அத்தியாயம் 1
சேற்றில் மலர்ந்த செந்தாமரை!
அன்று ஞாயிற்றுக்கிழமை. மினர்வா டாக்கீஸ் மேட்னிக் காட்சிக்கு வழக்கம்போலவே க்யூவில் நிறைய பேர் நின்றுகொண்டிருந்தனர். மேலும் அன்று சினிமா விசிறிகளின் அபிமான நக்ஷத்திரங்கள் நடித்த ஆங்கிலப் படம். கிரீர் கார்ஸனும் வால்ட்டர் பிட்ஜனும் நடித்துள்ள வர்ணப்படம்: `சேற்றில் மலர்ந்த செந்தாமரை’- `Blossoms in the dust!’......
சென்னை சமூகத்தின் ஜனத் தொகையையும், ரசனைச் சுவையையும் ‘கிராப் போட்டுக் காட்டிய மாதிரி க்யூ வரிசைகள் நின்றுகொண்டிருந்தன. மாணவர்கள், குமாஸ்தாக்கள், ஏஜெண்டுகள், தொழிலில் புகாத பட்டதாரிகள், ‘சினிமா ‘எக்ஸ்ட்ரா’க்கள், பத்திரிகாசிரியர்கள்-இத்தியாதி ரகமான மத்தியதர வகுப்புக் கூட்டம் ஒன்பதரையணா வரிசையில் நின்றது. கூட்ஸ் வண்டித்தொடர் போல, க்யூ வரிசை நின்றுகொண்டிருந்தது.
நான் ரிக்ஷாவைவிட்டு இறங்கினேன்; ரிக்ஷாக்காரனுக்குக் கூலி கொடுப்பதற்காக மூன்றணாக் காசை எடுத்து நீட்டினேன்.
“என்னா சாமி. பேசின காசைக் குடு சாமி” என்று எதிர்த்தான் அவன்.
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. மண்ணடியிலிருந்து டேவிட்ஸன் தெருவுக்கு வருவதற்கு மூன்றணா நியாயமான வாடகைதான். அவன் நாலணா கேட்டான்.
நான் மூன்றணாத்தான் தருவேன் என்றேன். “என்னமோ ஏளெ, பாத்துக்குடு சாமி-ம்-ஏறு’’ என்றான் அவன். ஏறி வந்து இறங்கிய இடத்தில் தகராறு.
“மூணு அணாத்தானடா பேசினேன்?”
“என்னா சாமி, நாலணாக் குடு; இல்லாட்டி ஒங்காசை ஒங்கிட்டவே வச்சிக்கோ” என்றான் அவன்.
“பேசின கூலிக்கு மேலே ஒரு பைசாத் தர முடியாது!”
“தராட்டி போ, சாமி” என்று கூறிவிட்டு, காசை வாங்க மறுத்து ஏர்க்காலை உயர்த்தினான்.
“என்னடா வம்பு பண்றே? மண்ணடியிலேயிருந்து வர்ரதுக்கு மூணு அணாவுக்கு மேலேயா தருவாங்க?” என்றேன் நான்.
“உனக்கென்னா சாமி தெரியும்? நா முச்சூடும் வெயில்லே இஸ்துக்கினுப்பூணாத் தெரியும்!-வவுத்திலெ அடிச்சா என்னா சாமி அர்த்தம்?” என்று ஏக வசனத்தில் பொழிந்தான்.
ஒரு அணா கூடக் கொடுப்பதில் எனக்கு ஒன்றும் நஷ்டமாகிவிடாது. இரண்டு வில்ஸ் சிகரெட்டுக்குரிய செலவுதான். ஆனால், அந்தப் பயலின் முரண்டுத்தனத்துக்குப் பணிந்து விட்டுக்கொடுப்பதா என்ற போலிக் கௌரவம் கையை நீட்ட மறுத்தது. ஆனால் க்யூவிலிருந்த தெரிந்த, தெரியாத முகங்களெல்லாம் என் பக்கம் திரும்பின. அவர்கள் முன்னால் அவனிடம் வாதாடுவதும் என்னுடைய மத்திய தர வகுப்பு மனப்பான்மைக்கு ஒத்துவரவில்லை. ஆகவே, அவனோடு மேலும் மல்லாடாமல் காசை எடுத்து ‘விட்டெறிந்தேன்!’
மனசுக்குள்ளே “கொஞ்சங்கூட நாணயமில்லாத பயல், சின்னச்சாதிப் பயலுக்கு சின்னப் புத்திதானே இருக்கும்” என்று முணகிக்கொண்டு க்யூவில் நின்றேன்.
புக்கிங் ஆபீஸ் இன்னும் திறக்கப்படவில்லை. நிழலோரமாய் க்யூ வரிசை ஒதுங்கி நின்றது. வரிசையில் உள்ளவர்கள் பேப்பர்கள் வாசித்தனர்; பாடப்புத்தகங்கள் படித்தனர்; வம்பளந்தனர்; சிகரெட் புகைத்தனர்; ஒரு கால் மாறி மறுகாலில் நின்றனர்.
நானும் நின்றுகொண்டிருந்தேன்.
மினர்வா டாக்கீஸுக்கு எதிர் வரிசையில் ஒரு ரிக்ஷாக்காரக் குடும்பம் வாழ்ந்துகொண்டிருந்தது. ஒரு பண்டகக் கிடங்குக்கு வெளிப்புறம் அமைந்த ஒரு முழத் திண்ணையில் அந்தக் குசேலக் குடும்பம் வாழ்ந்து வந்தது. காரை விழுந்த சுவர்ப் பகுதி புகையும் புழுதியும் படிந்து கறுத்துப்போயிருந்தது. மூலையிலே ஒன்றிரண்டு கரிச்சட்டிகள், எனாமல் விழுந்த எனாமல் தட்டு, தகரக் குவளை. கிழிந்த மூங்கில் பாய் முதலியன கிடந்தன. திண்ணை விளிம்பிலே ஒரு கிழிந்த கித்தான் சாக்குத் திரை; சாக்குத் திரையின் வழியாக, உள்ளே கந்தைத் துணியில் கிடந்த கருமெழுகுப் பொம்மை-அந்தக் கைக் குழந்தை-காலைக் காலை உதைத்துக்கொண்டு கிடந்ததைப் பார்க்க முடிந்தது; கழுத்திலே கிடந்த சங்கு வெள்ளைப் பாசிச் சரம் அதன் கருமையைத் துண்டாக்கி அளந்து காட்டிற்று.
திண்ணைக்குக் கீழே தென் பக்கத்தில் மூங்கில் பாயை விரித்து அதன் மேல் இருவர் அமர்ந்திருந்தனர். ஒருத்தி பூளையடைந்த கண்ணும், புழுதியடைந்த தலையுமாய் வாடி வதங்கிப்போன சாதிக்காயைப்போல் உள்ள கிழவி. மற்றொருத்தி ஊத்தம் போடவைத்த பேயன் பழம்போல மெருகும் மினுமினுப்பும் ஏற்றுவரும் பருவகால யுவதி. அந்த யுவதி கறுப்பி; கறுப்பில் அழகி. கையிலே பச்சைக் கண்ணாடி வளையல்கள்; நெற்றியில் குங்குமம், கழுத்திலே அழுக்கேறாத மஞ்சட் கயிறு. புது மணப்பெண்ணா?.... - அந்தக் கிழவி அவளுக்குச் சீவி முடித்துச் சிங்காரித்துக்கொண்டிருந்தாள்.
நான் க்யூவைக் கவனித்தேன். புக்கிங் ஆபீஸ் திறந்தாய்விட்டது. எனினும் நான் ஆகக் கடைசியிலல்லவா நிற்கிறேன்! எனக்குப் பின்னால் க்யூ வரிசை வெகுநீளம் நின்றுகொண்டிருந்தது. ரயில்வண்டிப் பூச்சி போல க்யூ நகர்ந்தது. நான் ஓரடி முன் சென்றேன்.
`எப்போதுதான் நமக்கு டிக்கெட் கிடைக்கப்போகிறதோ?’ என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஏற்கெனவே வந்த படம்தான்: நல்ல படம். நானும் அந்தப் படத்தை முன்னொரு தடவை பார்த்திருக்கிறேன்...
படத்தின் பெயரே கவிதை மாதிரி ஒலிக்கிறது!.... சேற்றிலே மலர்ந்த செந்தாமரை Blossoms in the dust!... ஒரு குடும்பம்-கார்ஸனும். பிட்ஜனும்தான் - அவர்களுக்கு ஒரு பிள்ளை; அன்பான பிள்ளை; இருவருக்கும் அவன் மீது உயிர்!... ஆனால், அந்தப் பையன் இறந்துவிடுகிறான்!
“ஏ, சவமே! எங்கே சுத்திக்கிணு திரியுதே. துண்ணமாத்திரம் வாரியா? ஏதாச்சும் ஆக்கிவச்சாத்தானே துண்ணலாம்!” என்று ஒரு கரட்டுப் பெண் குரல் எரிந்து விழுந்தது.
திண்ணைப் பக்கம் திரும்பினேன். கரி பிடித்த மூன்று கற்களைக் கட்டி அடுப்பு வைத்து அடுப்பிலே அரிசியைப் போட்டுவிட்டு, மீண்டும் கத்தினாள் அந்தப் பெண். தாயின் குரல் கெட்ட ‘சவம்’ ஓடோடியும் வந்தது.
“போயி, எரிக்க ஏதாச்சும் பொறக்கிக்குணு வா” என்று உத்தரவிட்டு, புகையும் அடுப்பை ஊதினாள். புகை மேலும் மேலும் அதிகமாக முண்டியது. கண்களைக் கசக்கிக்கொண்டே ஊதினாள். அதற்குள் திண்ணையிலே கிடந்த பிள்ளைமேல் சாக்குத் திரை வழியாக சூரிய ரச்மி சுள்ளென்று உறைக்கவே, அந்தப் பிள்ளை வீல் வீலென்று கத்திற்று. உடனே எழுந்து சென்று குழந்தையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு தாய்ப்பால் ஊட்டினாள்.
என்னுடைய கண்கள் அந்தச் ‘சவத்தைப்’ பார்த்தன. பிறந்த மேனியாக, அரைஞான் கயிறுகூட இல்லாமல் திரியும் சிறுவன் அவன். கரிய உடம்பு; ‘லிவர்க்யூர்’ விளம்பரக் குழந்தையின் வயிற்றைப் போன்ற தொந்தி, சிக்கலும் பிசுக்கும் பிடித்த தலைமயிர், மூக்குத் தொளையிலிருந்து அயிரை மீன் மாதிரி எட்டி எட்டிப் பார்க்கும் சளி. சிறுவன் நாக்கை நீட்டிச் சளியைத் துடைத்து, வாய்க்குள் இழுத்துக்கொண்டான். பிறகு அங்கு கிடந்த சினிமா நோட்டீஸ், டிக்கெட், காகிதம், வைக்கோல், வாழைத்தடை முதலிய கழிவு எரி பொருள்களைத் தேடிப் பொறுக்கி அடுப்பண்டை போட்டான்.
அதற்குள் தலைவாரி முடித்த அந்த யுவதி “ஏ… கெய்வி, பானையை எடுத்துக்கினுபோயி தண்ணி புடிச்சி வா” என்று கூறினாள். புகைத்துவிட்டதால், அடுப்பு லேசில் பற்றிக்கொண்டது. தெருத் திண்ணையில் தாய் குழந்தையை உறங்கப் பண்ணிக்கொண்டிருந்தாள். மூங்கில் பாயிலிருந்த ‘கெய்வி’ கடைவாய் வழியே வழிந்தோடும் புகையிலைச் சாற்றை, புறங்கையால் துடைத்துவிட்டு பானையை எடுத்துக்கொண்டு நடந்தாள். ‘சவம்’ பேப்பர் பொறிக்கிக்கொண்டிருந்தது...
“முன்னே போங்க ஸார்” என்ற குரல் கேட்டு, பிரக்ஞைக்கு வந்தேன்; முன்னேறினேன். இன்னும் க்யூ குறைந்தபாடில்லை! எறும்புச் சாரைபோல க்யூ நின்றது. நான் டிக்கெட் வாங்குவதற்கு இன்னும் அறுபது பேராவது முன்னேற வேண்டும். கால் மாறி நின்றுகொண்டு எதிரே தோன்றிய சுவரொட்டி விளம்பரத்தைப் பார்த்தேன்.
கார்ஸனும், பிட்ஜனும்!-கார்ஸனின் அமைதியும் அழுத்தமும் நிறைந்த முகம். பக்கத்தில் பிட்ஜனின் மூக்கும் முழியும் புடைத்து நிற்கும் பக்கவாட்டுச் சித்திரம். இரண்டு சோக சித்திரங்கள், பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டு எப்படி நடிப்பது? சோக சிகரத்தில் கார்ஸன் எப்போதும் நன்றாகவே நடிக்கிறாள். ‘மாடம் க்யூரி’யில் புருஷன் இறந்த சொல் கெட்டு, ஒரு வார்த்தைகூடப் பேசாமல், ஆடாமல், அசையாமல், அழாமல் உணர்ச்சிக்கு உருக்கொடுத்து இருப்பாளே... இதிலும் குழந்தை இறந்தவுடன் நன்றாய்த்தான் நடிக்கிறா. ஆசைக்குரிய குழந்தை இறந்தவுடன் பித்துப் பிடித்ததுபோன்ற பிரமை. எந்தக் குழந்தையைக் கண்டாலும் ஓர் ஆனந்தம்-துக்கம்! ஆகவே, தனது வாழ்நாள் முழுவதையுமே குழந்தைகளுடன், குழந்தைகளுக்காகக் கழித்துவிடலாம் என்று எண்ணுகிறாள். அதனால், நிராதரவான குழந்தைகளையும், தாய் பெயரையோ தகப்பன் பெயரையோ அறியாத அநாதைக் குழந்தைகளையும் பராமரிக்க எண்ணுகிறாள். ஆனால், அத்தனையையும் பராமரித்து வளர்த்து, ஆளாக்குவதற்குப் பணம்?....
“சார்… ஒரு பைசா குடு சார்!”
அந்தப் பிச்சைக் குரல் கேட்டு திரும்பினேன். அந்தச் ‘சவம்’ க்யூவரிசையில் உள்ள ஒவ்வொருவரிடமும் பிச்சை கேட்டான்; வாய் நோக்கி வழியும் சளியையும் நக்கிக்கொண்டான்.
எதிர்த்த சரகில் ‘ஓம் மச்சாவி வந்துட்டுது’ என்ற குரல் கேட்டது. திரும்பினேன். அடுப்பிலிருந்து சோற்றை இறக்கி வைத்த யுவதி தலையைத் திருப்பினாள். ரிக்ஷாவை ஓரமாய் நிறுத்திவிட்டு, மனைவியை நோக்கி நெருங்கி வந்தான் ‘மச்சாவி.’ அவள் முன் குந்தி இருந்து, “அண்ணாத்தை இன்னம் வரலியா?” என்று கேட்டுக்கொண்டே “சரி, சாதத்தைப் போடு. நான் போவணும்” என்றான்.
“இப்பத்தானே வந்தே. அதுக்குள்ளாச்சும் பூணம்ங்கிறீயே!” என்று மெதுவாகச் சொன்னாள் யுவதி.
அதற்குள் திண்ணையில் இருந்தவள் குழந்தையை நிழலோரமாய்ப் படுக்கப் போட்டுவிட்டு இறங்கி வந்தாள்.
“ஏங்கக்கா... இது போவுதாம். நானு சாதத்தைப் போடட்டுமா?” என்றான் யுவதி.
“போடு, போடு, நாலு காசு கிடக்கிறதைக் கெடுத்துப்புடாதே” என்றாள் பரட்டைத்தலை அக்கா.
அந்த இளம் தம்பதி திண்ணையில் ஒதுங்கினர்; சாக்குத் திரைக்குப் பின்னால் அவன் உட்கார்ந்தான். அவள் சாதத்தை எனாமல் தட்டில் போட்டாள். அவன் தன் மடியில் இருந்த மஞ்சட் சிவந்திப் பூவை மெள்ள அவள் தலையில் ரகசியமாகச் சூட்டினான்.
யுவதி தலையைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “வெள்ளாடாதே... அக்கா பாத்திரும்!” என்றாள்.
“அடி என் குஞ்சே!-அசல் சிந்தாமணி மாதிரி இருக்கியே!”
“என்னை என்ன குச்சுக்காரின்னா நெனச்சே!”
இருவரும் ஏனோ சிரித்துக்கொண்டனர். என்றோ துணிந்து அவர்கள் இருவரும் தமது ‘ஹனிமூன்’ காலத்தில் சினிமா பார்த்தார்களோ என்னவோ?
“இன்னிக்கும் பூவமா?” என்று கேட்டுக்கொண்டே அவளுடைய கன்னத்தில் கிள்ளினான் உடையவன்.
அந்தக் காதல் நாடகத்தை அதிக நேரம் கவனிக்கவில்லை, மீண்டும் சூழ்நிலை என்னை இடித்தது; க்யூவில் முன்னேறினேன். இரை தின்ற பாம்புபோல மெதுவாக க்யூ முன்னேறியது.
“இன்னம் எத்தனை நாழியாகுமோ?” என்றது ஒரு குரல்.
“வந்த படத்துக்கே இத்தனை டிமாண்டா?” என்றது வேறொன்று.
வந்த படம்தான். எனினும் ஏன் இந்தக் கூட்டம்? நல்ல படம். உணர்ச்சியைத் தொடும் படம். அநாதை விடுதிக்காக அவள் பணம் சேர்க்கிறாளே!.. எத்தனை எத்தனை பெரிய மனிதர்களையெல்லாம் நாடுகிறாள்! ரகசியக் காதல் கேளிக்கைகளிலும், காம விகார விபசாரங்களிலும் பொழுதைப் போக்கி, விபரீதங்களை உண்டாக்கும் பணக்கார ஆண்-பெண்கள்!.... ஒருவரேனும் மனமிரங்கவில்லை. அந்தக் கிழவி! எண்பது வயதாகியும் பவுடரையும், பகட்டையும், சாகசத்தையும் விடாத அந்தப் பண மமதை படைத்த கிழவி, அவள் என்ன சொல்கிறாள்; ‘விபசாரத்திலே பிறந்த குழந்தைகளுக்கு வீடு வாசலா?’ அதற்குக் கதாநாயகி அளிக்கும் அந்தப் பதில்! ‘யார் விபசாரிகள்! காம லீலையின் பயனை அறியாது, கற்பை, கன்னிமையை இழந்து பிள்ளைகளைப் பெற்றுத் தூர எறிந்து, தங்கள் பண வலியால், அதிகாரத்தால் குற்றத்தை மறைத்துவிடுகிறார்களே-அவர்களா... அல்லது இந்த அப்பாவி அநாதைக் குழந்தைகளா?... யார் விபசாரிகள்!... எந்தக் குழந்தையும் கள்ளக் குழந்தைகளல்ல... அதைப் பெற்றவர்கள்தான் கள்ளத்தனமான பெற்றோர்கள்!... பாபத்தின் சிசு பாபியா?- பாபச் செயலிலே பிறந்த பிள்ளை தேவனாகவும் முடியும்!”-
என் மனம் தத்துவ விசாரத்தில் இறங்குவதை, சவம் தடை செய்தது. “சார் ஒரு பைசா!” நான் ஒன்றும் சொல்லாமல் காலணா எடுத்துக் கொடுத்தேன்.
ரொம்பவும் பொருத்தமான தலைப்பு... Blossoms in the dust!.... இன்று உலகப் புகழ் பெற்ற ஸ்டாலின் சக்கிலியின் பிள்ளை.... கதாசிரியன் கார்க்கி மூட்டை சுமந்தவன்! ரூசோ, ரொட்டிக் கிடங்கிலே இருந்தவன்! சேற்றிலே செந்தாமரை .... குப்பையில் குருக்கத்தி............. Blossoms in the dust!
எதிர்த் திண்ணைக்கு இன்னொரு ரிக்ஷா வந்து நின்றது. ஏர்க்காலைத் தணித்து இறக்கிவிட்டு, உடம்பிலே எண்ணெய் மாதிரி வழியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டு வந்தான் ரிக்ஷாக்காரன்.
“என்னா, சோறு ஆக்கினியா?” என்று அலுப்புடன் கேட்டுக்கொண்டே திண்ணைச் சுவரில் சாய்ந்தான்.
“மச்சாவிகூட வந்து துண்ணுட்டுப் போயிரிச்சு. நீ துண்ணிரியா?” என்று கேட்டாள் சம்சாரம்.
“சரி. சின்னப் பெயலே எங்கே?”
“சவம், இங்னேதானே நின்னுது!”
தகப்பனுடைய கண்கள் க்யூ வரிசையில் ‘சார், காலணா சார்’ என்று தன் மகன் கையேந்திப் பிச்சை எடுப்பதைக் கண்டுவிட்டன. உடனே படியிலிருந்து ஒரு தாவுத் தாவி க்யூவுக்கு வந்தான். ‘சவத்தின்’ விரிந்த கரத்தைப் பார்த்தான். அதில் நான்கு காலணாக்கள் இருந்தன.
தகப்பனின் முகம் ரத்தம் பாய்ந்ததால் பளபளத்தது.
“சவத்துக்குப் புறந்த நாயே! என் கண்ணுக்கு முன்னாலேயே பிச்சையா எடுக்கே? உனக்கு என்னா கொள்ளை நோவு வந்தது?” என்று சீறிக்கொண்டே கையில் இருந்த காசைப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு, சிறுவனை மொத்து மொத்தென்று அடித்தான்.
சிறுவன் வீறிட்டழுதான்.
“அத்தே ஏங் மொத்துதே?” என்று நிர்விசாரமாய்க் கேட்டாள் தாய்.
“ஏனோ? நானு சம்பாரிச்சுக் கொட்றது காணாதுன்னா, ஒம்புள்ளே பிச்சை எடுக்கான்?-மானம் மரியாதை இல்லாமே” என்று இரைந்தான்.
க்யூ முன்னேறியது; நானும் முன்னேறினேன். பிராட்வேயில் கட, கடா என்று டிராம் வண்டி ஓடிற்று. க்யூவும் வண்ணாரப்பேட்டை ட்ராம் வண்டி மாதிரி ஓர் அடி முன்னேறுவதும் ஓர் அடி நிற்பதுமாய் இருந்தது. கால் மாற்றி நின்றுகொண்டு பையில் இருந்த டிக்கெட் பணத்தை எடுத்தேன்; இன்னும் மூன்று பேர் கடந்துவிட்டால் எனக்கும் டிக்கெட் கிடைத்துவிடும்.
அந்தத் திண்ணையைப் பார்த்தேன். மனைவி உருட்டிப் போடும் கவளங்களை விழுங்கிக்கொண்டிருந்தான் புருஷன். ‘சவம்’ மூலையிலே இருந்து சிணுங்கிக்கொண்டிருந்தது. “பயலுக்கு ஒத்தெப் பருக்கை குடுக்காதே-நாய்க்குப் பட்டாத்தான் தெரியும்!” என்று மனைவியிடம் கோபத்துடன் சொல்லிக்கொண்டான் ரிக்ஷாவாலா. இடையிடையே “பிச்சையா எடுக்கே?” என்று முனகிக்கொண்டான்.
க்யூ முன்னேறியது-....
ச்சை-உடல் முறியச் சம்பாதித்த காசை கள்ளுக் கடைக்கும், தவணைக்காரனுக்கும் கொடுத்துவிட்டு வாழும் ரிக்ஷாக்காரன் தருமத்தை ஏற்கமாட்டானா? ‘தருமம்’ என்பதே வெறும் அலங்கார வார்த்தைதானா?........ அப்பொழுது என்னை ஏற்றி வந்த ரிக்ஷாக்காரன் ஓரணாவுக்காக மல்லாடினான். இவன் ஓரணாவைத் தூர எறிகிறான்!-இது பிச்சைக் காசு-எச்சில் காசு! உழைப்புக்குத் தகுந்த கூலியை மல்லாடிப் பெறுவது குற்றமல்ல; உழைக்காமல் யாசகம் ஏற்பதுதான் குற்றம்!..... ஆனால் படித்தும், பட்டம் பெற்றும் லஞ்சம் பெறும் அதிகார வர்க்கம்! உழைப்பவனைச் சுரண்டி உயிர் வாழும் பணக் கும்பல்! அவர்களைவிட இந்த ரிக்ஷாக்காரன்!...........
க்யூ முன்னேறியது. அந்த மனித ரயிலுக்கு நானே இஞ்சின். எனக்கு முன்னுள்ளவர் டிக்கெட் வாங்கிவிட்டார். நான் பணத்தை நீட்டினேன். ஆனால் புக்கிங் சாத்தப்பட்டது.
“இன்னம் ஒரு டிக்கெட் ஸார்” என்றேன் நான்.
“எக்ஸ்க்யூஸ்மி” என்ற குரல் புக்கிங் ஆபீஸ் பலகைக்குப் பின்னிருந்து கேட்டது; பணத்தைப் பையில் போட்டுக்கொண்டு வெளி வந்தேன்.
க்யூ கலைந்தது. என் இதய நிறைவு சொல்லிற்று: `சேற்றிலே மலர்ந்த செந்தாமரைகளை மினர்வா டாக்கீஸுக்குள்ளேதான் காண முடியுமா? வெளியேயும் காண முடியாதா?’
- 1947.
(அடுத்த கதையை வாசிக்க தயாராகுங்கள்)