அத்தியாயம் 1

14.31k படித்தவர்கள்
2 கருத்துகள்

1949ஆம் ஆண்டு இறுதியில் குலாம் கவுஸ் சாத்தனூரின் சப் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அதுவரையில் அவர் வேலூரிலுள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளியில் காலங்கழித்து வந்தார். இந்த நியமனம்தான் அவர் தனிப்பட்ட முறையில் முதன் முதல் செயலாற்றக்கூடியது. தனக்கு வேலை கிடைத்ததற்கும் மனைவியான நஜ்மா பீவி கிடைத்ததற்கும் காரணமாக, கும்பகோணம் எல்லையில் அடங்கும் பகுதியின் சர்க்கிள் இன்ஸ்பெக்டரான ஃபிரான்சிஸை நன்றியோடு நினைவுகூர்வார். மேற்குறிப்பிட்ட பிரதேசத்திற்குட்பட்ட காவல்துறை நிர்வாகத்தின் தலைமையகம் சாத்தனூரில் இயங்கி வந்தது. 

தந்தையற்ற நஜ்மாவிற்காய் தான் பொறுப்பேற்று ஃபிரான்சிஸ் அப்பொழுது பயிற்சிப் பள்ளியில் மாணவனாய் இருந்த குலாம் கவுஸின் நன்னடத்தையையும் அவன் எதிர்காலத்தில் முன்னேறுவான் என்பதையும் அறிந்தவராய் நஜ்மாவிற்கும், கவுஸிற்கும் திருமணம் முடித்து வைத்ததோடு தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் கவுஸிற்கு வேலை நியமனம் கிடைக்கும்படியும் பார்த்துக்கொண்டார்.

குலாம் கவுஸ் ஆஸ்திகருமல்ல; நாஸ்திகருமல்ல. அவன் காலத்தைய இளைஞர்களைப் போலவே அவனும் மத வழிபாடுகள் குறித்த ஒருவித அலட்சியத்துடன் இருந்தான். குரானுக்குப் பதிலாகத் தான் நன்கறிந்த காவல்துறைப் புத்தகத்தையும் தனது தொழில் குறித்த சட்ட திட்டங்களையும் விதிமுறைகளையும் இஸ்லாமிய மதம் வகுக்கும் நன்னெறி முறைகளுக்குப் பதிலாக மனங்கொண்டிருந்தான் அவன். 

முஸ்லீம் இனத்தைச் சார்ந்த வயதில் முதிர்ந்தவர்கள் அவனை ஒரு ‘தேறாதவன்’ என்பதாய்க் கருதி வந்தனர். என்றாலும் ஃபிரான்சிஸிற்கு அவன்மேல் நம்பிக்கையிருந்தது.

ஒரு காவல் அதிகாரி என்ற முறையிலும் சரி, மனிதன் என்ற விதத்திலும் சரி, முதன் முதல் அவதூதரைப் பார்த்தபோது குலாம் கவுஸிற்குள் அந்த நிர்வாணத் தோற்றம் எதிர்ப்புணர்வைத் தோற்றுவித்தது. உடனடியாக அவன் அதுகுறித்து எதுவும் செய்யவில்லையெனினும் காவல்துறை ஷரத்துக்களடங்கிய புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து ஆடையின்றி வெளியே உலவுதல் ஒரு சிறு குற்றம் மட்டுமே என்று அறிந்துகொண்டான்.

எக்ஸிபிஷனிஸம் என்ற தலைப்பின் கீழ் ‘தொல்லை’ எனப் பகுக்கப்பட்டிருந்தது, அத்தகைய நிர்வாண வீதி உலா. அதற்கான தண்டனை ஒருநாள் சிறைவாசம் எனவும் காவல் ஏட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கடுத்த நாள் மாலை பிரதான கடைத் தெருவில் மக்கள் நெரிசலைப் பற்றிய பிரக்ஞை முற்றும் அற்றவராய் முழுநிர்வாணமாய் அவதூதர் போவதைப் பார்க்க நேர்ந்ததும் அவதூதரைக் கைது செய்தான், தன்னைத் தானே காட்சிப்பொருளாக்க அவர் முயன்றதாய்க் குற்றஞ்சாட்டி. 

அன்று ஏதோ திருவிழா சமயம். ஹிந்துக்கள் கோயில்களின் உற்சவம். சாத்தனூர் வீதிகள் அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து வந்த ஆண்களும், பெண்களுமாய் கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. என்றாலும், சாத்தனூர்வாசிகளோ, விழா பார்க்க வந்தவர்களோ அவதூதரைப் பற்றிய எவ்வித புகாரும் தரவில்லை என்றாலும் ‘கவுஸ்’ அவரைக் கைது செய்தான்.

அன்று, சாத்தனூரின் சப் இன்ஸ்பெக்டராக குலாம் கவுஸ் பதவியேற்ற முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமை. அவதூதரை, புதிய எஸ்.ஐ. கைது செய்து கூட்டிக்கொண்டு போவதைக் குறித்து யாரும், எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. புதிய சப் இன்ஸ்பெக்டர் ஆறடி உயரமும், ஆஜானுபாகுவான தோற்றமும் கொண்டிருந்தாலும் தன்னைத் தானே காத்துக்கொள்ள, காப்பாற்றிக்கொள்ள அவதூதருக்கு முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும்! 

ஒரு பொட்டுத்துணியுமின்றி அவதூதரும், மொடமொடவென முரட்டுச் சீருடையுடன் புதிய இன்ஸ்பெக்டருமாகப் போவதை சிலர் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டு நின்றனர். அவதூதரின் தோளின் மேல் கைபோட்டுத் தன்னைத் தொடருமாறு அவருக்குக் கட்டளையிட்டு சாத்தனூர் காவல் நிலையத்திலிருந்த ஒற்றைச் சிறையறையில் அவரை அடைத்து வைக்க நடத்திச் சென்றபோது ஆட்டுக்குட்டிபோல், மறுப்பேதும் சொல்லாமல் சென்றார் அவதூதர். சிறைச்சாலையும் பிற எந்த இடத்தையும் போலவே தூங்குவதற்கு உகந்த இடம்தான் என்றார் அவர்!

எதிர்ப்பேதும் காட்டாத அந்தக் கைதி குலாம் கவுஸைக் குழப்பினார். மன்னிப்புக் கோருவதாகவும், சட்டத்தின்படி அவரைக் கைது செய்துகொண்டு போயாக வேண்டிய நிலையில்தான் இருப்பதாகவும் அவரிடம் கூறினான் குலாம் கவுஸ். “யாருடைய சட்டம்?” என்று நிமிர்ந்து பார்த்துக் கேட்டார் குலைந்து, இனிமையாகப் பேச அறியாத அவதூதர்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

குலாம் கவுஸின் அறிவிற்கெட்டியவரை இந்தக் கேள்விக்குக் காவல் ஏட்டில் பதில் தரப்படவில்லை. இந்த நாட்டின் சட்டம் என்று அவன் பதில் கூறியிருக்க முடியும். ஆனால், அது மிகப் பொதுப்படையாகப் பேசுவதாய் தொனிக்கக்கூடியது. வேறு ஒரு விவாதத்திற்கு வழிவகுக்கும். அது அவனுக்குப் பிடிக்கவில்லை. மெளனமாகயிருந்தான். அது விவேகமான வழியாகப்பட்டது.

அவன் பேசாதிருப்பதைப் பார்த்து அவதூதர் மேலும் கேட்டார்: “நீ என்னைக் கைது செய்து கூட்டிப் போகிறாயா, அல்லது நான் உன்னையா?”

இந்தக் கேள்விக்கும் எஸ்.ஐ.யால் தக்க பதிலேதும் தர முடியவில்லை. சுலபமாக வந்ததை அவன் கூறினான். “சிறையில் சில்மிஷங்களேதுமின்றி, செளகரியமாக இருக்கலாம் நீ.”

காவல் நிலைய காம்பவுண்டிற்குள் திரும்பியபடி, அந்த அஸ்தமன வேளையில், அவதூதர் கவுஸிடம் இனிமையாகக் கேட்டார். “நீ என்னை என்னவாகக் குற்றஞ்சாட்டினாயோ அது நீ இல்லையென்று உன்னால் உறுதியாகக் கூற முடியுமா? பிரபல்யம் தேடுபவன் காட்சிப் பொருளாக விரும்புபவன் முழு நிர்வாணத்திலான என்னை விடவும் அதிகமாய்…?”

இப்பொழுது கவுஸிற்குத் தனது காக்கிச் சீருடை குறித்தும் தனது இளம் மனைவியின் கையால் செய்து தரப்பட்ட சலவை, இஸ்திரி குறித்தும் பெருமை உண்டாகியது. அவதூதரின் கேள்வி அவனுக்கு நடுவயிற்றில் சங்கடமுண்டாக்கியது. எண்ணவோட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு விரைப்பாக அவதூதரை நடத்திச் சென்று சிறையுள் நுழையச் செய்து குறுக்கிலோடிய இரும்புக் கம்பிகளையெல்லாம் இணைத்துப் பூட்டி வெளியேயான இரும்புக் கதவையும் பூட்டி ஒரு விநாடி பூட்டையே பார்த்துக்கொண்டு நின்றான். 

சிறையினுள்ளே வெறித்துப் பார்த்தவன் கண்களுக்கு, அந்தச் சிறு அறையில் வெகு மங்கலாக எரிந்துகொண்டிருந்த மின்சார விளக்கு வெளிச்சத்தில், அவதூதரும் கம்பிகளினூடே தன்னையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அடுத்த ஒரு கணம் அவதூதர் கரைந்து காற்றில் கலப்பதுபோல் தோன்றியது. அதன் பின் அவதூதர் அங்கே இல்லவே இல்லாததுபோலவும் தோன்றியது. என்ன ஆகிவிட்டது? அவன் திரும்பவும் பார்க்க அவதூதர் சிறைக்குள் இருந்தார்! 

அவன் கண்ணைச் சிமிட்டிக் கொண்டான். கண்கள் தன்னிடம் ஏமாற்றுவித்தை செய்வதாய் கண்ணைக் கசக்கிக்கொண்டான். சிறையினுள்ளிருந்து வெளியேற அவதூதரால் முடியவே முடியாது என்று அவன் நிச்சயமாக நம்பியதால் திரும்ப உள்ளே பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள மறுத்து, தனது மேஜைக்குச் சென்று வழக்கமான வேலைகளில் மூழ்கினான்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாய்த் தனது அலுவல்களில் மூழ்கியிருந்தவன் பசியெடுப்பதை உணர்ந்தான். அவன் உணவருந்தும் நேரம் கடந்து வெகுநேரமாகிவிட்டிருந்தது. அவன் நேரம் கழித்து உணவருந்தச் சென்றால் அவன் இனிய நஜ்மாவிற்குக் கோபம் வருமே என்று எண்ணியவாறே நிமிர்ந்தவன், எதிரில் கேலியாக குறும்பாகச் சிரித்தபடி அவதூதர், எதிர்ப்புறம் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தான்.

திடுக்கிட்டுக் குதித்து, “நீ எப்படி வெளியே வந்தாய்?” என்று உரத்த குரலில் சப்தமிட்டான்.

“நான் எப்பொழுது உள்ளேயிருந்தேன்?” என்று எதிர்க்கேள்வி கேட்டார் அவதூதர்!

“ஆனால், நான் உன்னை உள்ளே வைத்து வெகு ஜாக்கிரதையாய்ப் பூட்டினேனே!”

“அப்படிச் செய்ததாக, யார் செய்தானோ அந்த ‘நான்’ மேல் சத்தியம் செய்வாயா?”

வேறு எதுவும் செய்ய வழியேயில்லாததை உணர்ந்தவனாய் கவுஸ் உள்ளங்கைகளை விரித்து அவற்றை வான் நோக்கிப் பரப்பி, அந்தத் தத்துவ விசாரணை எதில் முடியும் என்பதை அறிந்து அதனைத் தொடராமல் கைவிட்டான். “ஒரு ஒழுங்கான மனிதனாய் ஆடையணிந்துகொள்” என்று அழுத்தமாக உத்தரவிட்டான்.

அவதூதர் குறுக்கிட்டுக் கேட்டார். “ஆடையணிந்த மனிதர்களெல்லாம் எப்பொழுதும் ஒழுங்கானவர்களா? நீ உண்மையிலேயே அப்படி நினைக்கிறாயா?”

அந்தவிதமான தர்க்கவாதமும், சிந்தனாப் போக்கும் குலாம் கவுஸைத் திடுக்கிட வைத்தன. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஆரம்பித்த அதே விரைப்புடன் தனது வாக்கியத்தைத் தொடர்ந்தான். “இல்லை, உடனடியாக சாத்தனூரை விட்டுப் போ.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“உன்னால் சாத்தனூரை, என்னை விட்டு நீங்கும்படி உத்தரவிட முடியுமா? உன்னால் செய்ய முடிந்தால் நன்றாயிருக்கும்.”

பதில் அளிக்க முடியாமல் எழுந்த குலாம் கூறினான். “சிறையினுள் செல். இப்பொழுது, நீ உள்ளேயே இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன்.”

“பூட்டையோ, கதவையோ திறக்கும் சிரமம் உனக்கு வேண்டாம்” என்று சொன்னார் அவதூதர். மறுகணம் இரும்புக் கம்பிகளுக்கப்பாலிருந்த சிறையினுள் அவர் இருந்தார்! அவர் கண்கள், ‘நான் இந்த உபகாரத்தை வேறு யாருக்கும் செய்யமாட்டேன் தெரியுமோ!’ என்று அவனைப் பரிகசிப்பது போல சிரிப்போடு பார்த்தன.

குலாம் கவுஸ் தலையை உலுக்கிக்கொண்டு தன் எண்ணவோட்டத்தை நேராக்க முயன்றான். இது, காவலியல் புத்தகத்தில் பேசப்படாத ஆழ்நிலை உறக்கமோ, மாயமந்திரமோ, அதுபோன்ற வேறு என்னமோ… இந்த மந்திர தந்திரங்களை எதிர்கொள்வது எப்படி என்று காவலியல் புத்தகத்தில் எந்தக் குறிப்பும் தரப்படவில்லை. கஷ்டம்… ஒரு சிறு குற்றவாளியைக் குறித்து இன்னும் அதிகமாகக் குழம்பவோ, கவலைப்படவோ, வேண்டாத எண்ணங்களில் உளைச்சலுற்று, என்னவாவது செய்து நேரத்தை விரயமாக்க மறுத்தவனாய் அவதூதருக்கு முதுகு காட்டித் திரும்பி, தனது புத்தம்புது சைக்கிளைக் கொண்டு வருமாறு உரக்கக் கூவி, டியூடியிலிருந்த இரண்டு கான்ஸ்டபிள்களிடம் அவதூதர் சிறையிலிருப்பதைக் கூறி அவர் தப்பிவிடாமல் கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். 

கான்ஸ்டபிள்களில் ஒருவன் சாத்தனூர் வாசி. “அவதூதர் நம்மைக் கண்காணித்து கவனமாகப் பார்த்துக் கொள்வார். பயப்படாதீர்கள்!” என்று கூறினான் அவன். ‘அவன் என்ன அர்த்தத்தில் அப்படிக் கூறுகிறான்?’ என்று கவுஸ் கேட்டதற்கு, ‘அது ஒரு பெரிய விளக்கமாகக் கூற வேண்டிய விஷயம். ஏற்கனவே உணவருந்தும் நேரம் கடந்து, எஸ்.ஐ.யின் உணவு குளிர்ந்துபோய்க் கிடக்கும்’ என்று மறுமொழி தந்தான்.

வீடு நோக்கிச் செல்லும் வழியில் அவதூதரைப் பற்றி நினைப்பு வராமல் தீர்மானமாகப் பார்த்துக்கொண்டான். கவுஸ் ஏற்கனவே நேரமாகியிருந்தும், பதினெட்டு வயதுகூட நிரம்பாத அவன் இளம் மனைவி சமைத்து முடித்தபின் தான் சிறிது நேரம் உறங்கிய சமயம் கண்ட கனவைப் பற்றிச் சொல்ல முயற்சித்து அவன் சாப்பிடுவதை இன்னும் கால தாமதப்படுத்தினாள். 

கனவில் தனது கணவன் கூச்சநாச்சமின்றி உடையணியாது தெரு வீதிகளில் உலாத்துவதாகக் கண்டதாகக் கூறினாள். நிர்வாணமாக நடைபயிலும் கணவன் எதிரில் வந்து அவன் நிலையைக் கண்டித்து அவள் அதட்ட, அவள் யாரென்றே அறியாதவனாய், பதில் கூறவும் மறுக்கிறான் அவன். கூறிக்கொண்டே வந்தவள், கனவென்பதையும் மறந்து அடக்கமாட்டாமல் அழ ஆரம்பித்து, கண்ணீர் பெருக்கினாள், கணவனின் உதாசீனத்தைத் தாங்க முடியாதவளாய். 

அவளைச் சமாதானப்படுத்தி அது வெறும் முட்டாள்தனமான கனவு என்று கூறி, கண்களைத் துடைத்து அழுகையை நிறுத்த பத்து நிமிடத்திற்கும் மேல் தேவைப்பட்டது குலாம் கவுஸிற்கு. ஏற்கனவே அவன் சாப்பிட்டு முடித்து திரும்பக் காவல் நிலையத்தை அடைந்து அன்று முடிக்க வேண்டிய வேலைகளில் ஈடுபடுவதற்கு அவசரப்பட்டபடி இருந்தான். பாவம் மனைவி இன்னும் ஒன்றிரண்டு மணி நேரம் அவள் வீட்டில் தனியாக இருக்கவேண்டும். ஆனால் ஒரு காவல்துறை அதிகாரியின் மனைவி என்ற முறையில் அவள் இவ்வித வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டு ஆகத்தான் வேண்டும்.

சாப்பிட்டு முடித்து வீட்டை விட்டு நீங்கி சாலை வழியே சைக்கிளில் போய்க் கொண்டிருக்கும்போதுதான் அவன் திரும்ப அவதூதரைப் பற்றி நினைவுகூர்ந்தான். உடன், தனது மனைவியின் கனவைப் பற்றியும் நினைத்து, தன்னால் சிறையிலடைக்கப்பட்டுள்ள அவதூதருக்கும், அக்கனவிற்கும் ஏதேனும் சம்பந்தமிருக்கக்கூடுமோ என்று எண்ணினான். அவனுக்குக் குழப்பமாயிருந்தது. ஆனால் அதுகுறித்து என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை.

- தொடரும்