சிறுகதை

5.88k படித்தவர்கள்
122 கருத்துகள்

ன் கடைசிப் பெண் ஸ்ருதியின் கழுத்தில் மங்கல நாண் ஏறியதும் அபரிமித மகிழ்வில் கண்கள் பனித்தன, அகிலாவுக்கு. கணவர் ரமேஷின் கைகளை மெலிதாய்ப் பற்றிக் கொண்டாள். அவள் மனநிலையைப் புரிந்து கொண்டதன் அடையாளமாய், புன்முறுவலுடன் மனைவியின் கையைத் தட்டிக்கொடுத்த ரமேஷ், நாசூக்காய் தன் கையை அவளிடமிருந்து விடுவித்துக் கொண்டார். முப்பத்து மூன்று ஆண்டுகளாய் தன்னுடன் வாழும் மனைவியின் கையைக்கூட மற்றவர் எதிரில் பற்றாத, அதீத சபை நாகரிகம் காப்பவர்; அவர் குணம் பழகியது என்பதால் அகிலா அதனைப் பொருட்படுத்தவில்லை. முகம் நிறைந்த புன்னகையுடன் மணமக்களின் மேல் அட்சதை தூவி, மேற்கொண்டு செய்ய வேண்டிய திருமணச் சடங்குகளில் கவனம் செலுத்தினாள்.

அகிலா-ரமேஷ் தம்பதிக்கு மூன்று குழந்தைகள். முதல் பெண் பூஜாவுக்கு அடுத்து பிறந்த இரட்டையர்தான் ராகவ்-ஸ்ருதி. திருமணத்திற்குப் பிறகு குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட முதல் பெண் பூஜா, தன் கணவர் மற்றும் மகன் விஹானுடன் தங்கையின் திருமணத்துக்கு வந்திருந்தாள். மின் பொறியாளரான ராகவ், தன் மனைவி மிருதுளா மற்றும் மகள் கனிஷாவுடன் சென்னையில் தன் பெற்றோருடன் வசித்து வருகிறான்.

ஸ்ருதியும் ராகவும் ஒரே வயதினர் என்றபோதும், ராகவுக்குத் திருமணமாகி, கனிஷா இதோ பத்து நாட்களில் முதல் பிறந்தநாள் கொண்டாடப் போகும் நேரத்தில்தான் ஒருவழியாய் ஸ்ருதியின் திருமணம் நடக்கிறது.

‘ஸ்ருதிக்கு எப்போ கல்யாணம்?’ என்று உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தார் அனைவரும் விசாரிக்கும் அளவுக்கு அவள் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. பொதுஜன அபிப்பிராயத்தில் நல்ல வரன்களாய் வரையறுக்கப்பட்ட பல மாப்பிள்ளைகளை, பத்து நிமிடப் பேச்சில் தனக்கு ஏற்றவன்தானா என்று அலசி ஆராய்ந்து, இல்லையென உணர்ந்து நிராகரித்துவிடுவாள் ஸ்ருதி. பணக்கார முட்டாள், நேரோ-மைண்டட் (narrow-minded), கம்பாட்டபிலிட்டி இல்லை, பப்ஜி விளையாடுகிறான், அறிவுத்திறனில்லை என்பன, சில நிராகரிப்புக் காரணங்கள். இப்படி ஒவ்வொரு வரனையும் அலசி ஆராய்ந்த ஸ்ருதி, ஒருவழியாய் கனடா மாப்பிள்ளைக்குச் சம்மதம் சொன்னாள்.

அப்பாடா என்ற நிம்மதியுடன் திருமணத்தைத் துரிதமாக நடத்தி முடித்தனர், அகிலா-ரமேஷ். தங்கள் கடமைகள் அனைத்தும் முடிந்தன; இனி தங்கள் வாழ்வில் நிம்மதியும் ஆனந்தமுமே என்று எண்ணினர். ஆனால், அதற்கு மேல்தான் தாங்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்பதை உணரவில்லை அவர்கள்.

*****

முதல் பிரச்சினையை மருமகள் மிருதுளா எழுப்பினாள்.

“என்ன ராகவ்? உன் தங்கச்சிக்கு விசா கிடைக்கிற வரைக்கும் இங்கதான் டேரா போல?” என்றாள் நக்கலாய்.

“ஏய்! மெதுவா பேசு. அம்மா காதுல விழப்போகுது!”

“என் காதுல விழணும்னுதானடா உன் பொண்டாட்டி அவ்வளவு சத்தமா பேசறா” என்று சிரித்தபடி சொன்ன அகிலா தன் மருமகள் பக்கம் திரும்பி,

“இங்க பாரு மிருதுளா! இந்த வீட்ல உனக்கும் ராகவுக்கும் எவ்ளோ உரிமை இருக்கோ, அதே அளவு பூஜாவுக்கும் ஸ்ருதிக்கும் இருக்கு. அவங்க விருப்பப்படி எத்தனை நாள் வேணும்னாலும் இங்க தங்கலாம்; புரிஞ்சுதா?” என்றாள் இதமாகவே.

பதிலேதும் சொல்லாது, மாமியாரை முறைத்தபடியே சென்று தன் அறைக்கதவை ‘படார்’ என சாத்திக் கொண்டாள் மிருதுளா.

அவள் செய்கை, அகிலாவை வருத்தமடைய வைத்தது. மனைவியின் முகவாட்டத்தைப் பார்த்த ரமேஷ், அவள் காதருகில் குனிந்து, “இவளுக்குப் போய் மிருதுளான்னு ஏன் பேர் வச்சீங்கன்னு சம்பந்திகிட்ட கேக்கவா? இவ ஒரு முறைகூட அன்பா பேசி நான் கேட்டதே இல்லை, அகிலா!” என்று கூறி சிரித்தார்.

“விடுங்க, பரவால்ல. நம்ம ராகவ்கிட்டயாவது அவ அன்பா பேசினா போதும்!” என்று கூறிப் புன்னகைத்தாள் அகிலா.

*****

“ஸ்ருதி கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாளாச்சு; இன்னும் ஏம்மா அத்தை, பெரிம்மாவெல்லாம் நம்ம வீட்லயே இருக்காங்க?” என்று எரிச்சலுடன் கேட்டாள் பூஜா.

திகைப்புடன் தன் மகளை நோக்கினாள் அகிலா. பூஜாவா இப்படிப் பேசுகிறாள்? தனக்கும் தன் கணவருக்கும் இருக்கும் விருந்தோம்பல் பண்பைத் தங்கள் பிள்ளைகளும் கடைப்பிடிப்பார்கள் என்றல்லவா எண்ணியிருந்தாள்?

“என்ன, பூஜா! இப்டிப் பேசற? ஊருக்குக் கிளம்பினவங்களத் தடுத்து, அடுத்த வாரம் நடக்கப்போற நம்ம கனிஷாவோட பர்த்டே ஃபங்ஷன் முடிஞ்சு போலாம்னு நாங்கதான் இருக்க வச்சிருக்கோம்” என்றாள் ஆதங்கத்துடன்.

“யாரக் கேட்டு அவங்களத் தங்க வச்சீங்க? எங்ககிட்ட பர்மிஷன் வாங்கணும்னு தோணலையா?” என்றவள் தொடர்ந்து, “நமக்கே இங்கே இடம் பத்தல. இதுல கொரோனா பயம் வேற முழுசா போகல!” என்றாள்.

“பயப்படாத, பூஜா! அவங்க ரெண்டு டோஸ் தடுப்பூசியோட பூஸ்டரும் போட்டுட்டாங்க. உன் ரூம் பக்கம் அவங்க வர மாட்டாங்க, சரியா?”

“எல்லாத்துக்கும் பதில் ரெடிமேடா வச்சிருக்கே! என்னமோ போ. நான் அமெரிக்கா போனதுலேர்ந்து நீயும் அப்பாவும் ரொம்பவே மாறிட்டீங்க. என்னவிட உங்களுக்குச் சொந்தக்காரங்க ரொம்ப முக்கியமா போய்ட்டாங்க, இல்ல?”

“அப்படில்லாம் இல்லம்மா. எங்களுக்கு நீங்களும் முக்கியம்; சொந்தமும் முக்கியம்!” என்ற அகிலா, மேற்கொண்டு பேச்சை தொடரப் பிடிக்காது அவசரமாய் அங்கிருந்து அகன்றாள்.

*****

கிலாவையும் ரமேஷையும் ஒவ்வொரு நாளும், சுற்றிவிட்ட பம்பரம்போல் ஓய்வின்றி சுழல வைத்தன வீட்டு வேலைகள்.

காலையில் அத்தனை பேருக்கும் காஃபி, இரண்டு வகை டிஃபன் செய்து உபசரித்து முடிக்கவே பதினொரு மணி ஆகிவிடும். அதன் பின் அவரவர் விருப்பப்படி டீ, போர்ன்விட்டா, மாதுளை ஜூஸ் என்று இளைப்பாறல் நடக்கும். தினமும் ரமேஷ், தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்தபடி மாதுளைப் பழங்களை உதிர்த்து வைத்துவிடுவார்.

மதிய சாப்பாடு, சாதம், குழம்பு, ரசம், மோர் மற்றும் இரண்டு அசைவம், ஒரு சைவ பதார்த்தங்களுடன் தடபுடலாய் நடக்கும். அவ்வளவையும் சமைப்பதைவிட, அதை மூன்று ஜோடிகளுக்கும் ராஜ உபசரிப்பாய்ப் பரிமாறுவதே அகிலா-ரமேஷுக்கு மிகப் பெரிய வேலையாய் இருக்கும்.

உணவு மேசையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, பேசி சிரித்தபடி சாப்பிட்டால் வேலை செய்த களைப்புகூட பறந்து போய்விடும். ஆனால், மூன்று ஜோடிகளுமே வெவ்வேறு நேரங்களில் சாப்பிட வருவார்கள். ஒன்றாகச் சாப்பிடவே கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டாற்போல ஒரு ஜோடி சாப்பிடுவது கண்டால், அடுத்த ஜோடி அவ்விடம் விட்டு அகன்றுவிடுவர். பிள்ளைகளிடையே ஒற்றுமை குறைந்து பனிப்போர் நிலவுவது கண்டு மனம் குமைந்தனர், அகிலாவும் ரமேஷும்.

ஸ்ருதியும் புது மாப்பிள்ளையும் மட்டும் விதிவிலக்காய் அனைவரிடமும் சிரித்துப் பேசி தங்கள் உணவை ஹாலில் டி.வி. பார்த்துக் கொண்டே சாப்பிடுவார்கள்.

அன்றும் அவர்கள் அப்படி சாப்பிட்டு கொண்டிருக்கும்போது, மருமகள் மிருதுளா தன் அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

“அத்தை! கனிஷா தூங்கறா. கொஞ்சம் டி.வி. சவுண்டைக் குறைக்கச் சொல்லுங்க, உங்க சின்னப் பொண்ணையும் மாப்பிள்ளையையும்” என்றாள் கடுப்புடன்.

“அதை நீயே போய் சொல்லும்மா. நான் வேலையா இருக்கேன்” என்றாள் அகிலா, அப்பளத்தைப் பொறித்தபடி.

“என்னாலலாம் அவங்ககிட்ட போய்க் கெஞ்சிட்டு இருக்க முடியாது!” என்றாள் முகத்தில் அடித்தாற்போல்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“அப்படீன்னா, ரூம் கதவை நல்லா மூடிக்கோம்மா. சத்தம் கேக்காது” என்றாள் அகிலா.

“சொந்த வீட்ல, நான் கதவை மூடிட்டு ரூமில் இருக்கணும்; அவங்க ஹால்ல உக்காந்து ஹாயா டி.வி. பாக்கணுமா?”

“நீயும் அவங்ககூட போய் டி.வி. பாரும்மா. நான் வேணும்னா கனிஷாவப் பாத்துக்கறேன்.”

“அவங்க தோள்லேயும் இடுப்புலயும் கை போட்டு நெருக்கமா உக்காந்து பார்ப்பாங்க, நான் அவங்ககூட போய் டி.வி. பாக்கணுமா?” ஓங்காரமாய்க் கத்தினாள் மிருதுளா.

அந்தக் கத்தலில் கோபத்தைவிட பொறாமை நெடி தூக்கலாய் இருந்தது.

*****

ன்று மாலை. மூன்று ஜோடிகளுமே தனித்தனியாய் மால், ரெஸ்டாரெண்ட், ஷாப்பிங் என்று கிளம்பிச் சென்றனர். பேரன் விஹானையும், பேத்தி கனிஷாவையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அகிலா-ரமேஷிடம் விடப்பட்டது.

இரு குழந்தைகளுக்கும் உணவூட்டி, அவர்களுடன் விளையாடி, தூங்க வைத்த பின்னர் தாங்கள் இருவரும் சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.

“என்னங்க” என்றாள் அகிலா.

“குரல் ரொம்ப தழைஞ்சு வருதே! என்ன உத்தரவு போடப் போறீங்க, மகாராணி?”

“உத்தரவெல்லாம் இல்லங்க. ஒரு ஸஜஷன்தான்.”

“சொல்லு!”

“ராகவ்-மிருதுளா ரூமுக்கு ஒரு டி.வி. வாங்கிக் கொடுக்கலாமா?” சட்டென்று சாப்பிடுவதை நிறுத்தி, அவளை முறைத்தார் ரமேஷ்.

“என்ன, விளையாடறியா அகிலா? கல்யாணக் கடனே கழுத்தை நெரிக்குது. அதோடுகூட வீட்டுச் செலவும், சாப்பாட்டுச் செலவும் தலைக்கு மேல போயிட்டிருக்கு. அடுத்த மாச செலவுக்கு என்ன பண்றதுன்னு முழிபிதுங்கிட்டிருக்கேன். கொஞ்சம்கூட வீட்டு நிலமையைப் புரிஞ்சுக்காம, டி.வி., கி.வி.ன்னு உளறிட்டு இருக்கே?” என்று கோபமாய் வெடித்தவரின் முகம் சிவந்து போனது.

“முதல்ல சாப்பிட்டு முடிங்க; டென்ஷன் ஆகாதீங்க, நான் இப்ப இந்தப் பேச்சை ஆரம்பிச்சதே தப்பு” என்றாள் அகிலா சமாதானமாய்.

சிறிது நேரம் கழித்து சற்றே அமைதியானார், ரமேஷ். மெல்ல மதிய வேளையில் மிருதுளா பேசியதை விவரித்தாள் அகிலா.

“மிருதுளாவும் தன்னிஷ்டத்துக்கு டி.வி. பார்க்க நினைக்கறது தப்பில்லையே! நம்ம பிள்ளைங்களுக்கு நாமதானே வசதி செஞ்சு குடுக்கணும்?” என்றாள் நயமாக.

“மிருதுளாவுக்குத் தனியா டி.வி. பாக்கணும்னா, ஒண்ணு அவ புருஷனைக் கேக்கணும். இல்லைன்னா அவளோட சம்பாத்தியத்துல தனக்கொரு டி.வி. வாங்கிக்கணும். இருக்கற வரைக்கும், மாமனார்-மாமியார் பணத்துல சுகமா வாழ நினைக்கறதெல்லாம் ரொம்ப டூ மச் அகிலா! நீ அவங்களுக்கு ரொம்பத்தான் செல்லம் கொடுக்கறே!”

“இல்லங்க. ஸீரோ பர்சன்ட் வட்டின்னு விளம்பரம் செய்றாங்களே, அப்படி வாங்கலாமா?”

“அப்படித்தான் விளம்பரம் செய்வாங்க. ஆனா, கணக்குப் போட்டு பாத்தா நியாயமான விலையைவிட அதிகமா வசூல் செஞ்சிடுவாங்க, அப்படியே ஈ.எம்.ஐ. மூலமா வாங்கினாலும், உடனே ‘என் ரூமுக்கு டி.வி. வாங்கணும்னு’ உன் பெரிய பொண்ணு பூஜா பிடிவாதம் பிடிப்பா... ஆள விடு!” என்றார் ஆயாசமாய்.

ரமேஷின் வார்த்தைகளில் உள்ள நியாயம் புரிந்து மௌனம் காத்தாள் அகிலா.

“நல்லவங்களா இருக்கலாம் அகிலா! ஆனா, ஏமாந்தவங்களா இருக்கக் கூடாது. நமக்கு இரண்டு பெண்களும் ஒரு மருமகளும் இருக்கறாங்க. ஆனா, யாராவது உனக்கு வீட்டு வேலையில ஹெல்ப் பண்றாங்களா?”

“நீங்க சொல்றது கரெக்ட்தான். ஆனா, பூஜா இருக்கற அமெரிக்கா, ஸ்ருதி போகப் போற கனடானு எங்கயுமே வேலைக்காரங்க இல்லாமல் அவங்கவங்க வேலையை அவங்கவங்கதான் செய்யணும். இங்க இருக்கிற வரைக்கும் அவங்க ஃப்ரீயா சந்தோஷமா இருந்துட்டு போகட்டுமேன்னு பாக்கறேன். நம்ம பொண்ணுங்கள ஃப்ரீயா விட்டுட்டு, மருமகளை மட்டும் எப்படிங்க வேலை வாங்கறது?”

“அது உன்னோட நல்ல குணம் அகிலா! உங்கம்மாவோ அல்லது எங்கம்மாவோ வேலை செய்யும்போது, உன் மருமக மாதிரியோ இல்ல உன் பொண்ணுங்க மாதிரியோ நீ வெறுமனே வேடிக்கை பார்த்துட்டு இருந்திருக்கியா?”

“இல்லதான். எல்லோரும் நல்ல குணத்தோட இருக்கணும்னு எதிர்பார்க்கறதே தப்புதானே!”

“நல்ல குணத்தை விடு. சாதாரண மனிதநேயம்கூட இல்லியே! சோம்பேறித்தனமும் சுயநலமும் மட்டும் நெறைய இருக்கு இப்ப இருக்கிற ஜெனரேஷனுக்கு!”

“ரொம்ப ஜட்ஜ்மெண்ட்டலா பேசாதீங்க மிஸ்டர் ரமேஷ். இது வெறும் ஜெனரேஷன் கேப் ஆகக்கூட இருக்கலாம்!” என்றாள் அகிலா கேலியாக.

பெருமூச்சு விட்டார் ரமேஷ்.

*****

ராகவ்-மிருதுளாவின் மகளான கனிஷாவின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா, மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ள, நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நல்லபடியாக நடந்தேறியது. விழா செலவு, பட்ஜெட்டைத் தாண்டிவிட்டபோதும், சிறப்பாய் நடந்தது குறித்து மகிழ்ந்தனர் ரமேஷும் அகிலாவும்.

மறுநாள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ரமேஷின் வேண்டுகோளுக்கு இணங்கி ஹாலில் குழுமியிருந்தனர். முந்தைய நாள் விழாவின் களைப்பில் குழந்தைகள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

“என்னப்பா? எதுக்கு எல்லாரையும் ஹாலுக்கு வரச் சொன்னீங்க?” என்று தொடங்கினாள் பூஜா.

“நாம எல்லோரும் ஒரே வீட்டுல இருந்தாலும், ஒண்ணா சேந்து பேசக்கூட நேரமில்லாம பிஸியாக இருக்கோமே. இன்னைக்காவது ஒண்ணா உக்காந்து பேசலாம்னுதான் கூப்பிட்டேன்மா!” என்றார் ரமேஷ்.

“என்னப்பா, பீடிகை பலமா இருக்கு?” என்று கேட்டாள் பூஜா.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. நானும் அம்மாவும் ரெண்டு நாள்ல ‘பொன்னியின் செல்வன் டூர்’ போகலாம்னு இருக்கோம். வந்தியத் தேவன் போன, பேமஸான ஹிஸ்டரில இருக்கிற இடத்துக்கெல்லாம் ஒரு டீமா ஐம்பது பேர் போய் பாக்கப் போறோம். ஏழு நாள் டூர்!”

“என்னது?” என்று அதிர்ச்சியுடன் கேட்ட பூஜா தொடர்ந்து, “யாரைக் கேட்டு முடிவெடுத்தீங்கப்பா? அதுவும் இப்போ?” என்றவளின் குரல் உச்சஸ்தாயியில் வெளிவந்தது.

ஒரு முழு நிமிடம் ஹாலே நிசப்தமானது.

“நானும் என் பொண்டாட்டியும் டூர் போறதுக்கு, நான் யார்கிட்ட பர்மிஷன் கேக்கணும் பூஜா?” என்று அமைதியாகவே கேட்டார் ரமேஷ்.

“எங்ககிட்ட கேக்கணும்ப்பா! உங்கள நம்பித்தானே ஊர்லேர்ந்து வந்திருக்கோம்” என்று ஆற்றாமையில் வெடித்தாள் பூஜா.

“சின்னவங்க நாம குழந்தை குட்டின்னு வீட்ல இருக்கோம். பெரியவங்க ரெண்டு பேரும், கொஞ்சங்கூடப் பொறுப்பில்லாம டூர் போறாங்களாம். இது மாதிரி அநியாயம்லாம் இந்த வீட்ல மட்டுந்தான் நடக்கும்” என்று நொடித்தாள் மிருதுளா.

“மிரு! கொஞ்ச நேரம் சும்மாயிரு!” என்று தன் மனைவியை அடக்கினான் ராகவ்.

“என்னப்பா இது, இப்படிப் பொறுப்பில்லாம பேசறீங்க. நாங்க நிறைய ப்ளான் பண்ணியிருக்கோம்!” என்றாள் பூஜா உரத்த, தீர்மானமான குரலில்.

“என்ன ப்ளான்மா?” என்று கேட்டார் ரமேஷ்.

“இன்னும் இருபது நாள்ல, நாங்க அமெரிக்காவுக்குத் திரும்பிப் போகப் போறோம். அதுக்குள்ள விஹானை இங்க ஒரு நல்ல ப்ளே ஸ்கூல்ல சேர்த்துடலாம்னு நினைக்கிறோம்” என்ற பூஜாவின் பேச்சை ஆமோதித்து தலையசைத்தான், பெரிய மாப்பிள்ளை.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

புரியாமல் பார்த்தனர், அகிலாவும் ரமேஷும். “அமெரிக்க ஸிட்டிஸனான உங்க பையன் விஹானை, இங்கே – சென்னை ப்ளே ஸ்கூல்ல எதுக்கு சேர்க்கணும்?” என்று கேட்டார் ரமேஷ், வியப்பு விலகாமல்.

“அப்பா! விஹான் ஒரு ரெண்டு வருஷம் உங்களோட இருந்தால், நம் தமிழ், பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் கத்துப்பான்; அதுக்கப்புறம் அவனை நாங்க அமெரிக்காவுக்குக் கூட்டிட்டுப் போயிடுவோம்” என்றாள் பூஜா.

“விஹான் பிறந்து ஒரு வருஷம் நானும் அப்பாவும் உங்ககூட அமெரிக்காவுலதானே பூஜா இருந்தோம். இப்பவே அவன் தமிழ் நல்லாதான் பேசறான். ரெண்டு வருஷம் எங்ககிட்ட அவனை விட்டுட்டுப் போறதைப் பத்தி நீ எங்களோட கலந்து பேசவே இல்லையே, பூஜா!” என்றாள் அகிலா திகைப்புடன்.

“அம்மா! நீ சும்மாயிரு. உனக்கு ஒண்ணும் தெரியாது; நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன்!” என்று அலட்சியமாய், முகத்தில் அடித்தாற்போல் சொன்னாள் பூஜா.

இரண்டு மாப்பிள்ளைகள் மற்றும் மருமகள் எதிரில், தன்னை பூஜா செய்த அவமதிப்பில் அகிலாவின் பிஞ்சு மனம் வெதும்பி, கண்ணில் கண்ணீர் திரண்டது.

“பூஜா! அம்மாகிட்ட நீ பேசற முறை சரியில்ல” என்று எச்சரித்த ரமேஷ், “நியாயமாய் பார்த்தா, இவ்வளவு பெரிய முடிவை நீ எங்ககிட்ட பேசாம டிஸைட் பண்றதே தப்பு” என்றார் ரமேஷ்.

“என்னப்பா, இப்படி பிரிச்சுப் பேசறீங்க? நீங்களும் அம்மாவும் இப்ப ரொம்பவே மாறிட்டீங்க!” என்ற பூஜாவின் குரலில் வெறுப்பு மண்டிக் கிடந்தது.

“ஆமாக்கா! என்னையுமே அப்பா தனிக்குடித்தனம் போகச் சொல்லிவிட்டார்” என்றான் ராகவ் வருத்தமாய்.

“என்ன?” – ரமேஷ் தவிர ஹாலில் இருந்த ஒட்டுமொத்த குடும்பத்தினருமே அதிர்ந்து போயினர் – அகிலா உட்பட.

“இது என்னடா புதுக் கதை?” என்றாள் பூஜா. அவள் கண்கள் கதை கேட்கும் சுவாரஸ்யத்தில் மின்னின.

“கதை இல்லம்மா! உண்மையாத்தான் அவனைத் தனிக்குடித்தனம் போகச் சொன்னேன்!” என்ற ரமேஷ் தொடர்ந்து, “எங்களுக்குக் கல்யாணமாகி ஒரே மாசத்துல என்னையும் உன் அம்மாவையும் தனிக்குடித்தனம் வைச்சுட்டாரு, தாத்தா – அதாவது என் அப்பா. அப்போ அகிலாவும் வேலைக்குப் போனா. முதல் மூணு வருஷம், நாங்க ரெண்டு பேரும் உழைச்சு, கணிசமான அளவு பணம் சேர்த்தோம். அதுக்கு அப்பறம் பூஜா, ராகவ்-ஸ்ருதின்னு நீங்க எல்லாம் பிறந்ததும் அம்மா வேலைய ராஜினாமா செஞ்சிட்டு உங்களை வளக்கிறதுலயும், குடும்ப பொறுப்பிலும் பக்கபலமா என்னோட கூட நின்னா.

உங்க மூணு பேரோட வளர்ப்பு, படிப்பு, வேலை, கல்யாணம், பேரப்பிள்ளைகள்னு இடைவிடாம உழைச்சு, ஓரளவு எங்கக் கடமைய முடிச்சிட்டோம். இப்பதான் எங்களுக்கான தனி வாழ்க்கையைத் தொடங்கப்போறோம். நானும் ரிட்டையர் ஆகிட்டேன். இனிமேலும் பழையபடி காலைல பரபரப்பா எந்திரிச்சு, பேரப் பிள்ளைகளோட படிப்பு, வளர்ப்புன்னு எங்களால ஓட முடியாது. அதுக்கான தெம்பு இந்த வயசுல இல்லை. அதனால, ராகவ் நீ தனிக்குடித்தனம் போ. உன் குடும்பம் இனி உன் பொறுப்பு. அப்பப்ப எங்களால முடிஞ்ச உதவியைக் கட்டாயம் செய்வோம்” என்றார் ரமேஷ் புன்னகையுடன்.

“மாமாதான் ஏதேதோ பேசறார்னா அவரைத் தடுத்து, குடும்பத்தை ஒத்துமையா வெக்காம, வாயை மூடிட்டு வேடிக்கை பாக்கறீங்க! உங்கள மாதிரி கல் நெஞ்சக்காரங்களை நான் பாத்ததே இல்லை!” என்று முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, அகிலாவை நோக்கி படபடவெனப் பொரிந்தாள் மிருதுளா.

“இதோ பாரும்மா, மிருதுளா!” என்ற ரமேஷ், “உன்னைவிட வயசுல பெரியவங்களுக்கு முதல்ல மரியாதை கொடுக்கக் கத்துக்கோ. நான் ஏன் ஒரே மாசத்துல தனியா வந்தேன் தெரியுமா? என் அம்மாவும் உன்னைப் போலத்தான். எப்பவும் அகிலாவோட மனசைப் புண்படுத்தற மாதிரியே பேசுவாங்க. என்னை நம்பி வந்த என் பொண்டாட்டியை யாரும் வேதனைப்படுத்தக் கூடாதுங்கறதுல நான் உறுதியாக இருந்தேன்; இருக்கேன். அகிலாவை யாரும் நோகடிக்க நான் விட மாட்டேன். என்னை நம்பி வந்தவளை கண்கலங்காம பாத்துக்க வேண்டியது என் கடமை” என்றார்.

அகன்ற விழிகளில் வழிந்தோடிய கண்ணீருடன் தன் கணவனை இமைக்காமல் பார்த்தபடி நின்றாள் அகிலா. தன் கணவனின் முழுமை பெற்ற முதுமைக் காதலின் விஸ்வரூபம் அவளை வாயடைக்கச் செய்துவிட்டது.

“அப்படின்னா, பெத்த பிள்ளைகளைப் பாத்துக்கறதும் உங்க கடமைதானேப்பா!” என்று கேட்டாள், பூஜா அழுத்தமாய்.

“அந்தக் கடமை உங்களுக்கும் பொருந்தும்தானே! முப்பது வயசுக்குப் பிறகும் உங்க அப்பா-அம்மா உங்களப் பாத்துக்கணும்னு எதிர்பாக்கறீங்க, உங்க குழந்தைக்கு உங்க கடமையைச் செய்ய ஏன் தயங்கறீங்க? எங்க தயவை ஏன் எதிர்பாக்கறீங்க?”

“எங்க மேல உங்களுக்குப் பாசமில்லையாப்பா?” சற்றே வேதனையுடன் கேட்டான் ராகவ்.

“ஏன் இல்லாம? எனக்கும் உன் அம்மாவுக்கும் உங்க மேலயும் பேரப் புள்ளைங்க மேலயும் இருக்கிற பாசம் என்னைக்கும் குறையாது. ஆனால், அந்தப் பாசம், இந்த வயசான காலத்துல எங்க சுதந்திரத்தை அடகு வைச்சு, அடிமையா வாழற அளவுக்கு எங்களக் கட்டிப்போடக் கூடாது ராகவ்” என்றார் ரமேஷ் திட்டவட்டமாய்.

“எங்ககூட இருக்கறது அடிமை வாழ்க்கையாப்பா?” சீறினாள் பூஜா.

“அதுல என்ன சந்தேகம்? சொந்தக்காரங்க இங்கே எங்களப் பாக்க வர்றதுக்கும் தங்கறதுக்கும் உங்ககிட்ட நாங்க பர்மிஷன் வாங்கணும்னு சொல்றது சுதந்திர வாழ்வா என்ன? ஒரு வாரம் தங்கறதா சொன்ன அத்தையும் பெரிம்மாவும் ரெண்டே நாள்ல ஏன் போய்ட்டாங்க?” என்ற ரமேஷ்,

“சிம்பிள் பூஜா! இத்தனை வருஷம் நானும் உங்கம்மாவும் உழைச்சிட்டோம். இப்போ எங்களுக்கு ஓய்வு தேவை. காலையில் லேட்டா எழுந்து, வேணும்னா சமைச்சு, முடிஞ்சா வீட்டைச் சுத்தம் செஞ்சு, ஈவினிங்ல வாக்கிங் போய், பழைய ஃப்ரெண்ட்ஸைப் பார்த்து, கோயில், சினிமா, பீச்னு நாங்க விரும்புற இடத்துக்கு, யாருடைய அனுமதியும் கேக்காம, சுதந்திரமாய் போக வர இருக்க நினைக்கறது அவ்வளவு பெரிய தப்பா, என்ன?” என்று கேட்டார்.

“அதாவது, உங்க கடமையிலேர்ந்து எஸ்கேப் ஆகறீங்க” என்று குற்றஞ்சாட்டினாள் பூஜா.

மெலிதாய் சிரித்தார் ரமேஷ். “யாரு, கடமையிலிருந்து எஸ்கேப் ஆகறது? நீங்களா, நாங்களா? எங்க தலைமுறையோட நிலமை ரொம்ப பரிதாபமா ஆயிடுச்சு. எங்க அப்பா-அம்மாவுக்கு சேவகம் செஞ்சோம். எங்க பிள்ளைங்களான உங்களுக்கும் முப்பது வருஷமா எங்க கடமையைச் செஞ்சிட்டுதான் இருக்கோம். ஆனா, எங்க கடமை எப்ப முடியும்? பவுண்டரி லைனை (boundary line) யார் போடறது? அதை டிஸைட் பண்ற உரிமையை நாங்க எடுத்துட்டு இனி இருக்கற காலத்தை நிம்மதியா கழிக்கணும்னு நினைக்கிறோம். நல்ல விதத்துல எங்களைப் புரிஞ்சுப்பீங்கன்னு நம்பறேன்” என்றார் ரமேஷ் முத்தாப்பாய்.

சின்னப் பெண் ஸ்ருதி, அருகில் வந்து அவர்கள் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“மம்மி! டேடி! உங்க ஃபீலிங்ஸைப் புரிஞ்சுக்காம, நீங்க செய்ததையெல்லாம் க்ராண்டட் (granted) ஆக எடுத்துட்டோம், ஸாரி” என்றாள்.

“என் தங்கம்!” என்று மகளைக் கொஞ்சினாள், அகிலா. பூஜாவும் ராகவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஊர்ல, உலகத்தில எத்தனை பேரண்ட்ஸ் தங்களோட பேரப் பசங்களையும் வளக்கறாங்க தெரியுமா? நமக்கு மட்டும் ஏண்டா இப்படி ஒரு விசித்ரமான ஸெல்ஃபிஷ் பேரண்ட்ஸ்?” என்று சலித்துக் கொண்டாள் பூஜா. ஆனால், அவள் குரலில் கோபத்தின் வெப்பம் கணிசமாய்க் குறைந்திருந்தது.

தோள்களைக் குலுக்கினான் ராகவ். “தெரியலைக்கா! நான் வீடு தேடணும் போலிருக்கு!” என்றான் அசட்டுப் புன்னகையுடன். அவர்களையே பார்த்தபடி நின்ற அகிலா வருத்தத்துடன் ரமேஷின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

“ஏங்க! பூஜாவும் ராகவ்வும் நம்மை வெறுத்திருவாங்களோ?” என்று கலக்கத்துடன் கேட்டாள்.

“எல்லாப் புரட்சியோட ஆரம்பப் புள்ளிக்கும் எதிர்ப்பு வந்தே தீரும், அகிலா! நம்மோட முதுமைக் கால சுதந்திரத்துக்காக நாம் எடுத்து வைக்கற இந்த முதல் அடிக்கும் விமர்சனமும் கல்லடியும் வரத்தான் செய்யும். ஆனா, கட்டாயம் நம்ம பிள்ளைங்க, நம்ம பக்கமிருக்கற நியாயத்தைப் புரிஞ்சுக்குவாங்கன்னு நம்பறேன்” என்ற ரமேஷ் மனைவியின் கையை ஆதரவாய் தட்டிக் கொடுத்தார்.

பின்னர் வழக்கம்போல், தன் விரல்களை அவள் பிடியிலிருந்து நாசூக்காய் விடுவித்துக் கொண்டார்.

புன்முறுவலுடன் தன் கணவனை ஏறிட்ட அகிலாவின் கண்களில் நம்பிக்கை ஒளிர்ந்தது.