அத்தியாயம் 1

33.06k படித்தவர்கள்
22 கருத்துகள்

வாடா மல்லி, அத்தியாயம் - 1

சுயம்பு அந்த சூட்கேஸைப் பிடித்துக் கொண்டிருந்த விதம், அதுவே அவனைக் கௌவிக் கொண்டிருப்பது போல் தோன்றியது.


ஒரு கையால் பிடிக்க வேண்டிய சூட்கேஸை முதுகில் சார்த்தி வைத்துக் கொண்டு பின்புறமாய் இரண்டு கைகளையும் தோள் வழியாய்க் கீழே கொண்டு போய், அதன் சின்னப் பிடியில் பெரிய 'பிடி' போட்டு, எதுவும் பிடிபடாதவன் போல், அந்தத் தார்ச்சாலையில் குறுக்கும் நெடுக்குமாய் அலைமோதினான். சிறிது நேரத்தில் பெட்டியைப் பிடித்த இரு கரங்களையும் விடுவித்து, தலையில் வைத்த போது அந்தப் பெட்டி கீழே விழுந்து சத்தம் போட்டது. அது புரியாமலே, அவன் அங்குமிங்குமாய்ச் சுற்றினான். பிறகு மீண்டும், இரு கரங்களையும் பின்புறமாய்க் கொண்டு போய், விரல்களை மடக்கிக் கொண்டான். பெட்டியை மீண்டும் பிடித்திருப்பதாக அவனுக்கு ஒரு அனுமானம்.


மேற்கும், கிழக்குமாய், போய்க் கொண்டிருந்த அந்த தார்ச்சாலையைப் போலவே, அதே கனத்தில் அந்தகாரமான இருள். அந்தப் பகுதி முழுவதையும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்த அசுரத்தனமான இருள். பேய் இரைச்சலான காற்று. அதற்கு ஏற்றாற்போல் பேய்த்தனமான ஆடும் சவுக்கு மரங்கள். தொலைவிலுள்ள ஒரு குட்டையில் 'அய்யோ... அய்யோ' என்பது மாதிரியான தவளைக் கத்தல்கள். அந்தப் பகுதி முழுவதுமே, மேலே கறுப்புக் குகை போன்ற ஆகாய மூடியால் அடைபட்டிருப்பது போன்ற தோற்றம்... பல்வேறு மரங்கள், இருட்கோடுகளாய், இருளின் அடர்த்தியை கூட்டிக் கொண்டிருந்தன. ஆனாலும் ஆங்காங்கே மின்மினிப் பூச்சிகள் சின்னச் சின்ன ஒளி முத்துக்களைச் சிதறிக் கொண்டிருந்தன. அவ்வப்போது மேகம் சினந்து காட்டிய உயரவாக்கிலான மின்னல் பல்வரிசையின் ஒளி பட்டு தரையில் கிடந்த சில ஜரிகைக் காகிதங்கள் ஒளி வடிவில் ஒளிர்ந்தன.


சுயம்பு, தலையை மேலும் கீழுமாய் பக்கவாட்டிலும் ஆட்டிக் கொண்டான். உடம்புக்குள் சிறைப்பட்ட ஏதோ ஒன்றை விடுவிக்கப் போவதுபோல், வாயகல, நின்ற இடத்திலேயே நின்றான். பின்னர் அந்த 'ஏதோ ஒன்றுக்குள்' சிறைபட்ட மேனிக்காக விடுதலைப் போராட்டம் நடத்துவது போல் அங்குமிங்குமாய் தன்னை உதறிக் கொண்டான். அந்த உடம்பிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் தலையை தனிப்படுத்திக் காண்பித்தான். கைகளை ஒன்றுடன் ஒன்று மோத விட்டான். உதடுகளைக் கடித்துக் கொண்டான். பிறகு அப்படியே அங்குலம் அங்குலமாய்க் குனிந்து தலை எது, கால் எது என்று கண்டுபிடிக்க முடியாதபடி, குவியலாய்க் கீழே கிடந்தான். அதுவும் அந்தச் சாலையின் நடுப்பகுதியிலேயே. அப்படியாவது எந்த லாரியோ, அல்லது காரோ தன் மீது மோதி, தலையைச் சக்கரத்தோடு கொண்டு போகட்டும் என்பது மாதிரியான முடக்கம்.


தொலைதூரத்தில் ஒளி தோன்றியது. மிகச் சின்னதாய்த் தோன்றிய அந்த ஒளி, சிறிது நேரத்தில் மேலே நெற்றிக் கண்ணாகவும், கீழே சாதாரணக் கண்களாகவும் காட்டின. அவை நெருங்க நெருங்க, தாலாட்டு மாதிரியான ஒரு சத்தம். சிறிது நேரத்தில் அதற்கு மாறான சப்தமாகவும் ஒலித்தது. அந்த மூன்று ஒளிக் குவியல்களும் ஒரு பெரிய உருவத்தை இழுத்துக் கொண்டு வருவதுபோல் தோன்றியது.


சுயம்பு அப்படியே உட்கார்ந்திருந்தான் - வருவது வரட்டும், தருவது தரட்டும் என்பது மாதிரி. ஆனாலும் அந்த மரண நெருக்கத்தில் அக்காவின் நினைவு, அண்ணன் பிள்ளைகளின் ஞாபகம், அம்மாவைப் பற்றிய தாகம், அண்ணனிடம் திட்டு வாங்க வேண்டுமென்ற ஆசை, அப்பாவிடம், சாட்டைக் கம்பால் அடிவாங்கி, தான் செய்த காரியத்திற்கு தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மாறுவேடமோ அல்லது சுயவேடமோ போட்ட மன உளைச்சல்கள்...


குவியலாய்க் கிடந்த சுயம்பு, மீண்டும் மானுடமாய் மீண்டது போல், வளைந்து வளைந்து எழுந்தான். தொலைவில் வருவதை அடையாளம் கண்டுபிடித்து, கண்களை அகலமாக்கியபடியே சாலையின் ஓரத்திற்கு வந்தான். அவனை நெருங்கிவிட்ட அந்தப் பெரிய உருவம், அவனைப் பொருட்படுத்தாமல் ஓடியது... ஆனாலும் லேசாய் நிற்பதுபோல் ஒரு பாவலாக் காட்டியது. கீழே நிற்பவர்கள் தாவி, தன் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக, எல்லாப் பேருந்துகளும் செய்வது போன்ற பாவலாதான். அவன், அதன் அருகே நெருங்கப் போன போது, அது பாவலாவை பாய்ச்சலாக்கியது. ஆனாலும், நடுச்சாலையில் எதையோ ஒன்றைக் கண்டு, அது நின்றது. மனிதர் என்றால் நின்றிருக்காது. ஆனால் அது ஒரு அழகான சூட்கேஸ். அதை 'லக்கேஜாக்காமல்' போவது அந்தப் பேருந்துக்குப் பிடிக்கவில்லை. இதற்குள், அவன் எக்கி எக்கி ஓடி அந்தப் பேருந்தின் முன்னால் போய் நின்றான். ஓட்டுநர், தன்னைப் பார்க்காமல் கீழே பார்ப்பதைப் பார்த்து அவனும் தனது பார்வையை அவர் பார்வையில் தொடர விட்டான். அது தன்னுடைய சூட்கேஸ்தான் என்று அரை நிமிடத்தில் அனுமானித்து, அதைத் தூக்கி மார்போடணைத்துக் கொண்டு நிமிர்ந்த போது பேருந்து உருமியது. அவன் அந்தப் பெட்டியை இரு கையாலும் தூக்கியபடியே சைகை செய்தான் - அதை ஓட்டுனருக்குக் கொடுக்கப் போவது போல். உடனே "ஏறுய்யா சீக்கிரம்" என்ற முகமறியாச் சத்தம். அவன் அந்தப் பெட்டியை மீண்டும் பின்புறமாய் வளைத்துப் பிடித்துக் கொண்டு பேருந்தின் பக்கத்து முன் வாசலில் நுழையாமல், பின்வாசலை நோக்கி நிதானமாக நடந்தான். இந்த மாதிரிச் சமயங்களில் எல்லாப் பேருந்துகளுக்கும் எப்படிப்பட்ட கோபம் வருமோ, அப்படிப்பட்ட கோபத்தில் அந்தப் பேருந்தும் உறுமியபடியே ஓடப்போனது. கொஞ்சம் ஓடியது. உடனே அவன் அதன் பின்னால் தலைதெறிக்க ஓடி, பின் வாசலைக் கடந்து, முன் வாசலில் முதல் படியை மிதித்த போது, "ஒப்பன் வீட்டு பஸ்ஸுன்னு ஒனக்கு நெனப்பா" என்று ஒரு குரல் சத்தம் போட்டபோது, அது தன்னைத்தானோ என்பதுபோல் டிரைவர் பஸ்ஸை நிறுத்தினான். மீண்டும் "ஏறய்யா" என்ற ஒரு உள்ளிருப்பு அதட்டல். அதன் ஆகர்ஷண சக்தியால் ஈர்க்கப்பட்டவன் போல், பெட்டியை ஒரு கைக்கு மாற்றிக் கொண்டு, அந்தப் பேருந்துக்கு தார்ச்சாலை போட்டது மாதிரியான கருப்புக் கைப்பிடியைக் கைப்பற்றியபடியே உள்ளே போனான்.


அந்தப் பேருந்துக்குள், பயணிகள் ஆண்வாரியாகவும், பெண்வாரியாகவும், அர்த்தநாரீசுவரவாரியாகவும் மண்டிக் கிடந்தார்கள். மூன்று ஆண்வரிசை இருக்கைகளில் ஆண் பெண் ஜோடிகள். ஒன்றில் இன்னொருவரும் உட்காரலாம் என்பது மாதிரியான 'நெருக்கம்'. இன்னொன்றில் ஆண் ஆசாமி கீழே விழப்போவது மாதிரியான இட நெருக்கடி. மற்ற இருக்கைகளில் பல்வேறு வகையான தொப்பிகள், குல்லாய்கள், வெறுந்தலைகள், மொட்டைத் தலைகள், முடி அழகுகள். மகளிர் பகுதிகளிலும், இதே விகிதாச்சாரம். ஒருத்தி குளிருக்காக உடம்பைத் தலையோடு சேர்த்து முக்காடு போட்டு முன்னிருக்கையின் பின்புறக் கம்பிக்கு அப்பாலும், பாதி உடம்பைப் போட்டிருந்த விதம், பதினாறு முழப் பட்டுப் புடவையை நீள வாக்கில் மடித்து அந்தக் கம்பியில் தொங்கப் போட்டதுபோல் இருந்தது. இன்னொருத்தியான, இளஞ்சிட்டு, ஜன்னலோர இருக்கையில் தனித்திருந்து தூங்காமல் தூங்கி சுகம் பெற்றுக் கொண்டிருந்தாள். ஒரு கிழவியம்மா, தனது இருக்கைக்கு முன் பக்கமுள்ள இருக்கையில் கம்பியில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுமியின் சட்டையைப் பற்றுகோலாய் பற்றியபடியே தூக்கத்தில் தலையை மேலும் கீழும் போட்டாள். இதனால் அந்தச் சிறுமியின் தலை கீழும் மேலுமாய் ஆடியது. அதனாலும், இருவருக்கும், 'சடைத்தனமான' தூக்கம். ஒரு தாய்க்காரி அக்கம் பக்கம் பார்த்தபடி, மகளின் மாராப்பை அகலப்படுத்தி விட்டாள்.


மங்கலான விளக்கில், அந்தப் பேருந்துக்குள் இருந்த தூங்காத கண்கள் அத்தனையும் ஒரு கையில், சூட்கேஸைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மறு கையால் மேல் கம்பியைப் பிடித்துத் தடுமாறிய அவன் மீது மொய்த்தன. அவன் ஓரளவு தன்னை நிலைப்படுத்திய போது, பாதிக் கண்கள் திரும்பின. ஆனாலும், மீதிக் கண்கள் அவன் உட்காருவது வரை, திசைமாறப் போவதில்லை என்பது போல், ஒரு மனிதநேய வீச்சோடு, அவன் மீதே நிலை கொண்டன. அவனோ, பார்த்த கண்களைப் பார்க்காமல், பாராத கண்களையே பார்த்தான். ஆண் வரிசையில், அவன் கண் போகவில்லை. தாய்க்குலத்தின் வரிசையையே மாறி மாறிப் பார்த்தான். அந்த இளஞ்சிட்டு தனித்திருந்த இடத்தை தனித்துப் பார்த்தான். பேருந்தின் குலுக்கலுக்கு ஏற்ப குலுங்கிய உடம்பைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டே, மேல் கம்பியைப் பிடித்த கையை அதன்மேல் சக்கரம் போல் உருள வைத்துக் கொண்டு, இடத்தைக் கண்டுவிட்ட திருப்தியில் கால்களை நகர்த்தினான். இந்த இளஞ்சிட்டின் இருக்கை அருகே வந்ததும் மேல்பிடியைச் சட்டென்று விட்டுவிட்டு, தடுமாற்றத்துடன், அந்த இருக்கையின் பிடியைப் பற்றிக் கொண்டே, அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். சும்மா 'சிவனே' என்று உட்காரவில்லை. உட்கார்ந்த வேகத்திலேயே, அவளின் இரட்டைச் சடைப் பின்னலுக்கு மேல் இன்னொரு இரட்டைச் சடை போல் காட்சியளித்த பூப்பின்னலை உற்று உற்றுப் பார்த்தான். முல்லைப்பூ பின்னல். பிறகு ஆச்சரியம் தாங்காமல் அவள் காதுகளில் வெள்ளை மீன் வடிவத்தில் தொங்கிய தொங்கட்டான்களைச் சிறிது நெருங்கிப் பார்த்தான். அவளாலோ, அல்லது அவளின் அலங்காரத்தாலோ ஈர்க்கப்பட்டவன் போல் அவள் உச்சந்தலையின் மத்தியில் பொருத்தப்பட்ட ஒரு சிவப்பு வளைவையும் சிறிது நேரம் பார்த்தான்.


அந்தப் பேருந்தின் ஓட்டுநர், திரும்பிப் பார்த்தார். பிறகு வலது பக்கமுள்ள வெளிக்கண்ணாடியில் தொலைக் காட்சிப் பெட்டியைப் பார்ப்பதுபோல் பார்த்தபடியே வண்டியை ஓட்டினார். 'ஒலியும் ஒளியுமோ - அல்லது அவை, தேவையற்ற காட்சியோ'... அவர் தனது எதிர்பார்ப்புக் கூடக்கூட, பேருந்தின் வேகத்தைக் குறைத்துக் கொண்டிருந்தார். இதே போல் 'விழித்திருக்கும்' பயணிகளும் அந்த இருக்கையை எதிர்பார்ப்போடும் ஏக்கத்தோடும் பார்த்தார்கள். 'காலம் கலிகாலம். கண்ணு முன்னாலயே நடக்குது' என்று ஒரு தாத்தா, பாட்டிக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். அதே சமயம், பாட்டி, அவர் தன்னைப் பார்க்காமல் எங்கேயோ பார்க்கிறாரே என்பது மாதிரி அவர் தலையைத் தன் பக்கம் திரும்பிவிட்டாள். பலர், அவனும் அவளும் மேற்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்பதுபோல் ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர்களின் கண்களுக்கு மட்டும் பேசும் சக்தியிருந்தால் அவன் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவளின் காதில், 'இன்னுமா தூக்கம்?... இதுக்குமா தூக்கம்?' என்று கத்தியிருப்பார்கள். ஒரு நடுத்தர ஜோடியின் வாட்டசாட்டமான ஆண் பிறவி, தனது மனைவியைப் பார்த்து "அங்கே பாரு... சொல்லி வச்சு தனித்தனியா பஸ்ல ஏறி, இப்போ ஒண்ணா உட்கார்ந்து உரசிக்கிட்டு" என்று அவர்களைப் பார்த்தபடியே பேசினார். மனைவி அவரது கண்களைத் திருப்புவதற்காக, தலைமுடியைப் பிடித்திழுத்தாள். பிறகு "நீங்கள் செய்யாததா?" என்றாள். அப்புறம் உதட்டைக் கடித்துக் கொண்டே, "நாம் செய்யாததா" என்று தன் பேச்சு சாசனத்திற்குத் தானே ஒரு திருத்தம் கொண்டு வந்த போது...


ஜன்னல் கம்பிகளில் முகம் போட்டுக் கிடந்த அந்தப் பெண், ஏதோ ஒரு வாடை பட்டு அதை உணர்ந்தவள் போல் கண் விழித்தாள். பக்கத்தில் இருப்பவனை 'அண்ணனோ' என்பது மாதிரி கண்களைக் கசக்கிப் பார்த்தாள். பிறகு அவன் இல்லை என்று அறிந்ததும், சட்டென்று எழுந்தாள். அப்படியும் அசைவற்று இருக்கும் அவனைப் பார்த்துவிட்டு, 'இந்த அநியாயத்தைப் பார்க்க யாரும் இல்லையா?' என்பது போல், சுற்றுமுற்றும் பார்த்தாள். பிறகு பின்பக்கமாய்த் திரும்பி, "எண்ணா... எண்ணா" என்று கத்தினாள். அந்தப் பேருந்தின் 'கடைமடை' இருக்கையில் துள்ளித் துள்ளி விழுந்தும், தூக்கம் கலையாமல் கிடந்தவன், எத்தனையோ சத்தங்களுக்கு ஈடு கொடுத்தவன், இப்போது அலறியடித்து எழுந்தான். இதற்குள் அவளும் அந்த இடத்தை விட்டு, அவசர அவசரமாக வெளியே வரப் போனாள். ஆனால், அவனோ, இரண்டு கால்களையும் முன்னிருக்கையின் முதுகில் குவித்து வைத்துக் கொண்டு, அவளுக்கு வழியடைத்தான்.


அவள் குரலால், அத்தனை தூங்கிய கண்களும் இப்போது தத்தம் தலைகளில் தொங்குவது போல் எழுந்து நின்று குனிந்து பார்த்தன. கடைமடைப் பகுதியிலிருந்தவன் ஓடுகிற பேருந்துக்குள்ளேயே ஓடி, அதனால் சிறிது இடறி, அவள் பக்கம் போனான். அவள் உட்கார்ந்திருப்பவனை உஷ்ணமாகப் பார்த்தபோது-

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE


ஓடி வந்தவன், உட்கார்ந்திருப்பவனை அவன் முடியைப் பிடித்தே தூக்கி நிறுத்தினான். அப்படி நிறுத்தப்பட்டவனுக்குக் கால் விநாடி கூட கருணை காட்டாமல் அவன் தலையை முன்னிருக்கைக் கம்பியில் போட்டுப் போட்டு மோதவிட்டான். அவனும் ரத்தச் சொட்டோடு அடித்தவன் இழுத்த இழுப்பிற்கு உடன்பட்டபோது, இவன் அவன் தலைமுடியைப் பிடித்து பின்புறமாக வளைத்து, தனக்கு வசதியாக வைத்துக் கொண்டு, அவன் மூக்கையும் வாயையும் சேர்த்துக் குத்தினான். காலை மடக்கி வைத்து, வயிற்றில் உதைத்தான். ஆனால், அடிபட்டவனோ எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை - 'இன்னும் அடி' என்பது போல்.


எல்லோரும் 'அச்சோ' போட்டார்களே தவிர, அசையவில்லை. ஓட்டுநர், வண்டியைச் சீராக விட்டபடியே கண்ணாடியில் சண்டைக் காட்சிகளைப் பார்த்தார். இன்னும் உச்சக்கட்டம் வரவில்லை என்றும், அப்படி வந்தால்தான் நிழல் முகங்களை விட்டுவிட்டு, நிஜ முகங்களைப் பார்க்க வேண்டும் என்ற நிதானம். ஆனாலும், இடது பக்க வரிசையில் உட்கார்ந்திருந்த அதே நடுத்தர வயது மனிதரால் பொறுக்க முடியவில்லை. மனைவி பிடித்திழுத்த கையை இன்னொரு கையால் விலக்கிவிட்டு, அடிதடி இடத்திற்குப் பாய்ந்தார். அடித்தவனுக்கும் அடிபட்டவனுக்கும் இடையில் நின்று கொண்டே அதட்டினார்.


"ஏய்யா இப்படி மிருகமாகுறே... என்னன்னு விசாரிக்காமல் இப்படியா எடுத்த உடனே அடிக்கது"


"ஒங்க பெண்டாட்டி பக்கத்திலே இப்படி ஒருத்தன் ஒட்கார்ந்தா, நீங்க பொறுப்பீங்களா?"


"ஏங்க இங்க வாங்க... அந்த ஆளு அறிவில்லாமப் பேசறான். நீங்களுமா அறிவில்லாம நிக்கது?"


"இந்தாம்மா... அவன் இவன்னு பேசாதீங்க... இவன் ஒங்களை இப்படிப் பண்ணியிருந்தா..."


"பண்ணியுமாச்சு... குதிரையுமாச்சு... மொதல்ல அந்தப் பொண்ணை விசாரி... அவளே திட்டம் போட்டு சோடி சேரச் சொல்லியிருக்கலாம். இப்போ ஒன்னைப் பார்த்து பயத்துல அந்த அப்பாவியக் காட்டிக் கொடுக்கலாம். ஊரு ஒலகத்துல பார்க்கத்தானே செய்யுறோம்?"


இப்போது, அடித்தவன் உட்பட அத்தனை பேரும், அந்த இளஞ்சிட்டை சந்தேகமாய்ப் பார்த்தார்கள். அவளோ, முகத்தைக் கைகளால் மறைத்துக் கொண்டே விம்மி விம்மி வெடிவெடியாய் அழுதாள். அவள் "உண்மை" சொல்லப் போகிறாள் என்று, எல்லோரும் அந்தரங்க விருப்பத்தோடு பார்த்த போது, அவளோ, "சத்தியமாய் எனக்கு எதுவும் தெரியாது. இவன் யாரோ? நான் யாரோ?" என்று மாறி மாறியும், மாற்றி மாற்றியும் சொல்லி ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு விதமாய் அழுதாள்.


அவனுக்கு - அதுதான் அவளருகே உட்கார்ந்து அடிவாங்கிய சுயம்புக்கு அழுகை தாங்க முடியவில்லை. நிலைமை அவனுக்கு புரிவது போலிருந்தது. அடித்தவனை ஏறிட்டு நோக்கி விட்டு, அதே கண்களை அத்தனை பேர் மீதும் படரவிட்டு, அலங்கோலமாய் விக்கி விக்கிச் சொன்னான். ரத்தக்கசிவு வாயோடு, திக்கித் திக்கிச் சொன்னான்.


"அவள் யாருன்னு எனக்குத் தெரியாது... நானாத் தான் உட்கார்ந்தேன்."


அடித்தவன், மீண்டும் அவனை அடிக்கப் போன போது, அந்த நடுத்தர வயதுக்காரர் அவன் தலையைப் பிடித்துத் தனது கக்கத்திற்குள் வைத்துக் கொண்டார். அப்படியும் அவன் “நாலு பேரு தப்பாய் நினைப்பாங்கன்னு நானே என் ஸிஸ்டர் பக்கத்தில உட்காரலே... இந்தப் பயல் என்னடான்னா... அநியாயம் செய்தவனை விட்டுவிட்டு... என்னை மடக்குறது என்ன நியாயம்?" என்று இயலாமையில் கத்தினான். அந்த அம்மா வேறு, புருஷன் பக்கத்தில் கோபத்தோடு வந்து, சட்டைக் காலரைப் பிடித்தாள். இதற்குள் அந்த நடுத்தரம், அடித்தவன் மீது போட்டிருந்த பிடியை விட்டு விட்டு, அவன் முதுகை பொறு பொறு என்பதுபோல் தட்டிவிட்டு, அடிபட்டவனை கூர்மையாகப் பார்த்தார். மனைவியின் கையை மடக்கி, ஒரு கையில் வைத்துக் கொண்டே அவனை சட்டைக்காலரைப் பிடித்து கழுத்தோடு சேர்த்து இழுத்தார். உடனே ஒரு பயணி இப்போது தான் வீரம் பிடர் பிடித்து உந்த “இவன விடப்படாது" என்று இருந்த இடத்தில் இருந்தபடியே கத்தினார். அது காதில் விழாதது போல், கத்தியவரைப் பொருட்படுத்தாமல், தன்னை மொய்த்த மனைவியை மீண்டும் தள்ளிவிட்டபடியே, கைக்குள் அடக்கமாய் பிடிபட்டவனை மேலும் கீழுமாய் உலுக்கிவிட்டு புலன் விசாரணை செய்தார்.


"நீ யாருடா... ஏய் சொல்றியா இல்ல..."


அவன், அவர் மார்பில் விழப்போனான். அவர் சிறிது விலகிக் கொண்டே அதட்டினார்.


"நீ யாருடா?"


"தெரியலே... எனக்கே தெரியலே..."


"இந்தக் கதையே வேண்டாம்... அப்பாவிப் பொண்ணுங்க மத்தியில சும்மா உட்காருவது மாதிரி உட்காருறது. அப்புறம் சுயரூபத்தைக் காட்டுறது... மாட்டிக்கிட்டா பைத்தியம் மாதிரி நடிக்கறது... மரியாதையாச் சொல்லு... ஒன் பேரு என்ன?"


"சுயம்பு."


"இந்தப் பேருக்குரிய அர்த்தம் உனக்குத் தெரியுமாடா அயோக்கியப் பயலே?... எந்த ஊரு? என்ன செய்யுறே?"

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE


"நல்லாம்பட்டி..."


"சீ... எப்படிப்பட்ட பேர்ல இப்படிப்பட்ட பய... எங்கிருந்து வாறடா?"


"எஞ்சினீயரிங் காலேஜ்ல படிக்கேன்... ஊருக்குப் போறேன்..."


"எதுக்காகப் போறே?"


"பிடிக்கலே... பிடிக்கலே..."


"வயசுப் பொண்ணு பக்கத்துல உட்கார மட்டும் பிடிக்குதா?... சொல்லுடா? நீ முழு ஆம்புளைப் பயல். எப்படிடா உட்காரலாம்? சொல்றியா, இல்ல முதுகுத் தோலை உரிக்கணுமா?"


அவர், சுயம்புவை உலுக்கிக் குலுக்கினார். அவனோ, இரு கரத்தாலும் கண்களை மூடிக் கொண்டான். தலையை பம்பரம் போல் சுழல விட்டான். அந்த மனிதரின் மார்பிலேயே முகம் போட்டு, அவர் கழுத்தைப் பற்றிக் கொண்டு அழுதான். பிறகு, மின்சாரம் ஒழுகும் சுவிட்சைத் தொட்டவன் போல் திடுக்கிட்டு, அவரிடமிருந்து விடுபட்டான். “வேணுமுன்னா என்னை போலீஸ்ல ஒப்படையுங்க... அவங்கதான் எல்லாரையும் அங்கேயே அடித்துக் கொள்வாங்களாமே... என்னையும் கொல்லட்டும்" என்று அப்பாவித்தனமாகச் சொல்வது போல் சொன்னான். மீண்டும் அழுதான். அந்த மனிதர், பிடி தளர, அவனைப் பார்த்தார். அவன் பார்த்த பார்வையில், அடித்தவனைத் தவிர, அத்தனைப் பயணிகளுக்கும் ஒரு அனுதாபம் ஏற்பட்டது. அந்தப் பெண் கூடத் தனது அழுகையை அடக்கிக் கொண்டு, அவனை அனுதாபமாகப் பார்த்தாள். சிலர் சத்தம் போட்டே பேசினார்கள். அவனைப் பார்த்தால் குற்றவாளியாக இருக்க முடியாது என்று ஒரு கட்சி. ஏதோ ‘ஒரு மாதிரி’ என்று ஒரு கட்சி. எல்லோருமே பேருந்து சீக்கிரம் போக வேண்டுமே என்ற ஒரே கட்சி. ஆகையால், அவனை ஒரு பிரச்னையாகப் பார்த்தார்கள். அந்த நடுத்தர மனிதர் அவன் மேல் போட்ட பிடியை எடுத்து விட்டு, அவனைக் கண்ணுங் கருத்துமாகப் பார்த்தார்.


அவனோ, எவரையும் பார்க்காமல், தன்னைத்தானே உள்நோக்கிப் பார்ப்பதுபோல் நின்றான். பிடரி வரை நீண்ட முடி. காதுகளில் பாதியை மூடி அவற்றை உருமாற்றிக் காட்டிய கேசம். புதர்போல் மண்டிய உச்சி. நீளவாக்கில் போகாமலும், உருண்டு திரளாமலும் அவை இரண்டும் கலந்த முகம். செம்மண் நிறம். சிமெண்ட் நிற பாண்ட். அதற்குள் சொருகப்பட்டாலும், வெளியே இடுப்புச் சதையைக் காட்டும் நீலச்சட்டை. பதினெட்டு வயதைக் காட்டும் உடல். உச்சி முதல் பாதம் வரை ஒரு குழைவு. விகிதாச்சாரத்திற்கு சற்று அதிகமான பிட்டம். பால் வடியும் முகம். ஆனால் அது கள்ளிப் பாலோ என்று சந்தேகிக்கும் அளவிற்கான மாறாட்டம். சில சில்லறைக் குறைகளுடன் கூடிய அழகுப் பையன் தான். அவன் அழுவது, அழகே அழுவது போலிருந்தது. இப்போது அடித்தவன் கூடப் பேசாமலிருந்தான். ஆனால், அங்குமிங்குமாய்க் கிடந்த சில தனிக்கட்டைகள் ஆஜராயின.


"போலீஸ் ஸ்டேஷன் இதோ வரப்போகுது... இவன ஒப்படைச்சிட்டு போயிடலாம்."


போலீஸ் என்றதும், அந்தப் பேருந்து ‘சடன் பிரேக்கோடு’ நின்றது. ஓட்டுநர் இருக்கையிலிருந்தபடியே திரும்பி “ஏன்யா... நீ கண்டக்டர் வேலை செய்ய வந்தியா? இல்ல கள்ளக்காதலை ரசிக்க வந்தியா?" என்றார். அதற்குப் பிறகுதான், கண்டக்டருக்கும் சுரணை வந்தது. முடங்கிக் கிடக்கும் பறவையைப் பார்த்து, நிதானமாகவும் நம்பிக்கையோடும் நடக்கும் பூனை போல் நடந்தார். சுயம்புவின் கையைப் பிடித்து வெளியே இழுத்தார். அவன் எந்த எதிர்ப்பும் காட்டாமல் இழுத்த இழுப்பிற்கு வந்ததில், அவருக்கு பயம் கலைந்தது. அதற்காக ஒரு சலுகை காட்டுவது போல, அவன் பெட்டியாகத்தானிருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்பட்டதைத் தூக்கி அவன் கையில் திணித்தார். அவன் முதுகில் கை வைத்தபடியே அவனை நடத்தினார். பின் வாசலுக்குக் கொண்டு வந்து, ஒவ்வொரு படியாய் இறங்கி, இறங்கி, அவனையும் இறக்கி விட்டார். அவன் காட்டிய பார்வை தாங்க மாட்டாது மீண்டும் அவனை ஏற்றிவிடலாமா என்பது போல் விசிலை ஊதாமலேயே விட்டு வைத்தார். இதற்குள் பாதிப் பயணிகள் மிச்சம் மீதிகளின் மௌனச் சம்மதத்தோடு “சே... சே... நல்ல பஸ்ஸுய்யா..." என்று முணுமுணுத்தார்கள். நடத்துநர் விசிலடித்தார். மனசாட்சியை பலவீனப்படுத்திக் கொண்டு பலமாகவே விசிலடித்தார். பேருந்து பேரிரைச்சலோடு பாய்ந்தது.


தரையில் கால் தட்ட நின்ற அவன் - அந்தச் சுயம்பு, கையிலிருந்த சூட்கேஸை வீசியடித்தான். அதுவும் அவன் மனம் போல் கிறீச்சிட்டது. அப்படியும் ஆத்திரம் தாங்காமல் அந்தப் பெட்டியைக் காலால் இடறினான். பின்னர் ரத்தக்கசிவுக் கால்களோடு அந்தப் பெட்டிமேல் உட்கார்ந்தான். அந்தக் காடே கதறுவது போல் கத்தினான்.


"எம்மா... என்னை எதுக்காக இப்படிப் பெத்தே? நான் யாரும்மா... யாரு?"

-----------------