அத்தியாயம் 1

21.64k படித்தவர்கள்
4 கருத்துகள்

விதைக் கோட்டைக்குள் எலி

ட்டிலின் மீது விடப்பட்ட கற்பகவல்லியம்மாள் தெளிவடைந்து தனது இயற்கை நிலைமைக்கு வர, அன்றைய தினம் மாலைவரையில் பிடித்தது, பூஞ்சோலையம்மாள், கோகிலம்பாள், புஷ்பாவதி ஆகிய மூவர் மாத்திரமே மாறி மாறி அவ்விடத்திலிருந்து, அந்த அம்மாளுக்குரிய உபசரணைகள் புரிந்து வந்தனர். பாச்சாமியான் என்னும் முரட்டுத் துருக்கனால் பெருத்த அவமானம் ஏற்பட்ட பிறகு பூஞ்சோலையம்மாள், தனது வேலைக்காரிகளும் அந்தச் சம்பவத்தை அறிந்திருப்பார்களோ என்ற நினைவினாலும், அச்சத்தினாலும் அவர்களை அந்த அந்தப்புரத்திற்கு அழைக்காமல், தானே மற்ற இருவரோடு அங்கே இருந்து கற்பகவல்லியம்மாளது மூர்ச்சையைத் தெளிவித்தனள். 

நிச்சயதார்த்தத்திற்காக வந்திருந்த பெண்பாலார் அனைவரும் கோகிலாம்பாள் இருந்த இடத்தைவிட்டு வேறொரு மண்டபத்திற்குப் போய் அங்கே இருந்தனரென்று முன்னரே சொன்னோம் அல்லவா? அவர்களும் சிறிது நேரத்திற்குப் பிறகு உண்டான பெருத்த கலகத்தையும் ஆரவாரத்தையும் உணர்ந்து, ஜன்னல்களின் வாயிலாகவும், வெளியில் சென்றும், பாச்சாமியான் சொன்ன சொற்களைக் கேட்டு, மிகுந்த ஆச்சரியமும் திகிலும் அடைந்து ஒருவரோடு ஒருவர் வாய்விட்டுப் பேசவும் மாட்டாமல் வெட்கமும் கலக்கமும் அடைந்தவர்களாய், இனி தாங்கள் அந்தப் பங்களாவில் இருப்பது உசிதமன்று என நினைத்து, ஒவ்வொருவராக எல்லோரும் அந்தச் சாயுங்காலத்திற்குள் அவ்விடத்தைவிட்டுத் தத்தம் வீடுகளிற்குச் சென்றுவிட்டனர். பாச்சாமியான் முதலியோருடன் சென்ற ஆண்பாலரான சகலமான ஜனங்களும் மறுபடியும் பங்களாவிற்குத் திரும்பி வராமலேயே போய்விட்டனர். 

சுந்தரமூர்த்தி முதலியார் ஒருவர்மாத்திரம் சாயுங்காலத்திற்குப் பிறகு திரும்பி வந்து தாங்களும் தங்களது ஜாகைக்குப் போகலாம் என்றும், புறப்பட்டு வரும்படியாகவும் புஷ்பாவதிக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். புஷ்பாவதி அவ்வாறு செய்திகொண்டுவந்த மனிதனுக்கு பூஞ்சோலையம்மாள், கோகிலாம்பாள் ஆகிய இருவரும் அறியும்படி மறுமொழி சொல்லியனுப்பினாள். கற்பகவல்லியம்மாள் நிரம்பவும் பரிதாபகரமான நிலைமையில் இருப்பதால் அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களைவிட்டு தாம் தமது பங்களாவிற்குப் போக மனம் இடம் கொடுக்கவில்லை என்றும், ஆகையால் தான் அன்றைய இரவு முழுதும் இருந்து மறுநாட் காலையில் புறப்பட்டு வருவதாகவும், அவர் போகலாம் என்றும் புஷ்பாவதி தனது தமயனுக்குச் செய்தி சொல்லியனுப்பியது அன்றி, தானும் சிறிதுநேரம் அவ்விடத்தைவிட்டுப் போய்த் தனது அண்ணனிடத்தில் பேசிக்கொண்டிருந்து அவரை அனுப்பிவிட்டு வந்து சேர்ந்தாள். 

அன்றையதினம் ஏற்பட்ட பெருத்தமான ஹானியில், சுந்தரமூர்த்தி முதலியாரும் அங்கேயே இருக்கவேண்டும் என்று உபசரிக்க பூஞ்சோலையம்மாளுக்கு முகம் இல்லை. அந்த அம்மாளது மனம் சுத்தமாக இடிந்து உட்கார்ந்து போய்விட்டது. ஆகையால், தான் என்ன செய்வது என்பதும் தோன்றவில்லை; பிற மனிதரது முகத்தில் விழிப்பதற்கும் மனம் கூசியது. ஆனால் புஷ்பாவதி மாத்திரம் அவர்களுக்கு அநுகூலமாகவே இருந்து இரக்கமும் அநுதாபமும் அந்தரங்க விசுவாசமும் காட்டி வந்ததைக் கருதி, அவளை அனுப்பிவிட மாத்திரம் விரும்பாமல் இருந்தாள். கண்ண பிரானுக்குப் பரிந்து பேசி வாதாட ஒரு வக்கீலை அமர்த்தும் விஷயத்தில், சுந்தரமூர்த்தி முதலியார் தங்களுக்கு உதவி செய்வார் என்று புஷ்பாவதி காலையில் சொன்ன விஷயம் கோகிலாம்பாளுக்கு நன்றாக நினைவிருந்தது. 

ஆனாலும் கற்பகவல்லியம்மாளுக்கு ஏற்பட்ட பெருத்த இழிவிற்குப் பிறகு சுந்தரமூர்த்தி முதலியாரது மனநிலைமை எப்படி மாறிப்போயிருக்குமோ என்றும், அவர் தங்களது சம்பந்தத்தை இனி நாடுவாரோ மாட்டாரொஒ என்றும், தங்களுக்கு உதவி செய்வாரோ மாட்டாரோ என்றும், பலவாறு ஐயமும், அச்சமும், வெட்கமும் அடைந்தவர்களாய் கோகிலாம்பாளும், சுந்தரமூர்த்தி முதலியாரது புறப்பாட்டிற்கு எவ்வித ஆட்சேபணையும் சொல்லாமல் இருந்துவிட்டாள். ஆகவே, அவரும் புறப்பட்டுப்போய்விட்டார். புஷ்பாவதியைத் தவிர மற்ற அயலார் ஒருவர்கூட மிகுதியில்லாமல் எல்லோரும் போய்விட்டனர். நிரம்பவும் அழகாகவும் உன்னதமாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் பிரம்மாண்டமான பங்களா உயிரற்ற வெற்றுடம்பு போலவும், பாழடைந்த மண்டபம் போலவும் பயங்கரமாகத் தோன்றியது. 

வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும் அன்றைய தினம் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களையும் கண்டு, அவற்றை உண்மையென்றே நம்பினார்கள். ஆகையால், தங்களது எஜமானியம்மாளுக்கும் பெண்ணிற்கும் நேர்ந்த பிரமாதமான அவமானத்தையும் தலைகுனிவையும் நினைத்து நினைத்து மட்டுக்கடங்காத் துயரமும், அவமானமும், சோர்வும் அடைந்து தளர்ந்து மூலைக்கு மூலை முட்டு முட்டாக உட்கார்ந்துகொண்டிருந்தனர். அன்றைய பகல் முழுதும் பூஞ்சோலையம்மாள் கோகிலாம்பாள் ஆகிய இருவருக்கும் ஆகாரம் முதலிய எந்த தேகபாதையிலும் மனம் நாடவில்லை; புஷ்பாவதி முதலியோரையும் உண்ணும்படி சொல்லி உபசரிக்க வேண்டும் என்பதும் தோன்றவில்லை.

அப்படிப்பட்ட விவரிக்க சாத்தியமில்லாத மகா துக்ககரமான நிலைமையில் இருந்தபடியே, அவர்கள் கற்பகவல்லியம்மாளைத் தெளிவித்தனர். தங்களுக்கு ஏற்பட்ட அத்தகைய அபாரமான இழிவிலிருந்து நாம் எப்படி விலகுவது என்ற ஒரே கவலை மாத்திரம் அவர்களது மனதைத் துளைத்துச் சித்ரவதை செய்துகொண்டிருந்ததேயன்றி, கற்பகவல்லியம்மாள் அப்படிப்பட்ட கேவலமான நடத்தை உடையவள் அல்ல என்பதை மாத்திரம் அவர்களது மனம் உறுதியாக நம்பியது. அன்றையதினம், பிள்ளையின் பேரிலும், தாயின் பேரிலும் ஏற்பட்ட இரண்டு அவதூறுகளும், காலகதியினால், போலீசாரால் கற்பிக்கப்பட்ட பொய்க் குற்றங்களாக இருக்கலாம் என்றும், தாயும் பிள்ளையும் மாசுமறுவற்ற நல்ல நடத்தை உடையவர்கள் என்றும், அவர்கள் புஷ்பாவதியிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தபடியே, கற்பகவல்லியம்மாளது விஷயத்தில் கரைகடந்த இரக்கமும், பச்சாதாபமும், வாஞ்சையும் காண்பித்து அந்த அம்மாளைத் தேற்றி, ஏதாவது ஆகாரம் சாப்பிடும்படி வருந்தி உபசரித்துக்கொண்டிருந்தனர்.

கற்பகவல்லியம்மாள் தனது கண்களைத் திறந்து அவர்களது முகத்தில் விழிக்கவும், வாயைத் திறந்து அவர்களோடு பேசவும்மாட்டாமல் வெட்கு, மிகவும் குன்றிப்போய், உயிரற்ற சவம் போலக் கிடந்தாள் ஆனாலும் அப்படிப்பட்ட மகா சோதனையான காலத்திலும் அந்தத் தனிகர்களாக புண்ணிவதிகள் தன்னைக் கைவிடாமலும் தன்னைப்பற்றி இழிவான அபிப்பிராயம் கொள்ளாமலும் முன்போலவே, மரியாதை, வாஞ்சை முதலியவற்றைத் தோற்றுவிப்பதைக் காணக்காண அவள் நன்றியறிதலினால் உருகிக் கண்ணீர் விடுத்ததன்றி, அவர்களிடத்தில் பேசுவதற்கு ஒரு சிறிது துணிவடைந்தவளாய்ப் பூஞ்சோலையம்மாளை நோக்கி, “அம்மா! உங்கள் இருவரைப் போலத் தங்கமான மனசையுடைய மனிதர்கள் இந்த உலகத்தில் இருப்பார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. எங்களால் உங்களுக்கு இன்றையதினம் நேர்ந்த விசனமும், அவமானமும் பழியும் கொஞ்சம் நஞ்சமல்ல. உங்களுடைய நிலைமையில் வேறே யாராவது இருந்தால், இந்நேரம் என்னை அவமானப்படுத்தி வெளியில் துரத்தியிருப்பார்கள். 

நீங்களோ உங்களுடைய மனசிலுள்ள சஞ்சலங்களையெல்லாம் அடக்கிக்கொண்டு, இந்த மகாபாவிக்கு விடாமுயற்சியோடு இன்னமும் உபசாரம் செய்துகொண்டிருக்கிறீர்கள். என்னவோ, இந்தச் சமயத்தில், உங்களுக்கு எங்களால் இப்படிப்பட்ட இழிவும் அவமானமும் ஏற்பட்டாலும், ஈசுவரன் உங்களுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டான். நாங்கள் பரம தரித்திரங்கள்; எப்போதும் ஏழ்மையிலும் தாழ்மையிலும் இருந்து கஷ்டப்படப் பிறந்தவர்கள். 

அப்படிப்பட்ட கருத்தோடு கடவுள் எங்களைப் படைத்திருக்க, அவருடைய திருவுளத்துக்கு மாறாக நீங்கள் எங்களைத் திடீரென்று இப்படிப்பட்ட மகோன்னத பதவிக்கு உயர்த்தி எங்களையும் உங்களுக்குச் சரிசமானமாகச் செய்ய முயன்றால், அது பலிக்குமா? குபேர பட்டணம் கொள்ளை போனாலும் எங்களைப்போன்ற நித்திய தரித்திரர்களுக்கும் அந்த இடத்தில் அடியும் உதையுந்தான் கிடைகுமன்றி, காதறுந்த ஓர் ஊசி கூடக் கிடைக்காது; எங்கள் தலைப்பொறியை நாங்கள் தொலைத்தே தீரவேண்டும். அதற்குமாறாக நாங்கள் நடந்தால், மீளாத்துன்பமும் ஆராத்துயரமும் தீரா அவமானமும் சம்பவிப்பது நிச்சயம்; ஆகையால் இனிமேல் ஒரு விநாடி நேரம்கூட நான் இங்கே இருப்பது சரியல்ல; எங்களால் உங்களுக்கு இன்றைய தினம் முழுதும் ஏற்பட்ட துக்கமும் அவமானமும் போதும். நான் இங்கே இருந்தால் இன்னமும் உங்களுக்கு ஏதாவது பெருத்த பொல்லாங்கு வந்து நேரும்; ஆகையால், நான் என்னுடைய ஜாகைக்குப் போய்ச் சேருகிறேன். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

என்மேல் கருணை கூர்ந்து, என்னை ஒரு வண்டியில் வைத்து என்னுடைய வீட்டில்கொண்டுபோய்விட்டுவிடச் செய்யுங்கள். உங்களுக்கு அந்தக்கோடி புண்ணியமுண்டு; மேகங்கள் கைம்மாறு கருதாமல் அமிர்தம் போன்ற ஜலத்தை உலகத்தாருக்குப் பொழிவது போல, நீங்கள் எங்கள் விஷயத்தில், அன்பையும் ஆதரவையும், மரியாதைகளையும் இதுவரையில் மழைபோலப் பொழிந்ததையெல்லாம் நான் என்றைக்கும் மறக்கமாட்டேன். நீங்கள் சந்தோஷமாகவும் செளக்கியமாகவும் நீடுழிகாலம் இருந்து வாழவேண்டும் என்று நான் சதா காலமும் கடவுளைத் துதித்துக்கொண்டே இருப்பேன் என்பது உறுதி” என்று கரைகடந்த உருக்கமும், வாஞ்சையும், விசனமும் தோன்றக் கூறினாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி மாலையாக வழிந்தது. மனவெழுச்சியும், அழுகையும் கிளம்பி நெஞ்சை அடைத்து முகத்தை விகாரப்படுத்தின; உடம்பும் கை கால்களும் காற்றில் நடுங்கும் மாந்தளிர் போலப் பதறுகின்றன. அந்த அம்மாளது நிலைமை மகா பரிதாபகரமாகவும் அதைக் காணும் கல்லும் கரைந்துருகி வாய்விட்டு அழத்தக்கதாகவும் இருந்தது. அந்த அம்மாளது உருக்கமான சொற்களைக் கேட்கவே, பூஞ்சோலையம்மாளுக்கும் கோகிலாம்பாளுக்கும் மனம் கலங்கியது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. தேகம் கிடுகிடென்று ஆடியது. அவர்கள் இருவரும் தங்களது விசனத்தைப் பொறாமல் முன்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டனர். 

தனது தாய் என்ன மறுமொழி சொல்லுகிறது என்பதை உணராமல் தயங்கியதைக் கண்ட கோகிலாம்பாள், தான் அந்தச் சமயத்தில் பேசியே தீரவேண்டும் என்று நினைத்தவளாய் நிரம்பவும் வணக்கமாகவும் மரியாதையாகவும் கற்பகவல்லியம்மாளை நோக்கி, “அம்மா! தாங்கள் இப்படி விசனப்படுவது எங்களுடைய மனசை வாள்கொண்டு அறுக்கிறது. இன்றைய தினம் நேர்ந்த இரண்டு தீமைகளிலிருந்தும் நாங்கள் தங்களை வெறுத்து விலக்கி விடுவோம் என்றாவது, நாங்கள் தங்களிடத்தில் வைத்திருக்கும் மரியாதை மதிப்பு, நல்ல அபிப்பிராயம் முதலியவைகளுக்குக் கொஞ்சமாவது குறைவு ஏற்படும் என்றாவது தாங்கள் நினைத்துக் கவலையேகொள்ள வேண்டாம். 

இன்றைய தினம் நேர்ந்த விஷயங்கள் எல்லாம் ஈசுவரனுடைய சோதனையே தவிர வேறல்ல என்பது எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். இப்படிப்பட்ட இழிவான காரியங்களையெல்லாம் நீங்கள் செய்யக் கூடியவர்களல்ல என்பதும் எங்களுடைய உறுதியான எண்ணம். முன்காலத்தில் சந்திரமதிக்கு நேர்ந்த மகா பயங்கரமான பழியைவிட இது ஒரு பெரிய தீமையா? தன்னுடைய நாடு நகரங்களையும், ராஜ்யத்தையும், சுகபோகங்களையும், சம்பத்தையும், பெருமையையும், இழந்து புருஷனைவிட்டுப் பிரிந்து, குழந்தையை நாகப்பாம்புக்கும் இரைகொடுத்து, அதைக் கொளுத்த ஒரு முழத்துண்டுக்கும், ஒரு பிடி வாய்க்கரிசிக்கும் வகை இல்லாமல் தத்தளித்து நள்ளிரவில் சுடுகாட்டிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்து போகையில் காசிராஜனது குழந்தையைக் கொன்று விட்டாள் என்ற அடாப்பழி வந்து லபித்ததே! அப்படிப்பட்ட பேரிடியையும், அபாண்டமான பழியையும்விட அதிகமாக இனி இந்த உலகத்தில் யாருக்காவது துன்பங்கள் நேரப் போகின்றனவா? சந்திரமதியோ ஒரு மகா சக்கரவர்த்தியின் பட்ட மகஷி. 

நாமெல்லாம் எந்த மூலை? உலகத்தார் நம்மைப்பற்றி எப்படியாவது நினைத்துக்கொள்ளட்டும். மனசுக்கு மனசே சாட்சி என்று, நாம் திரிகரண சுத்தியாக எவ்விதத் தவறையும் செய்யாது இருக்கையில், நமக்குப் பிறரிடத்திலும் பயமில்லை; கவலைப்படவாவது லஜ்ஜைப்படவாவது நியாயமும் இல்லை. வருவது வரட்டும் என்று நினைத்து மனதின் தைரியத்தை விடாமல் நம்மாலான முயற்சிகளை நாம் செய்வதே உசிதமான காரியம். உங்களுக்கும் எங்களுக்கும் ஏற்பட இருந்த சொந்தம் ஏற்பட்ட மாதிரியே; இனி நாங்கள் பின்வாங்கப் போகிறதில்லை. எது எப்படியானாலும் இந்தக் கலியாணம் என்றைக்கும் முடிந்தே தீரும். தங்களுடைய குமாரரே என்னுடைய பர்த்தாவென்று நான் எப்போது எண்ணினேனோ, அந்த எண்ணம் இனி என்னுடைய உயிர் இருக்கிற வரையில் மாறப்போகிறதில்லை. ஒருவரை ஒரு பெண் புருஷராக எண்ணிவிட்டால், அவருக்கு நியாயமாகவோ அநியாயமாகவோ ஏற்படும் நன்மை தீமைகளையெல்லாம் அந்தப் பெண்ணும் அநுபவிக்கக் கடமைப்பட்டவளாகி விடுகிறாள். 

அப்படி அநுபவிக்கப் பின் வாங்கினால், அவள் குடும்ப ஸ்திரீயல்ல; கேவலம் புருஷருடைய நன்மையை மாத்திரம் பங்கு போட்டுக்கொள்ள முன்வரும் தாசிகளுக்கு சமம் ஆவாள். ஆகையால், நாங்கள் இந்த ஏற்பாட்டிலிருந்து விலகிக்கொள்ளப் போகிறதில்லை. சாஸ்திரப்படி இந்தக் கலியாணம் நிறைவேறாது இருந்தாலும் வியவகாரத்திற்கும் நியாயத்திற்கும், அது நிறைவேறிவிட்டதாகவே, நாங்கள் மதிக்கிறோம். நாம் நாளை தினம் காலையில் யாரையாவது மனிதரை அனுப்பி, சாமர்த்தியசாலியான ஒரு வக்கீலை அமர்த்தி வாதாடி தங்களுடைய குமாரரை விடுவிக்கச் செய்வோம். அந்த விஷயத்தில் லக்ஷம் ரூபாய் செலவு செய்ய வேண்டுமானாலும், செய்து நாம் செய்யக்கூடிய பிரயத்தனங்களையெல்லாம் செய்து பார்த்துவிடுவோம். 

அதோடு, இப்போது வந்த துருக்கன் யார் என்பதையும் விசாரித்து அறிந்து, அவனுக்குத் தகுந்த சிக்ஷை நடத்தி வைப்போம். நாங்கள் தங்களுடைய வீட்டுக்குப்போவது நல்லதல்ல. போலீசார் தங்களுடைய வீட்டின் கதவை பலவந்தமாகத் திறந்து உட்புறத்தில் என்னென்ன அக்கிரமங்கள் செய்திருக்கிறார்களோ தெரியவில்லை. அதுவும் தவிர வீட்டின் திறவுகோல் இப்போது யாரிடத்தில் இருக்கிறது என்பதும் தெரியவில்லை. 

தாங்கள் இப்போது ஆண் துணையில்லாமல் அந்த வீட்டில் தனியாக இருந்தால், இவ்வளவு பெருத்த தீம்பைக்கொண்டு வந்து வைத்தவர்கள் இன்னும் என்னென்ன அக்கிரமங்கள் செய்வார்களோ தெரியவில்லை. இப்போது இங்கே வந்த முரட்டு மனிதர்கள் அங்கேயும் வந்து ஏதாவது கலகம் செய்து அவமானப்படுத்துவார்கள். ஆகையால், தாங்கள் இதையே தங்களுடைய சொந்த கிரகம் போல மதித்து, செளகரியம்போல இருங்கள். பணத்தின் மூலமாகவும், தேகத்தின் மூலமாகவும், எங்களால் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ, அவற்றை எல்லாம் கொஞ்சமும் லோபமில்லாமல் நாங்கள் சந்தோஷத்தோடு செய்கிறோம்; இனி நீங்கள் வேறு, நாங்கள் வேறு என்ற எண்ணமே தங்களுடைய மனசில் உண்டாகக் கூடாது. இரண்டையும் ஒன்றாகவே பாவிக்க வேண்டும்” என்று நிரம்பவும் விநயமாகவும், வாத்சல்யத்தோடும், இனிமையாகவும் கூறினாள்.

அந்த மடமயிலின் அன்பு ததும்பிய மாதுரியமான மொழிகளைக் கேட்ட கற்பகவல்லியம்மாள் ஒரு நிமிஷநேரம் தனது சகலமான துன்பங்களையும் துயரங்களையும் மறந்து ஆநந்த பரவசம் அடைந்து பூரித்துப் புளகாங்கிதம் எய்தினாள்.அவள் அதுவரையில் கோகிலாம்பாள் பேசியதைக் கேட்டவளன்று, ஆதலால், அந்த இன்பவல்லி மகா உருக்கமாகவும், பரிவாகவும், பணிவாகவும், பெருந்தன்மையாகவும், அன்பே நிறைவாகவும் பேசிய கனிமொழிகளைக் கேட்க, அப்படிப்பட்ட விலையில்லா மாணிக்கம் தனக்கு மருமகளாக வாய்க்கப்போவது, தானும் தனது முன்னோரும் எத்தனையோ ஜென்மங்களில் செய்த பூஜா பலனே அன்றி வேறல்ல என்று நினைத்துப் பெருமையும் மனவெழுச்சியும் அடைந்து மட்டுக்கடங்காப் பெரு விம்மிதம் எய்தி இரண்டொரு நிமிஷநேரம் பேரின்ப வாரிதியில் தோய்ந்திருந்தபின், கண்கள் ஆநந்த நீர் சொரிய, அவளைப் பார்த்து, “கண்ணே! உன்னுடைய வார்த்தையைக் கேட்க, என்னுடைய கலியெல்லாம் நீங்கினாற் போன்ற ஒரு திடமும், ஆநந்தமும் பூரிப்பும் என் மனசில் சுரக்கின்றன. ஏதோ எங்களுடைய நல்ல கிரகந்தான் இப்படிப்பட்ட அபாய காலத்தில், எங்களை இங்கேகொண்டு வந்துவிட்டு, உங்களுடைய நட்பையும் எங்களுக்குச் செய்து வைத்தது. 

இனி நீங்கள் எப்படிச் சொல்லுகிறீர்களோ அப்படியே நான் செய்யத் தடையில்லை. நீ சொன்னபடி, நாங்கள் வேறு நீங்கள் வேறு என்ற நினைவையே நான்விட்டுவிட்டேன். இனி எல்லாவற்றையும் உங்களுடைய பிரியப்படியே நடத்துங்கள்” என்று கரை கடந்த வாத்சல்யத்தோடு மனம் நைந்து கனிவாகக் கூறினாள்.

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் மிகுந்த சந்தோஷமும் பூரிப்பும் அடைந்தவளாய்க் கற்பகவல்லியம்மாளைப் பார்த்து, “அம்மா! நீங்கள் காலையில்கூட அதிகமாக ஒன்றையும் சாப்பிடவில்லையே; ஏதாவது கொஞ்சம் ஆகாரம் பார்த்துக்கொண்டு நிம்மதியாகப் படுத்துக் கொள்ளுங்கள். புஷ்பாவதியம்மாள் முதலியோரும் நெடுநேரமாகப் பட்டினியிருக்கிறார்கள். நாங்கள் போய் அவர்களுக்கு எல்லாம் போஜனம் நடத்தி வைக்கிறோம். எல்லோருக்கும் விருந்து நடத்துவதற்காகத் தயாரித்து மலை மலையாக குவித்து வைத்திருந்த விருந்துப் பொருள்களை எல்லாம் ஜனங்கள் சாப்பிட்டார்களோ என்னவோ ஒன்றும் தெரியவில்லை. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது; எல்லோரும் சந்தோஷப்படும்படி விருந்து செய்ய நினைத்ததற்கு, எல்லோருக்கும் உபவாசமும் துயரமும் அவமானமுமே ஏற்பட்டன. என்ன செய்கிறது? எல்லாம் கால பலன்” என்றாள்.

அதைக்கேட்ட கற்பகவல்லியம்மாளும் மிகுந்த சஞ்சலம் அடைந்தவளாய் பேசத்தொடங்கி, “ஆம்; என்ன செய்கிறது? அரச மரத்தைப் பிடித்த சனியன் பிள்ளையாரையும் பிடித்தது என்பார்கள். அதுபோல எங்களுடைய துரதிர்ஷ்டத்தில் மற்ற எல்லாருக்கும் பங்கு கிடைத்தது. எனக்கு இப்போது சாப்பாட்டிலேயே மனம் செல்லவில்லை. பேசாமல் நிம்மதியாகப் படுத்துக்கொண்டிருந்தால், அதுவே போதுமானது. ஆனால் நான் ஆகாரம் வேண்டியதில்லை என்று சொன்னாலும், நீங்கள் என்னை விடப்போகிறதில்லை. ஆகையால் சொற்பமாக ஏதாவது ஆகாரம் இவ்விடத்துக்கே அனுப்பி விடுங்கள். இங்கே சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொள்ளுகிறேன்,” என்று கூறினாள்.

அதைக் கேட்ட உடனே கோகிலாம்பாள் தானே நேரில் சென்று ஆகாரம் எடுத்து வந்து தனது மாமியாருக்குப் போஜனம் செய்விப்பதாகக் கூறி, புஷ்பாவதியை அழைத்துக்கொண்டுபோய் உண்பிக்கும்படி தனது தாய்க்குச் சொல்ல, பூஞ்சோலையம்மாள் அந்த ஏற்பாட்டிற்கு இணங்கினாள். உடனே அவர்கள் இருவரும், கற்பகவல்லியம்மாளை அவ்விடத்திலே இருக்க வைத்துவிட்டு, புஷ்பாவதியை அழைத்துக்கொண்டு அப்பால் போயினர். 

பங்களாவில் பணிமக்கள் மாத்திரம் இருந்ததையும், விருந்தினர் எல்லோரும் போய்விட்டதையும் கோகிலாம்பாளும் பூஞ்சோலையம்மாளும் அப்போது கண்டு கரைகடந்த துயரமும், சஞ்சலமும் அடைந்தவர்களாய்ச் சிறிது நேரம் வருந்தி இருந்த பின்னர், புஷ்பாவதிக்கு உபசார வார்த்தைகள் கூறி அவளுக்கு இலை போட்டு பரிமாறும்படி உத்தரவு செய்ய, பரிசாரகர் அப்படியே செய்தனர். புஷ்பாவதி, பூஞ்சோலையம்மாளும் உட்கார்ந்தால் அன்றித் தான் மாத்திரம் உட்கார்ந்து போஜனம் செய்வதில்லை என்று கூற, அந்த அம்மாளும் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள். 

உடனே கோகிலாம்பாள் நல்ல உயர்ந்தவகைப் பதார்த்தங்களில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துகொண்டு போய்த் தனது மாமியாரான கற்பகவல்லியம்மாளைப் பணிவாகவும், அன்பாகவும் உபசரித்து உண்பித்தபின் நிம்மதியாகப் படுத்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அந்த அம்மாளிடத்தில் அநுமதி பெற்றுக்கொண்டு திரும்பி வந்து சேர்ந்தாள். அதற்குள் புஷ்பாவதி தனது போஜனத்தை முடித்துக்கொண்டாள். பூஞ்சோலையம்மாள் புஷ்பாவதியின் மனம் கோணாமல் இருப்பதற்காகத் தானும் போஜனம் செய்ததாக ஒருவாறு நடித்து சொற்பகமாக ஆகாரம் பார்த்துக்கொண்டாள். அவர்கள் இருவரும் கோகிலாம்பாளை வற்புறுத்த, அவளும் இலையண்டை உட்கார்ந்து எழுந்தாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அவர்கள் மூவரும் அன்றைய பகல் முழுதும் பட்டினி கிடந்து நிரம்பவும் பாடுபட்டு அலுத்திருந்தமையால் அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் போய்த் தனித்தனியாக மூன்று விடுதிகளில் இருந்த தத்தம் படுக்கைகளை அடைந்து சயனித்துக்கொண்டனர்.

பூஞ்சோலையம்மாள் அன்றைய தினம் நிகழ்ந்த மகா பயங்கரமான சம்பவங்களைப்பற்றி நினைத்து நினைத்து இரவு மூன்று மணி வரையில் தூக்கம் பிடியாமல் புரண்டிருந்து கடைசியில் நித்திரையில் ஆழ்ந்துவிட்டன. கோகிலாம்பாளோ அன்றையதினம் நிகழ்ந்த மகா பயங்கரமான சம்பவங்களை நினைத்தும் கண்ணபிரானை நினைத்தும் உருகிக் கரைந்து அழுது, தனது சயனம் முழுதும் கண்ணீர் ஆறாயப் பெருகும்படி செய்து, அளவிட இயலாத சஞ்சலக் கடலில் ஆழ்ந்து அந்த இரவு முழுதும் இமைகளையே மூடாமல் படுத்துப் புரண்டு புழுங்கித் துவண்டு வாடித் தளர்ந்து துயரமே வடிவாகக் கிடந்தாள்.

மகா உத்தமகுண ஸ்திரீகளான பூஞ்சோலையம்மாள் கோகிலாம்பாள் முதலியோரது நிலைமை இவ்வாறு இருக்க, போஜனம் முடித்துக்கொண்ட பிறகு சயனத்தில் படுத்த புஷ்பாவதி, நித்திரை செய்பவள் போலக் கால் நாழிகை நேரம் வரையில் பாசாங்கு செய்தாள். மற்ற இருவரும் தத்தம் சயனத்திற் படுத்துக்கொண்டார்கள் என்பதை நிச்சயித்துக்கொண்டவளாய், அந்த யெளவன ஸ்திரீ மெதுவாகத் தனது சயனத்திலிருந்து எழுந்து சந்தடி செய்யாமல் விரல்களை ஊன்றி நடந்து அவ்விடத்தைவிட்டு வெளியில் சென்றாள். சென்றவள், தான் அவ்வாறு போவதை யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என்ற அச்சம்கொண்டவள்போல அங்கும் இங்கும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு, பக்கத்தில் இருந்த சில விடுதிகளைக் கடந்து, சிறிது தூரத்திற்கு அப்பால் இருந்த அலங்காரமான ஒரு சயன மாளிகையை அடைந்து, அதன் கதவை மெதுவாகத் தட்ட சிறிது நேரத்தில் அந்தக்கதவு திறக்கப்பட்டது. விளக்கு ஜாஜ்வல்லியமாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. 

சகலமான இன்பங்களும் அழகும் நிறைந்து ரதிதேவியின் சயனமாளிகைபோல இருந்த அந்த விடுதிக்குள் இருந்த கதவை திறந்துவிட்ட நமது செளந்தரவல்லியம்மாள் புஷ்பாவதி வந்திருந்ததைக் கண்டு மகிழ்ச்சியாகப் புன்னகை செய்து, “வாருங்கள், வாருங்கள்” என்று கூறி, அவளை உபசரித்து உள்ளே அழைத்துக்கொண்டு போய் ஒரு ஸோபாவின் மீது உட்காரவைத்துத் தானும், பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்துகொண்டாள்.

நிச்சயதார்த்த தினத்திற்கு முதல் நாள் மாலையில், கோகிலாம்பாளும், கண்ணபிரானும் ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்துகொண்டிருந்த காலத்தில் பின் புறத்தில் ஒளிந்திருந்த செளந்தரவல்லியம்மாள் திடீரெனத் தோன்றித் தனது அக்காளை நிரம்பவும் இழிவாகத் தூஷித்ததும், கண்ணபிரான் அவளைச் சாந்தப்படுத்தும் பொருட்டு சொன்ன சமாதானங்களைக் கேட்டும், அவள் கோபமாகவும் முறுக்காகவும் பங்களாவை நோக்கிச் சென்றதும் தெரிந்த விஷயங்கள். அவ்வாறு வந்தவள் நேராகத் தனது தாய் இருந்த இடத்திற்குப் போய் மிகுந்த ஆத்திரத்தோடு பேசத் தொடங்கி கோகிலாம்பாளும் கண்ணபிரானும் பூங்காவிலிருந்த நிலைமையைத் தெரிவித்து, அக்காள் எப்படிப்பட்ட குற்றம் செய்தாலும் தனது தாய் கண்டிப்பதே இல்லை என்றும், தான் எவ்விதத் தவறு செய்யாதிருந்தாலும், தன்னை அநாவசியமாகக் கண்டிக்கிறாள் என்றும் கூறி நிஷ்டூரமாகப் பேச, அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் தனது பெண்ணின் வாயை அடக்கி, “அம்மா செளந்தரா! என்ன உன்னுடைய புத்தி வர வர இப்படியாகிவிட்டது! நீ குழந்தை போல இப்படிப்பட்ட விஷயங்களில் எல்லாம் தலையிட ஆரம்பித்துவிட்டாயே! இந்தச் சங்கதி வேறே யாருடைய காதிலாவதுபட்டால், உனக்குத்தான் அவமானம் வந்து சேரும். ஆகையால், வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரு; அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை ஜனங்கள் குற்றமாக மதிக்கமாட்டார்கள். அதைக்கண்டு அவளுடைய சொந்தத் தங்கையான நீ இப்படிப் பொறாமைப்பட்டு, அந்த ரகசியமான காரியத்தையெல்லாம் வெளியிடுகிறாயே என்று நினைத்து நீ மகா துர்க்குனி என்றும், நல்ல அறிவு இல்லாத பைத்தியக்காரி என்றும் சொல்லி உன்னைப் பற்றி ஏளனமாகப் பேசுவார்கள். ஆகையால், வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரு; அவளுக்கு அந்த பையனை நாம் புருஷனாக ஏற்படுத்திவிட்டோம். 

ஆனாலும், அவர்கள் இருவரும் அவ்வளவு தூரம் பதற்றமாக எந்தக் காரியத்தையும் செய்யக் கூடியவர்களல்ல. கோகிலாம்பாளின் குணம் எனக்கு நன்றாகத் தெரியும்; அவள் மகா உறுதியான மனம் உடையவள். எப்படிப்பட்ட சந்தர்ப்பமாக இருந்தாலும் அவள் தவறான வழியில் இறங்கக்கூடியவளல்ல. அவள் வந்தவுடனே உண்மை என்ன என்பதை நான் கேட்டறிந்து உனக்குத் தக்க சமாதானம் சொல்லுகிறேன். நீ சொல்லுகிறபடியே ஏதாவது சம்சயமான காரியம் நடந்திருந்தால்கூட, அதைப்பற்றி நாம் கடுமை காட்டக்கூடாது. அந்தப் பையன் அவளுக்குப் புருஷனாக வரிக்கப்பட்டுப் போயிருக்கிறான். அந்த ஏற்பாடு இனிமாறப்போகிறதில்லை. ஆகையால் யெளவனப் பருவத்தினரான அவர்கள் ஆத்திரப்பட்டுத் தங்களை மீறி அப்படி ஏதாவது செய்திருந்தால்கூட அது குற்றமாகாது. உனக்கும் ஒரு புருஷன் நிச்சயப்பட்டுப் போனால் நீகூட நாளைக்கு அப்படித்தான் செய்வாய், அதையெல்லாம் நாங்கள் கண்டித்தால், அது உன் மனசுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும். இந்த விஷயத்தை வாயில் வைத்தே இனி நீ பேசாதே; அது நல்லதல்ல. கேட்பவர்கள் உன்னைத்தான் தூஷிப்பார்கள்” என்று அன்பாகவும் நயமாகவும் கூறி, அவளை அனுப்பிவிட்டாள். 

தனது தாய் சொன்ன வார்த்தைகள் அவளது மனதிற்குச் சமாதானம் உண்டாக்கவில்லை. தனது தாயும் அக்காளும் எப்போதும் ஒரே கட்சி என்றும், ஒருவரை ஒருவர்விட்டுக் கொடுக்காமல் பேசுகிறவர்கள் என்றும் செளந்தரவல்லியம்மாள் தனக்குள் நினைத்து மிகுந்த கோபமும் ஆத்திரமும் அடைந்தவளாய், அவ்விடத்தைவிட்டு முறுக்காக நடந்து தனது அந்தப்புரத்திற்குப் போய்க் கட்டிலின் மேல் குப்புறப்படுத்திக்கொண்டாள். அதன் பிறகு அவள் அன்றைய ராத்திரி போஜனத்திற்கே வரவில்லை. தனது தாயும் பணிமக்களும் எவ்வளவோ நயந்து வேண்டியதெல்லாம் பயனற்றுப் போயிற்று. மறுநாட் காலையில், நிச்சயதார்த்தத்திற்கும் எல்லோரும் அவளை எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தனர். அவள் எதற்கும் அசையாமல் கல்போலப் படுத்துப் பிணங்கிக்கொண்டிருந்தாள். முகூர்த்தத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருந்த காலம் நெருங்கிப் போனதைக் கருதி பூஞ்சோலையம்மாள் அவளை அதே நிலைமையில்விட்டுப் போக நேர்ந்தது.

அதன் பிறகு கோகிலாம்பாளுக்கு நலங்கு நடந்த காலத்தில் போலீசார் வந்து, திருட்டுக்குற்றம் சுமத்திக் கண்ணபிரானுக்கு விலங்கிட்டு அவனை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள் என்பதைக் கேட்டபிறகே, செளந்தரவல்லியின் மனம் சிறிது குளிர்ந்தது. அவளது முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. மற்ற சகலமான ஜனங்களும் விசனக்கடலில் ஆழ்ந்து அவமானத்தினால் குன்றிப்போயிருந்த காலத்தில் அவள் ஒருத்தியே மிகுந்த உற்சாகமும் குதூகலமும் அடைந்தவளாய்த் தனது படுக்கையைவிட்டு எழுந்து சென்று, நீராடித் தன்னை நன்றாக அலங்கரித்துக்கொண்டு, சமையலறைக்குப் போய் எல்லோருக்கும் தயாரிக்கப்பட்டிருந்த விருந்தைச் சம்பிரமமாக உண்டு, தாம்பூலம் தரித்துக் க்கொண்டு தனது சயன அறைக்கு வந்து சேர்ந்தாள். அவள் அவ்வாறு திரும்பி வந்தபோது, கோவிந்தபுரம் ஜெமீந்தாரரது குமாரரான சுந்தரமூர்த்தி முதலியார் தற்செயலாக அவளது திருஷ்டியில் பட்டார். 

அவர் ஒரு மகாராஜன் போல வெகு சொகுஸாக அலங்கரித்துக்கொண்டு யெளவனமும் அழகும் வடிவெடுத்ததுபோல இருந்ததைக்காண, அவளது மனம் முற்றிலும் அவர்மீது சென்று லயித்துவிட்டது. அவர் தன்னைக் கலியாணம் செய்துகொள்வதாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறது என்பதை அவள் தனது தாய் மூலமாக முன்னரே அறிந்தவளாதலால், அவரது விஷயத்தில் அவளது மனத்தில் கட்டிலடங்கா மையலும், மோகவிடாயும் ஏற்பட்டுவிட்டன. கண்ணபிரானும் கோகிலாம்பாளும் பூங்காவில் சரஸ ஸல்லாபம் செய்துகொண்டிருந்தது சரியான காரியம் என்றும் அதைத் தாங்கள் கவனிக்கக் கூடாது என்றும் தனது தாய் சொன்னதும் அவளுக்கு அந்தச் சந்தர்ப்பத்தில் நினைவிற்கு வந்தது. 

தனக்கும் சுந்தரமூர்த்தி முதலியாருக்கும் ஒருமாத காலம் கழித்துக் கலியாணம் நடக்கும் வரையில் தனது மோக வேட்கையை அடக்கிவைப்பது சாத்தியமில்லாத காரியமாகத் தோன்றியது. ஆகவே தனது அக்காள் செய்ததுபோல, தானும் சுந்தரமூர்த்தி முதலியாரை எப்படியாவது தனிமையான ஓர் இடத்திற்கு வரவழைத்து அவரோடு பேசிக் கொஞ்சி குலாவி சரஸ ஸல்லாபம் புரியவேண்டுமென்ற ஆசையும் ஆவலும் எழுந்து அவளது மனத்தை வதைத்துப் பெருகிக்கொண்டிருந்தன. தான் தனது கருத்தை சுந்தரமூர்த்தி முதலியாருக்கு எப்படித் தெரிவிப்பது என்று தத்தளித்திருந்த சமயத்தில் புஷ்பாவதியம்மாள் அவளைப் பார்ப்பதற்காக அன்றைய தினம் பகலில் அங்கே வந்தாள்.

- தொடரும்…