அத்தியாயம் 1
அந்த வீட்டுக்குப் வெளிப்புறத்தில், ஒரு வண்ணக் கோழியை செல்லமாகச் சிணுங்கியபடியே துரத்திக்கொண்டிருந்த வாலிப வனப்புச் சேவல் ஒன்று, திடுதிப்பென்று பின்வாங்கியது.
வீட்டின் வெளிப்புற மாடத்தின் மேல் ஒன்றோடு ஒன்றாய் ஒட்டி, ஜோடியாய்க் கிடந்த சிட்டுக் குருவிகள் இறக்கைகளை உதறியபடியே எதிர் எதிர்த் திசைகளில் பறந்து போயின.
அதே மாடத்திற்குள் காட்சி அளித்த பிள்ளையாருக்குத் தீபம் ஏற்று வதற்காகச் சிறிது குனிந்த காந்தாமணி, விளக்கேற்றாமல் தீப்பெட்டியும் குச்சியுமாக நிமிர்ந்தாள். காந்தாமணியின் அம்மா வான சொர்ணம்மா, பேசிய பேச்சையெல்லாம் வலது காதில் வாங்கி இடது காதுவழியாய் விட்டுக் கொண்டிருந்த அண்டை வீட்டு உமா, தனது வீட்டை நோக்கிப்போகப் போனாள்.
ஆனாலும் இங்கே நிற்பதா, அங்கே போவதா என்று முடிவெடுக்க முடியாமல், ஒரு காலை முன்வைத்து, மறுகாலை பின்வைத்துத் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
இத்தனை பேரின் அத்தனை வெளிப்பாடுகளுக்கும் காரணமான மனோகர், வீட்டின் வெளிப்பக்கத்தில் வாசலுக்கு முன்னால் நின்றான். அவனது வலதுகர வளைவில் ஒரு தோல் பை தொங்கியது. இடது கைப்பிடியில் ஒரு சூட்கேஸ் ஒட்டப் பட்டதுபோல் கிடந்தது.
வலது தோளில் சோல்னாப் பையும், இடது கையில் தூக்குப் பையும் தொங்கி வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவன் போல் நின்றான். அனைவரையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தான். வீட்டுக்குத் திரும்பியதால் ஏற்பட்ட எதிர்பார்த்த
ஒத்தை வீடு மகிழ்ச்சியுடன், அக்காவைப் பார்த்த எதிர்பாராத மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, காந்தாமணி அக்காவை ரெட்டிப்பு மகிழ்ச்சியுடன் பார்த்தான்.
மனைவியைக் கண்களால் தேடிப் பார்த்தான். கண்ணில் படவில்லை. மீண்டும் அம்மாவை விட்டுவிட்டு அக்காவையே பார்த்தான். அவள், தான் வந்தது தம்பிக்குப் பிடிக்கவில்லையோ என்று அனிச்ச மலராய் ஆகும் வரை பார்த்தான். அப்புறம்தான் பேசினான்.
“எப்போக்கா வந்தே?”
“இன்னிக்கு காலையிலதான்...”
“அறுவடை சமயம்... அடைமழை நேரம்... ஏன் இப்படி திடுதிப்புன்னு...”
“நான் சொல்லாமல் கொள்ளாமல் வரப்படாதா...?”
“ஓம்மா புத்தி... ஒன்னை விட்டுப் போகுமா... நிலத்தை வித்துட்டோ விற்காமலோ என்னோட தங்கிடுன்னு சொல்றவன் நான்?”
இதற்குள், “என் புத்தில் என்னடா கண்டே..” என்று முற்றத்து மேல் திண்ணையில் நின்ற சொர்ணம்மா, வீதிக்கே ஓடிவந்தாள். அறுபத்தைந்து ஆண்டுகளைக் கொண்ட மொக்கையான முகம். கண், வாய், மூக்கு, காது ஆகியவை அந்த மொக்கையில் தனித் தனியாய் ஒட்டப்பட்டது போன்ற தோற்றம். பின் நெற்றி முன் தலையை ஆக்கிரமித்தது போல் பொட்டல். அதில் ஒரு பள்ளம்.
பள்ளத்தாக்கைச் சுற்றிய மரங்கள் போல், அந்தப் பள்ளத்தைச் சுற்றிய முடிக் கற்றைகள். காந்தாமணி, தம்பியிடம் இருந்த சூட்கேஸையும், ஜோல்னாப் பையையும் வாங்கிக் கொண்டிருந்த போது, சொர்ணம்மா அங்கேயே, அந்த நிமிடமே ஒப்பித்தாள்.
“ஊர்ல... ஆறு மாசமா பேச்சு மூச்சி இல்லாமக் கிடந்த பாவிப் பயலுவ... பழையபடியும்... புத்தியக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்களாம். அக்காவோட நிலம் இருக்கு பாரு... மூணு மரக்கால்... நாலு செண்டு... அசல் பட்டா இடம்... அதுல வண்டிப் பாதை வேணுமுன்னு ஊர்க்காரனுவ கேட்டாங்களாம். அக்கா, பட்டா நிலமுன்னு சொல்லியும் கேட்காமல், ஊர்க்காரனுவ வண்டி அடிக்காங்களாம். நிலத்துல முளைச்ச காணப் பயிருல்லாம் கரையான் புத்தாய் ஆகிட்டாம். அவங்க நாசமாப் போகணும். போன இடம் புல்லு முளைச்சுப் போக... நீதான் பழையபடியும் பெரிய இடத்துல சொல்லணும். இந்தத் தடவை... அவங்க காலுல கையில் விலங்கை மாட்டி போலீஸ் இழுத்துட்டுப் போறதுக்கு, நீ ஏற்பாடு செய்யணும்.”
“ஒனக்கு மூளை இருக்குதாம்மா? தம்பி வந்ததும் வராததுமாய்...”
மனோகர், அக்காவையே பார்த்தான். பார்க்கப் பார்க்க எரிச்சலும், பாசமும் மாறி மாறி வந்தன. உச்சிமுதல் பாதம் வரை சமச் சீரான உடம்பு. பச்சைக் கருப்பு... பச்சையான கருப்பல்ல. பாசிப் பச்சையும், நீலக் கருப்பும் கலந்து குழைந்த வாளிப்பான நிறம்.
எலும்புகள் தேக்காகவும், நரம்புகள் பித்தளை ஒயர்களாகவும், சதைகள் செப்புக் கட்டிகளாகவும் உருவெடுத்து, எஃகு போன்ற தோலுக்குள் அடங்கியது போன்ற மல்லுடம்பு.
மனோகர், எதுவும் பேசாமல் உள்ளே வந்தான். முற்றத்தில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து பின்பக்கமாய்ச் சாய்ந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அக்கா கொண்டு வந்த ஒரு செம்புத் தண்ணீரை தூக்கிப்பிடித்து, நீரை அருவியாகவும், வாயைப் பள்ளத்தாக்காகவும் ஆக்கிக் கொண்டிருந்த போது, சொர்ணம்மா சொன்னதையே மாற்றிச் சொன்னாள்
“பட்டா நிலத்துல வண்டிப் பாதை போடுறத்துக்கு, எங்கப்பனுக்கு பிறந்தானுவளா? இல்லை ஒன் மச்சானுக்குப் பிறந்தானுவளா - எவ்வளவு கொழுப்பு இருந்தால் அடுத்தவன் நிலத்தை வாயில் போடுவானவ? அவனுவ துள்ளத் துடிக்கப் போவணும். கொள்ளி போட பிள்ளை இல்லாமல் போகிற இடத்துல சாகணும். வாந்தி பேதில போகணும் மனோகர்! இத விடப்படாதுடா இப்பவே போன் போட்டு, அவங்க கையில் காலுல விலங்கு மாட்டி, போலீஸ்காரன் அவனுவள நடு ரோட்ல நாய இழுத்துட்டுப் போற மாதிரி போக வைக்கணும். யாரை விட்டாலும் அந்த ராமசாமியை மட்டும் விடப்படாது... கொள்ளையிலே போவான்.”
மனோகர் பாதிச் செம்புத் தண்ணீரைத் தரையில் வீசியபடியே, புரையேறிய தலையோடு சீறினான்.
“சும்மா கிடம்மா... எக்கா... ஆறு மாதத்துக்கு முன்னாலதான் இதே மாதிரி பிரச்சினையில் தலையிட்டு, ராமசாமி வகையறாக்களை உள்ளே போட்டோம். போலீஸ் என்னதான் தெரிஞ்சவங்களா இருந்தாலும், ஒரு தடவதான் சொல்லலாம். அடுத்த தடவ சொன்னால் நமக்குத்தான் அசிங்கம்.”
அக்கா, காந்தாமணி, அசைவற்று பேசாமல் நின்றபோது, தாய்க்காரி மகளுக்கும் சேர்த்துப் பேசினாள்.
“இந்தப் பாவி மொட்டக்கிட்ட, காலையிலேயே படிச்சுப் படிச்சுச் சொன்னேன். ஒன் தம்பியை நம்பாதே நம்பாதேன்னு தலையில் அடிக்காத குறையாச் சொன்னேன். அவன் பழைய மனோகர் இல்ல. வீட்டுக்குக் கெட்ட பிள்ளையானாலும் பரவாயில்ல. ஊருக்கு நல்ல பிள்ளையாய் பேர் வாங்க நினைக்கான்னு சொன்னேன். கேட்டியாடி.. என் பேச்சை? எப்படிப் பலிச்சிட்டுப் பாரு.”
மனோகர், அதட்டினான்...
“எம்மா... இதுக்கு மேலே பேசினே, திண்ணைக்குக் கூட வராமல், திரும்பிப் பாராமல் போயிடுவேன். நீயும் சண்டைக் கோழியாய் நிற்கப்படாதுக்கா. ஊரையும் அனுசரித்துத்தான் போகணும். ஊர்ப் பாதைக்குத்தானே கேட்டாங்க. பெருந்தன்மையா விட்டுக் கொடுக்கலாமில்ல?”
“இந்தா பாருப்பா... நீ செய்யணும் என்கிறதுக்காக நான் வரல. ஒன்னைப் பார்க்கறதுக்காகக்கூட வரல. என் புது நாத்தனாரைப் பார்க்க வந்தேன். பார்த்துட்டேன். நாளைக்கே போயிடுவேன், கவலைப்படாதே...”
“மூக்குக்கு மேலே கோபம் மட்டும் வந்துடும். சரி, விவரமாய்ச் சொல்லு...”
“ஊர்ப்பாதை வெள்ளையன் தோட்டத்தோட முடியுது. அதுக்கு நேரா சீமைச்சாமி நிலம், நீள வாக்குல இருக்குது. அதுல பாதை கேட்கலாமில்ல? அதவிட்டுட்டு, பத்தடி தள்ளி இருக்கிற என் நிலத்துல கேட்கிறது என்ன நியாயம்? ஊர்ப்பாதையை வளைச்சு என் நிலம் வழியாய் விடாமல், சீமைச்சாமி நிலம் வழியா நேராய் விடலாம் இல்லியா? ஏன் விடல? ஏன்னா, சீமைச்சாமிக்கு ஆள் பலம் இருக்குது. நான் நாதியத்தபய மகள் இல்லாதவன் பெண்டாட்டி. எல்லோருக்கும் இளக்காரமான மயினிதானே?”
அம்மாக்காரி, சவாலிட்டாள்.
“நான் இருக்கும்போது நீ எப்படி நாதியத்துப் போவே? நாளைக்கே நானும் ஊருக்கு வாரேன். எந்தப் பயல் வண்டியடிச்சுட்டு வந்தாலும் முன்னால போய் நின்னு மூக்கணாங் கயிறைப் பிடிக்கேன்.”
மனோகர் சளைத்தான்.
“சீச்சீ... இது வீடா? ஒரு மாசம் நிம்மதியாய் டில்லியில் இருந்தேன். ஒருவன் கிட்டச் சிபாரிசுக்கு போறது பிச்சை எடுக்கிறது மாதிரின்னு யாருக்கும் தெரியல.”
“ஒங்களுக்குத்தான் தெரியல. ஊர்க்காரன் இருக்கிறவன் நிலத்தை விட்டுவிட்டு, இல்லாதவன் நிலத்தை பிடுங்க வந்தால் எப்படிங்க? பாதி நிலத்தை வேணுமுன்னா ஊர்ப்பொதுப் பணத்துல வாங்கிக்கன்னு அண்ணி சொல்லி இருக்காங்க. அதுக்கு முடியாதுன்னா, அது அடாவடிதானே? ஊர்க்காரன், ஆள் பலத்தை தப்பா பயன்படுத்தும்போது, நீங்க ஒங்க பேட்ச்மேட் எஸ்.பி.கிட்ட இருக்கிற நட்பை சரியாப் பயன்படுத்துறதுலே என்ன தப்பு?”
மனோகர், நிமிர்ந்து பார்த்தான். ஈரம் கசிந்த தலைமுடியை பின்பக்கமாய்த் தட்டி விட்டபடியே, சங்கரி அவனைப் பார்த்தாள். அடுத்தவர் குடும்ப விவகாரத்தில் ரசனை கண்டு நின்றாலும், போவது போல் பாவலா செய்த பக்கத்து வீட்டு உமாவை அழுந்தப் பிடித்தபடியே, கணவனுடைய பதிலுக்காகக் காத்து நிற்பவள் போல் முகம் தூக்கி நின்றாள்.
மனோகர், எதுவும் பேசாமலேயே அவளைப் பார்த்தான். ஒரு மாதப் பிரிவிற்குப் பிறகான பரிவுப் பார்வை. அவள் உடலெங்கும் கண்களை ஊடுருவ விட்டபடி பார்த்துக் கொண்டே இருந்தான். சங்கரி மீண்டும் அவனை உசுப்பினாள்.
“இதையாவது செய்யுங்க.”
மனோகரின் பிரிவுப் பார்வை, பரிதாபப் பார்வையானது. அவளை ஊடுருவிப் பார்த்தக் கண்கள் தன்னைத்தானே உள் முகமாய்த் தேடின. ‘இதையாவது செய்யுங்கன்னு எந்த அர்த்தத்தில் சொல்றாள்? யதார்த்தமா... இல்ல குத்தலா... நோ - நோ... அவள் முகத்தைப் பார்த்தால் அப்படித் தெரியலியே?’
அக்கா காந்தாமணி, நிலைமையைச் சமாளித்தாள்.
“சரி... சரி... நாளைக்கு ஆற அமரப் பேசலாம்...”
“பேசாம இங்கேயே வந்திடுக்கா.”
“அதையும் சேர்த்து நாளை பேசலாம்... எம்மா! சங்கரி மொதல்ல தம்பி குளிக்கட்டும். வெந்நீர்ல குளிச்சாத்தான் அலுப்பு தீரும். உடல்வலி போகும். கீசரப் போடு.’’
“கீசரு ரிப்பேரு அண்ணி.”
“நல்ல பொண்ணு. அப்போ அடுப்புல போடு. தண்ணி சூடாகணும். அவ்வளவுதானே.”
சங்கரி, கணவனை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டே, உள்ளே சமையலறைக்குள் போகப் போனாள். பிறகு திரும்பி வந்து திண்ணையில் வைக்கப்பட்ட சூட்கேஸைத் தூக்க முடியாமல் தூக்கியபடி நின்றாள்.
இன்னொரு லெதர் பேக்கைக் கண்களால் சுட்டிக் காட்டி, உமாவைத் தூக்கி விடும்படி அதே கண்களால் கெஞ்சினாள். ஆனால் உமா, கண்டுக்கவில்லை. அந்நியன் பொருளைத் தொடுவது அவனைத் தொடுவது மாதிரிதானே. கற்பு கெட்டுப் போகாதா?
உமா, வெளியே போய்க் கொண்டிருந்தபோது, மனோகர் எழுந்து வீட்டுக்குள் போகப் போனான். அவனையே பார்த்து நின்ற அக்காவின் தோளில் கை போட்டபடியே, திண்ணைப் படியில் அவன் கால் வைத்த போது, ஒரு மோட்டார் பைக் சத்தம்...
- தொடரும்