அத்தியாயம் 1

123.13k படித்தவர்கள்
26 கருத்துகள்

ஹாஸ்டலை காலி செய்து கொண்டிருந்தனர் மாணவிகள். மூன்றாம் ஆண்டு பரிட்சை முடிந்து மூட்டை முடிச்சுக்களை கட்டத் தொடங்கியிருந்தனர். நாளைக் காலை அனேகமாக அனைவரும் போய்விட்டிருப்பர். 

“தாரா…எங்கே? அவளோட திங்க்ஸெல்லாம் அப்படியே இருக்கு. என்ன அவளுக்கு ஊருக்குப் போற எண்ணமே இல்லையா?”

“அதானே…எல்லாரும் வீட்டுக்கு போற ஜோர்ல இருக்கோம். இவ எங்க போனா?”

“அவ மொட்டை மாடியில இருக்கா.”

“மாடியில என்ன பண்ணறா?”

“என்ன பண்ணுவா? படிச்சுக்கிட்டிருப்பா.”

இதைக் கேட்டு சில மாணவிகள் சிரித்தனர்.

“எக்ஸாமே முடிஞ்சிருச்சி. இப்ப என்ன படிக்கறா?”

“உன்னை மாதிரி அவளை நினைச்சுக்கிட்டியா? நீ எக்ஸாமுக்கு கூடப் படிக்கமாட்டே. அவ பாடப்புத்தகத்தைத் தவிர மற்ற எல்லா புத்தகத்தையும் படிக்கிறவ.”

“அதுக்காக நாளைக்கு ஊருக்குப் போறதுக்கு எதையும் பேக் பண்ணாம படிச்சுக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? நமக்கு ஒரு பிரச்னையும் இல்லை. இதோ… இவளுக்குத்தான் பிரச்னை.”

தன் துணிகளை மடித்து அடுக்கிக் கொண்டிருந்த வித்யாவைக் கைகாட்டினாள் ஒருத்தி.

“ஆமாம்டி…வித்யா... நீயும் அவளும்தான் சேர்ந்துப் போவிங்க. அவ எதையும் பேக் பண்ணாமயிருந்தா… உனக்குத்தான் சிரமம்.”

“எனக்கென்ன சிரமம்? அவ ரெடியாயிருந்தா கூட்டிக்கிட்டுப் போவேன். இல்லன்னா நான் பாட்டுக்குப் போய்க்கிட்டேயிருப்பேன்” வித்யா அலட்சியமாக சொன்னாள். 

“ஏய்… நீயெல்லாம் ஒரு ஃபிரண்டு.”

“அவ என்ன குழந்தையா? பஸ் புடிச்சு போகத் தெரியாதா?”

“ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்துக்கு ஊர்க்காரிங்க. அவளை விட்டுட்டுப் போவாளாம். போடி… போய் அவ புத்தகத்தை பிடுங்கிப் போட்டுட்டு அவளை கீழே இழுத்துக்கிட்டு வா.”

தோழிகள் வலுக்கட்டாயமாக வித்யாவை மொட்டை மாடிக்கு அனுப்பி வைத்தனர். மொட்டை மாடிக்கு வித்யா வந்தபோது தாரா மொட்டை மாடிக் கட்டைச் சுவரில் அமர்ந்தபடி தூரத்து மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தோழிகள் சொன்னதைப் போல் அவள் புத்தகம் படித்துக்கொண்டு இருக்கவில்லை.

கட்டை சுவரில் அமர்ந்து கால்களை ஆட்டியபடியிருந்த தாரா, மாலை நேரத்து மஞ்சள் ஒளியில் மெருகேற்றிய தங்கக் கலசமாய் ஜொலித்துக் கொண்டிருந்தாள். கட்டாமல் விட்ட கூந்தலும் கருமை நிறம் மாறி தங்கத் தோகையாய் காற்றில் பறந்து கொண்டிருந்தது.

“ஏய்…என்ன நீ? இங்க உட்கார்ந்துக்கிட்டு என்ன பண்றே?” கேட்டபடியே தோழியின் அருகே வந்தாள் வித்யா.

வித்யாவின் குரல் கேட்டு காற்றில் பறந்த கூந்தலை ஒதுக்கியபடியே திரும்பினாள் தாரா.

“சும்மா… வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கேன். பாரேன்… அந்தப் பசங்க என்னமா விளையாடுறாங்க.”

“என்னது...வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கியா? எல்லாரும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கிட்டு ஊருக்குப் போக ரெடியாகிட்டு இருக்காளுக. நீ என்னன்னா… ஹாயா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கேங்கறே? ஊருக்குப் போற ஐடியாவே இல்லையா?” என்றபடி அவளும் சுவற்றுக் கட்டையில் அமர்ந்தாள்.

“ப்ச்... ஊருக்குப் போகவே பிடிக்கலை.”

“என்னது… ஊருக்குப் போகப் பிடிக்கலையா? அவ அவ எப்படா இந்த ஹாஸ்டலை விட்டு ஓடலாம், அம்மா கையால ருசியா சாப்பிடலாம்னு காத்துக்கிட்டு இருக்காளுக. நீ என்னடான்னா ஊருக்குப் போகப் பிடிக்கலைங்கறே.”

“ப்ச்… எனக்கு அம்மா கையால சாப்பிடணும், பாட்டிக்கிட்ட கதை கேட்கணும்கற ஆசையெல்லாம் இல்லை.”

“பின்னே என்ன ஆசை?”

“இங்கயே இருந்து ஏதாவது வேலைக்குப் போகலாம்னு நினைக்கிறேன்.”

இதைக் கேட்டு அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் வித்யா.

“நீ சம்பாதிச்சுப் போட்டுத்தான் உன் குடும்பத்தைக் காப்பாத்தணும்கற நிலையா?”

“அப்படிச் சொல்ல முடியாது.”

“அப்பறம் என்ன? லீவை ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு ரிசல்ட் வந்ததும் மேல படிக்க வேண்டியதுதானே. மறுபடி காலேஜ், ஹாஸ்டல்…ஜாலியா போகும் இல்லையா? உனக்கு மேல படிக்க ஆசையில்லையா?”

“படிக்கணும்... மேல படிக்கணும்.”

“அப்ப இந்த ஒரு மாசம் மட்டும் வேலைக்குப் போகப் போறியா?”

“ஆமா…”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“ஒரு மாசம் மட்டும் என்ன வேலை பார்க்க முடியும்? யாராவது ஒரு மாசம் மட்டும் வேலைக்கு வச்சுப்பாங்களா? வேணுமின்னா…பீச்சுல சுண்டல் விக்கலாம்.” சொல்லிவிட்டுச் சிரித்தாள் வித்யா.

தாரா அவளை முறைத்தாள்.

“நான் சீரியசா பேசறேன். உனக்கு விளையாட்டா இருக்கா?”

“நான் தெரியாமத்தான் கேட்கறேன். நீ இப்ப எதுக்கு வேலைக்குப் போகணும்? மேல படிக்கறதுக்காக காசு சம்பாதிச்சு வச்சுக்க நினைக்கறியா? உன்னோட மேற்படிப்புக்கு பணம் தரமாட்டேன்னு வீட்ல சொன்னாங்களா?”

“அப்படியெல்லாம் இல்லை.”

“பின்ன எதுக்கு?”

“எதுக்கா? அதுக்கு நான் பதில் சொல்றேன்” என்றவாறே படியேறி வந்தாள் அகிலா. அவர்களின் எதிரே வந்து மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றாள். அலட்சியமாக தலையைச் சாய்த்து சிரித்தாள்.

“நீ சொல்லப் போறியா? சொல்லு” பரபரத்தாள் வித்யா.

“அவ லீவுக்குக் கூட சென்னையைவிட்டுப் போகாம இருக்கறதுக்கு காரணம் நம்ம ஹீரோ சிற்பி. வேலைக்குப் போகப் போறேன்னு சொல்றதெல்லாம் சும்மா சாக்கு.”

கட்டை சுவரிலிருந்து குதித்தாள் வித்யா. கைகளைத் தட்டினாள்.

“நினைச்சேன். இதாத்தான் இருக்கும்னு. சிற்பியைப் பார்க்காம ஒரு மாசம் கூட உன்னால இருக்க முடியாதா?”

திடுக்கென நிமிர்ந்தாள் தாரா. சிந்தனையில் சிற்பி வந்து சிரித்துவிட்டுப் போனான். சிலீரென்றிருந்தது. அவனுடைய தோற்றம் மனக் கண்ணில் தோன்றியதும், மனம் மயக்கமானதொரு மாற்றம் கொள்ள ஆரம்பித்தது. கசகசத்த வியர்வை பெருகும் நேரத்தில் காற்றடித்த உணர்வாய் உள்ளுக்குள் சுகமாகயிருந்தது.

*****

சிற்பி அவர்களுடைய வகுப்பில் படிப்பவன். சென்னைக்கு புறநகர் பகுதியில் பெற்றோர் இருந்தாலும், நகரத்தில் தன் பெரியம்மாவின் வீட்டில் தங்கிப் படிப்பவன். எல்லோரும் நட்புபோடு பழக, அவன் மட்டும் அந்த நட்பில் காதலைக் கலப்பதாய்  தோன்றியது. அது உண்மை என்பதை உறுதிப்படுத்தியது அவனுடைய தனித்தன்மையான பார்வை.

சாதாரணமாய் எல்லோரும் பேச, அவன் மட்டும் சந்தடி சாக்கில் எதையோ உணர்த்த முயல்வதைப் போல் பேசுவதாகத் தோன்றுகிறது. இயல்பாக சிரிக்கும் எல்லோருடைய சிரிப்பையும் போல் அவனுடைய சிரிப்பு இப்போதெல்லாம் இல்லையோ என இடிக்கிறது.

காதல் பார்வையும், கனிவு கலந்த பேச்சும், கவர்ச்சியைக் குழைத்து சிரிக்கும் சிரிப்பும், என்னமோ இவனிடம் இருக்கிறது என உள்ளம் உரக்கக் கூவினாலும், உண்மையை அறிய முடியவில்லை. அவனும் உடைக்கவில்லை.

பிரிவு உபசார விழாவின்போது கூட அவளுடைய பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தான். ஆனால், ஒன்றுமே தெரியாத நல்ல பிள்ளை போல் எப்படி நடித்தான்? சொல்லித் தொலைக்கலாமே என இவள் கூட நினைத்தாள்.

‘எங்கே போய்விடப் போகிறாள். மேற்படிப்பிற்கு மீண்டும் சென்னை வரத்தானே போகிறாள். பார்த்துக்கொள்ளலாம்’ என்று நினைத்துவிட்டானோ?

****

“என்னடி… சிற்பியைப் பத்தின கனவுக்குப் போய்ட்டியா?” தோழிகள் சேர்ந்து உலுக்கினர்.

சுயநினைவிற்கு வந்தாள் தாரா.

உணர்வுகளை மறைத்துக்கொண்டு எதிரே இருப்பவர்களை எச்சரிக்கும் விதமாய் பேசினாள்.

“ச்சை... ஏதாவது தப்புத் தப்பா பேசாதிங்க. சிற்பி உங்களுக்கெல்லாம் எப்படி ஃபிரண்டோ அப்படித்தான் எனக்கும்.”

“ஆஹா… இந்த வாய் வார்த்தையையெல்லாம் கேட்டு கேட்டு நாங்க அலுத்துப் போய்ட்டோம் தாயே. அவன் உன்னைப் பார்க்கற பார்வையும், நீ அவனைப் பார்க்கற பார்வையும் எங்களுக்குத் தெரியாதா? பார்வை ஒன்றே போதுமே…. பல்லாயிரம் சொல் வேண்டுமோ?” பாடினாள் தோழி.

“அது சரி… அவன் உன்கிட்ட லவ்வை சொல்லிட்டானா?”

“சொல்லியிருப்பான். எக்ஸாம் முடிஞ்சு ஊருக்குக் கிளம்பிடுவாளே… இனிமே எப்போ சந்தர்ப்பம் கிடைக்கப் போகுதுன்னு சொல்லியிருப்பான். அதான்… இவ இங்கயே தங்கிடலாம்னு பார்க்குறா.”

“உங்க வாயில வந்தது எதையாவது பேசாதிங்க. அவன் மனசிலேயும் எதுவும் அப்படியில்லை. என் மனசிலயும் எதுவுமில்லை.” அழகான பொய்யை அவிழ்த்துவிட்டாள் தாரா.

“ஓ… அப்படியா?”

“அப்படின்னா… நீ அவனைப் பார்க்கறதுக்காக சென்னையில தங்கி வேலை பார்க்கணும்னு ஆசைப்படலை? வேலைக்குப் போய் சம்பாதிச்சு குடும்பத்தைக் காப்பாத்தணும்னும் அவசியம் இல்லை. வேற எதுக்காக வீட்டுக்குப் போகப் பிடிக்கலை?”

வித்யா சாதாரணமாகத்தான் கேட்டாள். 

வித்யாவின் கேள்வி வித்தியாசமான உணர்வுகளை தாராவுக்குள் விளைவித்தது. சிற்பியால் ஏற்பட்ட சிந்தனை தந்த ரம்மியம், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக்கொண்டே வந்தது. அழகான முகத்தில் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாத ஒருவித அழுத்தம் வந்து உட்கார்ந்துக் கொண்டது.

திடீரென முகம் மாறினாள் தாரா. குரலை உயர்த்தி கிட்டத்தட்டக் கத்தினாள்.

“ஏன்னா… எனக்கு என் வீட்டுக்குப் போகவே பிடிக்கலை.”

திடீரென அவள் நிலை மாறியதைக் கண்டு இருவரும் முகம் மாறினர். அவளுடைய வார்த்தை அவர்களை ஒருமாதிரியாக்கி விட்டது.

வித்யாதான் உரிமையோடு தோளைத் தொட்டாள்.

“ஏன்டி… உனக்கு உங்க அம்மா அக்கா தங்கைன்னு யாரையும் பார்க்க விருப்பமே இல்லையா?”

“எனக்கு யாரையும் பார்க்க விருப்பம் இல்லை. போதுமா? என்னைக் கொஞ்சம் தனியா இருக்க விடுங்க. தயவு பண்ணி ரெண்டு பேரும் கீழே போங்க ப்ளீஸ்…” மாலை வெயிலில் சோபையாய் அழகு ஜொலித்த அவள் முகம் திடீரென கோபமாய் மாறியது. எரிச்சலாக இருவரையும் பார்த்தாள்.

இருவரும் அவளை சில நிமிடங்கள் எதுவும் புரியாமல் பார்த்துவிட்டு கீழே போய்விட்டனர்.

இறுகிப்போன முகத்துடன் தாரா பழையபடி கட்டை சுவரில் அமர்ந்தாள். தூரத்தே மைதானத்தில் விளையாடும் குழந்தைகளை அவளுடைய விழிகள் பார்த்தன. ஆனால்…. பழைய ரசனை, மகிழ்ச்சி, உற்சாகம் எதுவும் அவளிடத்தில் இல்லை.

****

காலையில் வழக்கம் போல் தாராவால் எழமுடியவில்லை. இரவு அவள் மொட்டை மாடியிலிருந்து கீழே வருவதற்கே வெகு நேரம் ஆகிவிட்டது. காலையில் நிறைய மாணவிகள் வீட்டிற்கு கிளம்புவதால், விடிய விடிய அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். எதிர்கால படிப்பு, திருமணம், வீட்டில் தங்களின் காதலை எப்படி வெளிப்படுத்துவது, மேற்கொண்டு வேலைக்குப் போவது, கடந்த மூன்று வருடங்களாக நடந்த சுவாரசியமான விசயங்கள்... இப்படி எதை எதையோ பேசி பேசி அவர்களும் உறங்காமல் மற்றவர்களையும் உறங்க விடாமல் செய்தனர்.

எப்படியோ… விடிகாலையில் கண்ணசந்தாலும் அதையும் கெடுக்கும் விதமாக ஒவ்வொருத்தராக அவளை அசைப்பதும், உலுக்குவதும், எழுப்புவதுமாக, ‘போய்ட்டு வர்றேன், பை..பை…’ என அவளுடைய தூக்கத்தை கெடுத்திருந்தனர்.

ஒருவழியாக உறங்கி அவள் எழுந்தபோது மணி எட்டு. எல்லாரும் ஊருக்குப் போய்விட்டனர். நான் மட்டும்தான் ஹாஸ்டலில் என்ற எண்ணத்தோடுதான் எழுந்தாள். ஆனால்… கண்களை விழித்ததுமே அவளை ஆச்சரியப்பட வைத்தாள் வித்யா.

ஜன்னல் ஓரம் அமர்ந்து காஃபியை உறிஞ்சியபடியே… ஹாஸ்டலுக்கு வெளியே பூத்துக் குலுங்கி  ஜன்னலை உரசியபடியிருந்த வேப்பமரத்தை ரசித்துக் கொண்டிருந்தாள் வித்யா.

‘என்ன இவள் ஊருக்குப் போகலையா?’ கண்களைக் கசக்கி மறுபடியும் காணும் காட்சி உண்மைதானா எனப்  பார்த்தாள். உண்மைதான்!

வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தாள். “ஏய்… என்ன இது, நீ ஊருக்குப் போகலையா?”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

காஃபி கோப்பையை எதிரேயிருந்த டீபாயின் மீது வைத்தவள், எழுந்து நின்று நளினமாக சோம்பல் முறித்துக்கொண்டு சிரித்தாள். 

“போகணும்.”

“எப்போ?’

“நீ எப்போ போறியோ அப்பத்தான்.”

இதைக் கேட்டு முகம் மாறினாள்.

“நீ என்ன சொல்றே?”

“உன்னை மட்டும் இந்த ஹாஸ்டல்ல தனியா விட்டுட்டு எப்படிப் போறது?”

“இந்த ஹாஸ்டல்ல நான் தனியா இருக்கப் போறதா யார் சொன்னா? நான் இரண்டொரு நாள்ல வெளியில ரூம் பார்த்துட்டுப் போய்டுவேன். நெக்ஸ்ட் இயர் மேற்படிப்பு படிக்கும்போது ஹாஸ்டலுக்கு வந்தா வருவேன். இல்லாட்டி அந்த ரூம்லயிருந்தே கன்டினியூ பண்ணுவேன்.”

“சரி ரூம் பார். நானும் வர்றேன். ரெண்டு பேரும் சேர்ந்தே தங்குவோம்.” 

“எனக்குத்தான் ஊருக்குப் போகப் பிடிக்கலை. உனக்கென்ன பிரச்னை?”

“எனக்கு உன்னைத் தனியா விட்டுட்டுப் போகப் பிடிக்கலை.”

“என் மேல உனக்கு அவ்வளவு பாசமா?”

“பாசம் இல்லை. பயம்.”

“பயமா?”

“ஆமா… நேத்து ஊருக்குப் போகலையான்னு நானும் அகிலாவும் கேட்டதுக்கு, அப்படியே ஒரு சந்திரமுகிப் பார்வை பார்த்தியே…அதிலேர்ந்துதான் பயமாயிருக்கு. நீ சரியில்லை. உன்கிட்ட ஏதோ பிரச்னையிருக்கு.

இல்ல. நீ ஏதோ பிரச்னையில மாட்டிக்கிட்டிருக்கேன்னு தோணுது. அகிலா கூடப் போகும்போது இதையேதான் சொல்லிட்டுப் போனா. தாராவை தனியா விட்டுட்டுப் போகாதே. ரெண்டு மூணு நாள் தங்கி அவ மனசை மாத்தி ஊருக்கு கூட்டிக்கிட்டுப் போ அப்படின்னு சொன்னா. அதான் தங்கிட்டேன்.”

“அதாவது என் மனசை மாத்தி கூட்டிக்கிட்டுப் போகவா?”

“முதல்ல உன் மனசில உள்ளதைத் தெரிஞ்சுக்க” அழுத்தமாகச் சொன்னாள் வித்யா.

*****

லைகள் ஆச்சரியம் கொள்வதில்லை தன் அழகில்…

கடலின் ஒரு பகுதியே தான் என்ற அடக்கம் அதனிடம்.

முயற்சியைக் கற்பிக்கும் முனைவன் தான் என்ற 

முகாந்திரம் இல்லை அதனிடம்…

கடலின் ஒரு பகுதியே தான் என்ற புரிதல் அதனிடம்…

சங்கையும் சிப்பியையும் அள்ளித் தரும் 

வள்ளல் என்ற துள்ளல் இல்லை அதனிடம்….

கடலின் கரமே தான் என்ற தன்னடக்கம் அதனிடம்….

தத்தி வரும் அலை சொல்லும் தத்துவம் புரியாதவன் மனிதன் 

தானே… எல்லாம்… தான் தான் எல்லாம்… என

காலத்தின் ஒரு பகுதி தான் எனப் புரியாதவன்….!

இப்படியெல்லாம் எந்த தத்துவமும் மனதில் தோன்றாமல் துள்ளி வரும் அலைகளையே பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தனர் தாராவும், வித்யாவும்.

விட்டேற்றியாக காணப்பட்ட தாராவை வற்புறுத்தி கடற்கரைக்கு அழைத்து வந்திருந்த வித்யா மனதை உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை மறுபடியும் கேட்டாள்.

“உனக்கு ஏன் ஊருக்குப் போகவே பிடிக்கலை?”

-தொடரும்