அத்தியாயம் 1

1.08 லட்சம் படித்தவர்கள்
20 கருத்துகள்

முதல் அறிக்கை தாக்கல்

ரவு நீண்டுக்கொண்டிருக்கும் தருணம். எழ மறுக்கும் சூரியனைத் தட்டி எழுப்பிக்கொண்டிருந்த அதிகாலை 5.30 மணி. காகங்கள் கூச்சலிட போர்வைக்குள் தூங்கும் குழந்தையைப் போல மேகங்களால் தன்னை மறைத்துக்கொண்டான் சூரியன். கார்மேகங்கள் மண்ணை மழைகளால் முத்தமிட, இடியோசை மின்னல் வெளிச்சத்தில் சென்னை. ஆம், நகரவாழ்வில் என்றாவது நிசப்தங்கள் எட்டிப் பார்ப்பதுண்டு. அது இன்று சென்னை அடையார் மகளிர் காவல் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளை வந்தடைந்தது.

“மேடம் டீ கொண்டு வந்துருக்கேன்” அழுக்குச் சட்டை கிழிந்த பேண்ட் பரட்டை தலையுடன் சற்று தூங்கி வழிந்த நிலையில் டீ கடை சிறுவன். 

“ஹ்ம்ம், அப்பிடி ஓரமா வெச்சிட்டு போ, உள்ள போய் எல்லாருக்கும் குடுத்துட்டு சத்தமில்லாம சீக்கிரம் கிளம்பு” அதட்டினார் பெண் கான்ஸ்டெபிள். டீ கோப்பைகளுடன் அடுத்த மேஜைக்கு சென்றான். அங்கே ஒரு பெண் காவலர் எவருக்கோ அவசர அவசரமாக போன் செய்துகொண்டிருந்தார்.

“ஹலோ, யாரு கான்ஸ்டெபிள் கனகாவா, நான் ஸ்டேஷன்லேந்து ஏட்டம்மா பேசுறேன். ஏதோ முக்கியமான கேஸ்ஸாம். டே ஷிப்ட் ஆளுங்கள எல்லாம் இன்ஸ்பெக்டர் மேடம் சீக்கிரம் வரச் சொன்னாங்க. ஹான், நைட் ஷிப்ட் ஆளுங்களக்கூட நேரம் முடிஞ்சதும் வீட்டுக்குப் போகவேணாம்னு சொல்லிட்டாங்க. என்ன? நேரமா, ஒரு 7 மணிக்குள்ள வந்துடு. சரி எல்லாருக்கும் போன் பண்ணனும். வெச்சிடறேன்.”

அனைவரின் முகத்திலும் ஏதோ ஒரு பதற்றம், வேலையில் சற்று தடுமாற்றம், சூழ்நிலையில் ஏனோ ஒரு பரபரப்பு. நேற்று இரவு சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பிய செய்தியே அதற்குக் காரணம். அனைத்தையும் கவனித்தவாறே டீ கடை சிறுவன் வெளியே சென்றான்.

“பீப், பீப்” வாக்கி டாக்கியின் அழைப்பு. “ஹலோ அடையார் லேடிஸ் போலீஸ் ஸ்டேஷன், ஓவர்” “ஹலோ நான் டிராபிக் கான்ஸ்டெபிள் கணேஷ் பேசுறேன். இன்ஸ்பெக்டர் திருவான்மியூர் சிக்னல்ல தாண்டிட்டாங்க. இன்னும் 5 நிமிஷத்துல ஸ்டேஷன் வந்துடுவாங்க. ஓவர்.”

பரபரப்பு சற்று அதிகரித்தது. மேஜை நாற்காலிகள் ஒழுங்காக அவைதம் இடத்தில் வைக்கப்பட்டன. அதன்மேல் கேஸ் பைல்கள் சீராக அடுக்கி வைக்கப்பட்டன. காவலர்கள் தம்மை, தம் சீருடைகளை சரிபடுத்திக் கொண்டனர்.

“என்ன அங்க ஒரே சத்தமா இருக்கு. இன்ஸ்பெக்டர் வர நேரம் ஆகிடுச்சு” என்று செய்தியாளர்களை அலர்ட் செய்தார் பெண் கான்ஸ்டெபிள். ஆம், அவர்கள் நள்ளிரவு 2 மணி முதலேயே சர்ச்சைக்குரிய செய்தியைப் பற்றி தெரிந்துகொள்ள காவல் நிலையத்தில் காத்திருந்தனர். மழையின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் பார்க்கிங் சைடில் ஓர் ஷெட் அடியில் அமர்த்தப்பட்டிருந்தனர். லைட்ஸ் ஆன், கேமரா ரோலிங், மைக் சவுண்ட் செக் என இன்ஸ்பெக்டரை இன்டெர்வியு செய்ய தேவையான கருவிகளைத் தயார்படுத்திக் கொண்டனர். தொகுப்பாளர் கேட்க வேண்டிய கேள்விகளைக் குறித்துக்கொண்டார். பெண் தொகுப்பாளினி அவர்தம் மேக்கப்பை சரிபாத்துக்கொண்டார்.

இடியோசையைத் தாண்டிய சைரன் சத்தத்துடன் சீறிப்பாய்ந்த வேகத்தில் காவல் நிலையத்தினுல் நுழைந்தது இன்ஸ்பெக்டரின் ஜீப். தேங்கியிருந்த மழைநீரை விசிறி அடித்தவாறு பார்க்கிங் முன்வந்து நின்றது.

“மேடம், மேடம், மேடம்” ஸ்டேஷனுக்குள் செல்ல முயன்ற இன்ஸ்பெக்டரை நகரவிடாமல் சூழ்ந்தனர் செய்தியாளர்கள்.

“விஷயம் பேஸ்புக், ட்விட்டர்ல எல்லாம் வைரல் ஆகிடுச்சு மேடம், அதனாலதான் வந்துருக்காங்க.” என்று கான்ஸ்டெபிள் சொல்ல, இன்ஸ்பெக்டர் தலையசைவில் சம்மதித்தார். “அவசரப்படுத்தாதீங்க, ஒவ்வொருத்தரா கேளுங்க” என நெரிசலைக் கட்டுப்படுத்த முயன்றார் கான்ஸ்டெபிள்.

“மேடம் தொழிலதிபர் சந்திரசேகரோட பையன் சூர்யா கடத்தலுக்குப் பின்னாடி அவர் பிஸ்னஸ் எதிரிங்க காரணமா இருப்பாங்கனு நினைக்கிறீங்களா?”

“மேடம் சூர்யா வேலைபாக்குற ஐ.டி. கம்பெனில போன வாரம் நடந்த ரெய்டுக்கும் இந்தக் கடத்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா, இது ஒரு ஐ.டி. ஸ்கேம்மா இருக்குமா?”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“மேடம் போன மாசம் கூட ஓ.எம்.ஆர். சிறுசேரில ஒரு ஐ.டி. பெண் கடத்தப்பட்ட வழக்கு இன்னும் நிலுவைல இருக்கு, அந்த கும்பல்தான் இதையும் செஞ்சியிருப்பாங்கனு சந்தேகப்படுறீங்களா?”

“மேடம் அந்த கம்பெனி நிர்வாகத்துக்கும் சூர்யாவுக்கும் இருந்த முன் பிரச்சனை காரணமா இந்த கடத்தல்ல அந்த ஐ.டி. கம்பெனில முக்கிய பொறுப்புல இருக்குறவங்க ஈடுபட்டிருப்பாங்கனு பேசிக்கறாங்களே, அது பத்தி உங்க கருத்து.”

பதில்சொல்ல விடாமல் கேள்விமேல் கேள்விகளைக் கேட்டனர்.

“ப்ளீஸ் ஸ்டாப், புகார் குடுத்திருக்காங்க, விசாரணை நடந்துகிட்டு இருக்கு, ஏதாவது தகவல் தெரிஞ்சா உங்களுக்கு நிச்சயம் தெரியப்படுத்துறோம்.” பொறுமையாக பதிலளித்தார் இன்ஸ்பெக்டர் நிஷா.

“மேடம் இது ஏதோ ஒரு காதல் விவகாரம்னும், அத ஏத்துக்க சந்திரசேகர் மறுத்ததால அந்த பெண்னே சூர்யாவை கடத்திட்டதாகவும் நட்பு வட்டாரங்கள் லேந்து ஓரு வதந்தி வந்துருக்கு, உண்மையா?” ஓர் பத்திரிகை எழுத்தாளரின் கேட்டார்.

“மேடம் இந்த கடத்தலே அந்த பெண்ண தவிர்க்க சந்திரசேகர் போட்ட நாடகம்தான்னும் அதுக்கு உங்க போலீஸும் உடந்தைனும் பேசிக்கறாங்களே உண்மையா மேடம்?” என ஒரு தொலைக்காட்சி நிருபரின் கேட்க,

“ஷடப், ஷட் அப்” கோவத்தின் உச்சிக்கே சென்றார் இன்ஸ்பெக்டர் நிஷா.

“வதந்தினு சொல்லறீங்கல்ல, பிறகு ஏன் அத பரப்புரீங்க. உங்க டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக அத இதனு சொல்லி மக்கள் மத்தியில குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க. காவல்துறையை நண்பர்களா பாக்க வேண்டிய மக்கள்கிட்ட எங்களை எதிரிகளா சித்தரிக்காதீங்க.”

“மேடம் கேள்வி கேக்குறது எங்க உரிமை, அதுக்கு பதில் சொல்ல வேண்டியது உங்க கடமை” நிருபரின் பதிலுக்கு சற்று ஸ்தம்பித்து நின்றார் நிஷா.

“கடமை ஹ்ம்ம்… கடத்தப்பட்டவர கண்டு பிடிக்க வேண்டியதும் எங்க கடமைதான். கொஞ்சம் வழிவிடறீங்களா நாங்க எங்க கடமையை செய்ய”

“மேடம் மேடம் மேடம்” அலைகடலென திரண்டு வந்த கேள்விகளை கடந்து இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டெபிளும் ஸ்டேஷனுக்குள் வந்தார்கள்.

ரெயின் கோட், தொப்பி போன்றவைகளை களைந்து தனது இருக்கையில் எதுவும் பேசாமல் அமர்ந்தார் நிஷா. சற்று அமைதி, கண்களை மூடியபடி எதோ ஓர் யோசனை. அந்த நிருபர் சொன்ன வார்த்தைகள் அசரிரிபோல் காதுகளில் ஒலித்தது. “இதுக்கு உங்க போலீஸ்ஸும் உடந்தையா” என்பதுதான் அது.

“மேடம் அந்த பொண்ணு இன்னும் நம்ம கஸ்டடில தான் இருக்கா, எப். ஐ. ஆர் கூட போடல” அமைதியை உடைத்தார் கான்ஸ்டெபிள். இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டெபிளும் அந்த பெண்னை அடைத்து வைத்திருக்கும் இடத்தை நோக்கி விரைந்தனர். காவல் நிலையத்தில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த அந்த ரகசிய அறை.

“ஆ… அம்மா…” என்ற அலறல் சத்தம். “ம்ம் சொல்லுடி சொல்லு, சூர்யாவ எங்க வெச்சிருக்க, அவன என்ன பண்ன, பதில் சொல்லுடி” என கேட்டபடி “பளார் பளார்” என அரைந்தனர். அந்த பெண்ணின் கன்னங்களுடன், கண்களும் சிவந்தன. மூன்று பெண்காவலர்கள் அடித்து களைத்த அசதியில் இருந்தனர். அந்த அமைதியான அறையில் பூட்ஸ் சத்தம் எதிரொலிக்க நிஷா வந்தார்.

“குட் மார்னிங் மேடம்” அனைவரும் சல்யூட் செய்தனர்.

“ஹ்ம்ம் ஏதாச்சும் சொன்னாலா?”

“இல்ல மேடம், அடிச்சு துவைச்சு பாத்துட்டோம், வாய திறக்க மாட்டேங்கிறா” அலுப்புடன் கூறினர்.

தர தரவென நாற்காலியை இழுத்து நிஷா அவள் எதிரில் அமர்ந்தார். அவளை உற்று நோக்கி, களைப்புடனும் காயங்களுடனும் இருக்கும் அவள் முகத்தை தூக்கி ஏறிட்டுப்பாத்தார். கண்ஜாடையில் கான்ஸ்டெபிளிடம் தண்ணீர் குடுக்கச் சொன்னார். தலைவிரி கோலமாய், கசங்கிய மலராய், தலைகவிழ்ந்த அள்ளியாய் இருந்த அவளை பாத்து “இந்தா குடி” என்றார். அவள் உடையும் நாகரீகமும் அவள் ஒரு படித்த பெண் என்றே தோன்றியது. தண்ணீர் குடித்து தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் அந்த பெண்.

“சொல்லு, உனக்கும் சூர்யாவுக்கும் என்ன சம்பந்தம், அவன் எங்க, அவனை என்ன பண்ண.” நிதானத்துடன் கேட்டார் நிஷா.

அசைவு ஏதுமில்லை அவளிடம். “யு டேம் இட்” நிஷா கோபத்தில் ஆக்ரோஷமாய் அவள் நாற்காலியை எட்டி உதைக்க, “அம்மா…” என்று ஓர் அலறலுடன் சுருண்டு விழுந்தாள் அந்த பெண்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“இங்க போலீஸெல்லாம் என்ன வேலயில்லாம இருக்காங்கனு நினைச்சியா, ஹான்? இதோபார் கடைசியா நீதான் சூர்யாவோட போன்ல பேசியிருக்க. அவன் செல்போன் சிக்னல் கடைசியா உன் ஏரியால தான் கட் ஆகியிருக்கு. கடத்தப்பட்ட அன்னைக்கு நீ அவனும் சேர்ந்து டான்ஸ் ஷோ பண்ணியிருகீங்க. அதுக்கு சாட்சி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோ. இதெல்லாம் வெச்சி கேஸ்ஸ உனக்கு எதிரா திசைதிருப்பி உன்ன தூக்கி உள்ள வெக்க முடியும். எதோ பொண்ணாச்சே பாவம்னு பாத்தா.”

அவளின் அமைதி மாறவில்லை. “இப்படித்தான் மேடம், காலைலேந்து வாயே திறக்கமாட்டேங்கிறா. நாங்களும் பலவிதமா விசாரிச்சு பாத்துட்டோம். சூர்யாவோட அப்பா எவ்வளவு பெரிய தொழிலதிபர். அவர்கிட்டயே திமிரா பேசியிருக்கா மேடம்” என்று இன்ஸ்பெக்டரை உசுப்பேத்தி விட்டார் கான்ஸ்டெபிள்.

“இதோ பார், வெளிய மீடியா ஆளுங்க எல்லாம் வந்திருக்காங்க. பிரச்சனை வேறமாதிரி போய்கிட்டிருக்கு. நீ ஒழுங்கா கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி எங்களுக்கு ஒத்துழைப்பு குடுத்தன்னா இந்த கேஸ்ல உன்பேர் கூட வராத மாதிரி நான் பாத்துக்கறேன். என்ன சொல்ற?”

தலைகுனிந்த நிலையில் அமைதியாகவே இருந்தாள் அந்த பெண்.

“இது வேலைக்கு ஆகாது. இனி இந்த கேஸ்ஸ சட்டப்படிதான் கொண்டுபோயாகணும். அந்த எப். ஐ. ஆர். எடுத்துட்டு வா” என கான்ஸ்டெபிளிடம் சொடுக்கு போட்டார் நிஷா.

கலங்கிய அந்த பெண்ணின் மனதில் ஆயிரம் கேள்விகள். “இங்க என்ன சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கு ஒன்னும் புரியல. என் மனசுக்கு எதோ தப்பா படுது. என்ன வெச்சி எதோ சதி செய்யிறாங்க.” அந்த பெண்ணின் நினைவு குதிரைகள் வேகமாய் ஓடத்தொடங்கின.

“நான் சூர்யாவோட அப்பாகிட்ட கோவபட்டப்போ அவர்கிட்ட இருந்த அமைதி, சூர்யா பேச்சுல இருந்த திடீர் மனமாற்றம், சூர்யாவே என்ன தேடி என் ஹாஸ்டலுக்கு வந்தது, அவன் செல் போன் சிக்னல் என் ஏரியாவுல கட் ஆனது நிச்சயமா இது சதிதான்.”

“இந்த கடத்தல் எங்கள பிரிப்பதற்காக சூர்யாவோட அப்பா போட்ட நாடகமா? இல்ல உண்மையிலே சூர்யாவை யாரோ கடத்தியிருக்கங்களா? அப்படி உண்மைன்னா, அத செஞ்சது யாரு? அவங்களுக்கு வேண்டியதுதான் என்ன? எதுக்காக போலீஸ் என்ன கைதுசெஞ்சி விசாரிக்கிறாங்க? இங்க என்ன சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கு ஒன்னும் புரியல.”

எப்.ஐ.ஆர். பைலுன் வந்தார் இன்ஸ்பெக்டர் நிஷா. “சொல்லு உன் பேரு, வயசு, உன் முழு விவரங்கள சொல்லு?”

அந்த பெண் இன்னும் சிந்தனையிலிருந்து வெளிவரவில்லை. பதில் சொல்ல அவள் மனம் முனைந்தாலும் அவள் அறிவு இவர்களை நம்பலாமா வேண்டாமா என்று யோசித்தது. அறிவிற்கும் மனதிற்குமான போட்டியில் அவளின் அமைதி இன்னும் நீடித்தது.

“அடிங், கேட்டுகிட்டே இருக்கேன், என்ன ஏத்தம் பாரு” என்று அடிக்க கை ஓங்கினார் நிஷா.

“நடாஷா” என்றது ஓர் தீர்க்கக் குரல். எல்லோரும் ஒரு நிமிடம் நிசப்தமாய் நின்றனர்.

“வாட் கம் அகைன்” என நிஷா கேட்க,

“என் பேரு நடாஷா பெர்னாண்டஸ், வயசு 23” என்றாள் அந்தப் பெண் தலை நிமிர்ந்து.

(தொடரும்...)