அறிமுகம்

336.93k படித்தவர்கள்
224 கருத்துகள்

தொடங்கும் முன் சில சொற்கள்

அன்றைக்கு எனக்குப் பிறந்த நாள். நாலு இனிப்பு சாப்பிட்டு, நல்ல பிள்ளையாக ஆபீஸ் போய்விட்டு, நேரத்தோடு வீட்டுக்கு வந்து குடும்ப இலக்கியம் படைக்கலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று எம்பெருமான் ஏற்கெனவே எனக்காக வேறொரு திட்டம் தீட்டி வைத்திருந்தான். குமுதம் அலுவலகத்துக்குள் அன்று நான் நுழைந்த சில நிமிடங்களிலேயே ஆசிரியர் ராவ் அழைத்தார்.

ஒரு கட்டுரை வேண்டும். நேற்று ஆரம்பித்திருக்கும் ஆப்கன் யுத்தம் சம்பந்தமாக.

அந்த நேற்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. அக்டோபர் 7-ம் தேதி. அமெரிக்கப் படைகளும் அமெரிக்க ஆதரவு தேசங்களின் உபகாரப் படைகளும் ஆப்கனிஸ்தானுக்கு வந்துவிட்டிருந்தன. அடைந்தால் ஒசாமா. அழித்தால் தாலிபன். ராவெல்லாம், பகலெல்லாம் விமானங்கள் சீறிப் பறந்து குண்டு மழை பொழியத் தொடங்கியிருந்தது. உலகு தழுவிய தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா அறிவித்திருக்கும் மாபெரும் யுத்தம் என்று மறுநாள் அத்தனை செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் அதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

அந்தச் செய்திகளைப் படித்திருந்தேனே தவிர உண்மையில் எனக்கு ஆப்கனிஸ்தானைப் பற்றி அப்போது அவ்வளவாகத் தெரியாது. சரியாகச் சொல்வதென்றால் ஒன்றுமே தெரியாது. முன்னொரு காலத்தில் சோவியத் யூனியன் படையெடுத்து ஆக்கிரமித்திருந்த தேசம் என்று தெரியும். அவர்கள் எப்போது விட்டுச் சென்றார்கள், யாரிடம் விட்டுச் சென்றார்கள் என்றுகூடத் தெரியாது. நாளிதழ்களில் வரும் அன்றன்றைய கலவர, குண்டுவெடிப்புச் செய்திகளை மட்டும் அறிந்திருந்தேன். குமுதத்தில் பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றை எழுதியபோது ஆங்காங்கே ஆப்கனிஸ்தான் வந்து போயிருந்தது. ஆனால், இந்தியக் கோணத்தில் இருந்து மட்டுமே அப்போது பாகிஸ்தானின் அரசியலை அணுகியதால் அதன் மறு புறங்களை அவ்வளவாக அந்தத் தொடரில் தொடவில்லை.

ஆப்கன் யுத்தம் குறித்து ஒரு கட்டுரை வேண்டும் என்று ராவ் சொன்னதால் அதைக் கவனிக்க ஆரம்பித்தேன். மூன்று நாள் வேறு வேலையே இல்லாமல் யுத்தத்தை கவனிப்பதும் ஆப்கன் வரலாற்றைப் படிப்பதுமாகவே இருந்த பிறகு ஆசிரியரிடம் சொன்னேன், 'இது ஒரு கட்டுரை விவகாரமல்ல. ஏழெட்டுக் கட்டுரைகளுக்கு விஷயம்  இருக்கிறது.'

அந்த ஏழெட்டுக் கட்டுரைகளைக் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதினேன். எழுதிக்கொண்டிருந்தபோது தோன்றியது. அது ஏழெட்டுக் கட்டுரை விவகாரமல்ல, மிக நீண்டதொரு தொடருக்கான சங்கதி.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

இன்றைக்கு எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. ஆப்கன் அரசியலைக் குறித்து எழுதலாம் என்று ஆராயப் போனபோதுதான் அதை அமெரிக்க அரசியலில் இருந்து தொடங்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது. டாலர் தேசம் அப்படித்தான் பிறந்தது. டாலர் தேசம் எழுதி முடிக்கவிருந்த நேரம், பாலஸ்தீன் பிரச்னை உச்சத்தில் ஊசலாடிக்கொண்டிருந்ததால் ஆப்கனைச் சிறிது தள்ளி வைத்துவிட்டு நிலமெல்லாம் ரத்தம் எழுதினேன். அதில் இன்னும் இரண்டு வருடங்கள் போயின. நிலமெல்லாம் ரத்தம் நிறைவடைந்த சமயத்தில் மத்தியக் கிழக்கு முழுவதும் பரவி வேர் விட்டிருந்த அனைத்துத் தீவிரவாத இயக்கங்களைக் குறித்தும் போராளி இயக்கங்களைக் குறித்தும் எழுத வேண்டும் என்று நினைத்தேன். மாயவலை அங்கு பிறந்தது. தாலிபன், அதன் ஒரு பெரும் பகுதியாக வந்து உட்கார்ந்தது.

எப்படி யோசித்துப் பார்த்தாலும் ஒரு பத்தாண்டுக் காலம் என்னை வேறு எதையும் சிந்திக்கவே விடாமல் இந்த இயல் சார்ந்து மட்டுமே இயங்க வைத்த பாவமோ புண்ணியமோ தாலிபன்களையே சேரும்.

அரபியில் தாலிப் என்றால் மாணவன் என்று பொருள். தாலிபன் என்பது பன்மை. நாம் அதற்கும் ஒரு கள் விகுதி சேர்த்துக் கூட்டம் கூட்டிவிடுகிறோம். அது ஒரு பிரச்னை இல்லை என்று வையுங்கள். இங்கே கவனிக்க வேண்டிய அதி முக்கியமான பிரச்னை, இந்தத் தாலிபன் யாரும் முறையாகப் பள்ளிக்குச் சென்று படித்தவர்களே அல்ல. இப்போது இருக்கலாம். அதுவும் ஒரு சிலர். தோன்றிய காலத்தில் அத்தனை பேரும் எளிய விவசாயக் கூலிக் குடும்பங்களில், ஆடு மாடு மேய்த்துக் கொடுத்து (ஆம். முதலாளிகளுக்கு) சம்பாதிக்கும் குடும்பங்களில் பிறந்து, நேராகப் புத்தகங்களுக்கு பதிலாக நாட்டுத் துப்பாக்கி பிடித்தவர்கள்தாம். ஆப்கனில் வாழ முடியாமல் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்து, அங்கே மதரசாக்களுக்குச் சென்று மதப் பாடம் படித்தார்கள். அதுதான் அவர்கள் பெற்ற கல்வி. பல்லாண்டுக் கால அடிமை வாழ்வில் இருந்து அல்லா எப்படியாவது தங்களை விடுவித்துவிடுவார் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்கள்.

1993-ம் வருடம் பேனசிர் புட்டோ பாகிஸ்தானின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது ஆப்கனில் தனக்கு சௌகரியமான ஒரு அரசு அமைந்தால் நல்லது என்று நினைத்தார். ஏனெனில், அன்றைக்கு ஆப்கனை ஆண்டுகொண்டிருந்த முஹம்மது நஜிபுல்லா தலைமையிலான அரசு ஊழலுக்குப் பெயர் போனது. லஞ்சத்தில் உலக சாதனை படைத்தவர்கள் அவர்கள். பாகிஸ்தானில் இருந்து எதை ஏற்றுமதி செய்து ஆப்கனுக்கு அப்பால் அனுப்ப வேண்டுமானாலும் ஒவ்வொரு முறையும் பல லட்சக் கணக்கில் லஞ்சம் அழ வேண்டியிருந்தது. தவிரவும் அங்கே நாளெல்லாம் யுத்தம். வருடம் முழுதும் உள்நாட்டு யுத்தம். அரசுக்கு எதிரான கலகங்கள், கலவரங்கள். மூலைக்கொரு போராளிக் குழு, வேளைக்கொரு தாக்குதல். இந்தத் தொல்லைகளில் இருந்து விடுபட்டுத் தனது வியாபாரம் சிக்கலின்றி நடக்க வேண்டுமானால் ஆப்கனில் தனக்கொரு பொம்மை அரசு தேவை என்று பேனசிர் நினைத்தார். அதனால்தான் கந்தஹாரின் கதாநாயகனாக அன்று வலம் வந்துகொண்டிருந்த முல்லா முஹம்மது ஓமரை ஐ.எஸ்.ஐ. மூலம் அழைப்பு விடுத்து பாகிஸ்தானுக்கு வரவழைத்தார்.

அங்கே மதரசாக்களில் பயின்றுகொண்டிருந்த ஆப்கன் அகதிப் பிள்ளைகளை அவர் பொறுப்பில் விட்டு ஆயுதப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். அதன் பிறகு ஓமர் அவர்களை அழைத்துக்கொண்டு ஆப்கனுக்குச் சென்றதும் கந்தஹாரில் இருந்து காபூல் வரை நீதி கேட்டு யுத்தம் செய்தபடியே பயணம் செய்ததும் காபூலைப் பிடித்ததும் தாலிபன் அங்கே ஆட்சியமைத்ததும் 1996-ம் வருடத்து சரித்திரம். அப்போதிலிருந்து 2001 வரை தாலிபன் ஆப்கனிஸ்தானில் நிகழ்த்திய கோரத் தாண்டவங்கள் உலக சரித்திரத்தில் ஒரு பெரும் இருட்பகுதி.

இந்த வரலாறை நான் எழுதியபோது ஆதார நூல்கள் அதிகம் கிடையாது. இன்றைக்கு உள்ளது போல, இணைய வளர்ச்சியும் அதிகமில்லை. ஆனால், ட்விட்டர் இருந்தது. அது ஒரு சௌகரியம். சட்டென்று யாரையாவது பிடித்து சந்தேகம் கேட்க முடியும். அல் காயிதா ஆதரவாளர்கள், அனுதாபிகள் பலர் புனைபெயரில் அன்று ட்விட்டரில் தீவிரமாக இயங்கினார்கள். ஆனால், தாலிபன்களுக்கு இணையமெல்லாம் தெரிந்திருக்குமா என்றே தெரியவில்லை. அவர்கள் பெயரில் ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஃபத்வாக்கள், அறிக்கைகள்கூட அவர்களுடைய வெளிநாட்டு ஆதரவாளர்கள் மூலமாகத்தான் வந்தன. அதுவும் நம்மால் படிக்கவே முடியாத அரபி லிபியில் இருக்கும். இருப்பினும் விடாமல் யாராவது அகப்படுகிறார்களா, எந்த விதத்திலாவது ஒரு தொடர்பு கிடைத்துவிடாதா என்று முயற்சி செய்துகொண்டே இருந்தேன்.

ஒரு நண்பர் அகப்பட்டார். அப்போது அவர் சவூதி அரேபியாவில் இருந்தார். மருத்துவர். முன்னதாக ஆப்கனிஸ்தானில் வைத்தியாதிபதியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தவர். அவருக்குத் தாலிபனைத் தெரிந்திருந்தது. உள்நாட்டு யுத்த காலத்தில் அவர்களுக்கும் நாலைந்து கால் கட்டு, கைக்கட்டு போட்டிருப்பார் என்று நினைக்கிறேன். அது முக்கியமல்ல. தாலிபனுடன் நேரடித் தொடர்பில் இருந்த அரேபியர்கள் சிலரை அவருக்கு நேரடியாகத் தெரியும் என்பதுதான் எனக்கு வாய்த்த நற்பேறு. உண்மையில், இனாயத்துல்லா என்ற அந்த நண்பர் எனக்குச் செய்த உதவிகள் விலைமதிப்பற்றவை.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. யுத்த களேபரம் உச்சக்கட்டத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது நமது வைத்திய சிரோமணி ஏழெட்டுப் பக்கங்களைப் படம் எடுத்து (அன்றைக்கு ஜேபெக் கிடையாது. ஜிஃப்தான்.) எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார். ஏதோ பெரிய ராணுவ ரகசியம் என்று தெரிந்துவிட்டது. ஆனால், என்னவென்று தெரியவில்லை. நண்பர் அனுப்பிய படங்கள் டவுன்லோட் ஆனால்தானே தெரியும்? அன்றைய என் இணைய வேகம் என்பது நான்கு எம்பிபிஎஸ் என்று ஞாபகம். அவர் அனுப்பிய கோப்புகளோ, ஒவ்வொன்றும் அறுநூறு எழுநூறு எம்பி எடை கொண்டது. படங்களின் எடை குறைத்து அனுப்பும் தொழில்நுட்பமெல்லாம் கிடையாது. we transfer போன்ற சௌகரியங்கள் வந்திருக்கவில்லை. அனுப்பிய மின்னஞ்சல் ஒழுங்காகப் போய்ச் சேர்ந்தாலே பெரிய சாதனை என்று கருதப்பட்டது.  முக்கால்வாசி டவுன்லோட் ஆகியிருக்கும். திடீரென்று இணையத் தொடர்பு அறுந்துவிடும். திரும்பவும் முதல் பரோட்டாவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

ஒருவாறாக அவற்றை டவுன்லோட் செய்து, இங்கே அரபி தெரிந்த அறிஞர் பெருமான் ஒருவரிடம் கொண்டு போய்க் காட்டி அர்த்தம் கேட்டுத் தெரிந்துகொண்டபோது ஆடிப் போய்விட்டேன். மலைச் சரிவுகளில் இறங்கியபடி போரிடும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகள். கனரக ஆயுதங்களைக் கையாளும் வழிமுறைகள். வெடிபொருள் கையிருப்பு தீர்ந்துவிட்டால் அவசரத்துக்கு கோல்கேட் பற்பசையையும் சைக்கிள் பால்களையும் ஜெலட்டின் துகள்களையும் கொண்டு வெடிபொருள் தயாரிப்பது எப்படி என்னும் செய்முறை விளக்கம்.

அன்றைக்கு நான் தாலிபன் எழுதியபோது மக்கள் அப்படி அள்ளி எடுத்து ஏந்திக் கொண்டதற்கு எழுத்து மட்டுமல்ல காரணம். இத்தகைய பிரத்தியேகமான தகவல்கள் எண்ணற்ற முகம் தெரியாத நண்பர்கள், பத்திரிகையாளர்கள், ட்விட்டர்வாசிகளிடம் இருந்து கிடைத்தன. பல அல் காயிதா ஆதரவாளர்களின் ட்விட்டர் ஐடிகளைப் புனைபெயரில் பின் தொடர்ந்தும் நிறைய பெற்றிருக்கிறேன். இந்த மெனக்கெடல் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமே இல்லை.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

தாலிபன்கள் இனி இல்லை; முற்றிலும் அழித்து ஒழித்துவிட்டோம் என்று அமெரிக்கா சொன்னது. அது பொய் என்பது இன்று தெளிவாகிவிட்டது. இதே போலத்தான் அல் காயிதாவைச் சிதைத்துவிட்டோம்; இனி எழுந்திருக்க அங்கே ஆள் இல்லை என்றும் சொன்னார்கள். தாலிபன்கள் மீண்டு வந்த ஜோரில் அல் காயிதாவும் எழுந்து வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

அன்றைக்கு அமெரிக்காவுக்கு சோவியத் யூனியனுடன் பனிப்போர். அவர்கள் க்யூபாவில் ஒரு தளம் அமைத்து, அருகே இருந்து அச்சமூட்டியதற்குப் பழி வாங்கும் விதமாக இங்கே ரஷ்யாவுக்குப் பக்கத்தில் ஆப்கனிஸ்தானை கபளீகரம் செய்து ஆட்டம் காட்டினார்கள். இன்று சோவியத் இல்லை. ஆனால், இன்னொரு பெரும் சக்தியாக சைனா எழுந்து நிற்கிறது. தாலிபனின் இன்றைய எழுச்சிக்குப் பின்னால் சைனா மற்றும் பாகிஸ்தானின் வலுவான ஆதரவு உண்டு. இனி வரும் காலங்களில் யுத்தம் என்பது பொருளாதார யுத்தம்தான் என்பது பாமரர்களுக்கும் தெரிந்துவிட்ட சூழ்நிலையில், புவியியல் ரீதியில் இந்தியாவுக்கு மிக நெருக்கமாக உள்ள தேசங்களில் நிகழும் ஒவ்வொரு புரட்சியும் ஆட்சி மாற்றமும் கலவரமும் இசைகேடான காரியங்களும் சிறிய அளவிலாவது நம்மை பாதிக்கவே செய்யும். தாலிபன் விஷயத்தில் இம்முறை அது பெரிய பாதிப்பாக இருக்கவே சாத்தியங்கள் அதிகம் என்று தோன்றுகிறது. எப்படி என்று இந்தத் தொடரில் நீங்கள் காணலாம்.

இந்த உலகில் எங்கெல்லாம், எப்போதெல்லாம் அரசியலும் மதமும் கைகோக்கிறதோ, அங்கெல்லாம் அப்போதெல்லாம் சராசரி மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். சரித்திரம் முழுவதும் இதற்கு உதாரணங்கள் உண்டு. நமக்கு அதெல்லாம் அநாவசியம். ஏனெனில், இந்த விஷயத்தில் இன்றைக்கு நமக்குள்ள தெளிவு உலகில் வேறெந்த தேசத்து மக்களுக்கும் இராது. விளக்கேற்றிக் கைதட்டினால் கிருமி ஒழிந்துவிடும் என்று நம்பச் சொன்ன ஆட்சியாளர்களைக் கண்டவர்களல்லவா நாம்? அதற்கும் செவி சாய்த்து, விளக்கேற்றிக் கைதட்டப் பலபேர் இங்கே இருந்தார்கள் என்பதையும் கண்டோம். அந்தக் கண்மூடித்தனம் ஒரு தேசம் முழுவதற்கும் பொதுவாகிப் போகிறதென்றால் காரணம், கல்வியின் போதாமை. அறிவை அடக்கி மேலேறி அமரும் மத அபிமானம். துதி அரசியல். வழிபாட்டு அரசியல்.

தலைமுறை தலைமுறையாக ஆப்கானியர்கள் இதில்தான் உழன்று வந்திருக்கிறார்கள். அதனால்தான் தலைமுறை தலைமுறையாகக் கஷ்டப்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.

மதமே மந்திரம் என்பது அங்கே மக்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டதல்ல. மதம்தான் மந்திரம் என்று சொல்லி சொல்லிப் புகட்டப்பட்டது. இதோ மீண்டும் ஒருமுறை அதே மாயவலைக்குள் விழுந்திருக்கிறார்கள். அவர்களை மீட்பது நம்மால் இயலாது. ஆனால், அவர்கள் பிழையிலிருந்து நாம் கற்க நிறைய இருக்கிறது.

ஆரம்பிக்கலாமா?

(தொடரும்)