அத்தியாயம் 1

11.43k படித்தவர்கள்
2 கருத்துகள்

னைக்காதது எப்படி கழுதையாகாதோ, அப்படி அந்த வீட்டுக்குள் போய் நாற்காலியில் உட்கார்ந்தோ அல்லது உரசிக்கொண்டு நின்றோ, வெற்றிலை பாக்கு போட்டு வெளியே வந்து கனைத்துக்கொண்டே துப்பிவிட்டுப் போகாதவர்கள், ஊர்ப் பிரமுகர்களாக மாட்டார்கள். அன்றைக்குக் கொஞ்சம் வெத்தடி... வில்லடி செய்ய வேண்டியது இருந்ததால், பிரமுகர்களின் சென்ஸஸை அந்த வீட்டுக்குள்ளேயே எடுத்துக் கொள்ளலாம். சொல்லக்கூடிய கூட்டந்தான் என்றாலும், சொல்ல முடியாத, சுற்றி வளைத்த பேச்சுகளிலேயே பிரமுகர்கள், சுற்றிச் சுற்றி நாக்காடினார்கள்.

அந்த வீடு ஓர் அரண்மனை மாதிரி. அந்தக் காலத்தில் இருந்தே, ‘காரை வீடு’ என்று அழைக்கப்படுவது. நான்கு பக்கத்து மதில் சுவர்களுக்கு மத்தியில் நடுநாயகமாக இருந்த அந்த வீடு, சமதரையில் இருந்து மூன்றடி உயர சமதளத்திற்கு மேலே, கிட்டத்தட்ட தாஜ்மஹால் மாதிரியே தோன்றும். அந்த வீட்டுக்குள் போகிறவர்கள் முன்னேறலாம் என்று சொல்லாமல் சொல்வதுபோல், நான்கைந்து படிக்கட்டுகளில் ஏறித்தான் போக வேண்டும்.

காம்பவுண்ட் சுவருக்கு அருகே, பூவரசு மரக்கட்டையை பொன்னையா கோடரியால் விறகுகளாகக் கீறிக் கொண்டிருந்தார். முந்தாநாள் நடந்த அம்மன் கொடையில் சுடலை மாடசாமியாக, சல்லடங்குல்லாய் தரித்து, வெட்டரிவாளை வைத்துக்கொண்டு, முறுக்குத் தடியைப் பிடித்துக் கொண்டு, வேட்டைக்குப் புறப்பட்ட போது, அதோ அந்த முகப்பறையில் கூடியிருக்கும் பிரமுகர்கள் அனைவரும் இவரை விழுந்து கும்பிட்டு விபூதி வாங்கினார்கள். இப்போதோ இவர் விழுந்து விழுந்து வெட்டுவதைப் பார்த்து, தத்தம் முகங்களை அலட்சியமாக வெட்டிக் கொள்வதுபோல் தோன்றியது.

இந்தச் சாமியாடிக்கும் ஊர்ப்பிரமுகர்கள் தன்னைக் கும்பிட்டதுதான் ஞாபகம் வருகிறதே தவிர, இதர ஏழை பாழைகள் கும்பிட்டது. நினைத்துப் பார்த்தால்கூட வராது போலிருக்கிறது. அன்று வந்த ஜனம் மெச்ச, ஆடியவர் இப்போது வயிறு மெச்சுவதற்காக கோடரியை வைத்துக் கொண்டு மேலும் கீழுமாக ஆடுகிறார், கிட்டத்தட்ட கோவிலில் ஆடியது மாதிரியே.

அன்றைக்காவது, வாழைப்பழம், புண்ணாக்கு முதலியவற்றை சாமியின் பெயரில் சாப்பிட முடிந்தது. இன்றைக்கு அதுவும் இல்லை. 

“அண்ணாச்சி... இன்னைக்கி ஒரு முக்கியமான விஷயம் நடக்கப் போவுது. கொஞ்சம்... கொஞ்ச நேரந்தான் விறகு கீறணும் வருவியளா” என்று வீட்டுக்காரி ராசம்மா சொன்னபோதே பொன்னையா புரிந்துகொண்டார். கூலி கிடையாது. போனஸ் வெட்டு. 

தொலைவில் ஒரு மூட்டைக் கோதுமை மாவை கொட்டிவிட்டு, அதைக் கையால் தளம் முழுக்கப் பரப்பிக் சொண்டிருந்த மனைவியைப் பார்த்து, “கொஞ்சம் தண்ணி கொண்டு வான்னு எத்தன தடவழா சொல்றது? எருது நோவு காக்கைக்கு தெரியாதது மாதுரி, என் தாகம் ஒனக்குத் தெரியல பாரு” என்று பொன்னையா சீறினார். அவளும் பதிலுக்குச் சீறியிருப்பாள், ‘காலங் காத்தாலயே தலமறவா போயிடுமுன்னு சொன்னேனே, கேட்டீரா... நல்லா படும். ஒம்மா புத்திதான ஒமக்கும் இருக்கும்’ என்று நெஞ்சுக்குள் இருந்ததை வாய்க்குக் கொண்டு வரத்தான் போனாள். ஆனால் பிரமுகர்களைப் பார்தததும், சொல்ல வந்ததை விழுங்கிக் கொண்டாள். ‘வீட்டுக்கு வரட்டும்...’

வீட்டுக்கு மூத்த பிள்ளையான தங்கப்பாண்டி சுவரோடு ஒட்டிப் போட்டிருந்த தேக்குக் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு, தொங்கப் போட்டிருந்த கால்களை ஆட்டிக்கொண்டு, கட்டில் காலின் உருண்டு திரண்ட மேல் பாதியை, வலக் கையால் தேங்காயை திருவுவது மாதிரி திருவிக் கொண்டிருந்தார். நாற்பத்தெட்டு வயதிருக்கும். கழுத்தில் எட்டு பவுன் தங்கச் செயின் தொங்கியது. புலி நகம் போட்ட செயின். மேஜை இல்லாமலே, ஒரு நோட்டுப் புத்தகத்தை வசதியாக வைத்து எழுதுமளவிற்கு, வயிறு பருத்தும் பெருத்தும் வசதியாக இருந்தது. 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அவருடன் கிராம முன்ஸீப் மாடக்கண்ணு நெருங்கி உட்கார்ந்திருந்தார். அவருக்கு அருகே, தங்கப் பாண்டிக்குப் பெண் கொடுத்த மாமனாரான எழுபது வயதுக் கிழவர் ஆறுமுகம், ஜரிகை வேஷ்டி கட்டி, கழுத்தில் மேரியல் போட்டு, சாவும்போது வசதியுள்ளவர்களை சிங்காரிப்பார்களே, அப்படிப்பட்ட சிங்காரத்தில் இருந்தார். அவரையடுத்து, சில பண்ணையார்கள் குறுக்கும் நெடுக்குமாக உட்கார்ந்திருந்தார்கள். 

கட்டிலுக்கு எதிர்த்தாற்போல் போட்டிருந்த நாற்காலிகளில் முதல் நாற்காலியில் இளைய பிள்ளை ராஜலிங்கம் பேண்ட் சிலாக்கோடு உட்கார்ந்திருந்தார். போன தடவை ஊருக்கு வந்திருக்கும்போது, வெள்ளவெளேரென்று தெரிந்த தலைப் பகுதி, இப்போது ‘கருகருப்பாய்’ இருப்பதற்கான காரணம் புரியாமல் பல கிழவர்கள் வியங்கினார்கள், ஒரு சிலருக்கு தங்களுக்கு ‘கண் கெட்டுப் போயிருக்குமோ’ என்று சந்தேகம். இன்னும் ஒரு சிலருக்கு கண்ணாடி போட்டதால், தங்களின் ‘வெள்ளெழுத்து’ நோய் போய்விட்ட திருப்தி. 

ராஜலிங்கத்திற்கு அருகே, கர்ணம், மளிகைக் கடையில் கருப்பட்டியைச் சுற்றிக் கொடுக்க வைத்திருக்கும் அசிங்கமான தாள்கள் மாதிரி, ஒரு கட்டுக் குப்பைக் காகிதங்களை கசக்கிப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தார். அடிக்கடி, அதைப் பிரித்துப் பிரித்துப் படித்துக்கொண்டார். ‘அடங்கல் பட்டாவாம்.’ 

இங்கேயும் கர்ணம் முன்ஸீப்புக்கு எதிரேதான் இருந்தார். அவரையடுத்து, ராஜலிங்கத்தின் மாமனார் சுருட்டைப் பிடித்துக் கொண்டு ஒரு காலைத் தூக்கி நாற்காலிச் சட்டத்தில் போட்டுக் கொண்டிருந்தார். அவரையடுத்து, ‘மற்றும் பலர்.’

தங்கப்பாண்டியின் மனைவி ராசம்மா, அங்குமிங்குமாகச் சுற்றிக் கொண்டிருந்தாள். ராஜலிங்கத்தின் மனைவி மேரிபுஷ்பம், ஒரு பொய்க் கொண்டையில் இலை தழையோடு கூடிய ஏதோ ஒருவித பூ மொந்தையை வைத்துக்கொண்டு, நரசிம்ம அவதாரம் மாதிரி, வாசல் படியில் கதவைப் பிடித்துக்கொண்டு நின்றாள். 

இந்த ராஜலிங்கம் திருநெல்வேலியில் கலெக்டர் ஆபீஸில் சேர்ந்தவுடனேயே அந்தக் காலத்தில் பத்திரகாளியம்மனாக சாமியாடிய தாத்தாவின் சம்மதத்துடனேயே, ஜோசப் டேவிட்டாக மாறி, குலதெய்வமான சுடலை மாடசாமி கோவிலில் மணமகள் வீட்டாருக்குத் தெரியாமலே பூஜையும் போட்டுவிட்டு, அப்புறம் பணக்கார வம்சத்தைச் சேர்ந்த மேரிபுஷ்பத்தை சர்ச்சில் பிடித்தார். 

முதல் பிள்ளை நான்கு வயதில் சற்று இழுத்து இழுத்து நடந்ததால், சுடலை மாடசாமியின் ‘கோபத்தைத்’ தணிக்கும் வகையில் ‘கொடைக்கு’ வரி கொடுத்ததோடு, சாமிக்கு வேட்டிகூட எடுத்துக் கட்டினார். சர்ச்சுக்குப் போவதைக் குறைத்தார். என்றாலும், இரண்டாவதாகப் பிறந்த பெண்ணும் மூளைக்கோளாறு உள்ளவள்போல் தோன்றியதும், பாதிரியாரிடம் போய் ‘பாவமன்னிப்பு’ப் பெற்றார். அப்படியும் மூன்றாவது பிறந்த பையன் ஒரு வருடத்திற்குள் துள்ளத் துடிக்க இறந்ததும் மீண்டும் சுடலை மாடசாமியிடம் வந்தார். இப்போது சர்ச்சுக்கு ஜோஸப் டேவிட்டாகவும், சுடலைமாடனுக்கு ராஜலிங்கமாகவும் அவரால் நடமாட முடிகிறது.

பேச்சை எப்படித் துவக்குவது என்று ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டிருந்தபோது, மேரி புஷ்பம் தன் எட்டு வயதுப் பையன் ஜாய்ஸ்லினைப் பார்த்து, ‘இவங்களுக்கு ஒரு பாட்டுப் பாடிக் காட்டுடா’ என்றாள். 

அந்த எட்டு வயதுப் பொடியன், “டிவிங்கில் டிவிங்கில் லிட்டில் ஸ்டார்” என்று சொல்லிக்கொண்டு கைகளை மேல்நோக்கிக் குவித்து, கால்களை ஆட்டினான். உடனே தரையில் பால் டப்பாவை எடுத்து வைத்துக் கொண்டு மேளம் அடித்துக் கொண்டிருந்த தன் பெரிய மைத்துனர் தங்கப்பாண்டியின் மகன் குமாரை, 

ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டே, “ஜாய்ஸ்லின், இந்த குமாருக்கு ஒரு மாசந்தான் சின்னவன். ஒரு மாசமா... ரெண்டு மாசமா? ஆமாம். ஒரு மாசந்தான். இவன் ஜூன். அவன் ஜூலை” என்றாள் மேரிபுஷ்பம்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ஒரு மாதம் முன்னால் பிறந்த குமாரால், இப்படிப் பாட முடியுமா என்பதுபோல் அவன் முகத்தை, ‘பாவமாக’ வைத்துக் கொண்டபோது, பொன்னையாவிடம், “அந்தா கிடக்கே... வாதமசக்கி ஆயும் கொஞ்சம் கீறுனா போதும்” என்று சொல்வதற்காக படியிறங்கிய ராசம்மா, அங்கேயே நின்றாள். அவளையும் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. குமார் பயலோ, எதுவும் நடக்காதது போல் பல்லைக் கடித்துக்கொண்டே டின்னை அடித்தான்.

‘டிவிங்கிலை’ முடித்துவிட்ட ஜாய்ஸ்லின், அம்மாக்காரி மேரிபுஷ்பத்தைப் பார்த்தான். உடனே அவள், “டிராட்... டிராட், பாடு” என்றாள். “பேபி கோஸ் டு ஸ்கூல்... டிராட்... டிராட்” என்று துவங்கும் ஆங்கிலப் பாடலை கிட்டாம்பட்டி ஆக்ஸனோடு பையன் பாடிக் கொண்டிருந்தான். அவன் கையை ஆட்டிய விதமும், காலைத் தூக்கிய லாகவமும் கவர்ச்சியாகத்தான் இருந்தது. பிரமுகர்கள் மகிழ்ந்து போனார்கள்.

“பலே... நீதான்டா ஒங்க தாத்தா பேர எடுத்தால் எடுக்கணும்” என்றார் முன்ஸீப். அப்போது ராஜலிங்கமும், தங்கப்பாண்டியும், அவரைப் பார்த்து லேசாக முறைத்தார்கள்.

“அவரு இவனுக்கு எம்மாத்திரம்வே? நம்ம முன்ஸீப்புக்கு இக்கன்னா போடத்தான் தெரியும். யார் யார் எப்படின்னு சொல்லத் தெரியாது. நம்ம குமார் கலெக்டரா வரப்போறான் பாருங்க” என்றார் கர்ணம், கையில் இருந்த அடங்கல் பட்டாவை ஆட்டிக் கொண்டே!

“எல்லாம் வளப்புல இருக்குவே. இவன் மேரிபுஷ்பத்தோட மகனாச்சே” என்றார் இன்னொரு கிழவர்.

ஜாய்ஸ்லின் பயலுக்கு எப்படியோ, மேரிபுஷ்பத்திற்குப் பெருமை பிடிபடவில்லை. “ஜாய்ஸ்... ஓல்ட் விச் ஸ்டோரியச் சொல்லு, பார்க்கலாம்” என்றாள். அந்தப் பயல் இப்போது, ‘ஓல்ட் விச்’ கதையைச் சொல்லாமல், இன்னமும் மேளம் அடித்துக் கொண்டிருந்த பெரியப்பா மகன் குமாரைப் பார்த்து, “காலையில் உதச்சியே, இப்போ பைட்டுக்கு வாரீயாடா... பேஸ்டரீட் தேவடியா பிள்ளா’’ என்று சவாலிட்டு குமாரின் கையைப் பிடிக்கப் போனதுடன், பிரபல பத்திரிகைகளில்கூடப் பிரசுரிக்க முடியாத கெட்ட வார்த்தைகளை, மேற்கொண்டும் பேசிக் கொண்டே போனான்.

எல்லோரும் அசந்துவிட்டார்கள். “எல்லாம் வளப்புல இருக்குவே” என்று சொன்ன அதே கிழவர், மேரிபுஷ்பத்தை வேறு விதமாக வெறித்துப் பார்த்தார். இன்னும் படியிலேயே நின்ற ராசம்மா, மேரிபுஷ்பத்தை நோட்டம் விட்டுக்கொண்டே, “ஏய், குமார்... நீராருங் கடலுடுத்த பாடிக் காட்டுடா... இவனுக்குக் கெட்ட வார்த்தை சொல்லிக் கொடுத்தாலும் வராது” என்றாள், அவற்றைச் சொல்லிக் கொடுத்துத் தோற்றவள் போல.

- தொடரும்