அத்தியாயம் 1

8.15k படித்தவர்கள்
9 கருத்துகள்

தாய்த் தெய்வம்

மிழகத்தில் புரட்டாசி மாத வளர்பிறையில் நவராத்திரி விழா என்ற பெயரில் கோயில்களில் அம்மனை மையமிட்டு, பத்து நாட்களாகத் திருவிழா ஒன்று நடைபெறுகின்றது. இத்திருவிழாவில் முதல் ஒன்பது நாட்கள் அம்மன் ‘தவம்’ செய்கிறாள். பத்தாம் நாளில் அம்மன் எனப்படும் இத்தாய்த் தெய்வம் சப்பரத்தில் வடதிசை நோக்கி எழுந்தருளி ஊரில் ஒரு திடலுக்குச் சென்று எருமைத்தலை அரக்கனை (ஓர் ஆணை) அம்புகளை ஏவிக் கொன்றுவிட்டுத் தன் கோயிலுக்குத் திரும்புகிறாள்.

தனியான அம்மன் கோயில்களோடு இந்தத் திருவிழா சில சிவன் கோயில்களிலும் அம்மனை முன்னிறுத்தி நடத்தப் பெறுகின்றது. இருப்பினும், ஆண் துணையின்றித் தனியாக அமர்ந்திருக்கும் அம்மன் கோயில்களில்தான் இத்திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. இவ்வகையான கோயில்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பூசை செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில்களும் பெரும்பாலும் பார்ப்பனரல்லாத சாதிகளின் உடைமையாகவே உள்ளன. பழைய மண்கோட்டைகளும் கற்கோட்டைகளும் இருந்து அழிந்துபோன ஊர்களில் ஊரின் நடுப்பகுதியிலிருந்து அம்மன் புறப்பட்டு கோட்டையின் வாசல் வழியாக (அதாவது அந்த வாசல் இருந்த இடத்திலிருந்து) வெளியேறி முன் உள்ள திடலில் அல்லது கிழக்குத் திசைத் திடலில் எருமைத் தலை அரக்கனைக் கொன்று, கிழக்கு வாசல் வழியாகத் தன்னுடைய கோயிலுக்குத் திரும்பிவரும்.

தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான மண்கோட்டைகள் இருந்து அழிந்திருக்கின்றன. இவை பெரும்பாலும் இரண்டு முதல் ஐந்து ஏக்கர் பரப்பளவிற்கு உள்ளாகவே அமைந்திருக்கின்றன. இன்று இக்கோட்டைகள் இருந்ததற்கான அடையாளங்கள் மட்டும் பெரும்பாலான ஊர்களில் எஞ்சியிருக்கின்றன. இக்கோயில்கள் பெரும்பாலும் செல்லியம்மன், செல்லத்தம்மன், வடக்கவாச் செல்வி (வடக்குவாசல் செல்வி) என்னும் பெயர்களில் அமைந்துள்ளன.

பழந்தமிழர்களின் தாய்த் தெய்வக் கோயில்களான அம்மன் கோயில்கள் 99 விழுக்காடு வடக்கு நோக்கியே அமைந்துள்ளன என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் முப்புறமும் கடல் சூழ்ந்த நாடாகவே (அதாவது இன்றைய கேரளத்தை உள்ளிட்டு) தமிழகம் இருந்துள்ளது. எனவே பகைப்படை வடதிசையிலிருந்து மட்டுமே வர முடியும். தெய்வம் வடக்குத் திசை நோக்கித் தன் மக்களைக் காக்க ஆயுதம் ஏந்தி நிற்கின்றது என்பதே தொல் வரலாற்று உண்மையாகும். பழந்தமிழர்களின் தாய்த் தெய்வம், அரசுகள் உருவானபோது போர்த் தெய்வமாக மாற்றப்பட்டு ‘கொற்றவை’ என்ற பெயரோடு வழங்கப்பட்டது. இப்பெயருக்கான வேர்ச்சொல் ‘கொல்’ என்பதாகும். பெருந்தெய்வக் கோயில்களில் ஆண் தெய்வத்திற்கு அருகில் நின்றுகொண்டு அல்லது அமர்ந்துகொண்டிருக்கும் உமை, திருமகள் ஆகிய தெய்வப் படிமங்களின் கையில் நீலம், தாமரை ஆகிய மலர்களே காட்டப்பட்டிருக்கும். ஆனால், தாய்த் தெய்வங்களோ பெரும்பாலும் சிங்கத்தின் மீது அமர்ந்த கோலத்தில் நான்கு அல்லது எட்டுக் கைகளுடன், எல்லாக் கைகளிலும் ஆயுதங்கள் ஏந்தியபடி போருக்கு ஆயத்தமான நிலையில் உள்ளன. இவை இரத்தபலி பெறுகின்ற தெய்வங்களாகும். எனவே இவற்றின் பூசாரிகளாகப் பண்டாரம், வேளார் (குயவர்), உவச்சர் (கம்பர்) போன்ற பார்ப்பனரல்லாத சாதியாரே உள்ளனர்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

தமிழ்நாட்டுத் தாய்த் தெய்வம் பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் இலக்கியங்களில் இருந்துதான் நமக்குக் கிடைக்கின்றன. சங்க இலக்கியங்களும் பிற்கால இலக்கியங்களும் தரும் குறிப்புகளின்படி குழந்தை பெற்ற தாயினைக் குறிக்கும் சொல்லாக ‘செல்வி’ என்ற சொல்லே காணப்படுகின்றது. ‘காடுகெழு செல்வி, கடல்கெழு செல்வி’ ஆகிய தொடர்களால் தாய்த் தெய்வம் சுட்டப்படுகின்றது. பிற்காலத்தில் வந்த அம்மன் என்ற சொல்லைப் போல ‘செல்வி’ என்ற சொல் முற்காலத்தில் பயன்படுத்தப் பெற்றுள்ளது. ‘அம்மன்’ என்ற சொல்லுக்கு ‘சீமாட்டி’ அல்லது ‘உயர்குடிப் பெண்’ என்பது பொருளாகும். அக்காலத்தில் தாய்த் தெய்வம் இப்போதுபோல ஊரின் நடுவில் இருக்கவில்லை. அதன் வாழிடம் காட்டுக்குள் இருந்தது. தாய்த் தெய்வத்தின் வழிபாட்டில் ‘துணங்கைக் கூத்து’ நடைபெறும். இந்த முற்குறிப்புகளோடு பின்வந்த திருமுருகாற்றுப்படை அவளுக்கு ‘பழையோள்’ (பழையவள்) என்ற பெயரையும் கொடுத்து முருகனை அவள் மகனாகவும் ஆக்கிவைக்கின்றது. சிலப்பதிகாரம் பிறந்த காலத்தில் அவள் தந்தைத் தெய்வத்தின் (சிவனின்) மனைவி ஆக்கப்படுகின்றாள். அதன் பின்னர் கிழக்கிந்தியப் பகுதியில் இருந்துவந்த காளி வழிபாடும் அது குறித்த கதைகளும் பழைய தாய்த் தெய்வ வழிபாட்டோடு இணைக்கப்பட்டன. இந்த இணைப்பு வைதீக மதத்தின் எழுச்சியால் உருவானதாகும். வைதீகம் முழுமையாகத் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றபோது தாய்த் தெய்வம் சிவனின் மனைவியாகவும் திருமாலின் தங்கையாகவும் ஆக்கப்பட்டாள். அவளுடைய தோற்றக் கூறுகளை அடையாளம் காட்டும் தனித்தன்மைகள் ஓரளவு மறைக்கப்பட்டன; அவள் குடும்ப அமைப்பின் அச்சாணியாக மாற்றப்பட்டாள்.

இருந்தபோதும் வைதீகத்தின் முயற்சிகளால் தாய்த் தெய்வத்தின் தனித்தன்மையை ‘முற்றிலுமாக’ அழித்துவிட முடியவில்லை. சிவன், திருமால் ஆகிய பெருந்தெய்வக் கோயில்களில் அம்மன், தாயார் ஆகிய பெயர்களில் தாய்த் தெய்வம் குடியமர்த்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ‘ஆண் வாடை’யின்றித் தனியாக தாய்த் தெய்வம் அமர்ந்துள்ள கோவில்களே தமிழ்நாட்டில் இன்றும் அதிகம் காணப்படுகின்றன. தாய்த் தெய்வங்கள் அனைத்தும் கையில் ஆயுதம் ஏந்தியுள்ளன என்பதே இவற்றின் தனித்தன்மையாகும். ஒரேயொரு வலிமையான கூறாக மட்டும் வைதீகத்தின் சாயல் தாய்த் தெய்வ உருவங்களின் மீது காணப்படுகிறது. தாலியின் மாற்று வடிவமாக ‘பொட்டு’ எனும் அணிகலன் தாய்த் தெய்வத்தின் கழுத்தில் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஒன்றைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் வைதீகத்தால் தாய்த் தெய்வத்தின் மீது உண்டாக்க முடியவில்லை. வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல், தலையில் பெரும்பாலும் அக்கினி (தீச்சுவாலை) மகுடம் கொண்டிருத்தல், கழுத்தில் காறையும் பொட்டும் அணிந்திருத்தல், நிமிர்ந்த முகம் ஆகியவை தாய்த் தெய்வத்தின் தனி அடையாளங்களாகும். வழிபாட்டு முறைகளில் பொங்கலும் முளைப்பாரியும் சாமியாட்டமும் இரத்தபலியும் தாய்த் தெய்வத்தை அடையாளம் காட்டும் தனிக்கூறுகளாகும். அண்மைக் காலமாகத் திருவிழா நாட்களில் மட்டும் தாய்த் தெய்வத்தை வைதீகப்படுத்தி பார்ப்பனர்கள் பூசை செய்கின்றனர். ஏனைய நாட்களில் தாய்த் தெய்வத்திற்கான பூசையானது பார்ப்பனர் அல்லாத சாதியாராலேயே செய்யப்படுகின்றது.

தமிழ்நாட்டில் பல்லவ, பாண்டிய, சோழ அரசர்களின் காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் பேரெழுச்சி பெற்றன. ஆந்திராவின் தென்பகுதி தொடங்கி குமரிவரை அக்காலத்தில் கற்களால் ஆன பெருந்தெய்வக் கோவில்களை அரசர்களும் அதிகாரிகளும் உருவாக்கினார்கள். எழுதப் பெற்ற தமிழக வரலாற்றைப் படிப்பவர்களுக்கு அக்காலத்தில் இவை மட்டுமே தமிழ்ச் சாதியினர் வழிபடும் இடங்களாக விளங்கின என்று தோன்றும். ஆனால் உண்மையில் அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஏராளமான தாய்த் தெய்வக் கோவில்கள் இருந்திருக்கின்றன. இக்கோயில் அமைந்த இடத்திற்கும் அதற்கு முன்னுள்ள முற்றத்திற்கும் வேறு வழியின்றி அரசர்கள் வரிநீக்கம் செய்திருக்கின்றனர். இவ்வாறு வரிநீக்கம் செய்யப்பட்ட நிலங்களுக்கு ‘இறையிலி நிலம்’ என்று பெயர். ஒவ்வொரு ஊரிலும் ஒன்றோ இரண்டோ பலவாகவோ இவ்வகையான தாய்த் தெய்வக் கோயில்கள் பல்லவ, பாண்டிய, சோழ அரசர்கள் காலத்திலும் இருந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, “மழ நாடான ராஜாச்ரய வளநாட்டுப் பாச்சில் கூற்றத்துக் கீழ்பலாற்றுத் துறையூர்” என்ற ஊரிலிருந்து தாய்த் தெய்வக் கோயில்களைப் பற்றி முதலாம் இராசராசனின் (கி.பி.9851012) தஞ்சைக் கோயில் கல்வெட்டு பேசுகின்றது. “இவ்வூர்... பிடாரி புன்னைத்துறை நங்கை கோயிலுந் திருமுற்றமும், பிடாரி பொதுவகை ஊருடையாள் ஸ்ரீகோயிலுந்திருமுற்றமும், இவ்வூர்க் காடுகள் கோயிலுந்திருமுற்றமும், இவ்வூர்த் துர்க்கையார் கோயிலுந் திருமுற்றமும், இவ்வூர் எறாடு கடக்கம் இவ்வூர்க் காளாபிடாரியார் ஸ்ரீகோயிலுந் திருமுற்றமும், ஐயன் கோயிலுந் திருமுற்றமும் இவ்வூர்ப் பிடாரி குதுரைவட்டமுடையாள் ஸ்ரீகோயிலுந் திருமுற்றமும் இவ்வூர்க் குளமுங் கரையும் ஆக இறையிலி நீங்கு நிலன்...” என்பது கல்வெட்டுத் தொடராகும். இக்கோயில்களில் ஐயன் கோவில் என்று குறிப்பிடப்படும் ஐயனார் கோவில் தவிர ஏனையவை அனைத்தும் தாய்த் தெய்வக் கோவில்களாகும். கி.பி. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை தமிழ்ச் சமூகத்தின் பெருந்திரளான மக்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில்தான் நின்றிருக்கின்றனர் என்பதற்கு இவை போன்ற செய்திகள் அடையாளமாகும். பெருஞ்சமய நெறிக்குள் கரைந்துபோகாமல் தமிழ்ச் சமூகம் தன்னுடைய பண்பாட்டினைத் தகவமைத்துக்கொண்டது என்பதுதான் இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் செய்தியாகும். ஒற்றைத் தெய்வத்தை முன்னிறுத்தும் பெருஞ்சமய நெறிக்கு மாறாகத் தமிழ் மக்கள் ஒரே ஊரில் பலவகைத் தாய்த் தெய்வங்களை வணங்கி வந்திருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்க செய்தியாகும்.

கல்வெட்டு குறிப்பிடும் தாய்த் தெய்வக் கோவில்களில் சிற்சில வேறுபாடுகளுடன் கூடிய சடங்குகளும் வழிபாடுகளும் நிகழ்த்தப் பெற்றிருக்க வேண்டும். பின்னர் ஆயிரமாண்டுகள் கழித்தும் இவ்வகையான பண்பாட்டு மரபுகளில் சில இன்றுவரை தொடர்ந்து வலிமையாக உயிர் வாழ்கின்றன என்பதும் நாம் உணர வேண்டிய செய்தியாகும்.

தமிழ்நாட்டின் பெருந்தெய்வக் கோயில்கள் சிலவற்றில் குறிப்பாக சிவன் கோயில்களில் - தந்தைத் தெய்வத்தைவிட தாய்த் தெய்வம் ஆழ்ந்த பக்திக்கும் பெருத்த மரியாதைக்கும் உரியதாக விளங்குகின்றது. இவற்றோடு சில நுட்பமான சடங்கியல் அசைவுகளும் இக்கோயில்களில் காணப்படுகின்றன. கன்னியாகுமரியிலுள்ள குமரித் தெய்வம், திருநெல்வேலி காந்திமதி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன் திருவானைக்கா(வல்) அகிலாண்டேஸ்வரி, காஞ்சி காமாட்சி என்பன போன்ற சில தாய்த் தெய்வங்களை இவ்வகையில் நம்மால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

கன்னியாகுமரியில் உள்ள குமரித் தெய்வம் தமிழர்களின் கடல்துறைத் தெய்வமாகத் தோன்றியிருக்க வேண்டும். ‘கடல்கெழு செல்வி’ என்று சங்க இலக்கியம் (அகநா.370) குறிப்பிடும் பழைய தாய்த் தெய்வமும் அதன் சடங்குமுறைகளும் எவ்வாறு மறைந்துபோயின என்று தெரியவில்லை. மீனைக் குலக் குழுச் சின்னமாகவும் கொடியாகவும் கொண்ட பாண்டியர் எனும் அரசமரபு தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றது. அவர்களுடைய தலைநகர்த் தெய்வமும் மீனோடு கூடிய பெயர் பெற்றிருக்கின்றது. சங்க இலக்கியக் குறிப்பின்படி சுறாக் கொம்பை நட்டு வழிபட்ட ‘தென் பரதவர்’ என்னும் சாதியும் பிற மீனவச் சாதிகளும் நெடிய கடற்கரையும் இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ளன தமிழகம் முழுவதிலும் பரவலாக நாட்டார் தெய்வப் பெயரிடு முறைகளிலும் மீனா, மீனாள், மீனாட்சி ஆகிய பெயர்களின் செல்வாக்கினை நம்மால் மறுதலிக்கவியலாது. தந்தைத் தெய்வம் இல்லாமல் தனித்த தாய்த் தெய்வமாகத் தமிழ்நாட்டு அரசர்கள் குமரித் தெய்வத்தைக் கொண்டாடி இருக்கின்றனர் என்ற செய்தி கல்வெட்டுகளால் தெரியவருகின்றது. இக்குமரித் தெய்வமே சங்ககாலத் தமிழர்களின் ‘கடல்கெழு செல்வியாக’ இருக்க வேண்டும். இந்நினைவுகளில் இருந்தே தமிழ்ப் பௌத்த மரபில் ‘மணிமேகலை’ எனும் கடல் தெய்வம் தோன்றி இருக்க வேண்டும்.

மதுரை மீனாட்சித் தெய்வம் தானே தனியுரிமையோடு முடிசூடி அரசாளும் தெய்வமாகும். இக்கோயில் திருவிழாவில் திருமணச் சடங்குக்கு முன்னர் அவள் மட்டும் முடிசூடும் ‘பட்டாபிஷேகம்’ என்னும் திருவிழாச் சடங்கும் ‘திக்குவிஜயம்’ என்ற பெயரில் அரசி நகரசோதனை செய்யும் திருவிழாச் சடங்கும் நிகழ்த்தப் பெறுகின்றன. ‘அவள் அரசியே தவிர அவள் கணவன் அரசன் அல்லன்.’ இப்படி ஒரு தனித்தன்மை கொண்ட தெய்வம் இந்தியாவில் வேறெங்கும் இல்லை. சிலப்பதிகாரம் குறிப்பிடும் ‘தென்னவன் குலமுதல் கிழத்தி’ (பாண்டியரின் குல தெய்வம்) இவளாகவே இருந்திருக்க வேண்டும். இத் தொடர்பையும் தொன்மையினையும் காட்டும் நுட்பமான சான்று ஒன்று அண்மையில் கிடைத்துள்ளது. எருமைத் தலை அரக்கனை அழிப்பதற்காக நவராத்திரித் திருவிழாவில் இவள் தவம் செய்யும்போது எட்டாம் திருநாள் விழாவில் மதுரை மீனாட்சிக்கு வேப்பம்பூ மாலை சூட்டப்படுகின்றது. ‘வேப்பம்பூ மாலை சூடுதல்’ என்பது தமிழ்நாட்டில் வேறு எங்கும் கண்டும் கேட்டும் அறியாத செய்தியாகும். பாண்டியர்களின் அடையாளப் பூமாலையான வேப்பம்பூமாலையை இத்தெய்வம் சூடிக்கொள்வது இத்தெய்வம் பாண்டியரின் குல தெய்வம் என்ற கருத்தினை உறுதிசெய்கின்றது. (பாண்டியர்களின் குடிப்பெயர்களில் ஒன்றாக ‘வேம்பன்’ என்ற பெயரை சிலப்பதிகாரம் குறிப்பிடுவதும் இங்கு கவனிக்கத்தக்கது.)

இவ்வாறே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மற்றொரு தாய்த் தெய்வம் திருஆனைக்கா அகிலாண்டேசுவரி ஆகும். இக்கோயில் மதிற் சுவர்களில், இக்கோயிலில் தன் தலையைத் தானே அரிந்து (நவகண்டம்) கொடுக்கும் வழக்கம் இருந்ததைக் காட்டும் சிற்பச் சான்றுகள் உள்ளன. (இவ்வகைச் சான்றுகள் தொல்லெச்சங்களாகத் தமிழ்நாட்டில் பல கோயில்களில் காணக் கிடைக்கின்றன.) இக்கோயிலில் நண்பகல் ஒரு வேளையில் ஆண் பூசாரி சேலையைத் தன் உடம்பில் சுற்றிக்கொண்டு தான் பெண்ணாக மாறியதாகப் பாவனை செய்துகொண்டு பூசை செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதன் பொருள் இக்கோயில், ஒரு காலத்தில் நரபலி பெறும் உக்கிரமான தாய்த் தெய்வக் கோயிலாகத் தோன்றியிருக்க வேண்டும் என்பதுதான். இக்கோயிலை வைதீகமயப்படுத்திப் பிற்காலத்தில் தந்தைத் தெய்வக் கோயிலாக ஆக்கியுள்ளார்கள். வைதீகமயப்படுத்தும் முறைகளில் ஒன்று ஸ்ரீஸக்கர பிரதிஷ்டை செய்தல் (தெய்வத்தின் அடங்காச் சினத்தைக் குறைக்கும் மந்திரங்களைச் செப்புத் தகட்டில் எழுதித் தலைவாசலில் பதித்தல்) ஆகும்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

இது ஒரு பார்ப்பனக் கதையாடலாகும். திருவானைக்கா கோயிலில் ஆதிசங்கரர் ஸ்ரீஸக்கர பிரதிஷ்டை செய்து ‘தாடங்கம்’ என்னும் காதணி ஒன்றை இத்தெய்வத்திற்கு அளித்தார் என்பது பார்ப்பனர்கள் கூறும் கதையாகும் (இக்கதையினைப் பயன்படுத்திக்கொண்டு இப்போதுள்ள சிருங்கேரிக் கிளைமடமான காஞ்சி மடத்து சங்கராச்சாரியார் தாடங்கம் செய்து கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது). காஞ்சி காமாட்சியம்மன் கோயில் இப்போது சங்கராச்சாரியார் கட்டுப்பாட்டில் உள்ளது. வாய்மொழி வழக்காறுகளின்படி சங்கராச்சாரியார்கள் கைப்பற்றுமுன் இக்கோயில் ‘விசுவ கருமாக்கள்’ எனப்படும் கம்மாளர் சாதியார்க்குச் சொந்தமானது. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இக்காமாட்சித் தெய்வம் கௌதம புத்தரின் தாயான தாராதேவி வழிபாட்டிலிருந்து தோன்றியிருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். தமிழ்நாட்டுச் சிற்றூர்களில் இன்றளவும் காமாட்சித் தெய்வம் சிறுதெய்வமாகவே கருதப்படுகின்றது. காஞ்சிபுரத்தில் மட்டுமே இது வைதீக சமயத் தெய்வமாகும். தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் பொற்கொல்லர்கள் பங்காரு காமாட்சி (தங்கக் காமாட்சி) என்னும் தெய்வத்தையே குல தெய்வமாக வழிபடுகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சங்க காலத்துக் கோயில்கள் பெரும்பாலும் மண்ணாலும் செங்கற்களாலும் மரச்சட்டங்களாலும் அமைக்கப்பட்டிருந்தன. பக்தி இயக்க எழுச்சியின்போது இவையும் பெருந்தெய்வக் கோயில்களைப் போல் கற்கோயில்களாக மாற்றப்பட்டதுண்டு. சங்க இலக்கியங்களில் கோயில்களைக் குறிக்கவரும் ‘கோட்டம்’ என்ற சொல் கி.பி. 8, 9ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் வழங்கி வந்திருக்கின்றது. இவற்றுள் ‘காமக் கோட்டம்’ என்ற சொல்லே தாய்த் தெய்வக் கோயில்களைக் குறித்ததாக இருக்க வேண்டும். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் இன்றளவும் ‘காமக் கோட்டம்’ என்றே வழங்கப் பெறுகின்றது. பார்ப்பனச் சொல்லாடல் இதனையே ‘காமக்கோடி’ என்று தன்மயமாக்கி வைதீகமயப்படுத்தியிருக்கின்றது.

9ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் சிலவற்றில் ‘காமக் கோட்டம் அழித்தார் பட்ட பாவம்’ என்ற தொடர் காணப்படுகின்றது. இது, ஏதோ சில காரணங்களுக்காகக் காமக்கோட்டங்கள் என்னும் ‘தாய்த் தெய்வக் கோயில்கள்’ அழிக்கப்பட்ட வரலாற்று உண்மையை உணர்த்துகின்றது. அவை, தந்தைத் தெய்வக் கோயிலாக மாற்றப்படுவதற்காக வைதீக சமயத்தவரால் அழிக்கப்பட்டிருக்கலாம். பொதுவாக பக்தி இயக்கம் ஆணாதிக்க உணர்வினை முன்னிலைப்படுத்தியதே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். தாய்த் தெய்வக் கதைகளும் சடங்குகளும் பலமுனைப்பட்டவையாக அமைகின்றன. அவற்றுள் பெரும்பாலானவற்றில் மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தாய்த் தெய்வம் ஆயுதம் ஏந்துவதையோ அருள் செய்வதையோ வழக்கமாகக் கொண்டுள்ளன. பொதுவாக, தாய்த் தெய்வங்கள் ஆறாத சினம் கொண்டவை. எனவேதான் அவை அக்கினி மகுடம் (நெருப்புச் சுவாலையால் ஆன தலையணி) உடையனவாகக் காணப்படுகின்றன. விதிவிலக்காக, தாய்த் தெய்வக் கதைகள் கொலை செய்த கணவனைப் பேயாக வந்து பழிவாங்கிய ‘நீலி’ என்னும் இயக்கி கதையினையும் அழுக்குக்கும் வறுமைக்கும் அடையாளமான, ஒரு காலத்தில் பரவலாக வழிபடப் பெற்ற ‘மூதேவி’ தெய்வ வழிபாட்டினையும் ஏற்றுக்கொண்டது ஆய்வுக்குரிய செய்தியாகும்.

இதுபோலவே, ‘மாகாளம்’ என்னும் வழிபாட்டுத் தலங்களைத் தமிழக வரலாற்றில் பார்க்கிறோம். உஞ்சேனை மாகாளம், அம்பர் மாகாளம் எனச் சில மாகாளத்தலங்கள் தேவாரத்தில் குறிக்கப்படுகின்றன. மாகாளி, உஜ்ஜயினி, மாகாளி ஆகிய பெயர்களோடு (உச்சினி) மாகாளி என்னும் தாய்த் தெய்வ வழிபாடும் தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுகின்றது. வடநாட்டில் உள்ள உஜ்ஜயினி, ஒரு மாகாளத் தலமாகும். இத்தலத்தில் உள்ள காளி தேவியே காளிதாசனுக்குக் கவிஞனாக வரங்கொடுத்தவள். தமிழ்நாட்டில், ‘காளி’ என்ற சொல்வழக்கு முதன்முதலில் சிலப்பதிகாரத்திலேயே காணப்படுகிறது. எனவே காளி வழிபாட்டுத் தலங்களான மாகாளத் தலங்களும் பின்னர் தந்தைத் தெய்வக் கோயில்களோடு சைவப் பெருஞ்சமயத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

- தொடரும்