சிறுகதை

2.35k படித்தவர்கள்
19 கருத்துகள்

சுளுந்து எரிந்து கொண்டிருக்கச் சூழ்ந்திருந்தது அமைதி. பெரியவர் போய்விட்டார். வீட்டுக்கு மூத்தவராய் இருந்தவர் அத்தை தான். மாமா போனபிறகு இவர்தான் எல்லாமுமாய் இருந்தார். இன்னிக்கு அத்தையும்.

இரண்டு மருமகள்களும் வாசலில் நீ உசத்தியா? நான் உசத்தியா? என அழுது கொண்டிருந்தார்கள். அழுகையிலும் யார் உசத்தி என ஊருக்குக் காட்ட வேண்டுமே? அழுகையிலும் போட்டி. 

ஊர்சனம் கூடி நிற்க, இவர்களின் ஒப்பாரி பெரிதாக இருந்தது. 

“ஆத்தா! நகருங்க ஆத்தா! உங்க அயித்த தேன்.. புடிச்சுக்கிட்டே இருந்தா எப்படி? விட்டா தானே விடை பெற முடியும்?” 

மூத்தவளான விஜயாவும் இளையவளான அரசியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நகர்ந்தனர். 

அன்றிரவு ஊர்கோடிக்குச் சென்று வந்தவன் சொன்னான்.

“எந்திருச்சு எந்திருச்சுல்ல உட்கார்ந்துச்சு அந்த ஆத்தா! எதுவும் நிறைவேறாத ஆசை இருக்குமோ?”

"இருக்கும்... இருக்கும்... இந்தா விஜயா, இப்படி வா! உங்க அயித்தைக்கு ஏதும் ஆசை இருந்து நிறைவேறாமப் போச்சாக்கும்?”

செட்டுவீடு பாண்டியம்மா தன் பொக்கை வாயில் பாக்கை அடக்கியபடி வம்பை ஆரம்பித்து வைத்தார். பாண்டியம்மாளின் மகன் அந்த ஊர் திருவிழாக்களில் மைக்செட்டு போடுவான். அதனால் அந்தப் பேரே நிலைத்து விட்டது அவருக்கும். 

விஜயாவை முந்திக் கொண்டு சொன்னாள் அரசி.

“எங்க அத்தைக்கி பட்டணம் போகணும்ன்னு ஆசை. அங்க அவுக அண்ணன் குடும்பம் வசதியாய் இருக்குல்ல. அங்கன போய் சுகமா இருக்கலாமுன்னு எண்ணம். ஏன் உசுரே போனாக்கூட பட்டணத்துல போகணும். இப்படிக் கட்டையைப் போட்டு காட்டுல விடறாப்புல இல்லாம பொசுக்குன்னு சுவிச்சப் போட்டா டபக்குன்னு பொசுங்கிடுதாம்ல. அப்படி நிம்மதியாப் போய்ச் சேரணும்ன்னு சொல்வாங்க. ஹ்ம்ம்!” வராத அழுகையைத் துடைத்து, வழிந்த மூக்கைப் புடவைத் தலைப்பால் சிந்தித் துடைத்துக் கொண்டாள். 

இப்போது விஜயாவுக்கு அழுகை வராவிட்டால் பாவமாயிற்றே. 

“காடுகரை கண்ட அயித்த
கண்மூடிப் போனாயோ
நாடு சனம் அங்கருக்க
நாடி நீயும் போகலையோ?
பாடான பாடுபட்டு
பட்டினமும் ஏறலையே
பல்லாக்குப் பயணமுமே
பகல்கனவாய்ப் போனதுவே?”

பிலாக்கணம் வைக்க ஆரம்பித்துவிட்டாள் விஜயா.

“அடடா... அத்தனை ஆசையா வைச்சிருந்துச்சு உங்க அயித்த. அதான் எந்திருச்சு எந்திருச்சு உட்கார்ந்துச்சாம். வெட்டியான் கட்டையிலயே போட்டானாம்ல!”

போன உயிர் போன பின்னும் எத்தனை அவல்கள் ஊர் மெல்லக் கிடைத்துவிடுகின்றன. 

உட்கார்ந்துச்சாமே... நின்னுச்சாமே... ஓடிச்சாமே... எல்லாம் மே... மே... தான். 

கன்னத்தில் கை வைத்தும், ச்சோ! ச்சோ! என ஒலி எழுப்பியவாறும், கிடைத்த நீர் மோரை வாங்கி ஒலியெழுப்பியபடி குடித்துக் கொண்டும், கூடியிருந்த ஜனங்கள் சொல்ல...

விஜயாவும், அரசியும் தத்தம் வீட்டுக்காரர்களோடு நடுவில் அமர்ந்திருந்தனர். வீட்டுக்கு மூத்தவர் போன பின்னாலே யார் இங்கு மூத்தவர் என்ற எண்ணம் இருவருக்குள்ளும் ஓடிக் கொண்டிருந்தது. இருவருமே கூரான கத்திகள். இதில் எந்தக் கத்தி நன்றாக வெட்டும் எனப் பார்க்க முடியாது.

தவிர வீட்டுக்குத் தலைமையாக அத்தை இருந்தார். அவரும் இல்லாதபோது யாருக்கு யாரு அடிமை என்ற எண்ணம் வர வழிப்போக்கனற்ற ஆடு போல விறைத்துக் கொண்டு நின்றனர், இருவரும். 

இருவருக்கும் சமாதானம் பேசச் செட்டுவீடு பாண்டியம்மாள்.

“சரி. முடிவா சொல்லிப்புடறேன்... அத்தக்காரிக்கு இருந்த பட்டணத்து ஆசைக்கு அத நிறைவேத்திப்புடுங்க. அம்புட்டுத்தான். இருந்தப்ப போக முடியாத உங்க அத்த போய் சேர்ந்த பின்னாவது பார்க்கட்டும். பேசாம அங்க உள்ள மடம் எதிலயாவது காரியத்த வைச்சுக்கங்க. ஏ! கோவாலு! உன்னோட சொந்தக்காரங்க பட்டணத்துல எங்கேயோ பண்ணிட்டு வந்தாங்களேடா? எங்கடா?”

கோவாலு எனப்பட்டவன் சொன்னான்.

“நான் அட்ரஸ் தரேன் பெரியாத்தா. எல்லோருமே போய்ட்டு வாங்க. உங்களுக்கும் பட்டணத்து ஆசை இருக்குமே. இப்பவே போய்ட்டு வந்திடுங்க. அப்புறம் செட்டுக்கடையை விட்டுட்டுல்லாம் உங்க மகன் பட்டணம் கிளம்ப மாட்டார்” என்றான் நக்கலாய்.

“அட எடுபட்ட பயலே... போன உசுருக்கு வழியக் கேட்டா இருக்கற உசுருக்கும் சேர்த்துல்ல வழி சொல்லிட்டுக்கெடக்க. போடா! போடா! எனக்கு ஏரோப்ளேனுல போக ஆசையிருக்கு. உன் கைக்காசைச் செலவழிச்சுக் கூட்டிட்டுப் போறியா? சொல்லு. இதோ, இப்பவே கிளம்பறேன்.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“ம்க்கும்! ஏரோப்ளேனுல போற காசுக்கு நான் நூறு ஆடு வாங்கி விட்டுருவேன். பேசாம இங்கனயே உட்கார்ந்து மேய்ச்சுட்டு இரு. பட்டணம்லாம் இவுங்க போய்ட்டு வரட்டும்.” கோவாலு சொல்லியபடி துண்டை உதறி உட்கார்ந்தான். 

ஒருவழியாய் முடிவெடுத்துக் கிளம்பி இதோ காரியமும் ஆரம்பித்து விட்டது. 

இங்கு வந்தும் கிழக்காலயும் மேற்காலயுமாகவே இருந்தனர் விஜயாவும், அரசியும்.

“இந்தாங்க நான் செஞ்ச பாயாசம். எங்கத்தைக்கு என்னைத்தான் ரொம்பப் புடிக்கும். என்னோடத படையலுக்கு வைச்சா தான் அவங்க ஆத்மா சாந்தியடையும்!" அரசி சிலிர்த்துக் கொண்டு வைத்தாள், தன் பாயாசப் பாத்திரத்தை.

“அட... எங்க அயித்தைக்கு என்னயத்தான் ரொம்பவே புடிக்கும். நான் செஞ்ச சர்க்கரைப் பொங்கல கொஞ்சம் முன்னாடி எடுத்து வைங்க சாமி!” 

இப்படியே போட்டிக்குப் போட்டி தினமும் நடக்கக் கவனித்துக் கொண்டன, இரு கண்கள்.

ஒன்பது நாள் படையல் ஆச்சு. இன்னிக்கு பத்தாம் நாள். இதை முடித்து விட்டு சாமி கும்பிட்டு விட்டு ஊருக்குக் கிளம்ப வேண்டும். 

பத்தாம் நாளும் முடிய அன்றைக்குச் சாயங்காலமே மொத்த நாளுக்குமான பணத்தை வாங்க வந்தனர், பூசை நடத்திய ஆட்கள். 

“பத்து நாளும் சிறப்பாப் போச்சும்மா. உங்க அத்தைக்கு உங்கள விட்டுப் போகவே மனசில்ல. தெரியுமா?”

“அது எப்படி சாமி உங்களுக்குத் தெரியும்?” அரசி கேட்டாள். 

“அதானே... போறதுக்கு முன்னாடி உங்க காதோட சொல்லிட்டுப் போனாங்களாக்கும்!” விஜயா நக்கல் அடித்தாள்.

எல்லோருமே அப்படித்தானே. தனக்கு வேலை ஆகிற வரை இந்தப் பிள்ளையும் பால் குடிக்குமான்னு பச்சைப் பிள்ளை மாதிரி... அப்படியா... இது இப்படித்தான் செய்யணுமா? இது போதுமா? வேறென்ன வேணும்? நீங்க சொன்னா அதுதான் சரி. மறு பேச்சே கிடையாதுன்னு பேசறவங்க வந்த வேலை ஆனதும் அட..உனக்கு அவ்வளவுதான் தெரியுமா? நானெல்லாம் எங்க ஊருலன்னு தன் பெருமையை நீட்டி முழக்க ஆரம்பித்து எதிராளியை நக்கலாக தூக்கி எறிவதில் போய் முடியும். அந்த ரகம்தான் விஜயா.

அரசி வேற ரகம். எதிரே இருப்பவரின் குலம் கோத்திரம், அவர் குடும்பத்தில் நேற்று செஞ்ச சாப்பாடு முதற்கொண்டு ஆராய்ந்து பீராய்ந்து விஷயத்தை வாங்குவாள். தன் விஷயத்தை வெளியே ஏன் ஓர் ஈ, எறும்புக்குக்கூட கசிய விடமாட்டாள். 

அப்படிப்பட்ட விடாக்கண்டிகளிடம் ஒரு கொடாக்கண்டன் விளையாட ஆரம்பித்தான். பூசை போட வந்திருந்தவன்தான் அவன்.

‘போறதுக்கு முன்னாடி உங்க காதோட சொல்லிட்டுப் போனாங்களாக்கும்’ என்ற விஜயாவின் நக்கலைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளாது தன் போனைக் காண்பித்தான். 

“பாருங்கம்மா.. உங்க வீட்டுக்காரங்களையும் கூப்புடுங்க. பார்க்கட்டும்.”

“என்னது? என்னது... போன்ல என்ன? போட்டோவா?” அரசி ஆர்வமாக முன்வந்தாள். மற்றவர் குடும்பத்தைப் பற்றி அறிந்து கொள்ளத் துடிப்பவளாயிற்றே. 

விஜயாவும் எங்கே அரசி முதலில் பார்த்து விடப் போகிறாளோ என்று அவளை முந்திக்கொண்டு தலையை நீட்டினாள். அரசியின் முழங்கையில் ஓர் இடிப்பு இடித்து சின்ன தள்ளு வேறு அதில்.

போனைக் காண்பித்தவன் புரிந்து கொண்டான். இரண்டு கத்திகளும் ஓர் உறையில் இருக்க முடியாத கத்திகள் என்பதை.

எங்கு ஒரு குடும்பத்தின் ஒற்றுமை இல்லாமை வெளியே கடை பரப்பப்படுகிறதோ அங்கு ஆரம்பிக்கின்றது, வில்லங்கமும் மூன்றாம் மனிதரின் தலையீடும். 

நான் பெரிதா நீ பெரிதா என்கிற சண்டையில் அவர்களும் மூன்றாவதாக ஒருவர் தம்மைப் பெரியவராக முன்னிறுத்திக் கொள்வதை அறிந்து கொள்வதே இல்லை.

எப்படியாயினும் வீட்டு விஷயங்களைக் காட்சிப் பொருளாக்க வேண்டும். ‘அவளா? அவள் சொல்லி இருப்பா. இன்னிக்குக் கதைதானே நீங்க பார்த்தது. நேத்து என்னாச்சு தெரியுமா’ன்னு இன்னும் கதை விரிக்கத் தோன்றும். 

கேட்பவரின் காதைக் குளிர்ச்சியூட்ட இன்னும் நடக்காத சில விஷயங்களையும் கூட்டி நடந்தது போல் சொல்லத் தோன்றும். சொல்பவருக்கு அத்தோடு வேலை முடிந்தது. 

கேட்பவர் என்ன செய்வார்? அத்தோடு இன்னும் பத்தைச் சேர்த்து, ‘அப்படியாம்ல, இப்படியாம்ல’ என்பர் மற்றவரிடம். அந்த மற்றவர் இன்னொருவரிடம் இன்னும் கொஞ்சம் சேர்த்து. இப்படி இவர்கள் வீட்டு விஷயம் பல காலதேச மாறுதல்களுடன் பயணம் மேற்கொண்டிருக்க, சொன்னவர்களோ அவல் உப்புமா சாப்பிட்டுத் தூங்கி இருப்பார்கள். சொன்னதுகூட ஜீரணித்து இருக்கும்.

அந்த மாதிரி இங்கு அரசியும், விஜயாவும் எங்கப்பன் குதிருக்குள் இல்லைஎன தங்கள் ஒற்றுமை இல்லாமையை எதிரில் இருப்போருக்குப் பறை சாற்றிக் கொண்டிருந்தார்கள்.

“ம்…சரிதான்.. இங்க பாருங்கம்மா! இந்த போட்டோவைப் பாருங்க. இன்னிக்கு காலைல படையல் போடும் போது எடுத்தது.”

விஜயா, அரசியுடன் சேர்ந்து அவர்கள் கணவர்களும் உற்றுப் பார்த்தனர்.

“இருங்க. பெரிசு பண்ணிக் காட்டறேன்!” பெரிதாக்கினான் படத்தை.

“எங்க கிட்டயும் இவ்ளோ பெரிய போனு இருக்கு தம்பி.” காரியம் முடிந்ததும் சாமி, ஆசாமி ஆகி சாமி என்று கூப்பிட்ட அரசி தம்பி என்று கூப்பிட்டாள்.

“எல்லார்கிட்டயும் இருக்குங்க. இங்க பாருங்க. இதப் புடிச்சிருக்க மாட்டீங்க."

அதில் அரசி நின்றிருந்தாள். அவள் தலைக்குக் குளித்து முடிச்சிட்டு புடவைத் தலைப்பை ஒத்தையாய் இழுத்துச் செருகி இருந்தாள். கண்கள் முன்னாடி உள்ள அத்தையின் போட்டோவை வெறித்தபடி இருந்தது.

“என்ன தம்பி! என் போட்டோவை எனக்கே காண்பிக்கிறீங்க? இன்னிக்குக் காலையில படையல் போடும் போது எடுத்த போட்டோ இது... அம்புட்டுத்தானே.”

“அதில்லம்மா விஷயம். இங்க பாருங்க.. உங்க புடவைத் தலைப்பைப் பாருங்க... அதில் தெரியற முகத்தைப் பாருங்க.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

உற்றுப் பார்த்தாள் அரசி. கூடவே விஜயா.

“அட... எங்க அத்த! என் புடவையில இவங்க முகம் அப்படியே அச்சு அசலா நேருல பார்க்கற மாதிரி. ஐயோ அத்த... எம் மேல இவ்வளவு ஆசையா? நான் போட்ட படையல்ல சந்தோஷப்பட்டு என்னை ஆசீர்வதிக்க வந்தீகளா? பார்த்தியா விஜயா, அத்த என்ன மட்டும் ஆசீர்வதிச்சதை?

இப்பத் தெரியுதா, குடும்பத்துல எல்லா நல்லது கெட்டதுக்கும் நீதான்மா பெரியவளா இருந்து பார்த்துக்கணும்ன்னு சொல்றதுக்காகவே என்னோட கலந்துருக்காங்க எங்க அத்த. இனி நீ பெருசா, நான் பெருசான்னு சண்டையே வேணாம். அத்தையே சொல்லிட்டாங்க. அடியே அரசி, இனி நீதான்டி அரசின்னு! 

இந்தா விஜயா, கொஞ்சம் அங்கன போய் உட்காரு. இனி நான் சொல்றதக் கேட்டு நீ இருந்தாப் போதும். ஹையோ... அத்த... இந்தப் புடவையில... அட இந்தத் தலைப்புலயா நீ வந்து உட்கார்ந்தே. உன்னைய கண்ணுக்குள் வைச்சுப் பார்த்துக்கிட்டேனே... நீதான் எல்லாமும்ன்னு வாழ்ந்தேனே... எனக்கே உன் பதவியக் கொடுத்துட்டியா தெய்வமே!”

அரசி சந்தோஷத்தில் உளறியதில் அத்தனையையும் பணமாய் மாற்றிக் கொண்டான், அந்த போட்டோ தம்பி. 

போன உசுரைப் போட்டோவில் பிடித்த அந்தத் தம்பிக்கு பெரிய நோட்டாகவே கொடுத்து வழியனுப்பி வைத்தாள் அரசி.

ஊருக்கு வந்தும் விஜயாவின் முகத்தில் பழைய சந்தோஷம் இல்லை.

‘நானும்தானே எங்க அயித்தைக்கு அவ்வளவு செஞ்சேன். ஏன் என்மேல மட்டும் அவங்க ஏறலை... அரசி பேரரசி ஆயிட்டா. நான் இன்னும் அவளுக்கு அடிமையாக் கிடக்கேனே.’ சோர்ந்து கிடந்தாள்.

செட்டுவீடு பாண்டியம்மா தன் வீட்டுக்கு வெளிநாட்டில் இருந்து சொந்தக்காரர்கள் வந்திருப்பதைப் பீற்றிக் கொள்ள அவர்களையும் கூட்டிக் கொண்டு இவர்கள் வீட்டுக்கு வந்தாள்.

“ஏ அரசி... ஏ புள்ள விஜயா... இதான் நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளிக. மலேயாவுல இருக்காங்க. கொஞ்ச நாளு நம்ம கிராமத்துல தங்கி, நம்ம பழக்க வழக்கங்களை எல்லாம் தெரிஞ்சுட்டுப் போகலாமுன்னு வந்து இருக்காக.”

“ம்ஹ்ஹும்... பழக்க வழக்கமா? இல்லாத வழக்கமாய் போன உசுருகூட புடவையில வந்து உட்கார்ந்துக்குது எங்க வீட்டுல. அரசிகிட்ட கேளுங்க. அத்தனை ஆசீர்வாதமும் அவளுக்குத்தானே கிடைச்சுது” விஜயா அங்கலாய்த்தாள்.

“அதென்ன புதுக்கதை?” வந்தவன் ஆர்வமானான்.

“இவங்க அத்தை ஒருத்தங்கப்பா... அந்தா தொங்கறாங்க பாரு, சொவத்தில! அது போய்ச் சேர்ந்து காரியம் பண்ணும்போது பொசுக்குன்னு புடவைத் தலைப்பு வழியா இந்தா நிக்குதே, இந்த அரசி மேலே இறங்கிட்டாங்க. அத ஒரு தம்பி போட்டோ புடிச்சுக் காட்டி இருக்கு. ஆதாரம் இருக்குப்பா!” பாண்டியம்மா நீட்டி முழக்கினார்.

“எங்க காட்டுங்க போட்டோவை?”

அரசி ஓடிப் போய் தன் போனில் சேமித்து வைத்த அந்த போட்டோவை கர்வத்துடன் காட்டினாள்.

வந்தவன் பெருங்குரலெடுத்துச் சிரித்தான். 

“கொஞ்சம் இருங்க” என்றவன் அங்கு இருப்போரை போட்டோ எடுத்துக் கொண்டான். சுவரில் மாட்டி இருந்த அத்தையின் போட்டோவையும் போட்டோ எடுத்தான்.

 சில நிமிடங்களில் காண்பித்தான். 

“இந்தா பாருங்க... உங்க எல்லோரது புடவைத் தலைப்பிலும் அந்த போட்டோ அத்தை உட்கார்ந்திருக்காங்க. இது ஒட்டிக்கோ கட்டிக்கோ சமாச்சாரம். இதப் போய் ஓடிப்போன உசுரு உள்ள வந்து ஒட்டிக்கிச்சுன்னு கதை விட்டுருக்கான் எவனோ. அதையும் நம்பி எல்லோர்கிட்டயும் ஒப்பிக்கிறீங்க. ம்ம்! எவ்வளவு ஏமாந்தீங்க அவன் கிட்ட?”

“எழுபதாயிரம்!”

“என்ன? ஏமாற ஆள் இருக்கும்போது ஏமாற்றுபவனுக்கு என்ன கவலை? போனைப் பெரிசா வாங்கினாப் போதாது. என்னென்ன விஷயம் நாட்டுல நடக்குதுன்னும் தெரிஞ்சுக்கணும்.”

“என்ன பாண்டியம்மா ஆத்தா! உங்களுக்கும் இவங்க அயித்தையின் ஆசீர்வாதம் நேரே இறங்கிருச்சு போல... ஹா ஹா! ஏற்கனவே இவங்க இரண்டு கத்தின்னு கூட்டிட்டு வந்தீங்க. நீங்க மூணாவது கத்தியா? ஆசீர்வாதம் அதிபூரணம்!”

சத்தம் போட்டுச் சிரிக்க…

பாண்டியம்மாள் அவசரமாய்த் தன் புடவையை உதறிக் கட்டிக் கொண்டாள். அரசியும், விஜயாவும் பயப்பார்வை பார்த்தார்கள்.

“ம்ஹும்! இது பற்றாத சுளுந்து!” என்றான் வந்தவன்.