அத்தியாயம் 1

16,407 படித்தவர்கள்
13 கருத்துகள்

பலகணி ஊடே பெளர்ணமி நிலவு

‘தமிழ் பிறந்த பொதிகை மலையிலே ஓங்கி வளர்ந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்படாத காலம் அது.

கிண்கிணி ஆர்க்க எழில் நடை பயிலும் இளங்குமரி போல் சொகுசாக நெளியும் களங்கமில்லாப் பொருனை நதி தளர்ச்சி என்பதைக் கண்டறியாத காலம் அது.

தவழும் தென்றலுடன் மிதந்த தமிழிலே பாண்டியனின் புகழும் பெருமையும், வளமும் வலிமையும் முழங்கிக் கொண்டிருந்த காலம் அது.

புரண்டு குதித்துத் துள்ளி முன்னேறும் தாமிரவருணி அலை பொங்கிப் பாயும் கடலோடு கலக்கும் இடத்தருகே கொலுவிருந்த கொற்கை நகர் அழியாத காலம் அது.

புன்னை மொக்குகள் போலும் குண்டுமல்லி அரும்புகள் போலும் விளங்கிய முத்துக்கள் அந்நகரின் துறைமுகத்திலே குவியல் குவியலாக வாணிபமாகிக் கொண்டிருந்த காலம் அது.

கொற்கைப் பட்டினத்தின் கடலோரம் கலகலப்பும் தனி அழகும் நிறைந்ததாய் விளங்கியது. கடல் கடந்த நாடுகளிலிருந்து வந்த மரக்கலங்களும் வெளி நாடுகளுக்கு வாணிபப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வணிகப் பெருமக்களின் நாவாய்களும், ஒயிலாக மிதக்கும் அன்னங்கள் போல் கட்சி தந்தன துறைமுகத்திலே. முதலைகள் போல் மிதந்தன சில கலங்கள். அவற்றிலே பல நாட்டுக் கொடிகள் பட்டொளி வீசின.

மனித இனத்தின் பல ரகத்தினரும் அங்கு கூடி நடந்து பிரிந்துகொண்டிருந்தனர். நானாவித இசைக் கருவிகளின் ஒலிக்கூட்டம் போலும் அங்கு பல்வேறு மொழிகளும் மோதிக் குழம்பிக்கொண்டிருந்தன. முத்து வாங்க வந்த பிற நாட்டு மனிதர்களும், பொழுதுபோக்க அலைந்த உள்நாட்டு உல்லாசிகளும் அந்த இடத்தின் கலகலப்பை மிகுதிப்படுத்தினர்.

அப்போது மாலை நேரம். பாண்டி நாட்டு முத்துக்களுக்கு ஈடாக தனது பொற்செல்வத்தைக் கொடுக்க மனமில்லாத கஞ்சன் மாதிரி, செஞ்ஞாயிறு தன் கதிர்களை அள்ளி அவசரம் அவசரமாக மேல் திசைப் பெட்டியில் பதுக்கும் வேளை. கதிரவனின் அம்முயற்சியில் சிந்திய ஒளிர் கற்றைகள் கொற்கையின் உயர்ந்த கட்டிடங்களையும், துறைமுகக் கொடிமரத்தின் உச்சியில் மின்னிய மீனக்கொடியையும், கடலோரத்தையும் பொன் மயமாக மாற்றின.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

துறைமுகத்தருகே சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பாதைகளில் நின்றவர்கள் விலகி ஒதுங்கினர். அவர்கள் கண்கள் அவ்வழி வந்த இரு குதிரை வீரர்கள் மீது மோதின; நிலைபெற்று நின்றன.

கைதேர்ந்த சிற்பி செய்த சிலைகள் உயிர் பெற்று நடப்பன போல் வந்தன குதிரைகள். மினுமினுக்கும் கரியமேனி, எடுப்பான உடல் அமைப்பு, கம்பீரப் பார்வை எறியும் அழகான கண்கள், நெற்றியில் அழகு தரும் திலகம் போல் வெள்ளை நிறம் இயற்கையாகவே அமைந்து கிடந்தது. மண்ணை மிதித்து உதைத்து உந்தி எழுந்து விசையாய்ப் பாய்ந்து அவை முன்னேறும் நடையின் மிடுக்கும் நயமும், அப்பாய்ச்சல் எழுப்பிய ஒலியும் அச்சத்துக்கும் அதிசயத்துக்கும் வித்திட்டன. அவற்றின் மீது இருந்த இருவரும் ஆண்மையின் லட்சியங்கள்; வீரத்திரு உருவங்கள்.

அவர்கள் அவ்வூருக்குப் புதியவர்கள் என்றே தோன்றியது. குதிரைகளை விரட்டி ஓட்டாது அமைதி நடையிலேயே செலுத்திச் சென்ற அவர்களது விழிகள் நகர் நயம் காணும் பொருட்டு ஓய்வின்றிச் சுழன்றன. துறைமுகத்தருகே நின்று கடலையும் கலங்களையும் நகர்ப்புறக் காட்சிகளையும் பருந்துப் பார்வையால் விழுங்கிய வீரர்கள், சாயும் சூரியனின் மஞ்சள் வெயிலில் அற்புதமான சிலைகள் போலவே காட்சி அளித்தனர். ஒரு கணம்தான். பிறகு அவர்கள் குதிரைகளைத் திருப்பி சற்று வேகமான நடையில் நகரினுள் புகுந்தனர்.

அவர்களைப்பற்றி, தங்களுக்குத் தோன்றியதைப் பேசி நின்றவர்கள் பின்னர் தத்தம் அலுவலில் ஈடுபட்டார்கள்.

அரச வீதி வழியாகச் சென்றன குதிரைகள். குதிரை வீரர்களை வேடிக்கைப் பார்த்து வாயில் விரல் வைத்து நின்றனர் சிறுவர் சிறுமியர். ‘யார் இவர்?’ என்று கவனிப்பவர் போல் கண்ணெறிந்தனர் பெரியோர். எதிர்ப்பட்ட பெண்கள் இயல்பாய்ப் பார்த்து பின் அவர் தம் அழகை விழுங்க மீண்டும் கண்களை ஏவினர். வீட்டு வாசல்படி மீது நின்று கவனித்துவிட்டு நாணுற்றவர் போல் உள்ளே ஓடிப்போய், ஜன்னலின் பின் மறைந்தும் மறையாமலும் நின்று பார்வை எறிந்தனர் மங்கையர் சிலர். மாடி அறைச் சாளரங்களின் பின்னே, திரைச்சீலை மறைப்பில் பதுங்கி நின்று கண்டு களித்தனர் காரிகையர் சிலர்.

தங்கள் தோற்றம், பார்வை பலவற்றைக் கவர்ந்திழுக்கும் காந்தமாய் மிளிர்வதை உணர்ந்த பெருமை முகத்திலே ஒளி செய்ய, குதிரைகள் மீது எடுப்பாக அமர்ந்து பவனி சென்றனர் வீரர்கள் இருவரும்.

அவர்களில் ஒருவன் சிறு நகை சிந்தி மென் குரலில் சொன்னான், ''கவனித்தாயா திருமலை?'' என்று.

‘உம் உம்’ என ஊமை ஒலியை இழையவிட்ட திருமலைக் கொழுந்துவின் கவனம் எங்கோ பதிந்திருந்ததால், அவன் குதிரையின் நடை தளர்ந்தது. சிறிது முன் சென்றுவிட்ட மற்றவன் திரும்பிப் பார்த்தான். நண்பனின் கண்ணோட்டத்தைக் கவனித்து, அவன் பார்வையின் குறியாக விளங்கிய பொருளையும் நோக்கினான். அவன் இதழ்களில் குறும்புப் புன்னகை நெளிந்து மறைந்தது. வெட்டி மடியும் மீன் வீச்சு போல.

ஓங்கி உயர்ந்து நின்ற மாளிகை மாடி ஒன்றின் பலகணி ஊடே தெரிந்தது ஒரு முகம். அது சுடர் தெறிக்கும் விழிகளால் திருமலையைக் கவனித்தது. திடுமெனப் பின்வாங்கியது.

பெருமூச்செறிந்த திருமலைக்கொழுந்து குதிரையை முடுக்கினான். தோழன் அருகே சேர்ந்ததும் ``என்னப்பா மருது! திடீர் யோசனையில் தவறி விழுந்துவிட்டாய்?’’ என்றான்.

மருது பாண்டியன் குறுநகை சிதறி, ``எனக்குக் கிரக்கம் தரும்படியாக எதுவும் நிகழவில்லை. நான் மயங்கி விழவுமில்லை’’ என்றான்.

''நிலவைக் கண்டாயா நண்பா?’’ என்று கேட்டான் திருமலை.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

மருது சிரித்தவாறே சொன்னான். ``பஞ்சாங்கத்தின்படி இன்று அமாவாசை அல்லவா! நிலவை நான் எங்கு தேட?’’

``பலகணியின் பின்னே தெரிந்ததே பெளர்ணமி நிலவு, அதைச் சொல்கிறேன்.’’

``ஓ, அதுவா?’’ என்ற மருது பாண்டியன் விஷமப் பார்வை சிந்தி, விளையாட்டாகப் பேச்சு உதிர்த்தான். ``செறிந்து கிடந்த கருமேகக் கூட்டத்தைக் காணும் பேறு தான் நான் பெற்றேன்!’’

``குத்துகின்ற வைரக்கதிர்களை எறிந்த ஒளி மீன்களை நீ காணவில்லை?’’ என்று வினவினான் தோழன்.

``ஊகுங். உருகிப் பாய்ந்த ஒளிக்கோடுகளை ஏற்று நின்ற பசி கண்களைத்தான் பார்த்தேன். அவை திருமலையின் உடைமை என்றும் உணர்ந்தேன்’’ என்று மருது அருவிச் சிரிப்பை அள்ளித் தெளித்தான்.

திருமலைக்கொழுந்து நகைத்தான். ``வேடிக்கை போதும் மருது. அவள் யாராக இருக்கும்?’’ என்று கேட்டான்.

``உன்னைப்போல நானும் இந்த ஊருக்குப் புதியவன்தான் பாண்டியா!'’ என்று குறும்பாகச் சொன்ன மருது, குதிரையைத் தட்டிவிட்டான். தூள் எழுப்பிப் புழுதியைப் பறக்கவிட்டுப் பாய்ந்து முன்னேறியது புரவி.

திரும்பி நோக்கி வெறும் சாளரத்தைக் கண்டு ஏமாந்து தன் குதிரையையும் விரட்டி நண்பனைத் தொடர்ந்தான் திருமலைக்கொழுந்து.

(தொடரும்)