அத்தியாயம் 1

15.77k படித்தவர்கள்
15 கருத்துகள்

1) தமிழ்

மிழ் என்ற சொல் தமிழர்க்கு இனிமையானது. ‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்று பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது. தமிழ் என்ற சொல்லை இனிமை, பண்பாடு, அகப்பொருள் என்ற பொருள்களிலும் வழங்கியுள்ளனர்.

முரசு கட்டிலில் உறங்கிய மோசிகீரனார் என்ற புலவர்க்கு வேந்தன் ஒருவன் கவரி வீசிய செய்தியினைப் புறநானூற்றுப் பாடலால் அறிகிறோம். கண் விழித்த புலவர் ‘அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்’ என்கிறார். தமிழ் எனும் சொல் இங்கு மொழி, கவிதை என்பனவற்றையும் தாண்டி, பலகலைப் புலமை என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. ‘தமிழ் கெழு கூடல்’ (புறம்) என்றவிடத்திலும் ‘கலைப்புலமை’ என்ற பொருளில் இது ஆளப்பட்டுள்ளது. கம்பன் ‘தமிழ் தழீஇய சாயலவர்’ என்னும் இடத்து, தமிழ் என்பதற்கு அழகும் மென்மையும் பொருளாகின்றன.

தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் தமிழ் ‘பாட்டு’ என்னும் பொருளில் ஆளப்படுகிறது. ‘ஞான சம்பந்தன் சொன்ன தமிழ் இவை பத்துமே’, ‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்’ என்பன எடுத்துக்காட்டுகளாகும். முப்பது பாட்டுக்களாலான திருப்பாவையை ஆண்டாள் ‘தமிழ் மாலை’ என்றே குறிப்பது இங்கு எண்ணத்தகும். சிவநெறி தமிழ்நாட்டில் பிறந்தது எனக் குறிக்கவந்த சேக்கிழார், ‘அசைவில் செழும் தமிழ் வழக்கு’ என சைவத்தையும், ‘அயல் வழக்கு’ என சமணத்தையும் குறிப்பிடுகிறார். சமணமும் சைவமும் தமிழ் மொழியினைத் தெய்வீக நிலை சார்ந்தனவாகக் கருதின.

ஆயும் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன் கேட்(டு)
ஏயும் புவனிக்கு இயம்பிய அருந்தமிழ்

என்பது யாப்பருங்கலம். பாணினிக்கு வடமொழியையும், அதற்கிணையான தமிழ் மொழியைக் குறுமுனியான அகத்தியர்க்கும் சிவபெருமான் அளித்தார் என்றும் சைவ இலக்கியங்கள் கூறும். ‘தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்’ என்று கம்பரும் இக்கருத்தினை ஏற்றுப் பேசுகிறார்.

வடமொழி ஆதிக்கமும் தெலுங்கு மொழி ஆதிக்கமும் அரசியல் அறிந்த தமிழர்களால் உணரப்பட்ட இடைக்காலத்தில் தமிழ் தெய்வத்தன்மை உடையதாகவும் தாயாகவும் கருதப்பட்டது. 15ஆம் நூற்றாண்டில் வில்லிபாரதத்திற்கு வரந்தருவார் தந்த பாயிரமும் 17ஆம் நூற்றாண்டில் எழுந்த தமிழ்விடுதூதும் இதை உணர்த்தும். அதே காலத்தில் ‘தலைப் பாவலர் தீஞ்சுவைக் கனியும் தண் தேன் நறையும் வடித்தெடுத்த சாரம் கனிந்தூற்றிருந்த பசுந்தமிழ்’ முருகக் கடவுளின் திருவாயில் மணக்கிறது என்பர் குமரகுருபரர். 19ஆம் நூற்றாண்டில் மனோன்மணியம் சுந்தரனார் காலந்தொட்டு ‘தமிழ்’ அரசியல், சமூக, பண்பாட்டு அளவில் ஒரு மந்திரச் சொல்லாகவே தொழிற்படுகிறது.

‘தெள்ளமுதின் மேலான முத்திக் கனியே என் முத்தமிழே’ என்று தமிழை முத்தி தரும் பொருளாகவும் தமிழ்விடுதூது குறிப்பிடுவது இங்கு உணரத்தகும். இந்த உணர்வினை உள்வாங்கிக்கொண்டு, சமூக நீதிக்குப் போராடிய பாரதிதாசன் தமிழைத் தாயாகவும் தெய்வமாகவும் போராட்டக் கருவியாகவும் கொண்டது தமிழ்நாடு அறிந்த செய்தி.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

நாட்டார் வழக்காறுகளில் தமிழ் எனும் சொல், செம்மையாகப் பேசப்படும் மொழியினை உணர்த்துகிறது. மன்றங்களிலும் வழக்காடும் இடங்களிலும் பேசப்படும் மொழியினை அச்சொல் குறித்திருக்கிறது.

தங்கத் தமிழ் பேச உங்க
தாய் மாமன் வருவாங்க

என்பது தாலாட்டு.

தங்கத் தமிழ் அடியாம்
தாசில்தார் கச்சேரியாம்

என்பது ஒப்பாரிப் பாடல் வரி.

குழாயடி, கிணற்றடி என்பதுபோல் தமிழடி என்பது ஊர் மன்றத்தைக் குறிக்கும்.

தமிழ், தமிழன் ஆகிய சொற்களை ஊர்ப் பெயராகவும் மக்கட் பெயராகவும் ஏராளமாக இட்டு வழங்கியிருக்கிறார்கள். நெல்லை மாவட்டம் ஆலங்குளத்துக்கு அருகில் ‘தமிழூர்’ என்ற ஊரும், நாங்குநேரிக்கு அருகில் ‘தமிழாக்குறிச்சி’ என்ற ஊரும் அமைந்துள்ளன. அருப்புக்கோட்டைக்கு அருகில் ‘தமிழ்ப் பாடி’ என்ற ஊரும் உள்ளது. கல்வெட்டுக்களில் ‘தமிழன்’, ‘தமிழ தரையன்’ ஆகிய பெயர்களைப் பல இடங்களில் காண்கிறோம்.

முதலாம் ஆதித்த சோழன் தனது வெற்றிக்குதவிய படைத் தலைவன் ஒருவனுக்கு ‘செம்பியன் தமிழவேள்’ என்ற பட்டங் கொடுத்தான். சில அதிகாரிகளும் தங்கள் பெயர்களில் தமிழை இணைத்துக்கொண்டனர். எடுத்துக்காட்டாக, ‘இருஞ்சோணாட்டு தமிழவேள் தென்னவன் திருச்சாத்தன்’, ‘அருந்தமிழ் கேசரிச் சோழப் பெரியான்’, ‘சாணாட்டு வேளான் தமிழப் பெற்றான்’ ஆகியனவற்றைக் குறிப்பிடலாம் (கோயிலாங்குளம் சமணக் கோயில் கல்வெட்டு).

***

தண்ணீர்

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

நிலநடுக்கோட்டை ஒட்டிய வெப்பமண்டலப் பகுதியைச் சேர்ந்தது தமிழ்நாடு. எனவே, நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தில் நிறையவே காணப்படுவது வியப்புக்குரியதல்ல. இனிமை, எளிதில் புழங்கும் தன்மை என இரண்டு பண்புகள் நீருக்கு உண்டு. எனவே, ‘தமிழ்’ என்னும் மொழிப் பெயருக்கு விளக்கம் தரவந்தவர்கள், ‘இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்’ எனக் குறிப்பிட்டனர். குளிர்ச்சியினை உடையது என்பதனால் நீரை ‘தண்ணீர்’ என்றே தமிழர்கள் வழங்கிவருகின்றனர். நீரினால் உடலைத் தூய்மை செய்வதனைக் குளிர்த்தல் (உடலைக் குளிர்ச்சி செய்தல்) என்றும் குறித்தனர். இது வெப்ப மண்டலத்து மக்களின் நீர் பற்றிய வெளிப்பாடு ஆகும்.

நீர் என்பது வானத்திலிருந்து வருவது என்பதனால் அதனை ‘அமிழ்தம்’ என்றே வள்ளுவர் குறிப்பிடுவார். நீர்நிலைகளுக்குத் தமிழர்கள் வழங்கிவந்த பெயர்கள் பல. சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை ‘குளம்’ என்பதாகவும், உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை ‘ஊருணி’ எனவும், ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை ‘ஏரி’ என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை ‘ஏந்தல்’ என்றும், கண்ணாறுகளை உடையது ‘கண்மாய்’ என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர்.

மலைக்காடுகளில் உள்ள சுனைகளில் ‘சூர்மகள்’, ‘அரமகள்’ என்னும் அணங்குகள் (மோகினிகள்) வாழ்கின்றனர் என்பது பழைய நம்பிக்கை. அதுபோலவே தெய்வங்களின் இடப்பெயர்ச்சிக்கு நீர் ஓர் ஊடகமாக அமைகின்றது என்பதும் ஒரு நம்பிக்கையாகும். விழாக் காலங்களில் சாமியாடுபவர்களின் தலையில் ஏற்படும் நீர் கரகத்துக்குள் சாமியின் அருளாற்றல் கலந்திருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

நிலத்துக்கும் நீருக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாது. நீரின் சுவை அது பிறக்கும் நிலத்தால் அமையும். நிலத்தால் திரிந்துபோன நீரின் சுவையை மேம்படுத்த தமிழர்கள் நெல்லியினை ஒரு மருந்தாகப் பயன்படுத்தினர். கிணற்று நீர் உவராக இருந்தால் அதனுள் நெல்லி மரத்தின் வேர்களைப் போட்டுவைப்பதும், ஊருணிக் கரைகளிலே நெல்லிமரங்களை நட்டு வைத்து அதற்கு ‘நெல்லிக்காய் ஊருணி’ என்று பெயரிடுவதும் தமிழ் மக்களின் வழக்கம். நெல்லிக்காய் தின்று தண்ணீர் குடித்தால் இனிப்புச்சுவை தெரியும். இச்செய்தி சங்க இலக்கியத்தில் ஓர் உவமையாகவும் எடுத்தாளப்பட்டுள்ளது.

நீரின் தூய்மையினைப் பேணுவதிலும் தமிழர்கள் கருத்து செலுத்தியுள்ளனர். நீருக்குள் மனிதக் கழிவு இடுதல் பெரும் பாவமாகக் கருதப்படுகிறது. ‘நீருக்குள் ஜலபானம் செய்த பாவத்தில் போகக்கடவாராகவும்’ என்று ஆவணங்கள் இதனைக் குறிக்கின்றன. சங்கரன்கோயிலுக்கு வடக்கே பனையூர் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலில் இறைவனுக்கு அக்கோயிற் கல்வெட்டுகளில் ‘நன்னீர்த்துறையுடைய நாயனார்’ என்ற பெயர் காணப்படுகிறது. இயற்கையின் பேராற்றலில் ஆரியர் நெருப்பினை முதன்மைப்படுத்தியது போலவே திராவிடர் நீரினை முதன்மைப்படுத்தினர். தெய்வ வழிபாட்டுச் சடங்குகளைப் போலவே தமிழர்களின் வீட்டுச் சடங்குகளிலும் நீர் சிறப்பிடம் பெறுகின்றது. செம்பு நீர் அல்லது குவளை நீரின் மேல் பூக்களையோ பூவிதழ்களையோ இட்டு வழிபடுவது எல்லாச் சாதியாரிடமும் காணப்படும் பழக்கம். நெடுஞ்சாலைகளில் கோடைக் காலத்தில் நீர்ப்பந்தல் அமைப்பது ஒரு அறச்செயலாகக் கருதப்பட்டது. சோழர் காலத்துக் கல்வெட்டொன்று, தண்ணீர்ப் பந்தலில் தண்ணீர் இறைத்துத் தருபவனுக்கும் அதற்குக் கலமிடும் குயவனுக்கும் தண்ணீர் ஊற்றித் தருபவனுக்கும் மானியமளித்த செய்தியினைக் குறிப்பிடுகிறது.

இயற்கையல்லாத முறையில் நெருப்பில் சிக்கி இறந்தவர்கள் நீர் வேட்கையோடு இறப்பது இயல்பாகும். எனவே, அவ்வாறு இறந்தவர்களின் நினைவாக நீர்ப்பந்தல் அமைப்பதும் தமிழர்களின் வழக்கம்.

மொகஞ்சொதராவில் அகழ்வாய்வில் காணப்பட்ட படிக்கட்டுகளுடன்கூடிய குளம் நீர்ச்சடங்குகள் செய்வதற்குரிய இடமாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். நீராடுவதே ஒரு சடங்காகவும் தமிழர்களால் கருதப்பட்டதற்கு பரிபாடல், திருப்பாவை போன்ற இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன. நீரை மையமிட்ட பழமொழிகளும் மரபுத் தொடர்களும் தமிழர்களிடத்தே உண்டு. ‘நீரடித்து நீர் விலகாது’, ‘நீர்மேல் எழுத்து’, ‘தண்ணீருக்குள் தடம் பிடிப்பவன்’ என்பவை அவற்றுட்சில.

- தொடரும்