அத்தியாயம் 1

58.91k படித்தவர்கள்
19 கருத்துகள்

தெற்கு வடக்காக வளைந்து நெளிந்து நீண்டு கிடந்தது மணிமுத்தா நதி. கோடையில் வரத்துத் தண்ணீர் நின்று போயிருந்த போதிலும் ஊருணித் தண்ணீரால் மண்ணோடு வேர் பற்றி செழித்துப் படர்ந்து பச்சைப் பசேலென்று கிடந்தது வெங்காயத் தாமரை. கருநீல பஞ்சு மிட்டாய்களைப் போல இதழ் விரித்திருந்த அவற்றின் பூக்கள், பச்சைப் பரப்பிற்கும் மேலே பூச்செண்டாய் உயர்ந்து நின்றன. கரையிலும்கூட குட்டைத் தண்டுடன் பூத்திருக்கும் அல்லிப் பூக்கள். மணிமுத்தா நதிக்கரையின் கருங்களி நிறத்தையோ, நதியின் அடியில் கிடக்கும் வெண்குறுத்து மணலையோ, கொஞ்சமும் வெளிக்காட்டிவிடாமல் மூடிக்கிடந்தது பசுமை. கற்பகநாதர் குளத்தையும் வாடியக் காட்டையும் பிரிப்பது போல குறுக்குக் கோடாய்க் கிடக்கும் மணிமுத்தா நதியின் பாலத்தில் உட்கார்ந்திருந்தாள் மணிமேகலை.

மனது நிலைகொள்ளாது தவித்துக்கொண்டிருந்தது. அவளுடைய வாழ்க்கையின் அத்தனை நிகழ்வுகளிலும் முக்கிய சாட்சியாக இருந்து கொண்டிருந்த மணிமுத்தாநதி, எந்த வித பதற்றமுமின்றி அப்படியே கிடந்தது. மணிமுத்தா நதி கிழக்காலுள்ள ஊரில் பிறந்து மேற்காலுள்ள ஊரில் வாழ்க்கைப்பட்டவள் மணிமேகலை. இன்பமென்றாலும் துன்பமென்றால் நதியைக் கடந்துதான் அவள் அதைச் சுமந்து செல்லவேண்டி எத்தனையோ முறை இதேபோல் இந்த மதகிலே அவளுடைய சுமைகளையும் மனச் சுமைகளையும் இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறிச் சென்றிருக்கிறாள். அப்போதெல்லாம் அவள ஆறுதலைத் தந்த இந்த நதி, இன்று எந்தவித அமைதியையும் தராமல் அப்படியே கிடக்கிறது.

அவளுடைய கணவன் செல்வராசு குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்துத் துன்புறுத்தும் போதெல்லாம் அவள் கோபித்துக் கொண்டு தாய்வீட்டிற்குக் கிளம்பிவிடுவாள். இரவானாலும் பகலானாலும் இதுதான் வழி. கணவன் வீட்டிலிருந்து கோபத்துடன் ‘விறுவிறு’வென்று நடக்கும் அவளுடைய கால்கள், இந்த நதியைத் தாண்டிப் போவதில் வேகம் காட்டாது. அப்படியே மதகில் உட்கார்ந்துவிடுவாள். தெற்கிலும் வடக்கிலுமாக நீண்டு தெரியும் நதியைப் பார்த்தபடி நேரம் போவதுகூட தெரியாமல் உட்கார்ந்திருப்பாள். பார்வையாலேயே தன் சோகங்களை எல்லாம் நதியோடு பேசி கொட்டித் தீர்ப்பாள், கண்ணீர் விடுவாள். மதகை விட்டு எழும்பும்போது அவளுடைய கோபமெல்லாம் குறைந்து போய் மனத்தெளிவு அடைந்தவளைப் போல் ஆகி விடுவாள். 

அம்மா வீடு செல்லும் எண்ணத்தை கைவிட்டு திரும்பவும் கணவனின் வீட்டிற்கே சென்றுவிடுவாள். அப்போதெல்லாம் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆறுதலை இந்த நதி அவளுக்கும் தந்திருக்கிறது. ஒரு தாயைப்போல அது அவளைச் சமாதானப்படுத்தியிருக்கிறது. ஆனால் இன்று இந்த நதி எந்த வகையிலும் அவளை அமைதிப்படுத்த விரும்பாதது போல தன்போக்கில் அப்படியே கிடக்கிறது.

சற்று கிழக்காய் நதிக்கு முதுகைக் காட்டியபடி அமைந்திருந்த கற்பக மாரியம்மன் கோயிலின் கல்யாண மண்டபத்திலிருந்து பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. பக்திப்பாடல்களில் ஆரம்பித்து பின் சினிமாப் பாடல்களை ஓடவிட்டவர்கள், முகூர்த்த நேரம் நெருங்க நெருங்க மங்கல வாத்தியங்கள் ஒலிப்பது போன்ற பாடல்களையும் மணமக்களை வாழ்த்துவது போன்ற பாடல்களையும் போட்டுக் கொண்டிருந்தார்கள். 

இதுபோல கல்யாணத்திற்கு குடிபுகும் விழாக்களுக்கும் மைக்செட் கட்டுபவர்கள் எந்தெந்த பாடல்களைப் போடவேண்டும் என்பது சம்பிரதாயமாகி இருந்தது. சில குறிப்பிட்ட பாடல்களை வரிசையாக அடுக்கி வைத்துக்கொள்வார்கள். கிடைக்கும் நேரத்திற்கு தகுந்தபடி பாடல்களைப் போடுவார்கள். வீட்டில் ரேடியோ கேட்க வசதி இல்லாத பெண்கள் கல்யாண வீடுகளில் பாடும் பாடல்களைக் கேட்டு, அதோடு சேர்ந்து பாடி சந்தோஷப் படுவார்கள். 

அடுத்தடுத்து என்ன பாடல் ஒலிக்கும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியும். விருப்பமான பாடல்களைக் கேட்க தம் தோழியருடன் அவர்கள் காத்திருப்பதுமுண்டு. ஆனால் இந்தச் சம்பிரதாயம் எதுவும் தெரியாமல் புதிதாய் மைக்செட் கட்ட வந்த ஆளொருவன் தத்துவப்பாடல்களை பெரிதும் விரும்புபவன். புதிதாய் குடிபுகும் வீட்டிற்கு மைக்செட் கட்டினான். அவன் போட்ட முதல் பாட்டே அவனுக்கு உதை வாங்கிக் கொடுத்தது.

“இந்த வீடு நமக்குச் சொந்தமில்ல பாடுறா சின்னத்தம்பி” என்ற பாடலைப் போட்டால் யார்தான் சும்மா விடுவார்கள்? கடனை உடனை வாங்கி வீடு கட்டியவனுக்கு இந்தப் பாடலைக் கேட்டால் எப்படியிருக்கும்?

“கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண...” என்று ஓடிக்கொண்டிருந்த பாடல் இடையிலேயே நிறுத்தப்பட்டது.

“மணமகளே மணமகளே வா... வா... உன் வலது காலை எடுத்து வைத்து வா... வா...” கணீரென்று ஒலித்தது பாடல்.

"பொண்ணு வந்திச்சி போலருக்கு. வரட்டும் வரட்டும். இன்னும் கொஞ்ச நேரத்துல மணயில ஒக்கார வச்சி தாலி கட்டிருவாவொ.” நீண்ட பெருமூச்சொன்று அவளிடமிருந்து வெளியானது.

“இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டன். யாங் நெனப்பெல்லாம் ஒண்ணுக்கும் ஒதவாமப் பெயிட்டே. இனிமே என்ன இருக்கு நம்மளுக்கு?” மணிமேகலையின் நெஞ்சில் பாறாங்கல்லை தூக்கி வைத்தது மாதிரி கனத்தது. மணிமுத்தா நதியையே வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்து இருந்தாள்.

“என்ன சின்னக்கா. நீ இஞ்ச என்ன செய்யிற? ஒன்னய எங்க எங்கயெல்லாம் தேடுறது?” கேட்டுக்கொண்டே வந்த தன் தங்கை வளர்மதியை திரும்பிப் பார்த்தாள். பார்வை மட்டும்தான் அவள்மீது பதிந்தது. மனம் எங்கோ சிக்குண்டு இருந்தது.

“தத்துத் திருப்புனாத்தான் தாலிகட்ட முடியுமுங்குறாவொ, மறந்துட்டியா. இஞ்சவந்து ஒக்காந்துட்ட?”

“ம்...”

“வாக்கா. நேரம் ஆவுதுல்ல. வந்து தத்தத் திருப்பிக் குடு.”

“யாம் பொண்ண என்னால பாதுகாக்க முடியுமான்னுதான் மகமாயிகிட்ட தத்துக் குடுத்தன். அந்த மகமாயியும் காப்பாத்தாம வுட்டுட்டாளே?”

“இப்ப என்ன நடந்து போச்சின்னு இப்புடிப் பேசுற நீ?”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“தத்தத் திருப்பி தானம் பண்ணச் சொல்லுறாவொ. இனிமே யாம் பொண்ணு கெதி என்னாவுமோத் தெரியலையே?”

“யாங்க்கா இப்புடியெல்லாம் பேசுற? பொண்ணாப் பொறந்த பொண்ணக் கட்டிக்குடுக்காம காலம் முச்சூடும் நம்மளேவா வச்சிக்கிட முடியும்?”

“கட்டிக்குடுக்க வேண்டாமுங்கல. போயிம் போயிம் என்னாட்டமே அதுவும் வாடியக்காட்டுக்கா வாக்கப்பட்டுப் போவணும்?”

“வாடியக்காடுன்னா என்னக்கா? யாம் இப்புடி பேசுற?”

“குடிகாரப் பய ஊரு தங்கச்சி அது. நாதியத்த பய ஊரு.”

“……”

“அந்த ஊருல நாம்பட்ட சிறுப்பாணி எனக்குத்தான் தெரியும். இனிமே செத்தாக்கொட வாடியக்காட்டு வாசம் யாம்மேல வீசச் கொடான்னு இருந்தனே. இப்புடி ஆயிட்டே.”

“ஒரு கையில அஞ்சுவெரலும் ஒரே மாதிரியாவா இருக்கு. வாடியக்காட்டுல பொறந்தவ்வொ எல்லாருமே சத்தியா அப்பா மேரியே இருப்பாவொன்னு யாங் நெனக்கிற?”

“சாதிப் பழக்கமும் சதக்குப்ப நாத்தமும்பாவோ. ஊரு பழக்கம் யார வுடும். என்னயிருந்தாலும் எங்ககொண்ட வச்சி வளத்தாலும் அந்த வூரு பொண்ணுங்குறத்தாலதான கலா இந்த புத்தியெடுத்திச்சி. நம்மவூரு பொண்ணுன்னா இப்புடியெல்லாம் நடந்துகிடுமா. நம்மளுந்தான் மூணு பேரு வளந்தம். அப்பா வார்த்தக்கி மறு வார்த்த பேசிருக்குறமா?”

“அப்படியெல்லாம் சொல்லாதக்கா. நம்ம காலம் வேற, இந்தக் காலம் வேற.”

“காலம் வேறயா இருந்தான்ன. தாயிபுள்ள சொந்தஞ் சோலியெல்லாம் அப்புடி அப்புடியேத்தான இருக்கு. காலம் மாறிப் பெயிட்டுங்குறத்துக்காவ அம்மாவ அத்தன்னா கூப்புடுறம். பெத்தவ மனசு எப்பயும் ஒரேமேரித்தான் இருக்கும். அதப் புரிஞ்சிக்கிடாத புள்ளயெல்லாம் ஒரு புள்ளயா?”

“கலா இப்ப என்ன பண்ணிப்புட்டுன்னு இப்புடி வேகப்படுற?”

“வாடியக்காட்டு சம்மந்தம் நம்மளுக்கு வேண்டாமுன்னு நான் தலயால அடிச்சிக்கிட்டு இருக்கக்குள்ளயே அதுக்கு எவ்வள கல்லு மனசாயிருந்தா, ‘நாங் கட்டிக்கிட்டா குமாரத்தான் கட்டிக்கிடுவன், இல்லாட்டிச் செத்துப் பெயிருவன்னு’ சொல்லும்?”

மணிமேகலையால் தன் மகள் கூறிய அந்த வார்த்தைகளை ஜீரணிக்க முடியவில்லை. கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது.

“பெத்து வளத்ததுக்கு அர்த்தமில்லாம பெயிட்டு பாத்தியா. இவ்வள நாளும் நாம்பட்ட கஷ்டத்துக்கு கண்ட பலன் இதுதான். ஒரு நிமிசத்துல தூசிமேரி என்னயத் தூக்கி வீசிப்புட்டு அதோட சொந்தஞ் சோலிய தேடிக்கிட்டு. நாந் தேவயில்லாம பெயிட்டன். இனிமே நான் என்னத் துக்காவ இருக்கணும் சொல்லு?”

“அதையெல்லாம் நெனக்காதக்கா. சின்னஞ்செறுசுதான பேசத் தெரியாமப் பேசிப்புட்டு. நம்ம பெத்த புள்ளதான. கலாவுக்கு மட்டும் ஒம்மேல பாசமில்லாமயா பெயிரும். என்னக்கிருந்தாலும் அது ஒம் மவதான். அது இல்லன்னு ஆயிருமா?”

“மவளாவுது மண்ணாங்கட்டியாவுது. எனக்கு யாரும் வேண்டாம்.” பொங்கி வந்த அழுகையை மணிமேகலையால் அடக்க முடியவில்லை. தேம்பித் தேம்பி அழுதாள்.

“வாடியாட்டு சனம் யாராவுது பாத்துட்டா என்ன நெனப்பாவோ. அழிச்சாட்டியம் பண்ணாம எளும்பி வாக்கா. இந்தமேரி சம்மந்தத்த எந்த லோகத்துலயும் நீ தேடிப் புடிக்க முடியா. வூடு கட்டிக்குடுத்து பொண்ணெடுக்குற அளவுக்கு இந்தக் காலத்துல யாரு இருக்குறா, சொல்லு?”

“……”

“ஊரு ஒலகத்து நெலவரத்த நீனும் பாத்துக்கிட்டுத்தான இருக்குற? பொண்ண ஒரு தட்டுலயும் பவுன ஒரு தட்டுலயுமா வச்சி நெறுத்துக் கேக்குறானுவொ. ஒண்ணுமே வேண்டாம், பொன் குடுத்தாப் போருமுன்னு வந்து நிக்கிறவ்வொள புடிக்கலங்குறியே.”

“பொன்னு, பொருளு, காசு, பணத்தவிட வாழ்க்க முக்கிய மில்லயா தங்கச்சி? திங்கிறதும் பேலுறதும் தூங்கியெழும்புறதும் மட்டுமா வாழ்க்க? பட்டினியாக் கெடந்தாக்கொட புருசன் பொண்டாட்டி சிரிச்சிப் பேசிக்கிட்டு புள்ளகுட்டி வொளோட ஒத்து இருக்கணும். அப்புடியில்லாத வாழ்க்கயெல்லாம் ஒரு வாழ்க்கயா?”

“…....”

"யாங் வாழ்க்கைக்குத்தான் எல்லாரும் எமனா இருந்துட்டாவொ. யாம் பொண்ணு வாழ்க்கயாவுது நல்லாருக்கணுமுன்னு ஆசப்பட்டன்.”

"நீ நெனக்கிற மேரியா எல்லாம் நடக்குது வுடு. அதுவொளா ஆசப்பட்டு ஏத்துக்கிடுறது. நல்லதோ கெட்டதோ எதுன்னாலும் அதுவொளே அனுபவிச்சிக்கிடட்டும்.” 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“நீ சொல்லுறமேரி என்னால சொல்ல முடியல தங்கச்சி. யாம் பொண்ணும் நின்னு என்னாட்டமே கண்ணு கலங்குமோன்னு நெனக்க நெனக்க யாங் ஈரக்கொலயெல்லாம் நடுங்குது தங்கச்சி.”

“என்ன சின்னக்கா நீ இப்புடி பயப்புடுற? மாப்புள்ள வூட்டு யாரு காதுல யாவது வுழுந்துட்டா, என்னாவும் நெனச்சிப்பாரு.”

“செப்புச் செலமேரி இருக்குன்னு யாம் பொண்ண பொத்தி வளத்தனே. நான் என்ன கொற வச்சன் அதுக்கு.”

“நீ வளத்ததுலயும் கொறயில்ல, அது வாக்கப்பட்டு போறதுலயும் கொறயில்ல. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயிங்குற மேரி கண்டங்கத்தரிக்காய கடிச்ச ஒனக்கு தொண்ட வர கசக்குந்தான். எழும்பி வா, நேரம் ஆவுது” என்றவள் மணிமேகலையின் கையைப் பிடித்து இழுத்து எழுப்பிவிட்டாள். மணிமேகலையின் நடை தளர்ந்து போயிருந்தது. 

அவளைத் தேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், “ஒம்மவ நல்லாருக்கும் பாருக்கா. ஒன்னோட நல்ல மனசுக்கு ஒரு கொறயும் வராது” என்றாள்.

“இதுமேரி எத்துனபேரு சொல்லிருக்குறாவொ தெரியுமா? ஆயிரஞ் சொல்லு ஒரு ஆளக் கொல்லும்பாவொ. பத்தாயிரம் பேரு என்னய நல்லாருப்ப நல்லாருப்பன்னு பல்லுமேல நாக்கப் போட்டு சொன்னாவொளே. ஒருத்த சொல்லுகொட எனக்கு ஒதவாம பெயிட்டே...”

மனம் பேதலித்தவளைப்போல புலம்பிக்கொண்டே வந்தாள் மணிமேகலை. அவளைப் பார்க்க வளர்மதிக்கு பாவமாக இருந்தது. “என்னமாய் இருந்த அக்கா இன்று இப்படியாகி விட்டதே. தலையில் இடியே விழுந்தாலும் அதைத் தூசியைப் போல தட்டிவிட்டு வரும் திடமும் துணிச்சலும் உள்ள அக்கா இன்று இப்படி பலவீனப்பட்டுப் போயிருக்கிறதே. இந்த சிறிய விஷயத்திற்காக இப்படி மனமொடிந்து போய்விட்டதே” என்று நினைத்துக் கொண்டாள் வளர்மதி.

கலா பிறந்த இருபத்தி இரண்டாம் நாளே இந்தக் கோவிலுக்குத் தூக்கிவந்து எள், தவிடு இவற்றை மாரியம்மனிடமிருந்து பெற்றுக் கொண்டு அவளை மாரியம்மனுக்கு ‘தெத்தம்' பண்ணிக் கொடுத்து விட்டுப் போயிருந்தாள். தத்துக் கொடுத்து பத்தொன்பது வருடங்களாகிவிட்டன. தன்னோடு இருந்தாலும் கலா இத்தனை நாட்களும் மாரியம்மனின் பிள்ளையாகவேதான் வளர்ந்தாள். மாரியம்மன் தத்து எடுத்திருக்கும் பெண்ணை யாருடைய விருப்பம் போலவும் யாரும் தாலி கட்டி சொந்தமாக்கிக்கொள்ள முடியாது என்பதால் தத்துத் திருப்பும் சடங்குக்கு கோயில் பூசாரி மணிமேகலையைக் கூப்பிட்டார். வளர்மதி தன் பிடிக்குள்ளேயே மணிமேகலையை வைத்திருப்பவளைப் போல மாரியம்மனுக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தினாள். தவிட்டையும் எள்ளையும் வாங்கிக்கொண்டு ஏதேதோ மந்திரங்களைச் சொல்லி கலாவை மணிமேகலையின் கையில் திருப்பிக் கொடுத்தார் பூசாரி.

அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடையில் குமாருக்குப் பக்கத்தில் உட்கார வைக்கப்பட்டாள் கலா. குமார் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தான். கலாவை விடவும் நான்கு வயது மூத்தவன். பார்ப்பதற்கு படித்த, நாகரிகம் தெரிந்த பையனைப்போல இருந்தாலும் உண்மையில் ஐந்தாம் வகுப்புகூட படிக்கவில்லை. மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குச்சியை ஓங்கிக் காண்பித்தார் என்பதற்காக குச்சியைப் பிடுங்கி அவரையே அடித்துவிட்டு வீட்டுக்கு ஓடி வந்துவிட்டானாம். வீட்டிலும் முரட்டுப் பிள்ளையாகத்தான் வளர்ந்திருக்கிறான். சிறிய வயதிலிருந்தே கலாவைக் கட்டிக்கொள்ள வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தவன் தொடர்ந்து கலா பள்ளிக்கூடம் போய் படிப்பதைப் பார்த்து அவளுக்கு பொருத்தமானவனாய் தான் இருக்க வேண்டுமென்பதற்காக எழுதப் படிக்கவும் மற்ற நாகரிக பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறான். அவனுடைய முரட்டுக்குணம்தான் மேகலையை அதிகமாய் பயப்பட வைத்துள்ளது. 

பதினொரு வயதாகும்போதே தண்ணீர்க் குடத்துடன் வந்து கொண்டிருந்த மேகலையை வழிமறைத்து, ‘எனக்குப் பொண்ணு தாறியளா?’ என்று கேட்டிருக்கிறான். விளையாட்டிற்குக் கேட்கிறானென்று நினைத்தவன், ‘உள்ளூருக்குள்ள பொண்ணு குடுக்குறல்ல’ என்று சொல்லியதுதான் தாமதம் தலையிலிருந்த மண்குடத்தை தடியால் ஒரே அடியாய் அடித்து உடைத்துவிட்டு ஓடியிருக்கிறான். அதுவே மணிமேகலைக்கு பெரும் அதிர்ச்சியாயிருந்தது. அதன் பிறகு அதிக நாட்கள் கலாவை வாடியக்காட்டில் அவள் வைத்திருக்கவில்லை.

ஐந்தாம் வகுப்புவரை கற்பகநாதர் குளத்தில் தன் அம்மா வீட்டில் விட்டுப் படிக்க வைத்தாள். பிறகு கும்பகோணத்தில் வாழ்க்கைப்பட்டுப் போயிருந்த தன் தங்கை வளர்மதியின் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்துவிட்டாள். பன்னிரெண்டாம் வகுப்பு முடிய கலா கும்பகோணத்தில்தான் படித்தாள். பத்தாம் வகுப்பு விடுமுறைக்கு ஊருக்குப் போயிருந்தபோது இருவருக்கும் பழக்கம் உண்டாகிவிட்டது. இது இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் மணிமேகலைக்கே தெரிய வந்திருக்கிறது. 

‘படிக்கிற பொண்ணு ஒன்னய மதிக்காதுடா. அந்தப்பொண்ணு வேண்டான்டா’ என்று குமாரிடம் ஒருமுறை அவனுடைய அம்மா சொல்லிவிட்டாள் என்று வீட்டிலுள்ள பாத்திர பண்டங்களை யெல்லாம் உடைத்து நொறுக்கி குவித்துப் போட்டுவிட்டானாம். அன்றைக்கு இருந்த அதே முரட்டுக்குணம்தான் இன்றைக்கும் அவனிடம் இருக்கிறது. அயோக்கியத்தனம் செய்பவனையும் ரௌடித்தனம் செய்பவனையும் கதாநாயகனாய் சினிமாவில் பார்த்துப் பழகிய கலா, குமாரின் முரட்டுத்தனத்தை ரசிக்கத் தொடங்கியிருக்கிறாள். ஆனால் இதை எல்லாம் நினைக்க நினைக்க மணிமேகலைக்குத்தான் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது போலிருந்தது. இந்தக் கல்யாணத்தை நடக்கவிடாமல் செய்ய எவ்வளவோ பிரயாசைப்பட்டாள். ஆனால் அவள் நினைத்தது எதுவுமே நடக்காமல் போய்விட்டது.

“அக்கா... பொண்ணு மாப்புள்ள பொருத்தத்தப் பாரேன். இதுக்கு இதுதான்னு சொல்லிவச்சிக்கிட்டு வளத்தமேரி இருக்குறத்த” என்றாள் வளர்மதி.

மணிமேகலை பார்க்க விரும்பாதவளைப்போல அங்குமிங்குமாய் தன் பார்வையை திசைமாற்றி அலையவிட்டாள்.

“பெத்த புள்ளய மாலையும் கழுத்துமா பாக்கக் குடுத்து வச்சிருக்கணும். நீ என்னடான்னா மூஞ்சத் திருப்பிக்கிட்டு இருக்குற. கோவதாவத்தயெல்லாம் ஒதுக்கி வச்சிட்டுப் பாரு அதுவொள” என்று வலுக்கட்டாயமாய் பிடித்து இழுத்து பார்க்க வைத்தாள் வளர்மதி.

மணிமேகலை நிமிர்ந்து பார்த்தாள். ஜோடிப் பொருத்தம் பாந்தமாக இருந்தது. பூவாலும் நகையாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்த கலா ஒரு தேவதையைப்போல தெரிந்தாள். ‘பக்கத்தில் உட்கார்ந்திருப்பவன் நம் மகளுக்கேற்ற தேவகுமாரன் தான்’ என்று நினைக்கத் தோன்றியது அவளுக்கு. பார்வையை மறைப்பதுபோல திடீரென்று இரண்டு கண்களிலும் குளம் கட்டி நின்றது கண்ணீர். பக்கத்திலிருந்த வளர்மதி தன் அக்காவையே பார்த்துக்கொண்டு நின்றாள். ‘இது நிச்சயமாக வேதனையால் தளும்பும் கண்ணீராக இருக்க முடியாது’ என்று நினைக்கத் தோன்றியது அவளுக்கு. 

மணவறையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மணிமேகலை. வெகுதூரம் ஓடிக் களைத்தவள், தன் ஓட்டம் முடிந்து உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொள்ளும் ஆசுவாசத்துடன் மெதுவாய் வளர்மதியின் தோளில் சாய்ந்தாள். இதுவரை மூச்சிரைக்க அவள் ஓடிவந்த பாதை பின்னால் நீண்டு கிடந்தது. தங்கை வளர்மதியின் கையைப் பிடித்தபடி பழைய நினைவுகளுக்குள் மூழ்கினாள் மணிமேகலை.

- தொடரும்