அத்தியாயம் 1

196.26k படித்தவர்கள்
140 கருத்துகள்

வீட்டிற்குள் கல்யாணக்கலை கட்டத்துவங்கி இருந்தது. மேகலாவின் அம்மா யாருக்கெல்லாம் பத்திரிகை தபாலில் அனுப்ப வேண்டும், தொலைவாக இருந்தாலும் யாருக்கெல்லாம் நேரில் சென்று வைக்க வேண்டும் என்று பட்டியல் தயாரித்துக்கொண்டிருந்தார். பந்தல் அலங்காரங்களுக்கு, மண்டபத்திற்கு, மலர் மாலைக்கு, உணவுக்கான ஏற்பாடுகளை எல்லாம் மேகலாவின் அண்ணன் செல்வேந்திரன் முன்பணம் தந்து பரபரப்பாக ஏற்பாடு செய்துகொண்டிருந்தான். அவனுக்குத் துணையாக  நண்பர்கள்.

“மேகலா! மேக்கப்க்கு உனக்கு யாரும் தெரிஞ்சவங்க இருக்காங்களா? இல்ல நானே சொல்லிடட்டுமா?” செல்வேந்திரன்

“இல்ல செல்வி! எனக்கு மேக்கப்பே வேண்டாம்.” அண்ணனை செல்வி என்றுதான் அழைப்பாள்.

“ஏன்டி?”

“எந்த கல்யாணத்துலயாவது மேக்கப் போட்ட பொண்ணு அழகா இருந்து பார்த்துருக்கியா? நல்லா இருக்கற முகத்தை அசிங்கமாக்கி விடறதுதான் கல்யாண மேக்கப்போட வேலை.”  

“கொஞ்சம் கலரா தெரிவல்லடி”  

“அப்பிடி கலரா தெரிஞ்சு என்ன செல்வி  சாதிக்க போறோம். நான் இதான்னு சொல்ற உண்மைதான் கல்யாணம். அதுலயே பொய்யா எதுக்கு ஒரு அப்பியரன்ஸ். இருக்கற அழகே போதும்.”  அருகில் இருந்த கண்ணாடியை ஒருமுறை பார்த்துக்கொண்டாள். செல்வேந்திரன் சத்தமாக சிரித்தான். “யாரு? நீங்க? அழகு? ஆமா ஆமா, ரொம்ப அழகுதான். அழகு சொட்டுது. இந்தா கர்ச்சீப், தொடைச்சுக்க. மூஞ்சியப்பாரு வயசான ஓணான் மாதிரி.”  

“ஓணான்னு சொல்லாத. எனக்கு கோபம் வந்துடும். அம்மா பாரும்மா.”  

“ஓணான் ஓணான் ஓணான்!”

ஓங்கி முதுகில் அடித்துவிட்டாள். பதிலுக்கு இவன் அவளின் கைகளை முறுக்கி தரையில் தள்ளி இருவரும் மல்யுத்தம் நடத்திக்கொண்டிருந்தனர். “அம்மா கை ஒடிஞ்சிருச்சு... கை ஒடிஞ்சிருச்சு” என்று மேகலா கத்தவும் செல்வேந்திரன் பயந்து அவளை விடுவித்து விலகினான். இருவருக்கும் இரண்டடி தூரம். மேகலா அவன் மேல் துப்பினாள். த்தூ. அவனும் பதிலுக்கு த்தூ. இருவரும் மாறி மாறி துப்பிச் சண்டையில் ஈடுபட்டிருக்க,

“ஏ வளந்து கெட்ட மாடுகளா. இப்பதான் வீட்டைத் தொடைச்சு விட்டுருக்கேன். துப்பிக்கிட்டு இருக்கீங்க.”  

“ம்மா...”  அவன்தான் மொதல்ல ஆரம்பிச்சான்.

“டேய், அவளே ஒரு மாசத்துல கல்யாணம் முடிச்சு வேற வீட்டுக்குப் போகப்போறா அவகிட்ட ஏன்டா சண்டை போடற.”

“பொய்த்தொலையுது சனியன். எப்படியாவது இவளை இந்த வீட்டை விட்டு தொரத்தணும். அப்பறம்தான் எனக்கு நிம்மதியா இருக்கும். த்தூ...”

“நான் போயிடுவேன்டா. திருப்பி இந்த வீட்டுக்கு வரவே மாட்டேன்.”  

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

சிறிது நேர அமைதிக்கு பிறகு.

“அப்பறம் செல்வி, ஒன்னு மறந்துட்டேன் என் கடைசி ஆச. கல்யாணத்தப்ப இந்த திருநீறு மட்டும் என் பக்கத்துல வராம பார்த்துக்க. தலைலலாம் போட்டு நெத்தில இழுவி பூசி என்னை சாமியார் மாதிரி ஆக்கிருவாங்க. ரோஜா உதிரிப்பூ வாங்கிடு, அத தலைல போட்டு ஆசீர்வாதம் செஞ்சுக்கிடட்டும்.”  

ம்மா இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள். எப்படி எப்படியோ வாழ்ந்திருக்க வேண்டிய பிள்ளைகள், ஆனா, நான் ரொம்ப கஷ்டப்பட விட்டுவிட்டேன். இந்த வயசுக்குள்ள இதுக இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க வேண்டாம் என்று தன்னை நொந்தாள்.   இவர்கள் இருவருக்கும் பதின்ம வயதாக இருக்கும்போது விபத்தில் அப்பா தவறிய பிறகு நொடிந்து போன குடும்பம், மீண்டும் தன்னை மீட்டெடுக்க பத்து வருடங்கள் பிடித்தது. என்ன உதவி வேண்டுமானாலும் கேள் என்று சொல்லிய சொந்தங்கள் தந்த நம்பிக்கை அந்நேரத்து ஆறுதலுக்காக மட்டும்தான் என்பதை அம்மா உணர்ந்தே இருந்தாள். ஒவ்வொரு சொந்தங்களாக தங்களை நிராகரிப்பதை ஏற்றுக்கொண்டாள். 

மங்கள அமங்கல நிகழ்வுகளுக்கு அவர்களை யாரும் மிக முக்கியமாக அழைப்பது குறைந்து போய் ஒருநாள் இல்லாமலே போனது. எதற்கும் அவள் கலங்கவே இல்லை. இதுதான் மனிதர்களின் இயல்பு என்று சமாதானம் கொண்டாள்.  யாரோ, ஒரு நாள் செல்வேந்திரன் சாலையில் தன் சக நண்பனோடு சண்டையிட்டதைப் பார்த்து தகப்பன் இல்லாத பிள்ளை இப்பிடி தறுதலையாதான் வளரும் என்று சொல்லிவிட்டார். அவளுக்கு அது உறுத்தியது. அன்று  இரவெல்லாம் அழுதுகிடந்தாள்.

“இனி சத்தியமாக யார் கூடயும் சண்டைக்கே போகமாட்டேன்மா நீ அழாத.” - செல்வேந்திரன். 

“நா அதுக்கு அழலடா. எப்படி உங்களை வளர்த்தெடுக்க போறேன்னு நினைச்சு அழறேன். சின்ன தப்பு நடந்தாகூட அத பெருசு பண்ணி பேசுவாங்க. எல்லா பிள்ளைகளும் தப்பு செய்யும். ஆனா, நீங்க செய்யிற தப்புக்கு அப்பன் இல்ல அதனாலதான் இப்படின்னு பழி பேசுவாங்க. அதுக்குதான் காத்திருக்காங்க. நாம வீழுறத பார்க்குறதுல அவங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம். எந்த சிரிப்பும் உண்மை கிடையாது எல்லாத்துக்கு பின்னாடியும் ஒரு கோரைப்பல் சிரிப்பு இருக்கும். மத்த பசங்களவிட நீங்க ஜாக்கிரதையா இருக்கணும். அது உங்க ரெண்டுபேர்  சாபம்யா”  என்று சொல்லும்போதே அவள் குரல் தகர்ந்துவிட்டது. ஆற்றொழுக்கின் சுமை சிறிய பிள்ளைகள் மீது அவர்களுக்கு தொடர்பே இல்லாமல் சமூகத்தால் சுமத்தப்படுகிறதே... அதைத் தடுக்கமுடியவில்லையே என்ற ஆதங்கம் கோபம் வருத்தம் எல்லாம் அவளுக்கு அழுகையாய்வந்தது. ."இவர்கள் மத்தியில் நாம நல்லா வாழ்ந்துடணும்டா."

அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு "ம் உம்" கொட்டினாள் மேகலா. வங்கியில் கடன்வாங்கி கல்லூரி முடித்து.இருவரும் வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்ததும்  இந்த சமூகம் பொருட்படுத்தக்கூடிய இடத்தைக் குடும்பம் அடைந்தது. ஊர்மெச்ச மேகலாவின் திருமணத்தை நடத்திட வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. அதை இந்த சமூகத்தை பழிவாங்குவது போல நினைத்துக்கொண்டாள். பெண்பிள்ளையை கரையேற்றி விட்டோம் என்றால் பெரிய நிம்மதி. கடமை முடிந்த நிம்மதி. மகன் செய்த சிறிய தவறுக்கே தகப்பன் இல்லாத பிள்ளை தறுதலை என்று பழித்தார்களே. மகள் காதல், கர்ப்பம் அல்லது ஓடிப்போய்விட்டால் என்ன சொல்வார்கள். எல்லாரும். 

அவள் தன் கணவனைப் பழி சொல்வார்களே என்பதற்காக வருந்தவில்லை, அது அவள் தன் வளர்ப்பின் மீது குறைபட்டுக்கொள்வது. என்ன பொண்ணு வளர்த்துருக்க நீ? ஒரு குரல் அவள் உள்ளுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது. இந்த கேள்வியை வேறு யாரேனும் கேட்டுவிட்டால் அதனை எப்படி எதிர்கொள்வது? வழக்கமாக குடும்பத்தின் கௌரவத்தை பெண்ணின் மீது சுமத்துவார்கள். அதுவே தகப்பன் இல்லாதபோது, பெரிய அழுத்தமாக மேகலாவின் மீது விழுந்தது.

அப்பா மரணிக்கும்போது மேகலாவிற்கு 12 வயது. பூப்பெய்தாத சிறியபெண். பிறகு ஆறுமாதம் கழித்து. பக்கத்து வீட்டு மதியழகன் மாமா மேகலாவை அழைத்து “உங்க அம்மா பணம் கேட்டார்கள். கொண்டு போய் கொடு”  என்று ஒரு வெள்ளை பேப்பரில் சில நூறு ரூபாய் நோட்டுக்கள் வைத்து மடித்துக் கொடுத்தார். வெள்ளை பேப்பரில் ஏதோ எழுதி இருந்தது.

“அம்மா, ஏன்மா அழற? டேய் செல்வி சொல்லுடா. அழ வேண்டாம்னு சொல்லுடா.”  

அம்மா அழுகைக்குத் துணையாக மேகலாவும் சேர்ந்து அழுதாள். மேகலாவை அருகில் இழுத்துக் கட்டிக்கொண்டாள். அம்மாவின் உடல் பதறி அதிர்வதை உணர்ந்தாள்.

“ஏம்மா நடுங்கற?”

“காசு வேண்டாம்ன்னு சொல்லி போயி கொடுத்துட்டு வந்துடு.”  

“அரிசி வாங்கணும்னு சொன்னியேமா?”

“பட்டினியா கிடந்து செத்துடுவோம்டா.”  

“சரிம்மா.”  

பணத்தை திரும்பக் கொடுக்கப் போகும்போது பேப்பரில் எழுதியதை வாசித்த பிறகுதானே அம்மா அழுதாள், அப்படி என்ன எழுதி இருக்கும் என்று பிரித்து வாசித்தாள், ‘குழந்தைகளைத் தூங்க வச்சிட்டு பின்வாசல் கதவை....’

"மேகலா!" அம்மா ஆங்காரமாக கத்தினாள், “வாசல்ல நின்னு என்ன பண்ணிட்டு இருக்க? கொண்டு போயி கொடுத்துட்டு வான்னுதானே சொன்னேன்.”  அவசர அவசரமாக பணத்தை அதே பேப்பரில் பொட்டலம் மடித்து ஓடிப்போய் கொடுத்துவிட்டு வந்தாள்.

இரண்டு நாட்களாக ஒரு வேளை உணவு மட்டுமே குழந்தைகளுக்குத் தர முடிந்தது. மதிய உணவை பள்ளியில் சத்துணவில் சமாளித்துக்கொண்டன பிள்ளைகள். அம்மா இரண்டு நாட்களாக சாப்பிடவே இல்லை. உடலும் முகமும் மனமும் சோர்ந்து போய்விட்டது அவளுக்கு. தற்கொலை செய்துகொள்வது பற்றிகூட ஒரு கணம் யோசித்தாள். நாளைய கவலைகள் இன்றி மான் போல உறங்கிக்கொண்டிருந்தன பிள்ளைகள். மறுநாள் முருகன் என்பவர் அவர்கள் வீட்டுக்கு வந்தார் .

“நான் உங்க வீட்டுக்காரரோட சிநேகிதன். எனக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலைல அவர் பத்தாயிரம் ரூபாய் கடன் கொடுத்து இருந்தார். எதுவும் உறுதிப்பத்திரம் எழுதிக்கொள்ளவில்லை எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையில் தந்த கைமாத்து. அவர் இறந்த பிறகு இந்தப் பணத்தை கொடுக்க வேண்டாம்னு சந்தோஷப்பட்டேன். அவர் தலையை குனிந்துகொண்டார். சந்தோஷம் வேற நிம்மதி வேறல்லமா. அடுத்தவன் பணத்தை வச்சு யாரும் நல்லா வாழ்ந்திட முடியாதும்மா. அநாமத்தா பணம் வருதேன்னு பணத்துக்காக சுயநலமா யோசிச்சேன் இப்பகூட என்னோட நிம்மதிக்குதான் சுயநலமா இந்த பணத்தைத் திருப்பி தரேன். மன்னிச்சுடுமா.”  பணத்தைத் தந்துவிட்டு திரும்பினார்.

“ஐயா!”  

அவள் கண்கள் முழுக்க நன்றி. சொல்வதற்கு மொழியின்றி நின்றாள்

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“இருக்கட்டும்மா. இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு. அதுக்கு நான்தான் நன்றி சொல்லணும்.”

இந்த வாழ்க்கை அப்படிதான் மனிதர்கள் மீது நம்பிக்கைகளை இழக்கும்போது. அப்படி இழக்காதே என்று சொல்ல சிலரை அனுப்பி வைக்கும். ஒரு வாரம் கழித்து மீண்டும் அவர் வந்தார். அம்மாவின் உள்ளுணர்வு விழித்துக்கொண்டது. அறிமுகமற்ற ஆணின் சகவாசம் எப்படியும் காமத்தின் தேடுதலில் வந்து நிற்கும் என்று அவள் தீர்மானமாக நம்பினாள். ஒரு கைம்பெண்ணை அணுகுவது ஆணுக்கு எளிதான தேர்வாக இருக்கும் என்பது அவள் இந்த ஆறுமாத காலத்தில் கொண்ட புரிதல்.

“நான் ஒன்னு சொல்றேன். உங்களுக்கு சரியா வருமான்னு பாருங்க.”  

என்ன கேட்க போகிறாரோ என்ற மிரட்சியுடன்தான் “சொல்லுங்க” என்றாள்.

“தையல் தெரியுமாமா?”  

“தெரியாதுங்க.”  

“கத்துக்குவிங்களா?”

“ம்ம்ம்...”  

“தெரிஞ்சவங்க நைட்டி கம்பெனி ஆரம்பிச்சு இருக்காங்க. துணிய சைஸா கட் செய்து வந்து தந்துடுவாங்க நாம அத சுத்திலும் தச்சு கொடுக்கணும். தலைகாணி உறை தைக்கிற மாதிரி ஈஸிதான். மிஷின், நூல் எல்லாம் அவங்களே கொண்டு வந்து தந்துடுவாங்க. ஒரு நாளுக்கு 100ல இருந்து 150 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம். நான்தான் அதுல கலெக்‌ஷன் ஏஜென்ட். நானே கொண்டு வந்து துணிய கொடுத்துட்டு தச்சத வாங்கிட்டு போயிடுவேன். நிறைய பேர்கிட்ட கேட்டிருக்கேன். உங்க நினைவும் வந்துச்சு. இது உதவின்னு நீங்க எடுத்துக்க வேண்டாம் எனக்கு உங்களால லாபம்... உங்களுக்கு என்னால லாபம். பரஸ்பரம்னு வச்சுக்கலாம்.”  

“சரி”  என்று சம்மதித்து அந்தக் குடும்பத்தின் ஜீவிதம் அதற்குப் பிறகு அதனால்தான் நிகழ்ந்தது.

வீட்டு வாசல் தாண்டி ஒரு நாள்கூட முருகன் உள்ளே வந்ததில்லை. எல்லாமே வாசலோடுதான். அவளுக்கே இது ஒருவித தேவையற்ற தற்காப்புணர்வோ என்று தோன்றியது.

“இத சொல்லலாமான்னு தெரியல. எப்படி சொல்றது நீங்க எப்படி எடுத்துக்குவிங்கன்னு எதுவும் தெரியல. ரெண்டு வருஷமா நீங்க வாசலோடுதான் நின்னுட்டு போறீங்க. வீட்டுக்குள்ள வாங்களேன்...”  

“இருக்கட்டும்மா! எல்லா கண்களும் பார்க்கும் பார்வை ஒரே மாதிரி இருக்கறது இல்லல்ல. நான் வாசலோடு நிற்பதுதான் சரி.”  

நம்பும் மனிதர்களை துரோகிக்கச் செய்து, துரோகிப்பார்களோ என்று சந்தேகம் கொண்ட மனிதர்களை நம்பச் செய்வதுதான் வாழ்வின் அமைவோ என்னவோ.

(தொடரும்...)