அத்தியாயம் 1

14.32k படித்தவர்கள்
13 கருத்துகள்

முன்னுரை

கோயில் பற்றிய ஆய்வுகள் நாட்டு வரலாற்றாய்வாக மட்டுமன்றிச் சமூக, பண்பாட்டாய்வுகளாகவும் விளங்கும் திறமுடையன. தமிழ்நாட்டில், கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுக்கள் தரும் செய்திகளும், கோயில்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலைச் சிறப்புகளுமே பெரிதும் ஆராயப்படுகின்றன. கே.கே.பிள்ளையின் ‘சுசீந்திரம் கோயில்’, கே.வி.இராமனின் ‘காஞ்சி வரதராஜஸ்வாமி கோயில்’ ஆகிய நூல்களும், சி.கிருஷ்ணமூர்த்தியின் ‘திருவொற்றியூர்க் கோயில்’ எனும் அச்சிடப்படாத ஆய்வு நூலும் குறிப்பிடத் தகுந்தவையாகும். தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையினரும் திருவெள்ளறை, திருவையாறு ஆகிய ஊர்க்கோயில்களைப் பற்றி நூல்கள் வெளியிட்டுள்ளனர்.

இவையன்றி, ஒரு கோயிலுக்கும் அதனை வழிபடும் அடியவர்க்கும் உள்ள உறவு, கோயிலைப் பற்றிச் சமூகத்தில் வழங்கும் கதைகள், பாடல்கள், வழக்குமரபுச் செய்திகள், அக்கோயிலை ஒட்டி எழுந்த சமூக நம்பிக்கைகள், திருவிழாக்களில் அவை வெளிப்படும் விதம் ஆகியவை பற்றிய ஆய்வுகள் தமிழ்நாட்டில் பெருகி வளரவில்லை. பினாய் குமார் சர்க்கார் என்பவர் கிழக்கிந்தியப் பகுதிகளில் கொண்டாடப்பெறும் ‘கஜல்’, ‘கம்பீரா’ எனும் இரண்டு திருவிழாக்களை மட்டும் ஆராய்ந்து ‘இந்துப் பண்பாட்டில் நாட்டுப்புறக் கூறுகள்’ எனும் ஆங்கில நூலை 1917-இல் எழுதினார். இவ்வகையான ஆய்வு நெறி தமிழ்நாட்டில் பிள்ளைப்பருவம் தாண்டாத நிலையிலேயே உள்ளது.

நோக்கம்

‘அழகர் கோயில்’ என்பது இந்த ஆய்வின் தலைப்பாகும். இக்கோயில் மதுரைக்கு வடகிழக்கே பன்னிரண்டு கல் தொலைவிலுள்ளது. கோயில்கள் வழிபடும் இடங்களாக மட்டும் ஆகா. அவை சமூக நிறுவனங்களுமாகும். எனவே சமூகத்தின் எல்லாத் தரப்பினரோடும் கோயில் உறவுகொள்கிறது. ஒரு குறிப்பிட்ட கோயிலோடு அரசர்களும் உயர்குடிகளும் கொண்ட உறவினைப் போலவே, ஏழ்மையும் எளிமையும் நிறைந்த அடியவர்கள் கொண்ட உறவும் ஆய்வுக்குரிய கருப்பொருளாக முடியும். அவ்வகையில் அழகர் கோயிலோடு அடியவர்கள் – குறிப்பாக நாட்டுப்புறத்து அடியவர்கள் கொண்டுள்ள உறவினை விளக்க முற்படும் முன்முயற்சியாக இந்த ஆய்வுக் கட்டுரை அமைந்துள்ளது. இந்த உறவின் வளர்ச்சியில் கோயிலின் பரம்பரைப் பணியாளருக்கும் பங்குண்டு என்பதால் அவர்களும் உளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அழகர் கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் பழமை சான்ற ஒன்றாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளோடு முகவை மாவட்டத்தின் தெற்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான நாட்டுப்புற அடியவர்கள் வருகின்றனர். பொதுவாகச் சமூகத்தோடும், குறிப்பாகச் சிறுதெய்வநெறியில் ஈடுபாடுடைய சாதியாரோடும் இப்பெருந்தெய்வக் கோயில் கொண்டுள்ள உறவினையும் உறவின் தன்மையினையும் விளக்க முற்படுவதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

ஆய்வுப் பரப்பு

இக்கோயிலை ஒட்டிய நிலப்பரப்பில் வாழும் வலையர், கள்ளர் ஆகிய சாதியாரோடும், கோயிலுக்கு வரும் அடியவர்களில் பெருந்தொகையினரான அரிசனங்கள், இடையர் ஆகிய சாதியாரோடும், கோயிற் பணியாளரோடும் இக்கோயில் கொண்டுள்ள உறவு தமிழ்நாட்டு வைணவ சமயப் பின்னணியில் ஆராயப்பட்டுள்ளது. சமூக ஆதரவினைப் பெறுவதற்காகத் தமிழ்நாட்டு வைணவம் சிறுதெய்வ வழிபாட்டு நெறிகளுக்கு நெகிழ்ந்து கொடுத்த நிலையும் இக்கோயிலை முன்னிறுத்தி விளக்கப்பட்டுள்ளன.

ஆய்வு மூலங்கள்

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

சமூக நிறுவனமாகிய கோயில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியாரோடு கொண்ட உறவினையறியக் கல்வெட்டுக்கள் போதிய அளவு துணை செய்யவில்லை. இக்கோயிலைப் பற்றிய இலக்கியங்களும், கோயிலில் காணப்படும் நடைமுறைகளும், திருவிழாச் சடங்குகளும், திருவிழாக்களில் வெளிப்படும் கதைகள், பாடல்கள், நம்பிக்கைகள் முதலியனவும், ஆய்வாளர் களஆய்வில் கண்டுபிடித்த இரண்டு செப்பேடுகளும், செப்பேட்டு ஓலைநகல் ஒன்றும் ஆய்வு மூலங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. கோயிற் பணியாளர் வசமுள்ள சில ஆவணங்களும் நூல்களும் துணைநிலைச் சான்றுகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. இவை தவிர, வினாப்பட்டி ஒன்று உருவாக்கப்பட்டுச் சித்திரைத் திருவிழாவில் வேடமிட்டு வழிபடும் அடியவர்கள் அவ்வினாப்பட்டிக்கு அளித்த விடைகளும் சான்றுகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.

அணுகுமுறை

கோயில், சமூகத்தோடு கொண்டுள்ள உறவு பற்றிய ஆய்வுப் பகுதிகள் விளக்க முறையிலும் மதிப்பீட்டு முறையிலும் அணுகப்பட்டு உள்ளன. ‘ஆண்டாரும் சமயத்தாரும்’ என்ற இயலும், திருவிழா நிகழ்ச்சிகளை ஆராயும் பகுதிகளும் விளக்கமுறையில் அமைந்தவை. ‘சித்திரைத் திருவிழாவும் பழமரபுக்கதையும்’ என்ற இயலில் டென்னிஸ் அட்சனின் கருத்துகள் மதிப்பிடப்பட்டுள்ளன. பதினெட்டாம்படிக் கருப்பசாமி ‘கோயிலும் இடையரும்’, ‘கோயிலும் பள்ளர் பறையரும்’, ‘கோயிலும் வலையரும்’ ஆகிய இயல்கள் விளக்க முறையிலும் மதிப்பீட்டு முறையிலும் அமைந்துள்ளன. கோயிலுக்கும் கள்ளர்க்குமுள்ள தொடர்பு விளக்க முறையிலும் வரலாற்று முறையிலும் அணுகப்பட்டுள்ளது.

அமைப்பு முறை

இந்த ஆய்வேடு பன்னிரண்டு இயல்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

1. அழகர் கோயிலின் அமைப்பு
2. கோயிலின் தோற்றம்
3. இலக்கியங்களில் அழகர் கோயில்
4. ஆண்டாரும் சமயத்தாரும்
5. கோயிலும் சமூகத்தொடர்பும் (கள்ளர், இடையர், பள்ளர்-பறையர், வலையர்)
6. திருவிழாக்கள்
7. சித்திரைத் திருவிழாவும் பழமரபுக் கதையும்
8. வர்ணிப்புப் பாடல்கள்
9. நாட்டுப்புறக் கூறுகள்
10. கோயிற் பணியாளர்கள்
11. பதினெட்டாம்படிக் கருப்பசாமி
12. முடிவுரை

‘அழகர் கோயிலின் அமைப்பு’ என்னும் முதல் இயலில் கோயில் அமைந்துள்ள நிலப்பரப்பின் தொன்மை, கோயிலின் கட்டிடங்கள், மண்டபங்கள் முதலியவை கல்வெட்டுச் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.

‘கோயிலின் தோற்றம்’ என்னும் இரண்டாவது இயலில் இக்கோயிலைப் பற்றிய மயிலை சீனி. வேங்கடசாமியின் கருத்து மதிப்பிடப்படுகிறது. ‘இக்கோயில் பௌத்தக் கோயிலாக இருந்தது’ என 1940-இல் அவர் வெளியிட்ட கருத்து கோயில் ஆய்வாளர்களால் ஏற்கப்படவுமில்லை; மறுக்கப்படவுமில்லை. இவ்வியலில் அவரது கருத்து மதிப்பீடு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

‘இலக்கியங்களில் அழகர் கோயில்’ என்னும் மூன்றாவது இயலில் இக்கோயிலைப் பற்றிய பரிபாடல் பாட்டு ஒன்றும், ஆழ்வார்களின் பாசுரங்களும், பாசுரங்களுக்கான உரையும், இக்கோயில் மீதெழுந்த குறவஞ்சி, பிள்ளைத்தமிழ், கலம்பகம், அந்தாதி, மாலை, வருகைப்பத்து ஆகிய பலவகைப்பட்ட சிற்றிலக்கியங்களும் ஆராயப்படுகின்றன. மேலும் கோயில் இறைவன் பெயர், மலைப்பெயர், விமானம், தலவிருட்சம் முதலிய செய்திகள், இத்தலம் குறித்த பாசுரங்களில் காணப்படும் பிற மத எதிர்ப்புணர்ச்சி முதலியவையும் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளன.

‘ஆண்டாரும் சமயத்தாரும்’ என்ற நான்காவது இயலில் ஆய்வாளர் கள ஆய்வில் கண்ட அமைப்புமுறை விளக்கப்பட்டுள்ளது. ‘ஆண்டார்’ என்பது இக்கோயிலில் தல குருவாக மதிக்கப்பெறும் பிராமணப் பணிப்பிரிவொன்றின் பெயராகும். இப்பணிப்பிரிவினருக்கு மதுரை, முகவை மாவட்டக் கிராமப்புறங்களில் ‘சமயத்தார்’ எனப்படும் பிராமணரல்லாத 18 பிரதிநிதிகள் உள்ளனர். இவர்கள் நாட்டுப்புற மக்களை வைணவ அடியாராக்கி ஆண்டாரிடம் சமய முத்திரைபெறச் செய்வர். பெருமளவு சிதைந்துவிட்ட இவ்வமைப்பு களஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.

‘கோயிலும் சமூகத் தொடர்பும்’ என்ற ஐந்தாவது இயலில் அழகர் கோயிலோடு மேலநாட்டுக் கள்ளர், இடையர், பள்ளர்-பறையர், அழகர் கோயிலை ஒட்டிய சிற்றூர்களில் வாழும் வலையர் ஆகிய சாதியார் கொண்டுள்ள உறவு விளக்கி மதிப்பிடப்பட்டுள்ளது. மேலநாட்டுக் கள்ளரும் வலையரும் வைணவ சமயத்தில் ஈடுபாடு உடையவராக அன்றிப் பிற சமூகக் காரணங்களால் கோயிலோடு உறவுகொண்டனர். இடையரும், பள்ளர்-பறையரும் வைணவத்தில் நாட்டமுடையவர்களாய்க் கோயிலோடு உறவு கொண்டுள்ளனர். பள்ளர்-பறையர் ஆகிய உழுதொழிலாளர் இந்திர வழிபாட்டிலிருந்து பலராம வழிபாட்டின் வழியாகத் திருமால் நெறிக்குள் அழைத்துவரப்பட்டனர் என்ற செய்தி விளக்கப்பட்டுள்ளது.

‘திருவிழாக்கள்’ என்ற ஆறாவது இயலில் சித்திரைத் திருவிழா தவிர்த்த பிற திருவிழாக்கள் விளக்கப்படுகின்றன. அவற்றுள் சமூகத் தொடர்புடைய சில திருவிழாக்கள் விரிவாக விளக்கப்பட்டு மதிப்பிடப் பெறுகின்றன.

இக்கோயில் சித்திரைத் திருவிழா ஏழு, எட்டு, ஒன்பது ஆகிய மூன்று இயல்களில் விளக்கப்படுகிறது. ‘சித்திரைத் திருவிழாவும் பழமரபுக் கதையும்’ என்னும் ஏழாவது இயலில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் விளக்கப்பட்டு மதிப்பிடப் பெறுகின்றன. இப்பழமரபுக் கதை பற்றிய டென்னிஸ் அட்சனின் கருத்துகள் மதிப்பிடப் பெறுகின்றன.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

‘வர்ணிப்புப் பாடல்கள்’ எனும் எட்டாவது இயலில் அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவில் பாடப்பெறும் வர்ணிப்புப் பாடல்கள் ஆராயப்படுகின்றன. நாட்டுப்புற மக்களால் பாடப்பெறும் இவ்வகைப் பாடல்களின் தோற்றமும், மதுரை வட்டாரத்தில் அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவினால் இவை வளர்க்கப்பட்ட செய்தியும் விளக்கப்படுகின்றன.

‘நாட்டுப்புறக் கூறுகள்’ எனும் ஒன்பதாவது இயலில் இக்கோயில் சித்திரைத் திருவிழாவில் நாட்டுப்புற அடியவர்கள் வேடமிட்டு வழிபடும் முறைகள், காணிக்கை செலுத்துதல் போன்றவை வினாப்பட்டி வழியாகப் பெற்ற செய்திகளைக் கொண்டு விளக்கப்படுகின்றன.

‘கோயிற் பணியாளர்கள்’ எனும் பத்தாவது இயலில் கோயிற் பரம்பரைப் பணியாளர் பற்றிய ஆவணச் செய்திகளும் நடைமுறைகளும் விளக்கப்படுகின்றன.

‘பதினெட்டாம்படிக் கருப்பசாமி’ என்னும் பதினோராவது இயலில் இக்கோயிலில் அடைக்கப்பட்ட இராசகோபுர வாசலிலுள்ள கருப்பசாமி எனும் தெய்வம் பற்றிய செய்திகள் ஆராயப்படுகின்றன. இக்கோயில் கோபுரக் கதவு அடைக்கப்பட்ட செய்தி, கருப்பசாமியின் தோற்றம் முதலிய செய்திகள் ஆராயப்படுகின்றன.

‘முடிவுரை’ என்னும் இறுதி இயலில் ஆய்வு முடிவுகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

பின்னிணைப்பு

‘அழகர் கோயிலில் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை இருந்தது’ எனும் நம்பிக்கை பின்னிணைப்பில் உள்ள ‘ஆறுபடை வீடுகளும் பழமுதிர் சோலையும்’ எனும் கட்டுரையில் ஆராயப்பட்டு மறுக்கப்பட்டுள்ளது.

பின்னிணைப்பில் உள்ள மற்றொரு கட்டுரையான ‘தமிழ்நாட்டில் வாலியோன் (பலராமன்) வழிபாடு’, உழுதொழில் செய்வோர் பலராம் வழிபாட்டின் மூலம் திருமால் நெறிக்குள் அழைத்துவரப்பட்டனர் என ஆய்வுக்கட்டுரையில் கூறப்படும் கருத்துக்கு விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.

- தொடரும்