

“இதோ புறப்பட்டுட்டேன்… பதினஞ்சே நிமிஷம்! உன்னோட பக்கத்துல இருப்பேன்…”

“வா… வா… வந்து சேரு… மனோவுக்கும், ஸ்ருதிக்கும் தகவல் கொடுத்துட்டியா..?

“ம்… கொடுத்துட்டேன்… அவங்க ரெண்டு பேரும் நாம ஏற்கெனவே சொன்ன ஸ்பாட்ல நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க…”

“சரி சரி… லேட் பண்ணாம புறப்பட்டு வா. ஸ்பென்ஸர் பிளாஸாவுக்கு கூட்டம் வர ஆரம்பிச்சிடுச்சி. காண்டாமிருக சைஸ்ல இருக்கிற ரோமியோ ஒருத்தன், கடந்த அஞ்சு நிமிஷமாய் என்னைப் பத்து செகண்டுக்கு ஒரு தடவை பார்த்து தெய்வீக ரேஞ்சில காதல் பண்ணிட்டிருக்கான்.”

“அந்த காமெடியை என்ஜாய் பண்ணிட்டிரு! நான் கிளம்பிட்டேன்.”

குரு செல்போனை அணைத்து, சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, அறையினின்றும் வெளிப்பட, அம்மா சௌந்தர்யா சமையலறையினின்றும் வெளிப்பட்டாள்.

“எங்கடா கிளம்பிட்டே?”

“ஆபீஸுக்குத்தான்.”

“லீவு போட்டிருக்கிறதாய் சொன்னே?”

“திடீர்னு போன் பண்ணி கூப்பிடறாங்கம்மா… நான் என்ன பண்ணட்டும்?”

“சரி… போயிட்டு எப்ப வருவே?”

“மத்தியானத்துக்குள்ளே வந்துடுவேன்.” சௌந்தர்யா குரலைத் தாழ்த்தினாள்.

“குரு..! இன்னிக்கு என்ன நாள்னு உனக்கு ஞாபகம் இருக்கா..?”

 குரு சிரித்தான்.

“ஞாபகம் இல்லாம இருக்குமாம்மா… என்னுடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்ட நாள் இன்னிக்கு… மறக்க முடியுமா?”

“சாயந்தரம் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போயிட்டு வரலாமா..? அப்பாவும் ஆபீஸிலிருந்து சீக்கிரம் வந்துடறேன்னு சொன்னார்.”

“கண்டிப்பா போலாம்மா. நான் வரட்டுமா… ஆபீஸ்ல வெயிட் பண்ணிட்டுருப்பாங்க…”

குரு வீட்டினின்றும் வெளிப்பட்டு காம்பௌண்ட் கேட் அருகே நின்றிருந்த தன்னுடைய பைக்கை நோக்கிப்போக, சௌந்தர்யா வீட்டுக்குள் இருந்தபடியே குரல் கொடுத்தாள்.

“குரு! மறக்காமே… ஹெல்மெட்டை எடுத்துக்க.”

“எடுத்துகிட்டேம்மா…. அது இப்போ என்னோட தலையிலதான் இருக்கு!” சொல்லிக்கொண்டே பைக்கை உதைத்தான் குரு.   

*****

ஸ்பென்ஸர் பிளாஸா அருகே காத்திருந்த சங்கவி, சராசரி அழகோடு இளம் நீலநிற சுடிதாரில் ஹோம்லியாய் நிரம்பியிருந்தாள்.

இருபத்தி மூன்று வயது. பூசின மாதிரியான உடம்புவாகு. பெரிய கண்களில் நிறைய ஜாக்கிரதைத்தனம் தெரிந்தது.
பைக்கை பிரேக் போட்டு நிறுத்திய குருவை முறைத்தாள் சங்கவி.

“நீ பத்து நிமிஷம் லேட்…”

“ஸாரி…. ஜி.பி. ரோட்ல ஹெவி ட்ராஃபிக்”.

“ஏதாவது ஒரு காரணம் சொல்லிடுவியே?”

“எதுக்காக இந்த டென்ஷன் சங்கவி..? நமக்கு அப்பாயின்ட்மென்ட் எத்தனை மணிக்குத் தெரியுமா..? பதினோரு மணிக்குத்தான்.  இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு..!”

“அதுக்காக சரியா பதினோரு மணிக்குப் போய் நிக்கணுமா என்ன..?”

“சரி… சரி… புலம்பாமே ஏறி உட்கார்… மனோவையும், ஸ்ருதியையும் பிக் அப் பண்ணிகிட்டு பத்தரை மணிக்குள்ளே போயிடலாம். அவங்க க்ரீன்வேஸ் ரோட்டில் சிக்னலுக்குப்; பக்கத்துலதானே வெயிட் பண்றாங்க?”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“ஆமா… இப்பத்தான் பேசினேன்…” சங்கவி சொல்லிக்கொண்டே பைக்கின் பின்பக்கம் ஏறி உட்கார்ந்தாள். “பார்த்து ஓட்டு…”
குரு பைக்கைப் பறக்க வைத்தான்.

பத்தே நிமிடங்கள்…

க்ரீன்வேஸ் சிக்னல் அருகே ரோட்டோரமாய் இருந்த மரத்தடியில் பைக்கில் காத்திருந்த, அந்த அழகான மனோவும், ஸ்ருதியும் பார்வைக்குத் தட்டுப்பட்டு கையை அசைத்தார்கள். சைகை காட்டினார்கள். குரு குரல் கொடுத்தான்.

“என்ன போலாமா?”

“ம்...”

இரண்டு பைக்குகளும் க்ரீன்வேஸ் ரோட்டின், இடதுபக்கம் இருந்த ரோட்டில் திரும்பி, சீரான வேகத்தில் மேலும் பத்து நிமிடங்கள் பயணித்து, அந்த ‘குட் ஹார்மோன்ஸ்’ ஹாஸ்பிடலின் பிரமாண்டமான முகப்புக்குள் நுழைந்து, டூ வீலர்ஸ் பார்க்கிங்கைத் தொட்டு பைக்குகளை நிறுத்திவிட்டு இறங்கினார்கள்.
குரு சந்தோஷக்குரலில் சொன்னான்.

“பதினஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடியே வந்துட்டோம்.”

“டாக்டர்கிட்ட அப்பாயின்ட்மென்ட் கன்ஃபார்ம்தானே!”

“கன்ஃபார்ம்… சந்தேகமே வேண்டாம்…”

பசேலென்ற லானின் ஓரமாய், நான்கு பேரும் ஹாஸ்பிடலின் ரிசப்ஷனை நோக்கி நடந்து, அதனுடைய பளபளப்பான கிரானைட் படிகளில் ஏறி, ரிசப்ஷனில் இருந்த பெண்ணை நோக்கிப் போனார்கள். செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த அந்த அழகான ரிசப்ஷனிஸ்ட் அவர்களை ஏறிட்டாள். லிப்ஸ்டிக் உபயமில்லாமல் சிவந்து போயிருந்த உதடுகளை அசைத்தாள்.

“யெஸ்...”

குரு மெல்லிய குரலில் “டாக்டர் இந்துவதனாவைப் பார்க்கணும்” என்றான்.

“ஓ.பி. கன்சல்டேஷனா?"

நோ... நோ... நாங்க பேஷன்ட்ஸ் இல்லை…”

“தென்..?

“பர்சனலாய்ப் பார்த்துப் பேசணும்.”

“டாக்டர் உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்காங்களா..?”

“ம்… கொடுத்திருக்காங்க இன்னிக்கு மார்னிங் லெவன் டூ லெவன் ஃபிப்டீன்… என்னோட பேர் குரு…”

ரிசப்ஷனிஸ்ட் தன்னிடம் இருந்த ஒரு சிறிய டைரியைப் புரட்டிப் பார்த்துவிட்டு கண்களில் ஆச்சர்யம் காட்டினாள்.

“டாக்டர் மேடம் எனக்குக் கொடுத்திருக்கிற அப்பாயின்ட்மென்ட் ஷெட்யூலில் குரு என்கிற பேரே இல்லையே..?”

“ஒருவேளை டாக்டர் மேடம் உங்களுக்கு கொடுத்த ஷெட்யூலில் என்னோட பேரை மென்ஷன் பண்ண மறந்து போயிருக்கலாம்.”

“ஒன் மினிட் ப்ளீஸ்” என்று சொன்ன ரிசப்ஷனிஸ்ட் இன்டர்காம் ரிஸீவரை எடுத்து யாரிடமோ முணுமுணுப்பான குரலில் பேசிவிட்டு குருவிடம் நிமிர்ந்தாள்.

“மேடம் உங்களை வரச் சொல்றாங்க… ஃபர்ஸ்ட் ஃப்ளோர் செகண்ட் ரூம்.”

“தேங்க்யூ.”

நான்கு பேரும் அங்கிருந்து நகர்ந்து, பக்கத்தில் இருந்த லிஃப்ட்டில் பயணித்து, முதல் மாடியில் இருந்த இரண்டாவது அறைக்கு முன்பாய் நின்றார்கள். கதவில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் எழுத்துக்கள் பதிக்கப்பட்ட பெயர்ப்பலகை பளபளத்தது...

‘டாக்டர் இந்துவதனா எம்.எஸ்’

குரு கதவின் இடப்புறம் தெரிந்த அழைப்புமணியின் பொத்தானின் மேல் விரலை வைத்தான். உள்ளே சின்னதாய் ஒரு ஒலிச்சிதறல். அதைத்தொடர்ந்து “ப்ளீஸ் கெட் இன்” என்ற குரல் கேட்டது.

கதவைத் திறந்துகொண்டு நான்கு பேரும் உள்ளே நுழைந்தார்கள். சுத்தமான அந்தப் பெரிய அறையில் நாற்பது வயது நிரம்பிய டாக்டர் இந்துவதனா சதைப்பிடிப்பான முகத்தோடும், அந்த முகத்திற்கு ஏற்றமாதிரியான ஸ்பெக்ஸோடும் எக்ஸிக்யூட்டிவ் நாற்காலியில் மொடமொடப்பான காட்டன் சேலைக்குள் கம்பீரமாய் சாய்ந்திருந்தாள். நான்கு பேரைப் பார்த்ததும் லேசாய் முகம் மாறி சற்றே கோபமான குரலில் கேட்டாள்.

“இதுல யாரு குரு?”

“நாந்தான் மேடம்…” ஓரடி முன்னால் வந்தான் குரு.

“நீங்கதானே என்னைப் பார்த்துப் பேசணும்னு ஒரு வாரமாய் போன் பண்ணிகிட்டு இருந்தீங்க?”

“ஆமா மேடம்.”

“இப்ப நாலு பேரு வந்து நிக்கறீங்க?”

“ஸாரி மேடம்… மொதல்ல நான் மட்டுந்தான் வந்து உங்களைப் பார்த்துப் பேசணும்னு நினைச்சிட்டிருந்தேன்.

அதுக்கப்புறமாய் நாலு பேரும் வந்து பார்த்து பேசினாத்தான் பொருத்தமாய் இருக்கும்னு நினைச்சேன்.”
இந்துவதனா லேசான கோபத்தோடு தனக்கு முன்பாய் இருந்த காலியான இருக்கைகளைக் காட்டினாள். எரிச்சலோடு சொன்னாள்.

“மொதல்ல உட்காருங்க...”

நான்கு பேரும் தயக்கத்தோடு உட்கார்ந்தார்கள்.

“சொல்லுங்க என்ன விஷயம்..?” இந்துவதனா அலட்சியமாய் கேட்க, குரு தனக்குப் பக்கத்தில் இருந்த சங்கவியைப் பார்த்தான்.

சங்கவி தன்னிடம் இருந்த செல்போனை வெளிச்சப்படுத்தி ‘வாட்ஸ்அப்’ ஆப்ஷனுக்குப் போய், ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஜூம் செய்து காட்டினாள்.

“மேடம்... இந்தப் போட்டோவில் இருக்கிற பெண்ணை உங்களுக்கு ஞாபகம் இருக்கா..?”

இந்துவதனா செல்போனை வாங்கி அந்தப் பெண்ணின் போட்டோவை உற்றுப் பார்த்தாள். அவளுடைய உதடுகள் மெல்ல முனகின.

“இந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே… ஹாஸ்பிடல் பெட்ல இருக்கும்போது எடுத்த போட்டோ மாதிரி தெரியுது...”

“யூ ஆர் கரெக்ட்” இந்த ஹாஸ்பிடல்ல எடுத்த போட்டோதான் இது மேடம்.”

இந்துவதனா நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“எ... எ… என்னது! இந்த ஹாஸ்பிடல்ல எடுத்த போட்டோவா இது?”

“ஆமா மேடம்... இரண்டு வருஷத்துக்கு முந்தி மே மாசம் பதினாறாம் தேதி ராத்திரி எடுத்த போட்டோ.”

 இந்துவதனாவின் நெற்றி இரண்டு வரி சுருக்கங்களுக்கு உட்பட்டது. அதிர்ச்சி விலகாத குரலில் கேட்டாள்.

“இந்தப் பொண்ணோட பேர் என்ன?

“தெரியாது மேடம்”

“சரி... இந்தப் பொண்ணுக்கு என்ன பிரச்னை? இவளை ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து அட்மிட் பண்ணினது யாரு?

“தெரியாது மேடம்.”

“சரி... நீங்க யாரு… இந்தப் பொண்ணுக்கும் உங்களுக்கும் என்ன உறவு?

நான்கு பேரும் மௌனமாய் இருந்தார்கள். இந்துவதனா கோபம் மேலிட குரலை உயர்த்தினாள்.

“இப்படி நாலு பேரும் பேசாமே இருந்தா என்ன அர்த்தம்? இந்தப் பொண்ணு உங்களுக்கு என்ன உறவு?”

“எந்த உறவும் இல்ல மேடம்.”

“அப்புறம்...”

“எங்களுடைய கடவுள்.”

டாக்டர் இந்துவதனாவின் விழிகள் திகைத்தன.

“என்ன சொன்னீங்க கடவுளா?”

“ஆமா மேடம்… இன்னிக்கு நாங்க நாலு பேரும் உங்களுக்கு முன்னாடி இப்படி உயிரோடு உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கிறதுக்கு காரணமே போட்டோ வடிவத்தில் இருக்கிற இந்தப் பொண்ணுதான். நம்ம உயிரைக் காப்பாத்தினவங்கள நாம கடவுளாகத்தானே நினைக்கணும் டாக்டர்?”

“இந்தப் பொண்ணு உங்க நாலு பேரோட உயிரைக் காப்பாத்தினாளா... எப்படி?”

அதுவரைக்கும் எதுவும் பேசாமல் அமைதி காத்த சங்கவி வாயைத் திறந்தாள்.

“மேடம்... நீங்க ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான பேஷன்ட்களைப் பார்க்கிறதால இந்தப் பொண்ணை மறந்துட்டீங்க போலிருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்பு ரோட்டோரத்தில் மயக்கமாய் கிடந்த இந்தப் பொண்ணை யாரோ உங்க ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்து, அட்மிட் பண்ணிட்டு போயிட்டாங்க. நீங்க மனிதாபிமான அடிப்படையில் அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து காப்பாற்ற முயற்சி செஞ்சீங்க. ஆனா, சிகிச்சை பலனளிக்காமே அவளுக்கு பிரெய்ன்டெத் என்ற மூளைச்சாவு நிலை ஏற்பட்டது. நீங்க போலீஸ் கமிஷனருக்கு இன்ஃபார்ம் பண்ணீங்க. போலீஸ் கமிஷனரும் வந்தார். அந்தப் பொண்ணு யாரு.. எந்த ஊரைச் சேர்ந்தவள்னு கண்டுபிடிக்க ரெண்டு நாள் முயற்சி பண்ணியும் முடியலை. கடைசியா போலீஸ் கமிஷனரும், நீங்களும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தீங்க…”

மனோ இப்போது தொடர்ந்தான்.

“அந்த முடிவு இதுதான்... எப்படியும் இறந்து போகப்போகிற அந்தப் பொண்ணோட உறுப்புகளை தேவைப்படறவங்களுக்கு பொருத்தி அவங்களோட உயிர்களைக் காப்பாத்த நினைச்சீங்க… அந்த நினைப்பை செயல்படுத்தியும் காட்டீனீங்க…”

“யூ மீன் கேடாவரிக் டொனேஷன்?”

“ஆமா மேடம்.. பிரெய்ன்டெத் ஸ்டேஜுக்குப் போயிட்ட அந்தப் பொண்ணோட உடம்பிலிருந்து முக்கியமான நாலு உறுப்புகள் எடுக்கப்பட்டு… எனக்கு கல்லீரல், குருவுக்கு ஹார்ட்டோட வென்ட்ரிக்கள் வால்வ், சங்கவிக்கு கிட்னி, ஸ்ருதிக்கு கண்கள்னு பொருத்தப்பட்டது.

டாக்டர் இந்துவதனா இப்போது ஒரு பெருமூச்சோடு தலையாட்டினாள்.

“யெஸ்... யெஸ்,  நீங்க  சொல்லச் சொல்லத்தான் எனக்கு ஒவ்வொரு விஷயமாய் ஞாபகத்துக்கு வருது. அந்தப் பொண்ணு யாரு… எந்த ஊரைச் சேந்தவள்... அவளுடைய உடம்புக்கு எது மாதிரியான பிரச்னை வந்து பிரெய்ன்டெத் ஸ்டேஜ் வந்தது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமே போலீஸ் கமிஷனரும், நானும் அவளை இந்த ஹாஸ்பிடல்ல வெச்சுகிட்டு நாலஞ்சு நாளா திணறிப் போயிட்டோம்.

அதுக்கப்புறம் வேற வழியில்லாமதான் அந்தப் பொண்ணோட உடம்பிலிருந்து வைட்டல் ஆர்கன்ஸ் எடுத்து, ப்ரியாரிட்டி லிஸ்ட்டில் இருக்கிற நாலு பேஷன்ட்களுக்கு அனுப்பி வெச்சோம். அந்த நாலுபேரும் நீங்கதான்னு இப்ப தெரிய வரும்போது மனசுக்கு சந்தோஷமாயிருக்கு. அதுசரி, நீங்க நாலு பேரும் எப்படி ஒண்ணா சேந்தீங்க?”

அதுவரைக்கும் மௌனமாய் இருந்த ஸ்ருதி இறுகிப்போன முகத்தோடு இந்துவதனாவிடம் திரும்பினாள்.

“அதை அப்புறமாய் சொல்றோம் டாக்டர். அதுக்கு முன்னாடி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் வேற ஒண்ணு இருக்கு.”

“என்ன?

“பிரெய்ன்டெத் ஸ்டேஜுக்குப் போன அந்தப் பொண்ணை உங்களுக்குத் தெரியாதுன்னு சொன்னீங்க?”

“ஆமா...”

“அது பொய்... அந்தப் பொண்ணு யார்னு உங்களுக்குத் நல்லாவே தெரியும் .”

- தொடரும்