அத்தியாயம் 1

47.88k படித்தவர்கள்
6 கருத்துகள்

“அம்மா, நம்ம அப்பாரு எங்க?” கேட்டுக்கொண்டே ஓடி வந்தாள் வடிவாம்பாள். அவள் கேட்டது காதில் விழாததுபோல் கூளானைத் தூவினாள். அதன் மீது பிசைந்து வைத்திருந்த சாண உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டுத் தட்டிக்கொண்டிருந்தாள் சுந்தராம்பாள். 

“அம்மா அப்பாரு எங்க?” 

“இஞ்ச வா, வந்து யாம் முந்தானய அவுத்துப்பாரு” என்றாள் வெடுக்கென்று. 

சுந்தராம்பாள் தன் கணவன் சுப்பையன் மேல் கோவமாயிருந்தாள். வேலைக்குப் போவதில்லை என்று அவன் மீது வெறுப்பாயிருந்தது. இன்று காலையில்கூட இருவருக்கும் இதுகுறித்து வாய்த் தகராறு ஏற்பட்டது. 

வேதாரண்ணியம் பள்ளிவாசலில் ‘வாங்கு’ சொல்லிய நேரத்தில் வழக்கம்போல் எழுந்துவிட்டாள் சுந்தராம்பாள். அவளுக்குப் பிள்ளை பிறந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. தூங்கிக்கொண்டிருக்கும் பிள்ளை எழுந்துவிட்டால் ஒரு வேலையும் செய்ய முடியாதென்பதால் வாசல் கூட்டுவது, மாட்டுக்கட்டுத்தறி சாணம் அள்ளிக் கொட்டுவது போன்ற வெளி வேலைகளையும் மாசி மாதப் பனியையும் பொருட்படுத்தாமல் செய்து கொண்டிருந்தாள். 

வேலை செய்யும் சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தான் சுப்பையன். விளக்கைக் கொளுத்தி வைத்துக் கொண்டு வேலை செய்யும் தன் பெண்டாட்டியைப் பார்த்துவிட்டு அவனும் எழுந்தான். முகம் கழுவிக் கொண்டு வந்தான். வழக்கமாய் விடிந்த பிறகுதான் அவன் எழுந்திருப்பான்.

“எட்டி சுந்தரம் கொஞ்சம் தெளுவுத் தண்ணி கொண்டா” என்று கேட்டான். ‘இந்த நேரத்துல எளும்பி தெளுவு கேக்குறாவொளே, வேலவெட்டிக்கில்ல போப்பறாவொளா’ என்று நினைத்துக் கொண்டே சோத்துப்பானையைத் திறந்து ஒரு பாத்திரத்தில் தெளிவுத் தண்ணியை ஊற்றினாள். அதில் கொஞ்சம் உப்பைப் போட்டுக் கலக்கிக் கொண்டுவந்து நீட்டினாள்.

“எங்கயாவுது வேலக்கிப் போறியளா?”

“எவடி இவ. பொளைக்க மாட்டாம, வேலக்கிப் போறியளா வேலக்கிப் போறியளாங்குறவ? எவன் வூட்டுல போயி என்ன மண்ணுகூடத் தூக்கச் சொல்லுற?”

“மம்ம தெளியிறத்துக்குள்ள எங்கயோ போறமேரி தெளுவு கேட்டியளே.”

“செவ்வாச்சந்தக்கி காளமாட்ட ரெண்டயும் ஓட்டிக்கிட்டுப் போவப்போறங்.”

“ஒப்புறான... வுட்டன், வுட்டன். காளமாட்ட விக்கப் போறியளா? அதயும் வித்துப்புட்டு இஞ்ச யாரு மசுர புடுங்கிக்கிட்டு ஒக்காந்துருக்கப்போறிய?”

“என்னடி வாயி நீளுது. குச்சிக்காரி செறுக்கி நாக்க இளுத்து வச்சி அறுத்துப் புடுவங்.” கோபமாய்ப் பேசியவன் கையில் இருந்த தெளிவுத் தண்ணீரைப் பாத்திரத்துடன் தூக்கிவீசினான். 

வீட்டிற்குள் ஊற்றியதால் மெழுகிய தரை ஊறி நொதித்தது. சோற்றுப் பருக்கைகள் சிதறிக் கிடந்தன. “இப்புடி அன்னத் தண்ணிய ஊத்தியடிக்கிறியே. ஒனக்குத் திங்க சோறு கெடக்கிமா? ஓங் குண்டி காஞ்சிறாது? வேலக்கிப்போயி சம்பாரிக்க வக்குல்ல. வூட்டுல உள்ளத்தயெல்லாம் வித்துப்பொறுக்கித் திங்கிறத்துக்கு அலயிறியே... நீயெல்லாம் ஒரு ஆம்புளயா? இப்புடி ஒடம்ப வளத்து வச்சிருக்குறியே பன மரத்துல பாதிக்கி, வளஞ்சி வேலசெய்யத் துப்புல்ல?”

“சொரணகெட்ட செம்மங். என்னால முடிஞ்சவரக்கிம் பொம்புளயா சம்பாரிச்சி கொண்டாந்து போட்டு ஒன்னத் திங்கடிச்சனே. ஓம் ஒடம்பு பெருத்து என்னத்துக்கு ஆச்சி? புள்ள பெத்த நேரத்திலயாவுது நீ வேலவெட்டிக்கிப் போவக் கொடாது. ஓங்கையி காலுல எளவா பொறப்புட்டுருக்கு. நல்லாத்தானருக்கு?” ஆத்திரம் தாங்காமல் சுந்தராம்பாள் பேசிக் கொண்டே இருந்தாள். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அவள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருக்க முடியாமல் அப்போது கிளம்பிப் போனவன்தான் சுப்பையன். தலைக்கு மேலே சூரியன் வந்தும்கூட இன்னும் வீட்டிற்கு வரவில்லை. அவனுக்காக எடுத்து வைத்த பழைய சோறு அப்படியே உறியில் இருந்தது. 

“எங்கன்னு சொல்லும்மா சீக்கிரம்” என்றாள் வடிவாம்பாள். 

“அவ்வள அவசாரமா எதுக்குத் தேடுற?” 

“கப்பக்கார ராமய்யா பெரியப்பால்ல, அவரு நம்ம அப்பாரயும் கப்பலுக்கு அழச்சிக்கிட்டுப் போவப்போறாராம்மா.” 

“யாரு சொன்னா?” 

“அந்தப் பெரியப்பாதாம்மா சொன்னாரு. அப்பாவ ஒடனே கூப்புட்டாரச் சொன்னாரு.”

“அப்புடியா சொன்னாரு? ஒங்கப்பன் எங்க போயி நின்னுகிட்டுருக்கோ தெரியலையே. தாயாளி மனுசஞ் தெனமும் மூணு வேளயும் தின்னுக்கிட்டு வூட்டுலயே அடஞ்சிகெடக்கும், வயசிக்கிவந்த பொண்ணாட்டம். இன்னிக்கின்னு பாத்து காலயிலயும் அதுக்குக் காளியம்மா வந்துச்சே. எங்க போயி அதத் தேடுறது?”

“இப்ப அப்பா எங்கம்மாருக்கும்?”

“யாண்டி சனியனே. எனக்கு என்ன தெரியும்? என்னக்கிட்ட பஞ்சாங்கம் பாக்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டாப் போச்சி? கழுத கெட்டா குட்டிச்செவரு. களவாணி கெட்டா அவுசாரி வூடுன்னு சொல்லலாங். ஒங்கப்பங் கெட்டா எங்க போயி நிக்முன்னு யாருக்குத் தெரியும்? வாய்க்காலோ வரப்போ, போயி தேடிப்பாரு. தாம் புத்திக்கா நடக்கணும், இல்லாட்டி சொல்லு புத்தியாவுது கேக்கணும். குருட்டுப் புத்திக்காரன் கோவணத்த சுருட்டிக்கிட்டுப் போனமேரி போயி, காலயிலேருந்து தெளுவுகூடல் குடிக்காம எங்க கெடந்து காயிதோ தெரியலையே.”

சுந்தராம்பாள் பேசியவற்றை நின்று வடிவாம்பாள் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. அவள் நேராக மேற்கிலுள்ள கொல்லை வெளியைப் பார்த்து ஓடினாள். தன் அப்பாவும் கப்பலுக்குப் போனால் இதுபோல் கந்தல் பாவாடையைக் கட்டிக்கொண்டு திரிய வேண்டாம். வழவழவென்று புதுசு புதுசாய் கெவுன்சட்டை போட்டுப் பார்க்கலாம் என்று எண்ணினாள். 

கோடியக் காட்டில் கிடக்கும் மான்குட்டியைப் போல் சந்தோஷமாய்த் துள்ளியோடினாள். எதிர்ப்படுபவர்களிடமெல்லாம் “எங்க அப்பாரப் பாத்தியளா?” என்று கேட்டுக் கொண்டே ஓடினாள்.

‘அப்பாரு இன்னங்கால ஆகாரஞ் சாப்புடலயாமுல்ல. எப்புடிக் கெடக்கு? அப்ப வரிச்சிராக் கொல்லக்கி போயிருக்குமோ?’ என்று நினைத்தாள். இன்னும் வேகமாய் வரிச்சிராக் கொல்லையை நோக்கி ஓடினாள். 

கொல்லைவெளி முழுதும் குறுக்கும் நெடுக்கமாய் வரப்புகள். மணற்பாங்கான கொல்லைகளில் தையில் கதிரறுத்துவிட்டு தெளித்திருந்த எள்ளும் பச்சைப் பயிரும் பனி ஈரத்தைக் கொண்டே வளர்ந்திருந்தன. எள்ளும் பயறும் பூவும் பிஞ்சுமாக இருந்தன. 

வடிவாம்பாள் நினைத்ததுபோலவே சுப்பையன் வரிச்சிராக் கொல்லையில்தான் நின்றுகொண்டிருந்தான். நடுமேட்டில் ஏறி நின்று கூப்பிட்டாள். 

“அப்பா.”

எள்ளுச் செடிகளுக்கிடையே பின்னிப் படர்ந்து கிடந்தன, யானைத் தொம்மட்டிச் செடிகள். அவற்றைப் புரட்டிப்போட்டு தொம்மட்டிப் பழம் கிடக்கிறதாவெனத் தேடிப்பார்த்துக் கொண்டிருந்தான் சுப்பையன். ‘அப்பா’ என்ற குரல் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தான். 

இடுப்பைச் சுற்றி இறுக்கிக் கட்டிய விரிபாவாடையின் இரண்டு தலைப்புகளும் காற்றில் பறக்க, தொடை தெரியும்படி நின்றுகொண்டு கூப்பிட்ட வடிவாம்பாளைப் பார்த்தான். ஏற்கனவே பெண்டாட்டி மீது வெறுப்பாய் இருந்தவனுக்கு இவளைப் பார்த்ததும் இன்னும் கொஞ்சம் வெறுப்பு அதிகமானது. கட்டையாய் கன்னங்கரேலென்று, மேல்சட்டை போடாமல் வயிற்றைக் காட்டிக் கொண்டு பரட்டைத் தலையோடு வந்து நின்று கூப்பிட்டவளைப் பார்த்தான். 

‘புருசன்னுகொடப் பாக்காமப் பேசுறதயெல்லாம் பேசிப்புட்டு இப்ப மவளவுட்டுக் கூப்புட்டார சொல்லியிருக்குறா பொலருக்கு செருக்கி. நாம் பெயிருவனா? அவ கையால சோறு வாங்கித் திங்கிறத்தவுடக் கோலியக் காட்டு சனத்துவப் பீய எடுத்துத் திங்கலாம்’ என்று நினைத்தான். 

‘மோரயப் பாரேங் கரிப்பான சூத்துமேரி. வண்ணாஞ்சாலு கணக்கா தொப்பய மின்னாடி தள்ளிக்கிட்டு நிக்கி சனியங்’ என்று முணுமுணுத்தான்.

“அப்பா.” மறுபடியும் கூப்பிட்டாள் வடிவாம்பாள்.

“என்ன மொட்ட, யாம் இப்ப அவட்டயாட்டம் அலறுர?” தூரத்தில் நின்ற வடிவாம்பாளால் சுப்பையனின் முகத்தில் தெரிந்த வெறுப்பைக் கவனித்திருக்க முடியாது. 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அவன் எப்போதுமே இப்படித்தான். தன்னுடைய மகள் என்பதைக்கூட நினைத்துப் பார்க்காமல் அவள் மேல் எரிந்து விழுவான். சிலநேரம் அவனேகூட நினைத்துப்பார்ப்பான்.

‘நம்மளே இப்புடிக் கண்ணுல காட்டாம அடிச்சா மத்தவ்வொ எப்புடியிருப்பாவோ? இனிமே இப்புடியெல்லாம் பேசக் கொடாது’ என்று உறுதியாயிருப்பான். 

ஆனால் வடிவாம்பாளைக் கண்டவுடன் அவனை அறியாமலேயே அவள் மேல் எரிச்சல் வந்துவிடும். முகம் கடுகடுப்பாகிவிடும். வார்த்தைகள் தடிப்பாய் வந்துவிழும். ‘நம்மளப் பெத்த அப்பாவே இப்புடிப் பேசுதே’ என்று வடிவாம்பாள் ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது. அவன் கடுமையாய்ப் பேசும்போது அவள் முகம் லேசாய் வாடுவது போலிருக்கும். இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்த மாட்டாள்.

“ஒன்னயக் கப்பக்கார ராமய்யா பெரியப்பா கூப்புட்டாருப்பா.” 

“கப்பக்காரப் பெரியப்பாவா?” 

“ஆமாங்.” 

“நெசமாவா?”

“நெசமா.”

கப்பல்கார ராமையாப் பிள்ளை என்றாலே ஊரில் ஒரு தனி மரியாதை இருந்தது. சிறிய வயதிலேயே கப்பலேறி சிங்கப்பூர் போனவர். அங்கு சம்பாதித்து ஊரில் நிலம் நீச்சு என்று நிறைய வாங்கிப்போட்டிருந்தார். சொந்தபந்தங்களுக்கும் ஓரளவு செய்திருந்தார். 

சிங்கப்பூரிலேயே கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் குடியாகியிருந்தார். அவரது நான்கு மகன்களும் ஒரு மகளும் சிங்கப்பூரிலேயே இருந்துவந்தார்கள். இவர் மட்டும் இரண்டு மூன்று வருடங்களுக்கொரு முறை ஊருக்கு வந்து எல்லோரையும் பார்த்துவிட்டுப் போவார். 

ஊரில் யார் கஷ்டப்பட்டாலும் அவரால் முடிந்ததைக் கொடுத்து உதவுவார். கொல்லைகளை சொந்தக்காரர்களிடம் விட்டிருந்தார். “நானும் யாம்மவனுவளும் இஞ்ச வாரவரக்கிம் இந்தக் கொல்லைவொள்ள நீங்கல்லாம் வெள்ளாம பண்ணித் தின்னுங்க. வாரங்கீரமுன்னு எனக்குத் தூசுகொட வேண்டாங்” என்று சொல்லியிருந்தார். 

ஆளும் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாய் இருப்பார். எல்லோரிடத்தும் நல்ல விதமாய்ப் பழகுவார். சிங்கப்பூரிலிருந்து அவர் வரும்போதெல்லாம் நான்கைந்து விசாக்களோடு வருவார். திரும்பிப் போகும்போது தனக்கு வேண்டியவர்கள் அல்லது நிலபலம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களாகப் பார்த்து தம்மோடு அழைத்துக் கொண்டு போவார். அவரோடு சிங்கப்பூர் போனவர்களின் குடும்பங்களெல்லாம் கோயில் தாழ்விலும் சுற்றுப்பட்ட ஊர்களிலும் வசதியாய் வாழ்கின்றன.

இந்த முறை அவர் வந்ததிலிருந்து எப்படியாவது கப்பலேறிவிடும் ஆசையோடு நிறைய பேர் அவரைத் தினமும் போய்ப் பார்த்தார்கள். சிலர் அவரோடு சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள். 

ஆனால் இதுவரை யார் யாரைத் தம்மோடு அழைத்துக் கொண்டு போகப் போகிறாரென்று எதுவும் சொல்லவில்லை. ‘இப்ப நம்மளக் கூப்புடுறாருன்னாக்க நிச்சயமா கப்பலுக்கு அளச்சிக்கிட்டுப் போறத்துக்காவத்தாங் இருக்கும்’ என்று நினைத்தான் சுப்பையன்.

- தொடரும்