அத்தியாயம் 1

192.32k படித்தவர்கள்
239 கருத்துகள்

அலறல் ஓர் அறிமுகம்

ரு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.30 மணி இருக்கும். கழிவறைக்குள் அமர்ந்திருந்தேன். மதியம் சாப்பிட்ட நாட்டுக்கோழி தன் வேலையைக் காட்டிவிட்டது. `கொக்கரக்கோ’ என வயிற்றுக்குள் ஒரே கூச்சல். கழிவறைக் கோப்பை மீதமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்தக் குரல் என் இடது காதுக்குள் சன்னமாய் கேட்டது.

''நல்லாருக்கியா…?''

 அது ஒரு பெண்ணின் குரல். அத்தனை தெளிவு.  சடாரென எழுந்து திரும்பினேன். யாரும் இல்லை. மீண்டும் அதே சத்தம்... இம்முறை மிகுந்த உக்கிரத்தோடு சொன்னது…

 “எனக்க வீட்ட விட்டு வெளிய போ!”

 ‘இறைவா! இந்த நேரத்துல யாராக இருக்கும்? இப்புடியே எப்படி வெளியே போவ? கடவுளே! கழுவ நேரம் இருக்குமா?’ - என் தலைக்குள் பயம் அப்பிக்கொண்டது. உடலெங்கும் வியர்வை வழிந்தது. அதுவரை அந்த வீட்டில் நிறைய அமானுஷ்யங்களைக் கண்டிருந்தாலும், அன்று நடந்த சம்பவம் புதிது. அந்தக் குரலை மிகத் தெளிவாகக் கேட்டேன். 1958ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 'ராணி இல்லம்' என்ற பெயரையுடைய அந்த வீட்டின் வயது, சுமார் 70 ஆண்டுகள். 30 செண்டு இடத்தில் குறைந்தது 18 செண்டுகளை வீடு மட்டுமே ஆக்கிரமித்திருந்தது. நாங்கள் அங்கு குடியேறி ஆறு மாதங்களே ஆகியிருந்தன. வீட்டின் முன்பக்கம் நிறைய இடம்விட்டுக் கட்டியிருக்கிறார்கள்.

தரைத் தளமும் மேல்தளமும் கொண்ட வீடு. மேல்தளத்திற்குச் செல்ல, வீட்டின் வெளியே வலது பக்கத்தில் படிக்கட்டுகள் இருந்தன. வீட்டின் உள்ளேயிருந்தும் படிக்கட்டுகள் இருந்தன. ஒரு குறிப்பிட்ட அறைக்குள் இருந்து அந்தப் படிக்கட்டுகள் துவங்கும். அந்த அறையின் சாவி, வீட்டின் உரிமையாளரிடமிருந்தது. வீட்டின் முன்வாசலில் இருந்து பின்வாசல் வரைக்கும் இரண்டு முறை நடந்தாலே, கால்கள் வலிக்கும் அளவுக்கு தூரம் இருந்தது. வெளியே எவ்வளவு வெயிலடித்தாலும், வீட்டினுள்ளே மின்விசிறியைச் சுழலவிட்டால், போர்த்திக்கொண்டுதான் தூங்க முடியும். அவ்வளவு குளிரும். கருப்பட்டியும் முட்டையும் கலந்து சுவரைப் பூசியிருக்கிறார்கள். பழைய காலத்து கட்டுமான முறை.

எல்லா அறைக்கும் இரண்டு மூன்று கதவுகளும், நான்கைந்து சன்னல்களும் உண்டு. அவ்வளவும் தேக்கு. 12 அறைகள் கொண்ட ஒரு குட்டி அரண்மனை என்றுகூடச் சொல்லலாம். வீட்டின் பின்பக்கம் ஒரு பெரிய மா மரமும் ஏழு தென்னை மரங்களும் இருந்தன. வீட்டுக்குள்ளே ஒரு மிகப்பெரிய மரத்தாலான அலமாரி வைக்கப்பட்டிருந்தது. சுவரில் ஒரு குறிப்பிட்ட அலமாரியை மட்டும் ஏனோ பிளைவுட் வைத்து மூடி ஆணியடிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டுமே எங்களுக்கு ஒரு குழப்பத்தைத் தந்தாலும்கூட, அது வீட்டின் உரிமையாளரது பொருட்கள் இருக்கும் அலமாரியா இருக்கலாம் அல்லது அலமாரியை ஆணியடித்து மூடுவது அவரது விருப்பம் என்று விட்டுவிட்டோம். 

அந்த வீட்டில் நாங்கள் குடியேறியது முதலே எங்கள் குடும்பத்தில் ஒரே குழப்பம். மனநிம்மதி இல்லை, வியாதிகள், அடிக்கடி யாராவது ஓர் ஆள் ஆஸ்பத்திரியில் போய்ப் படுக்கவேண்டியிருந்தது. அப்போது நான் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அந்த வீட்டை முதல் தடவை பார்ப்பதற்காக நாங்கள் வந்தபோது, சில எச்சரிக்கை சமிக்ஞைகளை உணர்ந்தேன். தூசியின் மணம் மற்றும் அழுகிய முட்டையின் துர்நாற்றம் வீசியதைக் கவனித்தேன். இம்மாதிரியான அறிகுறிகளைப் பேய்கள் உலவும் இடங்களில் மட்டுமே உணரமுடியும் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

 சொல்ல முடியாத ஓர் இருள் அந்த வீட்டைச் சூழ்ந்திருந்தது. கேட்டின் நுழைவாயிலில் ஒரு பெரிய முல்லைப் பூ கொடி படர்ந்து கிடந்தது. அந்த மணம் வேறு ஒருவித அமானுஷ்யத் தன்மையை உணர்த்தியது. நான் உடனே அம்மாவிடம் சொன்னேன்.

 “எம்மா! இந்த வீடு கொஞ்சம் செரியில்ல கேட்டியா... எனக்குப் புடிக்கலை!”

 அம்மா கடுப்படித்தாள், “எந்த வீட்டத்தான் ஒனக்கு புடிச்சிருக்கு? பேய் இருக்கு, நாயிருக்குன்னுகிட்டு... வாய மூடிட்டு வா! ஒனக்கு பழைய வீட்டுப் பக்கத்துல உள்ள வாபொளந்தான்களை (வாய் பிளந்தான்கள்) விட்டுப் பிரிய முடியலன்னா, நீ அங்கயே ஒரு வீடு எடுத்து தங்கிக்கா! ஆளுவளப் போட்டு சல்லியப் படுத்தாத!”

 “இல்லம்மா, இந்த வீட்டோட காரியங்கள், அமைப்புகள் எனக்கு ஒண்ணும் சரியாப்படலை!”

 “ஆமா! ஒனக்கு எப்பவும் இதே வேலை. ராத்திரி முழுசும் கண்ட கூதரைப் பேய்ப் படங்கள பாத்துகிட்டு... கக்கூஸ் போணும்னாலும்கூட ஒரு ஆளு வரணும். பேசாம வாடே... ஒங்கப்பாக்க காதுல கேட்டுராம... வாளு வாளும்பாரு!”

 இதோ, இங்கு குடியேறி ஆறு மாதங்களாகிவிட்டன. வீட்டில் வந்தது முதல் யாருக்கும் சரியான தூக்கமில்லை. ராத்திரி ரெண்டு மணிக்குத் தாகம் எடுத்துத் தண்ணீர் குடிக்க கிச்சனுக்குள் நுழையும்போதும், அம்மா விழித்திருந்து எதையாவது பேசிக்கொண்டிருப்பாள். அப்பா வழக்கம் போல விழித்திருந்து கேட்டுக்கொண்டிருப்பார். ஆரம்பத்தில் புது வீடுதானே? போகப் போகப் பழகிரும் என்று நினைத்தோம். `ஆறு மாதமாகியும் பழகாத வீடு என்ன எழவு வீடோ செவம்?’ என்று நினைக்கையில் எனக்குக் கோபமாக வந்தது.

 இதோ, கையறு நிலையில் கழிவறையில் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது. இப்போது குரல் கேட்கவில்லை. மாறாக, என் செவிமடல்களில் ஒரு மூச்சுக்காற்று படர்ந்ததை உணர்ந்தேன். தேகம் சிலிர்த்துப்போனது. காதுகளின் மிக அருகில் யாரோ நிற்கிறார்கள்.  திரும்பிப் பார்க்க முடியாது. அய்யோ தொலைந்தேன்! குனிந்து கீழே பார்த்தால், தரையின் ஈரத்தில் ஒரு பெண்ணின் முகம் மங்கலாய்த் தெரிந்தது. என் மூச்சு ஒருமுறை நின்றுபோனது. அம்மாவை அழைத்துவிட வேண்டியதுதான். அலறினேன்…

 ``அம்ம்ம்மம்ம்ம்மா... பே...யி...’’

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

 உள்ளேயிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

 ''பாய் போட்டாச்சி, போய்ப் படாம்டே... பக்கத்து வீடுகள்ல மனுசன் ஒறங்காண்டாம்? கக்கூசுல கெடந்து பெகளம் வக்கி சவத்து நாயி?”

 எனக்குத் தலைசுற்றாத குறை.

 ‘இப்போ எப்புடி வெளிய போறது? கழுவவா? துணி உடுத்தவா? கதவத் தொறக்கவா? நடக்கவா? ஓடவா? `அய்யோ!’ இப்போது அந்த உருவம் என் முதுகுக்குப் பின்னால் வெகு நெருக்கமாக என்னுடைய காதின் அருகில் நின்றுக்கொண்டிருந்ததை என்னால் முழுவதுமாக உணர முடிந்தது.

‘இன்னக்கி நம்ம சோலி முடிஞ்சி! நாளைக்கி காலைல பெட்டி எடுத்துற வேண்டியதாம் போலுக்கு!’

“அம்மா… பேய்!”னு சத்தம் போட்டு அலறினால், 'பாய் விரிச்சி போட்டுருக்கேன் போய்ப் படு'னு பதில் சொன்ன பாதகத் தாயை அன்றுதான் நான் கண்டேன். ஒண்ட வந்த பிடாரி; ஊர்ப் பிடாரியை விரட்டிய கதை மாதிரி, கக்கூசுக்கு வந்த என்னை அந்தக் குரல் மிரட்டி வெளியே ஓடச் சொன்னது. கழுவியும் கழுவாமலும் துண்டையும் துணியையும் காணாமல் ஓடிவந்தேன். வெளியே வந்து பார்த்தால், தலையில் முக்காடு போட்ட ஓர் உருவம் முட்டி போட்டு உட்கார்ந்திருந்தது. மீண்டும் அலறவே, முக்காடை அகற்றிவிட்டு அந்தப் பேய் நிமிர்ந்து பார்த்தது. 

‘அட, எங்கேயோ பார்த்தா மாதிரி இருக்கே? என் அம்மாதான் அது... பைபிள் படித்துவிட்டு ஜெபம் பண்ணியிருக்கிறாள். நள்ளிரவு ஜெபமாம்!’

 ‘அடப்பாவி மட்ட! கக்கூஸ்ல சாத்தான் அவ்வளவு போக்கிரித்தனம் செஞ்சி நம்மள வெரட்டிருக்கு... வெளில என்னடான்னா ஆவிக்குரிய ஜெபம் நடக்கு. என்னத்த சொல்ல?’

 அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்தேன். ஜெபம் முடியவும் விஷயத்தைச் சொன்னேன். தலையில் கை வைத்து ஜெபம் செய்துவிட்டு அம்மா சொன்னாள்.

 “நா ஒனக்காக ஜெபம் பண்ணா மட்டும் பத்தாது. நீயும் ஜெபிக்கணும் புரிஞ்சா? போ போ! போய்த் தூங்கு.”

  நானும் அறைக்குள் போய் ஜெபித்தேன்.

 “கடவுளே! ராத்திரி மறுபடியும் கக்கூஸ் போகவேண்டிய சூழ்நிலை வந்துறப்புடாது. நாட்டுக்கோழி தெய்வமே… ஒன்னைய உரிச்சி கொன்னு தின்னது தப்புதான்! எங்களை மன்னிச்சிரு தாயே! ஆமென்..!”

 ‘ஆம்! அது ஒரு பெட்டைக் கோழி!’

 மதுவின் பக்கத்தில் போய் படுத்தேன். படுத்த கொஞ்ச நேரத்தில் என்னுடைய கழுத்து, வாய், தொண்டை மற்றும் அடிவயிற்றில் தொடர்ச்சியாக மிதிக்கல் விழுந்தன. கண்டிப்பாய் இது பேய் இல்லை என்று தெரியும்.

 ‘செவத்து பயவுள்ள! வேணும்னே செய்யிதோ? தூங்கத்தானே செய்யான்... என்ன செய்யப்போறான்? மூத்தவம்லானு பகல்ல அடிக்க முடியாது. இப்புடி தூங்குற மேனிக்கி நாலு எத்து குடுத்தாத்தான் உண்டு. கேட்டா தூக்கத்துல தெரியாம மிதிச்சிட்டேன்னு சொல்லி சமாளிச்சிரலாம்னு எண்ணம் போலிருக்கு!’

 மது, என்னுடைய தாய்க்கு நான் பிறந்து மூன்றாண்டுகளில் பிறந்த ஒரு வலிய சாதனம். என்னுடைய தொம்பி. பெயருக்கு ஏற்ற மாதிரியே மது வெள்ளத்தில் மிதக்கும் ஒரு ஆகாய வள்ளம்.

 ‘இருலே! ஒன்னய காலைல வச்சிக்கிடுகேன்!’

 எப்போது உறங்கினேன் என்று தெரியாது. அப்போது ஒரு கனவு வந்தது. அதிகாலையில் எங்கள் வீட்டு வாசலில் நடிகை பானுப்பிரியா நின்றுகொண்டிருந்தாள். காலிங் பெல் சத்தம் கேட்டு என் அம்மா கதவைத் திறந்தாள். வெளியே பானுப்பிரியா நின்றுகொண்டு, “என்னுடைய அத்தான் பிரபு எங்கே இருக்கிறார்?” என்று கேட்கிறாள்.  

அம்மா பானுப்பிரியாவிடம், “அத்தானா? யார் அம்மா நீங்கள்? பிரபுவைக் கேட்கிறீர்கள்? அவன் நித்திரை கொள்கிறான்!”

 பானுப்பிரியாவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“என்னது? நா உனக்கு அம்மாவா? ஏய் கெழவி கூப்புடு ஓம் மவன?”

 அம்மா கடுங்கோபத்தில், “கெழவி, கொழவின்னா நாக்க அறுத்து நாய்கிட்ட வீசிருவேம் போட்டீ வெளிய! சில்லாட்ட...!”

 எனக்கு மயக்கமே வந்துவிட்டது. ‘இந்த அம்மக்கி என்னாச்சி? வழக்கமா இப்புடி பேமாட்டாளே! வயசாய்ட்டுல்லா? தலைக்கி சொகமில்லாம போய்ட்டு. நடிகை பானுப்பிரியா வந்துருக்கா, அவளைப் போயி வெரட்ட நிக்காளே?’

 நான் எழுந்து வாசலை நோக்கிக் கதறியபடியே ஓடினேன். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“அடியேய் அம்மாவாச! நீயெல்லாம் ஒரு அம்மாவா? பிசாசே!”

 ‘என்னவொரு கொடுமை?’ அதற்குள் பானுப்பிரியா கோபத்தில் வெளிவாசலைக் கடந்து, ஆட்டோவில் ஏறிப் போய்விட்டாள்.  அம்மாவிடம் திரும்பி, “ஏம்மா இப்படிச் செஞ்சிட்? சை... நா சந்தோசமா இருந்தா ஒனக்குப் புடிக்காதே!” (பயங்கரமான டென்சன் வந்துவிட்டது)

 அம்மா என்னிடம், “போனாப் போறா, நீ வா மக்ளே! ஒனக்கு ஜெனிலியா டிசூசா மாதிரி பொண்ணு பாப்போம். இவ கெடக்கா கெழவி!”

 நான் அம்மாவிடம், “போம்மா, ஒனக்கு அறிவே கிடையாதா?” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் வாயில் ஒரு எத்து (மிதி) விழுந்தது. பக்கத்தில் கிடந்த சைத்தானின் கைங்கர்யம். மிதி தந்த வேதனையைவிட அதிகம் வலித்தது ஒன்றுதான்! 

 `கடவுளே, இந்த மூளை ஏன் இன்னும் அப்டேட் ஆகலை? பானுப்பிரியாவுக்கு அப்புறம் எத்தனையோ கனவுக் கன்னிகள் வந்தாயிற்று! நம்ம மண்டைக்குள்ள இன்னும் பானுப்பிரியா இருக்காளே... அய்யோ! சரி... பேய்க்கி பயந்து நாய்கிட்ட மிதி வாங்கி சாவ முடியாது. கட்டிலில் இருந்து இறங்கி தரையில் கட்டையைச் சாய்ப்போம்’ என்று தரையில் படுத்தேன்.  அப்போது மணி அதிகாலை நான்கு. விடிந்துவிட்டது. வீட்டு வாசலில் மூன்று பேர் நின்றுகொண்டிருந்தார்கள். தலை நிறைய வெள்ளை முடிகளோடு இரண்டு கூன் விழுந்த கிழவிகளும், சந்தன நிறத்தில் ஒரு தேவதையும் நின்றுகொண்டு என் அம்மாவை அழைத்தார்கள். கிழவிகள் இருவரும் மஞ்சள் நிறப் புடவையும், இளம்பெண் அடர் சிகப்பு நிறப் புடவையும் கட்டியிருந்தார்கள். கையில் ஒரு தட்டு வைத்திருந்தாள் அந்த அழகுப் பதுமை.

அம்மா அவர்களிடம் போய், “நீங்கல்லா யாரும்மா? ஒங்களுக்கு என்ன வேணும்?”

 அதில் ஒரு கிழவி சிரித்துக்கொண்டே, “நிங்களுடே தரவாட்டில் ஓரு குமாரன் உண்டல்லோ?” (அடிசக்க... மல்லு கேர்ள்)

அம்மா அவர்களிடம், “ஒண்ணு இல்ல... ரெண்டண்ணம் கெடக்கு... என்ன விசேசம்?”

 “ஞங்களுடே மணவாட்டி தாராவுக்கு வரன் அன்னியோஷிக்கினுண்டு...” (எங்கள் பெண் தாராவுக்கு மாப்பிள்ளை தேடுகிறோம்)

 “சரி, அதுக்கு ஏன் இங்க வந்தீங்க? ரெண்டு பேரும் படிச்சிகிட்டுல்லா இருக்கானுவோ. மூத்தது ஒரு பொண்ணு இருக்கா! அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம். இப்போதைக்கு இவனுகளுக்கு பொண்ணு கட்டி வச்சி, உங்க புள்ளைக்கும் சேத்து நாங்கதான் சோறு போடணும், கெளம்புங்க!”

(அடப்பாவி அம்மா! ராத்திரி பானுப்பிரியாவ வெரட்டி உட்டுட்ட! காலையில ஒரு அழகான புள்ளைய வெரட்டுகியா? இரு, உனக்கு வெசம் வைக்கிறேன். அடியே தாரா போயிறாதம்மா! எங்கம்மக்கி தலைக்கி வட்டு!) என்னுள்ளம் கதறியழுதது. அம்மாவின் பதிலைக் கேட்டதும் மூன்று பேரின் கண்களும் ரத்தச் சிவப்பாகி, முகம் விகாரமாய் மாறி, அவர்களது k9 பற்கள் (கோரைப் பற்கள்) முன்னுக்கு நீண்டன. மூவரும் பூமியில் இருந்து எழுந்து அந்தரத்தில் பறந்தார்கள்.

 “அய்யோ அம்மா! பேயி!’’ - அம்மா பயப்படவில்லை. மூன்று பேரும் மாயமாய் மறைந்தார்கள்.

 அலறியடித்துக்கொண்டே எழுந்தேன். “அம்மா! வெளியே பேய் நிக்கு!”

 கிச்சனிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது, “நாய் நிக்கு நாயே! போய் வாயக் கழுவிட்டு வா! காஃபி போட்டு வச்சிருக்கேன்.”

 ‘அடப்பாவமே! பேய்னு சொன்னா நாய்னா கேக்கும்?’

 வெளியே எட்டிப் பார்த்தேன். அந்த மூன்று பேரும் கனவில் வந்த காட்சியில், வெளியே உள்ள லைட்டிங்கில் இருந்து, காம்பவுண்டுக்குள் நின்றிருந்த எனது பைக் மற்றும் கார் எல்லாம் அப்படியே ஒரு அச்சரம் பிசகாமல் நின்றிருந்தன. கொடியில் காய்ந்துகொண்டிருந்த ஜட்டிகளும் புல்லரித்துக் கிடப்பதைக் கண்டு அதிசயித்துவிட்டேன். அப்போ நான் கண்டது கனவு இல்லை... விக்கித்துப் போனேன்.

 ‘இங்கு என்ன நடக்கிறது?’

(தொடரும்...)