அத்தியாயம் 1

79.37k படித்தவர்கள்
21 கருத்துகள்

சுப்பண்ணாவும் மணிப்பயலும் கழுதைகளை ஓட்டிச் செல்வதற்குத் தயாராக நின்றிருந்தனர். மணிப்பயல் கழுதைகள் பாதை மாறும்போது தொடையிலும் புட்டத்திலும் அடித்து ஓட்டுவதற்கு குத்துச்செடிகளைக் கொத்தாகப் பிடுங்கி கையில் வைத்திருந்தான். சுப்பண்ணாவுக்கு எதுவும் தேவையில்லை. வாய்ச் சத்தத்தில் கழுதைகளை ஓட்டுபவர். சுப்பண்ணாவின் கழுதைகள் சாம்பல் நிறத்திலானவை. பொட்டுக்குக் கூடக் கறுப்பு இல்லை. கழுதைகள் வாங்கும்போது தெய்வாதீனமாக அவருக்கு அமைந்தது. கழுதைகள் சாம்பலோடு வெள்ளையோ கறுப்போ கலந்த பிறவிகளாக இருக்கும். முழுச் சாம்பல் அரிதிலும் அரிது. அறுபது கழுதைகளும் முதுகில் காப்பித்தளர் மூடைகளைச் சுமந்து அடிவாரத்துக்கு நடக்கக் காத்திருந்தன. மணிப்பயல் குரல் கொடுத்ததும் நடக்கத் தொடங்கிவிடும். வழியில் அறுபது கழுதைகளுக்கும் தீவனமாக காய்ந்த புற்களைச் சுமந்து இரண்டு கழுதைகள் நின்றிருந்தன. அப்பாவும் மகனும் கழுதைகளைக் குறுக்கு ஓடையில் நிறுத்தித் தீவனம் தந்து தண்ணீர் காட்டுவார்கள். குறுக்கு ஓடைக்கு அருகிலிருக்கும் மருதமரத்தினடியில் தரைக்காட்டுக்குப் போகிறவர்கள், ஒத்தையாளாக அடிவாரத்திற்கு நடப்பதற்கு பயந்து, வழித்துணைக்கு ஆட்கள் வருவதற்காகக் காத்திருப்பார்கள். தரைக்காட்டுக்குப் போகிறவர்களிடம் வெற்றிலை பாக்கும் புகையிலையும் இருக்கும். தரைக்காட்டில் விற்பதற்கென கேழ்வரகும், தேன்ராடும் வைத்திருப்பார்கள். சமயங்களில் பலாப்பழம் இருக்கும். மிளகைத் துணியில் கட்டி இடுப்பில் முடிந்திருப்பார்கள். முதுவான்கள் யாரும் மலையை விட்டுத் தரையிறங்குவதில்லை. அடிவாரத்தில் வருஷத்திற்கு ஒருமுறை கங்கம்மா கோவிலுக்குப் பொழுதடைய வந்து ராத்திரியில் பொங்கல் வைத்து முடித்து விடிவதற்கு முன்பாக மலையேறிவிடுவார்கள். அடிவாரத்தோடு அவர்களது எல்லை முடிந்துவிடும். தரைக்காட்டுக்கு அவர்கள் செல்வதில்லை. 

சுப்பண்ணா தலையில் கட்டியிருந்த உருமாலைக் கழற்றி முகம் துடைத்தார். ஈரக்காற்று முகத்தில் விழுந்தது. ஈரக்காற்றோடு காற்றாகக் காப்பி வறுபடும் வாசமும் வந்தது. மேற்குத்தோட்டத்தில் காப்பித் தளரை வறுக்கிறார்கள். சுப்பண்ணா அரேபிகா காப்பித்தளரின் வாசத்தை நுகர்ந்தார். அரேபிகாரகத்துச் செடிகள் ஒவ்வொன்றும் தென்னைமரத் தூரைப் போலிருக்கும். தோட்டத்துக்காரர்கள் தளரின் வேர் மேலேறி நின்று காப்பிப்பழம் பறிப்பதைப் பார்த்திருக்கிறார். முதுவான்வீட்டுக் குஞ்சலைகள் அரேபிகாசெடி மேலேறி விளையாடுவார்கள். சித்தாறு மூங்கிகல் தோட்டத்தில் அதை இப்போது பயிர் செய்வதில்லை. மேற்குத் தோட்டத்துக்காரர்களான மல்லிப்பட்டிக்காரர்கள் அதன் விதையை வைத்திருக்கிறார்கள். செண்டுவரை தோட்டத்தில் சிலரிடம் அரேபிகாவிதை இருக்கிறது. 

முட்டத்திலிருந்து போடிபட்டி அடிவாரத்திற்கு இருபத்தியிரண்டு மைல் நடக்கவேண்டும். அடிவாரத்திற்குப் போய்ச் சேர்கிறவரை குடிநீர் கிடைப்பது அரிது. கழுதைப்பாதையில் எதிரே வரும் சம்சாரிகள் யாரிடமாவது குடிநீர் இருந்தால் புண்ணியம். தோட்டத்துக்காரர்கள் காயவைத்த சுரைக்குடுவையிலும் பூசணிக்குடுவையிலும் குடிதண்ணீர் எடுத்து வருவார்கள். கழுதைப்பாதையில் ஆட்கள் வரவில்லையென்றால் தாகத்திற்குத் தண்ணீர் கிடைக்க வழியில்லை. தாகத்தோடு அடிவாரத்திற்குப் போய்ச் சேரவேண்டும். கழுதைப்பாதையில் மழைக்காலத்தில் ஊற்று கிளம்பி வாய்க்காலாக நீர் ஓடும். பிறகு வெயில் காலத்தில் வற்றிவிடும். குடிநீரில்லாத போது தாகத்திற்கு எலுமிச்சங்காய்களைக் கடித்து இலைகளை மென்று தின்று நடக்க வேண்டும். சுப்பண்ணா தன்னுடைய மடியில் எலுமிச்சைகளைக் கட்டி வைத்திருந்தார்.

மணிப்பயல் பதினெட்டாம்படி பெட்டிக்கருப்பனுக்கு சூடம் கொளுத்தி தரையில் விழுந்து வணங்கி எழுந்து, இடுப்பில் கட்டியிருந்த துண்டை உதறித் தலையில் கட்டினான். வேட்டியை மடித்து சுமையோடு கட்டி வைத்திருந்தான். காக்கி டவுசர் மட்டும் உடுத்தியிருந்தான். மணிப்பயல் அடிவாரத்திற்குச் சென்றதும் குளித்து விட்டு உடை மாற்றிக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தான். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

சுப்பண்ணனுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் செல்வம் கழுதை ஓட்ட வரமாட்டேன் என்று சித்தாறு மூங்கிகல் முதலாளி ராசப்பன்செட்டியார் காப்பித் தோட்டத்தில் வேலைக்கு இருக்கிறான். செல்வம் முதலில் சுப்பண்ணனுடன் கழுதை ஓட்டிக்கொண்டிருந்தான். சுப்பண்ணனும் செல்வமும் கழுதையில் ஏறுசுமையேற்றி மல்லிப்பட்டிக்குப் போய்த் திரும்பிய நேரத்தில் மழை பெய்தது. இடிச் சத்தத்திற்கு பயந்து இரண்டு கழுதைகள் பாதை மாறி ஓடிவிட்டன. ஓடிய கழுதைகளை நாள் முழுக்க தேடியும் அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவர்களுடன் தேடிப் பார்த்த முதுவான்கள், ‘செந்நாய் அடித்துத் தின்னுருக்கும். இல்லைன்னா நரி, பாதி தின்னு மீதியைத் திங்க முடியாம போட்டிருக்கும்’ என்று சொன்னார்கள். பத்து நாட்களுக்குப் பிறகு ஏறுசுமை கட்டி மல்லிப்பட்டிக்குப் போய் இறக்கிவிட்டு பெரியாத்துக்கோம்பை வழியாக தரைக்காட்டுக்கு இறங்கியபோது கட்டாந்தரையில் கழுதைகளின் எலும்புகளைப் பார்த்தார்கள். முதுவான்கள் சொன்னதுபோலத்தான் நடந்திருக்கிறது. செல்வம் இறந்து கிடந்த கழுதையைப் பார்த்து ஹோவென அழுதான். அவனால் அழுகையை அடக்க முடியவில்லை. அதற்குப் பிறகு கழுதை ஓட்ட வரமாட்டேன் என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டான். அவனது பெரியப்பா மூவண்ணா பெருமாள் அவனை ராசப்பன்செட்டியாரின் காப்பித்தோட்டத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். தைப்பொங்கல் வந்தால் செல்வத்திற்கு இருபத்தைந்து வயது முடிகிறது. கோடாங்கிப்பட்டியில் அவனுக்குப் பெண் தருவதற்குக் காத்திருந்தார்கள். 

செல்வத்திற்கு அடுத்தவன் மணிப்பயல். மணி கழுதை ஓட்ட ஆரம்பித்து எட்டு வருஷத்திற்கும் மேலாகிவிட்டது. மணிப்பயல் ஷோக்குப் பேர்வழி. தோட்டத்துக்குப் போகாத நாட்களில் குளித்து முடித்து நெற்றியிலும் நெஞ்சிலும் கையிலுமாக சந்தனம் தடவி ஊரிலிருக்கிற பதினாறு கோயிலுக்கும் போய்வருவான். காலையில் அவனுக்கு இரண்டு தட்டு இட்லி வேண்டும். குத்துச்சட்டி நிறையச் சட்டினி இருக்க வேண்டும். அவனுக்குப் பரிமாறத் தனியாக ஒருவர் இருக்க வேண்டும். அவனது அம்மா தங்கம்மாள், “கழுதைக்கு கல்யாணத்தை முடிச்சிட்டா தீனி குறைஞ்சிடும். இவனுக்கு யாரு இத்தனை வக்கணையா செஞ்சு தரப் போறா. வர்றவ உனக்குத் திங்குறதுக்குச் செஞ்சுட்டு இருந்தா, அப்புறம் எப்பிடிடா பிள்ளை பெத்தெடுப்பா?” என்று கோபமாகப் பேசுவாள். மணிப்பயல் நமுட்டுச் சிரிப்பு சிரித்து தட்டில் இருக்கிறதைத் தின்றுவிட்டு எழுந்துகொள்வான். ஆனால், வேலையென்று வந்துவிட்டால், மூன்று ஆள் வேலையை ஒருவனாகச் செய்து முடித்துவிட்டுத்தான் பச்சைத்தண்ணி குடிப்பான். இறங்குசுமை கட்டி கழுதையை ஓட்ட ஆரம்பித்தால் அடிவாரத்திற்குப் போய்ச் சேருகிறவரை வாயைக்கட்டி நடப்பான். 

விடியத் தொடங்கி கிழக்குப் பக்கம் மேகங்களுடன் மேகமாக வெளிச்சம் மெதுவாக எழுந்தது. மலைத்தோட்டத்தில் காகங்களைப் பார்க்க முடியாது. விடிந்ததும் காட்டுக் குயில்கள் கூவுவதைக் கேட்க முடியும். குயில் சத்தம் கேட்டால் விடிந்துவிட்டது என்று அர்த்தம். குயில்களுக்குப் பின்பாக சில நேரம் வானத்தில் கிளிகள் பறக்கும். மரத்தின் பொந்துகளில் ராத்திரியில் தங்கியிருந்து காலையில் தீனிக்கென பறக்கும். எலுமிச்சம் பழங்களைக் கொத்தி அதன் புளிப்புச் சுவைக்கு கீச்பூச்சென்று கத்தும். ஒத்தைக்கல் முதுவாக்குடியில் கொய்யா மரங்கள் இருந்தன. முதுவாக்குடிக்கு வடக்குப் பக்கம் பலா மரங்கள். அங்கு கிளிகளும் காட்டுக்குயில்களும் அடைந்திருக்கும். விடிந்ததும் அவை சடசடவெனப் பறந்து கழுதைப்பாதையின் குறுக்கும்மறுக்குமாகப் பறந்தலையும். 

மணிப்பயல், “த்தே த்தே தெர்ட்டூட்” என்று குரல் கொடுத்ததும் அறுபது கழுதைகளும் ஒன்று சொன்னதுபோல கால்களை எடுத்துவைத்து ஒன்றன்பின் ஒன்றாக நடக்கத் தொடங்கின. கடைசிக் கழுதையை சுப்பண்ணனும் முதல் கழுதையை மணிப்பயலும் பிடித்திருந்தனர். இரண்டு இரண்டு கழுதைகளாக ஜோடி போட்டு கழுதைப் பாதையில் நடந்தன. 

சரிந்த மலைப்பாதையில் கழுதைகள் சுமையுடன் இறங்கின. சுமை பாரம் கீழே விழாமல் வால்மட்டிக் கயிறால் முதுகில் கட்டிவைத்திருந்தார் சுப்பண்ணா. கழுதையின் வாலையும் குதத்தையும் கயிறு அறுத்து புண்ணாக்கக் கூடாது என்பதற்காக கவுறு கட்டிய இடத்தில் ஆலமர இலைகளையும் பச்சிலைகளையும் கொத்தாக வைத்துக் கட்டியிருந்தார். கழுதைகள் மண் பாதையை நுகர்ந்துகொண்டு நடந்தன. கண்களில் பீளை தள்ளி கொசுக்களும் ஈக்களும் மொய்த்தன. அவை கண்சிமிட்டியும் காதசைத்தும் கொசுவை விரட்டின. முன்னே செல்லும் கழுதைகள் குதம் விரித்து சிவந்த மலவாய் வழியாக விட்டை போட்டன. மண் பாதையில் கழுதை விட்டைகள் உருண்டு நின்றன. காளைப்பாடி மாம்பழத்தைப்போல கறுப்பும் சப்பட்டையுமான விட்டைகள், ஒன்றோடு ஒன்று ஒட்டி மலத்துவாரத்திலிருந்து வெளியேறியன. சுப்பண்ணன் சூடான விட்டைகளைக் கையில் எடுத்துத் தனது குதிகால் பிளவில் வைத்துக்கொண்டார். குதிகால் பிளவுக்குக் கழுதை விட்டை நல்ல மருந்து. மூன்றே நாளில் புண் ஆறிவிடும். சுப்பண்ணனுக்கும் அவரது கழுதைகளுக்கும் பொன்னப்பன் செய்கிற வைத்தியம் இது. 

மலைப்பாதை இறக்கத்தில் கழுதைகள் செல்லும்போது பாரம் தாங்காது விருட்டென்று இறங்கிக் கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக மணிப்பயல் பாதையின் குறுக்கே நின்றுகொண்டான். சரிவின் வேகத்தில் நிதானமிழந்து வரும் கழுதைகளைப் பிடித்து இழுத்து நிறுத்துவான். சரிவில் கழுதைகளின் ஓட்டத்தை நிறுத்த முடியாது. பாரச்சுமையோடு கழுதையுடன் ஓடி நிறுத்துவான். பாதை மேட்டுக்கு வந்ததும் கழுதைகளோடு கழுதைகளாக நடக்க விடுவான். கழுதை ஓட்டுவதில் மணிப்பயல் கெட்டிக்காரன். எட்டு வருஷம் ஓட்டிப் பழகி, வக்கப்பட்டி ஊர்க்காரர்கள் மெச்சுகிற கழுதைக்காரனாகிவிட்டான். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

மணிப்பயலுக்கு நாவறட்சி உண்டானது. மடியில் கட்டி வைத்திருந்த எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கடித்து மென்றான். புளிப்புச்சுவை நாவில் ஊறியதும் நாவறட்சி நின்றது. பதினாறு மைல்கள் கடந்து குறுக்கு ஓடைக்கு வந்தால் மூங்கிகல் தோட்டத்திற்குப் போகும் பாதை வரும். சுப்பண்ணன் மூங்கிகல் தோட்டத்துக்குச் சென்றிருக்கிறார். மூங்கிகல் முதுவாக்குடிக்குள் பழக்கமில்லாத யாரும் நுழைய முடியாது. மூங்கிகல் முதுவான்கள் புதிதாக வருகிறவர்களுக்குக் கால் கட்டுப்போட்டு பாதையை மாற்றிவிடுவார்கள். பாதை மாறி நடப்பவர்கள் வந்த வழியாகத் திரும்பி தரைக்காட்டுக்குப் போய்விடவேண்டும். இல்லையென்றால் நாளெல்லாம் பாதை மாறிக் காட்டுக்குள் நடந்து வழி தெரியாமல் அலைய வேண்டும். 

மூங்கிகல் குடி முழுக்க சேவல் கோழிகளும் வெள்ளாடுகளுமாக மேய்ந்து கொண்டிருக்கும். ராமசாமி செட்டியாரின் காப்பித் தோட்டம் மூங்கிகல்லில் இருக்கிறது. காப்பித்தளர் பறிக்கும் சமயம் ராமசாமி செட்டியார் மூங்கிகல்லில் தங்கிவிடுவார். அப்படித் தங்கியிருந்த சமயத்தில் அதிகாலை ஓடைக்குப் போய்த் திரும்பி வந்த பாதையில் கொய்யாமரத்திலிருந்த பழங்களை பறித்துத் தின்ன ஆசை வந்தது. குத்துக்கல்லின் மேலேறி பழத்தைப் பறிக்கும்போது செட்டியார் தடுமாறி கீழே விழுந்தார். எழுந்து கொள்ளமுடியவில்லை. முதுவாக்குடி வைத்தியர் வந்து பார்த்தார். இடுப்பு எலும்பு சேதமாகிவிட்டது, அவரால் இனி எழுந்து நடக்க முடியாது; உட்காரமுடியாது என்று சொல்லிவிட்டார். செட்டியாரை டோலி கட்டிக் கொண்டு வர தரைக்காட்டிலிருந்து மூங்கிகல்லுக்கு ஆட்கள் சென்றனர். ராமசாமிசெட்டியாரின் வீட்டிலிருந்து அவரது மனைவி போஜம்மாளும் மகன் ராமலிங்கமும் அடிவாரத்தில் கறுப்பு டாக்ஸி வைத்து காத்திருந்தார்கள். டோலிதூக்கும் ஆட்களுடன் சுப்பண்ணனும் ஒத்தாசைக்குச் சென்றார். சுப்பண்ணா அப்போதுதான் மூங்கிகல்லைப் பார்த்தது. டோலி தூக்குபவர்கள் டோலி கட்டுவதற்குக் கம்பளியும் மூங்கில் கம்பும் வைத்திருந்தனர். மூங்கிகல்லுக்குள் நுழைந்ததும் பெரிய முதுவானின் காலில் விழுந்து எழவேண்டும். அவருக்குக் காணிக்கை தரவேண்டும். பெரிய முதுவானிடம் வந்த விஷயத்தைச் சொல்லி தன்னை கழுதைக்காரன் என்றதும் முதுவாக்குடி மண்ணை அள்ளி சுப்பண்ணனின் நெற்றியில் பூசிவிட்டார், பெரிய முதுவான். பிறகு, “நீ போ காரெ” என்று குடிக்குள் அனுப்பி வைத்தார். அப்படியிருந்தும் சுப்பண்ணனுக்குப் பயம். மந்திரம் போட்டு கால்களை கட்டுப்போட்டுவிடுவார்கள் என்று பயந்து நடந்தார். மூங்கிகல் முதுவாக்குடிப் பெண்கள் தலைவாரிக் கொண்டையிட்டு மரிக்கொழுந்தை வைத்திருந்தார்கள். மினுமினுவெனத் தலைமுடி. காட்டுமரத்தைப் போல உடல். சிவந்த உதடுகள்தான் சுப்பண்ணனுக்குப் பிடிக்கவில்லை. கழுதைகளுக்கு வைத்தியம் செய்கிற பொன்னப்பனிடம் அதைச் சொன்னார். “ஏஞ்சாமி” என்று அவன் கேட்டதற்கு அவர், “புண்ணு விழுந்த கழுதைப் பொச்சு மாதிரி இருக்குடா” என்றார். அதைக் கேட்டு பொன்னப்பன் சிரித்தான். 

மூங்கிகல் முதுவாக்குடிக்குள் அடக்கல் இருக்கிறது. முன்பு கொல்லத்திலிருந்து உப்பு வியாபாரிகள் மூங்கிகல் முதுவாக்குடி வழியாகத் தரையிறங்கி உப்பு வாங்க வேதாரண்யத்திற்குப் போயிருக்கிறார்கள். வெள்ளைமாடுகளில் உப்பு மூடைகளை ஏற்றி முதுவாக்குடி வழியாக கொல்லத்திற்கு மலையேறியிருக்கிறர்கள். உப்பு வியாபாரிகளைப் பற்றி மூவண்ணா அவரிடம் சொல்லியிருக்கிறார். அவர்களுடைய மாட்டுப்பாதையை ஒருமுறை சுப்பண்ணனும், மூவண்ணனும் கழுதைச்சுமையேற்றிக் கொண்டுபோகும்போது பார்த்திருக்கிறார்கள். மாட்டுப்பாதையில் இப்போது யாரும் போய் வருவதில்லை. முள்ளும் கல்லும் குத்துச்செடியும் மரமுமாகப் பாதை மறைந்து அழிமானமாகிவிட்டது. மாட்டுப்பாதையில் அவர்கள் உண்டாக்கிய அடக்கல்லையும், அடக்கல்லுக்குப் பக்கத்திலிருந்த பலாமரங்களையும் கூழாத்துப்பாதையில் நடந்து போய் பார்த்து வருபவர்கள் இருக்கிறார்கள். அதற்குப் பிறகு தலைச்சுமை கூலியாட்கள் நூறுபேரும் போடிபட்டி கூலிச்சத்திரத்திலிருந்து ஏறுசுமைக்கும் இறங்குசுமைக்கும் மலையேறி இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் மலையேறி சென்று வந்த பாதை ஓராள் பாதை. அதில் முதுவான்களைத் தவிர வேறு யாருடைய நடமாட்டமும் இப்போது இல்லை.

- தொடரும்