அத்தியாயம் 1
மேட்டுத் தெரு
மேட்டுத் தெரு என்று பெயரே தவிர உண்மையில் சாத்தானூரிலே அதுதான் மிகவும் பள்ளமான இடம். அரைக் காவேரி ஓடினால் போதும்; தெருவெல்லாம் ஜலம் ஊற்றேடுத்துவிடும். வெள்ளம் வந்துவிட்டாலோ கேட்க வேண்டியதே இல்லை.
மேட்டுத் தெருவின் தோற்றமே அலாதியானது. அதன் நாற்றமும் அப்படித்தான். ஆனால் அதை எல்லாம் விவரித்துக் கொண்டிருப்பது ஆகாத காரியம். தவிரவும் அது அவ்வளவாக அவசியமானதும் அல்ல. ஏனென்றால் ஊருக்கு ஊர் ஒரு மேட்டுத் தெரு இன்னமும் இருக்கத்தான் இருக்கிறது.
தெருவைப் போலவேதான் தெருவாசிகளும் என்று சொல்லவும் வேண்டுமா? சாத்தனூர் கிராம ஜன சமூகத்திலே மேட்டுத் தெருவாசிகள் மிகவும் தாழ்ந்தவர்கள். ஏழைகள் என்பதனால் மட்டுமின்றிக் குணாதிசய விசேஷங்களாலும் அவர்கள் இந்த ஸ்தானத்துக்கு உரியவர்களாக இருந்தார்கள்.
மேட்டுத் தெருப் பெண்களைப் பெண்கள் என்று சொல்லுவது பொருந்தாது - பொருந்தவே பொருந்தாது. அவர்களைப் பேய்கள் என்று சொல்லுவதும் பொருந்தாதுதான் - பேய்களுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்தாலும் வந்துவிடலாம். அவர்களுள் பெரும்பாலோர் அண்டையிலுள்ள பிள்ளைமார் தெருவிலும் அக்ரஹாரத்திலும் உள்ள வீடுகளில் வேலை செய்கிறார்கள். அவர்களில் சிலர் அந்த வீடுகளில் வேலை செய்வதுடன் திருப்தி அடைந்துவிடுவதில்லை. பல காரணகாரியங்களால் அந்த வீடுகளிலே மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆட்சி செலுத்தவும் செலுத்தினார்கள்.
மேட்டுத் தெரு ஆண்களில் பலர் அன்றாடம் அகப்படுகிற வேலையைச் செய்து பிழைப்பவர்கள். ஒரு வண்டியும் ஜோடிக் காளையும் வைத்திருப்பவர்கள் நாள் பூராவும் 'ஹை ஹை ஹை' என்று வண்டி ஓட்டியே தினம் அரை, ஒன்று சம்பாதித்துவிடுவார்கள். மாட்டுக்கும் மனிதனுக்கும் வயிறார உண்ணப் போதியதைச் சம்பாதித்துவிடுவார்கள். ஒரு சிலர் பகலெல்லாம் தோட்டத்திலோ, வயலிலோ, தோப்பிலோ, துரவிலோ நெற்றி வேர்வை வழிந்தோட வேலைசெய்து கூலி வாங்கிக் கஞ்சி காய்ச்சிச் சாப்பிட்டு வயிற்றை நிரப்புவார்கள்.
வேறு சிலர் நாணயமான வேலையில் நம்பிக்கை இல்லாதவர்கள். வருஷத்தில் ஏதாவது சில இரவுகளில் சந்தடி செய்யாமல் யார் கண்ணிலும் படாமல் வேலை செய்து கிடைப்பதைக் கொண்டு போதுமென்ற மனசுடன் மறு சந்தர்ப்பம் வாய்க்கும் வரையில் காத்திருப்பார்கள். இப்படிக் காத்திருக்கத் தெம்புடன் போதுமென்ற மனசும் படைக்காதவர்கள் சிலர் அடிக்கடி இரவு வேலைகளில் ஈடுபட்டு அகப்பட்டுக்கொண்டு இரண்டொரு வருஷமோ, அதிகமோ, சிறைவாசம் அனுபவித்துவிட்டு வந்திருக்கிறார்கள். தெருவிலே இவர்கள் பெரிய மனுஷ்யர்கள். இவர்களுக்கு ஆத்திரம் வரும்படியாக யாரும் நடந்துகொள்ள மாட்டார்கள். ஊரிலே பெரிய மிராசுதார்களில் யாராவது இருவருக்கிடையே விவகாரம் ஏற்பட்டால் இவர்களுக்கும் இவர்களைப் போன்றவர்களுக்கும் குஷிதான். இவர்கள் கையில் சில்லறை தாராளமாகப் புழங்கத் தொடங்கிவிடும். கள்ளுத் தண்ணிக்கும் பஞ்சம் இராது.
வேலை எதுவுமே செய்யாமல் தங்கள் அகடவிகட சாமர்த்தியத்தால் பிறர் காரியங்களில் தலையிட்டுத் தரகு அடித்துப் பிழைப்பவர்களும் மேட்டுத் தெருவில் பலர் உண்டு. கை வலுவைக் காட்டி ஏமாந்தவர்களிடம் சமயம் நேரும் போதெல்லாம் பணம் பறித்துப் பிழைப்பவர்கள் உலகில் எங்கும் உள்ளது போல அங்கும் சிலர் உண்டு.
இவர்களை எல்லாம் தவிர வேலை செய்யாமலும் பிழைக்கவேமாட்டாமலும் ஆயுள் பூராவும் நடைப் பிணங்களாகவே நடமாடித் திரிந்துவிடத் தயாராக உள்ள மனித ஜந்துக்களுக்கும் அந்தத் தெருவிலே குறைவில்லை.
வேலை செய்பவர்கள் எப்படியோ தினம் ஒரு ரூபாய்க்கு மேல் சம்பாதித்துவிடுவார்கள். ஆனால் அன்று சம்பாதித்ததற்கு மேல் ஒன்றிரண்டு அணா அதிகமாகவே தினம் மாலையில் கீழ மாங்குடிக் கள்ளுக் கடையில் செலவும் செய்துவிடுவார்கள்.
காவேரி ஆற்றின் எதிர்க்கரையில் இருக்கிறது கீழ மாங்குடிக் கள்ளுக்கடை. காவேரிக் கடையில் தென்னஞ் சோலையின் நடுவே மிகவும் அழகான இடத்திலே அமைந்திருக்கிறது. காவேரியில் ஜலம் வந்துவிட்டால் அந்தத் துறையிலே தருமத் தோணி விடுவார்கள். யாரோ ஒருவன் ஜனங்களுக்கு நன்மை செய்யும் உத்தேசத்துடன் புண்ணியம் சம்பாதித்து மூட்டை கட்டிக்கொள்ள வேண்டி அந்தத் துறையில் தருமத் தோணி விட நில மான்யம் வைத்திருக்கிறான். காவேரியில் ஜலம் இல்லாத நாட்களில் கவலையே கிடையாது. சாத்தனூர் மேட்டுத் தெருவுக்கும் கீழ மாங்குடிக் கள்ளுக்கடைக்கும் இடையில் உள்ள தூரம், குடித்துவிட்டு வீடு திரும்புகிறவனுக்கு மிகவும் அவசியமான, ஏற்றதூரம். கையிலுள்ள சில்லறைக்குத் தக்கபடி குடித்துவிட்டு நண்பர்களுடன் ஆடிப் பாடிக்கொண்டு உல்லாசமாக வீடு திரும்பும்போது குடித்தவனின் மனசும் உடம்பும் கனிந்திருக்கும். வீட்டிலே பெண்டாட்டி சம்பாதித்து வந்து சோறாக்கி வைத்திராவிட்டால் அவளைப் போட்டு நையப்புடைத்து மனசும் பசியும் ஆறுவதற்கு ஏற்ற மனப்பக்குவம் அவ்வளவு தூரம் நடப்பதிலே அவனுக்கு ஏற்பட்டிருக்கும்.
ஏற்கனவே சொன்னபடி சாத்தனூர் மேட்டுத் தெருவிலே வேலை செய்யாதவர்களும் உண்டு; சம்பாதிக்காதவர்களும் உண்டு. ஆனால் குடிக்காதவர்கள் மட்டும் இல்லை.
இது சாத்தனூர் மேட்டுத் தெருவின் இன்றைய நிலை. நேற்றும் இப்படித்தான். ஐம்பது வருஷங்களுக்கு முன் சாத்தனூர் மேட்டுத் தெருவுக்குத் தனிப் பெருமை ஒன்று இருந்தது; அந்தப் பிராந்தியத்திலே அந்த நாளில் தீவட்டிக் கொள்ளைக்காரனாகத் தொழில் நடத்திப் பெரும் பேரும் புகழும் படைத்திருந்த பிச்சாண்டி என்பவன் மேட்டுத் தெருவில் பிறந்தவன்தான். அவனையே அந்தப் பக்கத்துத் தீவட்டிக் கொள்ளைக்காரர்களில் கடைசி மன்னனாகச் சொல்லவேண்டும்.
- தொடரும்