அத்தியாயம் 1

42.09k படித்தவர்கள்
48 கருத்துகள்

காரணமே இல்லாம மனசுக்கு பிடித்ததை செய்றதுதான் இந்த உலகத்துல மிகப் பெரிய சுதந்திரம்னு நினைக்கிறேன். அப்படியும், நாம செய்ற விஷயங்களுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கா?! அதுல அழுத்தமான ஒரு வேல்யூ இருக்கணும். என்னோட கேரியர்ல நடந்த ஒவ்வொரு நிகழ்வும் முடியுறப்போ, இயல்பாகவே இன்னொரு கதவு திறந்திருக்கு. அதுக்கு நிறைய உதாரணங்கள் உண்டு. அந்தமாதிரி லைஃப்ல சந்தித்த விஷயங்களைத்தான் இந்தத் தொடர் வழியாக உங்ககிட்ட பகிர்ந்துக்கப் போறேன்..! வாங்க… பார்க்கலாம்!

ன்னோட பூர்வீகம் பட்டுக்கோட்டை பக்கத்துல உள்ள சித்துக்காடுங்கிற சிறிய கிராமம். அப்பாவுக்கு அதுதான் சொந்த ஊர். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி. ஒரு மிடில்டவுன் பையனாகத்தான் வளர்ந்தேன். முதல்ல தனியார் பள்ளி, அடுத்து அரசுப் பள்ளி, திரும்பவும் தனியார் பள்ளின்னு ஒரு கலவையான ஸ்கூல் லைஃப்போடத்தான் பள்ளி நாட்கள் நகர்ந்தன.

பையன் நல்லபடியாக படித்தால் மட்டும் போதாதுன்னு நினைத்த ஆள், அப்பா. அகடமிக்ஸ் என்கிற ஒரு விஷயத்துக்குள்ள மட்டுமே பிள்ளைங்க சிக்கிடக்கூடாதுன்னு நினைத்த ஆளும்கூட. அதுக்காக தன்னோட நேரத்தையோ, உழைப்பையோ கொடுக்கத் தயங்காதவர். சின்ன கிராமத்தில் இருந்து வந்தாலும் மாடர்னான மனிதர். அவரோட சின்ன வயதில் எதெல்லாம் கிடைக்கலையோ... அதுவெல்லாம் எனக்கும், என் அண்ணன் பிரபுவுக்கும் கிடைக்காம இருக்கக்கூடாதுன்னு தெளிவாக இருந்தார். 

அகடமிக்ஸ் கடந்து ஒவ்வொண்ணுலயும் தனித்து நிக்கணும்னு விரும்பினார். நல்லா படிக்கணும். அதே நேரத்துல விளையாட்டு, கலைத்துறைன்னு 360 டிகிரி கோணத்துல நம்மோட ஆர்வம் இருக்கணும்னு இருந்தார்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அது பாலக்குறிச்சி செயின்ட் ஜேம்ஸ் (Saint James) ஹை - ஸ்கூல்ல படித்த நேரம். ஸ்கூல்ல நான் பேஸ்கட் பால் விளையாட்டுல மிகப் பெரிய ஆர்வம் உள்ள மாணவனாக ஓடத் தொடங்கினேன். முக்கியமா, அங்கே இருந்த ஆசிரியர்கள் முத்தைய்யா, அரங்கசாமி, ரவீந்திரன், சுப்புலட்சுமி டீச்சர், சின்ராசு என எல்லோருமே ஸ்பெஷலிஸ்டாக இருந்தாங்க. ஒரு கட்டத்துல பால் பேட்மின்டன் விளையாட்டுல தீவிரமா இறங்கினேன். இப்போ எல்லாம் அதை யாரும் பெருசா விளையாடுறதில்லை. எங்கயாவது போகும்போது ஒரு சில கிரவுண்ட்ல ஆபீஸர்ஸ் சில பேர் மாலை நேரத்துல விளையாடுறதை பார்க்க முடியுது. அவங்களோட போய் இப்போ நின்னு விளையாடும்போது சுத்தமா அது வர்றதும் இல்லை. அந்தமாதிரி லைஃப் ஆகிடுச்சு. என்னோட அண்ணன் பிரபு புனல்வாசல்ல படிச்சார். அவர் ஹாக்கி ஃப்ளேயர். 

இப்போ பெரும்பாலான பள்ளிகள்ல இருக்கா... இல்லையான்னு தெரியல. அந்த நேரத்துல எல்லாம் திருவள்ளுவர் மன்றம், பாரதியார் மன்றம்னு ஸ்கூல்லயே இருந்தது. அது வழியாக பேச்சுப் போட்டி நடக்கும். காந்தி பிறந்தநாள்னா கட்டுரைப் போட்டி நடக்கும். இன்னொரு சூழல்ல ஓரங்க நாடகம் அரங்கேற்றுவோம். இப்படி பல பயிற்சிப் பட்டறைகள் எல்லாம் உண்டு. எல்லாமும் பேலன்ஸ் செய்து படித்தேன். இந்த மாதிரி எல்லாமும் சேர்ந்ததும்தான் என் லைஃப்பும் என்பதை அந்த நேரத்துலயே உணரவும் செய்தேன். படிப்பு, விளையாட்டோட சேர்ந்து பிள்ளைங்க இந்த சமூகத்தை எவ்ளோ படிக்கிறாங்கன்னும் அப்பா கவனித்து பார்த்தார். 

ஸ்கூல் லைஃப்லயே ஹாஸ்டல்ல தங்கிப் படித்தாலும் ஒரு கட்டத்துல வெளியில தங்கி படிக்கணும்னு ஆசை வந்துச்சு. அது வழியாக நெறைய புது மனுஷங்களோட அனுபவங்கள்  கிடைக்கும்னு நினைச்சேன். அப்பா அதுக்கும் ஓகே சொன்னார். பள்ளி லைஃப் முடிந்து திருச்சிக்கு பிபிஏ படிக்க வந்தப்போ அது சாத்தியமாச்சு. பிபிஏ-வுல சேர்றதுக்கு முன் மெடிக்கல் டிரை பண்ணினேன். அது நடக்கல. எனக்கு எம்பிஏ படிக்கணும்னு ஆசை இருந்ததால பிபிஏ சேர்ந்தேன். திருச்சிக்கு வந்ததும் என்னோட வளர்ச்சி வேறொரு கோணத்துல விரிஞ்சது. கல்லூரியில் நடந்த முக்கியமான போட்டிகள்ல கலந்துக்கிட்டேன். ‘உங்க செயல்களுக்கு நீங்களே பொறுப்பேத்துக்கோங்க!’ன்னு சொல்வோமே அந்தமாதிரிதான் ஓடினேன். நானாக என்னைப் பார்த்த காலமும் திருச்சி கல்லூரியில் படித்த காலகட்டம்தான். அங்கே கல்லூரியைக் கடந்து ஒரு நட்பு வட்டம் உருவாச்சு. 

நாம இயல்பாக வளரணும்னு நினைத்தால், உங்களது செயல்களுக்கு நீங்களே பொறுப்பேத்துக்க வேண்டும். ஆனால், இங்கே உள்ள பிரச்னை என்னன்னா இங்கே எதுவுமே என்னுடையதாக இல்லை. நாம செய்கிற எல்லா விஷயங்களும் யாரோ ஒருத்தருக்காக செய்யும்போது அது ஒரு வேலையாக ஆகிவிடுகிறது. ஒரு விளையாட்டைத் தேர்வு செய்து விளையாடும்போதுகூட அதில் எவ்வளவு பணம் கிடைக்கும்னுதான் பார்க்கிறோம். அதிலயும், கிரிக்கெட் விளையாட்டுன்னா ஐபிஎல் விளையாடலாம். அது வழியா ஒரு கம்பெனிக்கு விளையாடலாம். டிவி விளம்பரத்துல நடிக்கலாம்னு நினைக்கிறோம். நீச்சல் விளையாட்டு விளையாடலாமேன்னு சொன்னா அதுல பெரிசா பாப்புலர் ஆக முடியாதுன்னு நாமே முடிவு செய்துக்குறோம். இந்த உலகம் ஒரு கமர்ஷியல் மார்க்கெட்டாக மாறிவிட்டது. எப்பவுமே நாம செய்ற ஒரு விஷயம் வெறும் வேலையாக இருக்கக்கூடாது. அது நாம் விரும்பி செய்கிற ஒண்ணா இருக்கணும். ஆனா, பல நேரங்களில் விரும்பியோ, விரும்பாமலோ ஏதோ ஒரு வேலையை செய்ய வேண்டியதாகிவிடுகிறது. 
 
பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேல் நான் மீடியாவுக்குத்தான் வரணும்னு சொல்றாங்க. இன்னைக்கு மீடியாவுக்கு வரும் 10 பேர்களில் 5 நபர்கள் பொறியியல்துறை மாணவர்களாகத்தான் இருக்காங்க. ஏதோ ஒரு கட்டத்தில் பொருளாதாரம், குடும்பம், பிள்ளைகள்னு ஒவ்வொரு காரணத்துக்காக இந்தந்த வேலைன்னு ஒரு வேலையை செய்யத்தான் போகிறோம். குறைந்தபட்சம் அதுக்கு முன்பு வரைக்குமாவது வேலையாக எதையும் செய்யக்கூடாது. அதேபோலத்தான் படிப்பை நீங்க ஒரு வேலையாக நினைக்கக்கூடாது. நமக்கு இதைத் தரும், அதைத் தரும் என நினைக்கக்கூடாது. அது எனக்கு அறிவைத் தரும், புரிதலைத் தரும். இந்த சமூகம் பற்றிய பார்வையைத் தரும். எது சரி… எது தவறு என புரிய வைக்கும். அதுக்காகத்தான் நான் படிக்கிறேன்னு நினைக்க வேண்டும். 

அதேபோலத்தான் விளையாட்டையும் ஒரு வேலையாக எடுத்துக்கக்கூடாது. இன்னைக்கு உலகமே ஐபிஎல் கிளப் மாதிரி உள்ளது. உன்னை நம்பி பந்தயம் கட்டியிருக்கோம். உன்னை ஏலம் எடுத்திருக்கோம்னு கிரிக்கெட் விளையாடினாத்தான் உனக்கு எதிர்காலம் உண்டு என்கிற ஒரு பார்வை உருவாகியிருக்கு. இப்படி எல்லாவற்றையும் பணமாக்க முடியுமான்னு பார்ப்பதால்தான், சின்ன வயதிலேயே நாம சோர்வாகிவிடுகிறோம். ஒரு கட்டத்தில் எதிலும் ஆர்வமின்மை வர இதுவும் ஒரு காரணம். அதிலயும், 45 வயதுக்கு மேல வர வேண்டிய ஆர்வமின்மை சிறு வயதிலேயே வந்துடுது. அதுக்கு முக்கிய காரணம், அவரவர் விரும்பிய படிப்பை அவரவர் படிக்காமப் போனதுதான். நமக்கு ஆர்வமா இருந்த விளையாட்டை நாம விளையாடல. இப்படி நண்பர்கள் தொடங்கி டியூஷன் வரைக்கும் அவரவர் விருப்பப்படி எதுவுமே நடக்கல. யாரோ ஒரு சிலர்தான் புகழ், பெயர், பணம் வந்தாச்சு... அடுத்து என்னன்னு புதிதா ஒரு விஷயத்தை நோக்கி ஆர்வம் செலுத்த ஆரம்பிக்கிறாங்க!

ஒரு புத்தகத்தை வாங்கி ஒருத்தர் படித்தால் அதனால இப்போ என்ன ஆகப்போகுதுன்னு கேட்கிறாங்க. எங்கிட்டே, கிட்டத்தட்ட 2000 புக்ஸ் இருக்கு. உனக்கு எதுக்கு இவ்ளோ புக்ஸ்னு சொல்றாங்க. அதோட மொத்த விலையைக் கூட்டினால்கூட நல்ல சொத்துதானே! இப்ப எல்லாம் இளைய தலைமுறை பிள்ளைங்க, ‘டாக்குமெண்டரி எடுக்கிறேன், யூடியூப் வீடியோ எடுக்கிறேன்!’ன்னு ஆர்வத்தோட என்னைப் பார்க்க வரும்போது, ‘போய் லைப்ரரியப் பாருங்க!’ன்னு புத்தகங்களைக் காட்டுவேன். அவங்க ஆர்வமா இருந்தாங்கன்னா, ‘புத்தகம் படிக்கிறதா இருந்தா அதுல ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்துக்கோங்க. திரும்ப எங்கிட்டே கொடுக்க வேண்டாம். படிச்சிட்டு அந்தப் புத்தகத்தை பத்தி எங்கிட்டே பேசணும்!’னு சொல்வேன். என்கிட்ட சொன்னதுக்கு அப்பறம், அவரவர்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் அதைக் கொடுத்துடுங்கன்னும் சொல்ல ஆரம்பிச்சிருக்கேன். 

ஒரு மாணவன் 5-ம் வகுப்பு படிக்கும்போதே நீட் தேர்வுக்கும், போட்டித் தேர்வுக்கும் தயாராகிறான். இதையெல்லாம் என்னன்னு சொல்வது? அது அவனுக்கு மிகப் பெரிய ப்ரஷராக இருக்கு. அதனாலதான் எங்கயாவது தப்பித்து ஓடணும்னு ஒரு எண்ணம் அவனுக்கு வந்துடுது. கூடவே, ஆர்வமின்மையும் வந்துடுது. இது மிகவும் சிக்கலான ஒரு விஷயம். இதுவேதான் ஒரு கட்டத்துல வெறுப்பாவும் மாறுது. அதோட, வடிகாலாகத்தான் சமூக வலைதளங்களை அவன் பார்க்கிறான். யாரைப் பார்த்தாலும் கோபமாக திட்டித் தீர்க்கிறான். தான் திட்டினால் யார் திரும்ப திட்டவில்லையோ அவர்களை ரொம்பவே திட்டித் தீர்க்கிறான். இதனை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அடிப்படையில் எங்க அப்பா ஒரு விவசாயி. எவ்வளவோ பொருளாதார நெருக்கடியிலும் பிள்ளைகளை அவர்களுக்குண்டான வசதிகள் உள்ள பள்ளியில் சேர்ப்பதில் தெளிவாக இருந்தார். அதைச் செய்தார். அதோடு மட்டுமல்லாமல், ஒரு நல்ல தந்தையாக என்ன செய்ய முடியும்? நிறைய அரசியல் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார். அந்த காலகட்டத்தில் ஒருவித ரவுண்ட் ஷேஃப்ல ஒரு வாக்மேன் உண்டு. அது வழியாக தலைவர்கள் பேச்சை டேப் ரெக்கார்டர் துணையோடு கேட்கும் சூழலை உருவாக்கிக்கொடுத்தார். ‘அவர் பேர் கேட்டு காதை மூடுகிற ஆத்திகரும் அவர் பேசக்கேட்டால் தமிழ் கீதம் கேட்டுக் கிறுகிறுத்து மயங்கிப்போவார்!’ என்பது போன்ற கலைஞரின் முப்பெரும் விழா பேச்செல்லாம் இப்போது கேட்டாலும் நான் சொல்வேன். அப்படி ஒரு மனப்பாடம் எனக்கு. இந்த மாதிரி அப்போது கேட்ட பல தலைவர்கள் உரையை இப்போதும் அப்படியே சொல்வேன். 

நம்ம பிள்ளைங்க வழியாத்தான் இந்த சமூகமும், நாமும் வளர்ந்துகொண்டிருக்கிறோம்னு இன்னைக்கு காட்ட வேண்டியுள்ளது. நான் ஜெயிச்சிட்டேன்னு சொல்ல இங்கே நிறைய பாராமீட்டர் இருக்கிறது. அந்த பாராமீட்டரில் ஒன்றுதான், ‘என்னோட பிள்ளை... இந்த படிப்பை படிச்சிருக்கான். இவ்ளோ சம்பாதிக்கிறான். வெளிநாட்டில் இருக்கிறான். இந்த கார் வைத்திருக்கிறான்..!’னு சொல்ற மனநிலை. இதெல்லாம் இல்லாமல் எப்பவும் பிடித்ததை செய்வதுதான் நல்ல வாழ்க்கை. 

எல்லா விஷயங்கள்லயும் ஒருவிதமான கமர்ஷியல் வேல்யூ தேடக்கூடிய காலகட்டத்தில் எனக்கு எங்க அப்பா, ‘பிடித்ததை செய்! நடக்க வேண்டியது தானா நடக்கும்!’னு விதைத்தார். கமர்ஷியல் அடிக்‌ஷன் என்பது ஒரு பெரிய ப்ரஷர். அதில் மனதுக்கு அழுத்தம் அதிகம். எனக்குப் பிடிச்ச வேலையை செய்யும்போது அதை ஆழ்ந்து ரசித்து செய்யும்போது ஒரு ரிசல்ட் வரும். ஆனால், அதையே ரிசல்டுக்காக செய்யும்போது வேலையாக மாறிவிடுகிறது. அதுதான் வேண்டாம்னு நினைக்கிறேன். செய்றதை விரும்பி ரசித்து செய்றப்ப கிடைக்குற நம்பிக்கையும், மகிழ்ச்சியும் நம்மைத் தொடர்ந்து ஜெயிக்க வைக்கும். இந்த நம்பிக்கை இருந்தா ரிசல்ட் பற்றி கவலைப்படாம ஜெயிச்சுக்கிட்டே இருக்கலாம்.
 
என்டிடிவி நியூஸ் சேனலில் செய்திப் பிரிவில் இருந்தேன். அப்போ எனக்கு வயது 25. அந்த வயசுலயே லைஃப் செட்டில்டு! ஏன்னா... என்டிடிவி ‘குட் பே மாஸ்டர்’. நல்ல பொசிஷன். சீனியர் ரிப்போர்ட்டர் வேற. நமக்கு அந்த வயசுக்கு எவ்வளவு சம்பாதிக்கணுமோ அதைவிடக் கூடுதல் சாம்பாத்தியம். ஆல் குட். ஃபைன். ஹேப்பி. பேங்க் லோன் தர்றாங்க. பொதுவாக மீடியாக்காரங்களுக்கு பேங்க் லோன் தரமாட்டாங்க. அப்போ ஒரு நெகடிவ் ப்ரொஃபைல் இருந்துச்சு. அந்த நேரத்திலேயே என்டிடிவி-க்கு பாஸிட்டிவ் ப்ரொஃபைல். அப்போ NDTV-தான் விஜய் டிவி-க்கு நியூஸ் ப்ரொடியூஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இந்த மாதிரி அனுபவங்களோட வாழ்க்கை செம ஜாலியாக நகர்ந்துகொண்டிருந்தப்போ ஒரு நாள் சேனலின் ஹெட் வந்தார். அவர் சொன்ன வார்த்தை என்ன தெரியுங்களா?

- இன்னும் சொல்வேன்...