சிறுகதை

3.05k படித்தவர்கள்
58 கருத்துகள்

பிச்சிணி தெரியுமா, உங்களுக்கு? அதோ அவள்தான்! வயது முப்பது இருக்கும். பார்த்தால் தெரியாது. கறுப்பில் பாவாடையும், காலர் வைத்த சுடிதார் டாப்புடனும் தெருவெல்லாம் உட்கார்ந்து எழுந்து நடந்து, மீண்டும் உட்கார்ந்து எழுந்து நடந்து…

“ஹேய்!”

ம்ஹூம்! கூப்பிட்டால்கூடத் திரும்ப மாட்டாள். இது ஒரு பயணம் அவளுக்கு. பரட்டைத் தலை, ஒருநாளும் எண்ணெய் கண்டதில்லை. பழுப்பேறிய பற்கள், பற்பசையைக் கண்டதில்லை. அவள் பெயர் யாருக்கும் தெரியாது. எல்லோரும் கூப்பிட்டு பிச்சிணி என்ற பெயரே நிலைத்துவிட்டது.

ரோட்டார பரோட்டாக் கடையில் டபடபவெனக் கரண்டி கல்லோடு தாளம் போட்டுக் கொண்டிருக்க, ஒரு பக்கம் எண்ணெயில் குளித்த சிறு பந்துகளாய் மாவு உருண்டைகள். மாவைத் தேய்த்துக் கொண்டிருந்த செந்தில் தன் வியர்வையோடு தேய்த்துக் கொண்டிருந்தான். மெல்ல வாசலில் போய் உட்கார்ந்தாள் பிச்சிணி.

“என்ன இங்க குடியேறிட்டியா? வவுறு பசிக்குதா?” பரோட்டா மாஸ்டர் கேட்டார்.

மாவை வீச்சில் அடித்துக் கொண்டே வந்தவன், 

“மாஸ்டர்! ஒரு வாரமா இது இங்கதான் வந்து உட்காருது. எப்பவும் ஒரு ஓரமா வந்து நிக்கும்போதே நாலு பரோட்டாவக் கையில கொடுத்துடுவேன். இன்னைக்குத்தான் வாசல்ல வந்து உட்கார்ந்துருக்குது!”

“நாலு பரோட்டாவா? டேய்! ஒரு பரோட்டா குடுடா போதும்! உன் காசா போடற?”

“என் காசுதான் மாஸ்டர்! நான்தான் காசு போட்டு வாங்கிக் கொடுக்கறேன்!”

“அப்ப சரி!” மாஸ்டர் வாயை மூடிக் கொண்டார்.

உள்ளே போய் திரும்பி வந்தவன் கையில் பரோட்டா பொட்டலம். கொடுத்ததும் ஒரு நடை. ஓர் உட்காரல்; மீண்டும் நடை. உடனே உட்காரல். இப்படிப் பத்தடிக்கு ஒரு சம்மணமாய் உட்கார்ந்து சென்றாள் பிச்சிணி.

“யாரு பெத்த பொண்ணோ? இப்படிப் பைத்தியமாத் திரியுது? ஏதாவது பேசினாலும் தேவலை. வாயிலருந்து ஒரு வார்த்த வர மாட்டேங்குதே!” சொல்லிக் கொண்டே மீண்டும் கடைக்குள் சென்றான் செந்தில்.

தெருவாசிகளுக்குப் பிச்சிணி சகஜமாகிப் போனாள். அவளும் அந்தத் தெருவை விட்டு வேறு எங்கும் போவதில்லை. தெருமுனை மண்டபத்தில் பின்பக்கத்தில் இவளுக்கான இருப்பிடத்தை மண்டபக்காரன் கொடுத்து இருந்தான். அந்தத் தெருவே அவளுக்குக் காபந்தாக இருந்தது. இவள் வாசலில் வந்து நின்றால் யாரும் எதுவும் இல்லையென்று சொல்வதில்லை. இதே மண்டபக்காரனை ஒருமுறை தண்ணீர் லாரி இடிக்கப் பார்க்க அங்கே நடந்து கொண்டிருந்த பிச்சிணி சட்டென்று இழுத்து தள்ளினாள். ‘உசுரக் காத்த ஆத்தா’வென அவன் இருக்க இடம் கொடுத்தான். பிச்சிணியும் நடந்து நடந்து இரவில் மண்டபத்துக்குப் பின்னால் தூங்கிவிடுவாள். சுத்தம்தான் மருந்துக்குக்கூட இல்லை. அன்றும் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தாள். சட்டென்று ஓர் இடத்தில் உட்கார்ந்தாள். தலையைப் பரபரவென சொறிந்து கொண்டாள். மண்ணை அள்ளி முகம் பூசிக் கொண்டாள். எழுந்தாள்; ஓடினாள்; திரும்ப உட்கார்ந்தாள்.

“பிச்சிணி! இங்க வாயேன்!” கூப்பிட்ட குரலுக்குப் போய் நின்றாள். 

ஒரு கை தயிர் சாதத்தை எதிர் வீட்டு மாமி அவள் கையில் போட்டதும் மேலும் கீழும் இறைத்துச் சாப்பிட்டபடி நகர்ந்துவிட்டாள். கையில் இருந்த பரோட்டா பொட்டலத்தை ரோட்டோரச் சிறுவனிடம் கொண்டுபோய் கொடுத்தாள்.

“அக்கா! உனக்கு?” என்றான் அச்சிறுவன். அவள் பதில் சொல்லாமல் போகவும் எல்லோரும் கூப்பிடுவதுபோல், “பிச்சிணி…” என்றான்.

அச்சமயம் அங்கு வேகமாகச் சென்ற கார் அவளைக் கண்டதும் க்ரீச்சிட்டு நின்றது. 

“சுவாதியா இது?” மணிமொழி வீறிட்டாள்.

“சை! யாரோ ஒரு பைத்தியம். ஆளும் தலையும் கோலமும். என் தங்கச்சி எப்பேர்ப்பட்ட அழகி. அழுக்குப்படாம வளர்ந்தவ. இவ என்னடான்னா மண்ணாலயே குளிச்ச மாதிரி இருக்கா. இவளப் போயி சுவாதியான்னு கேட்குறியே. ஊருக்கு வந்த இடத்துல கண்ட பைத்தியத்தையும் பார்த்துட்டு…” மணிமொழியின் கணவன் சட்டநாதன் வீறிட்டான்.

சுவாதி... நுனி விரலில் அழுக்குப்படாமல் வளர்ந்தவள். திடீரென்று ஒருநாள் காணாமல் போனாள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. விர்ரென்று விரைந்த காரில் மணிமொழி இன்னும் குழப்பத்தில் அமர்ந்திருந்தாள். 

“அது சுவாதியேதான்!” உரக்கக் கத்தினாள் அவள்.

“ஏன் கத்தற? இப்ப என்ன வண்டியைத் திருப்பவா? அந்தப் பைத்தியத்தக் கூட்டிக்கிட்டு வந்து குடும்பம் நடத்துறியா?” சட்டநாதன் குரல் உயர்த்தினான்.

“இல்லை, சுவாதியா இருந்தா அந்தக் கையெழுத்த…”

ஒருமுறை மனைவியைக் கூர்ந்து பார்த்தவன், சட்டென வண்டியைத் திருப்பி ரிவர்ஸில் சென்றான். ம்ஹூம்! காணவில்லை. இந்தத் தெருவில்தானே பார்த்தோம், அவளை. தன் கறுப்பு வண்ண ஸ்கோடா காரை ஓர் ஓரமாகக் கிடப்பில் போட்டுவிட்டுக் கணவனும் மனைவியுமாகத் தேடத் தொடங்கினர்.

“இந்தத் தெருவில் இருப்பவள் இல்லையோ? எங்கும் பஸ் ஏறிச் சென்றிருப்பாளோ? பைத்தியத்தைப் பஸ்ஸில் ஏற்றுவார்களா?” மணிமொழி புலம்பிக் கொண்டே நடந்தாள்.

“சட்... சும்மாயிரு. சும்மாப் போனவனை உந்தங்கச்சின்னு பார்க்க வைச்சு அதையும் தேட வைச்சு இப்படி நாயா அலைய விடுறியே. ஒவ்வொரு நிமிஷமும் எனக்குக் காசுன்னு உனக்குத் தெரியும்ல. எனக்காக அத்தனை பணக்காரங்களும் காத்துக்கிட்டு இருப்பாங்க. இப்படி ஒரு பைத்தியத்துக்காக என்னைய அலைய வைச்சுட்டயேடி!”

சட்டநாதன் வெகுண்டு கத்தும்போது பரோட்டாக் கடை செந்தில் கைலியைத் தூக்கிக் கட்டியபடி கடையை விட்டு இறங்கி வெளியில் நின்று கொண்டிருந்தான்.

சட்டநாதனைப் பார்த்து, “என்ன சார்? எதையும் தொலச்சுட்டீங்களா? இப்படிப் போறீங்க, அப்படி வரீங்க. என்னா சார் விஷயம்? சாவிகீவி ஏதும் காணாமப் போச்சா? நம்ம பசங்கள விட்டுத் தேடச் சொல்லவா?”

கேட்காமல் ஆஜராகும் செந்திலைப் புருவத்தில் முடிச்சோடு பார்த்தான் சட்டநாதன். செந்திலோ வெள்ளை வேட்டி சட்டையில் கையிலும் கழுத்திலும் கனமான நகைகளோடு இருக்கும் சட்டநாதனைப் பார்த்ததும் பெரும்புள்ளி எனத் தெரியவர ஒரு மரியாதைக்குத் தன்னால் இறங்கிப் பேசினான்.

“ஒண்ணும் இல்லப்பா. நீ போ!”

“ஏங்க? சொன்னா தேடிக் கொடுப்பாருல்ல?”

வார்த்தைகளற்ற முறைப்புதான் அவளுக்குப் பதிலாகக் கிடைத்தது. சிறிது தூரம் நடந்து சென்றும் சுவாதி அகப்படாததால் மீண்டும் காருக்கு வந்து புறப்பட்டார்கள்.

“ம்ச்ச்… கிடைக்கலையே! பார்த்ததும் பிடிச்சிருக்கணும்.” சொன்ன மணிமொழியைப் பார்த்தவன், “நாளைக்கு உன்னைத் திரும்ப அனுப்பறேன். புடிச்சுட்டு வா, அந்தப் பைத்தியத்த!” என்றான்.

பிச்சிணி இது எதுவும் அறியாது மண்டபத்தின் பின்பகுதியில் உறக்கத்தில் இருந்தாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“பிச்சிணி... பிச்சிணி... நான்தான்! இந்தா பரோட்டா. உனக்காக எடுத்துட்டு வந்தேன்.” சர்வ சுதந்திரமாய் தொட்டவனின் கண்ணில் மதுவின் சிவப்பு ஏறிக் கிடந்தது. 

கரப்பு ஊறுவதுபோல் தட்டிவிட்டவள் குடிகாரனென அறிந்து எழுந்து கையை முறுக்கினாள். கடித்தும்விட்டாள். எதையோ நினைத்து வந்தவன், ‘குய்யோ முறையோ’ எனக் கத்தி ஓடிப் போனான். அதன்பின் தூங்கவே இல்லை அவள். நினைவுகள் சுழன்றன, ஒரு தெளிவில்லாமல்.

“சுவா… பிடிச்ச கையை விட்டுடாதேடி. திருவிழா கூட்டமோ தேர்க் கூட்டமோன்னு இருக்கு. நகராதேடி…”

பெரிய குங்குமம் வைத்த ஓர் அம்மா முகம் கண்முன் நின்றது. சுவரோரம் குறுகி உட்கார்ந்திருந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“சுவா” மெலிதாகச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

“ம்ச்ச்!” எழுந்தவளின் கால்கள் பழையபடி தெருவில் நடந்தன. அமர்ந்து பின் நடந்து, தன் வேலையை விடாது செய்து கொண்டிருந்தன. 

எதற்காக இக்கால்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றன? அதுவும் ஒரு பொதுவெளியில். ஊரடங்கும் பின் பொழுதில் சிறிது உறக்கம் கொள்ளும். அவள் தனக்குக் கிடைக்கும் உணவை உண்டுவிட்டு இப்படி நடப்பதே வேலையாகி வைத்திருந்தாள். இதென்ன கடனோ?

றுநாளும் அதே கறுப்பு நிற ஸ்கோடா காரைப் பார்த்த செந்தில், ‘என்னடா இது? ஏதோ நடக்குது போலவே! தொடர்ந்து ரெண்டாவது நாளா வந்து நிக்கறாங்க. எதையும் வாங்கறாப்ல தெரியல. யார் வீட்டுக்கும் போன மாதிரி தெரியல. பேசாமக் கொஞ்சம் கவனிச்சுப் பார்ப்போம்.’ நினைத்தவன் கண்கொத்திப் பாம்பாய்க் கவனிக்கலானான். வழக்கம்போல் வரும் பிச்சிணியையும் இன்று காணோம்.

“என்னய்யா செந்திலு, உன் பார்ட்டி வல்லையாக்கும்?” பரோட்டா மாஸ்டர் பல்லிளித்தான்.

“யாரக் கேட்கறீங்க?” பதில் அவனுக்கு என்றாலும் கண் நின்று கொண்டிருந்த காரின் மேலே இருந்தது. இன்னும் அதிலிருந்து யாரும் இறங்கவில்லை.

“அதான் உன் தோஸ்து, அந்தக் கிறுக்கு.” சொன்னவனின் குரலில் தொனித்த கேலியைக் கண்டு திரும்பி அவரைப் பார்த்தான் செந்தில்.

மாஸ்டர் கையில் பெரிய ப்ளாஸ்டர் ஒட்டி இருந்தார். தவிர ஏதோ வயித்து வலி வந்தவர்போல் சோர்ந்து கிடந்தார். அப்படியும் அந்தக் கேலி போகவில்லை.

“என்ன மாஸ்டர், கைல என்ன ப்ளாஸ்திரி? நேத்திக்கு தண்ணி ஓவரா? எங்கயும் தலையக் கொடுத்திட்டீங்களா?”

எல்லாம் அறிந்தவனைப் போல் கேட்கும் செந்திலைப் பார்த்ததும் உடம்பு கலகலத்தது மாஸ்டருக்கு.

“அவ சொன்னாளா?”

“யாரு?”

“இல்ல ஒண்ணுல்ல. எங்க வீட்டம்மா சொல்லுச்சான்னு கேட்டேன்!”

செந்தில் புரிந்து கொண்டான். ‘ஏதோ நடந்திருக்கு. வந்ததும் இவன் பிச்சிணியைக் கேட்பதற்கும், அது சொல்லுச்சா என்று கேட்பதற்கும், கையில் இருக்கும் ப்ளாஸ்திரிக்கும் சேர்த்து கணக்கு போட்டான். வாலாட்டிருப்பானா இருக்கும். வகையா செஞ்சு விட்டுருச்சு பிச்சிணி.’ யோசித்தவாறே செந்தில் அவரை நம்பாத பார்வை பார்த்துக் கொண்டிருக்கும்போது படியேறி வந்தாள் மணிமொழி. இன்று சட்டநாதன் அவளுடன் வந்திருக்கவில்லை.

“வாங்கம்மா! பரோட்டா சூடா இருக்கு. பார்சலா? இங்க சாப்பிடிறீங்களா?” செந்தில் வேலையாளாய் மாறி உபசரித்தான்.

“இல்ல, வேண்டாம். நான் இங்க ஒருத்தங்களப் பார்க்க வந்தேன்.”

“யாருங்கம்மா? இங்க நானும் மாஸ்டரும்தான். பக்கத்துல குடித்தனக்காரவுங்கதான்.”

“இல்ல… ஒரு பைத்தியம்.”

“அப்படி யாரும் இங்க இல்லம்மா. எல்லோரும் நல்லா இருக்கறவங்கதான்.”

“உங்க கடையில இல்லப்பா. இந்தத் தெருவுல நேத்துப் பார்த்தேன்.”

“அதாம்மா? அது இங்கதான் சுத்திட்டு இருக்கும்!” மாஸ்டர் கடி வாங்கிய வெறியில் காட்டிக் கொடுத்தார்.

“உஷ்... பைத்தியம்ன்னு யாரைச் சொல்றீங்க மாஸ்டர். மனுஷங்கள்ல பாதிப்பேர் பணப்பைத்தியம். பாதிப்பேர் பொம்பளப் பைத்தியம். ஏன் நீங்ககூட…”

ஆரம்பித்த செந்திலின் நோக்கம் தன்னைத் தாக்குவதே என்று உணர்ந்த மாஸ்டர் ஜகா வாங்கினார். 

“அதெல்லாம் இல்ல செந்திலு. நான் வேலையைப் பார்க்குறேன். இந்தாங்க, இந்தப் பக்கம் அப்படி யாரும் இல்ல. போய்ட்டு வாங்க!”

“இருக்குன்னு கொஞ்சம் முன்னே சொன்னீங்க?”

“அதான் தம்பி எல்லா வகைப் பைத்தியத்தையும் எடுத்து இயம்பிட்டாப்லயே. போங்கம்மா அங்குட்டு!”

தன் தப்பை மறைக்க கோபத்தை ஆடையாக அணிந்து கொண்டார் மாஸ்டர். மணிமொழி செய்வதறியாது நகர்ந்தாள். சுவாதியைத் திருவிழாவில் தொலைத்தார்கள். ஆம். தொலைத்தார்கள். ஆத்தூர் தேர்த் திருவிழா. எள் போட்டால்கூட இடமிருக்காத ஜனத்திரள். போகணும் என்றுதான் போனார்கள். சட்டநாதன் கண்காட்ட அந்தப் பணிப்பெண்ணும் சுவாதியும் தனியே பிரிந்தனர். அந்தப் பணிப்பெண் நெற்றியில் பெரிய குங்குமம் வைத்திருப்பாள். அதன் பின் அவளையும் காணவில்லை. சுவாதி விஷயம் மர்மமாகவே இருந்தது, மணிமொழிக்கு.

சட்டநாதனை மணிமொழி கல்யாணம் பண்ணிக்கொண்டு வரும்போதே சுவாதி சுவாதீனம் இல்லாதவள் என்று சொல்லப்பட்டவள்தான். சட்டநாதனின் பின் பன்னிரண்டு வருஷம் கழிச்சு அகஸ்மாத்தாகப் பிறந்தவள்தான் சுவாதி. அதுவரை மொத்த சொத்துக்கும்தான்தான் ராஜா என மார்தட்டிக் கொண்டிருந்தவன் முன் சுவாதி வந்தது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. கூடவே அவன் அப்பா வேறு, “எங்க சுவாதிக்குத்தான் எல்லாம்” எனச் சொல்லிக் கொண்டே இருப்பது எரிச்சல் ஊட்டியது. விளைவு, அவனின் புத்தி குறுக்காய் வளர்ந்தது. ஊட்டி சென்ற பெற்றோரின் கார் தற்செயலாய் விபத்துக்குள்ளாக அதில் இருந்த சுவாதி மட்டும் பிழைத்துக் கொண்டாள். விதியே என அவளைப் பிழைக்க வைத்த சட்டநாதன், அவள் படிப்பை நிறுத்தி ரத்தத்தில் மெல்ல கலந்து புத்தியை மழுங்கடிக்கும் மருந்தைக் கொடுக்கலானான். பைத்தியத்துக்குக் கல்யாணமும் நடக்காது. பணமும் தன்னிடமே இருக்கும் என்ற பக்கா கிரிமினல் மூளை அவனுக்கு. சுவாதியும் அம்மருந்தின் வேகத்தால் நின்னால் நின்று கொண்டே இருப்பாள். சாப்பிடக் கொடுத்தால் சாப்பிடுவாள். இல்லையெனில் கேட்க மாட்டாள்.

“இப்படி ஒரு பொண்ணு உனக்கு சுமையாச்சுதேடி!” என்று கல்யாணம் பண்ணும்போதே மணிமொழியைக் கேட்கத்தான் செய்தார்கள்.

“ம்ச்ச்... நான் கண்டுக்கிட்டாதானே!” என நகர்ந்தவள்தான் இந்த மணிமொழி. இன்று தேடி ஓடி வந்திருக்கிறாள். எல்லாம் பணம் படுத்தும் பாடு! 

“ம்ம்... விட்டுப் பிடிக்கலாம். தெருத் தெருவாத் தேட எனக்கு இப்ப தெம்பில்லை” சொல்லிக் கொண்ட மணிமொழி தன் கணவன் இவ்விஷயம் பரம ரகசியம் என்றும், தனக்கு ஒரு தங்கை இருந்த விஷயம் இப்போதைய தொழில் வட்டத்தில் யாருக்கும் தெரியாதது என்றும் கூறியிருந்தான். இல்லையெனில் அவனுக்கிருக்கும் ஆட்படைக்கு...

அங்கோ பிச்சிணி இடம் மாறி இருந்தாள். செந்தில்தான் மாற்றியிருந்தான். என்னவோ அவனை அந்தக் கறுப்பு ஸ்கோடா கார் பயமுறுத்தியது. போயும் போயும் மனநிலை சரியில்லாத பெண்ணை இப்படி விரட்டி விரட்டித் தேடுவார்களா? ஏன்? சொந்தமென்றால் ஏன் இத்தனை நாள்கூட வைத்துக் கொள்ளாமல்? பல சிந்தனைகள் ஓட, விளைவு தன் அத்தையை வரவழைத்து பிச்சிணியை வலுக்கட்டாயமாக அவள் வீடு இருக்கும் ஆத்தூருக்குக் கூட்டிச் சென்றான். கோயிலைச் சுற்றித் தேரைப் பார்க்கும்போதே கண்ணகன்றது பிச்சிணிக்கு.

“இங்க, இங்கதான்!” முதல்முறையாக வாய் திறந்தாள்.

அத்தை உளவியல் அறிந்தவள். மெல்ல கண்காட்டி செந்திலை ஊருக்குப் போகச் சொன்னாள். நகர்ந்ததும் கேட்டாள்.

“இங்க என்னம்மா நடந்துது? உம் பேரு என்ன?”

“பிச்சிணி!” என்றாள்.

“அது மத்தவங்களுக்கு. உனக்குன்னு ஒரு பேரு இருக்குமே…”

“சுவா...”

“சுவான்னா… சுவாதியா?” தலையாட்டினாள்.

“இங்க இந்த ஊருல உனக்கு என்ன நடந்தது?” கையைப் பிடித்துக் கேட்டவளின் கையைப் படாரென்று உதறினாள். 

“என்னம்மா?”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

கையைக் குறிப்பாகப் பார்த்தவள், “இதான் நடந்தது!”

“ஓ! உன்னை உதறிவிட்டாங்களா? கூட்டத்திலா? காணாமப் போயிட்டியா? அதான் தேடி வந்தாங்களோ?” கேட்டதும் அவளது விழிகள் மிரண்டன. பயத்தில் உடல் சுவரோரம் ஒட்டிக் கொண்டது. 

“இல்ல, அனுப்ப மாட்டேன். பயப்படாதே! நீ முதலில் இந்த ட்ரெஸ்லாம் மாத்திட்டு நல்லதாப் போட்டுக்கணும். தலைமுடி ஷார்ட்டா வெட்டி ஸ்டைலா வைச்சுக்கிடுவோமா? நானே பண்ணிவிடறேன். வா!”

குழந்தையாய் அடிபணிந்தாள் பிச்சிணி. செந்தில் மீண்டும் அத்தையைப் பார்க்க ஊருக்கு வந்தபொழுது அங்கு பார்த்தது பிச்சிணியை இல்லை. சுவாதியைத்தான். அவ்வளவு மாற்றம் அவளிடத்தில்.

“வாங்க செந்தில்!” அழைப்பு வேறு.

“அட... பிச்சிணியா இது?”

“இல்ல செந்தில், நான் சுவாதி! அந்தப் பிச்சிணிய எங்கம்மா காணாமச் செஞ்சுட்டாங்க.”

“என்னடா யாரு அந்தப் புது அம்மான்னு பார்க்குறியா? நான்தான். நானேதான். கல்யாணமே பண்ணிக்காம தனி மரமாயிட்டேன். போற காலத்துல பொண்ணு கிடைச்சுட்டா. இனி இந்தப் பொண்ணுக்கொரு மாப்பிள்ளையும் கிடைச்சுட்டா!”

செந்திலின் பார்வை சுவாதி மேலேயே இருந்தது.

“எப்படி இவ்வளவு சீக்கிரம் குணமானாங்க அத்தை? எதுவும் மந்திரம் கிந்திரம் கத்து வைச்சிருக்கீங்களா?”

“மந்திரம் இல்லடா செந்தில். மனம்! அவளுக்கான பாதுகாப்பைப் பூரணமாகத் தருகிற மனம். உட்காரு! விஷயத்தச் சொல்றேன். சுவாதி! நீ போய் பூங்காவனத்த கூட்டிட்டு வா!”

அத்தை கலகலவென்று சிரித்துவிட்டுச் சொன்னார்.

“சுவாதி யார் தெரியுமோ? என் ஒண்ணு விட்ட தங்கை பூங்காவனம் வளர்த்த மகள். உனக்கு ஞாபகமிருக்கா? ஒரு பணக்காரன் வீட்டில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாளே, பூங்காவனம். அப்ப அந்த வீட்டுப் பெண்ணைப் பார்த்துக்கிடற வேலைதான் அவளுக்கு. அந்தப் பொண்ணு வீட்டுக்குள்ளயே இருக்கும். உலகம் தெரியாது. தெரியவிடலை அவங்கண்ணன். அடைச்சு அடைச்சு அவளைப் பைத்தியம்ன்னு உலகத்தை நம்ப வைச்சான். ஏன்னா சொத்து எல்லாம் இவ பேருல எழுதி வைச்சு இவங்கப்பாம்மா போயிட்டாங்க. அதுல வந்துது வினை. காலேஜ்லாம் படிக்க வைக்கலை. எட்டாவதுலயே பைத்தியம் பிடிச்சுடுச்சுன்னு சர்டிபிகேட் கொடுத்து ஸ்கூலை நிறுத்திட்டான். வலுக்கட்டாயமா கையில் மையை வைச்சு பத்திரத்துல எழுதி வாங்கிட்டு கொன்னா போலீஸ் கேஸ் ஆகிடும்ன்னு பூங்காவனத்த மிரட்டி சுவாதியத் தொலச்சுட்டு வான்னு மிரட்டினான். அவங்க மிரட்டலுக்காக மனசே இல்லாமல் அவளை கை நழுவ விட்டு, ஒன்று மட்டும் காதோடு சொல்லிவிட்டு வந்தாள். நீ பைத்தியம். நீ பைத்தியம். நீ பைத்தியமேதான்! அப்படின்னு!” சுவாதி தொடர்ந்தாள்.

“அதைப் புடிச்சுக்கிட்டேன் நான். எங்கம்மா சேலத்துல இருக்காங்கன்னு பொய் சொல்லி திருவிழாக்கு வந்த ஒருவர் மூலமா காரில் வந்த நான் அங்கு இறங்கியதுமே பைத்தியமாய் நடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஏன்னா என்னைப் பிடிச்சு வைச்சிருந்த மருந்தின் தாக்கம் என்னை விட்டுப் போயிடுச்சு இல்ல. யாரோ உணவு கொடுத்தாங்க. யாரோ ட்ரெஸ் கொடுத்தாங்க. யாரோ தங்க இடம் கொடுத்தாங்க. ஒரு இடத்தில் இருக்காமல் நடந்து உட்கார்ந்து மண்பூசி எல்லாம் பைத்தியம்ன்னு என்னைப் பார்க்கறவங்க கடந்து போகணும்ன்னுதான். சும்மா படுத்தா அந்த மாஸ்டர் மாதிரி போக்கிரிங்க வராங்க. அதான் அந்த நடை எனக்குப் பாதுகாப்பு!”

பூங்காவனம் கண்கலங்கியபடி அமர்ந்திருந்தார்.

“திரும்ப வந்து இங்க ஆத்தூரிலயே இவளைத் தேடினேன் தம்பி. கிடைக்கலையே என் தங்கம். நல்லா இருந்தவளைத் தினம் ஏதோ மருந்தைக் கொடுத்து அடைச்சு வைப்பாங்க. சோத்துக்கும் குளிக்க வைக்கவும்தான் நான் போவேன். இவளைத் தொலைக்கச் சொன்னாங்கன்னா நானும் தொலைச்சுட்டேனேன்னு குற்ற உணர்ச்சி ஆயிடுச்சு எனக்கு. தவிர அவங்க அண்ணன் அன்னிக்கு ஒருநாள் வீட்டுல பேசினதையும் கேட்டுட்டேன். ஆத்தூர்ல தொலைக்கற மாதிரி தொலைக்கறேன். நீங்க தீர்க்கற மாதிரி தீருங்கடான்னு! அதுக்குள்ள என் தங்கம் எந்த சாமி புண்ணியமோ தப்பிச்சு காரேறிப் போயிட்டா. மானத்துக்குப் பயந்து அவங்கண்ணன் மேற்கொண்டு தோண்டி இருக்க மாட்டான்னு நினைக்கறேன். எனக்கும் அவனைப் பார்த்தால் பயமோ பயம் தம்பி. அதான் நானும் இங்கேயே இருந்துட்டேன், காணாமல் போனவளாய்!”

செந்திலுக்குக் கண் கலங்கிற்று. 

“உனக்குத் தெரியுமா சுவாதி, உங்கண்ணன் உன்னைத் தேடியது?”

“ம்ம்... தெரியும். அதான் ஓடி மறைஞ்சேன். அப்புறமும் அண்ணி வந்தாங்க. நான் உங்க கடைப்பக்கம் வரவே இல்லை அவங்களைப் பாத்துட்டு.”

“ஏன்?”

“ஏன்னா அவங்க பணப் பைத்தியம். சொத்தை அனுபவிக்கலாம். விக்கணும்ன்னா என் கையெழுத்து வேணும். அதான் தொலைச்சுட்டுத் தேடறாங்க!”

“போட்டுக் கொடுத்துடேன். ஒண்ணுமே வேணாம்ன்னு!”

“எல்லாம் பத்திரத்துல கையெழுத்து போட்டு லாயர் மூலமா அனுப்பியாச்சுடா செந்தில். இனி இவளுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமில்லை. இவள் என் மகள். என் சொத்தெல்லாம் இவளுக்குத்தான்.” அணைத்துக் கொண்ட அத்தையை பிரமித்துப் பார்த்தான் செந்தில்.

“நானும் என் பங்குக்கு ஒண்ணு செஞ்சுட்டு வந்துருக்கேன் அத்தை.”

“என்னடா?”

“அன்னிக்கு சுவாதிகிட்ட வாலாட்டின மாஸ்டரைக் கொத்து பரோட்டா போட்டுட்டு வேலைய விட்டு வந்துட்டேன்!”

“டேய், விடுறா. அந்த பரோட்டா பிழைச்சுப் போகட்டும்!” அத்தை சிரித்தாள்.

“அது சரி, இனி இவள் பைத்தியமில்லையா பின்ன?”

“டேய் உதைப்பேன். என் பெண்ணைச் சொன்னியானா…”

சுவாதி காஃபி எடுத்து வர உள்ளே செல்ல அத்தை கேட்டாள். “இத்தனை பாதுகாப்பைக் கொடுத்த நீயே அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளுக்குப் பூரணப் பாதுகாப்புடா செந்தில். என்ன அவளுக்குக் குழந்தை பிறக்கத்தான் வழியில்லை. ஏன்னா பைத்தியம்ன்னு காரணம் காட்டி வீட்டு விலக்குகூடத் தெரியலன்னு கர்ப்பப்பையையே அறுத்து விட்டுட்டான் அவங்க அண்ணன். படுபாவி! அதான் அவனுக்கும் ஒரு பிள்ளை இல்லாமப் போச்சு!”

விக்கித்தான் செந்தில். அவன் கண்ணில் கடலளவு பெருகியது கண்ணீர். தன் கைகளைப் பிடித்துக் கொண்ட அத்தையிடம் சொன்னான், “நீங்க சொல்லி நான் பண்ணினதா தெரிய வேணாம் அத்தை. சுவாதி வந்ததும் நானே கேட்கறேன். எனக்குச் சம்மதம்.”

காஃபியோடு சுவாதி வருவதைப் பார்த்து, “அத்தை! அத்தை! இப்போ சுவாதிக்குப் பதில் நான் பைத்தியம் ஆகிட்டேனே! காதல் பைத்தியம்! பேசாம உங்க பொண்ணை எனக்கே கட்டிக் கொடுத்துடுங்க. வேளாவேளைக்கு பரோட்டா போட்டுத் தரேன். என்ன சுவாதி? ஓ.கே.யா?”

அத்தை சிரிக்க… சுவாதி நாண… பூங்காவனத்தின் கைகள் இருவரையும் இணைத்து வைத்தது.

பிச்சிணி, இனி பிச்சிப் பூவாவாள்!