அத்தியாயம் 1
குறிஞ்சி மலர்
26
குயிற்குஞ்சு முட்டையைக் காக்கை தன் கூட்டிலிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின்றது போல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை
மயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.
-- திருமந்திரம்
அரவிந்தனும் பூரணியும் புகைப்பட நிலையத்துக்குச் சென்றிருந்தபோது வீட்டில் மீனாட்சிசுந்தரமும் மங்களேசுவரி அம்மாளும் அவர்கள் இருவரையும் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"எனக்கு ஒன்று தோன்றுகிறது. என் பெண் வசந்தாவின் திருமணத்தை மட்டும் தனித் திருமணமாக நடத்துவதற்குப் பதிலாக அதே மண மனையில் இவர்களுக்கும் முடிபோட்டு இணைத்துவிட்டால் என்ன? இவர்களும் தான் எத்தனை நாளைக்கு இப்படியே இருந்துவிட முடியும்? ஆக வேண்டிய நல்ல காரியம் காலா காலத்தில் ஆனால் தானே நன்றாக இருக்கும்? பூரணிக்கு வயதும் கொஞ்சமா ஆகிறது?" என்று மங்களேசுவரி அம்மாள்தான் முதலில் அந்த பேச்சைத் தொடங்கினாள். சரியான நேரத்தில் பொருத்தமாக அந்த அம்மாள் அதை நினைவுபடுத்துவதாகத் தோன்றியது மீனாட்சிசுந்தரத்துக்கு. அவர் ஒப்புக் கொண்டார்.
"செய்ய வேண்டியதுதான்! எனக்குக் கூட முன்பே இப்படி ஒரு நினைப்பு உண்டு. அந்தப் பெண் பூரணிக்கு இதையெல்லாம் காலம் நேரம் பார்த்துச் செய்வதற்கு வேறு யார் இருக்கிறார்கள்? அரவிந்தன் நான் சொன்னால் கேட்பான். அவனுக்கும் தான் யார் இருக்கிறார்கள்? அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் நாமாகப் பார்த்துச் சொல்லித் தூண்டிச் செய்து வைத்தால் தான் நல்லது. இரண்டுமே அப்பாவிகள். இலட்சியம், கொள்கை, அது, இது என்று ஒரேவிதமான மனமுடையவர்கள். வரட்டும், இருவரையும் முறைக்காக ஒரு வார்த்தை கேட்டுக் கொண்டு சேர்த்தே ஏற்பாடு செய்துவிடுவோம்..."
"நான் அவளைக் கேட்டுக் குறிப்பறிந்து கொள்கிறேன். நீங்கள் அரவிந்தனைக் கேட்டு விடுவது நல்லது. நாம் தான் இவர்களுக்கு எல்லா உறவும். நீங்கள் அரவிந்தனின் தந்தையாகவும், நான் பூரணியின் தாயாகவும் பாவனை செய்து கொண்டு இருந்து நாமாகப் பார்த்து நடத்த வேண்டிய நல்ல காரியம் இது" என்று மங்களேசுவரி அம்மாள் கூறி வற்புறுத்தினாள்.
இந்தத் தீர்மானத்தின் தொடர்ச்சியாகத்தான் புகைப்பட நிலையத்திலிருந்து திரும்பிய அரவிந்தனையும் பூரணியையும் இதைக் கேட்டு முடிவு செய்வதற்காக அவர்கள் தனித்தனியே அழைத்துக் கொண்டு போனார்கள்.
மங்களேசுவரி அம்மாள் தன்னிடம் அதுபற்றிக் கூறிக் கேட்டபோது பூரணி மணப் பெண்ணாகவே மாறிவிட்டது போல் நாணித் தலைகுனிந்து நின்றாள். பரிபூரணமான இன்ப அனுபவத்தை மனம் அடைகிறபோது நெஞ்சுக்கும் நினைப்புக்கும் தான் வேலை. வாய்க்கும் நாவுக்கும் வேலை இல்லை. வாயும் நாவும் பேசும் ஆற்றல் இழந்து போகின்றன. பதில் சொல்லும் உணர்வு தடைப்பட்டுப் போகிறது. எதிரே நின்று கொண்டு கேட்கும் மங்களேசுவரி அம்மாளின் முகத்தை நேரே பார்க்கக் கூசிற்று பூரணிக்கு. தன்னாலும், வெல்ல முடியாத அளவற்ற நாணத்தை அப்போது உணர்ந்து ஒல்கி ஒசிந்து நின்றாள் அவள். அந்த ஒரே கணத்துக்குள் பூரணியின் முகத்தில் புதுப்புது அழகுகள் பூத்தன. ஆயிரக்கணக்கானவர்களுக்கு நடுவில் மேடையேறி நின்று ஆற்றொழுக்குப் போல் இடையறாமல் பெரிய கருத்துக்களைப் பேசும் இலட்சிய நங்கை பூரணியா அப்படி நாணி நிற்கிறாள் என்று மங்களேசுவரி அம்மாளுக்குச் சந்தேகம் உண்டாகிவிட்டது. பெண் எந்த உணர்ச்சிகளைத் தனக்கே உரிமையாகப் பெற்றிருப்பதால் பெண்ணாக இருக்க முடிகிறதோ, அந்த மெல்லிய உணர்ச்சிகளை அவளால் ஒரு போதும் விடமுடியாதென்று அந்த அம்மாளுக்குத் தோன்றியது.
"என்னடி பெண்ணே! நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நீயானால் பதில் சொல்லாமல் நாணிக் கொண்டே நிற்கிறாய்? என்னிடம் சொல்வதற்கு என்ன வெட்கம் வேண்டிக் கிடக்கிறது. நீயும் பச்சைக் குழந்தை இல்லை, அரவிந்தனும் பச்சைக் குழந்தை இல்லை. எங்களை அதிகம் சோதனை செய்யாமல் 'சரி' என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டீர்களானால் திருமணங்களைச் சேர்த்தே நடத்திவிட வசதியாக இருக்கும்."
மேலும் மௌனம் சாதித்தாள் பூரணி. அவளுடைய கண்களும் முகமும் நாணம் சுரந்து, நகை சுரந்தது. உணர்வுகள் சுரந்து தோன்றின.
"என்னை உன் தாய் போல் நினைத்துக் கொண்டு சொல் பூரணி! நான் உனக்கு அந்நியமானவள் இல்லை."
நீண்ட நேர மௌனத்துக்குப் பின் உள்ளத்து உணர்வுகளின் இனிமையெல்லாம் கலந்த கோமளமான மெல்லிய குரலில் தயங்கித் தயங்கிச் சொன்னாள் பூரணி. "அவருக்கு எப்படி விருப்பமோ அப்படியே செய்யுங்கள். அவருக்குச் சம்மதமானால் எனக்கும் சம்மதம்தான்."
"அவருக்கு என்றால் எவருக்கு?"
"அவருக்குத்தான்." ஈடில்லா அழகும், இணையில்லாப் புன்னகையுமாகச் சிவந்து சிரித்தது பூரணியின் முகம். சொல்லிவிட்டு அவள் அம்மாளின் முன்னாலிருந்து நழுவி ஓடிவிட்டாள். அவளுடைய உள்ளம் துள்ளியது, பொங்கியது, பூரித்தது. மென்மையும் நுணுக்கமும் பொருந்திய கனவுகளும் நினைவுகளும் அவளுடைய மனப் பரப்பெல்லாம் எழுந்தன.
பூரணியை ஒருவாறு சம்மதிக்கச் செய்துவிட்ட மன நிறைவோடு நின்ற மங்களேசுவரி அம்மாள், மீனாட்சிசுந்தரம் தொங்கிய முகத்தோடு திரும்பி வருவது கண்டு திகைத்தாள்.
"என்ன காயா, பழமா?"
"காய்தான், அவன் சம்மதிக்கவில்லை."
"காரணம் என்னவாம்?"
"காரணமெல்லாம் சொல்லிக் கொண்டு நின்று நிதானமாய்ப் பேசவே இல்லை. 'இப்போது இதற்கு அவசரமில்லை' என்று ஒரே வாக்கியத்தில் அவன் பேச்சை முடித்துக் கொண்டு போய்விட்டான்."
"நீங்கள் விவரமாக அவனுக்கு எடுத்துச் சொல்லக் கூடாதோ?"
"கேட்டால்தானே சொல்லலாம்."
"அந்தப் பெண்ணே சம்மதித்த மாதிரிச் சொல்லிவிட்டது. அரவிந்தனுக்கு மட்டும் என்ன தடை? இப்போது அரவிந்தன் எங்கே? நான் சொல்லிப் பார்க்கிறேன்."
"தோட்டத்துப் பக்கமாகப் போனான். நீங்கள் வேண்டுமானால் போய்ச் சொல்லிப் பாருங்கள்" என்று நம்பிக்கையில்லாத குரலில் பதில் சொன்னார் மீனாட்சிசுந்தரம். மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனைத் தேடிக் கொண்டு தோட்டத்துப் பக்கமாகப் போனாள்.
அப்போது காரில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மலையைச் சுற்றிக் காட்டுவதற்காகப் போயிருந்த முருகானந்தமும் வசந்தாவும் திரும்பி வந்தார்கள். வசந்தா காரிலிருந்து குழந்தைகளை இறக்கி உள்ளே கூட்டிக் கொண்டு போனாள். முருகானந்தம் மீனாட்சிசுந்தரத்துக்கு அருகில் வந்து மரியாதையோடு அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டான்.
"உட்கார் தம்பி. உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்" என்றார் மீனாட்சிசுந்தரம்."
"பரவாயில்லை. சொல்லுங்கள்" என்று நின்று கொண்டே முருகானந்தம் அவர் கூறுவதைக் கேட்கத் தயாரானான்.
"அரும்பாடுபட்டு ஒருவழியாக இந்தப் பெண்ணிடம் தேர்தலில் நிற்பதற்குச் சம்மதம் வாங்கிவிட்டோம். நேற்று அரவிந்தன் வந்து சொல்லிய விவரங்களிலிருந்து பார்த்தால் போட்டியும் எதிர்ப்பும் கடுமையாக இருக்கும் போலிருக்கிறது. பூரணி வெற்றி பெறுவதற்காக இராப்பகல் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும் நாம். நான் தனியாக என்ன செய்ய முடியும்? உங்களையெல்லாம் நம்பித்தான் இதில் இறங்கியிருக்கிறேன். 'பர்மாக்காரரும் புது மண்டபத்து ஆளும்' ஒன்று சேர்ந்தால் வேறு வினையே வேண்டாம். மதுரையையே எரித்துவிடுகிற அளவு கெட்ட பயல்கள் இரண்டுபேரும்."
"மதுரையை எரித்துவிடுகிற பெருமை இன்று இவர்களுக்குக் கிடைக்காது, ஐயா. தனக்கு நியாயம் கிடைக்கவில்லையே என்பதற்காக மதுரையை எரிக்கும் துணிவு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்ணகி என்ற சோழநாட்டுப் பெண்ணுக்கு ஏற்பட்டது. இவர்களோ நியாயத்தையே எரித்து விடப் பார்க்கிற ஆட்கள்" என்று சொல்லிச் சிரித்தான் முருகானந்தம்.
"நீ சொல்கிறாய் தம்பி! ஆனால் இன்றைய தேர்தல் முறைகளிலும் போட்டியிலும் நியாயத்தை யார் பார்க்கிறார்கள்? என்னென்னவோ சூழ்ச்சிகளையெல்லாம் கூசாமல் செய்கிறார்களே. நேற்று அரவிந்தன் சொன்னதைக் கேட்டாயோ, கூட்டிக் கொண்டு போய்ப் பயமுறுத்தி ஆள்விட்டு அடிக்கச் சொல்கிற அளவு நியாயம் வாழ்கிறது நம்முடைய ஊரில்!"
"இருக்கட்டும்! அரவிந்தனை அப்படிச் செய்ததற்கு அந்த ஆளை நான் சும்மா விடமாட்டேன் ஐயா. என்னிடமும் ஆட்கள் இருக்கிறார்கள்" என்று கொதிப்பேறின குரலில் சொன்னான் முருகானந்தம்.
"சே! சே! நாய் கடிக்க வந்ததென்பதற்காகப் பதிலுக்கு நாமும் கடிக்கப் போவதா? நம் முயற்சிகளை நாம் நேரான வழிகளிலேயே செய்ய வேண்டும்." இவ்வாறு அவர்கள் உரையாடல் தேர்தல் ஏற்பாடுகளைப் பற்றி வளர்ந்தது. அரவிந்தன் தோட்டத்துப் புல்தரையில் உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்தான். மங்களேசுவரி அம்மாள் வந்து அவனுக்கு எதிர்ப்புறம் சிறிது தள்ளி அமர்ந்து கொண்டு "நீங்கள் அப்படிச் சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மறுபடியும் விவரமாகப் பேசி எப்படியும் உங்களைச் சம்மதிக்கச் செய்து விடலாமென்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறேன்" எனப் பேச்சைத் தொடங்கினாள்.
உடனடியாகப் பதில் ஒன்றும் சொல்லாமல் அந்த அம்மாள் முகத்தைப் பார்த்தான் அரவிந்தன். மேலும் தொடர்ந்தாள் அந்த அம்மாள்.
"நாங்கள் இரண்டுபேரும் உங்களைக் காட்டிலும் வயதிலும் அனுபவங்களிலும் மூத்தவர்கள், நல்லதற்குத்தான் சொல்கிறோமென்று எங்களை நம்புங்கள். வசந்தாவின் திருமணத்தோடு பூரணியின் திருமணத்தையும், என் செலவில் நன்றாக நடத்திப் பார்த்துவிட வேண்டுமென்பது எனக்கு ஆசை. நீங்கள் புகைப்படம் எடுத்து வரச் சென்றிருந்தபோது நானும் அச்சகத்தின் முதலாளியும் இதுபற்றிப் பேசினோம். நான் கூறிய ஏற்பாடு அவருக்கும் பிடித்திருந்தது. ஒப்புக் கொண்டார். நீங்கள் வந்ததும் உங்களை ஒரு வார்த்தை கேட்கிறேன் என்றார். கேட்டபோது அவசரமில்லை என்று சொல்லி மறுத்து விட்டீர்களாம்."
"மன்னிக்க வேண்டும் அம்மா. இப்போது உங்களிடமும் அதே முடிவைத்தான் நான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. எங்கள் திருமணத்துக்கு இவ்வளவு அவசரம் தேவை இல்லை. நாங்கள் சிறு குழந்தைகள் இல்லை. இரண்டு பேரும் விபரம் தெரிந்தவர்கள். நீங்கள் நினைவுபடுத்துகிற மாதிரி மண வாழ்வுக்கு அவசரமோ, அவசியமோ இருவருக்குமே இப்போது இல்லை."
"ஏன் இல்லை? உங்களுக்கும் அவளுக்கும் வயது என்ன குறைவாகவா ஆகிறது, அரவிந்தன்? ஊர் உலகத்துக்கு ஒத்தாற் போல் நாமும் நடந்து கொள்ள வேண்டும். நாலு பேர் நாலுவிதமாகப் பேசுவதற்கு இடம் வைத்துக் கொள்ளக்கூடாது. இந்தத் திருமணம் நடப்பதினால் பூரணிக்கோ உங்களுக்கோ ஒரு குறைவும் வந்துவிடாது. வழக்கம் போல் அவள் தன்னுடைய பணிகளைச் செய்து கொண்டிருக்கலாம். நீங்கள் எதற்காகத் தயங்குகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை."
இதைக் கேட்டு அரவிந்தன் மெல்லச் சிரித்தான். "தயக்கத்துக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. சிலவற்றைச் சொல்வோம். சிலவற்றைச் சொல்ல முடியாது. இன்னும் சிலவற்றைச் சொன்னாலும் உங்களுக்கு விளக்கிக் கொள்ள முடியாது."
"அதெல்லாமில்லை அரவிந்தன். நீங்கள் என்னென்னவோ சம்பந்தமில்லாமல் சொல்லி என்னை ஏமாற்றித் தட்டிக் கழித்துவிடப் பார்க்கிறீர்கள்."
சிரிப்பு மறைந்து உருக்கமாக எதையோ பேசத் தொடங்கப் போகிற பாவனையில் அரவிந்தனின் முகம் மாறியது. அவன் பெருமூச்சு விட்டான். கிழித்துச் சிதறின கருநீலப் பட்டுத் துணிகள் போல் சிதறல் சிதறலாக மேகத் துணுக்குகள் நீந்தும் வானத்தை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தான். இலட்சியத் துடிப்பும் உயர்ந்த தன்மையும் பொருந்தியவற்றை நினைக்கும் போதும், பேசும்போதும், வழக்கமாக அவனுடைய கண்களிலும், முகத்திலும் வருகிற ஒளி அப்போதும் வந்து சாயலிட்டு நின்றது. அவன் மங்களேசுவரி அம்மாளை நோக்கிச் சொல்லலானான்.
"அம்மா! இன்னும் சிறிது காலத்திற்கு மனத்தினால் வாழ்ந்து கொண்டிருக்க மட்டும் எங்களை அனுமதியுங்கள். உடலால் வாழும் வாழ்க்கையைப் பற்றி நான் இன்னும் எண்ணிப் பார்க்கவே இல்லை. உடம்பைப் பற்றித் தொடர்கிற வாழ்க்கை ஒரு பெரிய பொய் மயக்கமாகவே இந்த விநாடி வரை எனக்குத் தோன்றுகிறது. காக்கை கூட்டில் இடப்பட்ட குயில் முட்டையைத் தன்னுடையது, தனக்கேயுரியது என்று தவறாக மயங்கிப் பேணி வளர்க்கும் பேதைக் காக்கையைப் போல் உடம்பைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு வாழத் தயங்குகிறேன் நான். குயில் முட்டை சிதைந்து குஞ்சு பெரிதாக வளர்ந்து இனிய குரலில் அழுதொழுகக் கூவியவாறே காக்கைக் கூட்டிலிருந்து அது பறக்கும் போதுதான் காக்கை தான் வளர்த்தது தன் குஞ்சன்று, குயிற் குஞ்சு என்று உணர்ந்து ஏமாற முடிகிறது. எனக்கும் பூரணிக்கும் எங்களைப் புரிந்து கொள்ளாமல் இப்போதே அந்த ஏற்பாட்டையெல்லாம் நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டு செய்தால் நாங்கள் வாழ்வதும் காக்கை, குயில் மூட்டையை அடைகாத்த கதையாக ஏமாற்றத்தில் தான் முடியுமென்று எனக்குத் தோன்றுகிறது."
"என்னவோ புத்தகங்களில் படிக்கிற மாதிரி சொல்கிறீர்கள். உங்கள் தத்துவம் எனக்கு விளங்கவில்லை. பொருத்தமாகவும் படவில்லை. இருவரும் ஆசையுடனும் அன்புடனும் பழகுகிறீர்கள். புதிதாக, அதிசயமாக உங்களை ஒன்றும் செய்து கொள்ளச் சொல்லவில்லை. உலகத்தில் சாதாரணமாக எல்லோரும் செய்து கொள்வதைத்தான் நீங்களும் செய்து கொள்ள வேணுமென்று வற்புறுத்துகிறேன். உலகத்துக்கு ஒப்ப, நாலு பேரறிய மணம் செய்து கொண்டுவிட்டால் அப்புறம் ஆயிரம் இலட்சியங்களைப் பேசலாம், கடைப்பிடிக்கலாம், உங்களை ஏனென்று கேட்க மாட்டார்கள்."
"நீங்கள் எந்த வாழ்க்கையைப் பற்றி நினைவூட்டுகிறீர்களோ, அந்த வாழ்க்கையை எங்கள் மனங்களிலேயே நாங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் ஒரே சமயத்தில் இரண்டுவிதமான வாழ்க்கையை நடத்த முடியும். எந்த வாழ்க்கையை வாழ வேண்டுமென்று தவிக்கிறோமோ அந்த வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்கள் மனத்தில் ஏற்படும்போதே ஒருமுறை வாழ்ந்துவிடலாம் அம்மா! எண்ணங்களில் வாழும் வாழ்வு உயர்ந்தது. அதற்கு அழிவில்லை. மிக உயர்ந்த வாழ்க்கையை மண்ணில் வாழ முடியாதோ என்று எனக்கும் பயமாக இருக்கிறது. மண் குறைபாடுகளும் அழுக்குகளும் நிறைந்ததாயிருக்கிறது. அதனால் தான் இன்னும் சிறிது காலம் எங்களை மனங்களில் மட்டும் வாழ அனுமதியுங்கள் என்று உங்களைக் கெஞ்சுகிறேன்."
"எனக்கும் உங்களைப் போலவே மேற்கோள், எடுத்துக் காட்டு எல்லாம் சொல்லிப் பேசுவதற்குத் தெரியும் அரவிந்தன். 'மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்' என்றுதான் நம்முடடய பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்."
"பெரியவர்கள் அதைச் சொல்லிய காலத்து வாழ்க்கைச் சூழ்நிலை வேறு. இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலை வேறு. ஏற்கெனவே நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், மற்றவர்கள் புதிதாக நல்லவண்ணம் வாழ வந்துவிடலாகாதே என்று மனத்தில் அழுக்காறு கொள்கிற காலம் அம்மா இது. பாட்டில் மூடியைப் போல், தான் வசதியாயிருக்கிற ஒரு தொழிலில் அதே வசதியடையும் திறமையுள்ள பிறர் நுழைந்து விடாமல் மூடிக் காக்கும் சூழ்ச்சியான மனிதர்கள் இன்றைய வாழ்க்கையில் நிறைய இருக்கிறார்கள். அதனால் தான் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் ஒப்புரவு வாழ்வில் குன்றியுள்ளது."
"பேச்சை எங்கேயோ மாற்றிக் கொண்டு பேசுகிறீர்கள். உங்கள் திருமண ஏற்பாடு பற்றி பூரணியிடம் கேட்டேன். அவள் தேவலாம், 'அவருக்கு விருப்பமானால் எனக்கும் விருப்பம்' என்று சுருக்கமாக இணங்கி வழிக்கு வந்த மாதிரி பதில் சொல்லி விட்டாள். நீங்கள் தான் சுற்றி வளைத்து இழுத்தடிக்கிறீர்கள். முடிவாக ஒன்றும் சொல்லமாட்டேனென்கிறீர்கள்."
"வேறென்னமா செய்வது? கழுத்தில் மூன்று முடிச்சிட்டு உரிமை கொண்டாடி ஆளமுடிந்த சாதாரணப் பெண்ணாக இன்னும் அவளை என்னால் நினைக்க முடியவில்லை. பூரணிக்குள்ளேயே இன்னொரு பூரணியும் இருக்கிறாள். அவள் துயரம் நிறைந்த மனித வெள்ளத்தின் நடுவே ஒளி விளக்கேற்றி நடந்து போவதாகக் கனவு காண்கிற பூரணி. காக்கை குயிற் குஞ்சை அடைகாத்து ஏமாறுவது போல் அவள் விடுபட்டுப் பறந்து போகத் துடிக்கும் நாள் வந்தால் நான் அன்று ஏமாந்து நிற்பேன். அவள் உயரப் போய் விடுவாள். நான் கீழேயே நிற்பேன். நாங்கள் இரண்டு பேருமே உயரத்தில் ஏறிச் செல்கிறோம். அதற்கு இந்த வாழ்க்கைப் பிணைப்பு அவசியமில்லை. மனங்களின் பிணைப்பு மட்டுமே போதும். என்னை வற்புறுத்தாதீர்கள். சிறிது காலத்துக்கு இப்படியே இருக்க விடுங்கள்" என்று சொல்லி விட்டுப் புல் தரையிலிருந்து எழுந்தான் அவன். இந்தப் பேச்சை இதற்கு மேல் அவன் தொடர விரும்பவில்லை என்பது மங்களேசுவரி அம்மாளுக்கு விளங்கிவிட்டது. அவன் கூறிய காரணங்களும் தத்துவங்களும் அந்த அம்மாளுக்கு அசட்டுத்தனமாகத் தோன்றின. ஆனால் அவன் பிடிவாதமாக இருந்தான். புரிந்து கொள்ளவும் புரியச் செய்யவும் சாத்தியமில்லாததான ஒரு விஷயத்தை அரவிந்தன் மனத்தில் வைத்துக் கொண்டு தவிப்பதாக அந்த அம்மாளுக்குத் தோன்றியது.
எது எப்படியானால் என்ன? மீனாட்சிசுந்தரமும் மங்களேசுவரி அம்மாளும் திட்டமிட்டபடி பூரணியின் திருமணத்தையும் சேர்த்து நடத்தும் தீர்மானம் முறிந்துவிட்டது. அன்று இரவும், அதன்பின் மறுநாள் காலையிலும் பூரணி, அரவிந்தனின் கண்பார்வையில் படவே இல்லை. மறுநாள் காலை கோடைக்கானல் மலைத் தொடர் முழுவதும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. நீலம் போர்த்த மாதிரி மலை முழுவதும் குறிஞ்சிப் பூக்கள் தெரிந்தன. பத்து பன்னிரண்டு நாட்களாகவே அங்கும் இங்குமாகச் சில சில குறிஞ்சிப் பூக்கள் தென்பட்டன. முதல் நாள் உண்டான சாரல் காற்று பருவ மாறுதல்களின் காரணமாக அன்று எங்கு நோக்கினும் அள்ளிக் கொட்டினாற் போல் குறிஞ்சி பூத்துக் குலவிக் கொண்டிருந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் அந்த ஆண்டு மறுபடியும் குறிஞ்சி பூத்திருந்ததனால் ஊரில் ஒரு கோலாகலப் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. எங்கும் அந்த அழகைப் பற்றியே பேச்சு. ஊருக்குத் திருவிழா களை உண்டாக்கி விட்டிருந்தது குறிஞ்சிப் பூ.
அன்று மதுரைக்குத் திரும்புவதாக இருந்த அரவிந்தன், மீனாட்சிசுந்தரம், முருகானந்தம் மூவரும் குறிஞ்சிப் பூக்காட்சிகளைச் சுற்றிப் பார்த்து மகிழ வேண்டுமென்பதற்காகப் பயணத்தை ஒருநாள் தள்ளிப் போட்டிருந்தார்கள். அன்றைக்கு அரவிந்தனும் முருகானந்தமும் காலை பத்து மணிக்குப் புகைப்பட நிலையத்தில் போய்ப் படங்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள். அரவிந்தனையும் பூரணியையும் சேர்த்து நிறுத்தி ஸ்டூடியோக்காரர் எடுத்த படம் மிக நன்றாக இருந்தது. முருகானந்தம் அந்தப் படத்தை மிகவும் பாராட்டினான். அவர்கள் இருவரும் புகைப்பட நிலையத்திலிருந்து வீடு திரும்பும் போது பூரணியும் வசந்தாவும் கூடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். படங்களைக் கேட்டு வாங்கிப் பார்க்கும் ஆவலோடு பூரணி சிரித்துக் கொண்டே தன்னை எதிர்கொண்டு வரவேற்பாள் என்று அரவிந்தன் நினைத்திருந்தான். முதல் நாள் மாலையில் திருமண ஏற்பாட்டைத் தான் மறுத்து விட்டதனால், தன் பார்வையில் தென்பட விரும்பாமல் அவள் மெல்லிய ஊடல் கொண்டு பிணங்கியிருப்பதை அவன் புரிந்து கொண்டான். இந்தப் படங்களைப் பார்த்த பின் அவள் பிணக்கு தீர்ந்து விடுமென்று அவன் நினைத்திருந்தான். ஆனால் அவன் நினைத்து இருந்தபடி நிகழவில்லை. படங்களோடு அவன் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் விருட்டென்றெழுந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு பக்கத்து அறைக்குள் புகுந்து விட்டாள் பூரணி. வசந்தா எழுந்திருந்து படங்களை வாங்குவதற்காக அரவிந்தனுக்கு அருகில் வந்தாள். "அண்ணா! அக்காவுக்கு உங்கள் மேல் ஒரே கோபம். நேற்று மாலை தோட்டத்தில் புல் தரையில் நீங்களும் அம்மாவும் அமர்ந்து கல்யாண விஷயமாகப் பேசினபோது நானும் பூரணியக்காவும் சவுக்கு வேலிக்கு அப்பால் மறுபக்கத்தில் தான் உட்கார்ந்திருந்தோம். அக்கா நீங்கள் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டார்கள். தோட்டத்திலேயே கண்ணில் நீர் தளும்பிவிட்டது அக்காவுக்கு" என்று அவன் காதருகில் மெல்லச் சொன்னாள் வசந்தா.
"அடப் பாவமே! அதுதானா இந்தக் கோபம்?" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே படங்களை வசந்தாவின் கையில் கொடுத்தான் அரவிந்தன். பூரணியின் கோபத்தைப் போக்கிவிட வேண்டுமென்று அவள் புகுந்து கொண்ட அறையில் நுழையச் சென்றான். அவன் முகத்தில் இடிக்காத குறையாக அறைக்கதவு படீரென்று அடைக்கப் பெற்றது. உட்புறம் தாழிடும் ஒலியும் கேட்டது.
"புகழேந்திப் புலவர் கதவு திறக்கப் பாடின மாதிரி நான் ஏதாவது பாடிப் பார்க்கட்டுமா, அரவிந்தன்?" என்று குறும்பு பேசினான் முருகானந்தம்.
"நீங்கள் அண்ணனுக்கு வேண்டியவர்கள். நீங்கள் பாடினால் அக்கா உள்ளே இரட்டைத் தாழாகப் போடுவார்கள்" என்று வசந்தா முருகானந்தத்தைக் கடைக்கண்ணால் பார்த்துப் புன்னகையோடு கூறினாள். அவளே மேலும் கூறலானாள்.
"அண்ணனும் அக்காவும் எடுத்துக் கொண்டிருக்கிற படம் 'கலியாணப் படம்' மாதிரி இல்லையா? மாலை போட்டுக் கொள்ளாததுதான் ஒரு குறை?"
"அதில் சந்தேகமென்ன? இந்தப் படம் எடுத்துக் கொண்டுவரப் போனபோது நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டார்கள் பார்த்தாயா!" முருகானந்தமும், வசந்தாவும் அவனைப் பற்றிப் பேசினார்கள். ஆனால் அவன் அப்போது அவற்றை இரசிக்கிற நிலையில் இல்லை. 'பூரணி கூடத் தன்னைப் பற்றித் தப்பாகப் புரிந்து கொள்கிறாளே' என்ற வருத்தம் அவன் மனத்தை வாட்டியது.
மாலையில் குறிஞ்சிப் பூ பூத்திருக்கிற மலைப் பகுதிகளையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதற்காக எல்லோரும் கிளம்பினார்கள்.
"எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. நான் வரமாட்டேன்" என்று முரண்டு பிடிப்பது போல் மறுத்தாள் பூரணி.
"அப்படியானால் நானும் வரவில்லை. எனக்கும் ஒன்றும் பிடிக்கவில்லை" என்று அரவிந்தனும் காரிலிருந்து கீழே இறங்கி விட்டான்.
"உங்கள் இரண்டு பேருக்கும் என்ன வந்துவிட்டது இன்றைக்கு. முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியவில்லையே?" என்று மங்களேசுவரி அம்மாள் கடிந்து கொண்டாள்.
அவர்கள் எவ்வளவோ மன்றாடிக் கெஞ்சிப் பார்த்தும் பூரணியும் அரவிந்தனும் வர மறுத்துவிட்டார்கள். கடைசியில் அவர்கள் இருவரையும் வீட்டில் தனிமையில் விட்டுப் புறப்பட்டது கார்.
வீட்டின் முன்புறத்தில் அருகருகே நாற்காலியில் பேசிக் கொள்ளாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் அரவிந்தனும், பூரணியும். சமையற்கார அம்மாள் பின்புறம் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். தோட்டத்து மல்லிகைச் செடியின் பூக்களைப் பறிக்காமல் விட்டிருந்ததனால் காற்று சுகந்தக் கொள்ளையைச் சுமந்து வீசிற்று. பச்சை நிறத்துக் காகிதத் துணுக்குகளை வானில் சிதறின மாதிரிப் பச்சை நிறத்துக் காகிதக்கிளிகள் சேர்ந்தாற் போல் பறந்தன. அழகான சூழ்நிலை நிலவியது. எதிரெதிரே விரோதிகள் போல் பேசாமல் எவ்வளவு நேரம் வீற்றிருப்பது? கோபித்துக் கொள்வது போல் போலியாக உண்டாக்கிக் கொண்ட கடுமைக் குரலில் பூரணிதான் முதலில் கேட்டாள்.
"நான் வரவில்லையானால் உங்களுக்கு என்னவாம்? நீங்கள் பாட்டிற்குப் போக வேண்டியதுதானே?"
"போகலாம்! ஆனால் நான் ஆவலோடு பார்க்க விரும்பும் குறிஞ்சிப் பூ எதுவோ அது அந்த மலைகளில் பூத்திருக்கவில்லை. இதோ இங்கே எனக்கு அருகில் தான் பூத்திருக்கிறது. நேற்று வரை பூத்திருந்தது. இன்று கோபத்தால் கூம்பியிருக்கிறது. அதை மலரச் செய்வதற்காக நான் இங்கே இருக்க வேண்டியது அவசியமாகிறது" என்று அரவிந்தன் அழகாக பேசிய போது அதை இரசிக்கவோ அதற்காக முகமலர்ச்சி காட்டவோ கூடாதென்றுதான் பூரணி எண்ணினாள். ஆனால் அவள் முகம் மலரத்தான் செய்தது. அதில் அவள் அவனுடைய வாக்கியங்கள் இரசிக்கும் குறிப்பும் தோன்றத்தான் தோன்றியது.
"ஆ! இதோ என்னுடைய குறிஞ்சி பூத்துவிட்டது" என்று கைகொட்டி நகைத்தான் அரவிந்தன்.
--------------