அத்தியாயம் 1

9.33k படித்தவர்கள்
12 கருத்துகள்

அத்தியாயம் - 1               தேவி

_____________

 தென்காசியிலிருந்து குற்றாலத்துக்குப் போகும் சாலை வழி பஸ்ஸில் 15/20 நிமிடங்கள். மாலை வேளையில் நடையாக அரை மணியோ, ஒரு மணியோ, இன்னும் எத்தனை கூடுதலோ, அது நடப்பவனின் இஷ்டம். நடக்கும் சமயத்தில் அவனது மனநிலை.

 நடந்துகொண்டிருந்தேன்.

 சீஸன் மும்முரம்.

 ஆனால், நான் சீஸனுக்கு வரவில்லை. தென்காசிக்கு மாற்றலாகி வந்திருந்தேன். வந்த புதுசு, வீடு பார்த்துப் பேசி அமர்த்தி, பிறகு குடும்பத்தை வரவழைத்துக்கொள்ளணும்.

 வந்து கிட்டத்தட்ட மாதமாகியும் இன்னும் இங்கு எனக்கு நிலை படியவில்லை. உத்தியோகத்தில் மாற்றலாகி வந்தவன். ஏற்கனவே இருப்பவருக்கு அவநம்பிக்கையானவன்தான். எத்தனையோ மானேஜர்கள் வந்தார்கள், போனார்கள் பார்த்திருக்கிறோம். இத்தனை நாள் நம் வழியில் தும்பு தட்டாமல் போய்க்கொண்டிருக்கிறோம். வந்தவன் நம் வழியில் படிவானா? அல்லது நம்மை ஆட்டிவைப்பானா? அவர்கள் கவலை இதுதான். அதுவும் புதிதல்ல. யாரும் பாதை மாற விரும்புவதில்லை.

 கலைஞன், எழுத்தாளன், லட்சியவாதி - இவர்களைப் பார்க்கையில் எனக்கு ஒரு பக்கம் பரிதாபம், ஒரு பக்கம் சிரிப்பு. ஆரம்பத்தில் எல்லோரும் கங்கையின் கதியைத் திருப்பும் எண்ணத்தில்தான் இறங்குகிறார்கள். கடைசியில் கங்கையிலேயே பிணமாக மிதந்து செல்கிறார்கள். அப்பவும் சொர்க்கத்துக்கல்ல, கங்கையில் முதலையின் வாய்க்கு.

 ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை.

 மதுரையைத் தாண்டியதுமே, இங்கு மக்களின் உணவுப் பழக்கம், காலை பலகாரம், மதியம் சாதம், இரவு பலகாரம்.      

 ஊர் மக்கள்படி ஓட்டல்.

 மூன்று வேளையும் மிளகாய் நெடி! நினைத்தாலே குடல் ஆவி கக்குகிறது. அதுவும் இப்போது சீஸன் பணம் பண்ணும் வேளை. பண்டங்கள் மோசம். விலைகள் பற்றி எரிகின்றன. ஆனால், யாருக்கு அக்கறை? யாருக்கு இரக்கம்? அருவியில் குளிக்க எவனெவனோ எங்கிருந்தோ வருகிறான். சீஸனில் அருவியில் குளிப்பதுதான் அந்தஸ்த்தின் சின்னம். இந்த மூன்று மாதச் சூறையில்தான், குற்றாலம் வருடத்தின் மிச்சத்தை வாழ வழி தேடிக்கொள்கிறது. இப்போ வாழத் தெரியாதவன், வாழ லாயக்கற்றவன்.

 பொழுதுபோக்குக்கோ, மனமாறுதலுக்கோ உகந்த புத்தகங்கள் கிடையா இருக்கும். ஒரே லைப்ரரியில், மானங்குலைந்து உடலும் பழகிப்போன ஸ்திரீ போல், பக்கங்கள் பாழாகி, உருக்குலைந்து இன்னும் தூக்கியெறியாமல், பேருக்கு அடுக்கி வைத்திருக்கும் பத்தாம்பசலிப் புத்தகங்கள்.

 பேச்சுக்குத் தேடிப்போகும் அளவுக்கு எனக்கு இன்னும் நட்புகள் வாய்க்கவில்லை. அதற்கு முதல் நிபந்தனை, சீட்டாட்டம் எனக்கு அறவே தெரியாது. இந்த அறியாமைக்கு இப்போது தலையிலடித்துக்கொண்டு என்ன பயன்?

 ஆனால் அடித்துக்கொள்கிறேன். “நாலு பேருடன் பழகி பிஸினஸை விருத்தி பண்ணத்தான் மானேஜர். நாலு பேருடன் பழகணும்னா, நாலும் தெரிஞ்சுதான் இருக்கணும். நாலு என்ன நாற்பது. என்ன சொல்றது புரியறதா?” - அதிகாரிகள் சொல்லியனுப்பித்து விட்டிருக்கும் புத்திமதி; உத்தியோகத்தைக் காப்பாற்றிக்கொள்ள.

தனிமையின் உண்மையான தன்மையை உணரத்தான் இங்கு வந்து மாட்டிக்கொண்டேனோ?    

 வேணும்போது பூணி, வேணாத சமயத்தில் கழட்டியெறியக் கூடிய தனிமைதான் பாந்தமாயிருக்கிறது.

அறைக் கதவை மூடியதும் புலன்களுக்கு இதமாய், சாஹஸமான இருள். தலைக்கு மேல் மின்விசிறியின் குளு குளுச் சுழல், சுவர்களை அடைத்த அலமாரிகள் நிறைந்து, இருக்கைகளின் மேல், தரையில், என்னைச் சூழ வழியும் புத்தகங்கள். ரேடியோகிராமில் அடக்கமாய் அஜ்மல்கான் ஸிதாரில் தர்பாரிகானடா. அல்லது ஸெய்கேலின் `துக்குக்கே…’ பொறி கண்ணுக்குப் படாது மணம் மட்டும் கமழும் மகிழம்பூ ஊதுவத்தி. எதிர் வீட்டில் டான்ஸ் மாஸ்டர் கட்டை, தரை மேல் ‘டக்டக்’. அதற்கு ஏற்ப ‘ஜல் ஜல்’ கால் சதங்கையொலி, இந்தப் பகைப்புலனில், நெஞ்சத்தணலில் புகைந்து எழும்பி உருக்கொளும் எண்ணங்கள், சிந்தனை, தியானம்…

 அவசரமாய்க் கதவுத் தட்டல், எழுந்து திறக்கும் வரை யார் விடுகிறார்கள்? தாழ்ப்பாள் லொடலொட்டை, படீரெனக் கதவு திறந்து கொள்கிறது. குடும்பமே உள்ளே அலைமோதுகிறது. கடைக்குட்டி வந்து மடியில் பொத்தென விழுந்து, நாய்க்குட்டிபோல் முகத்தை அடிவயிற்றுள் தேய்க்கிறான். மூக்குச்சளி ஈரம், சட்டையைத் தாண்டி சதை நனைகிறது.

“அப்பா! அப்பா! யார் வந்திருக்கிறது பாருங்கோ’’ - ஒரே கத்தலில் ஏகக் குரல்கள். “காலேஜ் மூடிட்டாலாம், ஸ்ட்ரைக்காம். ஹாஸ்டலில் கலாட்டா-அடிதடியாம்!”

பின்னால் ஓர் உருவம் வாசற்படியில் லஜ்ஜையில், அரை புன்னகையுடன் தயங்கி நிற்கிறது. சேகர் நாளுக்கு நாள் உயரமாகிக்கொண்டே வருகிறான். உயருவது ஒரு வியாதி போல். இப்பவே அவனை நான் நிமிர்ந்துதான் பார்க்கிறேன். தோளுக்கு மிஞ்சினால் தோழன். தலைக்கு மிஞ்சினால்? வெள்ளம் என்று விட்டுவிட வேண்டியதுதானா?

“அப்பா! அப்பா! நான் 500க்கு 438. நான்தான் வகுப்பில் ஃபஸ்ட். முதலடிச்சால் ‘Posseidon Adventure’ பிராமிஸ் பண்ணியிருக்கேள். ஞாபகமிருக்கா? சேகர் வேறே ஊரிலேருந்து வந்திருக்கான். குடும்பத்தோடு போகலாம்பா!” 

இந்த வாரமே தூக்கிடறானாம்.

“டீ காயத்ரீ! இங்கிலீஷ் நமக்குப் புரியாது டீ! படம் வேறே சுருக்கா முடிஞ்சுடும். கணிசமா சிவகவி போகலாம்.’’ - அவள் அம்மையின் சிபாரிசு.

``நீ என்னம்மா டிபன் கட்டினே?’’ - கண்ணன் வெறுப்புடன் உறுமுகிறான். (கட்டைத் தொண்டை கரிக்கிறது. போன வருடம்கூடக் குழலாய் ஒலித்த குரல்.) ``பசி வேளையில் டப்பாவைத் திறந்தால் ‘குப்’. பக்கத்துப் பையன் மூக்கைப் பிடிச்சுண்டு நகர்ந்தால் எனக்கு மானம் போறதே… போச்சே!’’

``சொன்னாலும் பொருந்த சொல். என் கை ஊசவே ஊசாதே! நீ சொன்னால் நாம் நம்புவேனா என்ன?’’

``மோருஞ்சாதத்தில் சேப்பங்கிழங்குக் கறியை ஊறப் போட்டால் மணக்குமா?’’

``சின்னத் தட்டுலே தனியாத்தானேடா வெச்சேன்!”

 “தட்டுதான் சோத்துலே முழுகிப் போச்சே! ஆமாம், பழையதா? நீ பிசையறபோதே சந்தேகப்பட்டேன். என்னிக்குமில்லா திருநாளாய் இன்னிக்குப் பால், தயிர், வெண்ணெய் தாளிப்பு சடங்கெல்லாம் தடபுடலாயிருக்கேன்னு.’’

 ``பின்னே என்ன, வேலைக்காரிக்கு அப்படியே தூக்கிக் கொடுக்கணுங்கறையா? ஒருநாள் சாப்பிட்டா குடல் கறுத்திடுமா? இதையே ஃப்ரிட்ஜ்லே வெச்சு ஹோட்டலில் பகாளாபாத்துன்னு பீங்கான் கிண்ணத்துலே பரிமாறினால், காசைக் கொடுத்து, அள்ளி மொக்குவேள்!’’

 ``சரிதான் நிறுத்தும்மா!’’ - கண்ணன் சீறினான் [இதுகள்தான் விழுதாய் தாங்கப்போகும் பிள்ளைகள்] ``நீ வேலைக்காரிக்கு கொடுத்தால் அவள் கழுநீர்த் தொட்டியில் கொட்டிவிடுவாள்னு என் தலையில் கட்டினாயாக்கும். காடி நெடி, போலீஸ் என்னைப் பிடிச்சுண்டு போகாமலிருந்ததே பெரிசு.’’

 ``ஒருநாளும் இருக்காது. என் கை ஊசாது, புளிக்காது.’’

 ``இருக்கு.’’

 ``இல்லை.’’

``இருக்கு.’’

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

 ``இல்லை.’’

 அமளி!

 எனக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை.

 ``சனியன்களா! வெளியில் போய் தொலையுங்கள். தெருவில் போய் குலையுங்கள்!’’

 கதவைப் படீரெனச் சாத்துகிறேன். எனக்கு மூச்சு இறைக்கிறது.

 போன வாரங்கூட டாக்டர், ``சார் நீங்கள் ஜாக்கிரதையாயிருக்கணும். உங்கள் வயசுக்கு கௌண்ட் அதிகம். உப்பையும் ராச் சோறையும் உதறுங்கள். இதுவரை மொஷீக்கிய கிழங்கும், பருப்புசலியும், வளையம் வளையமாய் வாழைக்காய்தான் அப்படியே எண்ணெய்யில் இறக்கி, காரம், புளியோடு ஃப்ரை தின்னது போறுமே. அப்புறம், டெம்பர்! டெம்பர்!! இது உங்களுக்கு என்னுடைய இருபத்தி எட்டாவது காஷன். இந்த வாத்துக்கோழி விக்கிறவனைப் பார்த்தேளா? அப்படியே காலைக் கொத்தாப் பிடிச்சு தலைகீழாத் தூக்கிண்டு போவான். அதுபோல அடிச்சுடுத்துன்னா அதோகதிதான். ஐயோ பாவம்னு புரட்டிப் போடக்கூட இந்தக் காலத்தில் யாருக்கும் நேரம் கிடையாது, தெரியுமோன்னோ!’’

 பயத்தில் கண் இருட்டுகிறதோ?

அறையில் நான் விஸ்தரித்த சொகுசு, இருள் புத்தகங்கள், ரேடியோகிராம், தர்பாரிகானடா, மகிழம்பூ TSR இத்யாதிகளைத் தேடுகிறீர்களா? உங்களை யார் தேடச் சொன்னது? நான் தேடவில்லையே! எல்லாம் நான் நினைத்துக் கொண்டதுன்னா! உங்கள் பங்குக்கு எரிச்சலைக் கிளப்பறேளா?

இந்தச் சத்தமும் ரகளையுமில்லாமல், அக்கடான்னு ஏகாந்தமா மூணு மாசம் எங்கேனும் கண் காணாமல் தொலைய மாட்டோமா?

இதோ, கேட்டது கிட்டி. அவர்கள் அங்கே… நான் இங்கே தனிமையாகத் திகைப்பூண்டு மிதித்தவனாய் நடந்துகொண்டிருக்கிறேன். நடந்துகொண்டேயிருக்கிறேன்.

இன்று தோற்றாலும், நாளை நமதே என்கிற நம்பிக்கையில் கர்ர்-புர்ர்- ஒன்றையொன்று கடித்துக் குதறிக்கொண்டிருந்தாலும், ஒண்னாயிருந்தேனும் வளைய வருவோமே!

`சண்டை போடக்கூட ஆளில்லையேன்னு ஏங்கறப்போன்னா அருமை தெரியப்போறது?’

காதண்டை ஆள் தெரியாமல் யார் குரல்?

நடக்கிறேன்.

குற்றாலம் போகும் வழியில் யானைப் பாலம் தாண்டியதும், மேலகரம் வரை இடது பக்கம் வீடுகள். இடையிடையே கொத்துக் கொத்தாய் வீடுகளின் முகப்பு, வலதுபுறம் வயல்கள். அவை நடுவே, ஆங்காங்கே தென்னஞ்சோலைகளும் பதுங்கிய வயற்கிணறுகள், கமலையேற்றங்கள், பம்பு செட்டுக்குக் கட்டடங்கள், நெற்கதிர்களின் சலசலப்பு, தென்னை மரங்களே பந்தல்கால்களாய். அவற்றின் மேல் அஸ்மானகிரி கட்டிய மேகக்கூட்டங்கள்.

இதைக் காட்டிலும் செழுமையான குக்கிராமங்கள், குற்றாலத்தைச் சூழ, வயல்களிடையே ஒளிந்துகொண்டிருக்கின்றன.

“ஆண்டவன் புண்யத்தில் அது குற்றாலநாதரோ, தென்காசி விஸ்வநாதரோ, இல்லை இரண்டு பேரும்தான் புண்ணியத்தை பங்கிட்டுக் கொள்ளட்டுமே. இதுவரை எங்களுக்கு மழை சுழிச்சது கிடையாது. இனி எப்படியோ கலி முத்தறது. நெல் காட்டிக் கொடுத்தாலும், தென்னையும் மிளகாயும் கைகொடுக்கும் வரை எங்களுக்குக் கவலையில்லை. வருஷத்தில் ஆறு பறி. காவல்காரன் எங்களுக்குத் தெரிஞ்சு எடுத்தது, காவலுக்கு எடுத்தது, திருடிக்கொண்டது போக மிச்சமே மடி நிறைய காஷ். சரி, சரி நீங்கள் படிச்சவாள், உங்களிடம் எல்லாத்தையும் கக்கிடப்படாது. இதுவே ஏதோ உளறிட்டேன் மறந்துட்டு. வாங்கோ, ஒரு ஆட்டம் போடுவோம். தெரியாதா? ஸார் என்ன ஜோக்கர் ஸ்வாமி போலிருக்கு! இல்லையா, நிஜந்தானா? அடாடா எங்களுக்கு அதைத் தவிர வேறு தெரியாதே. அதுவும் பரம்பரை பரம்பரையா ஊறிப்போனது ஸ்வாமி!”

இடது கைப்புறத்தில் ஒரு பெரிய வயல் பரப்பு தாண்டி பிரம்மாண்டமான திரைச்சீலையில் எழுதித் தொங்கவிட்டாற் போல், ஒரு பெரிய மலைக்குன்று கம்பீரமாய்க் காட்சியளிக்கிறது. அதன் அடிவாரத்தில் தாய்க்கோழியின் சிறகடியில் போல் வீடுகள், மொட்டைமாடிகள், சிவப்பு ஓடுக் கூரைகள், ஒலைக்கீற்றுக் கூரைகள் எல்லாம் ஒருங்கே செல்லமாய் ஒடுங்கிக்கொண்டிருக்கின்றன. குன்றின் மேல் லேசாய்க் குமுறுகிறது.

என்னையறியாமலே நின்று நோக்குகிறேன். இந்த அந்திவேளையில் இருளும் பகலும் ஒன்று கலக்கும் ஜாலக்கில் கோழிக்குன்று மூச்சு விடுகிறதோ?

பின்னால் ஆளரவம் கேட்டுத் திரும்புகிறேன்.

“ஓ… நீங்களா?”

“வாங்கோ!” - இருவரும் கைகூப்பிக் கொள்கிறோம்.

இந்த ஊர் பழக்கம் வழியில் கண்டாலும் சரி, அங்கேயே பேசிவிட்டு அப்படியே தாண்டிப் போனாலும் சரி, ஒருவருக்கொருவர் “வாங்கோ.’’

“அருவிக்குப் போறேளா?”

ஏதோ அசட்டுச் சிரிப்பு சிரிக்கிறேன். ``ஆமாம். ஆனால், ஸ்நானம் பண்றேனோ இல்லையோ? நீங்களும் அங்கேதான் வரேளா?’’

``இல்லை சார்’’ - அவர் பின்னடைந்தார், ``நீங்கள் போயிட்டு வாங்கோ.’’

அவர் என்னோடு வர விரும்பவில்லை எனத் தெரிந்தது. அவசரமாய் அங்கு ஏதோ ஒற்றையடிப் பாதையுள் நுழைந்துவிட்டார்.

தயிராடை போல் எப்பவும் விசனம் கனத்துத் தோய்ந்த முகம். குறுகுறுப்பான மூக்குகுழிகூட. ஆனால், அந்தப் புழுக்கம் முகத்தைக் கெடுத்தது. எனக்காக ஒரு நொடி தோன்றிய புன்னகைக்கூட உடனே மிரண்டு நொடித்து மறைந்தது.

ஆபீசிலும் அப்படித்தான் அவசியமில்லாமல் பேச மாட்டார். திடீரெனக் காரணமேயில்லாமல் கோபத்தில் ‘ஓ’வென்று கத்துவார். அடிபட்ட விலங்குபோல் உடனே பொட்டென அடங்கிவிடுவார். அவர் கோபத்தை யாரும் பொருட்படுத்துவதில்லை. ஏனோ அவருக்கு அலாதிச் சலுகை. கவனம் ஊன்றாமையால் வேலையில் நேரும் பிழைகளை, சகாக்கள் முடித்து திருத்திக் கொடுத்துவிடுவார்கள். இப்படியே அவர் காலம் ஒடியிருந்திருக்கிறது. இங்கேயே பிறந்து, வளர்ந்து, வதங்கி, கிளர்ந்து, கொட்டை உமிழ்ந்தவர். அதுவே அவருடைய கோட்டை.

வேளை வரும்போது தன் சோகத்தைத் தாங்கிக்கொண்டே இந்த மண்ணோடு கலந்துவிடுவார். அதுவும் அவருடைய கோட்டை.

ஊருக்குள் நுழைந்து, பஸ் நிலையம் தாண்டி, நாற்சத்தியில் அண்ணா சிலையைக் கடந்து, சுற்றுப்புறக் கிராமங்களுக்குப் பாசனத்துக்குப் போகும் அருவியின் கழிவு மேல் ஓடும் பாலத்தில் கால் வைத்ததும், குற்றால மலையிலிருந்து அருவியின் சொரிவு மலைமீது தவழும் மேகமூட்டத்தைக் கிழித்துக்கொண்டு நேரே கொட்டுவது போன்று, அதோ பாறை உச்சியில் அந்த ஜலக் கொந்தளிப்பு. அத்தனை உயரத்திலிருந்து முதன்முதலாய் கண்படுகையில் அப்பப்பா!- உடல் சிலிர்க்கிறது. தொண்டையை என்னவோ பண்ணுகிறது. ஸ்தம்பித்து நிற்கிறேன்.

அந்தத் தண் சுழிப்பிலிருந்து மூன்று மதத்த சடைகள் பிரிந்து, தளையவிழ்ந்து சரிந்து-

ஆவல் பிடரியில் உந்தி, என்னை அருவியண்டை கொண்டுபோய் விடுகிறது. எப்படி அங்கு அவ்வளவு விரைவில் சேர்ந்தேன் என்று அப்போது தெரியவில்லை.

பொங்குமாங்கடலுள் விழுந்து தெறித்து, பல்லாயிரம் பிரிகள் பாறையின் விளிம்பிலிருந்து வழிகையில் அம்பா! பர்வதராஜகுமாரி தன் கூந்தலை அருவியில் அலசுகிறாளா? அல்லது அவள் கூந்தல்தான் அருவியாய் பாய்கிறதா?

என் கீழ் எனக்குப் பூமி நடுங்கிற்று. பாலத்தின் கிராதியில் சாய்ந்தேன்.

நான், `நீ என் கையில். நீ சத்யமா? அல்லது சிந்தனையின் சிற்பமா? நீர்வீழ்ச்சியில் நிருபணையாவது உன் சத்யமா? ஆனால், எதுவாய் இருந்தால் என்ன?’

இவ்வருவியை உன் கூந்தலின் அவிழ்தலாய்க் காணும் கண் என்னுள் திறக்கையில், தேவி கண் திறப்பு என்னால் தாங்க முடியவில்லை. கண் இருட்டுகிறது. கண் இருட்டலில், மண்டை உச்சியுள் ஏதோ வானம் வெடித்துக் குடை விரிப்பிலிருந்து இறங்கும் பல வர்ண நட்சத்திரங்கள் தம்மில் ஒன்றாகத் தம்முள் என்னை இழுக்கின்றன.

எத்தனை எத்தனை உவமைகள் உற்பத்தி ஆயினும், உன்னை எட்ட எத்தனை எத்தனை உயரம் பறந்தாலும், அத்தனையும் உன் ஒரு கால் சுவடு தீண்ட திராணியற்று நீர்த்து உதிர்கையில், புவனமெ `ஜல் ஜல்’ உன் கால் சதங்கையினின்று கழன்ற கிண்கிணி மணி… வேண்டாம் வேண்டாம்! தேவி அபயம் அபயம் அபசாரம்! ஆனால், என்னால் தாங்க முடியவில்லை. உன் சௌந்தர்யத்தினின்று என்னைக் காப்பாற்று… காப்பாற்று!

நெஞ்சின் அடிவாரத்தில் ஏதோ புற்று இடிந்து, அதனுள் ஜன்மக் கணக்கில் உறங்கிக் கிடந்த ஏதேதோ விஷயங்கள், பேச்சுகள், வாக்கியங்கள், வார்த்தைகள், பதங்கள் பத - ஸரி- க -ஸா - ம - த ஸ்வரங்கள், ஓசைகள், ஒலிகள், மோனங்கள். திக்திக் திகில்கள். திமிதிமி எழுந்து மிரண்டு ஒன்றுடன் ஒன்று உருண்டு புரண்டு, நெஞ்சமுட்டில் கவிந்த நக்ஷத்ர இருட்டில் கருங்குதிரைகள் மின்னிடும் வெண்பிடரிகளைச் சிலிர்த்துக்கொண்டு தங்கத் துடைப்பம் போன்ற வால்களைச் சுழற்றிக்கொண்டு இதய விலாசத்தில் ஒடுகையில், திடும் திடும் திடு திடும்- குளம்போசை தாங்காமல் செவிகளைப் பொத்திக்கொள்கிறேன். கண் கவிழ்கிறேன்.

விழிகள் வரம்புடைந்து வழிகின்றன.

அலை மெல்ல மெல்ல அடங்குகிறது.

மூச்சு மெதுவாய் முனை திரும்புகிறது.

உள் மூட்டம் படிப்படியாய்க் கலைந்து வக்களிப்பு தோன்றுகிறது.

 அருவி கருணையாய் சொரிந்துகொண்டிருக்கிறது.

 பிரம்மாண்டமான கூந்தல் அருவி புரள, குன்றின் உச்சியில் அவள் அண்ணாந்து படுத்திருக்கிறாள். கூந்தல் அழகையே பார்க்க சக்தி இல்லையே. தேவியின் திருமுகம் காண நமக்குத் தகுதி ஏது? கண்டால் அந்த அழகின் ஊடுருவலிலேயே பூத்துவிடுவோம். கல்லாய் உறைந்துபோவோம். இந்த மலை, இந்தப் பாறை பூராவே அவ்வாறு அவளை நிமிர்ந்து அவ்வப்போது நோக்கியதால் ஆட்கொள்ளப்பட்ட ஆத்மாக்களின் மொத்தாகாரந்தானோ?

இந்தப் பொங்குமாங்கடல், அருவி கொட்டும் நாளிலிருந்து முதன்முதலாய்ப் பால் தயிராய்த் திரிந்த காலத்திலிருந்து, தன் கர்ப்பத்தின் அதல பாதாள கிடங்குகளில் என்னென்ன கதைகள், கற்பனைகள், வரலாறுகள், அம்பலங்கள், வதந்திகள், யதார்த்தங்கள், ஐதீகங்கள், ஸாகஸங்கள், கசப்புகள், நாடகங்கள், நேரங்கள், யுகங்கள் உறங்குகின்றன, உழல்கின்றன. இன்னும் தவித்துக்கொண்டிருக்கின்றனவோ? சிந்திக்க சிந்திக்க ஏதோ ஒரு பதில் ஊறிக்கொண்டே, ஆனால் ஓயாத வியப்பு. வெளியே இருந்துகொண்டு ஆளுக்கு ஒரு புலன், உள்ளே போய்விட்ட பின், விட்டுக்கொடுக்காத ரஹசியங்கள் அவரவர் அறியாமைக்கும் தற்பெருமைக்கும் விளம்பரமாகப் பேசிக்கொண்டிருங்கள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

எனக்கு ஆவேசம் தணிந்ததேயன்றி, அதன் கவ்வல் என்னை இன்னும் விடவில்லை. இது பல் படவில்லையே ஒழிய தாய்க்கவ்வல் இல்லை. அது விட்டுவைப்பதோ, விழுங்குவதோ என் செயலில் இல்லை. அதனின்று தப்பினாலே உண்டு. அல்லேல் அதன் வழி ஐக்யமாகிக் கொள்வதுதான். ஆயினும் இதில் ஒரு லாகிறி புறாவின் மார்பிலிருந்து உதிர்ந்த இறக்கைபோல் நான் பதமாகிவிட்ட மெது, மெத்து, லேசு, இப்படியே சாசுவதத்துக்கும் மிதந்துகொண்டேயிருக்க முடியாதா?

இங்கு இரவும் பகலுமாய் அந்தரத்தில் தம்தம் தடங்களில் நீந்திக்கொண்டு இருக்கும் ஏதேதோ தனித் தனி ஜன்மக் குறைவுகள், குலைவுகள், ஆசாபாசங்கள், அவஸ்தைகள், அறுந்த முடிச்சுகள் இந்த அவசம் பயக்கும் காந்தத்தின் ஜிவ்வில் படிவம் கண்டு அதன்மூலம் வாயடைப்பினின்று விமோசனத்துக்குத் தவிப்பதாகத் தோன்றிற்று. இல்லாவிடில் என்னை ஒரு மஹாசோகம் என் மேல் இப்போது கவிவானேன். தொண்டையில் இனம்புரியா துக்கம். வீறி அழுதால் தேவலை.

அழுது அழுது அப்படியே கரைந்துவிட ஒரு அவா…

நான்தான் ஏதேதோ கவலைகளில் உழன்றுகொண்டிருக்கிறேன். அருவியடியில் ஜனத்திரள் நெரித்தது. கொக்கரிப்புக்கும் கும்மாளத்திற்குமிடையே ஸ்நானம் ஆனந்தமாய் நடக்கிறது. சீஸன் மும்முரம் இன்னும் கொஞ்ச நேரமானால், ஸ்டேஜ் லைட்டிங் போல் ராக்ஷஸ வெளிச்சங்கள் போட்டாகிவிடும். ராப்பூராக் களி…         

 ஆ! அதென்ன?

குழல் சரங்கள் போல் ஓயாது பொங்குமாங்கடலுள் பெய்துகொண்டிருக்கும் ஜலச்சரங்களைத் தள்ளிக்கொண்டு ஒரு தோற்றம் வெளிப்பட்டது. உடல்கட்டு அல்லது உடல் தளர்வுப்படி வயது முப்பது, முப்பத்தைந்து இருக்கும். பசு போல் குழைந்த சரீரம். கொசுவக்கட்டு, வாடாமல்லிக் கலர் பட்டு, சர்வாபரண பூஷிதை. அந்தக்கால சம்பிரதாயப்படி வலது தோளில் அணிந்திருந்த வங்கியிலிருந்து சதை மேலும் கீழும் பிதுங்கிற்று.

ஒருமுறை பாறை விளிம்புக்கு வந்து நின்று சுற்றும் முற்றும் எதையோ தேடுவது போல் பார்த்தாள். அந்தியிருளில் முகம் தெரியவில்லை. முழு இருளாலேயே ஆகிய முகம் அதில் மூக்கிலும் செவிகளிலும் வைரம் சுடர்விட்டது.

கீழே குளிப்பவர் யாரும் அவளைக் கவனிக்கவில்லை. அவளே அவர்கள் கண்ணில் படவில்லையோ என்னவோ?

நான் என்ன வாழ்ந்தேன்? எனக்குத்தான் வாயடைத்து விட்டதே?

ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அப்படியே திரும்பி, இரு கைகளையும் சிரம் மேல் கூப்பிக்கொண்டு பொங்குமாங்கடலுள் பாய்ந்துவிட்டாள்.

“ஐயோ?”

நானா? இல்லை. திடுக்கிட்டுத் திரும்பினேன். என் பின்னால் அவர் நின்றுகொண்டிருந்தார். இரு கைகளையும் பிசைந்துகொண்டு.

இந்த ஸ்நான ஆரவாரங்களைத் தாண்டி ஏதேதோ கேட்ட குரல்கள், இதுவரை கேட்காத குரல்கள், பேச்சுக் குரல்கள் உட்செவியில் மோதுகின்றன.

``ஏண்டி… என்ன துணிச்சல்டீ? நடுராத்ரியிலே அஞ்சாமல் அவ்வளவு தூரம் நடந்து மலை மேலே ஏறி, நடுவிலே பூச்சி பொட்டு பிடுங்கித்துன்னா, புலியே அறைஞ்சதுன்னா என்னடி செய்திருப்பே?’’

``இதென்ன நீ சமந்தா பேசறதா எண்ணமா? சாகத் துணிஞ்சப்பறம் பூச்சிகடிச்சோ புலியறைஞ்சோ- அருவியில் விழுந்தோ எப்படிச் செத்தால் என்ன?’’

``அப்படிச் சொல்லிவிட முடியுமா? அதிலேயும் இடது கண், வலது கண் இருக்கோன்னோ?’’

``சாவுக்கா? நீ ஏதாவது பேத்திட்டேன்னா கடைசி வரைக்கும் சாதிச்சாகணுமாக்கும்? அவளுக்கு ஒருவேளை தன் உடலின் சுவடுக்கூட யாருக்கும் கிடைக்கக்கூடாதுங்கற எண்ணத்துலேதான பொங்குமாங்கடலைத் தேடிப் போயிருக்கா.’’

``நல்லவேளை உடல் கிடைச்சதோ பிழைச்சா. ஆளே காணாமல் போனால், ஊர் என்னென்னவோ கட்டி விட்டிருக்கும்டீ.’’

``நீ சொல்றதையும் மறுப்பதற்கில்லை. எப்படியோ ஒரு நியாயம் சாவிலும் வாழ்வு தேடிக் கண்டுபிடிச்சுக் கொடுத்துட்டே.’’

``ஏண்டி போனதுதான் போனாள். கல் கல்லா நகையையும் மாட்டிண்டு கிளம்பிட்டாளே! பொண்ணுக்கு வெச்சுட்டு போனால் ஆகாதா? அதுவும் கிளி மாதிரி எப்படியடி வயசு வந்த பொண்ணு, வயசு வந்த பிள்ளையையும் விட்டுட்டுப் போக மனசு வந்தது? வசனமேயிருக்கு ‘கோடித் துக்கம்- குழந்தை முகத்திலே’ன்னு. அதுவும் பொய்த்துப் போகணும்னா அவள் லேசுப்பட்ட ஆசாமியில்லை.’’

``பெத்த பாசமும் மீறி அவள் கஷ்டம் என்னமோ?’’

``ஆமாம்! என்னன்னு உனக்கும் தெரியாது. எனக்கும் தெரியாதல்லவா?’’

``உன் வாயில் விரலை வெச்சால் கடிக்கத் தெரியாதோன்னோ? பாலைக் கண்டால் குடிக்க மாட்டையோன்னோ?’’

``ஏன் மாட்டேன்? விரலையும் பாலையும்தான் வெச்சுப் பாரேன்!’’

``பின் என்ன? பேச்சுலே கண்ணாமூச்சி விளையாடிண்டு? இப்படிப் பேசினால் உனக்குப் பதவியேதாவது கிடைச்சுட்டதா எண்ணமா? இதோ பார், ஒண்ணு சொல்றேன். இதுதான் எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில். நாம் எல்லாம் சுரணை கெட்ட ஜன்மங்கள். ராச்சாப்பாட்டைவிட, நமக்கு மத்தியான டிபன்தான் தேவை. அடை தோசை, உணக்கையா எண்ணெய் மிளகாய்ப்பொடி, ரோசமில்லாமல் இருக்கறதால்தான் உலகம் நடக்கறது. அவள் நெருப்பு, நெருப்பு மத்ததை எரிக்கறதோடு நிக்கல்லே, தன்னையும் எரிச்சுக்கறது. ஆனால், நெருப்பில்லாமல் உயிர் வாழ முடியாது. உன்னைப் போலும், என்னைப் போலும் இருப்பவர் நெருப்பில்லாமல் காரரிசியில் தோசை. அதுக்கு மிளகாய்ப் பொடி, நல்லெண்ணெய், கொஸ்து, அப்புறம் தயிர் எல்லாம் போட்டுண்டு, காலை நீட்டிண்டு, நன்னாயிருக்கு, நன்னாயிருக்குன்னோ இல்லாட்டி நன்னாயில்லே நன்னாவேயில்லேன்னோ முறிச்சுப் போட்டுண்டிருக்க முடியாது.’’

 ``என்ன சொல்றயோடியம்மா, இட்டிலி தோசை என்கிறேச் ஆனால் ஒண்ணுமே புரியல்லே.’’

 ``என் நோக்கமும் அதுதான் வீடு…’’

குரல்கள் ஒய்ந்துவிட்டன.

என் கால்கள் பூமியில் பதிந்திருந்தன.

அருவியில் ஜனத்திரள் கும்மாளம் கொக்கரிப்பு. ‘கேக்கே’ வெளிச்சங்கள் வந்துவிட்டன. இரவு பகலானாற்போல்.

“நீங்கள் ஸ்நானம் பண்ணவில்லையா?’’ - ஏதோ ஒன்று பேசணும்.

அவர் தலை, மறுப்பில் பலமாய் அசைந்தது.

விழிகள் கரை உடைந்தன.

அதை மறைக்கவோ, தடுக்கவோ அவர் முற்படவில்லை.

(தொடரும்...)