அத்தியாயம் 1

317.36k படித்தவர்கள்
55 கருத்துகள்

ம்மாவைக் காணவில்லை என்பதை ஒரு தகவலாகச் சொன்னார் அப்பா. ‘காணவில்லை’ சுவரொட்டி ஒட்டவில்லை. காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. எங்கும் தேடிச் செல்லவில்லை. உறவினர்கள், நண்பர்கள், சுற்றுவட்ட வீட்டுக்காரர்கள் யாருக்கும் தெரியாது. பிள்ளைகளுக்கும் சொல்லவில்லை. அம்மாவின் கை பட்டுப் பட்டுத் தினம் விதவித ஒலியெழுப்பிப் பேசும் வீட்டுப் பொருட்களில் அசைவில்லை. அவற்றை எல்லாம் துளி சத்தமும் வராமல் அப்பாவே கையாள்கிறார். அம்மாவின் நடமாட்டம் இல்லாத வீட்டுக்கு அவர் பழகிவிட்டார்.

தகவலைக் கேட்ட பிறகே அம்மாவின் குரல் செல்பேசியில் ஒலித்து ஆறு மாதத்திற்கும் மேலாகிவிட்டது என்பது முருகாசுக்கு உறைத்தது. தினந்தோறும் இரவு பேசியில் அழைத்து இரண்டு வார்த்தைகள் நலம் விசாரித்த பிறகே தூங்கச் செல்லும் அப்பா, அதை எப்போது கைவிட்டார் என்பதே அவனுக்கு நினைவில்லை. அவர் பேசி முடிக்கும் தருணத்தில் ‘அம்மா’ என்பான். ‘இரு’ என்று சொல்லிக் கொண்டுபோய் அம்மாவிடம் கொடுப்பார். அவன் உணவைப் பற்றி அம்மாவின் விசாரிப்பு இருக்கும். தான் அன்று செய்த சமையலைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்வார்.

‘இது உனக்குப் புடிக்கும். உன்னய நெனச்சிக்கிடே செஞ்சன். ஆனா இங்க இல்லயே நீ’ என்று ஆதங்கப்படுவார். அவனுக்குப் பிடித்த ஒன்றாவது தினமும் சமையலில் இருக்கும். அதைக் கேட்கும்போது மனதைவிட நாக்கு ஏங்கும். ‘போதும் போதும். சொல்லாத’ என்பான். ‘அத்தன ஆச இருக்கறவன் அடிக்கடி வீட்டுப் பக்கம் எட்டிப் பாக்கணும்.’ அம்மாவிடம் சிறுகோபம் வெளிப்படும். ‘வேலம்மா... வர்றம்மா’ எனச் சுருக்கமாகச் சொல்வான். சமையல் பேச்சு முடிந்ததும் திருமணப் பேச்சு தொடங்கும்.

‘சீக்கிரம் கலியாணம் பண்ணிக்கடா’ என்பதைக் கெஞ்சலாய்ச் சொல்வார். வீட்டுத் தோட்டத்துச் செடிகள் பற்றி அவர் விவரிக்க ஆரம்பித்தால் ‘போச்சு, எப்போது முடிப்பாரோ’ என்றிருக்கும். பொறுமை இல்லாமல் சில நிமிடங்கள் கேட்பான். அப்புறம், ‘செரி, வேல இருக்குது, வைம்மா’ என்று சொல்லிவிடுவான். ‘ராத்திரியில அப்படி என்ன வேல? ஒழுங்கா ஒடம்பப் பாத்துக்க’ என்று திட்டுவது போலச் சொல்லி வைத்துவிடுவார்.

தினசரி அப்பாவும் அம்மாவும் பேசுவதைத் தொந்தரவாகவே நினைத்திருக்கிறான். தேவை இருக்கும்போது பேசினால் போதாதா? எங்கோ இருந்துகொண்டு ஒரே ஒரு அழைப்பில் தன்னைக் கட்டுப்படுத்த அவர்கள் முயல்கிறார்கள் என்றுதான் தோன்றியிருக்கிறது. அவர்கள் கேட்கும் கேள்விகளில் ‘எல்லாவற்றையும் முறையாகச் செய்கிறாயா?’ என்பதே அடிப்படையாக இருக்கும். ஒரு நிமிடம், இரு நிமிடம் என்றாலும் கயிற்றைச் சுழற்றி அவன் கழுத்தில் வீசிவிட்டு, அதன் நுனியைப் பற்றிக்கொண்டிருக்கும் விரல்களின் நினைவூட்டல் அது. அவர்கள் பேசி முடித்ததும் அவன் வெகுநேரம் எரிச்சலோடு இருப்பான். எதற்கு இந்தத் தேவையில்லாத விசாரிப்பு? ஒரு விஷயமும் இல்லாமல் தன் இருப்பை உணர்த்தும் பேச்சு. ஒரு புதுமையும் இல்லாமல் ஒரே பேச்சையே தினசரி எப்படிக் கேட்பது?

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அழைப்பை அப்பா நிறுத்திய பிறகு அவனாகத் தன் தேவைகளை ஒட்டி எப்போதாவது பேசுவது மட்டும்தான். ஒவ்வொரு குடிமகனுக்கும் அசுர ராசாங்கம் வழங்கியிருக்கும் ‘ஆயுள் அட்டை’யைத் தொலைத்துவிட்டு, அதன் எண்ணைக் கேட்பதற்காக ஒருமுறை பேசினான். எல்லோருடைய ஆயுள் அட்டைகளின் நகல்களையும் அப்பா வைத்திருப்பார். பகல் நேரத்தில் பேசி நகலை வாங்கிக்கொண்டான். அப்போது ஒரு வார்த்தை ‘அம்மா?’ என்றான். ‘இருக்கறா’ என்றார் அப்பா. ‘சரி, அப்பறம் ராத்திரிக்கிப் பேசறன்’ என்று வைத்துவிட்டான். பல இரவுகள் கடந்தும் பேசத் தோன்றவில்லை. அப்படித் தேவையை ஒட்டிப் பேசிய சந்தர்ப்பங்கள் மாதத்திற்கு ஒருமுறை என்றிருக்கலாம். நிமிடத்தை நெருங்கும் முன்பே முறித்துக்கொண்ட சில நொடிகள் கொண்ட பேச்சு. அது அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

அப்பாவிடம் பேச நேரும்போதெல்லாம் மறவாமல் அம்மாவைக் கேட்டிருக்கிறான். வேலையாக இருக்கிறாள், அப்புறம் பேசச் சொல்கிறேன், நடைப்பயிற்சியில் இருக்கிறேன், கடைக்கு வந்திருக்கிறேன் என்றெல்லாம் அவர் சொன்னவற்றில் பல சமாளிப்புக்காக என்பது இப்போதுதான் புரிகிறது. வெளிநாடுகளில் இருக்கும் அக்காவிடமும் அண்ணனிடமும் இப்படித்தான் பேச்சை நிறுத்தியிருப்பார். அவர்கள் வாழ்க்கை முறையிலும் அப்பா, அம்மாவின் பேச்சை வெறும் இடையூறாகவே கருதியிருப்பார்கள். தனக்குச் சொன்ன சொற்களையே சொல்லி அம்மாவை மறைத்திருப்பார். அம்மாவைக் காணவில்லை என்பது பிள்ளைகள் யாருக்கும் தெரியவில்லை. அதுவும் ஆறு மாதங்கள்.

புலனத்தில் ‘குடும்பக் குழு’ ஒன்றை அப்பாதான் உருவாக்கினார். அதில் அம்மா இல்லை. அம்மாவுக்கென்று தனியாகச் செல்பேசி இல்லை. குழுவில் ‘இந்த நாள் அனைவருக்கும் இனிதாக அமையட்டும்’, ‘நாங்கள் நலம். நீங்கள் அனைவரும் நலமாக இருக்கப் பிரார்த்திக்கிறோம்’ என்பது மாதிரியான சில வாசகங்களைப் போடுவார். கடவுள் படங்களை அனுப்புவார். பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்வார். பதிலாக, சில எமோஜிகளைத் தட்டி விடுவார்கள் பிள்ளைகள். எல்லோரும் அங்கங்கே அவரவர் வேலையில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டால் போதாதா? எமோஜிகூடப் போடச் சோம்பலாகிவிடும் நாட்களில் அவனுக்குக் குற்றவுணர்வு வரும். வரும் நேரம் இரவாக இருந்தால் ‘நல்லிரவு’ என்று போட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கச் செல்வான். முதல் நாள் எதுவும் போட மறந்துவிட்டோம் என்று நினைவு வந்தால் அடுத்த நாள் காலையில் ‘அனைவருக்கும் என் அன்பு’ என்று போடுவான். இருப்பைத் தெரிவித்துக் குடும்பக் கடமையை நிறைவேற்றிவிட்ட திருப்தி வந்தால் போதும்.

நேற்றிரவு அவன் வீட்டுக்கு வந்தான். ஓராண்டுக்கு முன் அசுரலோகம் முழுவதும் புதிய தொற்றுநோய் பரவிய காலத்தில்கூட அவன் இங்கே வரவில்லை. தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக ஆரம்பித்த நிலையில், இவ்வாண்டும் அசுரலோகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மாறி மாறிப் பொதுமுடக்க அறிவிப்பு. பெற்றோர் இருந்த ஊர் வீராசுரம். அங்கிருந்து இரு மாகாணங்கள் கடந்து கிட்டத்தட்ட எழுநூறு கல் தொலைவில் பூவாசுரத்தில் அவனுக்கு வேலை. பூவாசுரத்திற்குப் போய் மூன்றாண்டுகள் காற்று நகர்வதைப் போலக் கழிந்துவிட்டன. அந்நகரில் வாழவே தான் பிறந்ததான ஈர்ப்பு.

பெற்றோர் இருக்கும் வீராசுரமும் பெரிய நகரம்தான். ஒரு மாகாணத்தின் தலைநகரமும்கூட. அவன் பிறந்து வளர்ந்தது, படித்தது, விளையாடியது எனப் பால்யமும் பதின் பருவமும் கழிந்த நகரம். மாநகரம் என்பதால் இங்கேயே உயர்கல்வி வாய்ப்புகளும் நிறைந்திருந்தன. எதற்காகவும் வேற்றிடம் செல்ல வேண்டியிருக்கவில்லை. இருபத்திரண்டு வயதுவரை அங்கேதான். சொந்த ஊர் என்றால் அதுதான். தகவல் தொழில்நுட்பத் துறை வேலையும் அங்கே அமைந்தது. அம்மாவின் கவனிப்பிலிருந்து விடுபடும் விருப்பம் தோன்றியிருந்த பருவம். நண்பர்களோடு சுதந்திரமாக இருக்க விரும்பிற்று மனம். தன் வயதொத்த பெண்களிடம் சகஜமாகப் பேசிக் களிக்கும் உந்துதல் இருந்தது. அதற்கெல்லாம் அம்மாவும் வீடும் ஒத்து வராது. வேலையின் பொருட்டாவது வெளியில் போகலாம் என்று பூவாசுரத்திற்குச் சென்றான். அங்கே கிடைத்த வேலையில் சில ஆயிரங்கள் ஊதியம் மிகுதி. இடம் பெயர்வதற்கு அது உதவியாக இருந்தது.

முருகாசுக்குப் பன்னிரண்டு வயது மூத்தவன் அண்ணன். முருகாசு பள்ளிக்கூடத்தில் காலடி வைத்தபோது அண்ணன் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே வந்திருந்தான். வீராசுரம் பரவி விரிந்த நகரம். அதன் இன்னொரு விளிம்பில் இருந்த பிரபலக் கல்லூரியில் அண்ணனுக்குப் பொறியியல் படிப்பிற்கு இடம் கிடைத்தது. தினம் பயண அலைச்சல் இல்லாமல் படிக்கட்டும் என்று விடுதியில் சேர்த்துவிட்டார் அப்பா. படிப்பு முடியும்போதே கையில் அயல்தேச வேலை. ஓராண்டுக்கு மட்டும் இங்கே பயிற்சி. அயல்தேசத்திற்கு அண்ணன் போகும்போது மனைவியோடு அனுப்ப வேண்டும் என்று தீவிரமாக முயன்று பெண் தேடினார் அப்பா.

அசுர இனத்தில் நடுவாந்திரமாகக் கருதப்படும் வர்ணம் ஒன்றைச் சேர்ந்தவர்கள் அவர்கள். குலத்தொழில் விவசாயம். குலதெய்வம் அழகாசுரேசுவரன். முதல் குழந்தைக்குக் குலதெய்வப் பெயரைச் சூட்ட வேண்டும் என்னும் வழக்கப்படி ‘அழகாசு’ என்று பெயர் வைத்திருந்தார்கள். தங்கள் குலத்தில் படிப்பும் வசதியுமான பின்னணி கொண்ட பெண் வேண்டும் என்று அப்பா தேடினார். குலத்திற்கு என்று செயல்பட்ட திருமண நிலையங்களில் பதிவுசெய்து தினந்தோறும் பார்த்தார். திருமண முகவர்களிடம் குறிப்பைக் கொடுத்துத் தேடினார். சில பெண்களின் குறிப்புகள் பொருந்தி வந்தது. பேசலாம் என்று அப்பா முயன்றபோது அண்ணன் வேறொரு தகவலைச் சொன்னான். பயிற்சியில் தன்னோடு இருந்த பெண் ஒருத்தியைத் திருமணம் செய்துகொள்ளும் முடிவு. அவளுக்கும் அயல்தேச வேலை உறுதியாகியிருந்தது. அவளை வீட்டுக்கே அழைத்து வந்து எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினான்.

அவள் வேறு வர்ணத்தைச் சேர்ந்தவள். உடுத்தும் முறையிலும் பேசும் மொழியிலும் வேறுபாடுகள் இருந்தன. அகரத்தில் தொடங்கும் சொற்களை அவள் உச்சரிக்கும்போது அவ்வொலித் துணுக்கு இருக்கிறதோ இல்லையோ என்று சந்தேகம் கொள்ளும்படி கேட்டது. ஓரெழுத்தொலியை எச்சில் விழுங்குவது போல உள்ளே இறக்கிவிடுவாள் அல்லது நாக்கிலேயே வைத்துக்கொள்வாள். என்ன செய்கிறாள் என்றே தெரியாது. அண்ணன் பெயர் அழகாசு. அதை ‘ழகாசு’ என்றாள்.  ‘அ’ கேட்காது; ஆனால் இருக்கும். நாக்கில் தேன் தடவிக்கொண்டு அவள் அழைக்கும்போது அண்ணன் முகம் இன்பத்தில் தவித்தது. ‘பேச்சப் பாரு, கேட்டா சிரிப்பா வருது. இந்தப் பேச்ச ஆயுசு முழுக்கக் கேக்க முடியுமாடா? நம்ம பேச்சு நாகரிகம் வேற யாருக்காச்சும் வருமா? ஒவ்வொரு சொல்லையும் முழுசாப் பேசறவங்க நாம. இதென்ன பாதி முழுங்கிட்டுப் பாதியத் துப்பற பேச்சு’ என்றார். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

‘நம்ம பேச்சு நாகரிகம் இல்லாத பேச்சுன்னு அவுங்க சொல்றாங்கப்பா. பக்கத்துல இருக்கறவங்ககிட்டப் பேசறப்பக்கூட காக்கா கத்தறாப்பல ஓய்ஓய்னு கத்திப் பேசறமாமா. மண்ணக் கெளறிக்கிட்டுக் கெடக்கற காட்டானுங்க ஒரு காட்டுல இருந்து இன்னொரு காட்டுல இருக்கறவனக் கூப்பிடற மாதிரின்னு சொல்றாங்கப்பா. எங்க ஆஸ்டல்ல எனக்குக் காட்டான்னுதான் பட்டப் பேரு. நம்ம பேச்சு நமக்கு நாகரிகம். அவுங்க பேச்சு அவுங்களுக்கு நாகரிகம்.’

அப்பாவை எதிர்த்துப் பேசும் தொனி இல்லாமல் தொலைக்காட்சிச் செய்தி வாசிக்கும் பாணியில் சாதாரணமாகச் சொன்னான். என்ன பதில் சொல்வது என்று அப்பாவுக்குப் பிடிபடவில்லை. இன்னொரு விஷயத்தை எடுத்தார். அவளுடைய உணவுப் பழக்கம் வேறாக இருக்கும், நம்முடைய உணவுப் பழக்கம் வேறு, எப்படிப் பொருந்தும் என்றார். ‘அவுங்கெல்லாம் காரத்தப் போட்டுக் கலக்கிக் கொழம்பு வெப்பாங்க. பச்ச மொளவாயக் கடிச்சுத் திங்கற கொலமடா அது’ என்று காட்டமாகப் பேசினார்.

அண்ணன் எதுவும் பேசாமல் இருந்தான். தங்கள் உணவுப் பழக்கம் எப்படிப்பட்டது என்று அதன் பெருமைகளை விரிவாக விளக்கி அப்பா பேசத் தொடங்குகையில் அண்ணன் இடைமறித்தான். ‘உங்களுக்குப் பிடிச்சதையே நானும் விரும்பிச் சாப்பிடறன்னு நெனைக்கிறீங்களாப்பா? நெறையா நாளு உங்களுக்குத் தனியாவும் எங்களுக்குத் தனியாவும் அம்மா சமைக்கிறாங்க. தெரியுமா உங்களுக்கு?’ என்று மட்டும் அண்ணன் கேட்டான். அப்போது அம்மாவின் முகத்தில் குறும்புப் புன்னகை அரும்பியது. ‘பிள்ளைகள் விருப்பம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்’ என்று அதை உணர்ந்து கொண்டாரோ என்னவோ.

அதற்குப் பிறகு அப்பா இன்னொன்றைக் கையில் எடுத்தார். ‘என்னருந்தாலும் அவுங்க நமக்குக் கீழடா. அவுங்க வீட்டுக்குப் போனாத் தண்ணிகூட வாங்கிக் குடிக்க மாட்டம்டா. இப்ப எப்படி சம்பந்தியாப் போயிக் கை நனைக்கறது?’ அண்ணன் அதற்கும் பதில் சொன்னான்.  ‘கல்யாணத்த ஒரு மண்டபத்துல வெச்சு நடத்தீரலாம்பா. நீங்க அவுங்க வீட்டுல போயிக் கை நனைக்க வேண்டியதில்ல. அவுங்களும் நம்ம வீட்டுல வந்து கை நனைக்க வேண்டியதில்ல. எல்லாரும் மண்டபத்துக் குழாய்ல கை நனைச்சுக்கலாம்பா.’ அவன் கேலி செய்கிறான் என்பது அப்பாவுக்குப் புரியவில்லை. ‘ச்சீச்சீ… நம்ம கொலத்துப் பொண்ணத் தொடறது புண்ணியம். வேற கொலத்துப் பொண்ணத் தொடறது பாவம்டா. இதெல்லாம் உனக்குப் புரியாது. நெனச்சாலே அருவருப்பா இருக்குது’ என்றார். மலத்தை மிதித்தவர் போல அவர் முகம் மாறியது.

- தொடரும்