சிறுகதை

4.46k படித்தவர்கள்
49 கருத்துகள்

“ஏம்மா நமக்கு ஒரு வூடுல்ல?” என்று குளிரில் நடுங்கியபடி கேட்டாள் செல்லி. நாகு உடனே பதில் சொல்லவில்லை. இருளில் மங்கலாக ஒளிர்ந்த செல்லியின் சிறுவிழிகளை அவளால் எதிர்கொள்ள இயலவில்லை. சட்டென்று இழுத்து, புடவை முந்தானைக்குள் அவளை அணைத்துக்கொண்டாள். தாய்ச்சிறகின் சூட்டில் சற்றே குளிர் தணிந்த குஞ்சைப் போல் அம்மாவின் மடியில் சுருண்டு தலை புதைத்தாள் செல்லி.

நின்று நிதானமாகப் பெய்த மழையில், கூட்டாகக் குலவையிட்டுக் கொண்டிருந்தன தவளைகள். மூன்று குழந்தைகள் கொட்டகைத் தரையில் வரிசையாக உறங்கிக் கொண்டிருந்தன. அவர்களின் மேல் ஒரே போர்வையாகப் படர்ந்திருந்தது நாகுவின் பழைய புடவை. இன்னொரு பக்கம் கால்சட்டைக்குள் கைகளை இடுக்கியபடி தூங்கிக் கொண்டிருந்தான் சங்கிலி. அவனின் தலைமாட்டில் தாவிக் குதித்து நின்றது ஒரு தவளை. கைவாகில் வைத்திருந்த மூங்கில் கழியை எடுத்து தவளையைத் தரைக்குக் கீழே நெம்பித் தள்ளினாள் நாகு. ஈர மண்ணில் குதித்துத் தாவிச் செல்லும் அந்தத் தவளையைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லி.

வீடாகியிருந்த மயானக் கொட்டகையின் நான்கு பக்கத்திலிருந்தும் சீராக சத்தமிட்டபடி தரை இறங்கிக் கொண்டிருந்தன மழைத் தாரைகள். இடுகாட்டுச் சுவருக்கு அப்பாலிருந்து மயானக் கொட்டகை மீது பரவியிருந்த குழல் விளக்கின் ஒளி. அங்கு அப்பிக் கிடந்த இருள் துடைக்க யாரோ கருணையுடன் கை நீட்டுவது போலிருந்தது.

“ரொம்பக் குளிருதாடா செல்லிம்மா?” - செல்லியின் கேள்விக்கு வேறொரு திசை திருப்பும் கேள்வியைப் பதிலாகச் சொன்னாள் நாகு.

“ஆமாம்மா!”

“இப்ப மழை விட்ரும்! குளிர் போயிரும்!”

“நாம வூட்டுக்குள்ள படுத்திருந்தா குளுராதுல்லம்மா?” செல்லியின் கேள்வி வேறொரு அம்பாக நாகுவை நோக்கிப் பாய்ந்தது கூர் மழுங்காமல்.

“மயானத்துல பொணம் பொதைக்கிறவங்கம்மா நாம. தீட்டுப்பட்ட சாதி! நமக்கு யாரும் வாடகைக்கு வூடு தர மாட்டாங்க. நீங்கள்ளாம் நல்லாப் படிச்சி வேலைக்குப் போனா நெறைய பணம் சம்பாதிக்கலாம். நாமளே சொந்தமா எடம் வாங்கி வூடு கட்டிரலாம். அதுவரைக்கும் இதான் நமக்கு வூடு!” என்று சொல்லி ஒரு சிறு இடைவெளி விட்டு, “நீ நல்லா படிப்பியா கண்ணு?” என்றபடி இன்னும் இறுக்கமாக செல்லியை அணைத்துக் கொண்டாள் நாகு.

செல்லியும் அவளுக்கு உடன் பதில் சொல்லவில்லை.

தூங்கிக் கொண்டிருக்கும் சேகர், சுமிதா, சீதேவி மூன்று பேரையும் பார்த்தாள். குழல் விளக்கு வெளிச்சத்தில் வெள்ளையாக இறங்கும் மழைத்தாரைகளைப் பார்த்தாள். தனியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் சங்கிலி அண்ணனைப் பார்த்தாள். கடைசியாக நாகுவின் முகம் பார்த்துச் சொன்னாள் “நல்லா படிக்கிறேம்மா!”

மூத்த மகள் மாரியைப் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள் நாகு. படிப்பு ஏறவில்லை அவளுக்கு. ஆனால் பதினெட்டு வயதிலேயே இந்த மயான வீட்டிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டது. வில்லியனூரில் ஒரு ஆட்டோக்காரப் பையனுக்குக் கட்டிக் கொடுத்துவிட்டாள். இப்போது ஆறு மாசம் முழுகாமல் இருக்கிறாள்.

அடுத்தவன் சங்கிலிக்கும் படிப்பு ஏறவில்லை. ஐந்தாவது வகுப்பைத் தாண்ட முடியவில்லை அவனால். படிப்பை விட தப்பு அடிப்பதிலும் சங்கு ஊதுவதிலுமே ஆர்வமாக இருந்தான். உடன் படிக்கும் மாணவர்கள் ‘பொணம் பொதைக்கிறவன்’ எனக் கிண்டல் செய்வதாகச் சொல்லி பள்ளிக்குப் போவதை நிறுத்தி விட்டான்.

அடுத்து இரண்டும் பெண்கள். சுமிதா, சீதேவி. அடுத்தவன் சேகர். கடைக்குட்டியாக இவள். செல்லி.

“நல்லா படிக்கிறேம்மா!” எனச் செல்லி சொல்லிய மாதிரி, மற்ற குழந்தைகள் அவ்வளவு அழுத்தமாகச் சொல்லியது இல்லை. ‘இது ஒண்ணுதான் படிச்சிக் கரை சேருமோ’ என்று நினைத்துக் கொண்டாள். 

மயானக் கொட்டகை வாழ்க்கை நாகுவுக்குப் புதிதில்லை. அவள் பிறந்ததும் இங்குதான். தன் குழந்தைகளைப் போலவே தூங்கு மூஞ்சி மரத்தடியிலும், பிணம் புதைத்த மேடுகளிலும் சுற்றிச் சுற்றி தம்பி ஆறுமுகத்துடன் சேர்ந்து விளையாடி இருக்கிறாள். 

குழந்தைகள் தன்னிடம் கேட்கும் கேள்விகளை, செல்லி வயசில் இருக்கும்போது அவளும் கேட்டிருக்கிறாள் அப்பாவிடம்…

“என் அப்பன் பாட்டன் காலத்திலேருந்தே இந்த மயானக் காடுதாம்மா நம்ம குடும்பத்துக்கு வூடு! பொணத்த பொதைச்சிட்டுப் போறவங்களுக்குத்தான் மயானம்னா பயம், பீதி! அருவருப்பு! நமக்கென்ன? புதைச்ச பொணம் நட்டுகினு எயிந்து வரவா போவுது?”

“எங்கப்பன் காலத்துல இந்தக் காம்பவுண்டு செவரு கிடையாது. தரை இல்ல. ஒரு கீத்துக் கொட்டகைதான். பொதருக்காடுதான். நல்லபாம்பும் கட்டுவிரியனும் எயஞ்சிகிட்டே இருக்கும்! நீ நாலு எயுத்து படிச்சி கவருமெண்டு வேலைக்குப் போனா இங்கியே நாம ஒரு வூடு கட்டிக்கிலாம் தாயி!” என்று முனுசாமியும் பதில் சொல்லியிருக்கிறார்.

நாகுவின் படிப்புக் கனவு நிறைவேறவில்லை. சரோஜா அவளை ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க விடவில்லை. “பொட்டப் புள்ள படிச்சி நம்ம சாதியில என்ன கியிக்கப் போறே?” என்று சொல்லி படிப்பை நிறுத்திவிட்டாள். அவள் வயசுக்கு வரும்போது முனுசாமி செத்துப் போனார். நாகுவின் தம்பி ஆறுமுகம் அப்போதே பீடி குடிக்கவும் ஊர் சுற்றவும் தொடங்கி விட்டான்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

முனுசாமிக்குப் பிறகு இடுகாட்டு வேலைகளில் சரோஜாவுக்கு நாகுவே ஒத்தாசையாக இருந்தாள். இரண்டு வருஷம் கழித்துதான் தைய்யான் மயானத்துக்கு வந்தான். அவன் சரோஜாவின் அம்மா வழி உறவு. முனுசாமியை இழந்திருந்த குடும்பத்தின் வெற்றிடத்தை அவன்தான் நிரப்பினான். மயானத்துக்கு வரும் பிணங்களுக்குப் பொறுப்பாகக் குழி வெட்டினான். மற்ற நேரங்களில் மார்க்கெட்டில் லோடு வேலைக்குப் போனான். சரோஜாவுக்கும் நாகுவுக்கும் பாதுகாப்பாக இருந்தான். வயசுக்கு வந்து கல்யாண ஆசைகளில் மிதந்து கொண்டிருந்த நாகுவும், “மாமா! மாமா!” என்று அவனுடன் ஒட்டிக்கொண்டாள்.

முனுசாமி இறந்து வருஷம் கழித்தவுடனேயே ஒதியன் தோப்பு மாரியம்மன் கோயிலில் வைத்து, தையானுக்கு நாகுவைக் கட்டிக்கொடுத்து விட்டாள் சரோஜா. சரசரவென்று நாகுவும் ஆறு குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டாள். 

கடைக்குட்டி செல்லி பிறந்த ஆறாவது மாசம் நாகுவுக்கு அடிவயிற்றில் தாங்க முடியாத வலி. பாண்டிச்சேரி பெரியாஸ்பத்திரிக்குப் போனாள். கர்ப்பப்பையில் கட்டி என்றும் அதை அகற்ற வேண்டும் என்றும் சொன்னார்கள். அப்போது ஒரு முறை அவளை, ஆஸ்பத்திரியில் பார்த்து விட்டுப் போனவன்தான் தைய்யான். பிறகு வரவே இல்லை. அதற்கு முன் ஒருநாளும் அப்படிப் போனவன் இல்லை.

ஆறுமுகம், பாண்டிச்சேரி முழுவதும் தைய்யானைத் தேடி அலைந்தான். கடலூர், திண்டிவனம் வரைகூட சென்று தேடினான். அவனைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. நாகுவையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு தைய்யான் எங்கோ போய்விட்டான் என்பதை நினைக்க நினைக்க அவனுக்கு வெறுப்பே மிஞ்சியது.

பலரிடமும் தைய்யானைப் பற்றி ஆறுமுகம் சொல்லி வைத்திருந்ததால், ஒருநாள் அவன் எங்கு இருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது.

நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் ஆப்பக்கடை வைத்திருக்கும் மங்காவின் மடியில் மயங்கிக் கிடந்தான். ராவுத்தர் சிமெண்ட் கடையில் லோடுமேன் வேலை பார்ப்பதையும் அறிந்தான்.

தைய்யானைப் போய் பார்த்து கோபத்தைக் காட்டிக்கொள்ளாமல் பக்குவமாய்ப் பேசினான். நாகுவையும் குழந்தைகளையும் பிரிந்து வந்ததற்கு அவன் சப்பைக் காரணங்களைச் சொன்னான். நாகு தன்னை சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை என்று கோபமாகக் கத்தினான். நாகுவுக்கு உடம்பு சரி இல்லாமல் போனதைச் சொல்லி, எவ்வளவோ கெஞ்சியும் அவன் மசிவதாக இல்லை. வாட்டசாட்டமான மங்காவின் புது உடம்பில் மயங்கிக் கிடக்கிறான் என்பது மட்டும் ஆறுமுகத்துக்கு புரிந்து போயிற்று.

ஆறுமுகத்தின் உச்சி மண்டையில் சட்டென்று சூடு பரவியது.

“மாரு தொங்கி ஒடம்பு வத்திப் போற வரைக்கும் ஒனக்கு எங்க அக்கா தேவப்பட்டா! ஆறு புள்ளிங்கள பெத்துப் போடுற வரைக்கும் இந்தக் கொறையெல்லாம் கண்ணுக்குத் தெரீலியா ஒனக்கு? புதுப் பொட்டச்சி மயக்கத்துல வுயிந்து கெடக்கற நீயி, பாடு. அக்காவோட வவுத்தெரிச்சல் உன்ன சும்மாங்காட்டியும் வுடாதுடா. ஒதியந்தோப்பு மாரியாத்தா மேல சத்தியமா ஒனக்கு நல்ல சாவு வராதுடா” என்று ஆவேசமாகக் கத்திவிட்டு வந்தான்.

அன்றிரவே நாகுவைப் போய்ப் பார்த்தான் ஆறுமுகம். 

மயானக் கொட்டகையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தன குழந்தைகள்.

தைய்யான் மேலுள்ள வெறுப்பில் அவன் மூச்சு முட்ட சாராயம் குடித்து இருந்தான். இயலாமையும் கோபமும் போதையுடன் கலக்க, தைய்யான் மங்காவின் மடியில் விழுந்து கிடக்கும் விஷயத்தை நாகுவிடம் சொல்லி, குமுறத் தொடங்கினான்.

“என்ன பொம்பளைக்கா நீயி? வெட்டியான் வூட்டுல கொயந்தையா பொறந்ததுக்காக எத்தினி அசிங்கப்பட்ருக்கோம் நாம? அல்லாத்தையும் மறந்துட்டே. கல்யாணங் கட்டிக்கிட்ட நாள்ளேருந்தே அவன் குடிகாரன்னு தெரியும்... நெதமும் ஒங்கூட சண்டை போடுவான். நீயும் கண்டமேனிக்குக் கயுவி வூத்துவே. ஆனா, ஒரு ராத்திரியாச்சும் ரோசமா தனியா படுத்திருக்கியா நீயி? பொணம் பொதைக்கிற பொயப்புல வதவதன்னு ஆறு புள்ளிங்கள பெத்துப் போட்டிட்டியே. அந்த நாதாரி இன்னொருத்தி ஒடம்பத் தேடிப் பொயிட்டான். இதுங்கள எப்படி கரை சேப்பே,சொல்லு?”

“ராவுல குடிச்சாலும் அடிச்சாலும் பகல்ல நல்லா இருந்த மனுசந்தானடா? குயி வெட்டியும் லோடு தூக்கியும் நோவுற ஒடம்பாச்சேன்னு கொறை இல்லாம வச்சுக்கிட்டேன். அது இப்படி ஊரு மேயப் போவும்னு எப்படிடா தெரியும்?”

“இனிமே அவன நம்பி பிரயோஜனம் இல்லக்கா. ஆவ வேண்டிய வேலயப் பாரு” என்று சொல்லி விட்டு, எழுந்து போய்விட்டான் ஆறுமுகம்.

சட்டென்று நாகுவுக்கு முகம் சிவந்தது. கண்கள் கலங்கின. ஆறுமுகத்திடம் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. மயானக் கொட்டகை முகப்பில் உறைந்து போய் உட்கார்ந்தாள்.

மயானக் காட்டில் பூத்திருந்த அரளிப்பூக்கள், அங்கு நடக்கும் எல்லாவற்றையும் பார்த்து தலையாட்டுவதுபோல் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.

“அப்பா எங்கம்மா போச்சி… ஏம்மா வரல?” என்று கேட்ட சங்கிலியிடம் “வெளியூருக்கு வேலைக்குப் போயிருக்குப்பா… வந்துரும்!” என்று சொன்னாள் நாகு.

கர்ப்பப்பை எடுத்த பிறகு முன்புபோல் கனத்த வேலைகளை அவளால் செய்ய முடியவில்லை, சங்கிலி அவளுடைய இயலாமையைப் புரிந்துகொண்டான்.

“இனிமே நான் குயி வெட்றேம்மா. நீ சோறாக்கிப் போடு. புள்ளிங்கள பாத்துக்க போதும்” என்று சொல்லி விட்டான்.

முனுசாமி குழி வெட்டிய மண்வெட்டியும் கடப்பாரையும், நாகுவின் கைவழியாகச் சங்கிலிக்குப் போயிற்று.

மகனை நினைத்து சந்தோஷப்பட்ட நாகு, புருஷனை நினைத்து நினைத்து உள்ளுக்குள் குமுறினாள். ‘அந்தத் துப்புகெட்ட பயலுக்கு நீதான் கூலி கொடுக்கணும்!’ என்று மாரியம்மனிடம் முறையிட்டாள். இரண்டு நாட்களுக்குள்ளாகவே அவள் வேண்டுதலுக்குப் பலன் கிடைத்தது. 

தூங்குமூஞ்சி மரத்தின் உச்சிக் கிளையில் உட்கார்ந்து, ஒரு காகம் உரத்த குரலில் கரைந்து கொண்டிருந்தது. பெருங்கிளை ஒன்றில் கட்டப்பட்டிருந்த புடவை ஏணையில் நின்றபடி, வேகமாக ஆடிக்கொண்டிருந்தான் சேகர்.

முதல் நாள் பிணம் சுமந்து வந்த, ஒரு முடைந்த பச்சை ஓலை மட்டையில் உட்கார்ந்து, கண்களை மூடித் திறந்தபடி புறங்கைகளில் அடித்து அடித்து, சுமிதாவும் சீதேவியும் ‘ஒரு பூ ரெண்டு பூ’ விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஆறுமுகம் இரண்டு ஆட்களுடன் மயானத்துக்குள் வந்து கொண்டிருந்ததை நாகு கவனித்தாள். ‘இன்னைக்குப் பொயப்புக்கு ஏதோ ஒரு பிணம் வரப் போகிறது’ என்று நினைத்துக் கொண்டாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

நாகுவின் பக்கத்தில் வந்த ஆறுமுகம், “யக்கா! ஒரு சம்பவம் நடந்து போச்சிக்கா!” என்றான்.

“இவுங்க வூட்ல சாவு வுயிந்திருக்கா... எப்ப எடுத்தாறாங்க?” என்றாள் நாகு.

“இல்லக்கா” என்றான் கொஞ்சம் தயங்கியபடி.

“வேற இன்னாடா, சொல்லு” என்றாள்.

“தைய்யான் மாமா செத்துப் பூடுச்சுக்கா. ஓவரா குட்ச்சிட்டு மார்க்கெட்டு வாசல்ல வுயிந்துக் கெடந்திருக்கு.”

நாகுவின் முகத்தில் எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை.

“அந்த நாதாரி இருந்தா இன்னா செத்தா இன்னா? இந்த எயவு சேதிய எங்கிட்ட ஏன்டா சொல்ற?” என்று சட்டென சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

சிறிது நேரத்திலேயே சரோஜாவும் வந்துவிட்டாள். எல்லோருமாக சேர்ந்து நாகுவிடம் பேசினார்கள். மகன் சங்கிலியை வைத்து அப்பன் தைய்யானுக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். ஆறுமுகமும் சரோஜாவும் நாகுவைத் தனியே அழைத்துப் போய் கெஞ்சினார்கள். 

நாகு அசைந்து கொடுக்கவே இல்லை. தனக்குப் புருஷன் என்ற வகையிலோ தன் குழந்தைகளுக்குத் தகப்பன் என்ற முறையிலோ தைய்யானுக்கு எந்தச் சடங்கும் செய்ய முடியாது என்பதில் உறுதியாக நின்றாள்.

அங்கு வரும் ஏதோ ஒரு பிணத்தைப் புதைப்பததுபோல், அவனையும் புதைப்பதற்கு மட்டும் கடைசியாகச் சம்மதித்தாள்.

சங்கிலிதான் குழி வெட்டினான். அம்மாவையும் தங்களையும் விட்டுவிட்டு தைய்யான் எங்கோ வேறு ஒரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துகிறான் என்பதை, கோபத்தில் நாகு புலம்புவதிலிருந்து அறிந்து வைத்திருந்த அவனுக்கு அப்பனின் மேல் வெறுப்பே மிஞ்சியிருந்தது. அதனால் வேண்டா வெறுப்பாகவே குழி வெட்டினான்.

தங்கள் அப்பா என்ற உணர்ச்சி சிறிதுமின்றி, அங்கு வரும் எல்லாப் பிணங்களையும் வேடிக்கை பார்ப்பதுபோல், அவனின் உடல் புதைக்கப்படுவதை வேடிக்கை பார்த்தனர் தைய்யானின் குழந்தைகள். அம்மாவுக்கு இல்லாத உறவு தங்களுக்கும் இல்லை என்பதை அந்தப் பிஞ்சுகள் எப்படி உணர்ந்தன எனத் தெரியவில்லை.

தைய்யானுக்கு ஒரு மகனாக சங்கிலி செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை, தைய்யானின் கூட்டாளி ஒருவன் செய்து முடித்தான். அவன் உடல் புதைக்கப்பட்டது. உடன் வந்தவர்கள் மயானத்திலிருந்து வெளியேறத் தொடங்கினார்கள்.

தைய்யானுக்கு இறுதிச் சடங்கு செய்தவன் நாகுவை ஜாடை காட்டி, தூங்குமூஞ்சி மர நிழலுக்குத் தனியே அழைத்தான்.

நாகு அவன் அழைப்புக்குக் கட்டுப்பட்டு, மர நிழலில் ஒதுங்கினாள்.

இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து “இந்தாம்மா! மயானக் கூலி!” என்று நாகுவிடம் நீட்டினான்.

“அனாதப் பொணம் பொதச்சா மயானக் கூலி வாங்குற பயக்கம் இல்லீங்க!” என்று பட்டென்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் நாகு.

பாறைபோல் முதிர்ந்து பூமியில் கால் ஊன்றியிருந்த, தூங்குமூஞ்சி மரத்தின் மறைவான பக்கத்து வேர்முண்டில் உட்கார்ந்து, அங்கு நடக்கும் எதுவும் அறியாதவளாக, கையில் பாடப்புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள் செல்லி.

அங்கு வந்த நாகு, அவள் படித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். அதுவரை இறுகியிருந்த அவளின் முகம் லேசாக மலர்ந்தது.