அத்தியாயம் 1

29.63k படித்தவர்கள்
15 கருத்துகள்

உல்லாச புருஷர்கள்

சீமைச் சரக்குகளும் புதிய நாகரிகங்களும் அன்னிய நாடுகளினின்று நேராக வந்திறங்குவதான சிறப்பு வாய்ந்த சென்னை மாநகரின் தென்மேற்கு பாகம் தேனாம்பேட்டை என்ற பெயரால் குறிக்கப்பட்டு வருகிறது. அது சுமார் இரண்டு மயில் நீள அகலம் பரவியதாகவும் ஆயிரக்கணக்கான அழகிய பங்களாக்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. சென்னையில் பெருத்த உத்தியோக பதவியை வகித்த ஐரோப்பிய துரைமார்களும், இந்திய வக்கீல்களும், ஐரோப்பிய வர்த்தகர்களும் அந்தப் பங்களாக்களில் வசித்ததன்றி, சென்னை ராஜதானியின் ஒவ்வொரு ஜில்லாவிலும் உள்ள முக்கியமான சில சமஸ்தானத்து ஜெமீந்தார்களும், போலி மகாராஜாக்களும் ஏராளமான தங்களது செல்வத்தைச் செலவிட்டு நவநவமான சுகபோகங்களை எல்லாம் அனுபவித்துக் குதூகலமாகத் தங்களது பொழுதைப் போக்கும் பொருட்டு இங்கு வந்து பங்களாக்கள் வாங்கி அவற்றில் வசித்து வந்தனர். அவைகளில் மனோகரமான அழகிய பூச்செடிகள் நிறைந்த சோலைகளும், மரங்கள் அடர்ந்த தோப்புகளும், தாமரை, அல்லி, நீலோற்பலம் முதலியவை தவழ்ந்த தடாகங்களும், வாவிகளும் பெரும்பாலும் சூழ்ந்து, அவற்றில் வசிப்போர் தாம் இருப்பது மண்ணுலகத்திலோ விண்ணுலகத்திலோ என்று சந்தேகிக்குமாறு நறுமணந் தூவித் தீங்கனி உதிர்த்துக் குளிர்ச்சியும் இன்பமும் கொள்ளையாகச் சொரிந்து சிங்காரமாய் விளங்கின. ரிஷியின் ஆசிரமம் எனத் தகுந்த இத்தகைய வனமாளிகை ஒன்றினுள், ஒருநாள் மாலைப் பொழுதில் இந்தக் கதை தொடங்குகிறது.

அப்போது சூரியன் மேற்றிசையில் மறையும் தருணத்தில் இருந்தான். அவனது அழகிய செங்கிரணங்கள் அந்தச் சோலையின் மரங்களிலும், செடிகளிலும், பழுத்துத் தொங்கிய கனிகளின் மீது வாவியிலிருந்த தண்ணீரின் மேற்புறத்திலும் தவழ்ந்து அவற்றின் இயற்கை அழகைப் பன்மடங்கு பெருக்கிக் காட்டின. குயிலினங்கள் யாவும் அங்கிருந்த பழங்களைச் சுயேச்சையாகத் தின்று, பளிங்கெனத் தெளிந்த தண்ணீரைப் பருகி, செருக்கடைந்து ஆனந்த பரவசமுற்று மெய்மறந்து தமது தீங்குரலை எடுத்துப் பாடி இனிமையை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தன. கிள்ளைகளும், அணில்களும் தத்தம் பெண்டு பிள்ளைகளோடு கொஞ்சிக் குலாவிக் குதூகலமாகத் துள்ளிக் குதித்துப் பண்டிகை கொண்டாடின.

மாளிகைக்குள் நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்த விசாலமான ஒரு கூடத்தின் ஒரு புறத்தில் சாய்மான நாற்காலி ஒன்றன் மேல், நாற்பத்தைந்து வயதடைந்த ஒரு ஸ்திரீ சாய்ந்து மூக்குக் கண்ணாடி அணிந்த கண்களினால் ஏதோ ஒரு புஸ்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். இன்னொரு மூலையில் பிரம்புப் பாய் விரிக்கப்பட்ட தரையில் ஓர் அழகிய யெளவன மங்கை உட்கார்ந்து, தனக்கெதிரில் இருந்த வீணையை மீட்டி, ஹம்ஸத்வனி ராகத்தை எடுத்து அற்புதமாக ஆலாபனை செய்து, இந்த இனிய இசையோடு தனது மாதுரியமான குரலைப் புணர்த்தி அமிர்தத் துளிகளை வாரி ஜிலீர் ஜிலீரென்று வீசிக் கொண்டிருந்தாள். அவளது வயது பதினைந்து அல்லது பதினாருக்கு மேல் இராது. அழகும் இளமையும் உருக்கொண்டு வந்தனவோ என அமைந்திருந்த அவளது அற்புத மேனி எவ்விதமான குற்றம் குறைபாடின்றித் தேஜோமயமாக விளங்கியது. உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உள்ள ஒவ்வொர் அங்கமும் சம்பூரணமான வளர்ச்சியும் உன்னத வனப்பும் பெற்று, காண்போர் மனதையும் கண்களையும் கவர்ந்து கலக்கின. சுருண்டு சுருண்டு நெளிந்து சென்றிருந்த சிரத்தின் உரோமமும், கயல்மீன் பிறழ்ந்த கண்களும் மாதுளை மலர் போலச் சிவந்து கனிந்து தேன் ததும்பிய அதரங்களும், முல்லை அரும்பின் பத்திகளைப் போலிருந்த மாசற்ற பற்களும், தந்தத்தில் கடைந்தெடுத்த சிமிழ் போலக் கவிழ்ந்திருந்த கன்னங்களும் ஒன்றுகூடிய சுந்தரவனத்தில் மந்தஹாசமும் மகிழ்ச்சியும் இயற்கையிலேயே தவழ்ந்து, அவளது நற்குணத்தையும், கபடமற்ற சுபாவத்தையும் எளிதில் காட்டின. அவள் தனது வாயைத் திறந்த போதெல்லாம் வலது கன்னம் அழகாகக் குழிந்து அவள் மேம்பட்ட சுகபோகங்களுக்கு உரியவள் என்று ஓயாமல் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தது. தங்கப் பதுமையைப் போலிருந்த அந்த உன்னத மடந்தையின் எந்த அங்கத்தை நோக்கினாலும், மனம் தெவிட்டாமல் அதைவிட்டு வேறொன்றிற் செல்ல மாட்டாமல் பிரமித்து அப்படியப்படியே அந்த அழகில் ஈடுபட்டு மயங்கி நின்றது. அவளது முடி முதல் அடிவரையில் உள்ள எந்தப் பாகத்தைப் பார்த்தாலும் அற்புதமான அழகு ஜ்வலித்துக் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்து இன்பத்தையும் சஞ்சலத்தையும் உண்டாக்கியது. மிருதுத் தன்மையும், கற்பின் உறுதியும், பெருந்தன்மையும், நற்குல ஒழுக்கமும், நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்னும் பெண்டீர் தன்மைகளும் சுடர்விட்டு ஒளிர்ந்த அருங்குணமணியான அப்பெண் பாவையைக் கண்ட மாத்திரத்தில், உலகைத் துறந்த தபசிகளும் கலக்கம் அடைந்து “சுவர்க்க லோகமே பெண்ணுருவாகத் தோன்றி இவ்வுலகில் இருக்கையில் வீணிலே உலகைத் துறந்து விட்டோமே” என்று வருந்தத் தக்க சிறப்பு வாய்ந்தவளாக இருந்தாள்.

இத்தகைய ரூபலாவண்ணியம் பொருந்திய நங்கைக்கு அவளது பெற்றோர் கண்மணியம்மாள் என்று பெயர் சூட்டியது முற்றிலும் பொருந்தும் அல்லவா. அந்த அழகிய மடமங்கை கிருஷ்ணாபுரம் சமஸ்தானத்து ஜெமீந்தாரது தம்பியின் புதல்வி; குழந்தைப் பருவத்திலேயே தாய் தகப்பன்மாரை இழந்தவள்; தந்தையோடு பிறந்த அத்தையினால் மிகவும் அருமையாக வளர்க்கப்பட்டவள். மீனாக்ஷியம்மாள் என்று பெயர் பூண்ட அந்த அத்தையே, முன் கூறப்பட்டபடி சாய்மான நாற்காலியில் புஸ்தகம் படித்திருந்தவள். மீனாக்ஷி அம்மாளுக்கு, இறந்து போன தனது கணவனது நிலங்களிலிருந்து வருஷம் ஒன்றுக்குப் பதினாயிரம் ரூபாய் வருமானம் வந்து கொண்டிருந்தது. அவளுக்குச் சந்தானமில்லாமற் போனமையால், அவள் கண்மணி அம்மாளையும் அவளுக்கு முன் பிறந்தவனான துரைராஜா என்றவனையும் தனது சொந்த மக்களைப் போல அன்பும் ஆதரவும் சுரக்க, செல்வமாகவும் சிறப்பாகவும் வளர்த்து வந்தாள்; இருவருக்கும் நன்றாகக் கல்வி கற்பித்ததன்றி, கண்மணியை வீணை வாசிப்பதில் பயிற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வீணைவித்துவான் ஒருவனையும் அமர்த்தி இருந்தாள்.

இந்தக் கதை தொடங்கிய மாலையில் கண்மணியம்மாள் ஹம்ஸத்வனி வாசித்தபோது, அந்த வீணை வித்துவான் அவளுக்குச் சற்று தூரத்தில் மிகவும் மரியாதையாக விலகி உட்கார்ந்திருந்தான்; அவன் மைசூரில் இருந்த மகாவித்துவான் ஒருவரது மகன் என்பதும், அவனும் தந்தையைப் போலவே கீர்த்தி வாய்ந்தவன் என்பதும் எல்லோருக்கும் தெரியவே, ஜெமீந்தார்களின் பங்களாக்களில் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கெல்லாம் வீணை கற்பிக்கும்படி அவனை ஏற்படுத்திக் கொண்டனர். மதனகோபாலன் என்ற அழகிய பெயர் கொண்ட வீணை வித்துவானாகிய அந்த யெளவனப் புருஷன் தனது பெயருக்குத் தக்கபடி மன்மதனை வென்ற அழகும் சிவந்த மேனியின் நற்குண நல்லொழுக்கமும் ஆண்மையும் கூரிய புத்தியும் கல்வித் திறமையும் முகத்திலேயே ஜ்வலிக்கப் பெற்றவனாக விளங்கினான். அவன் தனது நிலைமைக்குத் தகுந்தபடி மரியாதை பணிவு அடக்கவொடுக்கம் முதலியவற்றைப் பெரிதும் காட்டி மிருதுவாகவும் அழகாகவும் பேசி கண்மணிக்கு ராக ஆலாபனை பயிற்றுவித்துக் கொண்டிருந்தான். கண்மணியம்மாளோ, தான் ஜெமீந்தாரது வீட்டுப் பெண் என்ற நினைவினால் செருக்கடைந்து அவனை அசட்டை செய்தவளாய்க் காணப்படாமல் ஒரு குருவிடம் பணிவாகக் கல்வி கற்றுக் கொள்ளும் சீஷனைப் போல பயபக்தியோடு ஒழுகி, அவனது வாக்குக்கு எதிர்வாக்கின்றி வித்தை கற்று வந்தாள்.

இவர்கள் இங்ஙனம் இருக்க, அந்த மாளிகையின் மேல் மாடியில் கொலு மண்டபத்தைப் போல அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு விடுதியில் அதே காலத்தில் இரண்டு யெளவனப் புருஷர்கள் சம்பாஷித்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவன் கண்மணியம்மாளின் தமயனான துரைராஜா என்பவன். அவனுக்கு இருபத்து மூன்று வயதிருக்கலாம். அவன் உயர்வான சிவந்த அழகிய மேனியைக் கொண்டவன். அவனோடு இருந்த மற்றவன் மாரமங்கலம் என்ற பெருத்த சமஸ்தானத்து ஜெமீந்தாரின் ஏகபுத்திரன்; அவன் தந்தையற்றவன்; வயது பதினேழிருக்கலாம். அவன் குள்ளமான கருத்த மேனி உடையவன். அவனுக்கே கண்மணியம்மாளை மணம் புரிவிப்பதென்று, அவனது தாயான கல்யாணி அம்மாளாலும் மீனாக்ஷி அம்மாளாலும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

துரைராஜா என்பவன் நன்றாகப் படித்தவன் ஆனாலும், அவன் தனது கல்வியை நல்ல வழியில் உபயோகிக்காமல், தீய வழிகளில் பயன்படுத்தும் துர்க்குணம் உடையவன். நாணயம் நல்லொழுக்கம் என்பவைகளுக்கும் அவனுக்கும் வெகு தூரம்; எத்தகைய துர்நடத்தைக்கும் அவன் பின்வாங்காதவன். மாரமங்கலம் மைனரோ பிஞ்சில் பழுத்தவன்; மூடபுத்தியும், அசட்டுத் துணிவும், அசங்கியமான மொழிகளையே உபயோகிக்கும் இழிகுணமும், கரைகடந்த செருக்கும், ஆணவமும், கோரரூபமும், கூனல் முதுகும், யாவரையும் தூஷித்து அலட்சியமாக எடுத்தெறிந்து பேசுந்தன்மையும் பெற்றவன். அவ்விருவரும் ஒரு நிமிஷ நேரமும் பிரியாமல் மிகவும் அந்தரங்கமான நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் இணை பிரியாமல் இருந்தது நட்பென்னும் உண்மையான வாத்சல்யத்தினால் கட்டுப்பட்டு இருந்ததன்று ஒரு துஷ்டனுக்கு இன்னொரு துஷ்டனது துணையும் உதவியும் அவசியமாக வேண்டி இருந்தன. துரைராஜாவின் விளையாட்டுச் செலவுக்கு மீனாக்ஷியம்மாள் சொற்பமான பணமே கொடுத்து வந்தாள். மைனருக்கோ பெருத்த பணத்தொகை மாதம் மாதம் வந்து கொண்டிருந்தது. துரைராஜாவுக்கோ சென்னையில் உள்ள விலைமாதரிடம் எல்லாம் நட்புண்டு. மைனருக்கு அந்த விஷயத்தில் பழக்கம் இல்லை. துரைராஜாவின் நட்பிருந்தால், அவனது நட்பினரான பெண்பாலார் யாவரும் தனக்கும் நட்பினராக ஆவார்கள் என்பது மைனரது கருத்து. மைனரது நட்பிருந்தால், அவனது பணப்பையில் எட்டியமட்டும் தனது கையை நுழைக்கலாம் என்பது துரைராஜாவின் எண்ணம். நிற்க, துரைராஜா என்பவன் உலக விஷயங்களில் நன்றாக அடிபட்டவன்; உலகத்தில் என்னென்ன துன்மார்க்கங்கள் இருக்கின்றன என்பதைக் கரைகண்டவன். சென்னையில் இன்னின்ன இடத்தில் இன்னின்ன திருவிளையாடல்கள் நடக்கின்றன என்பது அவனுக்கு மனப்பாடம்; அவனுடன் இருந்தால் தானும் அவனைப் போலவே தேர்ச்சி அடையலாம் என்பது மைனரது கருத்து. இவ்வாறு அவ்விரு தூர்த்த சிகாமணிகளும் ஒருவரை ஒருவர் துணையாகப் பற்றிக் கொண்டிருந்தனர்.

அவ்விருவரும் முதல் நாள் இரவில், வி.பி. ஹாலில் நடந்த நாடகம் (Drama) பார்த்தவர் ஆதலின், அன்றைய பகலில் பன்னிரண்டு மணிக்கெழுந்து போஜனம் முடித்துக் கொண்டு படுத்தவர்கள் சற்று முன்னரே எழுந்து சிற்றுண்டி அருந்தி கையில் சிகரெட்டைப் பிடித்துக் கொண்டு சீட்டாட உட்கார்ந்தனர். முதல்நாள் இரவில் பார்த்த நாடகக் காட்சிகளே அவர்களது அகக் கண்ணில் அப்போது வந்து கொண்டிருந்தன. இன்பகரமான அந்த நினைவுகளிலேயே அவர்கள் ஈடுபட்டிருந்தமையால், அதைப் பற்றியே பேசத் தொடங்கினர். அப்போது மைசூரிலிருந்து பாலிகா மனமோகன நாடகக் கம்பெனி என்ற பெயருடைய ஒரு கூட்டத்தார் சென்னைக்கு வந்து, சில தினங்களாக வி.பி. ஹால் என்னும் கட்டிடத்தில் ஆடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கம்பெனியின் சொந்தக்காரர் ஆண் பிள்ளை ஆனாலும், அதில் தோன்றி நடித்தோர் யாவரும் பெண்பாலராகவே இருந்தனர். அவர்கள் யாவரும் நன்றாகப் படித்தவர்கள்; 8-வயது முதல் 25-வயதுக்கு மேல்படாத யெளவனப் பருவமும், ஒருவரைப் போல் எல்லோரும் கந்தருவ ஸ்திரீகளைப் போலத் தேர்ந்தெடுக்கப்பட்ட கண்கொள்ளா வனப்பும் வாய்ந்த மனமோகன சுந்தர ரூபிணிகள். அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் வேஷங்களைத் தத்ரூபமாகத் திறமையோடு நடித்ததன்றி ஒவ்வொருவரும் பார்சீ நாட்டியம், இங்கிலீஷ் டான்ஸ், பரத நாட்டியம் முதலியவற்றிலும் அற்புதமாகப் பயிற்றப்பட்டிருந்தனர். ஒவ்வொருவரும் தனித்தனியாக நாட்டியம் ஆடினாலும், பலர் ஒன்றுகூடி நாட்டியம் ஆடினாலும், எவ்வகையாலும் அந்த நடனம் மெச்சத் தகுந்ததாகவே இருந்தது. அவர்கள் சென்னைக்கு வந்த சொற்ப காலத்திற்குள் எத்தனையோ தங்கப் பதக்கங்களும் வேறுவிதமான பரிசுகளும் பெற்றுவிட்டதன்றி, நாடகம் பார்க்கச் சென்றோரின் மனதை மயக்கி அவர்கள் இரவு பகல் அதே நினைவைக் கொண்டு தவித்து நிற்கும்படி பித்தர்களாக்கிவிட்டனர். அந்தப் பெண்மக்கள் யாவரிலும் மேலானவளுக்கு மோகனாங்கி என்று பெயர். அவள் மகாவிஷ்ணுவின் மோகனாவதாரத்தைப் போலவே சிருஷ்டிக்கப்பட்டிருந்தாள். அவள் மைசூர்க் கலாசாலையில் பி.ஏ. பரிட்சையில் படித்துத் தேறினவள்; அழகிலோ அவளுக்கிணை அவளேயன்றி மற்றவரை அவளுக்கு இணை சொல்வது சிறிதும் பொருந்தாது. அவள் ஸ்திரீ வேஷம் போட்டு வந்துவிடுவாளானால் ஜனங்களின் மனதை முதலிலிருந்து கடைசி வரையில் காந்தம் போலக் கவர்ந்த வண்ணம் இருப்பாள். ஒரு நொடியில் ஜனங்களைச் சிரிக்கச் செய்வாள்; அடுத்த நொடியில் அவர்கள் கண்ணீர் சொரிந்து கதறி அழும்படி செய்து விடுவாள், அவளது குரலோ குயிலையும் யாழையும் பாகையும் தேனையும் தோற்கச் செய்வது. நாட்டியத்திலோ ஊர்வசி, திலோத்தமை என்னும் இந்திர லோகத்து தாசிகள் எப்படி நடிப்பார்கள் என்பதை பூலோகத்து ஜனங்கள் கண்டு அனுபவிக்கும்படி செய்பவள். அவளது தேகத்தின் அற்புதமான அமைப்பும் ஜாஜ்வல்லியமான வனப்பும் அவளைப் படைத்த சர்வ வல்லமையுள்ள ஈசுவரனையே மயக்கத்தக்கதாய் இருந்தன. அவளிடத்தில் இத்தனை மேம்பாடுகள் இருந்தும், அவள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு முன் வந்து நடிப்பவளானாலும், அவள் அந்தரங்கத்தில் மகாநற்குண நல்லொழுக்கம், அடக்கவொடுக்கம், பரபுருஷரை விஷமென மதிக்கும் பதிவிரதைக் குணம் முதலிய அரிய மேம்பாடுகளைப் பெற்றிருந்தாள். சென்னை முற்றிலும், அதைச் சுற்றி நெடுந்தூரம் அவளது சிறப்பைப் பற்றி புகழ்ந்து பேசி தங்களது பொழுதை எல்லாம் வீண் பொழுதாகப் போக்கிக் கொண்டிருந்தனர். பெருத்த பெருத்த மகாராஜர்கள் எல்லாம் அவளோடு தனிமையில் ஒரு வார்த்தை சொன்னாலும் தங்களது ஜென்மம் கடைத்தேறி விடும் என்று நினைத்ததன்றி, அவள் பொருட்டு தங்களது உடல் பொருள் ஆவி ஆகிய சகலத்தையும் அர்ப்பணம் செய்யத் தயாராக இருந்தனர். இவ்விஷயமாக அவளுக்கு ஒவ்வொரு நாளும் நூறு கடிதங்களுக்கு மேல் தபால் மூலமாகவும் ஆட்கள் மூலமாகவும் அனுப்பப்பட்டு வந்தன. அவள் எதையும் திறந்துகூடப் பாராமல், அப்படியே அடுப்பிற்குள் எறித்து விடுவாள். அவளைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போய்விட வேண்டும் என்று பல சமஸ்தானாதிபதிகள் நினைத்தனர். ஆனால் அவள் எந்த இடத்தில் தங்குகிறாள் என்பதை ஈசுவரனும் காண முடியாமல் இருந்தது. அந்த நாடகத்தில் நடித்த பெண்களில் முக்கியமான சில நடிகைகள் மாத்திரம் தமக்கு விருப்பமான வேறிடங்களில் சுயேச்சையாக வசிக்கும்படி அனுமதிப்பட்டிருந்தனர். மற்ற சிறுமியர் யாவரும் புரசைப்பாக்கத்தில் ஒரு தனியான பங்களாவில் நாடகத்தின் எஜமானனுடன் கூடவே அவனது பார்வையில் இருந்தனர். இந்த நாடகம் சென்னைக்கு வந்த பிறகு அவர்கள் ஆடிய ஆட்டங்களுக்கெல்லாம் தவறாமல் போனவர்களுள் துரைராஜாவும் மாரமங்கலம் மைனரும் முக்கியமானவர்கள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

கதைத் தொடக்கத்தில் இவ்விருவரும் சீட்டாட உட்கார்ந்தார்கள் அல்லவா? அப்போது கீழே கண்மணியம்மாள் வீணையை மீட்டிப் பாடிய இன்னிசை மேலே எட்டியது. அதைக் கேட்ட மைனர் ஜெமீந்தார், “துரைராஜ்! மோகனாங்கியின் பாட்டைக் கேட்ட காதுக்கு, இது எப்படி இருக்கிறது பார்த்தாயா? இது பாட்டாகவே இல்லை. ஒப்பாரி சொல்லி அழுவது போலிருக்கிறது” என்று கூறி நகைத்தான். தனது தங்கையின் பாட்டை மிகவும் இழிவாக மைனர் தூஷித்ததைக் கேட்டும் துரைராஜா ஆயாசம் என்பதே கொள்ளாதவனாய் அதை ஆமோதிப்பவன் போலப் புன்னகை செய்த வண்ணம் சீட்டாட்டத்தைக் கவனித்தான். அதன் பிறகு இரண்டொரு நிமிஷ நேரம் இருவரும் மெளனமாக தங்களது வேலையைப் பார்த்தனர். திரும்பவும் மைனர் துரைராஜாவைப் பார்த்து, “நமது கண்மணிக்கு வீணை கற்றுக்கொடுக்கும் மதனகோபாலன் எவ்வளவு அழகாயிருக்கிறான், பார்த்தாயா? அவனுடைய ஜாதி என்னவென்று சொல்ல உன்னால் முடியுமா? எங்கே, உன் சாமர்த்தியத்தைப் பார்க்கலாம்” என்றான்.

துரைராஜா புன்னகை செய்து, “இப்படித்தான் என்னுடைய சாமர்த்தியத்தைப் பார்க்கிறதா? ஒரு பெண்பிள்ளையைக் காட்டி அவள் என்ன ஜாதி என்றால் பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்ற ஜாதிகளுள் அவள் எதில் சேர்ந்தவள் என்பதை நான் உடனே சொல்லி விடுவேன். ஆண்பிள்ளைகளுடைய ஜாதியைக் கண்டுபிடிக்க என்னால் ஆகுமோ” என்றான்.

அதைக் கேட்ட மைனர் குலுங்கக் குலுங்க நகைத்து “இவ்வளவு தானா உன் சாமர்த்தியம்! இதற்கு முன் இவனைப் பற்றி நான் விசாரித்ததில்லை. இருந்தாலும், இவன் ஒரு தாசியின் மகனாய்த் தான் இருக்க வேண்டும். அதனாலே தான் வீணை வாசிப்பதில் இவ்வளவு திறமை இருப்பதோடு, உடம்பும் உருளைக்கிழங்கு போல மொழுமொழு என்று இருக்கிறது. இவனுடைய முகக்களையும் முகவெட்டும் பெண் பிள்ளையினுடையதைப் போலவே இருக்கின்றன. அதனாலே தான் இவனை முதலில் பார்த்த அன்றைக்கே நான் ஆக்ஷேபித்தேன். என்னுடைய தங்கைகள் இருவருக்கும் இவன் வீணை சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று நான் அம்மாளோடு நேற்று சாயங்காலம்கூட சண்டை போட்டேன். இவன் இங்கேயும் வந்து கண்மணிக்கு வீணை கற்றுக் கொடுப்பது எனக்குக் கொஞ்சமும் சம்மதமாக இல்லை. எப்படியாவது அத்தையம்மாளிடம் சொல்லி இவன் வருவதை நிறுத்திவிடு. வீணை வாசிக்காவிட்டாலும், கண்மணியை நான் கண்மணியாகவே பாவிப்பேன் என்பது உனக்குத் தெரியாதா?” என்றான்.

அதைக் கேட்ட துரைராஜா சந்தோஷப் பார்வையாக மைனரை நோக்கி, “அப்படியே செய்யலாம்; அதிருக்கட்டும் மாப்பிள்ளை! கையில் செலவுக்கு ஒரு காசுகூட இல்லை. எங்கே போனாலும் கடன்காரர்கள் தொந்தரவு செய்கிறார்கள். பெரியப்பன் மாதாமாதம் எனக்கு அனுப்பும் ஐந்நூறு ரூபாய் ஐந்தே நாளைக்கு வருகிறது. அத்தையம்மாள் கொடுப்பது அடுத்த நாளே போய்விடுகிறது. ஒவ்வொரு மாசமும் பணத் தொல்லையே பெரிய தொல்லையாகப் போய்விட்டது. இப்போது எனக்கு மொத்தமாக இரண்டாயிரம் ரூபாய் வரையில் கடன் இருக்கிறது. இந்தச் சமயம் நீ தான் என்னுடைய மானத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்றான்.

மைனர்: இப்போது பங்களாவை விட்டு வரும்போதுகூட எனக்கும் என்னுடைய அம்மாளுக்கும் பெருத்த சண்டை நடந்தது. பணம் கேட்டால் அவள் கொடுக்கிறதே இல்லை. நான் இவ்வளவு பெரிய சமஸ்தானத்தின் அதிபதி ஆகப் போகிறவன் என்பதை அவள் கொஞ்சமும் நினைக்கிறதில்லை. இன்னம் ஒரு வருஷம் போனால் நான் மேஜர் ஆகிவிடுவேன்; எல்லோரையும் கண்ணில் விரல்விட்டு ஆட்டிவிடுவேன். எனக்கு அம்மாள் ஒருத்தி, வேறு இரண்டு வக்கீல்கள் ஆகிய மூவரும் கார்டியனாக அமைந்திருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரிந்த சங்கதி. அம்மாளையாவது மிரட்டி ஏதாவது பணம் வாங்கிவிடலாம். அந்த வக்கீல்கள் பரமலோபிகள். எனக்கு மாசம் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் தான் கொடுப்போம் என்றும் அதற்கு மேல் ஒரு காசும் கொடுக்க மாட்டோம் என்றும் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். இனிமேல் வேறு வழியில்லை. நீ சொன்னபடி நாட்டுக்கோட்டைச் செட்டிகளிடத்தில் பாதித் தொகை வாங்கிக் கொண்டு முழுத் தொகைக்குப் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டியது தான் வழி. இன்னம் ஒரு வருஷம் கழித்துப் பணத்தை வாங்கிக் கொள்ளட்டும் – என்றான்.

துரைராஜா: அப்படியானால் அண்ணாமலை செட்டி என்று எனக்குத் தெரிந்தவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் இப்போது போய் காரியத்தை முடிப்போம். எனக்கு இரண்டாயிரம் வேண்டும், உனக்கு எவ்வளவு வேண்டும்?

மைனர்: எனக்கு மூவாயிரமாவது வேண்டும்.

துரைராஜா: சரி; மொத்தத்தில் ஐயாயிரம் வேண்டும். இரண்டு வட்டி போட்டு பதினாயிரத்துக்குப் பத்திரம் எழுதிக் கொடுத்தால், பணம் வந்துவிடும்.

மைனர்: போனால் போகிறது, அப்படியே எழுதிக் கொடுத்துவிடுவோம். அந்த மாத்திரம் முடிப்பது போதாது. இன்னொரு முக்கியமான காரியம் இருக்கிறது. அதற்காகவே நான் சாப்பிட்ட உடனே இங்கே ஓடிவந்தேன். இல்லாவிட்டால், நேற்று ராத்திரி தூக்கம் இல்லாமல் இருந்ததற்கு இன்று பகல் முழுதும் தூங்கி இருப்பேன். அந்த விஷயத்தை முடித்துக் கொடுப்பதும் உன்னுடைய பொறுப்பு. நீ மனசு வைத்தால் அந்தக் காரியம் அவசியம் முடியும்.

துரைராஜா: (புன்சிரிப்போடு), அது என்னால் ஆகக் கூடியதாக இருந்தால், அடுத்த நொடியிலேயே செய்து விடுகிறேன். அது என்ன காரியம்? சொல்.

மைனர்: ஓகோ! ஒன்றையும் அறியாதவன் போலக் கேட்கிறாயோ! அது இன்னதென்பது உனக்குத் தெரியாதோ?

துரைராஜா: தெரியவில்லையே.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

மைனர்: பெருத்த பெருத்த கைகளை எல்லாம் பார்த்த உனக்கு இது ஓர் அரிய விஷயமல்ல. நேற்று ராத்திரி மோகனாங்கி பாடிக்கொண்டு பார்சீ டான்ஸ் ஆடியதைக் கண்ட முதல் என் மனம் அப்படியே தவித்து டான்ஸ் ஆடிக்கொண்டே இருக்கிறது. தேகம் கொதித்துக் கட்டுக்கடங்காமல் பதறி நிற்கிறது. நான் படும் வாதையைக் கொஞ்சமும் சகிக்கவே முடியவில்லை. இதனால் உயிர் போனாலும் சரி; என்னுடைய சொத்தெல்லாம் ஒழிந்தாலும் கவலை இல்லை. எப்படியாவது அந்தப் பெண்ணரசியிடம் ஒரு பேச்சாவது பேசினால்போதும். அவளோடு தனிமையில் பேசும்படியாக, நீ பழக்கம் செய்து வைத்துவிட வேண்டும். நீ மனசு வைத்தால், இது ஒரு பெரிய காரியமல்ல – என்றான்.

துரைராஜா: (ஆசியமாக) சரி; சரி; நல்ல வேலை தான். இது கண்மணிக்குத் தெரிந்தால், அவள் என்ன சொல்வாள் தெரியுமா? அவளுடைய சொந்த தமயனாகிய நானே, மாப்பிள்ளைக்கும் கூத்தாடிச்சிக்கும் சிநேகம் செய்து வைக்கிறதென்றால், அவளும் அத்தையம்மாளும் என்ன செய்வார்கள் தெரியுமா? என்னை உடனே பங்களாவைவிட்டு துரத்திவிடுவார்கள் – என்றான்.

மைனர்: (புன்சிரிப்பாக) துரத்திவிட்டால் நல்லதாகிவிட்டது. என்னுடைய பங்களாவுக்கு வந்துவிடு. முதலில் இந்தச் சங்கதி அவர்களுக்குத் தெரியவே போகிறதில்லை. தெரிந்தாலும், அதனால் குற்றமும் இல்லை. நான் மேஜர் ஆக இன்னம் ஒரு வருஷ காலத்துக்கு மேல் இருக்கிறது. அதன் பிறகே எனக்குக் கலியாணம் செய்ய வேண்டும் என்று என் தகப்பனாருடைய மரண சாசனத்தில் எழுதி வைத்திருக்கிறார். ஒன்றரை வருஷத்துக்குப் பிறகு கண்மணியை அடைவதை நினைத்து இப்போது முதல் நான் சந்நியாசியாக இருந்து தபசு பண்ண வேண்டுமோ? – என்றான்.

அதைக் கேட்ட துரைராஜா, “இல்லை மாப்பிள்ளை! நான் விளையாட்டுக்குச் சொன்னேன். ஆண்பிள்ளை என்றால் ஆயிரம் ரகசியம் இருக்கும். இதென்ன துவாபரயுகமா? அந்த யுகத்திலேயே ராமர் ஒருவர் தானே ஏகபத்னி விரதராய் இருந்தார். மற்றவர் இராவணனைப் போலத்தானே இருந்தார்கள். இந்தக் காலத்தில் கட்டுப்பாட்டில் நிற்கும்படி யாராவது சொன்னால் புருஷர்கள் கேட்பார்களா? அது இல்லை. அதிலும் அந்த மோகனாங்கியைக் கண்டால் யாருக்குத்தான் மனம் கலங்காது. அந்த ராமரே இவளைப் பார்த்திருந்தால், அவருடைய ஏகபத்னி விரதம் எல்லாம் பஞ்சாகப் பறந்து போயிருக்காதா; முதலில், நேற்று முதல் என் மனம் படும் பாட்டை நான் என்னவென்று சொல்லப் போகிறேன். முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல நான் இன்று பகல் முழுதும் இன்பக் கனவு கண்டு கொண்டே தூங்கினேன். இந்த விஷயங்களில் அதிகமாக உழன்ற என் நிலைமையே இப்படி இருந்தால், அவ்வளவு அனுபோகம் இல்லாத உன்னைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? இந்த விஷயத்தில் எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. ஆனால் நம்முடைய ஆசை பலிக்க வேண்டுமே. அது தான் யோசனையாக இருக்கிறது. அவள் சீனத்துச் சரக்காய் இருக்கிறாளே; முதலில், அவள் எங்கே இருக்கிறாள் என்பதை வெளியில் தெரியாமல் அல்லவா மறைந்து கொண்டிருக்கிறாள். நாடகக் கம்பெனியின் எஜமானனுக்கும், அதன் மானேஜருக்கும் அவள் இருக்கும் இடம் தெரியுமாம். அவர்கள் உயிர் போவதானாலும் அதை வெளியிட மாட்டார்கள். அவளுடைய இருப்பிடத்தை முதலில் கண்டுபிடிக்க நாம் வழிதேட வேண்டும்.”

மைனர்: அதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். அவள் ராத்திரியில் நாடகம் முடிந்த பிறகு ஏதாவது ஒரு வண்டியில் ஏறிக்கொண்டு தானே தன்னுடைய வீட்டுக்குப் போவாள். பைசைக்கிள் வண்டியோடு ஓர் ஆளைத் தயாராக வைத்திருந்து, வண்டியைத் தொடர்ந்து போகும்படி செய்தால், அவள் இறங்கும் இடத்தை அவன் கண்டுபிடித்துக் கொள்ளுகிறான்.

துரைராஜா: அது நல்ல யோசனை தான். அப்படியே செய்துவிடலாம். என்னுடைய தவசிப்பிள்ளை பொன்னம்பலத்தை இந்த விஷயங்களில் நான் நன்றாகப் பழக்கி வைத்திருக்கிறேன். இன்றைய ராத்திரி அவனை விட்டால், அவள் எமலோகத்துக்குப் போனாலும் அவன் கூடவே போய் இடத்தைப் பார்த்துக் கொண்டு வந்துவிடுவான். அது போகட்டும். இடம் தெரிந்ததாக வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அவளிடம் எப்படி நெருங்குகிறது? அவளோடு கூடவே ஒரு கிழவி இருக்கிறாளாம்; யார் வந்தாலும் அவள் வேட்டை நாய் போல மேலே விழுந்து கடித்து அனுப்பி விடுகிறாளாம்; தபால் மூலமாக கடிதம் அனுப்பினால், அதை உடைக்காமலே நெருப்பில் போட்டு விடுகிறாளாம். நமக்கு முன் தப்பிலி சமஸ்தானத்து மகாராஜா எவ்வளவோ பாடுபட்டு அவமானம் அடைந்து விட்டார். எருமைநாதபுரம் மகாராஜா ஆயிரம் ரூபாய் நோட்டை, கடிதத்தில் வைத்து அனுப்பினாராம். அந்த நோட்டையும் நெருப்பில் போட்டுக் கரியாக்கி விட்டாளாமே. அப்படிப்பட்ட பகட்டுக்காரியிடத்தில் நாம் எப்படி நெருங்குகிறது.

மைனர்: (சிறிது ஆழ்ந்து யோசனை செய்து) முதலில் அவளுடைய இடத்தைக் கண்டுபிடிப்போம். அதன் பிறகு எப்படியாவது தந்திரம் செய்து, அவள் வீட்டில் உள்ள வேலைக்காரி, சமையற்காரி முதலிய எவளையாகிலும் பிடித்து, அவர்களுக்குச் சரியானபடி பணம் இளக்கினால், அவர்கள் தங்களுடைய எஜமானியை நம் வலையில் எப்படி வீழ்த்துகிறது என்பதற்கு ஏதாவது வழி காட்டுவார்கள். அதன்படி நாம் செய்வோம்; இன்றைக்கு பொன்னம்பலம் தவறாமல் இடத்தை மாத்திரம் கண்டுபிடித்துவிட்டால், நான் பிச்சைக்காரனைப் போலாவது அல்லது ஏதாவது பழம், புஷ்பம் முதலிய பொட்டைச்சி சாமான் விற்பவன் போலவாகிலும் வேஷம் போட்டுக் கொண்டு, அவள் இருக்கும் இடத்துக்குள் நுழைந்து துப்பு அறிந்து வருகிறேன். அதன் மேல் நாம் யோசனை செய்து காரியத்தை முடிப்போம் – என்றான்.

அதைக் கேட்ட துரைராஜா மகிழ்ச்சி அடைந்தவனாய், “பலே! மாப்பிள்ளைக்குத் தெரியாத யோசனைக்கு நான் என்ன சொல்லப் போகிறேன். அப்படியே செய்வோம்” என்று கூறிய வண்ணம் தவசிப்பிள்ளை பொன்னம்பலத்தை அழைத்து, அன்றிரவில் அவன் செய்ய வேண்டிய காரியத்தை அவனுக்குத் தெரிவித்து, அதற்குத் தேவையான தந்திர யுக்திகளை எல்லாம் சொல்லிக் கொடுத்து, அவனை அனுப்ப, அதன் பிறகு இருவரும் எழுந்தனர். அன்று மாலை ஏழு மணி முதல் ஒன்பதரை மணி வரையில் குலேபக்காவலி என்னும் நாடகம் வி.பி. ஹாலில் நடத்தப்படும் என்ற விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது ஆகையால், செட்டியாரிடம் போய் கடன் விஷயத்தை முடித்துக் கொண்டு நேராக அப்படியே வி.பி. ஹாலுக்கு தாங்களும் முன்னதாகவே போய்விட வேண்டும் என்னும் எண்ணத்தோடு அவர்கள் இருவரும் பங்களாவைவிட்டு வெளிக் கிளம்பினர்.

- தொடரும்