அத்தியாயம் 1

33.03k படித்தவர்கள்
7 கருத்துகள்

காலப்பயணம்             

ன் தாத்தாவின் பெரியப்பா சிறுத்தையை வெட்டினார் என்பதைக் கேட்டு பிரபாஷும் ஃபெர்னான்டஸும் ஆச்சர்யப்பட்டார்கள். இந்தியாவில் இருக்கப்போகிற இந்த ஒரு மாதத்தில் அதைப் பற்றித் தெரிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கும் என்று சொன்னான் பிரபாஷ். அதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும் என்று முதல் யோசனையில் என்னால் கண்டுகொள்ள முடியவில்லை.

மேலும் என் கொள்ளுத் தாத்தாவின் சாதனை என நான் தெரிவித்ததில் எனக்கே சந்தேகம் இருந்தது. பிரபாஷ் பாட்டிலோடு குடித்துக்கொண்டிருந்தான். நான்கு பீர் குடித்தபின்தான் அவன் தாகம் அடங்கும். பெர்னான்டஸுக்குப் புகையை ஊதி ரசிப்பது பிடிக்கும். பீர் குடிப்பது புகைப்பிடிப்பதற்கு ஒரு சாக்கு. போதையின் காரணமாகத்தான் உணர்ச்சிவசப்பட்டு சிலாகிப்பதாக நினைத்தேன்.

என் கொள்ளுத் தாத்தா ஒரு சிறுத்தையைக் கொன்றார் என்பதைத் தாண்டி எனக்கும் உண்மையிலேயே வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை. காரணம் ஏதுமின்றி நான் தீப்பெட்டியைப் பார்த்தேன். மேலே பாயும் சிறுத்தையை நோக்கி கத்தியை ஓங்கிக்கொண்டிருந்தான் ஒரு கட்டுமஸ்தான இளைஞன். பாயும் சிறுத்தையை ஒரு கையால் தடுக்கும் மூர்க்கம். ஒரு காலைச் சற்றே தூக்கி சிறுத்தைக்கு நிகராகப் பாயும் ஆவேசம். அவர்தான் என் கொள்ளுத் தாத்தா என்று பாட்டி சொல்லியிருக்கிறாள். கொள்ளுத் தாத்தாவின் உருவம் பதித்த அந்தத் தீப்பெட்டி படத்தின் மீது திடீரென்று எனக்கு ஆர்வம் அதிகமானது.

கையில் எடுத்துப் பார்த்தேன். போதை அந்த அளவுக்கு ஏறியிருக்கவில்லை என்றாலும் தீப்பெட்டியை ஒருவித உளம் கனிந்த நிலையில் பார்த்தேன். நம் தாத்தாவின் படம்தான் தமிழ்நாட்டில் நூறு வருஷத்துக்கும் மேலாக அச்சடிக்கப்பட்ட ஒரே தமிழனின் படம் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளும்விதமாக யோசித்துப் பார்த்தேன். நூறு வருஷத்துக்கு மேலேயே இந்தத் தீப்பெட்டிக் கம்பெனி இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. 

உலகிலேயே எந்த மனிதனுக்கும் கிடைக்காத பெருமையாக இருந்தது. வேறு யாருடைய படத்தை இப்படி கோடிக்கணக்கில் அச்சடித்திருக்க முடியும்? தீப்பெட்டியைத் தொட்டுப் பார்த்தேன். தாத்தாவைத் தொட்டுப் பார்த்த பரவசம் எனக்குள் எழுந்தது. தாத்தா எதிரில் இப்படி பீர் அடிக்கலாமா? அவசர மரியாதை வெப்பமென பரவியது. தீப்பெட்டியைத் திருப்பி வைத்தேன்.

அவர் ஒருமுறை வயலுக்குப் போகும்போது தன்னைத் தாக்க வந்த சிறுத்தையை வெட்டி வீழ்த்தியதாகவும் அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் அதைப் பெரிய விஷயமாகப் பேசிக் கொண்டிருந்ததாகவும் பாட்டிதான் சொன்னாள். பேப்பரிலெல்லாம் அது பிரமாதமாக பேசப் பட்டதாகவும் அந்த நேரத்தில் துவங்கப்பட்ட தீப்பெட்டி கம்பெனிக்கு அதன் முதலாளி அந்தப் பிரபலத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்து அதையே தன் கம்பெனி சின்னமாகப் போட்டான் என்றும் சொல்லியிருக்கிறாள். “தாத்தா இருந்திருந்தா இன்னும் கொஞ்சம் வெலாவரியா சொல்லுவாரு” என தன் ஞாபகத்தின் மீது குறைபட்டுக்கொண்டாள். எனக்குள் விரிந்த ஆர்வத்தின் கிளையில் இப்போது பாட்டி சொன்ன ஞாபகங்கள் துளிர்த்தன.

நாங்கள் மூவரும் கார் வைத்துக்கொண்டு ஜெகநாதபுரம் போனோம். 2009 ஆம் ஆண்டு கொசஸ்தலை ஆற்றின் மேல் காரனோடையில் இரண்டாவது முறையாகக் கட்டப்பட்ட பாலமும் ஆற்றோடு அடித்துக் கொண்ட போய்விட்டதை, பாலத்தைக் கடக்கையில் டிரைவர் சொன்னான். இரட்டை பாலம். ஒரு பாலம் அடித்துக்கொண்டு போய்விட்டால் இன்னொரு பாலம் உதவும் என்பதுபோல் கட்டி வைத்திருப்பார்கள் போலிருந்தது. புதுப் பாலத்தில் இருந்து இறந்து கிடந்த பழைய பாலத்தைப் பார்த்தோம்.

மணல் குவாரி ஏலம் எடுத்தவர்கள் பாலத்துக்கு நெருக்கமாக மணலை எடுத்துவிட்டதுதான் தூண்கள் அடித்துக்கொண்டு போனதற்குக் காரணம் என்று டிரைவரே மீண்டும் சொன்னான். காரை நிறுத்தச் சொல்லிவிட்டு ஆற்றைக் குறுக்காகவும் நெடுக்காகவும் பார்த்தோம். நீண்டு கிடந்த ஆற்றில் எது குறுக்கு? எது நெடுக்கு? ஆற்றில் நீர் இல்லை.. பெரும்பாலும் சிறு ஓடைபோல ஆற்றின் பள்ளமான பகுதிகளில் நீர் ஓடிக்கொண்டோ, அல்லது தேங்கியோ இருப்பதுதான் மனதில் இருந்தது. ஆற்றில் இரண்டு கரைக்குமாக மணல் இருக்கும். இப்போது குரூரமாகச் தோண்டப்பட்ட குழிகள். “டேய் தமிழ்... ‘பஞ்ச தந்திர’த்தில ‘மேகி’ய இங்கதான போடுவாங்க?” பெர்னான்டஸ் குரலில் கண்டுபிடித்துவிட்ட பெருமிதம். “அட ஆமான்டா..” பிரபாஷ் பாலத்துக்குக் கீழே குதித்துவிடுவதுபோல குனிந்து பார்த்தான். “அதோ, அதுதான் எஸ்.வி.சுப்பையா இருந்த வீடு.” டிரைவர் இவர்களின் உற்சாகத்தைப் புரிந்துகொண்டு இன்னும் தகவல் தருவதற்குத் தயாராகியிருந்தான்

டிரைவர். “பாரதியாரா நடிச்சாரே.. கப்பல் வுட்ட தமிலன்ல?” பெர்னான்டஸ் அந்த வீட்டைப் பார்க்க முயன்றான். ஒரு மாந்தோப்புதான் தெரிந்தது. “இப்ப செத்துட்டார் இல்ல?” என்றேன் நான்.

“எப்பவோ பூட்டாரே.”

நான் மிகவும் தாமதமாகப் போனேன். தாமதம் என்றால் பொழுது சாய்ந்த நேரத்தில் போனதாகச் சொல்லவில்லை. என் தாத்தா இறந்து போன பிறகு ஞானோதயம் வந்து கொள்ளு தாத்தாவைப் பற்றித் தகவல் திரட்ட வந்த அந்தத் தாமதத்தைச் சொல்கிறேன். அப்பாவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். கைக்கெட்டிய தூரத்தில் இருந்த தகவல்கள் எல்லாம் மங்கி மறைந்து கொண்டிருந்தன. என் தாத்தாவின் பங்காளி முறைத் தம்பிகள் இரண்டு பேர் இப்போது அங்கே இருப்பதாக அம்மா சொல்லி அனுப்பினார். அம்மாவுக்குச் சிறுத்தையை அடித்தவரின் பெயரும்கூட தெரியவில்லை. ஆனால், அம்மாவை விட்டால் தீப்பெட்டியின் சரித்திரப் புள்ளியை அறிந்த வேறு யாருமே இல்லைபோல இருந்தது. ஜெகநாதபுரம், ரங்காவரம் இரண்டு ஊர்களிலும் இந்த விஷயம் தெரிந்தவர்கள் இருப்பார்கள் என்று ஓர் ஆதாரமான முதல் தகவலை அம்மாவால் தரமுடிந்தது.

ஜெகநாதபுரம் என்று அம்புக்குறி போட்ட குறுகிய சாலையில் கார் திரும்பியது.

டிரைவர், “கப்பல் வுட்ட தமிழன் இல்ல சார்.. கப்பல் ஓட்டிய தமிழன்” ஆழ்ந்த அமைதியான நேரத்தில் சொன்னான். அவனுக்கு இவ்வளவு நேரமாக மனதை அரித்துக்கொண்டிருந்தது போலும். “தெரிஞ்சா மாரி சொன்னான்... கப்பல் வுட்டாராம்..”

“நான் சின்ன வயசுல கண்டியில பாத்தது... அங்க அப்பிடித்தான் மக்கள் சொன்னதா ஞாபகம்.. சாரி.. என் மிஷ்டேக்கா இருக்கலாம்” பெர்னான்டஸ் கன்னத்தில் போட்டுக்கொண்டான்.

பிரபாஷ் செல்லமாக பெர்னான்டஸின் தலையில் குட்டினான். இருபுறமும் மரங்கள் சூழ்ந்த சாலை. தாரும் காரும் உரசும் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. ஏதோ சிறுத்தை இன்னும் இந்தப் பகுதியில் இருக்கும்போல பிரபாஷ் கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டு வந்தான். தெரு பிரியும் ஓரிடத்தில் டிரைவர் எந்தத் திசையில் பிரயாணிக்க வேண்டுமெனக் காத்திருந்தான். “டேய் தமிழ். வழி சொல்லுடா...” என்றான் பிரபாஷ்.

“ரைட்ல போங்க” என்றேன். 

மாமாவுக்குத் தலையில் அடிபட்டு, சுயநினைவு தப்பிப் போய் திரும்பியிருந்ததால் அவருக்குப் பலரை அடையாளம் தெரியவில்லை. பிரபாஷ் மட்டும், “அப்பாகிட்ட சொல்லிக்கிட்டிருந்தது, இவரைத்தானா?” என அக்கறையாகப் பார்த்தான். ராஜேஷ் வந்தவர்களைப் பார்க்காமல் வெட்கப்பட்டான். ஆட்களைப் பார்க்காமல் இருப்பதற்கு கம்ப்யூட்டர் கேம் அவனுக்கு உதவியாக இருந்தது. நியூயார்க்கில் இருந்து அவனுக்குத் தோராயமாக வாங்கி வந்திருந்த சட்டை, பேண்ட், ஷு ஆகியவற்றை எடுத்து நீட்டினேன்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“மாமாக்கு தேங்க்ஸ் சொல்றானா பாரு” என்றாள் ஆயா. தாத்தா இறந்த பிறகு, ஆயா வடக்கிருந்து உயிர் நீக்காத குறையாக முடங்கிப் போய்விட்டாள். மாமாவைக் காண்பித்து, “இப்ப எவ்ளவோ பரவால்ல நைனா.. கொஞ்ச நெஞ்ச ஆளைத் தெரியுது அவனுக்கு..” எனச் சொன்னாள். மூவரும் மாமாவையும் ஆயாவையும் பார்த்தோம். பதிலுக்கு என்ன பேசுவதெனத் தெரியவில்லை. துயரப் பார்வை பார்ப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

தேவகி அத்தை வந்தவர்களுக்கு டீ போட்டு கொடுத்துவிட்டு அம்மா சொல்லியிருந்த அந்த இரண்டு பெரியவர்களை அழைத்து வந்தாள். கருத்துச் சுருங்கிய ஒல்லியான உடம்பு. வேட்டியை முழங்காலுக்கு மேலே தூக்கிக் கட்டிக்கொண்டு தோளுக்கு மேலே துண்டு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

“லட்சுமண அண்ணனுக்குத்தான் அவரைப் பற்றி நல்லாத் தெரியும்” என்றார்கள். ஆனால், இவர்களும் சிறுத்தையை வெட்டி வீழ்த்தியவரைப் பார்த்திருப்பதாகச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன முதல் செய்தி... அவர், இவர்களின் தந்தை வழி சொந்தமில்லை என்பதை. நான் இதுவரை நினைத்துக்கொண்டிருந்ததுபோல் அவர் என் தாத்தாவின் அப்பாவுக்கு அண்ணன் அல்ல. தாத்தாவின் அம்மாவுக்கு அக்கா புருஷன். கூட்டிக் கழித்துத் தாத்தாவுக்குப் பெரியப்பாதான். இந்த நேரத்திலாவது அதைத் திருத்திக்கொள்ள முடிந்ததே. இன்னும் இருபது வருஷம் போயிருந்தால் இதைச் சரிபண்ணிக்கொள்ள முடிந்திருக்குமா என்று தெரியவில்லை. எல்லா சரித்திரக் குறிப்பின் மீதும் படர்ந்திருக்கிற மெல்லிய அவநம்பிக்கை காரணமாக, இதை இத்தனைத் திருத்தமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா என்றுதான் தோன்றியது. பிரபாஷ் செய்வன திருந்தச் செய் பாணி ஆளாக இருந்தான். சமீபத்திய இறந்த காலத்தை, முடிந்த அளவுக்குத் திரும்பிப் பார்க்கலாம்தான் என்று பெர்னான்டஸும் நினைத்தான்.

ஒருவர் ஞாபகம் தொட்டு இன்னொருவராக பெரியவர்கள் இருவரும் விவரிக்க ஆரம்பித்தார்கள். எங்கள் தேவையோ, நோக்கமோ புரியாமல் அவர்கள் நிறைய கிளைக் கதைகளோடு சிறுத்தையை வெட்டியவரை நோக்கி நகர்ந்தார்கள்.

சிறுத்தை வெட்டப்பட்ட பத்தாண்டுகளுக்குப் பிந்தைய நினைவுகளாக இருந்தன. அது நாற்பதுகளின் மையப்பகுதியாக இருந்தது.              

*****

நாற்பதுகள்...             

1

குஸ்தி வாத்தியாரிடம் பாடம் படித்துவிட்டு வந்த மாதிரி கட்டுமஸ்தாக இருந்தது அந்தக் குதிரை. உடம்பில் அத்தனை செழிப்பு. இந்த இருட்டு நேரத்தில் மரத்தின் மேலிருந்து பார்க்கிறபோதும் லட்சுமணனால் அதைத் திடமாக உணர முடிந்தது. ஒவ்வொரு பாகத்தையும் தனித் தனியாகச் செதுக்கி மாட்டியது மாதிரி. பத்ராஜல ஆசாரி இழைத்துத் தந்த தேக்குத் தூணின் உறுதியும் மினுமினுப்பும்... அதைத் தொட்டாவது பார்த்துவிட வேண்டும் என்று தூண்டியது. 

நிகுநிகுவென வளர்ச்சி. அந்த ஆரோக்கியம் தந்த தெனாவட்டு அதனுடைய நடையில் இயல்பாகத் தொற்றியிருந்தது. சக்கிலியனைப் பார்க்கிற மணி ஐயரின் அலட்சியம் அதனிடமும் இருப்பதாக நினைத்தான். இவ்வளவு வனப்பு கொண்ட குதிரை, அந்த வெள்ளைக்காரனுக்குச் சொந்தமாக இருப்பதைத்தான் லட்சுமணனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வெள்ளைக்காரன்தான் நம்மை ஆண்டுகொண்டிருப்பதாகச் சொல்வார்கள். ஆனால், லட்சுமணன் தன் பதினேழு வயசு அனுபவத்தில் ஜெகநாதபுரம் - இனாம் அகரத்தில் எதிர்கொண்ட ஒரேயொரு வெள்ளைக்காரன் ஜேம்ஸ் என்று சொல்லப்படுகிற இந்த கலெக்டர் ஆபிஸ் சேவகன் ஒருத்தன்தான். அப்படி வெள்ளைக்காரர்களால் நம் ஊர் ஆளப்பட்டுக்கொண்டிருப்பதால் நமக்கு என்ன பாதகம் வந்துவிட்டதென்றும் லட்சுமணனுக்குத் தெரியவில்லை. நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆண்டால் சிறப்பாக ஆளுவார்கள் என்பதற்கான ஆதாரம் எதுவும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏனென்றால், அவன் பிறந்தபோதும், அதற்கு முன் அவன் அப்பாவும் தாத்தாவும் பிறந்தபோதும் எப்படியிருந்ததோ அப்படியேதான் அவனுடைய ஊர் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது. இதற்கு முன்னால் மிக நன்றாக இருந்ததாக நிலைநாட்டுவதற்கு ஆதாரபூர்வமாக ஒரு விஷயமும் அவன் ஞாபகத்தில் இல்லை. நாடு எப்படி ஆளப்பட வேண்டுமோ அப்படித்தான் ஆளப்பட்டுக் கொண்டிருப்பதாக அவன் நினைத்தான். எனவே, சுதந்திரம் என்பது அக்கறை கொள்ளத்தக்க விஷயமாக இல்லை அவனுக்கு. அவனுக்குத் தெரிந்து யாருக்கும்தான். நம்முடைய நாடு என்பது செங்கல்பட்டு ஜில்லாவைக் கடந்து பரந்து விரிந்து கிடக்கும் மிகப் பெரிய பிரதேசம் என்பது ஒரு கற்பனா ரூபத்தில் அவன் மனதில் இருந்தது.

‘செங்கல்பட்டு ஜில்லா என்பதுகூட கணக்குப்பிள்ளையும் தலையாரியும் அவ்வப்போது பிரயோகிக்கிற வார்த்தைகளாக இருப்பதால் பழக்கப்பட்டுப் போனதுதான். இனாம் அகரம் என்பதுதான் ஆகப் பொருத்தம். ரோட்டுக்கு வடக்காக இருப்பது இனாம் அகரம் என்றால், தெற்காக ஜெகநாதபுரம். பத்தடி தூரத்தில் இப்படி இரண்டு கிராமநத்தம். அகரத்தில் ஏழெட்டு ஐயர் வீடுகள். தெருப் பக்க வாசப்படி போக கொல்லைப் பக்கமாக மாடு கன்று, பள்ளு பறையர்கள் வந்து போவதற்கான இன்னொரு வாசப்படி. தெருவுக்கு ஒதுங்கி உள்ளே ‘கொசமூடு’. அதையும் தாண்டி ‘வேட்டைக்காரமூடு’. இந்த வீடுகள் எல்லாம் திக்குக்கு ஒரு வாசப்படியாகத் தோன்றினபடிக்குக் கட்டியிருக்கும். அப்படி... ஒரு ஏழெட்டு வீடு. அவர்களுக்கு வந்து போக வழி வேண்டுமே என்ற யோசனையும்கூட இருந்ததாகத் தெரியாது.

அகரமும் ஜெகநாதபுரமும் பிரிகிற சாலைக்கு ஒதுக்குப்புறமாக பறைசேரி. அவர்கள் என்ன தினுசாக வீடுகட்டியிருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

‘அதுக்குள்ள எவன் போய்ப் பார்த்தான்? கண்ணுல பட்டாலே தீட்டு சாமினு எதிர்ப்படும்போது அவனே பனைமரத்துக்குப் பின்னாடி மறைஞ்சுக்குறான். சொல்லப்போனா, இந்த ரெண்டு வூரு கூட்டத்தை விட அதிகக் கூட்டம் அங்கதான். எப்படியும் எர்நூர் பேர் இருப்பானுங்க. சேரிக்கு மேற்கே அகரத்துக்குத் தெற்கே ஜெகநாதபுரம். அதுல மொத்தமா பனிரெண்டு வூடு. அதுல ரெண்டு பேரு ஆசாரிங்க. கதவு செய்ய, கலப்பை செய்ய அல்லாட வேண்டியிருக்குதேனு புடிச்சு கொண்டாந்து போட்டிருக்குது. மீதிப் பேரு ரெட்டியாமூடு. இன்னும் தெக்க போனா சக்கிலிபாளையம். அங்க ஒரு ஆறு வூடு. மாடு செத்தா, ஆடு செத்தா எடுத்துக்கிட்டுப் போய் சாப்புடுவானுங்க. தோலைப் பதம் பண்ணி செருப்பு தச்சுக் கொடுப்பானுங்க. முடிஞ்சுது.’ லட்சுமணன் மனதில் ஊரின் பிம்பம் இப்படித்தான் இருந்தது.

இதைத் தாண்டி இந்த உலகத்தில் இருக்கும் ஆட்களும் அவர்களின் பிரச்சினைகளும் லட்சுமணனுக்குப் பெரிதாக உறைப்பதில்லை. அவை வெளிநாட்டுப் பிரச்சினை போலத்தான். அது அவன் ரங்காவரம், ஊத்துக்கோட்டை சொந்த பந்தங்கள் விஷயமாக இருந்தாலும். இதில் வெள்ளைக்காரனைப் போய் எதற்கு எதிர்க்கணும்?

உண்மையில், வெள்ளையனிடம் ஆதாயம் பெற விரும்புகிறவர்களும் அது கிடைக்காதவர்களும்தான் அவர்களை எதிர்க்க நினைக்கிறார்கள் என்று அவன் நினைத்தான். எங்கோ வெள்ளைக்காரர்களின் போக்குவரத்து இல்லாத ஊரில் வசித்துக்கொண்டிருக்கும் நம்மைப் போன்ற எவ்வளவோ பேருக்கு எவன் ஆண்டால் என்ன என்பதுதான் தீர்மானம். நகரங்களில்தான் வெள்ளைக்காரர்களுக்கும் நம்ம ஆசாமிகளுக்கும் உரசல். அல்லது வெள்ளைக்கார அதிகாரிகள் ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்துக்குப் பயணிக்கிற வழிகளில் இருப்பவர்களுக்கான பிரச்சினையைத்தான் சுதந்திரப் போராட்டம் என்பதாக மணி ஐயர் சொல்லுவார்.

இதோ இப்போது வந்திருக்கிறானே இவனெல்லாம் ரோந்து சுத்துகிற காவல்காரன். இவனை மட்டும் சொல்லவில்லை. இவனைப் போல மோட்டாரில் வருகிறவர்களைப் பார்த்தாலும் ரோஷம் ஒன்றும் வருவதில்லை. ஒருவேளை அவர்கள் வந்து இங்கே நேரடியாக ராஜாங்கம் செய்தால் ரோஷத்தில் சுதந்திர உணர்வு வருமோ என்னவோ? அதெல்லாம் ராஜாங்க சமாச்சாரம் என்றுதான் அவனுடைய அப்பா தசரத ரெட்டியாரும் சுதந்திரப் போராட்டம் பற்றி அவனிடம் சொல்லியிருந்தார்.

முற்றும் தெளிந்த ஞானிபோல அவர் “டேய், இவனுங்க நினைக்கறது எதுவுமே நடக்காதுடா” என்று சொல்லும்போது சுதந்திரப் போராட்டம் என்பதெல்லாம் சும்மா பொழுதுபோகாதவனும் விவரம் தெரியாதவனும் செய்கிற செயல்தானோ என்று தோன்றும். அது உண்மையாகவும் இருக்கலாம். அப்படிப் போராட்டம் செய்கிற சிலரும் ஜெயிலிலும் தூக்குக் கயிற்றிலும் சிக்கிச் செத்துப்போயினர். யாராவது இப்படிச் சாகும்போதுதான் அவர் சுதந்திரத்துக்காகப் போராடினார் என்பதே தெரியவருகிறது. இன்னும் கொஞ்சகாலம் கழித்து இன்னொருவர். “சிதம்பரம்புள்ளை வெள்ளக்காரனை எதிர்த்து கப்பல் வுட்றேன்னாரு. அவரைத் தூக்கி ஜெயில்ல போட்டானுங்க. வாஞ்சிநாதன்னு ஒருத்தன் வெள்ளக்காரத் துரையைச் சுட்டுட்டு அவனும் சுட்டுக்கிட்டு செத்தான். இதோ பகத் சிங்னு ஒருத்தன். தூக்குல கொண்டுபோய்ப் போட்டாங்க. காந்தி வந்துருக்காரு. பாவம்.. கோட்டு போட்டுக்கிட்டிருந்தவர கோவணாண்டி ஆக்கிட்டாங்க. அந்தப் பழியும் மதுரைக்கு வரும்போதுதானா நடக்கணும்? ஏதோ இவுரு சாத்வீகமா போறாரு. சுடாம வெச்சிருக்கான். ஆவேசக்காரனா இருந்தா, அந்தமான் ஜெயில்ல கொண்டுபோய்ப் போட்டு மிதி மிதினு மிதிச்சிருப்பான். இப்ப என்ன பெருசா மாத்தம் வந்துடுச்சு?” என்கிறார் அப்பா. சுதந்திரப் போராட்டத்தை அவர் ‘உபயமத்த வேலை’ என்பார். அப்பாவுக்கு மணி ஐயர் சொல்வதுதான் வேதவாக்கு. கிடக்கட்டும். இவ்வளவு நல்ல குதிரை நம்மிடம் இல்லையே என்பதுதான் லட்சுமணனுக்கு மிகப் பெரிய உறுத்தலாக இருந்தது. ‘வெள்ளைக்காரன் வெச்சிருக்கிற குதிரைக்கு ஆசைப்பட்றதும் சுதந்திரப் போராட்டம் என்ற கணக்கில் வருமா’ என்று யோசித்தான். குதிரையை அடைய இரண்டு வழிகள்தான். ஒன்று, அந்த வெள்ளைக்காரனைக் கொன்றுவிட்டு குதிரையைக் கைப்பற்ற வேண்டும். அல்லது ஒரு குதிரையைக் காசு கொடுத்து வாங்கிவிட வேண்டும். குதிரை எல்லாம் எங்கே விற்கிறார்கள் என்று தெரியவில்லை. திருவண்ணாமலையில் குதிரைச் சந்தை நடக்கிறது என்றார்கள். எப்போது, என்ன விலை என்பதெல்லாம் ஒருத்தருக்கும் ஓர் எழவும் தெரியவில்லை.

குதிரையில் வருகிற வெள்ளைக்காரன் ஜமீன்தாரைப் பார்த்து கிஸ்தி சமாச்சாரங்கள் பேசிவிட்டு, தகவல் வாங்கிக்கொண்டு போகிறவன். ஜமீன்தார்கள் ஒவ்வோர் ஊரையும் நானூறு ரூபாய் ரொக்கம் கொடுத்து வாங்கியதாகச் சொல்வார் மணி ஐயர். பத்து ஊருக்கு மேல் வாய்தா வசூலிக்கிறார் ஜமீன். ‘நான்காயிரம் கொடுத்தா வாங்கியிருக்க முடியும்? சேர்ந்தாப்ல அஞ்சு ரூபா பார்க்கறதே அபூர்வமா இருக்கு’... ஆண்டிக்கு எதற்கு அம்பாரம் கணக்கு என்று மீண்டும் குதிரைக்கு வந்தான். அவனைக் கொன்றுவிட்டோ, கொல்லாமலோ குதிரையை அடைவது நமக்கும் பகத் சிங் கதியைத்தான் கொடுக்கும் என்று லட்சுமணனுக்கு நன்றாகவே தெரிந்தது. “போயும் போயும் குதிரைக்காக இப்படி ‘உபயமத்த வேலை’யைப் பண்ணிட்டானே... என்கிட்ட கேட்டிருந்தா ஒரு குதிரைக்கு நாலு குதிரை வாங்கித் தந்திருப்பேனே” என்பார் அப்பா. அவரைப் போலப் பேச முடியாது... வூட்ல எட்டு மூட்டை நெல்லை வெச்சுக்கிட்டு என்னத்த வாங்கித் தந்துடுவாரு? அரையணாவும் தம்பிடியும் பெட்டியில போட்டு பித்தளப் பூட்டு போட்டுப் பூட்டி வெச்சிருக்காரு. வாழைக்கா மண்டிக்குப் போனா ஒரு ரூபா ரெண்டு ரூபா கிடைக்கும். கங்கையாடி குப்பத்தானுங்க போட்டிக்கு வந்துட்டா அதுவும் போச்சு. குதிரை வாங்க முடிஞ்சாலும் அதை ஜமீன் பார்த்தா சுட்டே போட்டுடுவான். ஏரிக்கரைல ஓலை வெட்னாலே கட்டிவெச்சு அடிக்கிறானுங்க....

இதெல்லாம் நடக்காது, லட்சுமணன் தெளிவாகிவிட்டான். இருப்பது ஒரே வழிதான்... வெள்ளைக்காரனுக்குத் தெரியாமல் குதிரையை எடுத்து ஓட்ட வேண்டும்.

இந்த வெள்ளைக்காரப் பயல் ஒரு சில நாள் வந்தால் உடனே போய்விடுவான். சில நாள் வந்தால் கிடா வெட்டி விருந்து நடக்கும். சாராயம் குடித்துவிட்டு விடிந்து எழுந்து காலையில்தான் போவான். ‘அப்படித் தங்குகிற நாளா இருந்தா குதிரையைத் தைரியமா எடுத்து சவாரி பண்ணிட வேண்டியதுதான்.’

ஜமீன்தார் வீட்டு முன்னாடி இருந்த புளியமரத்தில் யாருக்கும் தெரியாத உயரத்தில் உட்கார்ந்திருந்தான் லட்சுமணன். வீட்டு மாட்டுக் கொட்டகையின் ஒரு பக்கத்திலேயே குதிரையைக் கட்டி வைத்திருந்தார்கள். பெரிய தொழுவம். மாடுகள் தொழுவத்தின் சுற்றுச் சுவரை ஒட்டி வேய்ந்த ஓட்டுக் கூரையின் கீழ் அசை போட்டுக் கொண்டிருந்தன. ஆடுகளுக்கு தொழுவத்தின் நடுவே தட்டி. ஐந்தாறு கிடாய்கள், பெட்டைகளை விரட்டி விரட்டி இன்புறுத்திக் கொண்டிருந்தன. அந்தப் பக்கம் நான்கு ஜோடி ஏர் மாடுகள், வெள்ளை வெளேர் என்று மயிலைக் காளைகள் இரண்டு ஜோடி. மயிலைக் காளைகள் கூண்டு வண்டிக்கு. ‘செமை அடிச்சு நெல் அளக்கிற நேரங்களில் ஜமீன் வந்து எறங்கிறது கூண்டு வண்டிலதான். சொளையா அள்ளிக்கினு் போவார். அவர் அளக்கறதுதான் கணக்கு. கல்வி பண்டு என்று வருஷா வருஷம் அளக்கிறாரு... எந்த வாத்தியானும் ஊருக்குள்ள வந்து பாடம் சொல்லித் தந்ததில்ல. என்னமோ அவரோட பூமி... அவர் அளந்துக்கிட்டுப் போறாரு. அளந்து முடிஞ்சு கிளம்பும்போது காளைகளுக்கும் விஷயம் புரிந்துதான் அந்த மாதிரி நடந்துக்கும்.

இன்னா மாரி மாடுங்க... கறந்த பால் கணக்கா வெள்ளை. இன்னா உசரம்? நுகத்தடி வெச்சதும் ஏதோ ஈ உக்காந்த மாதிரி உடம்பைச் சிலிர்த்துக்கும். அப்புறம் வண்டியை இழுக்கிறது அனாவசியம்..

அந்த மாடுகள் இங்கே கழுத்துமணி கிணுகிணுக்க வைக்கோலை இழுத்து மென்றுகொண்டிருந்தன. ஜமீன்தாரின் நோஞ்சான் குதிரை ஒன்றும் அங்கே இருந்தது. அது வண்டிக் குதிரை. ஜமீன்தார் ஏதாவது கோயில் திருவிழா, பட்டணத்தில் இருந்து மருமகன் வந்தால் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அழைத்துவருவது, பொம்பளைகள் கோயில் குளங்களுக்குப் போக-வர போன்ற காரியங்களுக்காக அது நடமாடிக் கொண்டிருந்தது. ஆனால், அதை லட்சுமணன் ஒரு பொருட்டாகவோ, ஒரு குதிரையாகவோ நினைத்ததே இல்லை. ‘ச்சே...’

நிலவு கிழக்கே உதித்து மேலே உயர்ந்துகொண்டிருந்தது. மரத்தின் மீதும் நன்றாகவே காய்ந்தது. தெரியாமல் இருக்க அடர்த்தியான ‘தெகை’ இருக்கும் கிளையாகப் பார்த்து நகர்ந்துகொண்டான். இரவு தங்காமல் செல்வதாக இருந்தால் இவ்வளவு நேரம் இருக்க மாட்டானே... நேரம் கடந்துகொண்டிருந்தது. இந்த ராத்திரியில் ஜமீன் வீட்டுப் பக்கத்தில் மரத்தில் ஏறி அமர்ந்திருப்பதை யாராவது பார்த்துத் தொலைத்தாலும் பிரச்சினைதான். திருடன் என்று பட்டம் கட்டிவிட்டார்கள் என்றால், அது குடும்பத்துக்கே பெருத்த அவமானமாகிவிடும். ‘வாக்கு பூக்கு’ இல்லாமல் மாட்டிக்கொண்டது மாதிரி இருந்தது. ஆளரவமற்ற நேரமாகப் பார்த்து மெல்ல இறங்கி வீட்டுக்குப் போய்விடலாமா என்றும் இருந்தது. ஒருவேளை இன்று இரவு அவன் தங்கினால்...?

ஆஹா... பெரிய அடுக்குச் சட்டியொன்றில் சாராயம் எடுத்துக் கொண்டு பின்கட்டு வழியாகச் சென்றான் ஏகாம்பரம். ஜமீன் வீட்டுப் படியாள்... கொஞ்ச நேரத்தில் கறி, மீன் வாசனையோடு உரக்கப் பேசும் சத்தமும் எழுந்தது. இன்றைக்கு வெள்ளைக்காரன் டேரா போடுவது உறுதியாகிவிட்டது. இன்றைக்குச் சவாரி உண்டு. அடுத்த ஒரு மணி நேரம் லட்சுமணன் மரத்திலேயே அசந்துபோய் தூங்கிவிட்டான். காலையிலிருந்து களம் செதுக்கி, ஒட்டுமண் தள்ளிய அசதி. சுருக்கென்று கட்டெறும்பு கடித்ததால்தான் எழுந்தான்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

பேச்சுச் சத்தமும் சிரிப்புச் சத்தமும் அடங்கி விளக்குகள் அணைந்திருந்தன. இரண்டு மாடி வீடு. செங்கல்பட்டு ஜில்லாவிலேயே இது போன்ற வீடு வேறெங்காவது இருக்குமா என்று தெரியவில்லை. பர்மாவிலேருந்து ஒரு கப்பல் நிறைய தேக்கு கொண்டாந்ததாகச் சொல்லுவார்கள். நாலுகட்டு வீடு. லட்சுமணன் ஒரே ஒருமுறை வீட்டின் கூடம்வரை போயிருக்கிறான். நெல் அளந்தபோது மூட்டை தூக்கிப் போட, அவனையும் வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு வந்தார்கள். ஜமீன்தாரிடம் கொஞ்சம் குழைவாக இருந்தால் ‘நாள பின்ன நெலத்தைக் கிரயம் செய்துகொள்ள சல்லீசாக இருக்கும்’ என்பது லட்சுமணனின் அப்பா தசரத ரெட்டியாரின் யோசனை.

நெல் மூட்டையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தபோது தரை ஆலங்கட்டி மாதிரி குளிர்ச்சியாகவும் தரையைப் பார்த்தே பொட்டு வைத்துக்கொள்ளலாம்போல பளபளப்பாகவும் இருந்தது. ஜமீன்தாரையும் அப்போதுதான் அவ்வளவு கிட்ட பார்த்தான். உயரம் சுமாராக இருந்தாலும் களையாக இருந்தார். சிவப்பு. பட்டையாக நாமம் வைத்திருந்தார். நடுவே குங்குமம். “தசரதா, உம் பையனா?” என்றார். அப்பா தலையசைத்து அரையடி பின்வாங்கி நின்றார். அப்பாவுக்கு ஜமீன் மீது அவ்வளவு மரியாதை. நம் குடும்பத்துக்கு அவ்வளவு நல்லது செய்திருக்கிறார் என்று ஜமீனைப் பாராட்டுவார் அப்பா.

ஒரு தரம் உற்றுப் பார்த்துவிட்டு, “தாத்தனை மிஞ்சிடுவான். சிறுத்தை இன்னா சிங்கம் வந்தாலும் வெட்டுவான்யா உம் பையன்” என்று லட்சுமணனின் உடற்கட்டைப் பாராட்டினார். அப்பாவுக்குச் சந்தோஷம் தாளவில்லை. ஜமீன்தாரே பாராட்டினார் என்று ஊரில் பெருமையாகச் சொன்னார்.

ஏகாம்பரம் உள்ளிட்ட ஒன்றிரண்டு ஆசாமிகளும் மீதமான சரக்கை மாட்டுக் கொட்டகைக்கு வந்து அவசரமாக வாயில் ஊற்றிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். ஊரடங்கி நிசப்தம். குதிரையை அங்கிருந்தவாறே நோட்டம் விட்டான். லட்சுமணனுக்குப் படபடப்பு அதிகமாகியது. உடம்பு திடுதிப்பென்று சூடாகி கண்கள் தகித்தன. மெல்ல கீழே இறங்கினான். குதிரை கடிவாளத்தோடு வாயில் ஒரு பை கட்டப்பட்டு நின்றிந்தது. அவிச்ச கொள்ளு வாசனை. குதிரையும் கள்ளு குடிக்கும் என்று சிலம்பன் சொன்னான். குடித்திருக்கிறதா என்று தெரியவில்லை.

வாரை அவிழ்த்தபோது கிர்ர்.. கிர்ர் என்று கனைத்தது. எங்கே சத்தம் கேட்டு எழுந்து வந்துவிடுவானோ என்ற அச்சத்தோடு வெள்ளைக்காரன் இருந்த பின்கட்டு பங்களாவைப் பார்த்தான். அசலனமாக இருந்தது. தரதரவென்று இழுத்துக்கொண்டு தோட்டத்தைவிட்டு வெளியே வந்தான். குதிரை திமிறியது. முன்னங்கால்களை திடுதிப்பென்று உயர்த்தி எக்காளமிட்டது. லட்சுமணன் விடுவதாக இல்லை. வாரை இழுத்துப் பிடித்தான். திமிறியபடியே அசைந்து வந்தது. நல்ல உயரம். எப்படி ஏறி அமர்வது என்று புரியவில்லை. பக்கத்தில் இருக்கிற மாட்டு வண்டி அருகே சென்று, வாரை இறுகப் பிடித்தவாறே வண்டி மீது ஏறி, குதிரை மேல் ஏறி அமரும் நேரம் சுதாரித்துவிட்டது குதிரை. இவன் என்ன காரியம் பண்ணப் பார்க்கிறான் என்று பதறியிருக்க வேண்டும்.

 நாலு கால் பாய்ச்சலில் பறக்க ஆரம்பித்தது. குதிரை சேணத்தை எட்டிப் பிடித்து எப்படியாவது மேலே ஏறி அமர்ந்துவிட வேண்டும் என்று படாத பாடுபட்டான். அது முடியவில்லை. கால்கள் தரையில் உராய்ந்து தோல் வழட்டிக்கொண்டது. தானாகவே கால்களை உயர்த்திக்கொண்டு தொங்கினான். குதிரை அவனைக் கீழே சாய்ப்பதில் குறியாக இருந்தது. அது குறியாக இருக்க வேண்டிய அவசியம்கூட இல்லை. தடக் தடக்கென்று குதிரையின் உடம்பு அதிருகிற அதிர்ச்சியிலேயே பிடியை விட்டுவிட்டுக் கீழே விழுந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று தோன்றியது. குடுமி அவிழ்ந்து காற்றில் சுழன்றுகொண்டிருந்தது. ஆனால், விடுவதாக இல்லை அவன். குதிரையோ வேண்டுமென்றே இருக்கிற முள்வேலியையெல்லாம் அவன் முதுகில் உரசும்படி ஓடியது. கோயில் சுவர், கம்பம் எல்லாவற்றிலும் அவன் உடம்பை உரசியது. எலும்பு நொறுங்குகிற அளவுக்கு இடி. போட்டிருந்த முண்டா நனைந்து ரத்தம் சொட்டுவதை உணர முடிந்தது. முதுகுச் சதை பிய்த்துபோய் இருக்கலாம். கைப்பிடி கொஞ்சம் தளர்ந்தாலும் கால்கள் இரண்டும் தரையில் உரசும். முட்டி பெயர்த்துக் கொள்ளும். எப்படியும் கீழே சாய்த்துவிட வேண்டும் என்று உடலை அவ்வப்போது படு வேகமாகக் குலுக்கியது குதிரை.

லட்சுமணனுக்கு வீராப்பு அதிகம். உயிரே போனாலும் சரி என்று முடிவுசெய்துவிட்டான். உயிர் போவது உறுதியாகிவிட்ட நிலையில் வீராப்பு இன்னும் அதிகமாகியது. நம் ஒட்டுமொத்த மானமும் இப்போது இந்தக் குதிரையைச் சமாளிப்பதில்தான் அடங்கியிருக்கிறது என்று முடிவு செய்தான். சேணத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிற கைகளில்தான் அவனுடைய மானம் முழுதும் திரண்டு உட்கார்ந்திருப்பதாக இருந்தது அவனுக்கு. சேணத்தை வெறித்தனமாக இறுக்கிக் கட்டிக்கொண்டு வெறிகொண்டவனைப் போல வாரை ஒரு ஜிம்பு ஜிம்பினான். குதிரை இதை எதிர்பார்க்கவில்லை. சட்டென ஒரு கணம் நின்றது. ஒரே தாவு.. எகிறி குதிரை மீதமர்ந்தான். ‘அட நீயா.. என் மீதா’ என்று குதிரை திடுக்கிட்டுப் பாய்ந்தது. இன்று ஒரு கை பார்த்துவிடலாம் என்ற ஆவேசம் அதற்கு. லட்சுமணனுக்கும்தான்.

தூக்கித் தூக்கிப் போட்டது. எங்கே கீழே விழுந்துவிடுவோமோ என்றிருந்தது. வெள்ளைக்காரன் தன் காலை எங்கே வைத்துக் கொள்வான் என்று ஞாபகம் வந்துவிட்டது. தடித்த இரும்பு வளையத்துக்குள் காலை நுழைத்துக்கொண்டான். அப்போதும் குதிரை மீது உட்கார்ந்திருப்பது ஆபத்தாகவே இருந்தது. குதிரையின் ஒவ்வொரு தாவலுக்கும் இரண்டடி உயரம் தூக்கிப்போட்டது. அந்தக் கம்பி வளையத்தில் காலை நுழைத்தபடி குதிரையின் மீது உட்காராமல் அந்தரத்தில் உட்கார்ந்திருப்பதுபோல பாவனை காட்டினான். அது அவனைப் பெருமளவுக்குக் காப்பாற்றியது. பாதுகாப்புக்காக சேணம், வார் என்று சகட்டுமேனிக்கு சேர்த்துப் பிடித்துக்கொண்டான். குதிரையின் மீது அமர்ந்தும் அமராதவாறு தோராயமாக நின்றவாறே குதிரையைச் செலுத்தினான். செலுத்தினான் என்று முழுமையாகச் சொல்ல முடியாது. அதுவாகச் செல்கிற பாதையில் பயணமானான்.

நீண்ட தூரம் வந்துவிட்டது தெரிந்தது. திருவள்ளூரா, அதையும் தாண்டிவிட்டோமா என்று தெரியவில்லை. செம்மண் பாட்டை. பனஞ்சாலை, சேறு, சகதி, புதர், பொந்து எல்லாவற்றிலும் நுழைந்து ஓடியது. சாலைகளை விட்டு விலகி, ஏதோ பனந்தோப்பும் ஏரிக்கரையும் தெரிந்தது. வாரைப் பிடித்து மெல்ல அதை ஓர் அரை வட்டமடிக்க வைத்து, வந்த திசை நோக்கி விரட்டினான். மீண்டும் ஏதோ செம்மண் பாட்டையைப் பிடித்த பின்புதான் கால்களால் இடுக்கி உதைப்பதும் வாரை இழுப்பதும் அதைத் தம் விருப்பப்படி செலுத்துவதைச் சாத்தியப் படுத்தியது. கரலபாக்கமா, மேலப்பேடா என்று அத்தனை உறுதியாகத் தெரியவில்லை. பகலிலே அடையாளம் தெரியாது. அங்கிருந்த களமும் ஒத்தைப் பனைமரமும் அய்யனார் சிலையும் அப்படித்தான் ஏதோ ஓர் ஊராக இருக்குமென்று தோன்றச் செய்தன. ‘ஊரா முக்கியம்...? வந்த வேகம்தான் முக்கியம். கட்டுச் சோத்தை எடுத்துக்கிட்டு காலையில் கிளம்பினால் பொழுதே சாஞ்சிடும் இங்க வந்து சேர்றதுக்கு...'

சோழவரம் ஏரிக்குத் தெற்கே ஏரோப்ளான் வந்து இறங்குவதற்காக ஊரையே வளைச்சிப்போட்டு வைத்திருந்தார்கள். வெள்ளைக்காரன் போட்ட ‘சிமிட்டி’ ரோடு பிரம்மாண்டமாகத் தெரிந்தது. ஒரே நேரத்தில் ஐநூறு மாட்டுவண்டி போகலாம், அவ்வளவு பெரிய ரோடு. ‘வார்’ நடக்கிறதால குண்டு போட்றதுக்கு ஏரோப்ளான்லாம் தயாரா கொண்டாந்து நிறுத்திவெச்சிருக்கிறதா சிலம்பன் சொல்லுவான். யார்கிட்ட யார் சண்டை போட்றான், யார் மேல யாரு குண்டு போட்றான்னு எழவும் புரியல. ஆனா, ஏரோப்ளான்ல போனா ஒரு மணி நேரத்திலேயே கடலை தாண்டி மறுகரைக்குப் போய்விடலாம் என்று மட்டும் சிலம்பனுக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது.

கொழுகொழுவென்ற அதன் உடம்பின் மீது தம் தொடை பதிந்திருப்பது அவனுக்குள் ஒருவிதப் பரவசத்தைப் பரப்பியது. பெண்ணோடு சல்லாபிக்கிற மாதிரி இருந்தது. இன்னமும் கிடைத்திராத சுகத்தை மனம் கற்பனை செய்தது. இன்னொரு ஜீவராசியின் உடம்பில் தம் தொடைப் பகுதி உராய்ந்ததில் அந்த உணர்வுக் கிளர்ச்சி. அவனாகவே தலையை ஆட்டி, 'ஆமாம், இப்படித்தான் இருக்கும்' என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான்.

அது பெண் குதிரையாக இருக்குமா... அதனால்தான் நமக்கு இப்படித் தோன்றுகிறதா? கீழே குனிந்து பார்க்க முயற்சி செய்தான். தெரியவில்லை. குலுக்கலில் கீழே விழுந்துவிடுவோம் போல இருந்தது. எங்காவது நிறுத்தி, கீழே இறங்கி மீண்டும் குதிரையில் ஏறுவதற்கு முடிகிறதா என்று பார்க்க ஆசைப்பட்டான். ஆனால், குதிரை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டால் ஜமீன் வீட்டில் பெரிய பிரச்சினையாகிவிடும் என்ற அச்சம் தோன்றியது.

வேகமாகவோ, மெதுவாகவோ ஓட்டுவதும்கூட அவனுக்குப் புரிபட்டது. ஆனால், இப்போது வேகமாகத்தான் செல்ல வேண்டியிருந்தது.

குதிரையேற்றம் என்கிறார்கள். பயிற்சி வேண்டும் என்கிறார்கள்... தமக்கு உடனே புரிபட்டுவிட்டதுபோல இருந்தது அவனுக்கு. ஆனால், ஒரு மாதம் பட வேண்டிய அடியை - காயத்தை ஒரே நாளில் பட்டாகிவிட்டது. முதுகுப் பகுதியில் ரத்தம் ஓடி உறைந்து போயிருப்பதை உணர முடிந்தது. கால்களில் வலி. ஆனால், இன்னும் இரண்டு முறை ஓட்டினால் இது வழிக்கு வந்துவிடும் என்று தைரியம் பிறந்தது. சோழவரம் ஏரிக்கரையைக் கடந்தபோது குதிரையை மெதுவாகச் செலுத்த ஆரம்பித்தான். தூரத்தில் ஜமீன் வீடு தெரிந்தது. வாசல் பக்கம் ஒரு லாந்தர் விளக்கு இரவில் எப்போதும் எரியும். அது துலக்கமாகத் தெரிய ஆரம்பித்தது. சலசலப்பின்றி மெல்ல நடைபோட்டது குதிரை. தன்னைக் கட்டுப்பட வைக்கும் திறமை உள்ளவனை அது மதிக்க ஆரம்பித்ததை உணர்த்துவதாக இருந்தது அந்த நடை. இருவருக்குமே பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்ட மாதிரி இருந்தது.

வீடு நெருங்கியதும் குதிரையைவிட்டு இறங்கி, அதன் வாரைப் பிடித்து இழுத்தபடி வீட்டை நெருங்கி அது முன்பு கட்டப்பட்டிருந்த இடத்தில் கட்டினான். இப்போது குதிரையைப் பார்க்கப் பெருமிதமாக இருந்தது. மெதுவாக அதன் வயிற்றுப் பகுதியையும் கழுத்துப் பகுதியையும் வருடினான். குதிரை உடம்பில் சூடு பறந்தது. அது உடம்பைச் சிலிர்த்துக்கொண்டு, அவனை ஒரு தினுசாகக் கழுத்தை வளைத்துப் பார்த்தது.

எப்பாடு பட்டேனும் ஒரு குதிரை வாங்கியே ஆக வேண்டும் என்று முடிவு செய்தபடி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். மார்கழிப் பனி நாளில் நட்சத்திரங்கள் கழுவிவிட்டதுபோல மின்னின. விடியற் பொழுது. லட்சுமணன் உடம்பு வலியை உணர ஆரம்பித்தது.

கொசஸ்தலையில் இறங்கி வேட்டி, முண்டாவோடு ஒரு குளியல் போட்டான். உடம்பு திகு திகு என்று எரிந்தது. ஆடைகளை அங்கிருந்த கிராவல் கல்லில் அரக்கித் தேய்த்தான். ரத்த தடயம் தெரியாமல் இருந்தால் சரி. ஈரத்தோடு அதை மீண்டும் உடுத்திக்கொண்டு வானம் பார்த்தான். கோழி கூவும் நேரம் என்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. குளிரில் உடல் தடதடக்க ஆரம்பித்தது.

- தொடரும்