அத்தியாயம் 1

74.3k படித்தவர்கள்
19 கருத்துகள்

முன்குறிப்பு: இந்நாவலில் வரும் மேற்கோள்கள், நகுலனின் ‘அந்த மஞ்சள் நிறப் பூனை’, ‘நகுலன் கவிதைகள்’, நாகார்ஜுனரின் ‘முலமத்யமகாகாரிகா’ உள்ளிட்ட நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

“கண்கள் முகத்தில் இல்லை, மண்டையின் பின்தான் இருக்கின்றன - இருந்திருக்கின்றன.”

“நான்
நிழலானேன்;
நான் ஒரு ரோகியானேன்.”

ததாகதனின் நாட்குறிப்பிலிருந்து

“அந்த வழக்கில், நான் 70 நாட்கள் தீவிரமாகச் செயல்பட்டேன். விசாரணைக்குத் தலைமை தாங்கி முன்னெடுத்துச் சென்றேன். 70 என்றால் 5-ஐ 14-ஆல் பெருக்கும்போது வருவது. குற்றத்தின் ஆணிவேர் வரை நாங்கள் சென்று கண்டறிந்தோம். அதற்கு மேல் என்ன ஆனது என்பதே இக்கதை. சில குற்றங்கள் முடிவற்றவை. ஏனென்றால், அவை தோன்றிய சூழல் ஆறாத ஒரு ரணமாக சமூகத்தில், அரசியலில், நடைமுறையில் தொடர்ந்து இருக்கும். அதன் மீது கட்டு போட்டு மறைத்திருப்போம். புண்ணைக் கிளறுவதை எந்தச் சமூக அமைப்பும் அனுமதிக்காது. அது, ஒரு சமூகத்தின் ஆன்மாவைக் கேள்விக்குள்ளாக்கும்; நிறைய பேரின் நிம்மதியைக் கெடுக்கும்; அதிகாரத்தின் ஆணிவேரையே அசைக்கும் என்பதால், ஒரு புலன் விசாரணை முடிவுற அதன் பார்வையாளர்களான மக்கள்திரள், அவர்களின் பிரதிநிதிகளான ஆட்சியாளர்கள், அவர்களுடைய வேலையாட்களான அதிகார வர்க்கம், அவர்களுக்குக் கீழ் உள்ள ஊடகங்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதைவிட முக்கியமானது, ‘குற்றம் எங்கிருந்து துவங்குகிறது?’ எனும் கேள்வி.

மனிதர்கள் இடையே பல கதவுகள் உள்ளன. ஒவ்வொன்றுமே தம்மைக் குற்றத்திலிருந்து பாதுகாப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் நிஜத்தில், இந்தக் கதவுகளே அவர்களைக் குற்றத்துடன் பிணைத்து வைக்கின்றன. இந்தக் கதவுகளே உண்மையைத் தரிசிக்காமல் தடுக்கின்றன. இந்தக் கதவுகளே ஓர் ஆன்மீக நெருக்கடியிலிருந்தும் அவர்களைத் தடுக்கின்றன. அழகான கட்டுக்கு ஒரு சீழ்வழியும் புண், அதுதான் இந்தச் சமூக மனம். அதனாலே சொல்கிறேன். இந்தக் கதவுகள் ஒருநாள் உடைக்கப்பட வேண்டும். அன்றுதான் பிறரைத் துன்புறுத்தாமல், அழிக்காமல், அடிக்கொரு தரம் எல்லாப் பிரச்சினைகளும் அடுத்தவர்களால்தான் என நம்பாமல், சுயவெறுப்பை அடுத்தவர்கள் மீதான வெறுப்பாக மாற்றாமல், புண்ணை மேலும் மேலும் அழுகவைத்து, நகரத்தின் வாயிலை நோக்கி ஒவ்வொரு நாளும் ஓர் அடி எடுத்து வைக்காமல் சுதந்திரமான நியாயமான ஒரு வாழ்க்கை நமக்கு சாத்தியமாகும்.

நான் சொல்வது அபத்தமாக, பூடகமாக, குழப்பமாக உங்களுக்குத் தோன்றலாம். நீங்கள் ஒரு மரபாளர் என்றால், குற்றமும் ஒரு பாவச்செயலே. அது ஒரு சங்கிலியாகத் தொடர்ந்து ஒருவரைக் கட்டிப்போடும் என நினைக்கலாம். ஒழுக்கவாதிக்கு, குற்றம் என்பது ஒருவருடைய மனப் பிறழ்வின் வெளிப்பாடு. ஒரு மார்க்ஸியர், ‘குற்றம் என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வால் தோற்றுவிக்கப்படும் சமூக இயல்பு, தவிர்க்க முடியா செயல்’ என்று கூறுவார். ஒரு காவல் அதிகாரிக்கு, குற்றம் என்றால் சோறு. பொதுமக்களுக்கு, குற்றம் என்றால் அச்சம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்தக் கருத்துகளை முழுக்க நிராகரிக்க மாட்டேன் என்றாலும், குற்றம் என்பது அடிப்படையில் ஒரு கதவு. அந்தக் கதவை உடைக்க முடியாதவர் எப்போதும் குற்றத்தின் வெகு அருகிலே நின்றுகொண்டிருக்கிறார்.

இந்த வழக்கிலிருந்து நான் கற்றுக்கொண்டது அதுமட்டுமே.

நான் இதை எழுதி முடித்துவிட்டு, என் ‘ஹீரோ’ பேனாவின் முனையை உடைத்தேன். இந்தக் கடிதத்தையும் நான் அதுவரையில் வழக்கின் போக்கையும், அதில் சேகரித்த தகவல்கள், ஆவணங்களை உள்ளடக்கிய குறிப்பேடுகளை, கோப்புகளைத் தரையில் இட்டு, அதில் சிறிது பெட்ரோலை ஊற்றி ஒரு தீக்குச்சியால் உயிர்கொடுக்கிறேன். எல்லாச் சொற்களின் சின்னச்சின்ன ஆன்மாக்களும் சேர்ந்து ஒரு பரமாத்மனமாகக் கிளர்ந்து எழுகின்றன. நெருப்பு என்னை நோக்கி எம்பி எம்பி வந்துவிட்டு, அடங்கி அமைதியாக எரிகிறது.

அவர்கள் இதோ என்னை அழைத்துப்போக வந்துவிட்டார்கள். நான் இனி எந்த ஆவணங்கள், சான்றுகளின் துணையும் இன்றி இந்த வழக்கைப் பற்றி என் நினைவிலிருந்தே உங்களிடம் பேசப்போகிறேன். அதனாலே அதில் நிறைய பொய்களும் உண்மையுடன் கலந்திருக்கலாம், தர்க்கப் பிழைகள் இருக்கலாம். நான் கடைசிக் கதவு வரை போய்ச் சேர்வேனோ எனத் தெரியவில்லை. இது ஒரு முடிவற்ற துப்பறியும் கதையாகக்கூட இருக்கலாம். ஆனால், இந்தக் கதவுகளை ஒவ்வொன்றாக உடைக்கும் வரை நிறுத்த மாட்டேன் எனும் உறுதியிலிருந்து நான் சற்றும் பிசக மாட்டேன். என் உறுதி மீது உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

என்னை அழைத்துச் செல்பவர்களின் காலடி சப்தங்கள் என்னை நெருங்குகின்றன. வந்துவிட்டார்கள். நான் எனக்குள் எண்ணிக்கொள்கிறேன். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து….

அந்தப் பழைய மரக்கதவு, கோபமான ஓர் உறுமலுடன் மெள்ளத் திறக்கிறது.”

***

ஓர் எழுத்தாளனின் நாட்குறிப்பிலிருந்து...

தாரா கொல்லப்பட்டு வழக்கு விசாரணை உண்மையிலிருந்து விலகி விலகிப் போய்க்கொண்டிருந்த காலத்தில், ஒரு குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரியாக நான் செய்த ஒரு பிழைக்காகவும், சிலர் தாம் செய்த பெரிய குற்றங்களிலிருந்து தப்பிக்க வைக்கப்படும் நோக்கிலும் பலிகடா ஆக்கப்பட்டு, தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்தேன். வேலைநீக்கம் செய்யப்படுவேன் எனும் நிலையில் நீதி கேட்டு வழக்காடு மன்றம் சென்று நீதிமன்ற வாயில்களிலும் வராந்தாக்களிலும் அலைந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த அரிய வாய்ப்பின் கதவு திறந்தது. எல்லாம் சரியாகிவந்தால் நான் என் வேலைக்காக வருடக்கணக்கில் போராடத் தேவையில்லாமல் விரைவில் மீளர்த்தப்படலாம். மண்ணில் கிடந்து கொஞ்சம் சுவாசத்துக்காகத் துள்ளிக்கொண்டிருந்த மீனை யாரோ நீரில் போட்டதுபோல இருந்தது. ஆசுவாசமாக மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டேன். அந்தக் கணம் நான் இந்த வழக்கின் கனபரிமாணங்களைப் பற்றியோ, சமூக அரசியல் பின்னணி, அதனால் என் வாழ்வில் ஏற்படப்போகும் நெருக்கடிகள் பற்றியோ யோசிக்கவில்லை. அந்த நேரம் என்னைக் காப்பாற்றிட கரம் நீட்டும் ஒரே அதிகார மையமும் என் சாதிக்காரருமான எஸ்.பி. சாரை சந்திக்கச் சென்றிருந்தேன்.

அவருடைய அறை, முன்பு பார்த்ததைப் போன்றே இருந்தது. அவரது நாற்காலிக்கு மேலே சுவரில் ஆளுங்கட்சி நிறுவனரின் வண்ணப் புகைப்படம் தொங்கியது. மேஜையில் சிறிய தேசியக்கொடி. அவரது பெயர்ப்பலகையின் கீழ் ‘வாய்மையே வெல்லும்’ எனச் சிறியதாகப் பொறிக்கப்பட்டிருந்தது. சட்டைப் பாக்கெட்டில் அப்போதைய முதல்வரின் (ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போது அதுவும் மாறும்) படம் இருந்தது. எனக்கு நடந்தது அத்தனையுமே கனவு என்பதுபோல அந்த வழக்கின் கோப்புகளை என்னிடம் நீட்டினார். 

“இதுவரை நடந்தது அத்தனையையும் இதற்கு முன் தெரிந்துவைத்திருப்பாய்.” 

“ஆமாம் சார்.” 

“நெனைச்சேன். நீ எங்கே இருந்தாலும் போலீஸ்காரன்தானே, அது மாறவா போகுது. டீம் மெம்பர்ஸை உங்கிட்ட அப்டேட் பண்ணச் சொல்றேன். ஏற்கெனவே விசாரணை நடந்துக்கிட்டிருக்கிற விதம் எனக்கு திருப்தியில்ல. இந்த வழக்கை கிளீனாக எந்த சந்தேகமும் இல்லாம முடித்துவைக்கணும். கிளீனானா நான் என்ன சொல்றேன்னு புரியுதில்ல?”

தலையசைத்தேன். என்னுடைய பொறுப்புகள், அதிகாரம் குறித்து விளக்கினார். 

“நீ நேரடியா எனக்கு ரிப்போர்ட் பண்ணு. ஒரு பேரலல் இன்வெஸ்டிகேஷன்னு வெச்சுக்கோ.” 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

உடனடியாக வேலையில் சேர்வதில் உள்ள நடைமுறைத் தாமதங்களைக் கணக்கில்கொண்டு அப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாகச் சொன்னார். என் மீது அவருக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை உள்ளது! “முழுமையாக” என்றார். அப்போது அவரது முகம் கடுமையாக இருந்தது. 

“நம்பிக்கைன்னா அது அப்பப்போ மாறுவதுதானே? ஆங், என்ன சொல்றே?” அவர் ஒரு சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்திக்கொண்டார். அவர் புகைக்க மாட்டார். ஆனால், உதட்டில் அதை வைத்து எடுத்து வைத்துக்கொள்வார். ஒரு பொம்மைக் கடையில் தான் வாங்க முடியாத ஒன்றைக் கையில் வைத்திருக்கும் குழந்தையைப் போல. ஒரு காலத்தில் மிகக் கடுமையான ஸ்மோக்கராக இருந்து, புற்றுநோயின் துவக்கக் கட்டத்தில் டி-அடிக்ஷன் சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சைக்குப் பின் மீண்டுவந்தவர் உடல் இளைத்து, கண்களில் ஒரு புதிய ஒளியுடன், வாழ்க்கை குறித்த ஒரு புதிய தீர்மானத்துடன் வந்தார்.

“நீ வழக்கை நடத்துகிற விதம், இந்த வழக்குல நடக்கப்போகிற பின்னணி மாற்றங்கள், நீ எந்த அளவுக்கு நேர்மையாகவும் சமயோஜிதமாகவும் இருக்கப்போகிறாய்... இப்படி பல விஷயங்கள். அந்தக் கட்டத்தில் எது சரியோ அதைச் செய்பவன் நான் எனத் தெரியும் இல்லையா? நீ எப்படி எடுத்துக்கொண்டாலும் கவலைப்பட மாட்டேன். எப்படியென்றாலும் நான் உன்னிடம் வெளிப்படையாக இருப்பேன். உன்னைப் பயன்படுத்தி ஏமாற்றித் தூக்கி வீச மாட்டேன்.”

“எனக்குத் தெரியும் சார்.” 

“உனக்கு இது முன்கூட்டியே தெரியும் இல்லியா? நான் உன்னிடம் ஒரு மாற்று விசாரணைக்குக் கொடுப்பேன் என.”

“அப்படி நடக்கலாம் எனத் தோணியது சார்.” 

“ம்ம்ம். ஏனென்றும் உனக்குத் தெரிஞ்சிருக்கும். டிபார்ட்மென்டுக்குள் கரைவேட்டிகளுடைய தலையீடு. ஒரு டீம் எனக்கு வேலை செஞ்சிட்டே நான் விரும்பாத வகையிலும் வழக்கைத் திசைமாற்றிக்கொண்டு போனாங்க.” 

அவர் ரிப்போர்ட் பண்ணுவது அவருடைய சாதிக்கார ஐ.ஜி.யிடம். ஐ.ஜி. வேலை செய்வது அவரது ஊர்க்காரனான அமைச்சருக்காக என்றால், அவர் நியமித்த அணியினர் கட்சியின் இன்னோர் அதிகார மையத்திடம் விசுவாசம் காட்டினர். தகவல்கள் வெளியே கசிந்து அவற்றில் சில ஊடகங்கள் வழி வெளிப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தின. கட்சிக்குள் முரண்பாடுகள் முற்றி, விசாரணை அணி மீது அழுத்தம் அதிகரித்தது. நான் கவனித்தவரையில் வழக்கு விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக உள்ள அம்சங்கள் இந்த அரசியலின் விளைவே.

வழக்கு விசாரணை ஆரம்பித்தபோதே பிரதான குற்றவாளி, அவனது பெயர், ஊர் விவரங்கள், அவனுடைய குற்ற நோக்கம், பயன்படுத்திய ஆயுதம் என அடிப்படைகளை அவர் தீர்மானித்திருந்தார். அதன் அடிப்படையில்தான் விசாரணை நடந்தது. அதாவது ஒரு முன்வரைவையொட்டி கச்சிதமாகக் காய்கள் நகர்த்தப்பட்டு ராஜாவை வெட்டிவிடலாம் எனும் இடத்துக்கு ஆட்டம் வந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய சார்பில் விசாரணை அதிகாரிகள் ஊடகங்களிடம் அப்டேட் செய்தார்கள். அதுவும் அவர்களுடைய துரோகம் குறித்த ஐயப்பாடு கிளம்பியதாலே, அவர்களை உடனடியாய் நீக்கும் அதிகாரம் தனக்கு அப்போதைக்கு இல்லை என அவர் நினைத்ததாலே அவர்களுடைய வாயாலேயே ஊடகங்களிடம் சொல்லவைத்தார். ஆனால், அதற்குப் பின்பும் வழக்கு இரு வேறு திசைகளில் பயணித்தது. தொடர்ந்து ஊடகங்களில் சர்ச்சைகள் வெடித்துக்கொண்டே இருந்தன. அதன் பிறகு அவர் ஆதரிக்கிற முகாமைச் சேர்ந்தவர்களால் கட்சிக்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டது. முக்கியத் தலைவர்கள் கைதாகி சிறை சென்றதில் ஆட்சி அதிகாரம் கைமாறி, அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு நிலைமை தலைகீழாகியது.

இப்போது வழக்கை அதிக அரவமின்றி முடித்துவைத்தால் போதும் எனும் நிலை ஏற்பட்டுள்ளது. சாருக்குக் கட்சியின் அதிகார மட்டத்தில் உள்ள உணர்வுக்கொம்புகள் அறுபட்டதுகூடப் பரவாயில்லை எனத் தோன்றியது; எது மாறினாலும் சாதி ஆதரவுத் தளம் மாறாதே. ஆனால், தனக்குக் கீழே கொடுக்காய் முளைத்தவர்கள் தன் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத்தான் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அந்தக் கொடுக்குகளைப் பிடுங்கி எறிவதற்கான நடவடிக்கைகளுக்காகத்தான் அவர் இப்போது என்னை அழைத்திருக்கிறார். விசாரணையின் இறுதிக் கட்டத்தில் இருக்கிற அணியின் அஸ்திவாரத்தை அசைக்கும் ஆதாரங்களை, லீடுகளை நான் கொண்டுவருவேன் எனும் நம்பிக்கையில் என்னைத் திரும்பவும் கொண்டுவந்திருக்கிறார்.

அவர் பெருமூச்சுவிட்டார். பளபளப்பான மீசையைத் திருகினார். சிகரெட்டை உதட்டில் பொருத்தி எடுத்து மேஜை மீது தட்டினார். பாக்கெட்டுக்குள்ளிருந்து முதல்வரின் வண்ணப்படம் அவரை அண்ணாந்து நோக்கியபடி இருந்தது. சிவந்த கண்களால் வேகமாய் என்னைப் பார்த்துவிட்டு எதிரில் உள்ள கோப்புகளில் கவனத்தைச் செலுத்தினார். சிகரெட்டைக் கொண்டு அதைச் சுட்டினார்.

“இது அபீஷியல் அசைன்மென்ட் இல்லை. ஆனா, நீ டிபார்ட்மென்டுக்குள் திரும்ப வருவதற்கு இது வழியை எளிதாக்கும். இப்போதைக்கு என்னிடம் நமது டிபார்ட்மென்டின் இன்டெலிஜென்ஸ் விங்கில் நீ உதவியதாக ஆவணத்தில் இருக்கும். உனக்கு ஓக்கேதானே.” 

அவர் எனக்கு வேறு தேர்வுகளைத்தான் தரவில்லையே. நான் தலையசைத்தேன்.

“உன் உடல்மொழியில் நிறைய மாற்றங்கள். கண்களில் அந்தப் பழைய ஷார்ப்னெஸ் இல்லை. முகத்தில் அந்தக் கோபம் இல்லை. ஆனா, யு டோன்ட் டீச் ஓல்டு டாக் நியூ டிரிக்ஸ். என்ன?”

சிரித்தேன்.

“வாட் இஸ் யுவர் ஆக்ஷன் பிளான்?”

“எப்போதும்போலத்தான் சார். அதாவது வழக்கு இதுவரை பயணித்த தடங்களில் ஒருமுறை போய்வரலாம் என இருக்கிறேன். எதையும் மறைக்காமல், யாரையும் தவிர்க்காமல். அதன் பிறகு நிஜக் குற்றவாளியைக் கண்டுபிடித்து லாக் செய்யலாம்.”

“எந்தப் பழுதும் இல்லாமல், நீதிமன்றத்தால் குற்றமே கண்டுபிடிக்க முடியாதபடி கச்சிதமாக நீ இந்த விசாரணை அறிக்கையைத் தயார் பண்ணணும். நான் இதை ஏன் சொல்றேன்னு புரியுதில்லையா?”

இப்போதுள்ள அதிகாரபூர்வ விசாரணையில் உள்ள போதாமைகளை நிரூபிக்க முடிந்து, ஒரு மீள்விசாரணைக்கு அரசு ஆணையிட்டால் ஒருவேளை என்னுடைய இறுதி அறிக்கையின் அடிப்படையில் மொத்த வழக்கும் திரும்ப நடத்தப்பட்டு நானும் அதில் ஒரு பகுதியாக இணைக்கப்படுவேன் அல்லது விசாரணையின் தலைமைப் பொறுப்பே எனக்கு வழங்கப்படலாம்.

உறுதி தொனிக்கத் தலையசைத்தேன்.

“சரி.” அவர் தன் பளபளவென்ற ஷூக்களைப் பார்த்தார். அவற்றில் என் தோற்றம் விநோதமாக மடங்கித் தெரிந்தது.

“நீ அபீஷியலான டீமிடம் எதுக்கும் ஒருமுறை பேசிவிடு. சார்ஜ் ஷீட்டை அவர்கள் தாக்கல் செய்யும் முன்பு ஒருமுறை பார்த்துவிடு. அவர்களுடைய தியரியின் பழுதுகள் என்ன, எதையெல்லாம் மறைக்கிறார்கள் என எனக்கு விரிவான ரிப்போர்ட் ஆதாரங்களுடன் வேண்டும். ஆனால், இன்டெர்னல் அபயர்ஸ் விசாரணை மாதிரி தெரியக் கூடாது. மேலிடத்து பிரஷருக்காக ஒரு மாற்று விசாரணையை உன் கீழ் நடத்துவதாய், இது வெறும் கண்துடைப்பு என அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். அதனால் உனக்குப் பெரிய தடங்கல்கள் இருக்காது.”

“சரி சார்.” விரைப்பாக சல்யூட் அடித்தேன். அவர் சன்னமாய்த் தலையசைத்து அதை அங்கீகரித்தார். நான் எழுந்து செல்ல எத்தனித்தபோது அழைத்தார்,

“இரு.”

“சார்.”

“எங்கிட்ட ஏதாவது சொல்லணுமா?”

“இல்ல சார்.”

“ததாகதன்.”

“சார்.”

“ஆர் யு ஸ்டில் ஆன் மெடிக்கேஷன்?”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“ஆமா சார்.”

“அதெல்லாம் வேணாமுய்யா. கொஞ்ச நாள் மருந்துகளை எடுத்துக்காத. எடுத்துக்கிட்டா ஷார்ப்பா இயங்க முடியாது.”

“ஐ ஆம் அட் பீஸ் வித் மைசெல்ஃப்.”

“இப்பவும் தனியாத்தான் இருக்கியா?”

“எனக்குன்னு யாரும் இல்லை சார். முன்ன இருந்த வீடு, என்னோடு வாழ்ந்தவர்கள் யாரும் இல்லை. ஒரு பக்கம் எப்படியாவது திரும்ப வேலையைப் பெற்றுடணும்னு ஒரு வெறி, இன்னொரு பக்கம் இதெல்லாம் எதுக்குன்னு ஒரு அவநம்பிக்கை, வெறுப்பு.”

“இந்த மாதிரி நெகட்டிவ்வா யோசிக்காதே என்னா. நம்ம சாதியிலருந்தே ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டிக்கோ. ஃபேமிலி முக்கியமுய்யா. அப்போதான் ஒரு பயம் வரும். பயம் இருந்தாதான் வேலையில கவனம், அக்கறை இருக்கும். இல்லாட்டி இதெல்லாம் எதுக்குன்னு தோணும். தற்காப்புத் தேவையிலிருந்து பயத்திலிருந்து சுயநலம் வருது, சுயநலமே செயல்படுவதற்கான ஊக்கி. என்னையே எடுத்துக்கோ...”

அவர் தன் சிகரெட்டை வெறுமனே சாம்பல் இல்லாத சாம்பல் கிண்ணத்தில் தட்டினார்.

“சாவு கண் முன்னாடி வந்த பிறகுதான் எனக்கு முன்னேறணும், நல்லா வாழணும்கிற ஆசை அதிகமாகியிருக்கு. நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். பிஸிக்கலா ஆக்ட்டிவ். செக்‌ஷுவலா ஆக்ட்டிவ். இதெல்லாம் சீக்கிரமா போயுடுமோங்கிற பயம் இருக்கு. அதான் விஷயம். போனது போகட்டும், திரும்ப ஆரம்பிக்க முடியாதா? கடவுள் கொடுத்ததைக் கடவுளே தருவார்... என்ன?”

“சரி சார்.”

“உனக்குத் தேவையானதைக் கேட்டு வாங்கிக்கோ. மறந்திராத டெய்லி ரிப்போர்ட் பண்ணு.”

செலவுக்கான பணத்தை என் அக்கவுன்டில் ஏற்கெனவே போட்டிருந்தார்கள்.

“இப்போதைக்கு உனக்கு சம்பளம் கிடையாது.” 

“சரி சார்.”

“நத்திங் அபீஷியல்.” 

“நத்திங் அபீஷியல்.” நான் எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். 

“ஆமா, ஆனா, எல்லா அதிகாரங்களையும் வசதிகளையும் நீ பயன்படுத்திக்கலாம். அதற்கான ஏற்பாடுகளை நான் பாத்துக்கிறேன்.” தேநீர் ஆறுவதாகச் சொல்லி அதை அருந்தும்படி வற்புறுத்தினார். கோஸ்ட் ரைட்டர் ஒருவரைக் கொண்டு எழுதி வாங்கி தன் பெயரில் அவர் அண்மையில் வெளியிட்ட குற்றவியல் குறித்த ஒரு கட்டுரைத் தொகுப்பை என்னிடம் காட்டினார். பின்னட்டையில் அவர் முறுக்கிய மீசையுடன் கம்பீரமாகத் தோற்றமளித்தார். வாங்கிக்கொண்டு நன்றி சொன்னேன்.

“வேற ஏதாவது?”

“டிபார்ட்மென்டில் சுயாதீனமா செயல்பட முடியணும்.”

“அதான் சொன்னேனே...”

அவர் ரிமோட்டை எடுத்து அழுத்தினார். டிவி பட்டென உயிர்கொண்டு ஒரு செய்தி சேனலைக் காட்டியது. அப்போதைய அரசியல் சூழலின் குழப்பங்களை, பதற்றங்களைப் பயன்படுத்தி உருப்பெறும் பயனற்ற, புதிரான செய்திகள் - இந்தத் தலைவர் இவரைச் சந்தித்தார், இவர் அவரிடம் தன் விசுவாசத்தைக் காட்டினார். எனில், இவரிடமிருந்து விலகி ஆட்சியைக் கவிழ்ப்பாரா இப்படி. சார் தன் மீசையை முறுக்கிக்கொண்டு சேனல்களை மாற்றினார். ஒரு ரியாலிட்டி ஷோ வந்திட அதை சற்று நேரம் கவனித்தார். நான் அங்கு பயனற்ற ஒருவனாக உபரியாக இருப்பதை உணர்ந்து சங்கோஜமானேன். அவரிடம் வாய்ப்புக்காக நன்றி தெரிவித்துவிட்டுக் கிளம்பினேன். உள்ளே வரும்போது சோர்வுற்று இருந்த நான், அப்போது நடந்து செல்லும்போது என் நடையிலும் உடல்மொழியிலும் தன்னியல்பாக ஒரு மிடுக்கு தோன்றியதை உணர்ந்தேன். நாய்க்குட்டிக்கு ஒரு வில்லை பிஸ்கட் என்றால் என்னைப் போன்றோருக்கு ஒரு வில்லை அதிகாரம்.

- தொடரும்