அத்தியாயம் 1

554.43k படித்தவர்கள்
141 கருத்துகள்

கதைக்குள் போகும் முன்…

‘ஒன்று ஒன்றாக இருக்கின்ற வரையில் அதைப் புரிந்துகொள்வது கடினம். அதுவே, இரண்டாகிவிட்டால் அதைப் பகுத்து உணர்வது மிகச் சுலபமாகி விடுகிறது.

மானிடர்கள் வாழும் இந்த உலகம் ஒன்றுதான். ஆயினும் இரவு - பகல் என்கின்ற இரண்டாலேயே அது ஜீவனுடன் இயங்குகிறது.

ஒன்றுக்குள் உள்ள அந்த இரண்டுதான் ஓன்றை முற்றிலுமாய் உணர வழிவகை செய்கிறது.

காணும் ஒவ்வொன்றிலும் இன்னொன்று உள்ளது.

நெருப்புக்குள் உஷ்ணம், தண்ணீரில் சிலுசிலுப்பு, பாலுக்குள் வெண்மை என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

இறை உருவிலும் ஒன்றாகி, இறை ‘சிவசக்தி’ என்னும் இரண்டாலேயே அறியப்படுகிறது. இதில் சிவம் என்பது சேதனம். அதாவது, அறிவுப் பொருள். சக்தி என்பது அசேதனம். அதாவது, ஜடப்பொருள். இவை இரண்டும் இணைபிரியாதவை. பிரிக்க முடியாதவையும் கூட… கண்ணுக்குப் புலனாகாத ஒரு அணுத்துகளில் கூட இவை இரண்டும் புரோட்டான், நியூட்ரான்களாக இருப்பதுதான் விந்தை.

எதிலும் இரண்டு இருப்பதை உலகிற்கு உருவப்பாட்டுடன் விளக்க இறை எடுத்த வடிவமே அர்த்தநாரீஸ்வரத் தோற்றம்.

இதில் இடப்பாகம் சக்தியாகிய உமையைச் சேர்ந்தது. பாதாதிகேசம் இந்த வடிவத்தைக் கூர்ந்து கவனித்தால் காமனை எரித்த கண் முதல், காலனை உதைக்கும் கால் வரை இடதாகவே இருக்கிறது.

இதன் சூட்சுமத்தைக் காஞ்சிப் பெரியவர் அற்புதமாக விளக்குகிறார்.

‘இறை சொரூபத்தில் அம்பிகையே ஜனன, மரணங்களிலிருந்து ஜீவனை விடுவிக்கிறவள். சிவனே கூட இயங்கிச் செயல்பட அவளே பெரிதும் தேவைப்படுகிறாள்’ என்கிறார்.

சிவனுக்கே இயக்க சக்தி அவள்தான் என்றாள் மற்ற உயிர்களுக்கெல்லாம் கேட்க வா வேண்டும்?’

*****

ரபரப்புடன் இருந்தது சேலம் பேருந்து நிலையம்.

மதுரைக்கு எந்த பஸ் போகும் என்று விழிகளால் தேடியபடி இருந்தான் தேவநாதன்.

அவன் கைவசம் ஒரு பிரீஃப்கேஸ். இறுக்கமாக அதைப் பற்றிக் கொண்டிருந்தான். கறுப்பு பேன்ட் அணிந்து மேலே வெள்ளைச் சட்டை போட்டிருந்தான். டக் செய்து கொண்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் போலத் தோன்றியது. காலிலும் ஒரு சுமாரான செருப்புதான். வாங்கி ஒரு வருடமாவது ஆகியிருக்க வேண்டும் என்பது போல் தேய்ந்திருந்தது. முகத்திலும் ஒரு வாரத்துத் தாடை முடிகள். பார்வையில் கூட ஒருவித சோகம்.

தெரிந்தவர்கள் யாராவது பார்த்தால் ‘என்னடா தேவா… நீயா இப்படி இருக்கே?’ என்று கேட்டு வருத்தப்பட ஆரம்பித்து விடுவார்கள். அவனுக்கும் யாராவது பார்த்து விடுவார்களோ என்கிற மாதிரி ஒரு குறுகுறுப்பு இருந்தது.

பிரீஃப்கேசுடன் சுற்றிச்சுற்றி வந்து இறுதியாக மதுரை செல்லும் ஒரு பஸ்சைக் கண்டுபிடித்து அதில் ஏறி அமர்ந்தான்.

அடுத்த ஐந்து மணி நேரத்தை நினைக்க சற்று மலைப்பாக இருந்தது. காலை நீட்டி மடக்கக் கூட முடியாதபடி அமர்ந்தே கிடக்க வேண்டும். நினைக்கும்போதே எரிச்சலாக வந்தது.

‘மிஸ்டர் தேவநாதன், உங்களுக்கு மதுரைக்கு ட்ரான்ஸ்ஃபர்’ என்று எப்பொழுது அவனது நிறுவனத்தில் கூப்பிட்டுச் சொன்னார்களோ அப்பொழுதே அந்த எரிச்சல் ஆரம்பமாகிவிட்டது. பிறந்து வளர்ந்தது முதல் படித்தது, பாடியது என்று எல்லாமே சேலத்தில் அமைந்துவிட்டவனை ஒரு ட்ரான்ஸ்ஃபர் பிரிக்க முன்வந்து விட்டது. மதுரை எப்படி இருக்குமோ?

நிச்சயம் சேலம் போல மாம்பழம் கிடைக்காது. பட்டு வேட்டி கிடைக்காது, இத்தனை சினிமா தியேட்டர்கள் சத்தியமாய் வேறு எந்த ஊரிலும் இருக்காது. க்ளைமேட்டிலும் கோவை, சேலம்தான் தமிழ்நாட்டிலேயே சற்று குளிர்ச்சியான நகரங்கள். மதுரையில் சூரியன் சுட்டு வறுத்து விடுவானாம். நண்பர்கள் சிலர் சொன்னதெல்லாம் அவனுக்குள் நெளிந்து கொண்டிருந்தது. ஒருவர் மட்டும் அவனைப் பார்த்து பொறாமைப்பட்டார்.

“தேவா… நீ போறது மதுரைக்கு இல்ல. மீனாட்சிப் பட்டணத்துக்கு… கொடுத்து வெச்சவன் நீ. எதாவது சின்ன சலனம்னாலும் அவ சன்னதிக்குப் போய் மனமுருக சொல்லிட்டு வந்துட்டாப் போதும். அப்புறம் அவ பார்த்துப்பா” என்று கூறியிருந்தார்.

அவன் அக்கா வனிதா கூட “மதுரைக்குப் போய் நல்ல வீடா பார்த்துட்டு, திரும்பி வரும்போது மீனாட்சி குங்குமம் வாங்கிட்டு வாடா. அதுலயும் தாழம்பூ குங்குமம் அப்படி கமக்குமாம்ல?” என்று சொல்லி அனுப்பியிருந்தாள்.

சகலத்தையும் அசைபோட்டபடியே அமர்ந்திருந்தான் தேவநாதன். ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட் ஆக இருக்கிறான். அந்த நிறுவனத்தின் ஹெட் ஆபீஸ் மதுரையில் இருக்கிறது. ஹெட் ஆபீசில் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்டில் இருந்த அசிஸ்டென்ட் ஒருவர் எழுதிக் கொடுக்கவும் அந்த சீட்டுக்குத் தேவநாதனைப் போடும்படி ஆகிவிட்டது. ஒரு கிரேட் கூட கொடுத்து சம்பளத்திலும் ஒரு அறுநூற்றுச் சில்லரையை ஏற்றிக்காட்டி அதன் பிறகுதான் மதுரைக்கு அவனைப் போகச் சொல்லியிருக்கிறார்கள்.

மாட்டேன். முடியாது என்றெல்லாம் அடம்பிடிக்க முடியாது. ‘வி.ஆர்.எஸ்.’ பூதம் ஒன்று ஆறு மாதத்திற்கு ஒருமுறை விஸ்வரூபம் எடுத்தபடி இருக்கிறது. அதில் தேவநாதனை மாட்டி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.

ராஜா வீட்டு கன்னுக்குட்டிகளாய் மதர்ப்புடன் திரிந்துகொண்டிருந்த அரசு ஊழியர்களாலேயே கோரிக்கை, ஸ்டிரைக் என்று வாயைத் திறக்க முடியவில்லை.

ஆப்புகள் அப்படி வைக்கப்பட்டிருக்கின்றன.

இதில் தனியார் நிறுவனத்தில் இருந்துகொண்டு எதைச் சாதித்துவிட முடியும்?

ஆற்றுநீரில் விழுந்த காய்ந்த சருகு மாதிரிதான். அதன் போக்கில் போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான்.

பெருமூச்சு வெளிப்பட்டது தேவநாதனிடம்.

அதேசமயம் ‘எக்ஸ்க்யூஸ் மீ தம்பி’ என்று ஒரு குரல் திரும்பினான். ஒருவர், அவன் பக்கத்தில் அமர இடம்கேட்டு நின்று கொண்டிருந்தார். அந்த இடத்தில் அவன் பிரீஃப் கேஸ் இருந்தது.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

தேவநாதனும் அந்த பிரீஃப் கேஸைக் கையில் எடுத்துக்கொண்டான். கூடவே ‘சாரி சார்… நீங்க உக்காருங்க’ என்று சற்று ஒதுங்கி அமர்ந்தான். தேவநாதன் சாரி சொன்னவிதம், அந்த பரிதாபமான முகம் எல்லாமே அவரைக் கவர்ந்துவிட்டது.

சிலரைக் கவர சில நொடிகள் போதுமானது என்பது உண்மைதான். சிரித்தபடியே அவரும் அவன் அருகே அமர்ந்தார்.

யார் செய்த புண்ணியமோ முன்னும் பின்னும் அவ்வளவாய் கூட்டமில்லை. ஸ்பீக்கர் வைத்து கண்ட பாடல்களைப் போட்டு அந்த பஸ் டிரைவரும் காதை ரணமாக்கவில்லை. ஓரளவு நிசப்தமாக இருந்தது அந்தச் சூழல். அருகில் அமர்ந்தவருக்கு ஒரு அறுபது வயதிருக்கலாம். காவி வேட்டியும் ஜிப்பாவும் அணிந்திருந்தார். நெற்றியில் நல்ல பருமனில் குங்குமப் பொட்டு. தலைமுடியிலும் தாடியிலும் ஒரு கொக்குக் கூட்டமே தெரிந்தது. அவ்வளவு வெண்மை.

தேவநாதனும் அவரைப் பார்த்து சற்று மதிப்பாகவும், மரியாதையாகவும்தான் உணர்ந்தான். அவரிடம் இருந்து வந்த கும்மென்ற தாழம்பூ வாசம், தேவநாதனை அப்படியே கிறக்கியது. ஆழ்ந்து சுவாசித்து அதை அனுபவித்தான். அவரும் அதை கவனித்தார்.

நடுவில் கண்டக்டர் வந்து, ‘டிக்கெட்’ என்றதும் மதுரை என்று சொல்லி டிக்கெட் வாங்கிக்கொண்டான். அவரும் மதுரைக்குத்தான் டிக்கெட் வாங்கினார்.

கண்டக்டர் விலகவும், “தம்பிக்கு மதுரைல எந்தப் பக்கம்?” என்று ஆரம்பித்தார்.

“இல்லீங்க… நான் மதுரைக்குப் புதுசு. இனிமேதான் வீடு பாக்கணும்” என்றான் அவனும்.

“அப்ப இனிதான் மதுரைவாசி ஆகப் போறீங்கன்னு சொல்லுங்க.”

“ஆமாங்கய்யா… நீங்க?”

“எனக்கு மதுரைதான்.”

“மதுரைல எத்தனை வருஷமா இருக்கீங்க?”

“அது இருக்கேன் ஒரு ஏழெட்டு ஜென்மமா!”-அவர் பதிலில் அவனுக்குள் குழப்பம் மேலிட்டது.

அது அவனது நெற்றிப் பரப்பில் ரேகை மடிப்பில் நன்கு தெரிந்தது. அவரே அவன் குழம்புவது புரிந்து சிரித்தபடி பேச்சைத் தொடர்ந்தார்.

“என்ன தம்பி… ஏதோ சில வருஷங்களா இருக்கேன்னு சொல்லாம ஏழுட்டு ஜென்மம்னு சொன்ன உடனே குழம்பிட்டீங்களா?”

அவன் ஆமோதிப்பாக சிறிய அளவில் சிரித்தான். அந்த பஸ்சும் உதறிக்கொண்டு புறப்பட ஆரம்பித்தது. “நான் ஒரு கிரஹஸ்த சன்யாசி. பொறந்து வளர்ந்ததே மதுரைன்னாலும் பொறக்கறதுக்கு முந்தி எங்க இருந்தேன், என்ன செய்துகிட்டிருந்தேன்னும் நான் தெரிஞ்சுகிட்டேன். அப்பவும் என்னடான்னா நான் மதுரைலதான் திரிஞ்சிகிட்டிருந்துருக்கேன். அட மதுரையைச் சுத்தற கழுதைதான் மதுரையைத் தாண்டிப் போக விரும்பாதுன்னா இந்தக் கட்டையும் அப்படித்தாங்கறது பொறவுதான் புரிஞ்சிச்சு.”

-அவர் தாடியை நீவியபடியே சொன்னது இந்த முறை அவனைக் குழப்பவில்லை. அவனுக்குப் புரிந்துவிட்டது. இந்த மனிதர் ஒன்று மறை கழண்டவராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் போலிச் சாமி வர்க்கமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தவன். அதன்பின் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டுவர ஆரம்பித்தான். அவரும் விடுவதாயில்லை.

“என்ன தம்பி… திரும்பிட்டீங்க. நான் எப்படிப்பட்டவங்கற சந்தேகமா? மறை கழண்டவனா இல்ல, போலிச் சாமியார் வர்க்கமான்னு யோசிக்கற மாதிரித் தெரியுதே…?”

அவர் அவன் மனதை ஏதோ புத்தகத்தைத் திறந்து படித்த மாதிரி சொன்னது அவனைக் கொஞ்சம் நெருடியது.

“அது… அது…”

“சும்மா நினைக்கறத பேசுங்க தம்பி. அஞ்சுமணி நேரம் பொழுது போகணுமில்ல…”

“ஆமாங்க… நான் உங்களை எந்த லிஸ்டுல எடுத்துக்கறதுன்னு தெரியாம நீங்க சொன்ன மாதிரி கொஞ்சம் குழம்பிட்டேன்.”

“ஏன் ஜென்மங்கள்ல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”

“அடுத்த நிமிஷம் எப்படி இருப்போம்னு தெரியாது. இதுல அறிவுக்கு எட்டாத கற்பனையான ஜென்மங்கள் பத்தியெல்லாம் நினைச்சுப் பாக்கறதே வேஸ்ட்டுங்கறது என் எண்ணங்க…”

“நீங்க என்ன பண்ணுவீங்க… படிச்ச படிப்பும் பார்த்த மனுஷங்களும் உங்களுக்குள்ள ஏற்படுத்தின தாக்கம் உங்களை இப்படிப் பேச வைக்குது…”

“நீங்க என்ன சொல்றீங்க. அதெல்லாம் உண்மைங்கறீங்களா?”

“ஆமா நீங்க எப்ப பொறந்தீங்க?”

“1975-ல!”

“அப்ப 74-ல எங்க இருந்தீங்க?”

“பொறந்ததே 75-ல தான். இதுல 74-ல எங்க இருந்தேன்னா என்னங்க கேள்வி இது?”

“இல்லாத ஒண்ணு எப்படிப்பா வர முடியும்?”

“அப்படின்னா… நான் அப்பவும் இருந்தேன்னு சொல்ல வர்றீங்களா?”

“எதுவும் புதுசா உருவாகறது கிடையாது. இந்தப் பூமியில புதுசு புதுசா யார் எதைக் கண்டுபிடிச்சாலும் அது இங்க ஏற்கனவே இருக்கற ஒண்ணாதான் இருக்க முடியும். இல்லாத ஒண்ணு இருக்க வழியே கிடையாது.”

“அவர் பதில் அவனைச் சளைத்தது. அவர் போரடிக்க ஆரம்பித்து விட்ட மாதிரி உணர்ந்தான்.

“சாரிங்க… உங்க வேதாந்தத்துல எனக்கு இண்ட்ரஸ்ட் கிடையாது. அரைச்ச மாவையே அரைப்பீங்க. சிம்பிளா சொல்லிக்கறேனே… நான் கடவுள் நம்பிக்கை எல்லாம் பெருசா இல்லாத ஒருத்தன்.

உண்மையும் நேர்மையும்தான் என் வரைல கடவுள். நீங்க கொஞ்சம் வேற விஷயங்கள் பேசறீங்களா?”

தேவநாதன் கொஞ்சம் போல சூடானான். அவர் முகமும் உடனே அதன் காரணமாக சற்று வாடிவிட்டது. மலங்க மலங்க பார்த்துவிட்டு அவனிடம் அதன்பின் எதுவும் பேசாமல் தன் தோளில் தொங்கியபடி இருந்த ஜோல்னா பையில் இருந்து தடிமனான ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தார்.

தேவி மகாத்மியம் என்கிற அதன் அட்டையைத் தேவநாதனும் கவனித்தான்.

“அப்பாடா… அஞ்சு மணி நேரம் இனி இந்த ஆள் வாயே திறக்க மாட்டார்” என்று நினைத்துக் கொண்டான். அவன் பார்வை ஓடும் பஸ்சுக்குள் சற்று முன்னும் பின்னும் சென்றது.

முன்வரிசையில் ஒரு பெண்! அவள் கூந்தலில் அப்பொழுது பறித்தாற் போன்ற ஒரே ஒரு ரோஜா! கூந்தலும் மெதுமெதுவென்று கரும்பட்டாட்டம் வெகுவாக  நீண்டு பின் சாய்மானத்தின் பின்னே ஓடி தேவநாதனின் கால்முட்டியைத் தொட்டுப்பின் தேங்கி பரவியிருந்தது.

பக்கத்திலிருப்பவர் படிக்கும் தேவிமகாத்மியத்தை அவன் நேரிலேயே அனுபவிக்கிற மாதிரி இருந்தது.

அவனது இருபத்தி எட்டு வயது வாலிபத்திடம் நிறையவே கற்பனைகளும், கிறுக்குகளும் இருந்ததால் அவள் எழுந்து அந்தக் கூந்தல் விலகிவிடக் கூடாதே என்றெல்லாம் மனதுக்குள் நினைத்தான். மெல்ல திருட்டுத்தனமாக அதை வருடியும் கொடுத்தான். கூந்தலே இவ்வளவு அழகாக இருக்கிறதே இவளது முகம் எவ்வளவு அழகாக இருக்கும் என்று அவன் யூகிக்கும் முன் அவளே திரும்பினாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ஐய்யோ… நிலா ஒன்று திரும்பியது போல் இருந்தது. அந்த நிலாவும் பேசியது.

‘சாரி… வெரி சாரி…’ என்றபடி கூந்தலை இழுத்துதன் முன் மார்பின்மேல் விட்டுக்கொண்டாள் அவள்.

போதும்… அந்த ஒருசில நொடிகள் போதும். அவனுக்கு மிகக் கிறக்கமாக இருந்தது. டிரான்ஸ்பர் வருத்தம், குடும்ப அழுத்தம் எல்லாமே இலவம் பஞ்சாகிவிட்டது.

அவள் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி தென்பட்டது. கைகளிலும் கலகலவென்று தங்க வளையல்கள்.

புடவையும், ரவிக்கையும் மைசூர் சில்க்சில்! பின் கழுத்தும், அதற்குக் கீழான முதுகும் பொன்னிறத்தில் கோதுமை அல்வா நெய் மினுமினுப்போடு கிளறிக் கொட்டினது போல தென்பட்டு, அவள் நிச்சயம் படித்த பெரிய குடும்பத்துப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்றது.

அதை ஆமோதிக்கிற மாதிரி அவளும் அவளது ஹேண்ட் பேக்கில் சிணுங்கிய செல்ஃபோனை எடுத்துச் சங்குப்பூ போன்ற காதருகே வைத்து “ஹாய் அனி… நான் திவ்யாதான் பேசறேன்” என்றாள். “ஓ… வெரி க்யூட்… எக்சலன்ட்! நான் மதுரைக்குத்தான் போய்கிட்டிருக்கேன். நகர்ல இருக்கற எங்க வீட்டுக்குத்தான் போறேன். அங்க லேண்ட் லைன்ல கூப்டு… நம்பரை நோட் பண்ணிக்க…” என்று அவள் திருவாய் மலர்ந்ததெல்லாம் அவனுக்காகவே போல தோன்றியது. அவன் அவள் பெயரையும், நம்பரையும் மனதுக்குள் குறித்துக்கொண்டான். அந்தப் பெரியவர் நடுவில் அவன் கிறங்கிப்போய் கிடப்பதைக் கவனித்தார்.

அவள் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

“அனி… உனக்கு என் கல்யாணப் பத்திரிகை வந்துதா?”

அவளது கேள்வி இப்பொழுது அவன் இதயத்தில் ஒரு கிள்ளு கிள்ளியது. அடுத்த நொடி இது கைக்கு மட்டுமே எட்டிய பழம் என்று நினைத்துக் கொண்டான்.

அதிகபட்சம் ஒரு பத்து நிமிட நேரம் கூட ஆகியிருக்காது. அதற்குள் ஒரு உறவு ஏற்பட்டு பின், அது பிரிந்து  இல்லாமலும் போய்விட்ட ஒருவித பாரம் அவன் நெஞ்சை அழுத்தும்போது அந்தப் பெரியவர் அவனைத் திரும்ப அழைத்தார்.

“தம்பி…”

-அவனும் திரும்பினான்.

“நான் இப்ப ஒண்ணு சொல்வேன். ஆனா, நீங்க சிரிப்பீங்க” என்றார் அவர்.

“பரவால்ல சொல்லுங்க…”

“நீங்க பெரிய ஆளா ஆகப்போறீங்க… அந்த மீனாட்சி உங்களை அப்படி ஆக்கப் போறா. அதுக்காகத்தான் நீங்க மதுரைக்கே போறீங்க. உங்களுக்குப் பிறந்த இடத்துல யோகமில்ல… இடம் மாறினாதான் யோகம். அந்த யோகம் வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சு. உங்க வரைல எல்லாமே மாறப் போகுது…”

-அவர் சொல்லிவிட்டு கண் சிமிட்டினார்.

“நீங்க சாமியார் கம் ஜோசியரும் கூடவா. இதுக்கு நான் எவ்வளவு தரணும்?”

-அவனிடம் துளியும் நம்பிக்கையற்ற பதில் கிண்டல்.

“இருங்க, முக்கியமான விஷயத்தையே இனிமேதானே சொல்லப் போறேன்.”

“என்ன… ஒரு பெரிய பாவம் தடையா இருக்கு, பரிகாரம் பண்ணிட்டா சரியாயிடும். அதுக்கு ஒரு ஆயிரத்தெட்டு ரூவா ஆகுமா?”

-அவன் கிண்டலாக கேட்க அவர் பதிலுக்குச் சிரித்தார்.

“அதானே… வேறென்ன சொல்லப் போறீங்க. ஒண்ணு ஆயிரத்தெட்டுன்னுவீங்க, இல்லாட்டி நூத்தி எட்டும்பீங்க. இல்லை ஐநூத்தி ஒண்ணும்பீங்க.

படிச்சு பட்டம் வாங்கி ஆபீசுக்குப் போய் உழைச்சு சம்பாதிக்கறது ஒரு வகைன்னா உங்கள மாதிரி இப்படி அருள் வாக்குங்கற பேர்ல புளுகிப் பொழைக்கறது ஒருவகை.”

அவன் மெல்ல தன் சிந்தனை எப்படிப்பட்டது என்று சொல்ல ஆரம்பிக்க அவர் அதற்கும் சிரித்துவிட்டு பின் மெல்ல வாயைத் திறந்தார்.

“தப்பா புரிஞ்சுகிட்டு பேசறீங்க. நான் குபேரனுக்கே கடன் கொடுக்கற அளவு செல்வந்தன். பாக்கறீங்களா?"

-அவர் தன் ஜோல்னா பையைத் தேவநாதன் எதிரே திறந்து காட்டினார். உள்ளே கட்டுக் கட்டாய் ரூபாய் நோட்டுகள்.

அவனுக்கும் கண்ணில் மின்னல் இறங்கினது போல் இருந்தது.

“அவசரப்படறீங்களே… கொஞ்சம் நான் சொல்றதையும் கவனமா கேட்டுக்குங்க. காரணமில்லாம இங்க நீங்களும் நானும் சந்திச்சுக்கல. அதப் புரிஞ்சுக்கோங்க. காரணமில்லாம ஒரு காக்கா கூட கரையாது” என்றவர் முன் வரிசையில் அமர்ந்திருக்கும் ரோஜாப்பூ கூந்தல் பெண்ணைப் பார்த்தபடியே சொன்னார்.

“இந்த மகாலட்சுமியதான் நீங்க இன்னும் ஒருவாரத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க!”

அவனுக்கு அடுத்த நொடி மனது சிலீர் என்று ஆனது.

(தொடரும்...)