அத்தியாயம் 1

163.32k படித்தவர்கள்
24 கருத்துகள்

“இதோ பார்... என் மகள் ஒரு ‘பி.இ.’ பட்டதாரி! ஒரு படிப்பில்லாதவனுக்கு, பணம் இருக்குங்கிறதுக்காக நான் பொண்ணு தர மாட்டேன். என் மாப்பிள்ளையை நான் ஒரு ‘பில்கேட்ஸ்’ அந்தஸ்துக்கு யோசிச்சு வெச்சிருக்கேன். போய்ச் சொல்... போ!”

டகு போன்ற அந்த உயர்ரக கார், சொக்கிகுளம் அம்பாரி மாளிகை என்னும் அந்த பிரம்மாண்ட மாளிகைக்குள் நுழைந்து, நின்றது.

காரிலிருந்து இறங்கினாள், ‘லயன்’ லட்சுமி என்று கம்பீரமாக எல்லோராலும் அழைக்கப்படும் அந்த மாளிகையின் எஜமானி. எஜமானிதான். எஜமானர் சக்கரவர்த்தி சாரநாதன் ஒரு விமான விபத்தில் வானத்திலேயே உயிரை விட்டுவிட்டார். அவர் உடம்பு என்று கிடைத்ததெல்லாம் ஓர் ஐந்தாறு கிலோ சதைக் கோளங்கள்தான்.

அவற்றை வைத்து ஒரு மணிமண்டபம் கட்டி இருந்தாள், லட்சுமி. காரை விட்டு இறங்கினால் ‘பளிச்’சென்று பார்க்க முடியும், கூம்பு வடிவக் கூரையுடன் மணிமண்டபம். சுற்றிலும் வட்டமாய் சவுக்குக் கன்றுகளால் ஆன வேலி. அது போக ஏராளமான பூச்செடிகள்.

“சொன்னேன் மேடம். ஆனா, அந்த ஆளோ, ‘நான் அரசியல்வாதியா வரலை. மேடமும் நானும் ஒரே ஜாதி. கூட்டிக்கழிச்சா தூரத்து சொந்தமும்கூட. நான் வந்திருக்கிறது வேற ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேச’ன்னு சொல்றாரு மேடம்.”

“என்னய்யா பெரிய முக்கியமான விஷயம்? இன்னிக்கு இவன், நாளைக்கு இன்னொரு கட்சிக்காரன். வரிசையா வருவாங்க. அப்புறம் கட்சி நிதி, சிலை வைக்க நிதின்னு ஆரம்பிப்பாங்க. மறுத்தா அதிகாரிகளை வைத்து திடீர் சோதனை, அது இதுன்னு தொல்லை தருவாங்க. என் புருஷன்காரர் இவங்ககிட்ட சிக்கி அவதிப்பட்டது போதாதா?”

“மேடம், இந்த ஒரு தடவை அவரைப் பார்த்து அனுப்பிடுங்க. அடுத்த தடவை அவர் நம்ம அரண்மனை பக்கமே வராதபடி நான் பார்த்துக்கிறேன்.”

“இந்தத் தடவையே அவன் என்னை விழுங்காம நான் பார்த்துக்கணுமேய்யா?”

“அதெல்லாம் எதுவும் ஆகாது மேடம். உங்கள விழுங்க ஒருத்தர் இனிமேதான் பொறக்கணும்.”

“போதும்யா. நீயும் உன் பங்குக்கு ‘ஐஸ்’ கட்டியை வைக்காதே. ஆமா, வேற யாரெல்லாம் வந்துருக்காங்க?”

“சினிமா தியேட்டர் ராஜாங்கம், ரைஸ்மில் ராஜேந்திரன், காற்றாலை கன்னையன். அப்புறம், உள்ளூரில் வீரகாளியம்மன் கோயில் தர்மகர்த்தா.”

“ராஜாங்கம் எதுக்கு வந்துருக்கான்?” 

“அவர் மக வயசுக்கு வந்துருக்காம். சடங்கு வச்சுருக்காரு. நீங்க வந்து மகளை ஆசீர்வாதம் பண்ணணுமாம்.”

“சரி, அப்புறம் ராஜேந்திரன்?”

“அவரு தன் தங்கச்சியோட கல்யாணப் பத்திரிகை கொடுக்க வந்துருக்காரு, மேடம்.”

“கன்னையன்?”

“ராதாபுரம் பக்கமும், நாங்குனேரி பக்கமும் ஏதோ இடம் வருதாம். நல்ல விலையாம். நம்மளை மடக்கிப் போடச் சொல்லத்தான் வந்துருக்காரு.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“இவன் ஒருத்தன்தான் எனக்கு உபயோகமானவன். மத்த அவ்வளவும் எனக்கு செலவு. சரி, முதல்ல அந்த எம்.எல்.ஏ.வை அனுப்பு.”

“மாஜி எம்.எல்.ஏ. மேடம். இப்ப அரசியல்ல அவ்வளவு ஈடுபாடு இல்லை, அவருக்கு.”

“சரி சரி, வரச் சொல்லு.” 

“சரிங்க மேடம்.” சிட்டிபாபு விலகினான்.

லட்சுமியின் கைப்பையில் இருந்த செல்போனிலிருந்து அவளுக்குப் பிடித்த, ‘ஹலோ’ டியூனில் எம்.ஜி.ஆரின் “நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்” பாடல்!

செல்போனை எடுத்து, திரையைப் பார்த்தாள். திரையில் பிரியதர்ஷினி என்கிற பெயர். அதைப் பார்த்த மாத்திரத்தில் லட்சுமி முகம் ஓர் ஆயிரம் வாட்ஸ் பல்புபோல ஒளிவிட ஆரம்பித்தது.

“பிரியா...” 

“அம்மா...” 

“எப்படிடா இருக்கே?”

“நல்லா இருக்கேன்ம்மா. நான் இப்ப மதுரை கிளம்பி வந்துகிட்டிருக்கேன். என்னோட படிப்பு முடிஞ்சிடிச்சி.”

“அய்யோ... எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்கே நீ. ஆமா எப்ப வருவே?”

“நாளைக்கு விமானத்துல ‘டிக்கெட்’ எடுத்துட்டேன். விமான நிலையத்துக்கு ஞானமணியை அனுப்பிடும்மா.”

“கட்டாயம்... எனக்கு இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?”

“உனக்கு மேலே எனக்கும் சந்தோஷம்மா. நான் இனி உன்னைப் பிரிய வேண்டிய அவசியமே இல்லை.”

“வாடா... வா. சீக்கிரமா வா. மத்த விஷயங்களை நேர்ல பேசுவோம். இங்கே சிலர் ‘வெயிட்’ பண்ணிக்கிட்டு இருக்காங்க.”

“சரிம்மா.”

பிரியா என்கிற பிரியதர்ஷினி அந்தப் பக்கமாய் அடங்கினாள். ஆனால், லட்சுமி வரையில் ஓர் இன்பச் சுவை அவளுக்குள் பொங்கத் தொடங்கி இருந்தது.

கச்சிதமாகக் கும்பிட்டபடியே மாஜி எம்.எல்.ஏ. உள்ளே நுழைந்தார்.

“வணக்கம்மா.” 

“வாங்க வாங்க. உக்காருங்க.”

“உங்க பி.ஏ. என்னை ஒரு அரசியல்வாதியாவே பார்க்கிறார். ஆனா, நான் இப்ப அதைவிட்டு விலகிகிட்டே இருக்கேன்.”

“ஏன் அப்படி? அதுலேயும் நீங்க எம்.எல்.ஏ.வாவே இருந்தவரு.”

“அரசியல்ல அதிகாரம் எப்பவும் கைல இருந்துகிட்டே இருக்கணும்மா. இப்பப் பாருங்க, நான் ‘பவர்’ இல்லாத மாஜி எம்.எல்.ஏ. இந்தத் தடவை கட்சில எனக்கு ‘சீட்’ தரலை. இத்தனைக்கும் 25 லட்ச ரூபாயோடுதான் நான் தலைவரைப் பார்த்தேன். ஆனா, 50 லட்சத்தோடு போய் ஒருத்தன் காரியத்தைக் கெடுத்துட்டான். இந்த மாதிரி போட்டிகளைச் சந்திக்க ரொம்பவே தில்லும் திராணியும் தேவைப்படுது.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“சரி. நீங்க வந்த விஷயத்தைச் சொல்லுங்க.”

“அம்மா, நான் வந்துருக்கிறது ரொம்ப முக்கியமான விஷயங்க.”

“சொல்லுங்க.”

“உங்களுக்கு நரிக்குடி ஜமீன் நல்லமணி ஐயாவைத் தெரியும்தாங்களே?”

“நல்லா தெரியும். எல்லா விதத்திலும் என் ஆஸ்திபாஸ்திக்கு சமமான ஆள். அதுக்கென்ன?”

“இல்ல. அவருக்கு ஒரே ஒரு பேரன். பேர் மணிகண்ட பிரபு. பிரபுன்னு கூப்பிடுறாங்க. சரியான படிப்பில்லை. அதனால தொழில்ல இறக்கிவிட்டாரு.”

“அந்த பிரபுவுக்கு இப்ப என்ன?”

“இல்லீங்க. அவனுக்கு உங்க பெண் நல்லா இருக்கும்னு நல்லமணி ஆசைப்படுறாரு...”

மாஜி எம்.எல்.ஏ. சொல்லி முடித்த நொடி - லட்சுமிக்கு முகமானது பரங்கிப் பழம்போல சிவந்துவிட்டது. “ஆமா, நீரு எப்ப இருந்து ‘புரோக்கர்’ தொழிலுக்கு மாறினீரு?” லட்சுமியிடம் ஆவேசம் ஆரம்பமாயிற்று.

“அவசரப்படாதீங்க. நல்லமணி ஐயா ஆசைப்படுறதுக்குப் பின்னாடி ஒரு சரியான காரணம் இருக்கு.”

“இதோ பார். என் மக ஒரு பி.இ. பட்டதாரி. ஒரு படிப்பில்லாதவனுக்கு பணம் இருக்குங்கிறதுக்காக நான் பொண்ணு தர மாட்டேன். என் மாப்பிள்ளையை நான், ‘பில்கேட்ஸ்’ அந்தஸ்துக்கு யோசிச்சு வைச்சிருக்கேன். போய்ச் சொல்லு, போ...”

“அம்மா... நீங்க அவசரப்படுறீங்க. நான் சொல்ற காரணத்தைக் கேட்டுட்டு, அப்புறம் நீங்க எதுவா இருந்தாலும் பேசுங்க.”

“என்னய்யா பெரிய காரணம்?”

“அதை நான் கையோட கொண்டுகிட்டே வந்துருக்கேங்க.”

மாஜி, பேச்சோடு பேச்சாகத் தன் கைப்பையிலிருந்து ஒரு சிறு மரப்பெட்டியை எடுத்து திறந்தார்.

உள்ளே...

- தொடரும்